Sunday, August 15, 2010

மென்பொருள் துறை



கை நிறைய‌ ச‌ம்ப‌ள‌ம். வாய் நிறைய‌ 'ஹே ட்யூட்'. நிறுவ‌ன‌மே பேருந்த‌னுப்பி கூட்டிச் செல்லும். குடும்ப‌த்தோடு வார‌யிறுதியில் திரைப்ப‌ட‌ம், க‌ட‌ற்க‌ரை ம‌ற்றும் உண‌வ‌க‌ம். ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் டிஸ்கோதே. புற‌ந‌க‌ர்ப் ப‌குதியில் சொந்த‌மாக‌ ஒரு வீடு. பிர‌தி மாத‌ம் செலுத்த‌ வேண்டிய‌ வீட்டுக்க‌ட‌ன். ச‌ம‌ய‌ங்க‌ளில் ஆத‌ர‌வ‌ற்றோர் இல்ல‌ம், முதியோர் இல்ல‌ம் ஆகிய‌வைக‌ளுக்குச் சென்று உத‌வி. மிக‌ முக்கிய‌மாக‌, ம‌ற்ற‌ துறையின‌ரின் வ‌யிற்றெரிச்ச‌ல். இவை ம‌ட்டுமே பெரும்பாலான‌ மென்பொருள் துறையின‌ருக்கு வாழ்க்கை முறை.

வ‌ருட‌ம் 2008. உல‌கள‌வில் பொருளாதார‌ச் ச‌ரிவு. உல‌க‌ள‌வில் என்றால் உல‌க‌ள‌வில்தான். ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ளில் ம‌ட்டும்தான் உல‌க‌ம் என்றால் அமெரிக்கா. அமெரிக்கா ம‌ட்டும‌ல்லாது ஜ‌ப்பான், இந்தியா, சீனா உட்ப‌ட‌ அனைத்து நாடுக‌ளும் பொருளாதார‌ச் ச‌ரிவில் ஆட்ட‌ம் க‌ண்ட‌ன‌.

எப்பாடுப‌ட்டேனும் இதை ச‌மாளித்தாக‌வேண்டும். பெருந்த‌லைக‌ள் அறையெடுத்து யோசித்திருப்பார்க‌ள் போல‌. விழுந்த‌து ச‌ம்ம‌ட்டி அடி. வாங்கிய‌து மென்பொருள் துறையின‌ர்.



ப‌ணியாள‌ர்க‌ளைக் குறைக்க‌ வேண்டும். எடுத்த‌வுட‌ன் நேர‌டியாக‌ச் சொல்ல‌முடியாது. முத‌லில் வேலை நேர‌த்தை நீட்டித்து உட‌ல‌ள‌விலும், ம‌ன‌த‌ள‌விலும் சோர்வ‌டைய‌ச் செய்ய‌வேண்டும். வேலை இருக்கிற‌தோ இல்லையோ. விடுமுறை நாட்க‌ளில் வ‌ர‌ச்செய்ய‌வேண்டும். நிறுவ‌ன‌ம் அளித்த‌ இல‌வ‌ச‌ டீ, காபி, குறைந்த‌ விலைச் சாப்பாடு அனைத்தும் வில‌க்கிக்கொள்ள‌ப்ப‌டும். மாந‌க‌ர‌ப் போக்குவ‌ர‌த்துக் க‌ழ‌க‌ம் ந‌ம் நிறுவ‌ன‌ம் அமைந்திருக்கும் வ‌ழித்த‌ட‌த்தில் நிறைய‌ பேருந்துக‌ளை அறிமுக‌ப்ப‌டுத்தியிருக்கின்ற‌ன‌ர். அத‌னால் நிறுவ‌ன‌ம் பேருந்து வ‌ச‌தியைத் த‌ற்காலிக‌மாக, சோத‌னை முய‌ற்சிக்காக‌ நிறுத்திவைத்துள்ள‌து என‌ அறிவிக்க‌வேண்டும். அட‌! அனைவ‌ரும் கைக்குட்டை வைத்திருக்கிறீர்க‌ளே, பிற‌கெத‌ற்கு கை க‌ழுவுமிட‌த்தில் டிஷ்யூ காகித‌ம்? சென்ற‌ வ‌ருட‌ம் 25% ஊதிய‌ உய‌ர்வு வாங்கினீர்க‌ள் அல்ல‌வா? இந்த‌ வ‌ருட‌ம் 15% உங்க‌ள் ச‌ம்ப‌ள‌த்தில் குறைக்க‌ப்ப‌டுகிற‌து.

