Tuesday, February 28, 2012

அம்புலி 3D

முதல் பத்து நிமிடங்களிலேயே டெக்னிக்கலாக தாங்கள் எடுத்திருக்கும் சிரத்தையையும், இந்த படம் எந்த மாதிரியான களனை கொண்டது என்பதையும், பார்ப்பவர்களுக்கு புரிய வைத்துவிடுகிறார்கள் இயக்குனர்கள் ஹரீஷ் நாராயணும், ஹரி ஷங்கரும். குழந்தைகளுக்கு மட்டும்தான் முப்பரிமாண படம் என்பதை மாற்றி அனைவரும் பார்க்கும் வகையில் ஒரு த்ரில்லரை கொடுத்திருக்கிறார்கள்.

கல்லூரிக்கும், பக்கத்து ஊருக்கும் நடுவே ஒரு சோளக்காடு இருக்கிறது. அதில் அம்புலி என்றொரு மிருகம் வசித்து வருவதாகவும், அது மனிதர்களை கண்டால் கொன்றுவிடுவதாகவும் வதந்தி பரவியிருக்க, அதனை கண்டுபிடிக்க களம் இறங்குகிறார்கள் கல்லூரி மாணவர்கள் அஜய்யும், ஸ்ரீஜித்தும். அம்புலி என்பது உண்மைதானா? அதனை இவர்கள் கண்டுபிடித்தார்களா என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 




லீட் ரோலில் இருவர் நடித்திருந்தாலும், ஒளிப்பதிவாளர் சதீஷ்தான் படத்தின் நிஜமான நாயகன் என்று சொல்வேன். 3டியில் ஒரு அட்டகாசமான அனுபவத்தை தருகிறார் சதீஷ். சோளக்காடு வழியே நம்மை பயணிக்க வைப்பதும், துப்பாக்கியை எடுத்து நம் மீது குறி பார்ப்பதும், கண் அருகே பாம்பு வருவதும் என ஒவ்வொன்றும் அசத்தல் ரகம். படத்தின் ஜானருக்கு ஏற்ற வகையில் பின்னணி இசை அமைந்திருப்பதும் படத்துக்கு பெரிய பலம். 

படத்தின் குறைகள் என்றால், பாடல்களும், காதல் காட்சிகளும்தான். பார்க்கும்போது நன்றாக இருப்பதுபோல் தோன்றினாலும், எந்த பாடலும் மனதில் நிற்கவில்லை. குறிப்பாக இரண்டாம் பாதியில், இரு ஜோடிகளும் ஆடும் பாடல் படத்தின் வேகத்திற்கு வேகத்தடையாகத்தான் தோன்றியது எனக்கு. கல்லூரி காதல் என்பதால் இன்னும் கொஞ்சம் க்யூட்டாக இருந்திருக்கலாம். "ரோமியோ ஜூலியட் காலத்திலிருந்தே ஹீரோயின் ரூம் மாடியிலதான்" போன்ற வசனம் 'அட!' போடவைத்தாலும், ஏதோ ஒன்று மிஸ் ஆவது போன்றே ஒரு ஃபீல்.

மற்ற எல்லோரையும் விட எனக்கு கலைராணி, ஜெகன் மற்றும் தம்பி ராமையாவின் நடிப்பு பிடித்திருந்தது. கிராமத்து  மருத்துவச்சியாக அம்புலியின் மர்மம் அறிந்த பாட்டியாக நடித்திருக்கிறார் கலைராணி. பாட்டி என்பதால் கன்னாபின்னாவென்று மேக்கப் போடாமல், அளவான மேக்கப்போடு இயல்பாக அவரை காண்பித்ததே நன்றாக இருந்தது.

1970௦களில் நடக்கும் கதை என்பதால், ஒரு திராவிடர் கழக கேரக்டரை ஜெகன் மூலம் உலவவிட்டிருக்கிரார்கள். சட்டையையும், ஒரு சில வசனங்களையும் வைத்தே அவர் கேரக்டரை புரியவைப்பது இயக்குனர்களின் புத்திசாலித்தனத்திற்கு ஒரு சான்று. ஜெகனும் கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தி இருக்கிறார். ஒரு அப்பாவின் பயத்தையும், பாசத்தையும், காமெடியுடன் கூடிய குணச்சித்திரத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார் தம்பி ராமையா.

