Wednesday, July 29, 2009

ஆயிர‌த்தில் ஒருவ‌ன்


ஞாயிறு(26/07/2009) ம‌திய‌ம் ச‌ன் டிவியில‌ 'ஆயிர‌த்தில் ஒருவ‌ன்' இசை வெளியீட்டுவிழாவை பாத்துட்ருந்தேன். ஒரு வெப்சைட்ல‌ ஏற்க‌ன‌வே இந்த‌ ப‌ட‌த்தோட‌ பாட‌ல்க‌ளை கேட்டுட்டேன். அப்ப‌டி ஒண்ணும் சூப்ப‌ர்னு சொல்ல‌ முடியாது, ஒண்ணு ரெண்டு ந‌ல்லாயிருந்த‌து. அனேக‌மா விஷுவ‌லா பாத்தா ம‌த்த‌ பாட்டுலாம்கூட‌ புடிக்கும்னு நென‌க்குறேன்.

மேட்ட‌ருக்கு வ‌ர்றேன். இந்த‌ ப்ரோக்ராம்ல‌ பேசுன‌ பார்த்திப‌ன் மேடையில‌ இருந்த‌ எல்லோரையும்ப‌த்தி பேசிகிட்டே வ‌ந்தார். டைர‌க்ட‌ர் ஷ‌ங்க‌ர் ப‌த்தி சொல்லும்போது, "ஒருத்த‌ர் 150 கோடி குடுத்தா நான் 20 ப‌ட‌ம் எடுப்பேன், என்னைவிட‌ ஒரு ந‌ல்ல‌ டைர‌க்ட‌ர் 10 ப‌ட‌ம் எடுப்பார், அவ‌ர‌விட‌ பெட்ட‌ரான‌ டைர‌க்ட‌ர் 5 ப‌ட‌ம் எடுப்பார். ஆனா இவ‌ர்கிட்ட‌(ஷ‌ங்க‌ர்) 150 கோடி குடுத்தா ஒரு ப‌ட‌ம்தான் எடுக்க‌முடியும்னு சொல்லுவார்"னு சொன்னார்.

கேக்க‌ற‌துக்கு காமெடியா இருந்தாலும் என‌க்கென்ன‌வோ இது ஒரு ந‌ல்ல‌ க‌மெண்ட்னு தோண‌ல‌. அத்த‌னைபேர் ம‌த்தியில‌ ஒரு மேடையில‌ ஷ‌ங்க‌ர் மாதிரியான‌ ஒரு டைர‌க்ட‌ர‌ கிண்ட‌ல் ப‌ண்ற‌து - "என‌க்கென்ன‌மோ இது ச‌ரியாப‌ட‌லை". த‌மிழ் இல‌க்க‌ண‌த்துல‌ வ‌ஞ்ச‌ப்புக‌ழ்ச்சி அணின்னு ஒண்ணு இருக்கே, அத‌ யூஸ் ப‌ண்ணிட்டாரோ? ஷ‌ங்க‌ர் த‌ன்னோட‌ ஜென்டில்மேன், இந்திய‌ன், முத‌ல்வ‌ன், அந்நிய‌ன், சிவாஜின்னு ச‌மூக‌த்துக்கு ந‌ல்ல‌து ந‌ட‌க்குற‌ மாதிரிதான் ப‌ட‌ம் எடுக்குறார். விதிவில‌க்கு "பாய்ஸ்" (ஷ‌ங்க‌ர்-எழுத்தாள‌ர் சுஜாதா காம்பினேஷ‌ன்ல‌ வ‌ந்த‌ ஒரே ஒரு த‌ர‌மில்லாத‌ பட‌ம்). அந்நிய‌ன் ப‌ட‌த்த‌ நான் ச‌த்ய‌ம் தியேட்ட‌ர்ல‌தான் பாத்தேன். அந்த‌ தியேட்ட‌ர் குவாலிட்டியும், விறுவிறுன்னு போன‌ ப‌ட‌மும் என்னை அப்போ ஒரு முடிவெடுக்க‌வெச்சுது. இனிமே இந்த மாதிரி சூப்ப‌ர் பட‌ங்க‌ள‌ ஹைலெவ‌ல் தியேட்ட‌ர்க‌ள்ல‌தான் பாக்க‌ணும்னு முடிவுப‌ண்ணேன். "சிவாஜி" ரிலீஸான‌ மூணாவ‌து நாள் தேவியில‌தான் பாத்தேன்.

சே, சொல்ல‌வ‌ந்த‌த‌விட்டுட்டு எதெதையோ சொல்லிகிட்ருக்கேன். பார்த்திப‌ன் பேசுன‌துக்க‌ப்புற‌ம் ஷ‌ங்க‌ர் பேசுனார். "ஆயிர‌த்தில் ஒருவ‌ன்" ப‌ட‌த்தை ப‌த்தி சொல்லிட்டு "150 கோடி குடுத்தா ஒரு ப‌ட‌ம்தான் எடுப்பேன்னு சொன்னாங்க‌, ஆனா ப‌த்து ப‌ட‌த்த‌ பாத்த‌ திருப்தி அந்த‌ ஒரு ப‌ட‌த்துலேயே கிடைக்குற‌ மாதிரி எடுப்பேன்"னு சொன்னார் பாருங்க‌, இதுதான் ஹைலைட்டே! ஷ‌ங்க‌ர் கொஞ்ச‌ம் ஓவ‌ரா செல‌வு ப‌ண்ணிதான் எடுக்க‌றார், இல்லைனு சொல்ல‌ல‌. ஆனா அவ‌ரோட‌ ப‌ட‌ங்க‌ள‌ பாத்துட்டு வ‌ரும்போது "சே வேஸ்ட்டுடா"ன்னு ந‌ம‌க்கு தோணுதா? முத‌ல்வ‌ன் ப‌ட‌த்துல‌ வ‌ர்ற‌ அர்ஜுன்-ர‌குவ‌ர‌ன் இண்ட‌ர்வியூ சீன் இன்னைக்குகூட‌ ஏதாவ‌து ஒரு சேன‌ல்ல‌ போட்டா நான் க‌ண்டிப்பா சேன‌ல் மாத்த‌மாட்டேன்.

வித்தியாச‌ விரும்பி பார்த்திப‌ன் அவ‌ர்க‌ளே, க‌லாய்க்க‌ற‌துன்னா ஆள‌ பாத்து க‌லாய்ங்க‌. மைக் கிடைச்சுடுச்சுன்னு காமெடிங்க‌ற‌ பேர்ல‌ யாரையும் என்ன‌ வேணும்னாலும் சொல்ல‌லாம்னா, நான்கூட‌ ஒரு ஸ்டேஜ் ஏறி ரீச‌ன்டா நீங்க‌ எடுத்த‌/ந‌டிச்ச‌ பட‌ங்க‌ள‌ப‌த்தி சொல்ல‌லாம்.