வேறு வ‌ழியில்லை. ஒன்று இந்த‌ இம்சைக‌ளைத் தாங்க‌ முடியாம‌ல் வேலையை நாமே விட்டுவிட‌ வேண்டும். இல்லையென்றால் க‌டைசிப் ப‌ல் இருக்கும்வ‌ரை க‌டித்துக்கொண்டு வாய் மூடி இருக்க‌வேண்டிய‌துதான்.

இத‌ன்பின்னும் யாரையாவ‌து ப‌ணிநீக்க‌ம் செய்ய‌வேண்டுமா? எளிது. குமுத‌த்தில் வ‌ருவ‌து போல் ஆறு வித்தியாச‌மெல்லாம் இல்லை வ‌ணிக‌ ப‌ட‌ வில்ல‌னுக்கும், நிறுவ‌ன‌ மேலாள‌ருக்கும். ஒரு வித்தியாச‌ம் ம‌ட்டுமே. அவ‌ர் "தூக்குங்க‌டா அவ‌னை" என்று க‌ர்ஜிப்பார். இவ‌ர் த‌ன் இருக்கையில் அம‌ர்ந்த‌ப‌டி, அலுவ‌ல‌க‌ ம‌னித‌வ‌ள‌த் துறைக்கு மின் ம‌ட‌லைத் த‌ட்ட‌ச்சிக்கொண்டிருப்பார், "We can terminate the contract of these employees".

நிறுவ‌ன‌த்திற்கு விசுவாச‌மாக‌ இருந்திருக்கிறோம். அவ‌ச‌ர‌மாக‌ முடித்தே ஆக‌வேண்டும் என்ற‌ சூழ்நிலைக‌ளில் ப‌தினான்கு ம‌ணி நேர‌த்திற்கு மேல் வேலை செய்திருக்கிறோம். விடுமுறை நாட்க‌ளில், ப‌ண்டிகை நாட்க‌ளில் கூட‌ குடும்ப‌த்தை ம‌ற‌ந்துவிட்டு அலுவ‌ல‌க‌த்திற்கு வ‌ந்திருக்கிறோம். அத‌னாலென்ன‌? அத‌ற்குத்தான் இவ்வ‌ள‌வு நாளாக‌ 4 ப‌க்க‌த்திலும், 5 ப‌க்க‌த்திலும் நான்கைந்து 0க்க‌ளைப் போட்டு ச‌ம்ப‌ள‌மாக‌ வாங்கினீர்க‌ளே. ஹும்..கிள‌ம்புங்க‌ள்!

வ‌ருட‌ம் 2009. நிறுவ‌ன‌ங்க‌ள் 2008ல் ந‌ட‌த்திய‌ 'ப‌ணியாள‌னே வெளியேறு' வைப‌வ‌த்தில் த‌ப்பித்து, க‌த்தியின் கீழ் தொங்கிக்கொண்டு ப‌ணிபுரிந்த‌ நிலை. வ‌ருட‌யிறுதி அப்ரைச‌ல் (த‌மிழ்ல‌ எப்ப‌டி சொல்ற‌து‌?). 'இன்க்ரிமென்ட்' ஒன்றையே ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ அப்ரைச‌லில் பார்த்த‌வ‌ர்க‌ளுக்கு புதிதாக‌ ஒரு வ‌ஸ்து காத்துக்கொண்டிருந்த‌து. ரிஸ‌ஷ‌ன். இதுவ‌ரை அறியாத‌ வார்த்தை. அறிமுக‌ப்ப‌டுத்திய‌து மேலாள‌ர். புரிய‌வைத்த‌து கூகுள் ம‌ற்றும் MS Wordல் Shift F7.