க்ளைமேக்ஸ் உட்பட படத்தில் சில லாஜிக் ஓட்டைகள் இருக்கத்தான் செய்கின்றன. இரண்டாம் பாதியில் சரசரவென்று நகரும் திரைக்கதைதான் அதையெல்லாம் மறக்கச்செய்து பார்ப்பவர்களை கட்டிப்போடுகிறது. 


இணையதளங்களையும், பர்மா பஜார்களையும் பார்த்து 'பைரஸி பைரஸி' என்று கத்திக்கொண்டிருந்த தமிழ் சினிமா இண்டஸ்ட்ரிக்கு, 3டி மூலம் ஒரு கோடு போட்டு காண்பித்துள்ளார்கள் இயக்குனர்கள் ஹரீஷ் மற்றும் ஹரி ஷங்கர். பார்ப்போம், அடுத்து யார் ரோடு போடுகிறார்கள் என்று...

Wednesday, February 15, 2012

பஸ் டே கொண்டாட்டம் - இத நிறுத்துங்க முதல்ல!

யார் இந்த கண்றாவியை கண்டுபிடித்தார்கள் என்றே தெரியவில்லை. ஒவ்வொரு வருடமும் செய்தித்தாளில் தவறாமல் இடம்பெறுகிறது பஸ் டே கொண்டாட்டம் பற்றிய செய்திகள். தங்களது கல்லூரியின் வழித்தடத்தில் ரெகுலராக வரும் பேருந்தின் ஓட்டுனரையும், நடத்துனரையும் கெளரவிக்கும் விதமாக செயல்பட்டு வந்த பஸ் டே கொண்டாட்டம், கடந்த சில வருடங்களாக ஒரு அருவருப்பான விஷயமாகத்தான் மாறிக்கொண்டு வருகிறது. 

கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி, கல்லூரிக்கென்று சொந்தமாக பஸ் வாங்கி, கல்லூரி மைதானத்திலேயே கொண்டாட வேண்டியதுதானே. அதென்ன மாட்னான் இளிச்சவாயன் என்பது போல் அரசு பேருந்துகளை எடுத்துகொண்டு அண்ணா சாலையில் ஆட்டம் போடுவது? இதற்கெல்லாம் அனுமதி கொடுத்து, பேருந்தும் கொடுத்து அனுப்புகிறார்களே..அவர்களை சொல்லவேண்டும். 

சென்ற வாரம், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட தீர்மானித்து கோயம்பேட்டில் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் என்று கருதி, போலீசார் அவர்களை அங்கேயே நிறுத்திவிட, இந்த so-called மாணவர்கள் கடுப்பாகிவிட்டார்கள். பின்பு அங்கொன்றும் இங்கொன்றும் இருந்த கும்பல்கள் ஒன்று கூடி எதிர்ப்பை காட்ட முடிவு செய்திருக்கிறது. விளைவு? கல்லூரி வளாகத்தில் இருந்துகொண்டு சாலையில் கண்டபடி கல் எறிந்திருக்கிறார்கள். பேருந்து ஓட்டுனர் ஒருவரும், பயணி ஒருவரும் இதில் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

குழந்தை மீது கற்கள் படாமல் தாயிடம் சேர்க்கும் காவலர்



இந்த சம்பவத்திற்கு பின் சில மாணவர்களை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். எனக்கென்னவோ இந்த வழக்கு கொஞ்ச நாளுக்கு இழுத்து, கொஞ்சம் ஃபைனும், நீதிபதியின் அறிவுரை கலந்த கண்டனத்தோடும் இந்த மாணவர்கள் வெளியே வந்துவிடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது. 

