Monday, October 15, 2012

கற்றதும் பெற்றதும் - சுஜாதா

சிறு வயதில், ஆனந்த விகடனை புரட்டும்போது, இரண்டு மூன்று பக்கங்கள் எதையும் வாசிக்காமல் அப்படியே கடந்து சென்றுவிடுவேன். அப்போது தெரியாது, ஒரு சில வருடங்கள் கழித்து, அதே பக்கங்களை புத்தக வடிவில் வெறி பிடித்தது போல வாசித்து தீர்ப்பேன் என்று. அந்த இரண்டு மூன்று பக்கங்களின் தலைப்பு 'கற்றதும் பெற்றதும்'.த்ரில்லர் கதைகள் மிகவும் பிடித்தமானவை என்பதால், வீட்டு அலமாரியில் கணேஷ் வசந்த்களே குடியிருக்கின்றனர். மத்யமர்களையோ, ஸ்ரீரங்கத்து தேவதைகளையோ தரிசிக்க இன்னும் நேரம் வரவில்லை. சமீபத்தில், அலுவலக நண்பர் ஒருவர்தான் 'கற்றதும் பெற்றதும்' புத்தகத்தை கொடுத்தார். வாரயிறுதியில் ஊருக்கு செல்லும்போது வாசிக்கலாம் என்று அப்படியே வைத்திருந்தேன். 

சனிக்கிழமை காலை. சென்னை கடற்கரை ரயில் நிலையம். ஸ்டேஷனிடம் கோபித்துக்கொண்டு ரயில் கிளம்ப ஆரம்பித்தது. புத்தகத்தை திறந்து, மகிழ்ச்சியோடு தலை குனிந்தேன். முதல் ஒரு சில பக்கங்கள் எனக்கு சற்று அலர்ஜியாகவே இருந்தது. நிறைய கெமிஸ்ட்ரி, பயாலஜி...உவ்வே! பதினொன்றாம் வகுப்பிலிருந்தே, எனக்கும் கெமிஸ்ட்ரிக்கும்  கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதே இல்லை. கிட்டத்தட்ட 30 பக்கங்களுக்குப் பிறகுதான் புத்தகம் சூடு பிடித்தது...வாசிக்கவும் பிடித்தது.

"ச்சே....என்ன மனுஷன்யா இவரு" என்று சிலாகித்து, கொஞ்சம் தலை நிமிர்ந்து ரயிலின் ஜன்னல் வழியே பார்த்தேன். தாம்பரம் ரயில் நிலையம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம், தன் எழுத்தால் வாத்தியார் என்னை கட்டி போட்டு இருந்தார். அறிவியல் தொடர்பான விஷயங்களை விட, அவரின் அனுபவங்கள்தான் ரசிக்க வைத்தன.
#பதின்ம வயதில் எந்த வித குறும்புகளிலும் ஈடுபடவில்லை என்கிறார், காதல் உட்பட. காரணம், ஸ்ட்ரிக்ட்டான பாட்டி. ஏதாவது சின்ன பொய் சொன்னால் கூட, பாட்டி எளிதில் கண்டுபிடித்து விடுவாளாம்.

#ஸ்ரீரங்கத்தில், இவர் இருந்த தெரு அணிக்கும், இன்னொரு தெரு அணிக்கும் க்ரிக்கட் மேட்ச் நடந்திருக்கிறது. எதிரணியினர், அம்பயர் எங்க சைடு ஆளுதான் என்று கூற, அதற்கு இவர் அணியும் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். பின்புதான் தெரிந்திருக்கிறது அது எவ்வளவு பெரிய தவறு என்று. எதிரணி பேட்ஸ்மன்  அவுட் ஆகும்போதெல்லாம் அம்பயர் கை கூசாமல் "நோ பால்" காண்பித்திருக்கிறார். 1940களிலேயே மேட்ச் பிக்ஸிங்! பிறகென்ன, தோல்விதான். ஆனால் அதையும் சுவைபட கூறியிருக்கிறார்.