"உன‌க்கே தெரியும்பா மார்க்கெட் எப்ப‌டியிருக்குன்னு. உன் பேரும் லிஸ்ட்ல‌ இருந்த‌து. நான்தான் ஸ்ட்ராங்கா ரெக‌ம‌ண்ட் ப‌ண்ணி உன்னை ரீட்டெய்ன் ப‌ண்ணியிருக்கேன். இன்க்ரிமெண்ட்லாம் இல்லியேன்னு நினைக்காதே. இன்னும் வேலைல‌ இருக்கோம்னு ச‌ந்தோஷ‌ப்ப‌டு" என்று நாக‌ரிக‌மான‌ எச்ச‌ரிக்கை கிடைக்கும். ஒரு ரூபாய் கூட‌ ந‌ஷ்ட‌ம‌டையாத‌ நிறுவ‌ன‌ங்க‌ளும் ரிஸ‌ஷ‌னைக் கார‌ண‌‌ம் காட்டி, ச‌லுகைக‌ளைப் ப‌றித்த‌தும் அர‌ங்கேறிய‌து. அவ‌ர்க‌ளைக் குறை சொல்ல‌ முடியாது. ரிஸ‌ஷ‌ன் என்ற‌ புய‌ல் வீசிய‌து. தூற்றிக்கொண்டார்க‌ள்.



வ‌ருட‌ம் 2010. இந்த‌ வ‌ருட‌மும் உங்க‌ள் மேலாள‌ர் ரிஸ‌ஷ‌ன் ராக‌த்திலேயே பாட‌ ஆர‌ம்பித்தால், அப்ரைச‌ல் க‌ச்சேரி முடிந்த‌வுட‌ன் தைரிய‌மாக‌ முடிவெடுத்து வேறு வேலையைப் பாருங்க‌ள். ச‌த்திய‌மாக‌ இப்போது ரிஸ‌ஷ‌ன் இல்லை. வேலை வாய்ப்பூ(க்)க‌ள் மீண்டும் துளிர்விட‌த் தொட‌ங்கியுள்ள‌ன‌. இன்ஃபோசிஸும், டிசிஎஸ்ஸும் இவ்வ‌ருட‌ம் வேலைக்கு அள்ள‌ப்போகும் ந‌ப‌ர்க‌ளின் எண்ணிக்கை 30000. வேலை வாய்ப்புக்கான‌ மின்ம‌ட‌ல்க‌ள் சென்ற‌ வ‌ருட‌த்தில் இதே ச‌ம‌ய‌த்தில் மாத‌ம் மூன்று நான்குதான் வந்துகொண்டிருந்த‌ன‌. இப்போது, வார‌த்திற்கே ஏழெட்டு மின்ம‌ட‌ல்க‌ள்!

புதிய‌ வேலை கிடைத்த‌தும் வ‌ற‌ட்டு கெள‌ர‌வ‌த்துக்காக‌, அவ‌சிய‌ம‌ற்ற‌ ஆட‌ம்ப‌ர‌ப் பொருள்க‌ளில் ப‌ண‌த்தை விர‌ய‌மாக்காதீர்க‌ள். அடுத்து எவ‌னாவ‌து லூசுப் ப‌ய‌ல் விமான‌த்தை எடுத்துக்கொண்டு பில்டிங்கில் போய் பார்க் செய்தால், மீண்டும் பொருளாதார‌ம் த‌டுமாறும் என்ப‌து உண்மை. என‌வே குறைந்த‌து ஆறு மாத‌ங்க‌ளுக்குத் தேவையான‌ ப‌ண‌ம் எப்போதும் வ‌ங்கி க‌ண‌க்கில் இருக்க‌ட்டும். இவை யாவும் அறிவுரை அல்ல‌. ரிஸஷ‌ன் நேர‌த்தில் மன‌ உளைச்ச‌லில் ப‌ல‌ர் அவ‌ஸ்தைப்ப‌ட்ட‌தை நேரில் பார்த்திருக்கிறேன். ஒரு சில‌ என் அனுப‌வ‌மும் கூட‌. ஒரு ந‌ண்ப‌னாக‌ ப‌கிர‌ ஆசைப்ப‌ட்டேன். அவ்வ‌ள‌வுதான். ஓவ‌ரா பேசுறான்டா என்று தோன்றினால் ம‌ன்னிக்க‌வும்.