ஆனால் இவர்கள் வெளியே வருவதற்குள் இவர்கள் பெற்றோர் எவ்வளவு வேதனைகளையும், அவமானங்களையும்  தாங்க  வேண்டி இருக்கும். இதை ஒரு நிமிடம் யோசித்து பார்த்திருந்தால், எந்த ஒரு மாணவனும் இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடவேமாட்டான். ஹீரோயிசத்தை காட்டுவதற்கு வாழ்வில் எவ்வளவோ பாஸிட்டிவான வழிகள் இருக்கும்போது, ஒரு விலங்கு மாதிரி கூரையில் ஆடுவதெல்லாம் எதற்கு? பரிணாம வளர்ச்சியை சாலையில் செல்பவர்களுக்கு நினைவூட்டுவதற்கா?

இதற்கு சரியான நிரந்தர தீர்வு, பஸ் டே கொண்டாட்டத்தை தடை செய்வதுதான். எதற்கோ கட்டப்பட்ட கட்டிடத்தை மருத்துவமனை ஆக்குவது, அவரை வீட்டை விட்டு அனுப்புவது, இவர் மேல் கேஸ் போடுவது, சட்டசபையில் நேருக்கு நேர் சவால் விடுவது  என்று எதிலெதிலோ வீரத்தை காட்டும் இந்த அரசு, பஸ் டே கொண்டாட்டத்தை தடை செய்தால் அதை கண்டிப்பாக பலரும் வரவேற்பார்கள். முடிவு தமிழக அரசி(யி)ன் கையில்!

Friday, February 10, 2012

பதிவர் மோகன்குமாருடன் ஒரு சந்திப்பு

சென்னையில் இதுவரை நடந்த எந்தவொரு பதிவர் சந்திப்புக்கும் சென்றதில்லை. சிலர் எழுத்துக்களை ரசித்து வாசித்தாலும், அவர்களுக்குள் இருக்கும் அரசியல், குழு மனப்பான்மை ஆகியவையெல்லாம் பார்க்கும்போது சற்று ஒதுங்கி இருக்கவே விரும்புகிறேன். இப்பொழுதும், திரட்டிகளில் சுற்றுமபோது, "பிரபல பதிவரும் ............." என்று ஏதாவது ஜூ.வி., நக்கீரன், ரிப்போர்ட்டர் வகையறா டைட்டிலை பார்த்தாலே அலர்ஜியாக இருக்கிறது. ப்ளீஸ், கொஞ்சம் மாத்திகோங்கப்பா!

ஆரம்பத்தில் ப்ளாக் மீது ஒரு போதை இருந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் பதிவுலகில் நடந்த சில நிகழ்வுகளினாலேயே போதை குறைந்து ஒரு "ச்சே" பீலிங் வந்துவிட்டது. பிரபல பதிவர்களுக்கு நன்றி. இப்போதெல்லாம் எப்போது எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதுதான் எழுதுகிறேன் :)

பிரபலங்களிலும் ஒரு சிலர் விதிவிலக்காய் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் எனக்கு பிடித்தமானவர்கள் வரிசையில், கண்டிப்பாக 'வீடு திரும்பல்' மோகன்குமார் அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. எளிமையாக, டீசன்ட்டாக எழுதுவதினாலேயே இவரின் பதிவுகள் எனக்கு பிடிக்கும். 

சில நாட்கள் முன் புத்தக கண்காட்சியின்போது வாங்கிய புத்தகங்கள் பற்றி எழுதியபோது, தலைவர் புத்தகங்களை exchange பண்ணிக்கலாமா என்று கேட்டிருந்தார். தலைவர் எழுத்து பலரிடம் செல்வது குறித்து எனக்கு மகிழ்ச்சியே. எனவே நான்கு புத்தகங்களை அவருக்கு தபாலில் அனுப்பிவிட்டேன். அவர் அத்துடன் விடவில்லை. "என்னிடம் சில புத்தகங்கள் இருக்கிறது. ஒரே ஏரியாவில் இருந்துகொண்டு சந்திக்காமலேயே இருக்கிறோம், நேரில் வாங்க சந்திப்போம்" என்றார்.

