Sunday, June 27, 2010

ர‌ஹ்மானின் ராக‌ங்க‌ள் - 1

ஏ.ஆர்.ர‌ஹ்மான்

இந்த‌ பெய‌ருக்குத்தான் எத்த‌னை வ‌சீக‌ர‌ம். 'சின்ன‌ சின்ன‌ ஆசை'யை எல்லோரும் ர‌சிக்க‌ ஆர‌ம்பித்திருந்த‌‌ நேர‌ம். நானோ த‌ட‌த‌ட‌க்கும் இசையில் அமைந்திருந்த‌ 'ருக்கும‌ணி ருக்கும‌ணி'க்காக‌வும், ஆர‌ம்பிக்கும்போதே மன‌தை ம‌ய‌க்கிய‌ 'காத‌ல் ரோஜாவே'வுக்காக‌வும், ம‌ன‌தில் ர‌ஹ்மானுக்காக‌ ஒரு நிலையான‌ சிம்மாச‌ன‌த்தை போட்டு வைத்தேன். ஆர‌ம்ப‌த்தில் சில‌ ப‌த்திரிக்கைக‌ள் ர‌குமான் என்றே எழுத‌, முத‌ல் ரெண்டெழுத்தை நினைத்து கிடைத்த‌ அற்ப‌ ச‌ந்தோஷ‌மும் சிம்மாச‌ன‌த்திற்கான‌ அதிமுக்கிய‌ கார‌ண‌ம் :)



ர‌ஹ்மானை ர‌சிப்ப‌தால் ராஜாவை வெறுப்ப‌தில்லை நான். த‌மிழ் சினிமாவில் இசை என்று ஆர‌ம்பித்தால், கே.வி.ம‌ஹாதேவ‌ன், விஸ்வ‌நாத‌ன் ராம‌மூர்த்தி, இளையாராஜா, ர‌ஹ்மான் என்றுதான் சொல்வேன். இவ‌ர்க‌ள் ஒவ்வொருவ‌ரும் இசை(யுல‌கை) ஆண்ட‌வ‌ர்க‌ள். ராஜாவும் ச‌ரி, ர‌ஹ்மானும் ச‌ரி தான் வ‌ருவ‌த‌ற்கு முன்பிருந்த‌ இசையை, த‌மிழ‌ர்க‌ளின் இசை ர‌ச‌னையை வேறு த‌ள‌த்திற்கு கொண்டு சென்ற‌ன‌ர். ஹாரிஸ், யுவ‌ன், விஜ‌ய் ஆண்ட‌னி, ஜி.வி.பிர‌காஷ், ம‌ணிச‌ர்மா ஆகியோரின் இசையையும் ர‌சிக்கிறேன். ஆனால் ர‌ஹ்மான் போட்டு கொடுத்த‌ பாதையில்தான் இன்றிருக்கும் ப‌ல‌ ஹிட் இசைய‌மைப்பாள‌ர்க‌ள் ப‌ய‌ணிக்கின்ற‌ன‌ர் என்ப‌து ம‌று(றை)க்க‌ முடியாத‌ உண்மை.

ர‌ஹ்மானின் இசையை 'ரோஜா' முத‌ல் இன்றைய‌ 'இராவ‌ண‌ன்' வ‌ரை க‌வ‌னித்து ர‌சித்து வ‌ந்திருக்கிறேன். உண்மையாக‌ சொல்கிறேன். ஸ்ல‌ம்டாக் மில்லிய‌ன‌ர் கேட்ட‌போது, 'அட‌ப்பாவிங்க‌ளா இதுக்கேவா ஆஸ்க‌ர்?' என்றுதான் தோன்றிய‌து. ம‌ன‌தை ஈர்க்கும் இசையோ, ம‌ய‌க்கும் இசையோ ஸ்ல‌ம்டாக் மில்லிய‌ன‌ரில் இல்லை என்ப‌து என் எண்ண‌ம். 'ஜெய்ஹோ'வை விட‌ ர‌ஹ்மான் இசைத்த‌ சிற‌ந்த‌ பாட‌ல்க‌ள் ஏராள‌ம்.

இது ர‌ஹ்மானின் வாழ்க்கை ப‌ற்றிய‌ ப‌திவ‌ல்ல‌. நான் மிக‌வும் ர‌சித்த‌ ர‌ஹ்மானின் ப‌ல‌ பாட‌ல்க‌ளை ப‌கிர்ந்து கொள்ள‌வே இப்ப‌திவு. என‌க்குள் இருக்கும் சோம்பேறி அர‌க்க‌னை ச‌ம்ஹார‌ம் செய்து, இதை ஒரு தொட‌ராக‌ எழுத‌ விருப்ப‌ம். ஆனால் செய‌ல்ப‌டுத்துவ‌தில் எந்த‌ள‌வு முனைப்பாக‌ இருப்பேன் என்ப‌து என‌க்கே தெரிய‌வில்லை. பார்க்க‌லாம்.....


தாஜ்ம‌ஹால்.....க‌ண்ணை மூடி இப்ப‌ட‌த்தைப் ப‌ற்றி நினைத்து பார்த்தால் ச‌ட்டென்று ம‌ன‌தில் தோன்றுவ‌து, பார‌திராஜா, ம‌னோஜ், ரியாசென் ம‌ற்றும் 'சொட்ட‌ சொட்ட‌ ந‌னையுது தாஜ்ம‌ஹாலு' பாட‌ல். ஹீரோ பில்ட‌ப் பாட‌லான‌ 'திருப்பாச்சி அருவாளை தீட்டிகிட்டு வாடா வாடா' பாட‌லும், 'சொட்ட‌ சொட்ட‌ ந‌னையுது தாஜ்ம‌ஹாலு' பாட‌லும் ப‌ல‌முறை தொலைக்காட்சிக‌ளில் ஒளிப‌ர‌ப்ப‌ப்ப‌ட்டு எல்லோரையும் க‌வ‌ர்ந்த‌து.

ஆனால் கேட்ட‌ முத‌ல் முறையிலேயே நான் சொக்கிப் போன‌ பாட‌ல் 'குளிருது குளிருது'. அருவியில் வ‌ழிந்தோடும் நீரைப்போல் காத‌லையும், காம‌த்தையும் வ‌ரிக‌ளில் வ‌ழிந்தோட‌விட்டிருப்பார் க‌விஞ‌ர் வைர‌முத்து. வார்த்தைக‌ளை ஆதிக்க‌ம் செய்யாத‌ இசை. 'பூக‌ம்ப‌ வேளையிலும்' என்று ஹைபிட்சில் எகிறும்போது உன்னி பின்னியிருப்பார்.

ப‌ட‌ம்: தாஜ்ம‌ஹால்
பிண்ண‌ணி பாடிய‌வ‌ர்க‌ள்: உன்னி கிருஷ்ண‌ன், ஸ்வ‌ர்ண‌ல‌தா

ப‌ல்ல‌வி:

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடலிலே தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலின் உறவுகள் எரிவதில்லை

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி

ச‌ர‌ண‌ம் 1:

இதயத்தில் வலி ஒன்று வருது
உன் இமைகளின் முடி கொண்டு தடவு

நெஞ்சுக்குள்ளும் எரியுது நெருப்பு
இதை நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்பு

இது தண்ணீர் ஊற்றியா தீரும்
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்

தேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடமாறும்
பேரின்ப பூஜைகளே உன் பெண்மைக்கு பரிஹாரம்

மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும்
நம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும்

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி

ச‌ர‌ண‌ம் 2:

நெஞ்சுக்குழி விட்டு விட்டு துடிக்கும்
அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்

முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையா
அட முத்தமிட வேறு இடம் இல்லையா

மழைத்துளி மழைத்துளி தொல்லையா
அட அடைமழை காக்க எண்ணம் இல்லையா

சுற்றி எல்லாம் எரிகின்ற போதும்
நாம் இன்பம் கொள்வது தீது

அடி பூகம்ப வேளையிலும்
இரு வான்கோழி கலவிக்கொள்ளும்

தேகத்தை அணைத்து விடு
சுடும் தீக்கூட அணைந்துவிடும்

அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்
சுற்றி நின்றாடும் தீவண்ணம் அணைவது திண்ணம்

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடல் அலை தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலின் உறவுகள் எரிவதில்லை


Sunday, June 20, 2010

எழுத‌வா ஒரு க்ரைம் க‌தையை?