ஒரு சின்ன‌ யோச‌னை. வேலை தேடும்போது உங்க‌ள் விப‌ர‌ங்க‌ளை நாக்ரியில் ப‌தித்திருப்பீர்க‌ள். ஒவ்வொரு ஞாயிறு அல்ல‌து திங்க‌ட் கிழ‌மைக‌ளில், உங்க‌ள் ரெஸ்யூமை ரீஅப்லோட் செய்யுங்க‌ள். ஒவ்வொரு மாத‌ முடிவிலும், உங்க‌ள் அனுப‌வ‌த்தில் ஒரு மாத‌ம் கூடுகிற‌து. அதையும் அப்டேட் ப‌ண்ண‌வேண்டும். இப்ப‌டிச் செய்வ‌தால் ப்ரொஃபைல் பெய‌ருக்குக் கீழே Updated on என்று அப்டேட் செய்ய‌ப்ப‌ட்ட‌ தேதி குறிப்பிட‌ப்ப‌ட்டிருக்கும். நிறுவ‌ன‌ங்க‌ள் நாக்ரி போன்ற‌ வேலைவாய்ப்புத் த‌ள‌ங்க‌ளில் தேடும்போது, recently updated profileக‌ளுக்கு முன்னுரிமை த‌ருகின்ற‌ன‌ர். இது என‌க்குத் தெரிந்த‌ ஒன்று.

வேறு ஏதேனும் யோச‌னை இருந்தால், பின்னூட்ட‌த்தில் ப‌கிருங்க‌ள். ப‌ல‌ருக்கும் ப‌ய‌னுள்ள‌தாக‌ இருக்கும்.

Tuesday, August 10, 2010

எழுதுங்க‌ ந‌ர்சிம்

சோம்பேறி. ர‌கு. என்னால் ச‌ரியாக‌ உண‌ர‌ முடிகிற‌து இவ்விரு வார்த்தைக‌ளுக்கும் பெரிதொரு வித்தியாச‌ம் இல்லையென‌. வேலைப்ப‌ளு என்ப‌து ச‌ப்பைக்க‌ட்டு. அழ‌காய் ஒரு ப‌திவெழுத‌வேண்டும் என‌த் தோன்றினால், ஏனோ ம‌ன‌ம் ஒரு அமைதியான‌ சூழ்நிலையையும் த‌னிமையையும் நாடுகிற‌து.

இதையாவ‌து ஒழுங்கா எழுதுடா சோம்பேறிப்ப‌ய‌லே என்று ஒரு தொட‌ர் ப‌திவிற்கு அழைத்திருக்கிறார் தோழி ப்ரியா. இதோ ஆர‌ம்பிக்க‌றேங்க‌ சுய‌புராண‌த்தை. எந்திர‌னின் அரிமா அரிமாவை ரொம்ப‌வே ர‌சித்துக்கொண்டிருக்கிறேன். அத‌னால் இப்ப‌திவின் பிண்ண‌ணி இசையாக‌ இதை க‌ற்ப‌னை செய்துகொண்டே வாசிக்க‌த் தொட‌ங்குங்க‌ள் :) கொஞ்ச‌ம் ஓவ‌ராத்தான் போறோமோ!

இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்....

(என்ன‌டா விள‌ம்ப‌ர‌ம்?)