அட்வைஸ் ப‌ண்ற‌ அள‌வுக்கு என‌க்கு அறிவோ த‌குதியோ கிடையாது. ஆனா பார்த்திப‌ன் பேசுன‌த‌ கேட்ட‌துக்க‌ப்புற‌ம் என‌க்கு தோணுன‌து என்ன‌ன்னா, ந‌ம‌க்கு புடிக்குதோ இல்லையோ மேடைன்னு வ‌ரும்போது அடுத்த‌வ‌ங்க‌ள விம‌ர்ச‌ன‌ம் ப‌ண்ற‌துக்கு முன்னாடி ஒரு முறை யோசிச்சுபேசுற‌து ந‌ல்ல‌து.



Thursday, July 23, 2009

நாடோடிக‌ள்


போன‌ வார‌ம் ச‌னிக்கிழ‌மை "நாடோடிக‌ள்" ப‌ட‌ம் பாத்தேன். ச‌மீப‌ கால‌மா த‌மிழ் சினிமாவுக்கு கொஞ்ச‌ம் ந‌ல்ல‌ கால‌ம் போல‌. ஒரு சில‌ ந‌ல்ல‌ ப‌ட‌ங்க‌ள் வ‌ந்துட்டிருக்கு. ச‌சிகிட்டே தன்னோட‌ காத‌லியை சேத்துவெக்க‌ச்சொல்லி உத‌விகேட்டு வ‌ர்றார் அவ‌ர் ந‌ண்ப‌ர். 'என் ந‌ண்ப‌னின் ந‌ண்ப‌னும் என‌க்கு ந‌ண்ப‌னே'ன்னு, ச‌சியோட‌ சேர்ந்து 'வ‌ஸ‌ந்த்&கோ' விஜ‌ய்யும், 'க‌ல்லூரி' ப‌ர‌ணியும் ஹெல்ப் ப‌ண்ணி அந்த‌ ந‌ண்ப‌னுக்கு க்ல்யாண‌ம் ப‌ண்ணிவெக்குறாங்க‌. அதுக்க‌ப்புற‌ம் இந்த‌ மூணுபேரோட‌ வாழ்க்கை என்ன‌வாகுதுங்க‌ற‌துதான் மீதி க‌தை.

உண்மையா சொல்றேன், த்ரில்ல‌ர் ப‌ட‌ம்னு சொல்லி ரீச‌ன்டா வ‌ந்த‌ த‌மிழ் ப‌ட‌ங்க‌ள்ல‌கூட‌ இவ்ளோ த்ரில்லிங் இல்ல‌. இந்த‌ ப‌ட‌த்துல‌, இடைவேளைக்கு முன்னாடி வ‌ர்ற‌ சீன்தான் செம‌ த்ரில்லிங். என்னைக் கேட்டா ப‌ட‌த்தோட‌ முத‌ல் பாதியே த‌ட‌த‌ட‌ன்னு ஓட‌ற‌ ஒரு த்ரில்ல‌ர் பட‌ம் மாதிரிதான் இருக்குது. இர‌ண்டாம் பாதில‌ மொத‌ல்ல‌ கொஞ்ச‌ம் ட‌ல் அடிச்சாலும், க்ளைமேக்ஸ்ல‌ ம‌றுப‌டியும் ப‌ட‌ம் டாப்கிய‌ர்ல‌ எகிறுது. இதுக்கு மேல‌ ப‌ட‌த்த‌பத்தி சொன்னா, நீங்க‌ பட‌ம் பாக்கும்போது சுவார‌ஸ்ய‌ம் போயிடும்.

ம்ம்ம்...ச‌சி..இவ‌ரோட‌ வாய்ஸ் ந‌ல்லாயிருக்கு. ஹீரோவாவும் ம‌னுஷ‌ன் பொள‌ந்து க‌ட்றார். 'உங்க‌ நேர்மை என‌க்கு புடிச்சிருக்கு'ன்னு அடிக்க‌டி சொல்லும்போது ர‌சிக்க‌வெக்குறார். விஜ‌ய்யும் ச‌ரி, ப‌ர‌ணியும் ச‌ரி, ரெண்டு பேரும் கெடைச்ச‌ சான்ஸை ந‌ல்லா யூஸ் ப‌ண்ணியிருக்காங்க‌. அதுமாதிரி ம‌த்த‌ கேர‌க்ட‌ர்ஸையும் டைர‌க்ட‌ர் பாத்து பாத்து செதுக்கியிருக்கார். ஹீரோயின்ஸ‌ ப‌த்தி சொல்ல‌ணும்னா, ச‌சியோட‌ ஜோடியா வ‌ர்ற‌ அந‌ன்யா கொஞ்ச‌ம் ஜோதிகா ஸ்டைல்ல‌ ந‌டிச்சிருந்தாலும் துறுதுறுன்னு ந‌ல்லாவே ப‌ண்ணியிருக்காங்க‌.

இன்னொரு ஹீரோயின் அபிந‌யா, இந்த‌ ப‌ட‌த்த‌ நான் பாக்க‌போன‌துக்கு கார‌ண‌மே இந்த‌ பொண்ணுதான். ஒரு புக்ல‌ ப‌டிச்சேன், அபிந‌யாவுக்கு வாய்பேச‌வும் முடியாது, காதும் கேக்காதுன்னு போட்ருந்தாங்க‌. அந்த‌ குறையெல்லாம் கொஞ்ச‌ம்கூட‌ தெரியாம‌ ந‌டிச்சிருக்காங்க‌. சென்டிமெண்ட்லாம் இல்ல‌, சீரிய‌ஸாவே சொல்றேன், இவ‌ங்க‌ளோட‌ த‌ன்ன‌ம்பிக்கையை பாக்கும்போது, சே, நாம‌ல்லாம் ஒண்ணுமே இல்ல‌ன்னு தோணுச்சு.

ஒருவித‌த்துல‌ ச‌சிக்கு இந்த‌ பட‌ம் ஹாட்ரிக். சுப்பிர‌ம‌ணியபுர‌ம், ப‌ச‌ங்க‌, இப்போ நாடோடிக‌ள். இப்போதைக்கு கோட‌ம்பாக்க‌த்துக்கு கெடைச்சிருக்க‌ற‌ த‌ங்க‌ முட்டையிடுற‌ பொன்வாத்து, ச‌ந்தேக‌மேயில்லாம‌ ச‌சிதான்...!


Thursday, July 16, 2009

முடிவின் ஆர‌ம்ப‌ம்!