ஒரு ஊர்ல‌ என்று ஆர‌ம்பிக்கும் ப‌ழ‌க்க‌த்தை எப்போதோ விட்டுவிட்டேன். இப்போதெல்லாம் ஆர‌ம்பிக்கும்போதே சென்னைதான். ஆம்..சென்னை...சென்னையில் நானிருக்கும் ஏரியா..இந்த‌ பெய‌ரை ப‌த்து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் சொல்லியிருந்தால் அவுட் ஆஃப் த‌ சிட்டியா என்று ஏள‌ன‌மாக‌ பேசியிருப்ப‌ர். இப்போது அதே ஏரியாவில் சொந்த‌ வீடு என்று சொன்னால் ஒற்றை எழுத்துட‌ன் ஆச்ச‌ரிய‌மும் சேர்ந்து வ‌ரும் 'ஓ!'. இது முக்கிய‌ம‌ல்ல‌ இப்போது. எந்த‌ ஏரியாவாக‌ இருந்தால் என்ன‌, என்ன‌ சொல்கிறேன் என்று கேளுங்க‌ள். அது போதும்.

அழ‌கான‌ வீடு. மொட்டை மாடியில் எனக்கென‌ ஒரு அறை. யாரும‌ற்ற‌ த‌னிமை என‌க்கு இறைவ‌ன் அளித்த‌ வ‌ர‌ம். என் விருப்ப‌த்திற்கேற்ப‌ பாடுவேன், ஆடுவேன். சம‌ய‌ங்க‌ளில் க‌ண்ணாடியில் வெறித்து பார்த்துக்கொண்டிருப்பேன். ஏன் என‌ தெரியாது. யாரேனும் பார்த்திருந்தால் ச‌ரியான‌ சைக்கோ என்று சொல்லியிருப்ப‌ர். அது உண்மையாக‌க் கூட‌ இருக்க‌லாம். என‌க்குத் தெரியாது.

அறையினுள் என‌க்கென‌ ஒரு ரீடிங் டேபிள். புத்த‌க‌ங்க‌ள் வாசிப்ப‌த‌ற்கு, அழ‌கான‌ சிறு விள‌க்குட‌ன் அமைக்க‌ப்ப‌ட்டிருக்கும். சில‌ நாட்க‌ள் வாசித்துக்கொண்டே தூங்கிப்போயிருக்கிறேன். அலுவ‌ல‌க‌ம், வீடு, புத்த‌க‌ம் என்றுதான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்த‌து. எல்லாம் ஸ்வேதா வ‌ரும் வ‌ரை.

அலுவ‌ல‌க‌த்தில் எல்லோரிட‌மிருந்தும் ஒதுங்கியே இருப்ப‌வ‌ன் நான். ஏன்? கேள்வியெல்லாம் கேட்காதீர்க‌ள். என‌க்கு பிடிக்காது. நான் அப்ப‌டித்தான். திமிர் பிடித்த‌‌வ‌ன் என்று தோன்றுகிற‌தா? தோன்றும்தான். ஆனால் ஸ்வேதாவுக்கு தோன்ற‌வில்லை. அவ‌ளாக‌வே வ‌ந்து பேசினாள், அலுவ‌ல் ச‌ம்ப‌ந்த‌மான‌ ச‌ந்தேக‌ங்க‌ளைக் கேட்டாள், ஜோக்க‌டித்தாள், சிரித்தாள்..சிரிக்க‌வும் வைத்தாள். நான் சிரித்த‌தை பார்த்து‌ ப‌ல‌ருக்கும் ஆச்ச‌ரிய‌ம். யாரிட‌மும் ஒரு வார்த்தை அதிக‌ம் பேசாத‌வ‌ன் இப்போது ஒரு பெண்ணிட‌ம் சிரித்து பேசுகிறானே என்று.

இர‌வு வீட்டுக்கு வ‌ந்து க‌ண்ணாடி முன் நின்று ஸ்வேதாவிட‌ம் சிரித்த‌து போல் சிரித்து பார்த்தேன். கொஞ்ச‌ம் வ‌ழிந்திருக்கிறேன். என‌க்கு பிடிக்க‌வில்லை. நாளையிலிருந்து அவ‌ளிட‌ம் பேச‌க்கூடாது என்று முடிவு செய்தேன். அவ‌ள் சிரிக்க‌தானே வைத்தாள், ஏன் இத‌ற்கு இவ்வ‌ள‌வு கோப‌ம் என்று கேட்கிறீர்க‌ளா? போன‌ ப‌த்தியிலேயே சொன்னேன் கேள்வியெல்லாம் கேட்காதீர்க‌ள் என‌க்கு பிடிக்காதென்று. ம‌றுப‌டியும் கேட்டால் என்ன‌ அர்த்த‌ம்? ஐ'ம் ரிய‌லி டாம் சீரிய‌ஸ்!

ம‌றுநாள் அலுவ‌ல‌க‌ம் சென்ற‌போது அவ‌ளே வ‌ந்து ஹாய் என்றாள். மானிட்ட‌ரிலிருந்து க‌ண் வில‌க்காம‌ல் மிக‌ மெல்லிய‌ குர‌லில் ஹ‌லோ என்றேன்.


உன‌க்காக‌ ஒரு கிஃப்ட் வாங்கி வ‌ந்துருக்கேன். என்ன‌ன்னு க‌ண்டுபுடி

என‌க்கு கிஃப்ட் வேண்டாம்

உட‌னே கோப‌ம் வ‌ந்துடுமே. டேய் ராஸ்க‌ல், கொலையுதிர் கால‌ம் வாங்கிட்டு வ‌ந்திருக்கேன்டா, சுஜாதா எழுதின‌து!

இப்போது என் பார்வை மானிட்ட‌ரின் மேலில்லை. உத‌டும் வல‌து க‌ன்ன‌த்தை நோக்கி அரை இஞ்ச் ந‌க‌ர்ந்த‌து. சுஜாதா. என் ஆத‌ர்ச‌ம். என‌க்கும்.

கொஞ்ச‌ம் ந‌ல்லாத்தான் சிரியேன்...இந்தா ப‌டிச்சிட்டு சொல்லு

தேங்க்ஸ்

நான்கு நாட்க‌ள் அலுவ‌ல் அதிக‌ம். மிக‌ அதிக‌ம். இந்த‌ நான்கு நாட்க‌ளில் அவ‌ள் பேசிய‌து மொத்த‌ம் எட்டு வார்த்தைக‌ள். தின‌மும் காலையில் 'ஹாய்'. மாலையில் 'பை'. என்னுடைய‌ வேலைக‌ளை நேற்றே முடித்துவிட்ட‌தால் இன்று என‌க்கெந்த‌ ப‌ணியும் இல்லை. வ‌ழ‌க்க‌ம் போல் த‌மிழ்ம‌ண‌த்திலும், த‌மிழிஷிலும் உல‌விக்கொண்டிருந்தேன். ஸ்வேதா வ‌ந்தாள்.

ஹாய்..என்ன‌டா எப்ப‌ பார்த்தாலும் ப்ளாகா? நாலு நாளா ச‌ரியாவே உங்கிட்ட‌ பேச‌லியே என்ன‌ன்னு ஏதாவ‌து கேட்டியா?

நீ பிஸி

நான் பிஸின்னா நீயா வ‌ந்து பேச‌மாட்டியா?

............

ச‌ரி விடு, கொலையுதிர் கால‌ம் ப‌டிச்சியா? எப்ப‌டியிருந்த‌து? என‌க்கு சொல்லு

புத்த‌க‌த்தை வாங்கிக் கொடுத்த‌வ‌ள். க‌தை கேட்கிறாள். சொன்னேன்.

நீ சொன்ன‌தே என‌க்கு ஒரு ப‌ட‌த்தை பார்த்த‌ மாதிரியிருக்கு. வாவ் என்ன‌மா சொல்றே! நீ ஏன் ஒரு க்ரைம் ஸ்டோரி எழுத‌க்கூடாது?