#மெட்ராஸில் (அப்போ மெட்ராஸ்தாம்பா) ஹாஸ்டலில் தங்கியிருந்தபோது, ஒரு முறை தகவல் எதுவும் சொல்லாமல், அவர் அப்பா திடீரென வந்திருக்கிறார். ஹாஸ்டல் ரூம் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? தொன்று தொட்டு வரும் பழக்கமான, ஆடையில் சிக்கனத்தை வலியுறுத்தும் நடிகையின் படம் ஒன்று சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கிறது. அதை மறைக்கக் கூட நேரமில்லை. அப்பா பார்த்துவிட்டார். ஆனால், அவர் எதுவும் கேட்கவில்லை. பின்பு, பல வருடங்கள் கழித்து, தன் அப்பாவின் கடைசி நாட்களின்போது இதை கேட்டிருக்கிறார் வாத்தியார்.

"அப்பா, ஹாஸ்டலுக்கு நீங்க வந்திருந்தபோது சுவத்துல..."

"ஞாபகம் இருக்குடா...ஒரு பொம்மனாட்டி படம் ஒட்டி இருந்தது"

"ஏம்பா எதுவும் கேட்கல?"

"எப்படியும் நீ படிச்சு ஒழுங்கா வந்துடுவேன்னு தெரியும்டா". வாத்தியாரின் அப்பா தீர்க்கதரிசி!

#பணிக்காலத்தில், பல பிரச்னைகள் காரணமாக கிட்டத்தட்ட ஏழெட்டு முறை வீடு மாற்றியிருக்கிறார். அதுவும், பங்களூரில்தான் (வாத்தியாருக்கு எப்பவும் பங்களூர்தான், பெங்களூர் அல்ல) அதிகம். ம்ம்...என்ன செய்ய? அவங்க அப்பவே அப்படித்தான் போல!

#நிறைய கவிதைகளை பகிர்ந்திருக்கிறார். மனுஷ்ய புத்திரன், கனிமொழி (அவங்கதானே?) ஆகியோரின் பெயர்களை அடிக்கடி காண முடிந்தது. ஒரு சில அத்தியாயங்களில், "கவிதை புத்தகமெல்லாம் எனக்கு அனுப்பாதீங்க" என்று சற்று கோபம் கலந்து கெஞ்சி கேட்கிறார். அப்படியும் நம் பயபுள்ளைகள் அவரை விட்ட மாதிரி தெரியவில்லை.

#எழுத ஆரம்பித்து, சில வருடங்கள் கழித்து தட்டச்சுக்கு மாறி, பின்பு கணிணியில் கதைகள் எழுதியதை பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். கணிணியில் கதைகள், கட்டுரைகள் எழுதுவதின் பெரும் பயனாக அவர் சொல்லியிருப்பது - தன் கிறுக்கல் கையெழுத்தை பெரும் மன உளைச்சலுடன் வாசிக்கும் கஷ்டம் உதவி ஆசிரியர்களுக்கு இல்லாமல் போனது!

#இணையத்தில், தன்னை குறித்தான பாராட்டுகளையும், விமர்சனங்களையும் நன்கு கவனித்து வந்திருக்கிறார். இணையம் ஒரு சுதந்திரமான பொதுவெளி. இங்கு யாரும் எதுவும் சொல்லலாம் என்பதால், அவர்கள் எல்லோருக்கும் பதிலளிப்பது சரி வராது என்பது வாத்தியாரின் வாதம். இது தற்போதைய பதிவர்களுக்கும் பொருந்தும்.

#ரஜினி, வேண்டாம் என்று சொன்னவுடன், இயக்குனர் ஷங்கர் வேறு யார் 'முதல்வன்' என்று யோசித்திருக்கிறார். "இந்த கதைக்கு பெரிய நடிகர் அவசியமில்லை, நன்கு நடிக்கத் தெரிந்த நடிகர் இருந்தாலே போதும்" என்று வாத்தியார் சொல்ல, ஜென்டில்மேனை, முதல்வன் நாற்காலியில் உட்கார வைத்திருக்கிறார் ஷங்கர்.

பகிர்ந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. எதை எழுதுவது, எதை விடுவது என்றுதான் தெரியவில்லை. வாசித்து முடித்த பின், புத்தகத்தோடு ஒரு முடிவையும்  எடுத்து அலமாரியில் வைத்திருக்கிறேன். அது, 'கற்றதும் பெற்றதும்' மொத்தம் எத்தனை பாகங்கள் இருக்கிறதோ, அத்தனையையும் வாங்கிவிட வேண்டும். காத்திருக்கிறேன், 2013 சென்னை புத்தகக் கண்காட்சிக்காக.