மார்க்ஸிஸ்ட் க‌ம்யூனிஸ்ட்டுக்கும் அதிமுக‌வுக்கும் அறிக்கைப்போர் ஆர‌ம்பிச்சாச்சு. இத‌ ஆரம்பிச்ச‌ பெருமை மா.கம்யூ மாநில‌த்த‌லைவ‌ர் வ‌ர‌த‌ராஜ‌னுக்கே சேரும். 2009 பாராளும‌ன்ற‌த் தேர்த‌ல்ல‌ தோல்வி அடைஞ்ச‌துக்கு அதிமுக‌வோட‌ அணுகுமுறையும் ஒரு முக்கிய‌ கார‌ண‌ம்னு சொல்லி ஒரு திரிய‌ கொளுத்திபோட்டார். இதுக்கு பதிலா செங்கோட்டைய‌ன் எந்தெந்த‌ மாநில‌த்துல‌ல்லாம் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தோல்வி அடைஞ்ச‌துன்னு ஒரு லிஸ்ட் போட்டு, இதுக்கெல்லாம் கூட‌ அதிமுக‌தான் கார‌ண‌மான்னு கேள்வி கேட்டு ஒரு அறிக்கைவிட்டார்.

இதுல‌ க‌டுப்பான‌ வ‌ர‌த‌ராஜ‌ன், நேத்து என்னென்ன‌மோ ச‌மாளிச்சு ம‌றுப‌டியும் ஒரு அறிக்கைவிட்ருக்கார். போதும் உங்க‌கூட‌ குப்பை கொட்ன‌து, இப்ப‌டியே கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா க‌ழ‌ண்டுக்க‌றோம்ங்க‌ற‌த‌ ம‌றைமுக‌மா சொல்லியிருக்கார். பொதுவா, த‌ன்னோட‌ கூட்ட‌ணி க‌ட்சி ஜெயிச்சாலே புர‌ட்சித்த‌லைவியோட‌ டீலிங் ஒரு மார்க்க‌மாத்தான் இருக்கும். இதுல‌ அந்த‌ க‌ட்சி தோத்துட்டா, அவ்ளோதான். இதுக்கு ப‌க்காவான எக்ஸாம்பிள், பாட்டாளி ம‌க்க‌ள் க‌ட்சி. தேர்த‌ல் முடிஞ்சு கிட்ட‌த‌ட்ட‌ மூணு மாச‌ம் ஆகியும் இதுவ‌ரைக்கும் டாக்ட‌ர் ராம‌தாஸுக்கு த‌ன்னை ச‌ந்திக்க‌ற‌துக்கு அப்பாயின்ட்மென்ட் குடுக்க‌வேயில்ல‌.

அனேக‌மா கூட்ட‌ணி முறிவுக்கான‌ ஆர‌ம்ப‌ம்தான் இந்த‌ அறிக்கைப்போர்னு நென‌க்குறேன். இன்னும் ரெண்டு வ‌ருஷ‌த்துல‌ த‌மிழ்நாடு ச‌ட்ட‌ச‌பைத் தேர்த‌ல் வ‌ர‌ப்போகுது. அதுக்குள்ள‌ மார்க்ஸிஸ்ட் திமுக‌ கூட்ட‌ணிக்கு எப்ப‌டியும் வ‌ந்துடுவாங்க‌. "என‌க்கு க‌ம்யூனிஸ‌ம்தான் பிடிக்கும், க‌ம்யூனிஸ்டுக‌ளை அல்ல‌"ன்னு சொன்ன‌ முத‌ல்வ‌ர் அப்போ என்ன‌ சொல்வார்? "உட‌ன்பிற‌ப்பே, என‌க்கு க‌ம்யூனிச‌ம் மாத்திர‌ம‌ல்ல‌, வ‌ர‌த‌ராஜ‌ன் போன்ற‌ ப‌ண்பு மிகுந்த‌ சில‌ க‌ம்யூனிஸ்டுக‌ளையும் பிடிக்கும்"னு சொல்வார். ஹும்...போராட்ட‌ங்க‌ள்னாலேயே வ‌ள‌ர்ந்த‌ ஒரு க‌ட்சி, இன்னைக்கு ஒரு சில‌ சீட்க‌ளுக்காக‌, ரேஸ்ல‌ எப்ப‌டியாவ‌து ஜெயிக்க‌ணும்னு ஓட‌ற‌ குதிரை மாதிரி, திமுக‌ அதிமுக‌ன்னு மாறி மாறி ச‌வாரி செஞ்சிட்டிருக்கு. இப்போ இருக்க‌ற‌ நிலைமையை வெச்சு மா.க‌ம்யூனிஸ்ட் க‌ட்சிய‌ ப‌த்தி சிம்பிளா சொல்ல‌ணும்னா, "குஷி" ப‌ட‌த்துல‌ மும்தாஜ் சொல்லுவாங்க‌ளே, அதுதான், "அய்ய்யோ பாவ‌ம்"

Tuesday, July 14, 2009

ஏன் இந்த‌ அநாக‌ரிக‌ம்?


இன்னைக்கு ப‌ஸ்ல‌ வ‌ரும்போது பின்னாடி சீட்ல‌ ரெண்டு ப‌ச‌ங்க‌(27 இல்ல‌ 28 வ‌ய‌சு இருக்கும்) பேசிகிட்டுவ‌ந்தாங்க‌. ஒட்டு கேக்க‌ல‌, ய‌தேச்சையா காதுல‌ விழுந்த‌து. அவ‌ங்க‌ள்ல‌ ஒருத்த‌ர் சொல்றார்.

"நேத்து விஜ‌ய் டிவில‌ விஜ‌ய் அவார்ட்ஸ் பாத்தியாடா? த‌சாவ‌தார‌ம் ப‌ட‌த்துக்காக‌ க‌ம‌ல் பெஸ்ட் காமெடிய‌ன் அவார்ட் வாங்குனான். சான்ஸே இல்ல‌, செம‌ டேல‌ன்ட் இல்ல‌ அவ‌னுக்கு"

பேச்சு அவார்ட்ஸ்ல‌யிருந்து, க‌ம‌லோட‌ ப‌ட‌மான‌ "உன்னைப்போல் ஒருவ‌ன்" ப‌ட‌த்த‌ ப‌த்தி திரும்புச்சு.

"ஏ, அந்த‌ப்ப‌ட‌ம் 'எ வெட்ன‌ஸ்டே'ங்க‌ற‌ இந்திப்ப‌ட‌த்தோட‌ ரீமேக்டா, அதுல‌ ந‌ஸ்ரூதின்ஷா ப‌ண்ண‌ கேர‌க்ட‌ர்ல‌தான் க‌ம‌ல் ந‌டிக்க‌றான். ந‌ஸ்ரூதின்ஷா செம்மையா ப‌ண்ணியிருப்பான் தெரியுமா, அவ‌ன் அள‌வுலாம் க‌ம‌லால‌ ந‌டிக்கமுடியாது...."