என‌க்கு அனுப‌வ‌மில்ல

எழுது. எழுத‌ ஆர‌ம்பிச்ச‌துக்க‌ப்புற‌ம் என்கிட்ட‌ உன்னோட‌ ட்ராஃப்ட்ஸ் குடு. க‌ரெக்ஷ‌ன்ஸ் தேவைப்ப‌ட்டா நான் சொல்றேன்

சாய‌ந்த‌ர‌ம் வீட்டுக்கு வா

வ்வாட்?! நீயா கூப்பிட‌ற‌! யூ ஆர் நாட் ஜோக்கிங் ரைட்?

ப‌தில‌ளிக்காம‌ல் மானிட்ட‌ரை வெறிக்க‌த் தொட‌ங்கினேன். சிரித்தாலும், ஏதோ திட்டிக்கொண்டே சென்றாள்.

மாலை ச‌ரியாக‌ ஆறும‌ணிக்கு வ‌ந்தாள். வீடு ந‌ல்லாருக்கு, என்ன‌ புக்ஸ்லாம் ப‌டிக்க‌ற‌, உன்னோட‌ டிவிடி க‌லெக்ஷ‌ன்ஸ் ந‌ல்லாருக்குப்பா..எல்லாமே க்ரைம் & சைக்க‌லாஜிக்க‌ல் த்ரில்ல‌ரா வெச்சிருக்க‌..வித்தியாச‌மா இருக்கு, என‌க்கும் சுஜாதான்னா ரொம்ப‌ புடிக்கும் அண்ட் ஷெல்ட‌ன் ட்டூ, நீயே ச‌மைப்பியா, கிச்ச‌ன்லாம் கூட‌ சுத்த‌மாயிருக்கு என்று அவ‌ள்தான் பேசிக்கொண்டிருந்தாள். பேசிக்கொண்டேயிருந்தாள். வ‌ழ‌க்க‌ம் போல்.


மீண்டும் ஆர‌ம்பித்தாள்.

உன்னோட‌ டேஸ்ட்டுக்கு ஒரு க்ரைம் ஸ்டோரி எழுதுப்பா..ந‌ல்லா வ‌ரும்

என‌க்கு எழுத‌ வ‌ராது

அப்ப‌டி சொல்லாதே, ட்ரை ப‌ண்ணு. எல்லார்க்கும் ஒரு வித்தியாச‌மான‌ அனுப‌வ‌ம் இருக்கும். அதையே ஒரு க்ரைம் வியூவ்ல‌ திங்க் ப‌ண்ணு. அதை எழுத்துல‌ கொண்டு வா. இப்போ நான் ஒண்ணு சொல்றேன்....

சுவ‌ர்க் க‌டிகாரத்தில் ஒரே ஒரு ம‌ணி அடித்த‌து. ம‌ணி ஆற‌ரை.




ரீடிங் டேபிளில் ம‌டிக்க‌ணிணியை வைத்து த‌ட்ட‌ச்சு செய்ய‌ ஆர‌ம்பித்த‌போது ம‌ணி பார்த்தேன். ஆறு நாற்ப‌து. இப்போது ம‌ணி ஏழு. ஆவ‌லாக‌த் த‌ட்ட‌ச்சிக்கொண்டிருந்த‌தில் முத‌லில் தெரிய‌வில்லை. இப்போதுதான் காலில் ஏதோ ச‌ற்று பிசுபிசுவென‌ ஒட்டுவ‌து போலிருந்த‌து. ம்ம்..ஸ்வேதாவின் ர‌த்த‌ம்தான்.

ஆறு முப்ப‌திலிருந்து ஆறு நாற்ப‌து வ‌ரை என்ன‌ ந‌ட‌ந்த‌தென்று கேட்காதீர்க‌ள். கேள்வி கேட்டால் என‌க்கு பிடிக்காதென்று சொல்லியிருக்கிறேன். ஒரு க்ரைம் க‌தையை எழுது எழுது என‌ என்னை ந‌ச்ச‌ரித்த‌ ஸ்வேதா இப்போது உயிரோடு இல்லை. அவ‌ள் ர‌த்த‌ம் என் காலில் ப‌ட்ட‌து, என‌க்கு அருவ‌ருப்பாய் இருக்கிற‌து. நான் போய் கால் க‌ழுவி விட்டு வ‌ருகிறேன்.

அத‌ற்குள் நீங்க‌ள் யோசித்து சொல்லுங்க‌ள்.

எழுத‌வா ஒரு க்ரைம் க‌தையை?



Friday, June 11, 2010

ஏனெனில்..ஏனெனில்..ஏனெனில்...

பேருந்தில் ந‌ட‌த்துன‌ரிட‌ம் காசு கொடுத்து ப‌ய‌ண‌ச்சீட்டு வாங்கும்போது அடிக்க‌டி ந‌ட‌க்கும் விஷ‌ய‌ம் இது. 5.50 ப‌ய‌ண‌ச்சீட்டுக்கு 10 ரூபாய் கொடுத்தால், 4 ரூபாய்தான் திருப்பி தருவார். எப்போதும் அவ‌ர் த‌ரும் பாக்கி சில்ல‌றையில் 50 காசு குறைவாக‌ இருக்கும். வெறும் 50 காசுதானே என்று நீங்க‌ள் சொன்னாலும், அது என் காசு. இருந்தாலும் அதை கேட்காம‌ல் விட்டுவிடுவேன், கேட்காம‌லிருப்ப‌து த‌ப்பென்று தெரிந்தும். ஏனெனில்...

____________________________________________________________________________

அதே பேருந்தில் இருக்கையில் அம‌ர்ந்திருப்பேன். ம‌ற்ற‌ இருக்கைக‌ளில் அம‌ர்ந்திருக்கும் எவ‌ரும் தூங்காம‌ல் இருப்ப‌ர். ஆனால் என் ப‌க்க‌த்தில் அம‌ர்ந்திருக்கும் ஆசாமி ம‌ட்டும் தூங்கி வ‌ழிந்து, அடிக்க‌டி என் தோளில் வ‌ந்து இடித்துக்கொண்டிருப்பார். நான் இன்னும் கொஞ்ச‌ம் த‌ள்ளி உட்கார்ந்து கொள்வேனே த‌விர‌ எதுவும் சொல்ல‌மாட்டேன். ஏனெனில்...


"இதுவே ப‌க்க‌த்துல‌ ஒரு பொண்ணு இருந்தா..." என்றெல்லாம் பின்னூட்ட‌ம் வேண்டாம் பாஸ். ப‌திலைத் தெரிந்துகொண்டே கேள்வியைக் கேட்டால் நானென்ன சொல்ல‌?...;))

____________________________________________________________________________

ஒரு முறை தி.ந‌க‌ருக்கு அவ‌ச‌ர‌மாக‌ செல்ல‌ வேண்டிய‌ சூழ்நிலை. ப‌ஸ் ஸ்டாப்பில் வெகு நேர‌மாய் நின்று கொண்டிருந்தேன். தி.ந‌க‌ருக்கு செல்ல‌ வேண்டிய‌ பேருந்துக‌ள் அனைத்தும்‌, கூட்ட‌ மிகுதியால் பைசா கோபுர‌ம் போல் ஒரு ப‌க்க‌மாய் சாய்ந்து கொண்டே வ‌ர‌, ச‌ரி ஆட்டோவில் போய்விட‌லாம் என்று முடிவு செய்தேன். சிறிது நேர‌த்தில் ஆட்டோ ஒன்று வ‌ர‌, நான் கேட்ப‌த‌ற்கு முன் அருகில் நின்றுகொண்டிருந்த‌வ‌ர் "டி.ந‌க‌ர் போக‌ணும்.....எவ்ளோ" என்று கேட்டார். அந்த‌ ஆட்டோ டிரைவ‌ர் ம‌ற‌ந்து, யூனிஃபார்மோடு ம‌ன‌சாட்சியையும் கழ‌ற்றி வைத்துவிட்டார் போல‌. ச‌ர்வ‌ சாதார‌ண‌மாக‌ "ஒன் ஃபிஃப்டி குடுங்க‌" என்றார். அந்த‌ ந‌ப‌ர் ஆட்டோ வேண்டாம் என்று சொல்லி ஒதுங்கி நின்று கொண்டார். அவ‌ருட‌ன் பேசி ஒரே ஆட்டோவை பிடித்து தி.ந‌க‌ருக்கு சென்று ஆட்டோ சார்ஜை ஷேர் செய்திருக்க‌லாம். ஆனால் நான் செய்ய‌வில்லை. ஏனெனில்...