நெருங்கிய நண்பர்கள் அருகில் இருக்கும்போதுதான் அரட்டையில் அரண்மனை கட்டி விளையாடுவேன். புதிதாக சந்திப்பவர்களோடு நான் அதிகம் பேசுவதில்லை. இது என் இயல்பான சுபாவமே தவிர நான் ஏன் பேசவேண்டும், வேண்டும் என்றால் அவர்கள் பேசட்டுமே என்ற ஈகோ அல்ல. மோகன் அழைத்தவுடன், ஒரு குறிப்பிட்ட தினத்தில் மதியம் அவருடைய அலுவலகத்தில் சந்திப்பது என்று முடிவு செய்தோம். சரியாக மதியம் பன்னிரண்டரை மணிக்கு வருவதாக சொல்லியிருந்தேன். ஆனால் வீட்டிலிருந்து கிளம்பும்போதே மணி பன்னிரண்டரை. நாம எப்போ சொன்ன நேரத்துக்கு கரெக்டா போயிருக்கிறோம்?




வீட்டிலிருந்து அவர் பணிபுரியும் அலுவலகத்துக்கு வெறும் பத்து நிமிட தூரம்தான். எனவே ஒருவழியாக சமாளித்துவிட்டேன். நேரில் சந்தித்தபோது ரொம்ப கேஷுவலாக பேசினார். தனி கேபின், அழகான சுத்தமான டேபிள், பக்கத்தில் அவரின் துறை சம்பந்தமான பார்ட் 1, பார்ட் 2, பார்ட் 3 என்று தடிமனான சில புத்தகங்கள் என்று கிட்டத்தட்ட ஒரு எம்.டி லுக்கில்தான் இருந்தார். பேச்சின் போது நடுநடுவே சிலர்  ஃபோன் செய்து சில கேள்விகள் கேட்க, அவர்களின் சந்தேகங்களையும் தீர்த்துவைத்தார். "போனை எடுத்தா நச்சு நச்சுன்றானுங்கப்பா" என்று கவுண்டர் மாதிரி அலுத்துக்கொள்ளவில்லையே தவிர, சார் நிஜமாவே பிஸிதான்!

எப்படி சமீப நாட்களில் நிறைய எழுதுகிறீர்கள் என்று கேட்டேன். சொன்னார். ம்ம்.....அது ஆஃப் த ரெக்கார்டாகவே இருக்கட்டும். சில புத்தகங்களை தந்து எது வேணுமோ எடுத்துகோங்க என்றார். கிளி கழுத்தை கண்ட அர்ஜுனன் போல் நான் தலைவரின் கதைகளை மட்டுமே எடுத்துக்கொண்டேன். அவருடைய சமீபத்திய பயணம், என்னுடைய வொர்க் டைமிங், பதிவர்கள் சந்திப்பு, சத்யம் தியேட்டர் என்று டாபிக் மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருந்தோம். வேளச்சேரியில் புதிதாக வரப்போகும் திரைஅரங்குகள் பற்றி சொன்னார். நான்தான் நிறைய பேசினேன் என்று நினைக்கிறேன். நிறைய பேசினாலும் ரொம்ப  ஃபார்மலாகத்தான் பேச முடிந்தது. முதன் முறை சந்திப்பதினால் இருக்கும் சிறு தயக்கம். மேலும் சில சந்திப்புகளில் கொஞ்சம் இயல்பாக பேசுவேன் என்று நம்புகிறேன்.

வயிற்றுக்கு ஈயும் நேரம் வந்ததால், ஏற்கனவே பேசிவைத்தபடி இருவரும் தலப்பாகட்டி'னோம். ஒரு கோழியை கொன்ற பாவத்தை அக்கவுன்ட்டில் ஏற்றிகொண்ட பிறகு விடைபெற்றேன். ஒரு பந்தா இல்லாத, பழகுவதற்கு எளிமையான, கண்ணியமான மனிதரை சந்தித்தோம் என்ற திருப்தி கிடைத்தது. விரைவில் மேலும் சில புத்தகங்களோடு மீண்டும் சந்திப்போம் மோகன்.