இப்ப‌டியே அவ‌ரோட‌ பேச்சு நீண்டுகிட்டேபோச்சு. என‌க்கு ஒண்ணு புரிய‌ல‌. ஏன் ந‌டிக‌ர்க‌ள்னா இவ்ளோ கேவ‌ல‌மா ட்ரீட் ப‌ண்றோம்? இதுவே ஒரு டாக்ட‌ர‌ அவ‌ர் இந்த‌ மாதிரி பேசியிருப்பாரா "அவ‌ன் ந‌ல்லா ஆப்ரேஷ‌ன் ப‌ண்ணுவான்டா, அவ‌ன் குடுக்க‌ற‌ மாத்திரை சீக்கிர‌ம் வேலை செய்யும்"னு. க‌ண்டிப்பா பேச‌மாட்டார். ஆனா ந‌டிக‌ர்க‌ள‌ மட்டும் ஏன்?

அவ‌ரை ம‌ட்டும் நான் குறை சொல்ல‌ல‌. அவ‌ரோ, நானோ, நீங்க‌ளோ இல்ல‌. இது எப்ப‌யிருந்தோ தொட‌ருது. நானும் பெரிய‌ உத்த‌ம‌ன்லாம் கெடையாது. எவ்ள‌வோ ந‌டிக‌ர்க‌ள ம‌ரியாதையில்லாம‌ அவ‌ன் இவ‌ன்லாம் பேசியிருக்கேன். ஆனா ஒரு ஸ்டேஜுக்கு அப்புற‌ம் எம்ஜிஆர், சிவாஜி உட்ப‌ட‌ ப‌ழைய‌ நடிக‌ர்க‌ள், க‌விஞ‌ர் க‌ண்ண‌தாச‌ன், எம்எஸ்வி, இளைய‌ராஜா, ஏ.ஆர்.ர‌ஹ்மான், எஸ்பிபி, ம‌ணிர‌த்ன‌ம், எழுத்தாள‌ர் சுஜாதா, ர‌ஜினி, க‌ம‌ல்னு நிறைய‌ பேர‌ ம‌ரியாதையோடுதான் குறிப்பிடுறேன். இவ‌ங்க‌ள்லாம் பெரிய‌ அள‌வுல‌ சாதிச்ச‌வ‌ங்க‌. ஜீனிய‌ஸ். இவ‌ங்க‌ளுக்குகூட‌வா ம‌ரியாதை குடுக்க‌க்கூடாது?

க‌ம‌ல் ஒரு லிவிங் லெஜ‌ன்ட். ஒரு சின்ன‌ எக்ஸாம்பிள் சொல்றேன். த‌சாவ‌தார‌ம் பட‌த்துக்காக‌ முத‌ல்ல அமெரிக்கால‌ நிறைய‌ கெட்ட‌ப் போட்டு டெஸ்ட் ப‌ண்ணிட்டிருந்தாங்க‌ளாம். அப்போ கே.எஸ். ர‌விக்குமார் கேட்ருக்கார் "சார், இவ்ளோ மேக்க‌ப்போட்டு ப‌ண்ண‌ணும்னா உங்க‌ளுக்கு ரொம்ப‌ க‌ஷ்ட‌மாயிருக்குமே, க‌ண்டிப்பா இந்த‌ப் ப‌ட‌ம் ப‌ண்ண‌ணுமா?" அதுக்கு க‌ம‌ல் ப‌திலுக்கு கேட்ருக்கார், "கஷ‌ட‌ப்ப‌டாம‌ ப‌ண்ண‌ணும்னா நான் எதுக்கு?". இதுக்கு மேல‌யும் க‌ம‌ல் ப‌த்தி சொல்ல‌ணுமா?

என்னை பொருத்த‌வ‌ரைக்கும், இந்த‌ மாதிரி சாதிச்ச‌, சாதிச்சிட்டிருக்க‌ற‌ ம‌னுஷ‌ங்க‌ளையெல்லாம் அவ‌ன், இவ‌ன்னு சொல்ற‌து அநாக‌ரிக‌மான‌ விஷ‌ய‌ம்தான். அவ‌ங்க‌ள‌ எங்களுக்கு ரொம்ப‌ புடிக்கும், ஒரு உரிமைல‌தான் அவ‌ன், இவ‌ன்னு சொல்றோம்னு சொன்னா அது ச‌ப்பைக்க‌ட்டு. ந‌ம‌க்கு பார‌தியாரைகூட‌த்தான் புடிக்குது, அதுக்காக‌, க‌விதைலாம் சூப்ப‌ரா எழுதியிருக்கான்னா சொல்றோம். எழுதியிருக்கார்னுதானே சொல்றோம்.....

குறிப்பு: ரெண்டு ப‌ட‌ம் ஓடிடுச்சுன்னாலே, அடுத்த‌ ப‌ட‌த்துல‌ சூப்ப‌ர் ஸ்டார் ரேஞ்சுக்கு பில்ட‌ப் குடுக்க‌ற‌வ‌ங்க‌லள‌ என்ன‌ வேணும்னாலும் திட்டுங்க‌, த‌ப்பே இல்ல‌ (சிம்புவையோ விஷாலையோ சொல்ல‌ல‌!).

Friday, July 10, 2009

அடுத்த‌து என்ன‌?


பூமாலை வீடியோ, ச‌ன் டிவி, பாட‌ல்க‌ளுக்காக‌ ச‌ன் மியூசிக், பட‌ங்க‌ளுக்காக‌ கே டிவி, செய்திக‌ளுக்காக‌ ச‌ன் நியூஸ், குழ‌ந்தைக‌ளுக்காக‌ சுட்டி டிவி, காமெடிக்காக‌ ஆதித்யா, தென்னிந்திய‌ பிராந்திய‌ மொழிக‌ள்ல‌ சேன‌ல்க‌ள், டீடிஎச், எஃப்எம், நியூஸ்பேப்ப‌ர்ல‌ தின‌க‌ர‌ன், த‌மிழ் முர‌சு, புக்ல‌ குங்கும‌ம், சினிமால‌ ச‌ன் பிக்ச‌ர்ஸ்....ம்...அடுத்த‌து என்ன‌ தெரியுமா? விமான‌ போக்குவ‌ர‌த்து.

யெஸ்...க‌லாநிதி மாற‌ன் அடுத்து க‌ள‌ம் இற‌ங்க‌ப்போற‌து, விமான‌ போக்குவ‌ர‌த்து. என்ன‌தான் அர‌சிய‌ல் பல‌ம், ப‌ண‌ம் இருந்தாலும், பிஸின‌ஸ்ல‌ ஜெயிக்க‌ற‌துக்கு த‌னி டேலன்ட் வேணும். அந்த‌ விஷ‌ய‌த்துல‌ க‌ட்சி பாகுபாடு பாக்காம‌ க‌ண்டிப்பா இவ‌ர‌ பாராட்டியே ஆக‌ணும். யோசிச்சு பாருங்க‌, அதிமுக‌ கூட‌ பெரிய‌ க‌ட்சிதான். இருந்தாலும் அவ‌ங்க‌ளால‌ மீடியாவுல‌ ஓர‌ள‌வுக்கு மேல‌ வ‌ள‌ர‌முடிய‌ல‌. இந்தியாவுல‌ டாப் ப‌ண‌க்கார‌ர்க‌ள்ல‌ ஒருத்த‌ரா வ‌ர்ற‌துக்கு, வெறும் க‌ட்சி ஆத‌ர‌வு ம‌ட்டும் போதாது. திற‌மையும், புத்திசாலித்த‌ன‌மும், ப‌ண‌மும் ஒண்ணு சேர்ந்துட்டா ச‌க்ச‌ஸ் நிச்ச‌ய‌ம்ங்க‌ற‌துக்கு ஓர் எடுத்துக்காட்டு இவ‌ர்தான்.