____________________________________________________________________________


அடையார் ஆன‌ந்த‌ ப‌வ‌ன் ரெஸ்டார‌ண்ட்டுக்கு சென்று ஆசையாக‌ ஒரு ஆனிய‌ன் ர‌வாவை அள்ளி அள்ளி உள்ளே த‌ள்ளிக்கொண்டிருப்பேன். 80% முடித்த‌பின்பு மீத‌ம் இருக்கும் தோசைக்கு தொட்டுக்கொள்ள‌ சாம்பாரும் இருக்காது, ச‌ட்னியும் இருக்காது. ச‌ர்வ‌ரிட‌ம் கூப்பிட்டு கேட்டால், 'இம்மாத்துண்டு தோசைக்கு ஒரு க‌ப்பு சாம்பார் கேக்குதா' என்று அழ‌கு சென்னைத் த‌மிழில், பார்வையாலேயே ந‌ம் இராசி, ந‌ட்ச‌த்திர‌ம் கேட்காம‌ல் அர்ச்ச‌னை செய்வார். செய்தால் என்ன‌? என் ப‌சிக்கு சாப்பிடுகிறேன். என‌க்கு தேவை இர‌ண்டு க‌ப் சாம்பார், ச‌ட்னி என்றால் அவ‌ர் த‌ர‌வேண்டும். ஆனால் கேட்க‌மாட்டேன். வெறும் தோசையையே அள்ளி ம‌டித்து, ச‌மோசா ஷேப்புக்கு கொண்டு வ‌ந்த‌ பின், பூலோக‌த்தை வாயினுள் காட்டிய‌ க‌ண்ணன் போல் வாயைத் திற‌ந்து, வெற்றிலை போடுவ‌து போல் உள்ளே த‌ள்ளிவிடுவேன். ஏனெனில்...

____________________________________________________________________________

ஒரு அழ‌கான‌ பெண்ணை பார்த்து சைட் அடிக்கும்போது இருக்கும் தைரிய‌ம், அதே பெண்ணிட‌ம் முத‌ல் முறை பேசும்போது இருப்ப‌தில்லை. முத‌ல் முறை ம‌ட்டும். அது போல், பெற்றோரோ, உற‌வின‌ரோ அருகில் இருக்கும்போது, ஒரு பேஏஏஏர‌ழ‌கி க‌ட‌ந்து போனாலும், போக்கிரி விஜ‌ய் ரேஞ்சிற்கு முக‌த்தில் எந்த‌வித‌ ரியாக்ஷ‌னும் காட்டாம‌ல் இருப்ப‌துண்டு. ஏனெனில்...

____________________________________________________________________________

இன்று மெரீனாவில் காந்தி சிலை அருகே ப‌திவ‌ர் ச‌ந்திப்பு. அவ‌சிய‌ம் வ‌ர‌வும் என்று அனைத்து பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ளும் ப‌திவிட்டிருப்ப‌ர். அப்ப‌திவுக‌ளை ப‌டிப்ப‌தோடு ச‌ரி. ச‌ந்திப்பில் க‌ல‌ந்துகொள்வ‌தில்லை. ஆனால் 'ப‌திவ‌ர் ச‌ந்திப்பில் ந‌ட‌ந்த‌து என்ன‌' என்று ம‌றுநாள் அவ‌ர்க‌ள் எழுதியிருப்ப‌தை த‌வ‌றாம‌ல் ப‌டித்து, புகைப்ப‌ட‌ம் பார்த்து யார் யாரெல்லாம் ச‌ந்திப்பிற்கு சென்றிருந்தார்க‌ள் என்ப‌தையும், யார் யாரெல்லாம் ச‌ந்திப்பு முடிந்த‌வுட‌ன் "ஸ்பெஷ‌ல் டீ" குடிப்ப‌த‌ற்கு சென்றார்க‌ள் என்ப‌தையும் அறிந்துகொள்வேன். எழுத‌ ஆர‌ம்பித்து ஒரு வ‌ருட‌ம் ஆகியும், இன்னும் ஒரு முறை கூட‌ ப‌திவ‌ர் ச‌ந்திப்பிற்குச் சென்ற‌தில்லை. ஏனெனில்...


ஏனெனில்..ஏனெனில்..ஏனெனில்...


பேஸிக்க‌லி ஐ'ம் ஷை டைப் யூ நோ ;))


Thursday, June 10, 2010

டிச‌ம்ப‌ர் 2104....சென்னை - 2

டிச‌ம்ப‌ர் 2104....சென்னை முத‌ல் பாக‌ம்


டைம் மெஷினில் இருந்த‌ திரை டிச‌ம்ப‌ர் 26, 2054 என்று க‌ண்ண‌டித்துக்கொண்டிருந்த‌து. ச‌ரியாக‌ நேர‌ம் விடிய‌ற்காலை 4:10. டைம் மெஷின் இற‌ங்க‌ மெசேஜ் வாயிலாக‌ இட‌ம் கேட்க‌, திரையில் க்ருபாள‌னியை பார்த்தான் சுன‌ந்த‌ன். க்ருபாள‌னி அண்ணா சாலை என்று டைப் செய்ய‌ சொல்ல‌, அவ‌ர் சொன்ன‌தை த‌ட்டாம‌ல் கீபோர்டில் த‌ட்ட‌ச்சினான். எந்த‌வித‌ ச‌த்த‌முமின்றி மெதுவாக‌ டைம் மெஷின் மெள்ள‌ இற‌ங்கிய‌து. டைம் மெஷினில் 'இன்விஸிபிள்' ஆப்ஷ‌ன் இருந்த‌தால் அதை யாரும் கவ‌னிக்க‌வில்லை. விடிய‌ற்காலை நேர‌மாத‌லால் ம‌க்க‌ள் ந‌ட‌மாட்ட‌ம் அவ்வ‌ள‌வாக‌ இல்லை.

மெல்ல‌ மூவ‌ரும் சாலையில் இற‌ங்கி ந‌ட‌ந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் நின்றிருந்த‌ இட‌த்திற்கு எதிரே ஒரு ப‌ழ‌ம்பெரும் க‌ட்டிட‌ம் ஒன்று இருந்த‌து. அத‌ன‌ருகே சென்று பார்க்கும்போது, ஒரு டிஜிட்ட‌ல் திரையில் Good Morning...Welcome to Spencer Plaza என்ற‌ மெசேஜ் இட‌து புற‌த்திலிருந்து வ‌ல‌து புற‌த்திற்கு ஓடிக்கொண்டிருந்த‌து. மூவ‌ரும் சாலையின் ஓர‌மாக‌ ந‌ட‌ந்துகொண்டே சென்னையின் விடிய‌ற்காலை வாழ்க்கையை ர‌சித்துக்கொண்டிருந்த‌ன‌ர்.

காரை வானில் ஓட்டியே ப‌ழ‌க்க‌மிருந்த‌தால், இவ‌ர்க‌ள் எப்ப‌டிதான் சாலையில் ஓட்டுகிறார்க‌ளோ என்றெண்ணி மிகுந்த‌ ஆச்ச‌ரிய‌ம‌டைந்தான் சுன‌ந்த‌ன். ந‌டைபாதையின் அருகே ஒரு சிறிய‌ பூத் ஒன்று இருந்த‌து. அத‌னுள்ளே ஒரு சிறிய‌ தொடுதிரை இருந்த‌து. தொடுதிரையின் கீழே இன்றைய‌ செய்திக‌ள், சினிமா, அர‌சிய‌ல், விளையாட்டு என்று நான்கு சுட்டிக‌ள் தெரிய‌, சுன‌ந்த‌னுக்கு முத‌லில் செய்திக‌ளை அறியும் ஆர்வ‌ம் ஏற்ப‌ட்ட‌து. செய்திக‌ள் சுட்டியை தொட்ட‌வுட‌ன்

வ‌ரும் தேர்த‌லில் மீண்டும் எங்க‌ள் க‌ட்சியை ஆட்சியில் அம‌ர்த்தினால், அனைத்து ம‌க்க‌ளுக்கும், உய‌ர் ர‌க‌ காரும், த‌ங்க‌ள் விருப்ப‌த்திற்கு ஏற்ப‌ நிக‌ழ்ச்சிக‌ளை உருவாக்க‌ ஒரு சேன‌லும் இல‌வ‌ச‌மாக‌ வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் என்று முத‌ல்வ‌ர் உத‌ய‌நிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும்....

அடுத்து விளையாட்டு சுட்டியை தொட‌, அது ஒரு கிரிக்கெட் பேட்ஸ்மேனின் புகைப்ப‌ட‌த்தை ஒளிப‌ர‌ப்பிய‌து. புகைப்ப‌ட‌த்தில் அந்த‌ பேட்ஸ்மேன் த‌ன் ஹெல்மெட்டை க‌ழ‌ற்றி, பேட்டை உய‌ர்த்தி, ர‌சிக‌ர்க‌ளை நோக்கி காண்பித்த‌ப‌டி இருந்தார். புகைப்ப‌ட‌த்தின் கீழ், கொட்டை எழுத்தில் "என்னுடைய‌ ஆட்ட‌ம் இன்று திருப்தி த‌ரும் வ‌கையில் அமைந்திருந்த‌து. அத‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம் என்னுடைய‌ தாத்தா ச‌ச்சின் டெண்டுல்க‌ர்தான். அவ‌ர் கொடுத்த‌ சில‌ அறிவுரைக‌ளை பின்ப‌ற்றிய‌தால்தான் என்னால் அணிக்கு வெற்றி தேடித்த‌ர‌ முடிந்த‌து" என்று போட்டிருந்த‌து. மேலும் வேறெதையும் தெரிந்து கொள்ள‌ ஆர்வ‌மில்லாத‌தால், சுன‌ந்த‌னும், நான்சியும் மிட்டுவுடன் மீண்டும் டைம் மெஷினுக்கு திரும்பின‌ர்.

திரையை ஆன் செய்து, "மேம், இட்ஸ் சோ ஸ்ட்ரேஞ்ச், 2054ல‌ எல்லாரும் கீழே ரோட்ல‌ கார் ட்ரைவ் ப‌ண்றாங்க‌. ஹோட்ட‌ல்ஸ்லாம் நிறைய‌ மூடியிருக்கு. வொர்க்கிங் ஹ‌வ‌ர்ஸ் 6:00 டூ 11:00ன்னு போட்டிருக்காங்க‌. ஆனா ந‌ம்ம‌ 2104ல‌ பாருங்க‌, 24 ஹ‌வ‌ர்ஸும் எல்லாமே அவைல‌பிள்....திஸ் ஈஸ் ரிய‌லி எக்சைட்டிங், நான் இன்னும் ஒரு 50 வ‌ருஷ‌ம் பின்னாடி போய் பாக்க‌றேன் மேம்" என்றான்.

"ஓகே சுன‌ந்த‌ன், நான் இங்கே மானிட்ட‌ர்ல‌ பார்த்துகிட்டுதான் இருக்கேன். கோ அஹெட்..இய‌ரை ரீசெட் ப‌ண்ணி, 2004னு என்ட‌ர் ப‌ண்ணுங்க‌. அடுத்த‌து GO ப‌ட்ட‌ன்"

"தேங்க்ஸ் மேம்"

இப்போது கீபோர்டில் 2..0..0..4 என்று டைப் செய்து, 'GO'வை த‌ட்டிவிட்டு த‌ன் இருக்கையில் அம‌ர்ந்தான். இர‌ண்டு ம‌ணி நேர‌ ப‌ய‌ணத்திற்கு பின்...எங்கு இற‌ங்க‌ வேண்டும் என்று வ‌ழ‌க்க‌ம் போல் மெசேஜ் கேட்க‌, இம்முறை மேப்பை பார்த்து அவ‌னே இட‌த்தை தேர்ந்தெடுத்தான். இட‌த்தை அடைந்த‌வுட‌ன் டைம் மெஷினை விட்டு இற‌ங்கி மூவ‌ரும் ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்த‌ன‌ர். காலை நேர‌மாத‌லால், ம‌க்க‌ள் புழ‌க்க‌ம் ச‌ற்று மித‌மாக‌வே இருந்த‌து. வ‌ந்திருந்த‌ ப‌ல‌ரும் வாக்கிங் செய்துகொண்டே, ச‌க‌ வாக்க‌ர்க‌ளுட‌ன் அர‌ட்டை அடித்துக்கொண்டிருந்த‌ன‌ர். நூறு வ‌ருட‌த்திற்கு முன் வாழ்ந்த‌ ம‌க்க‌ளை பார்த்துக்கொண்டிருக்கும் ம‌கிழ்ச்சியில் த‌ங்க‌ளை ம‌ற‌ந்திருந்த‌ன‌ர் சுன‌ந்த‌னும், நான்சியும். அம்ம‌னித‌ர்க‌ள் பேசும் வித‌மும், உடைக‌ளும் அவ‌ர்க‌ளுக்கு மிகுந்த‌ ஆச்ச‌ரிய‌த்தை அளித்த‌ன‌. ஒருவித‌ ப‌ரவ‌ச‌ நிலையிலிருந்த‌ இருவ‌ரையும், மிட்டுதான் பிடித்து உலுக்கினாள். "டேட், லுக் அட் தேர், ஐ'ம் ஸ்கேர்ட்!!!"


க்ருபாள‌னி திரையில் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, ஏதோ ஒன்று அவ‌ரின் டைம் மெஷினை தாக்கி, எல்லாவ‌ற்றையும் செய‌லிழ‌க்க‌ச் செய்த‌து. எவ்வ‌ள‌வோ முய‌ற்சிக‌ள் செய்தும், அவ‌ரால் சுன‌ந்த‌ன் குடும்ப‌த்தின‌ரோடு தொட‌ர்பு கொள்ள‌ முடிய‌வில்லை. அதிர்ச்சியில் உறைந்து போன‌ க்ருபாள‌னி த‌ன் க‌ணிணியை ஆன் செய்து, இணைய‌த்தில் சென்னை ப‌ற்றிய‌ ப‌ழைய‌ வ‌ர‌லாற்றை தேடிப் ப‌டித்தார். அரை ம‌ணி நேர‌ம் ப‌டித்த‌ பின், மீண்டும் சுன‌ந்த‌னோடு தொட‌ர்பு கொள்ள‌ முய‌ற்சித்தார். ஊஹும்......முடிய‌வில்லை. ஏன்? உங்க‌ளால் யூகிக்க‌ முடிகிற‌தா?

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவ‌ர்க‌ள் மூவ‌ரும் இருந்த‌ இட‌ம், சென்னை மெரீனா க‌ட‌ற்க‌ரை. டிச‌ம்ப‌ர் 26, 2004. காலை நேர‌ம்.

Time machine

SUnandhan

NAncy

MIttu.....


Tuesday, June 08, 2010

டிச‌ம்ப‌ர் 2104....சென்னை

டிச‌ம்ப‌ர் 2104
சென்னை

சுன‌ந்த‌னின் ச‌ட்டைப் பையில் இருந்த குளிர் க‌ண்ணாடி, "க்ருபாள‌னி காலிங், க்ருபாள‌னி காலிங்" என்று அல‌றிய‌து. சுன‌ந்த‌ன் ஸ்பீக்க‌ர் இருந்த‌ அக்க‌ண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டான். க‌ண்ணாடி பெட்டியை திற‌க்க‌, அதிலிருந்த‌ திரையில் விஞ்ஞானி க்ருபாள‌னி பேச‌ ஆர‌ம்பித்தார்.

"சுன‌ந்த‌ன், எப்ப‌டி போயிட்டிருக்கு கிறிஸ்தும‌ஸ்லாம்?"

"இட்ஸ் வொண்ட‌ர்ஃபுல் மேம்"

"தேர் ஈஸ் எ கான்ஃபிட‌ன்ஷிய‌ல் திங், ஐ திங் உங்க‌ள ம‌ட்டும்தான் ந‌ம்பி சொல்ல‌முடியும். ஹ‌வ் லாங் இட் வுட் டேக் டூ ரீச் மை லேப்?"