என்னைக் கேட்டா, ச‌ன் நெட்வொர்க் விமான‌ப் போக்குவ‌ர‌த்துல‌ இற‌ங்க‌ற‌துக்கு நான் கைத‌ட்டி வ‌ர‌வேற்பு கொடுப்பேன். இவ‌ங்க‌ வ‌ந்தாங்க‌ன்னா, சும்மா இருக்க‌மாட்டாங்க‌. ரெண்டு ரூபா குடுத்து தின‌க‌ர‌ன் வாங்கி, ஏதாவ‌து போட்டில‌ க‌ல‌ந்துக்கிட்டா, ம‌துரை வ‌ரைக்கும் ஃப்ரீயா ப்ளேன்ல‌ கூட்டிட்டுபோற மாதிரிலாம் ஒரு ஆஃப‌ர் குடுப்பாங்க‌. இவ‌ங்க‌ ப‌ண்ற‌ சில்மிஷ‌த்த‌ பாத்தா ம‌த்த‌வ‌ங்க‌ சும்மா இருப்பாங்க‌ளா. அவ‌ங்க‌ளும் டிக்கெட் விலையை குறைக்க‌ற‌து, ஆஃப‌ர் குடுக்க‌ற‌துன்னு இற‌ங‌குவாங்க‌. ஸோ, இதுவ‌ரைக்கும் ப‌ஸ்ல‌யும், ட்ரெயின்ல‌யும் போயிட்டுவ‌ந்துட்ருக்க‌ற‌ நாம‌, சீக்கிர‌ம் ப்ளேன்ல‌யும் போக‌ப்போறோம். நீங்க‌ வேண்ணா பாருங்க‌, தி.ந‌க‌ர் க‌டைக‌ள்ல‌யும் இவ‌ங்க‌ளோட‌ ப்ளேன் டிக்கெட் ஆடித்த‌ள்ளுப‌டில‌ கெடைச்சாலும் கெடைக்க‌லாம். ஏதோ ஒண்ணு, ந‌ம‌க்கு ந‌ல்ல‌து ந‌ட‌ந்தா ச‌ரிதான்!

Thursday, July 09, 2009

ப‌ட்ஜெட் 2009


ம‌த்திய‌ அர‌சு ப‌ட்ஜெட் போட்டு நாலு நாள் ஆகுது. இன்னும் அத‌ப‌த்தி பேசாம‌ இருந்தா எப்ப‌டி? அதான் இன்னைக்கு கொஞ்ச‌ம் ப‌ட்ஜெட் ப‌க்க‌ம் ஒதுங்க‌லாம்னு பாக்குறேன். பேப்ப‌ர்ல‌ பாத்த‌துல‌, இது ரொம்ப‌ ந‌ல்ல‌ ப‌ட்ஜெட், சாதார‌ண‌ ம‌னுஷ‌ங்க‌ளுக்கான‌ ப‌ட்ஜெட்னுலாம் ஆஹா, ஓஹோன்னு எழுதியிருந்தாங்க‌. ம், ஏதோ ஒர‌ள‌வுக்கு வேண்ணா அப்ப‌டி இருக்க‌லாம். ஆனா இது சூப்ப‌ர்னு சொல்ல‌ என‌க்கு ம‌னசு வ‌ர‌ல‌.

எல்சிடி டிவிக்க‌ளோட‌ விலை குறையும், செல்ஃபோன்களோட‌ விலை குறையும்னு சொல்றாங்க‌. அட‌ போங்க‌ய்யா, எல்சிடி டிவி விலை குறைஞ்சா என்ன‌, செல்ஃபோன் விலை குறைஞ்சா என்ன‌, எங்க‌ம்மா வெங்காய‌ம் விலை குறையுதா, த‌க்காளி விலை குறையுதா, கேஸ் விலை குறையாட்டாலும் ஏறாம‌ இருக்குதான்னுலாம்தான் பாப்பாங்க‌. ப‌த்தாததுக்கு ப‌ட்ஜெட்டுக்கு ரெண்டு மூணு நாள் முன்னாலேயே பெட்ரோல், டீச‌ல் விலையையும் ஏத்திட்டாங்க‌. இதுக்கு மேல‌ என்ன‌ சொல்றது.

இந்த‌ பெட்ரோல், டீச‌ல் ரெண்டுத்துக்குமே ஏதாவ‌து மாற்றுப்பொருள் ஒண்ணு க‌ண்டுபுடிக்க‌ணும். அப்ப‌தான் ஆயில் அதிக‌மா வெச்சிருக்க‌ற‌ நாடுங்க‌ ஓவ‌ர் சீன் போடுற‌தை நிறுத்துவாங்க‌. வெறும் அப்ப‌ள‌ம் பொரிக்க‌ற‌துக்கும், வ‌டை போடுற‌துக்கும் மட்டும் ஆயில் இற‌க்கும‌தி ப‌ண்ணா, அவ‌ங்க‌ நிலைமை என்னாகும்? ஏதாவ‌து எலெக்ட்ரிக் ஸ்கூட்ட‌ர், எலெக்ட்ரிக் பைக், எலெக்ட்ரிக் கார்னு க‌ண்டுபுடிங்க‌ய்யா. சோலார்ல‌ இய‌ங்க‌ற‌ மாதிரி இருந்தா இன்னும் ந‌ல்லாயிருக்கும்.

இந்த‌ ப‌ட்ஜெட்னால‌ ஜ‌வுளித்துறையில‌ அம்ப‌தாயிர‌ம் வேலைவாய்ப்புக‌ள் உருவாகும்னு தயாநிதி மாற‌ன் வேற‌ சொல்லியிருக்கார். ச‌ன் டிவி டாப் 10 மூவிஸ்ல‌ 'மாசிலாம‌ணி'க்கு ந‌ம்ப‌ர் 1 குடுக்க‌ற‌மாதிரி இவ‌ர் காமெடி ப‌ண்றாரா, இல்ல‌ சீரிய‌ஸாவே சொல்றாரான்னு தெரிய‌ல. பாப்போம் என்ன‌ ப‌ண்றாருன்னு...