"மேம், மை ஒய்ஃப் அண்ட் கிட் ஆர் ஹிய‌ர், தே வில் கில் மீ இஃப் ஐ க‌ம் டூ ஒர்க் டுடே"

"ஹாஹ்ஹா...இட்ஸ் ஓகே, அவ‌ங்க‌ளையும் கூட்டிட்டு வாங்க‌, மிட்டுவை பார்த்து ரொம்ப‌ நாளாச்சு"

க்ருபாள‌னி, வ‌ய‌து 56. சுன‌ந்த‌ன் ப‌ணிபுரிந்து கொண்டிருக்கும் ப்ராஜ‌க்ட்டின் சூப்ப‌ர்வைச‌ர். பொதுவாக‌ ஒருபோதும் விடுமுறை தின‌ங்க‌ளில் ப‌ணியாள‌ர்க‌ளை வ‌ர‌ச்சொல்லாத‌வ‌ர், இன்று ஏன் த‌ன்னை வ‌ர‌ச்சொல்கிறார்...அதுவும் குடும்ப‌த்தின‌ருட‌ன் இருக்கிறேன் என்று சொல்லியும். பொறுமையாக‌ நான்சிக்கு விஷ‌ய‌த்தைச் சொல்லி, அவ‌ளை ச‌மாதான‌ப்ப‌டுத்தி, குழ‌ந்தை மிட்டுவோடு சுன‌ந்த‌ன் கிள‌ம்பினான். காருக்குள் உட்கார்ந்து ஸ்டார்ட் செய்ய‌...டேஷ்போர்டில் பீப் பீப் என்ற‌ ஒலி வ‌ர‌ ஆர‌ம்பித்த‌து.

"வாட் நான்சி, காருக்கு பேட்ட‌ரி போட‌லியா, பாரு 'பேட்ட‌ரி லோ'ன்னு மெஸேஜ் டிஸ்ப்ளே ஆகுது"

"சுன‌ன், இட்ஸ் நாட் மை ஜாப், உங்க‌ கார்..நீங்க‌தான் பாத்துக்க‌ணும்..வேணும்னா வாங்க‌ என்னோட‌ கார்ல‌ ஃபுல் பேட்ட‌ரி இருக்கு"

"இட்ஸ் ஓகே, இப்போ இருக்க‌ற‌ பேட்ட‌ரி எப்ப‌டியும் டூ அவ‌ர்ஸ் வ‌ரும், க்ருபாள‌னி மேட‌ம் அபார்ட்மெண்ட் இங்க‌ருந்து ஹாஃப் அன் ஹ‌வ‌ர்தானே, வீ கேன் மேனேஜ்"

காரை கிள‌ப்பினான். விடுமுறை தின‌மாத‌லால், அன்று வானில் ட்ராஃபிக் குறைவாக‌வே காண‌ப்ப‌ட்ட‌து. 'யூ ஷுட் ஃப்ளை ஃபாஸ்ட‌ர் டேடி' என்று மிட்டு க‌த்த‌...ஏற‌க்குறைய‌ மிர‌ட்ட‌வே ஆர‌ம்பித்தாள். கார் சீறிப் ப‌ற‌ந்த‌து. சில நொடிக‌ளில் 'TOO FAST, FLY SLOW' என்று மெஸேஜ் டிஸ்ப்ளே ஆக‌, வேக‌த்தை குறைத்துக் கொண்டு மிட்டுவை பார்த்தான். அவ‌ள் முறைத்துக்கொண்டிருந்தாள்.

க்ருபாள‌னி வீட்டை அடைந்தார்க‌ள். வீடு என்று சொல்ல‌ முடியாது அதை. அறுநூற்றி ஐம்ப‌து ஃப்ளோர்க‌ள் கொண்ட‌ ஒரு அபார்ட்மெண்ட் அது. க்ருபாள‌னி 20.04 எண்ணுடைய‌ ஃப்ளோரில் த‌ங்கியிருந்தார். வ‌ர‌வேற்ப‌ரையில் பாதியை பிரித்து ஒரு ஆராய்ச்சிக்கூட‌த்தை அமைத்திருந்தார். "ஹ‌வ் லாங் இட் வுட் டேக் டூ ரீச் மை லேப்" என்ற‌ கேள்வியிலேயே ஏதோ ஒரு புதுவித‌மான‌ ஆராய்ச்சியைப் ப‌ற்றி பேச‌த்தான் த‌ன்னை அழைத்துள்ளார் என்ப‌தை சுன‌ந்த‌ன் புரிந்துகொண்டான். க்ருபாள‌னியே ஆர‌ம்பித்தார்.

"ஹாலிடேல‌ குடும்ப‌த்தோட‌ உங்க‌ள‌ வ‌ர‌வ‌ழைச்ச‌துக்கு ஸாரி, ப‌ட் இட்ஸ் ரிய‌லி இம்பார்ட்ட‌ண்ட்"

"ஐ கேன் அண்ட‌ர்ஸ்டேன்ட் மேம்"

"தேங்க்ஸ்....நான்சி, வான்ட் டூ ஹாவ் ச‌ம் காஸ்ட்லி ஹெச்2ஓ? யூ மிட்டு?" இருவ‌ரும் வேண்டாமென்று த‌லையாட்ட‌, அவ‌ர் தொட‌ர்ந்தார். "ஓகே, இன்றைய‌ தின‌ம் என்னோட‌ வாழ்க்கையில் ம‌ற‌க்க‌ முடியாத‌ தின‌ம். ரொம்ப‌ நாளா நான் ப‌ர்ச‌ன‌லா ஈடுப‌ட்டிருந்த‌ ஒரு ஆராய்ச்சி இன்னைக்கு ச‌க்ஸ‌ஸ் ஆகியிருக்கு. அதை உங்க‌ளோட‌ ஷேர் ப‌ண்ணிக்க‌ற‌துக்காக‌த்தான் உங்க‌ளை வ‌ர‌ச்சொன்னேன்"

"ரிய‌லி? என்ன‌ மேம் அது?"

"இட்ஸ் எ டைம் மெஷின்!"

சுன‌ந்த‌னும், நான்சியும் ஒரே குர‌லில் "டைம் மெஷின்?!" என்று ஒரு கேள்வியையும், ஆச்ச‌ரிய‌த்தையும் ஒரு சேர‌ வெளிப்ப‌டுத்தின‌ர்.

பின்பு இருப‌து நிமிட‌ங்க‌ள் டைம் மெஷினை ப‌ற்றி ஒரு நீண்ட‌ லெக்ச‌ரை க்ருபாள‌னி கொடுக்க‌, சுன‌ந்த‌னும், நான்சியும் ஆர்வ‌த்துட‌ன் கேட்டுக்கொண்டிருந்த‌ன‌ர். க‌டைசியாக சொன்னார்....

"முத‌ல் முறை டைம் மெஷினில் ட்ராவ‌ல் ப‌ண்ண‌க்கூடிய‌ அதிர்ஷ்ட‌ம் உன‌க்கு, நான்சிக்கு, மிட்டுக்கு கிடைச்சிருக்கு"

"மேம் ஆர் யு சீரிய‌ஸ்?"

"யெஸ்"

"நீங்க‌?"

"இல்ல‌, நான் இங்க‌ருந்து என்னோட் ஸ்க்ரீன்ல‌ நீங்க‌ ட்ராவ‌ல் ப‌ண்ற‌ தேதியையும், இட‌ங்க‌ளையும் பார்த்துகிட்டிருப்பேன், ஐ ஹாவ் டூ நோட் ஸ‌ம் ஸ்ட‌ஃப். ஆர் யூ ரெடி டூ கோ பேக் டூ தி பாஸ்ட் வித் யுவ‌ர் ஃபேமிலி?"

"வித் ப்ள‌ஷ‌ர் மேம், திஸ் ஈஸ் ரிய‌லி எக்ஸைட்டிங்!"

சுன‌ந்த‌னால் மிட்டுவுக்கு புரிய‌வைக்க‌ முடிய‌வில்லை. ஆனால் ஒரு டூர் போகிறோம் என்ற‌வுட‌ன் வ‌ருவ‌த‌ற்கு அவ‌ளும் ஆர்வ‌த்துட‌ன் த‌யாரானாள். மூவ‌ரும் உருளை வ‌டிவ‌த்திலிருந்த‌ அந்த‌ மெஷினில் ஏறி உள்ளே அம‌ர்ந்தார்க‌ள். நாளைய‌ அறிவிய‌ல் உல‌க‌ம், த‌ங்க‌ளைப் ப‌ற்றிய‌ வ‌ர‌லாறை ப‌திவு செய்யும் என்ற‌ ந‌ம்பிக்கையோடு ப‌ய‌ண‌ப்ப‌ட‌ ஆர‌ம்பித்த‌ன‌ர். வெளியே த‌ன் அறையில் அம‌ர்ந்திருந்த‌ க்ருபாள‌னி மைக்கில் பேச‌, அது டைம் மெஷின் உள்ளேயிருந்த‌ ஸ்பீக்க‌ரில் கேட்ட‌து.

"சுன‌ந்த‌ன், டைம் மெஷினில் இது என்னுடைய‌ முத‌ல் முய‌ற்சி. உங்க‌ளோடு‌ ம‌னைவியும், குழ‌ந்தையும் இருப்ப‌தால் ரிஸ்க் எடுப்ப‌தில் என‌க்கு விருப்ப‌மில்லை. அத‌னால் முத‌லில் 50 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால், அதாவ‌து 2054க்கு ப‌ய‌ண‌ம் செய்யுங்க‌. உங்க‌ளுக்கு முன்னாடி இருக்க‌ற‌ கீபோர்ட்ல‌ 2..0..5..4 டைப் ப‌ண்ணி 'GO' ப‌ட்ட‌னை ப்ர‌ஸ் ப‌ண்ணுங்க‌. உங்க‌ ப‌ய‌ண‌த்தை நான் இங்கிருந்து மானிட்ட‌ரில் பார்த்துகிட்டிருப்பேன்...ஆல் த‌ பெஸ்ட்"

"தேங்க்ஸ் மேம்"

2054 என்று டைப் செய்துவிட்டு, 'GO' ப‌ட்ட‌னை ப்ர‌ஸ் செய்தான் சுன‌ந்த‌ன். பெரிய‌ள‌வில் ச‌த்த‌மின்றி டைம் மெஷின் கிள‌ம்ப‌ ஆர‌ம்பித்த‌து...விரைவில் நிக‌ழ‌ப்போவ‌தை அப்போது யாரும் அறிந்திருக்க‌வில்லை....க்ருபாள‌னி உட்ப‌ட‌!

முடிவு அடுத்த‌ (10.06.2010) ப‌திவில்....


Thursday, June 03, 2010

ஜாதிக‌ள் இல்லைய‌டி பாப்பா

ப‌திவுல‌கில் கால‌டி எடுத்து வைத்து கிட்ட‌த‌ட்ட‌ ஒரு வ‌ருட‌மாகிவிட்ட‌து. எழுத‌ ஆர‌ம்பித்த‌ புதிதில், விஷ‌ய‌மே இல்லாத‌ விஷ‌ய‌ங்க‌ளையெல்லாம் எழுதி ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் ப‌டிக்க‌ச் சொல்லி இம்சை செய்த‌தை, இப்போது நினைத்து பார்க்கையில் சிரிப்புதான் வ‌ருகிற‌து. என்ன‌ எழுத‌வேண்டும், எப்ப‌டி எழுத‌வேண்டும் என்று எந்த‌ யோச‌னையும், ப‌யிற்சியும் கிடையாது. அவ்வ‌ப்போது என்ன‌ தோன்றுகிற‌தோ, அதை அப்ப‌டியே கிறுக்கியிருக்கிறேன். உண்மையில் சொல்ல‌ப்போனால், சென்ற‌ வ‌ருட‌த்தில் எழுதிய‌ ப‌ல‌ ப‌திவுக‌ளை, ப‌திவு என்று சொல்வ‌த‌ற்கே ம‌ன‌சாட்சி உறுத்துகிற‌து.

ஏதாவ‌து உருப்ப‌டியா எழுத‌லாம்ல‌ என்று ந‌ட்புக‌ள் அக்க‌றையுட‌ன் இடிந்துரைக்கும்போது உண‌ர்கிறேன், நாம்‌ இன்னும் உருப்ப‌டியாக‌ எழுத‌ ஆர‌ம்பிக்க‌வில்லை என்று. அச‌ர‌ வைக்கும் வார்த்தை பிர‌யோக‌ங்க‌ள் எல்லாம் கைகூடாம‌லிருக்கிற‌து இன்னும். என்னுடைய‌ புத்த‌க‌ வாசிப்ப‌னுப‌வ‌ம் அப்ப‌டி. சுஜாதா. இல்லையென்றால் குமுத‌ம், ஆன‌ந்த‌ விக‌ட‌ன். இதைத் தாண்டி வேறேதும் வாசிக்க‌ விரும்பிய‌தில்லை. இன்னும் கூட‌ நிறைய‌ குறைக‌ளிருக்கிற‌து. அவ‌சிய‌ம் முய‌ற்சி செய்கிறேன், கொஞ்ச‌மாவ‌து என்னை மாற்றிக்கொள்ள‌....

*************************

2011 ச‌ட்ட‌ச‌பை தேர்த‌லில் எங்க‌ளையும் கூட்ட‌ணியில் சேர்த்துக்கொண்டு, வ‌ர‌விருக்கும் மாநில‌ங்கள‌வைத் தேர்த‌லில் எங்க‌ள் வேட்பாள‌ருக்கு ஆத‌ர‌வ‌ளிக்க‌ வேண்டும் என்று க‌லைஞருக்கு க‌டித‌ம் எழுதியிருக்கிறார் ம‌ருத்துவ‌ர் ராம‌தாஸ். மாநில‌ங்க‌ள‌வை வேட்பாள‌ர்? வேறு யார், அன்பும‌ணி ராம‌தாஸ்தான்.

த‌ற்போதிருக்கும் அர‌சிய‌ல் சூழ்நிலையில், அதிமுக‌வுட‌ன் விஜ‌ய‌காந்த் கூட்ட‌ணி அமைப்ப‌த‌ற்கான‌ வாய்ப்பிருப்ப‌தாக‌த் தெரிகிற‌து. அத‌னால் எப்ப‌டியும் அதிமுக‌ அணியில் பாம‌க‌ சேர‌முடியாது. இப்போதைக்கு பாம‌க‌வின‌ருக்கு ஒரே ஆப‌த்பாந்த‌வ‌ன் திமுக‌தான். இதை உண‌ர்ந்து கொண்ட‌ க‌லைஞர், 2011 ச‌ட்ட‌ச‌பை தேர்த‌லுக்கு கூட்ட‌ணியில் சேர்த்துக்கொள்கிறோம், ஆனால் அத‌ன்பின் வ‌ர‌விருக்கும் மாநில‌ங்க‌ள‌வைத் தேர்த‌லில்தான் உங்க‌ள் வேட்பாள‌ருக்கு ஆத‌ர‌வ‌ளிக்க‌ முடியும் என்று ம‌ருத்துவ‌ருக்கே அதிர்ச்சி வைத்திய‌ம் கொடுத்துவிட்டார். சாண‌க்கிய‌த்த‌ன‌ம் - ச‌த்திய‌மாக‌ க‌லைஞருக்கு பொருந்த‌க்கூடிய‌ வார்த்தைதான்.

*************************

ஜிம்பாப்வேயிட‌ம் தோற்கும் அள‌வுக்கு, 'திற‌மையுட‌ன்' இருக்கின்ற‌ன‌ர் ந‌ம் இந்திய‌ கிரிக்கெட் அணியின‌ர். என்ன‌தான், இது இர‌ண்டாம் நிலை அணிதானே என்று ச‌ப்பைக் க‌ட்டு க‌ட்டினாலும், தோற்ற‌தென்ன‌ ஆஸ்திரேலியாவுக்கு எதிராக‌வா? இதுக்கே இப்ப‌டி என்றால், அடுத்த‌ வ‌ருட‌ம் உல‌க‌க் கோப்பை. என்ன‌ செய்ய‌ப்போகின்ற‌ன‌ர்?