Wednesday, July 08, 2009

க‌தை ஒண்ணு க்ளைமேக்ஸ் ரெண்டு



இன்னைக்கு ஒரு க‌தை எழுதியிருக்கேன். இதுல‌ ரெண்டு க்ளைமேக்ஸ் இருக்கு. உங்க‌ளுக்கு எது புடிக்குதோ அதுதான் க‌தையோட‌ முடிவா நீங்க‌ நெனச்சுக்க‌லாம்.

ம‌ணி இர‌வு 11:10, அலுவ‌ல‌க‌ம் முடிந்து ச‌ந்துரு வீட்டிற்கு வ‌ந்துகொண்டிருந்தான். இர‌வு வீட்டிற்கு தாம‌த‌மாக‌ வ‌ருவ‌து, க‌ண்ட‌ நேர‌த்தில் க‌ண்ட‌தை சாப்பிடுவ‌து, பின்பு தொப்பையை வ‌ள‌ர்த்துக்கொண்டு ச‌ம்பாதிப்ப‌தையெல்லாம் டாக்ட‌ரிட‌ம் கொண்டுபோய் கொட்டுவ‌து என்று இவைதான் சாஃப்ட்வேர் ப‌ணியில் இருப்ப‌வ‌ர்க‌ளில் பெரும்பாலோனோரின் அடையாள‌ங்க‌ள். ச‌ந்துருவும் அந்த‌ அடையாள‌ங்க‌ளில் ஒருவ‌ன். ஓல்ட் மஹாப‌லிபுர‌ம் ரோடில் அவ‌னுடைய‌ ப‌ல்ச‌ர் சீறிப்பாய்ந்துகொண்டிருந்த‌து. தூர‌த்தில் ஒரு ஏடிஎம் தெரிய‌, ம‌றுநாள் வீட்டு வாட‌கை கொடுக்க‌வேண்டிய‌து ஞாப‌க‌ம் வ‌ந்த‌து.

செக்யூரிட்டிகூட‌ இல்லாம‌ல் அந்த‌ ஏடிஎம் ஒரு மிக‌ச்சிறிய‌ பாழ‌டையாத‌ ப‌ங்க‌ளா போன்று காட்சிய‌ளித்த‌து. ப‌ண‌த்தை எடுத்துக்கொண்டு ம‌றுப‌டி த‌ன் ப‌ல்ச‌ரை சீற்ற‌ம‌டைய‌ச்செய்தான். ஒரு இருப‌து அடிதான் சென்றிருக்க‌க்கூடும். சாலை ஓர‌த்தில் இருவ‌ர் பைக்கை நிறுத்திவிட்டு, லிப்ட் கேட்டுக்கொண்டிருந்த‌னர். "நிற்க‌லாமா வேண்டாமா" ம‌ன‌ம் ச‌ற்று த‌ய‌ங்கிய‌து. இந்த‌ நேர‌த்தில் அதுவும் கையில் ப‌ண‌ம் இருக்கும்போது, வேண்டாம் என்று தோன்ற‌வே அவ‌ர்க‌ளை க‌ட‌ந்து ச‌ற்று வேக‌மாக‌ போக‌ ஆர‌ம்பித்தான்.

இந்த‌ சாலையில் இந்த‌ நேர‌த்தில் நிற்ப‌து ஒருவேளை ந‌ம்ம‌ சாஃப்ட்வேர் சாதியைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளோ என்றெண்ணி வ‌ண்டியைத் திருப்பினான். அவ‌ர்க‌ள் நின்றுகொண்டிருந்த‌ இட‌த்திற்கு வ‌ந்து ப‌ல்ச‌ரின் ப‌ல்ஸை த‌ற்காலிக‌மாக‌ நிறுத்திவைத்தான். இருட்டில் அவ‌ர்க‌ளின் முக‌ம்கூட‌ ச‌ரியாகத் தெரிய‌வில்லை.

"எனி ப்ராப்ள‌ம்?"

"யா, இட்ஸ் ப்ரோக் ட‌வுன். பேக்வீல். கேன் யூ ப்ளீஸ் ஹெல்ப் அஸ்?"

"ஷ்யூர், ஐ'ம் கோயிங் டூ அடையார். க‌ம் வித் மீ. ஐ ட்ராப் போத் ஆஃப் யூ நிய‌ர் பை அடையார் ப‌ஸ் டெர்மின‌ஸ். யூ கேன் ஃபைன்ட் எ சொல்யூஷ‌ன் ஃபார் திஸ் ஓவ‌ர் தேர்"

"நோ வீ கேன் ஹாண்டில் திஸ். வீ ஜ‌ஸ்ட் வாண்ட் யுவ‌ர் ம‌ணி, ஏடிஎம் கார்ட் அண்ட் தி பாஸ்வேர்ட் ஆஃப் யுவ‌ர் ஏடிஎம் கார்ட்"

"வ்வ்வ்வ்வாட்?"

"உன்கிட்ட‌ இருக்க‌ற‌ காசு, ஏடிஎம் கார்ட், அந்த‌ கார்டோட‌ பாஸ்வேர்ட் வேணும்"

"ஸீ, நான் உங்க‌ளுக்கு ஹெல்ப் ப‌ண்ண‌ணும்னு...."

"த‌ பார், நான் ரொம்ப‌ பொறுமைசாலி கெடையாது. சைல‌ன்டா குடுத்துட்டினா, நீ ந‌ல்ல‌ப‌டியா வீட்டுக்கு போலாம். முர‌ண்டு ப‌ண்ணா, இதோ இவ‌ன் இருக்கான் பார்...வெரி டேஞ்ச‌ர‌ஸ் ஃபெலோ, கைல‌ க‌த்தி வேற‌ வெச்சிருக்கான். ஐ'ம் நாட் ரெஸ்பான்ஸிபிள் இஃப் எனிதிங் ஹாப்ப‌ன் டூ யூ"

வேறு வ‌ழியில்லை, இருப்ப‌தை கொடுத்துவிட்டுதான் கிள‌ம்ப‌வேண்டும் என்று முடிவு செய்து ப‌ண‌த்தை எடுத்துக்கொடுத்தான். ப‌ர்ஸிலிருந்த‌ ஏடிஎம் கார்டுக‌ளையும் எடுக்க‌, உத‌வி கேட்ட‌ அந்த‌ உத்த‌ம‌புத்திர‌ன்,

"ஹே எல்லா கார்ட்ஸூம் வேணாம். ஜ‌ஸ்ட் ஐசிஐசிஐ கார்ட் ம‌ட்டும் குடு. உங்க‌ ஆஃபிஸ்ல‌ எல்லாருக்கும் அங்க‌தானே அக்க‌வுண்ட் இருக்கு. எல்லாத்தையும் உங்கிட்ட‌யிருந்து புடுங்கிட்டா பாவ‌ம் நீ என்ன‌ ப‌ண்ணுவ‌?"

திருடுற‌ நாய் பாவ‌ புண்ணிய‌ம் வேற‌ பாக்குது என்று ம‌னதிற்குள் திட்டிக்கொண்டே ச‌ந்துரு கார்டை கொடுத்தான்.

"பாஸ்வேர்ட்?"

இதுபோன்ற‌ த‌ருண‌த்தில் மாட்டிக்கொண்டால் ஏடிஎம் பாஸ்வேர்டை ரிவ‌ர்ஸாக‌ சொல்ல‌வும் என்று எப்போதோ வ‌ந்திருந்த‌ இமெயில் ஞாப‌க‌த்திற்கு வ‌ர‌, "0853" என்றான்.

"குட் நீ கெள‌ம்ப‌லாம்....ஒன் செக‌ண்ட், கிவ் மீ யுவ‌ர் மொபைல்"

மொபைலையும் அவ‌னிட‌ம் கொடுத்துவிட்டு, ப‌ல்ச‌ரை கிள‌ப்பினான்.

க்ளைமாக்ஸ் 1:

வீட்டிற்கு வ‌ந்த‌ ச‌ந்துரு முத‌ல் வேளையாக‌ பேங்க் க‌ஸ்ட‌ம‌ர் கேருக்கு த‌ன‌து லேண்ட்லைன் ஃபோன் மூல‌மாக‌ பேசி விவ‌ர‌த்தை சொல்லி அக்க‌வுண்ட்டை ப்ளாக் ப‌ண்ணுமாறு கேட்டுக்கொண்டான். போலிஸுக்கும் கால் செய்து தான் பாஸ்வேர்டை ரிவ‌ர்ஸாக‌ சொல்லிய‌தை தெரிவித்துவிட்டு ஃபோனை வைத்தான். இக்க‌ட்டான‌ த‌ருண‌த்திலும் தான் சாம‌ர்த்திய‌மாக‌ ந‌ட‌ந்துகொண்ட‌தை எண்ணி, நாளை "ந‌ம‌க்கு நாமே" என்கிற‌ திட்ட‌ம் போல் ந‌ம‌க்கு நாமே ஒரு ட்ரீட் கொடுக்க‌வேண்டும் என்று முடிவுசெய்தான். (ச‌ரி போதும், அவ‌ன் தூங்க வேணாமா? க்ளைமாக்ஸ் 1ஐ இதோட‌ முடிச்சிக்க‌லாம்).

க்ளைமாக்ஸ் 2:

வீட்டிற்கு வ‌ந்த‌ ச‌ந்துரு முத‌ல் வேளையாக‌ பேங்க் க‌ஸ்ட‌ம‌ர் கேருக்கு த‌ன‌து லேண்ட்லைன் ஃபோன் மூல‌மாக‌ பேசி விவ‌ர‌த்தை சொல்லி அக்க‌வுண்ட்டை ப்ளாக் ப‌ண்ணுமாறு கேட்டுக்கொண்டான். போலிஸுக்கும் கால் செய்து தான் பாஸ்வேர்டை ரிவ‌ர்ஸாக‌ சொல்லிய‌தை தெரிவித்துவிட்டு ஃபோனை வைத்தான். டேபிளின் மேலிருந்த‌ வாட்ட‌ர் பாட்டிலை எடுக்க‌ப்போகும்போது, திடீரென்று ம‌னிஷா கொய்ராலா சிரிக்கும் ச‌த்த‌ம் கேட்ட‌து. அட‌ அதாங்க‌, டெலிபோன் ம‌ணி அடித்த‌து.

"ஹ‌லோ ச‌ந்துரு ஹிய‌ர்"

"ஓ உன் பேரு ச‌ந்துருவா". ம‌றுப‌டி அந்த‌ திருட்டு ராஸ்க‌ல்

அவ‌ன் தொட‌ர்ந்தான், "நீ என்ன‌ பெரிய‌ புத்திசாலின்னு நென‌ப்பா? பாஸ்வேர்ட் கேட்டா ரிவ‌ர்ஸ்ல‌ சொல்லிட்டு போற‌, ப்ளடி இடிய‌ட்"

ச‌ந்துருவுக்கு ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்த‌து, "ஹே ஸ்டாப் இட், இந்த‌ ந‌ம்ப‌ர் உன‌க்கு எப்ப‌டி கெடைச்சுது? யூ ராஸ்க‌ல், நான் ஆல்ரெடி போலிஸ்கிட்ட‌ க‌ம்ப்ளைண்ட் குடுத்தாச்சு. அவ‌ங்க‌ உன் ந‌ம்ப‌ர‌ இந்நேர‌ம் ட்ரேஸ் ப‌ண்ணியிருப்பாங்க‌. பீ ரெடி டூ ஸ்டே பிஹைன்ட் த‌ பார்ஸ் மேன்"

அவ‌ன், "அட‌ அறிவுகெட்ட‌வ‌னே, உன‌க்கு சாஃப்ட்வேர் த‌விர‌ வேற‌ எதுவுல‌யும் மூளை வேல‌ செய்யாதா? சொல்றேன் கேட்டுக்கோ, இப்போ நான் கால் ப‌ண்ற‌து உன்னோட‌ மொபைல்ல‌ இருந்து, நீதான் "ஹோம்"னு சேவ் ப‌ண்ணி வெச்சிருக்கியே. நானும் ஒரு ஐடி ப்ரொஃப‌ஷ‌ன‌ல்தான். உன்னோட‌ ஆபிஸ்ல‌ என்னோட‌ ஃப்ரெண்டு ஒருத்த‌ன் ஒர்க் ப‌ண்றான். சோ அவ‌னுக்கு எந்த‌ பேங்க்ல‌ அக்க‌வுண்ட்ங்க‌ற‌து என‌க்கு தெரியும். நீதான் நாய் க‌ழுத்துல‌ தொங்க‌விட்ட‌ செயின் மாதிரி ஆபிஸ்விட்டு வெளியே வ‌ந்தும் உன் க‌ழுத்துல‌ ஐடி கார்ட‌ தொங்க‌விட்டுட்ருந்தியே. அத‌வெச்சுதான் நீ எந்த‌ ஆபிஸ்னு க‌ண்டுபுடிச்சேன். அப்புற‌ம், இந்த‌ மாதிரி சிச்சுவேஷ‌ன்ல‌ மாட்டிகிட்டா ஏடிஎம் கார்ட் பாஸ்வேர்ட‌ ரிவ‌ர்ஸ்ல‌ சொல்லுங்க‌ன்னு உன‌க்கு ஒரு இமெயில் வ‌ந்திருந்தா, அது எனக்கு வ‌ந்திருக்காதா?"

"ம்...நீ கொஞ்ச‌ம் ப்ரில்லிய‌ண்டான‌ திருட‌ன்தான். அதுச‌ரி நான் ரிவ‌ர்ஸ்ல‌தான் பாஸ்வேர்ட‌ சொன்னேன்னு எப்ப‌டி க‌ண்டுபுடிச்ச‌?"