இன்றைய‌ நில‌வ‌ர‌ப்ப‌டி, லியாண்ட‌ர் ப‌ய‌ஸ் & லோஹி ஜோடி, ஃபிரெஞ்ச் ஓப்ப‌ன் ஆட‌வ‌ர் இர‌ட்டைய‌ர் பிரிவில், அரையிறுதிக்கு த‌குதி பெற்றுள்ள‌ன‌ர். காலிறுதியில், வெகு சுல‌ப‌மாக‌ நேர் செட்க‌ளில் வென்றிருக்கின்ற‌ன‌ர். லியாண்ட‌ர் லோஹியின் இதே‌ ஆட்ட‌ம் தொட‌ருமேயானால், இறுதிப்போட்டியில் கோப்பை நிச்ச‌ய‌ம்! பார்ப்போம் என்ன‌ ந‌ட‌க்கிற‌தென்று...

*************************



ஞாயிற‌ன்று 'சிங்க‌ம்' பார்த்தேன். சூர்யா ப‌க்க‌ம் பக்க‌மாக‌ வ‌ச‌ன‌ம் பேசுகிறார். அவ‌ர் ஓங்கி விடும் ஒரு குத்திலேயே அடியாட்க‌ள் முப்ப‌த‌டி த‌ள்ளி போய் விழுகிறார்க‌ள். 'அனுஷ்கா அழ‌காயிருக்கிறார்' இவ்விர‌ண்டு வார்த்தைக‌ளுக்கு ந‌டுவே 'மிக‌' என்ப‌தை சேர்க்காம‌ல் விட்டால் பெரும் த‌வ‌று செய்த‌வ‌னாவேன். அதனால் 'மிக‌'வை சேர்த்து ப‌டித்துவிடுங்க‌ள். அதிலும் 'காத‌ல் வ‌ந்தாலே' பாட‌லில் முக‌த்தில் ரியாக்ஷ‌ன் இல்லாம‌ல் ஆடும் காட்சி 'வாவ்'வென‌ ர‌சிக்கும் ர‌க‌ம். பிர‌காஷ்ராஜ் வ‌ழ‌க்க‌ம் போல். பாட‌ல் ம‌ற்றும் காத‌ல் காட்சிக‌ளில் சூர்யா அனுஷ்கா உய‌ர‌ வித்தியாச‌ம் தெரிய‌த்தான் செய்கிற‌து. ஆனால் உருவ‌ அமைப்பை வைத்து கிண்ட‌ல‌டிப்ப‌தில் என‌க்கு விருப்ப‌மில்லை. அப்ப‌டி கிண்ட‌ல‌டிக்க‌ ஆர‌ம்பித்தால், த‌மிழ் ந‌டிக‌ர்க‌ளில், க‌ம‌ல்ஹாச‌ன், அஜித் த‌விர‌ ம‌ற்ற‌ எல்லோரையும் வ‌றுத்தெடுக்க‌லாம். ஏன், க‌ம‌லை கூட‌ நால‌டி தூர‌த்தில் அருகே பார்த்திருக்கிறேன், அலுவ‌ல‌க‌ம் அருகில் த‌சாவ‌தார‌ம் ப‌ட‌ப்பிடிப்பு நட‌ந்த‌போது. க‌ம‌லும் ச‌ற்று உய‌ர‌ம் க‌ம்மிதான். அவ‌ர் உய‌ர‌மான‌ சிம்ர‌னோடு ந‌டிக்க‌வில்லையா என்ன‌?


ப‌ட‌த்தின் முத‌ல் பாதி கொஞ்ச‌ம் இழுவை. இர‌ண்டாம் பாதி, பல‌ லாஜிக் மீற‌ல்க‌ள் இருந்தாலும் செம‌ விறுவிறு. விஜ‌ய்யின் ஐம்பதாவ‌து ப‌ட‌த்திற்காக‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌ க‌தையாம் இது. ஒரு வெற்றிப்ப‌ட‌த்தை விஜ‌ய் இழ‌ந்துவிட்டார் என்றே சொல்வேன். 'சிங்க‌ம்' உறுமுவ‌தை தைரிய‌மாக‌ ஒரு முறை பார்க்க‌லாம். ஒரு முறைதான்.


*************************


உசுரே போகுதே உசுரே போகுதே, உத‌ட்டை நீ கொஞ்ச‌ம் சுழிக்கையில‌ என்று உசுரை எடுக்கிறார் கார்த்திக். பாட‌ல் கேட்கும்போதே ப‌ட‌த்தை எப்ப‌டா பார்ப்போம் என்று ஏங்குகிற‌து ம‌ன‌ம். ஜுன் 18 அன்று ரிலீஸ். எப்ப‌டியாவ‌து முத‌ல் மூன்று நாட்க‌ளுக்குள் பார்த்துவிட‌ வேண்டுமென்று துடித்துக்கொண்டிருக்கிறேன். ம்ம்ம்....ச‌த்ய‌ம் ஆண்ட‌வ‌ர் ஆன்லைனில் வ‌ர‌ம‌ளிக்க‌ வேண்டும்.


*************************


விளையாட்டு வினையாகும் என்ப‌த‌ற்கு ச‌ரியான‌ உதார‌ண‌ம், ச‌மீப‌த்திய‌ ப‌திவுல‌க‌ நிகழ்வு. விளையாட்டாய் கிண்ட‌ல் செய்து ஒரு ப‌திவு, ப‌திலுக்கு ஒரு க‌தை என‌ ஆர‌ம்பித்து, இப்போது ஆணாதிக்க‌ம், ஜாதி வெறி, ந‌ம்பிக்கை துரோக‌ம் என்று திசை மாறி ப‌ய‌ணித்துக்கொண்டிருக்கிற‌து.


ந‌ர்சிம் அவ‌ர்க‌ளின் க‌தை மிக‌ மிக‌ மிக‌ மிக‌த் த‌வ‌று. அத‌ற்கு அவ‌ர் இப்போது ப‌திவ‌ர் ச‌ந்த‌ன‌முல்லையிட‌ம் ப‌கிர‌ங்க‌மாக‌ ம‌ன்னிப்பும் கேட்டுள்ளார். இன்னும் என்ன‌ வேண்டும்? அவ‌ர் எழுதிய‌ வார்த்தைக‌ளை விட‌ இப்போது அவ‌ரைப் ப‌ற்றி எழுதுகையில் ப‌ல‌ர் உப‌யோகிக்கும் வார்த்தைக‌ள் ப‌டு கீழ்த்த‌ர‌மான‌து.


நான‌றிந்த‌வ‌ரை ந‌ர்சிம் அக்க‌தையில் எழுதிய‌து போன்ற‌ இழிசொற்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்துப‌வ‌ர‌ல்ல‌ர். அவ‌ரை அவ்வார்த்தைக‌ளை பிர‌யோகிக்கும் அள‌வுக்கு தூண்டிய‌து யார், என்ன‌ என்ப‌தெல்லாம் விடுத்து, இது நாள் வ‌ரை காத்திருந்து இப்போது இரை சிக்கிய‌து போல், ஜாதியை கையிலெடுத்திருக்கின்ற‌ன‌ர் அவ‌ரின் எதிர்ப்பாள‌ர்க‌ள். இதில் எங்கெய்யா வ‌ந்த‌து ஜாதி? அவ‌ர் உப‌யோகித்த‌ வார்த்தைக‌ளை அவ‌ர் சார்ந்த‌ ஜாதியின‌ர் ம‌ட்டும்தான் உப‌யோகிக்கின்ற‌ன‌ரா? உங்க‌ள் ஜாதியின‌ர் உப‌யோகித்த‌தே இல்லையா?


ப‌திவுல‌க‌ம் அறிமுக‌மான‌போது, மிக்க‌ ப‌டித்த‌வ‌ர்க‌ளும், த‌மிழ் ஆர்வ‌ல‌ர்க‌ளும் நிறைந்திருக்கின்ற‌ன‌ர் என்று நினைத்தேன். இப்போதுதான் தெரிகிற‌து, நாக‌ரீக‌ம‌ற்ற‌வ‌ர்க‌ளும், ஜாதி வெறி பிடித்த‌வ‌ர்க‌ளும் உட‌ன் இருக்கின்ற‌ன‌ர் என்று. 2010ல் இருக்கிறோம், ஜாதிக‌ள் இல்லைய‌டி பாப்பா என்று சொன்ன‌ ம‌னித‌னின் பிற‌ந்த‌ நாள் நூற்றாண்டு விழாவையே கொண்டாடி முடித்துவிட்டோம். ஆனால் இன்னும்..........திருந்தி தொலைங்க‌ய்யா!