"ஸீ அது ஒரு ஜென்ர‌ல் சைக்கால‌ஜி. பொதுவா யாரும் ஜீரோல‌ ஸ்டார்ட் ப‌ண்ற‌ மாதிரி பாஸ்வேர்ட் வெக்க‌மாட்டாங்க‌. நீ "0853"ன்னு சொல்லிட்டுபோன‌துக்க‌ப்புற‌ம்தான் என‌க்கு அந்த‌ இமெயில் ஸ்ட்ரைக் ஆச்சு. எனிவே, தேங்க்ஸ் மேன்."

"நீ ஒரு ஐடி ப்ரொஃப‌ஷ‌ன‌ல்னு சொன்ன‌. அப்புற‌ம் ஏன் இந்த‌ மாதிரி ஸ்டுப்பிட் ஆக்ட்ல‌ இற‌ங்க‌ற‌?"

"அது ஒரு 'ஜென்டில்மேன்' ப்ளான். நான் ஒரு இஞ்சினிய‌ரிங் காலேஜ் க‌ட்டிட்ருக்கேன். அதுக்கு டொனேஷ‌ன் குடுங்க‌டான்னா எவ‌ன் த‌ர்றான்? எல்லாரும் அவுட் ஆஃப் த‌ சிட்டில‌ ஒரு ப்ளாட் வாங்கிப்போட‌ற‌துல‌தான‌ இன்ட்ர‌ஸ்ட் காட்றீங்க‌. அத‌னால‌தான் இப்ப‌டி ப‌ண்றேன். அட் த‌ ஸேம் டைம், ஐ டிட்ன்ட் ட்ராப் எவ்ரிதிங் ஃப்ர‌ம் யுவ‌ர் அக்க‌வுண்ட். 25000 எடுத்துகிட்டேன், பேல‌ன்ஸ் 35000 இருக்கு. இப்ப‌டித்தான் நான் இதுவ‌ரைக்கும் ம‌த்த‌வ‌ங்க‌கிட்ட‌யிருந்தும் காசு எடுத்திருக்கேன். ஐ ஜ‌ஸ்ட் வாண்ட் எ பார்ட் ஆஃப் யுவ‌ர் ம‌ணி, நாட் எவ்ரிதிங்."

"க்ரேட், நீ நேர்ல‌ வ‌ந்து கேட்ருந்தின்னா நானே குடுத்திருப்பேன்"

"எவ்ளோ?"

"ம்...ஒரு...ஒரு...5000"

"இவ்ளோ சொல்லியும்.................உங்கிட்ட‌ அடிச்ச‌துல‌ தப்பே இல்ல‌"

Tuesday, July 07, 2009

ரோத‌னை

ச‌ன்டே சாய‌ந்த‌ர‌ம் செம‌ போர். ஏதாவ‌து ப‌ட‌ம் பாக்க‌லாம்னு வெளியே கெள‌ம்பிபோனா, தியேட்ட‌ர்ல‌ ந‌ம‌க்கு முன்னாடி எவ்வ‌ளோ பேர்! ச‌ரி ஏதாவ‌து கொஞ்ச‌ம் காலியா இருக்க‌ற‌ ப‌ட‌த்துக்கு போலாம்னு "தோர‌ணை" போனேன். சொன்னா ந‌ம்ப‌மாட்டீங்க‌. 10 ரூபாதான் டிக்கெட். ஏற்க‌ன‌வே ஒரு ப‌திவுல‌ இந்த‌ ப‌ட‌த்த‌ ப‌த்தி எழுதியிருந்தேன். அப்ப‌டியிருந்தும் போயிருக்கேன்னா பாருங்க‌, நான் எவ்ளோ பெரிய‌ ரிஸ்க் எடுத்திருக்கேன்னு.

டைட்டில் போட்டு முடிக்க‌ற‌துக்குள்ளேயே, என்ன‌டா இது அவ‌ச‌ர‌ப்ப‌ட்டு வ‌ந்துட்டோமோன்னு தோணுச்சு. ஓவ‌ர் பில்ட‌ப். ச‌ரி போக‌ப்போக‌ ச‌ரியாயிடும்னு பாத்தா, காமெடி ப‌ண்றேன்னு சொல்லி விஷால் ப‌ண்ற‌து இருக்கே! அய்யோ நான் என்ன‌த்த‌ சொல்ற‌து. இடைவேளையில‌ வ‌ர்ற‌ அந்த‌ ஒரு ட்விஸ்ட் த‌விர‌ ப‌ட‌த்துல‌ ஒண்ணுமே இல்ல‌.

ச‌த்திய‌மா சொல்றேன். இதுவ‌ரைக்கும் தியேட்ட‌ருக்கு போய் ஒரு பட‌த்த‌ ஃபுல்லா பாக்காம‌ நான் எழுந்துவ‌ந்த‌தில்ல‌. குருவி ப‌ட‌ம்கூட‌ ஃபுல்லா பாத்தேன். ஆனா இந்த‌ ப‌ட‌ம்....இன்ட‌ர்வெல்லுக்கு அப்புற‌ம் ஒரு 10 நிமிஷ‌ம் பாத்தேன். என்னால‌ உக்கார‌முடிய‌ல‌. இன்னாங்க‌டா இது, ஆனா வூன்னா, ச‌ண்டை போடுற‌துக்கு பின்னி மில்லுக்கு ஓடிப்போயிடுறீங்க‌. ச‌ண்டைக்காட்சிக‌ள் எடுக்குமிட‌ம்னு அங்க‌ போர்டா போட்டுவெச்சிருக்கு? ப‌த்தாத‌துக்கு ஆளாளுக்கு "தோர‌ணையா பேசிட்டு போற‌", "என் தோர‌ணைய காட்றேன்டா"ன்னு பட‌த்தோட‌ பேர‌ அடிக்க‌டி சொல்லி ந‌ம்ம‌ உயிர‌ வாங்குறாங்க‌.

ஏன் இதையெல்லாம் எழுத‌றேன்னா, இன்னும் கொஞ்ச‌ நாள்ல‌ இந்த‌ பட‌த்த‌ "இந்திய‌ தொலைக்காட்சிக‌ளில் முத‌ன்முறையாக‌, திரைக்கு வ‌ந்து சில‌ மாத‌ங்க‌ளே ஆன, புத்த‌ம் புதிய‌ அதிர‌டித் திரைப்ப‌ட‌ம்"னு சொல்லி டிவில‌ போடுவாங்க‌. த‌ய‌வுசெய்து பாருங்க‌. அப்ப‌தான் இன்ட‌ர்வெல்லுக்கு அப்புற‌ம் நான் ஏன் எழுந்துவ‌ந்தேன்ங்க‌ற‌து புரியும்.