1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ர‌கு

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ஹுக்கும்..உண்மையான பெய‌ர் ச‌ச்சின் டெண்டுல்க‌ர். ஏங்க‌? முத‌லில் குறும்ப‌ன் என்ற‌ பெய‌ரில்தான் எழுத‌ ஆர‌ம்பித்தேன். மைலாப்பூர் க‌பாலீஸ்வ‌ர‌ர் கோயிலில், சாமி சிலைக‌ளுப் பின்ன‌ர் த‌மிழ் மாத‌ம் எழுதி ஒவ்வொரு பெய‌ர் எழுதியிருந்த‌ன‌ர். அப்ப‌டி நான் பிற‌ந்த‌ மாதத்திற்கு எழுதியிருந்த‌ பெய‌ர் பெரும‌ழிசைக் குறும்ப‌ர். முத‌ல்வ‌ர் இளைய‌வ‌ராக‌ இருந்த‌தால் 'முத‌ல்வ‌ன்' ஆன‌து போல் நானும் குறும்ப‌ன் ஆனேன். பின் த‌மிழ்ம‌ண‌த்தில் உலாவ‌ரும்போது இதே பெய‌ரில் வேறொருவ‌ர் இருப்ப‌த‌றிந்து, உண்மையான‌ பெய‌ரிலேயே எழுத‌லாம் என்று மாற்றிவிட்டேன். த‌விர‌ வெறும் ந‌கைச்சுவை ம‌ட்டும‌ன்றி எல்லாம் க‌ல‌ந்து எழுது என்று ந‌ட்புக‌ளின் 'மிர‌ட்ட‌ல்'க‌ளும் ஒரு கார‌ண‌ம். ஸ்ஸ்ஸ்ஸ்..இதுதான் 'குறும்ப‌ன்' 'ர‌கு'வான‌ க‌தை.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

அது த‌மிழ் வ‌லைப்ப‌திவுலகின் போதாத‌ நேர‌ம். வாசிப்ப‌வ‌ர்க‌ளின் ஜாத‌க‌த்தில் ச‌னியின் உச்ச‌ம். நீண்ட‌ நாட்க‌ளாக‌ நிறைய‌ ப‌திவுக‌ளை வாசித்துக் கொண்டே இருந்த‌தில், நாம‌ ஏன் எழுத‌க்கூடாது என்ற‌ ஏடாகூட‌மான‌ எண்ண‌ம் தோன்றியதால் வ‌ந்த‌ அபாய‌க‌ர‌மான‌ விளைவுதான் இந்த‌ வ‌லைப்பூ!

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

திர‌ட்டிக‌ள். இதைத் த‌விர‌ வேறொன்றும் செய்ய‌வில்லை. நிறைய‌ பேருக்கு க‌மெண்ட் போடு அப்ப‌தான் உன‌க்கும் க‌மெண்ட் வ‌ரும் என்று ச‌க‌ ப‌திவ‌ர்க‌ளும், ந‌ண்ப‌ர்க‌ளும் அறிவுறுத்திய‌துண்டு. க‌மெண்ட் போட‌க்கூடாது என்று வேண்டுத‌லெல்லாம் இல்லை. அலுவ‌ல‌க‌த்தில் ச‌ற்று ப்ரைவ‌ஸி இல்லாத‌ கார‌ண‌த்தால் நிறைய‌ ப‌திவுக‌ளுக்கு க‌மெண்ட் போட‌முடிவ‌தில்லை. ஆனாலும் இய‌ன்ற‌வ‌ரை சில‌ருக்குத் தொட‌ர்ந்து க‌மெண்ட்டிக்கொண்டுதான் இருக்கின்றேன்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ப்ளூக்ராஸ், 108 அவ‌ச‌ர‌ சேவை போன்று சில‌ அனுப‌வ‌ங்க‌ளை ம‌ட்டும் எழுதிய‌துண்டு. பெரும்பாலும் சொந்த‌ விஷ‌ய‌ங்க‌ளை எழுத‌ விரும்புவ‌தில்லை. இவ‌ள் என்னுடைய‌ தோழி என்று ஒரு பெண்ணைப் ப‌ற்றி எழுதினால்கூட‌ 'அவ‌ங்க‌ளுக்குள்ள‌ என்ன‌மோ ஓடுதுபா' என்று புற‌ம் பேசுப‌வ‌ர்க‌ளை ந‌ன்றாக‌ அறிவேன். அவ‌ர்க‌ள் பேசுவ‌து உண்மை இல்லையென்றாலும் இத‌னால் கிடைக்கும் காய‌ங்க‌ளும், வ‌லிக‌ளும் மிக‌ அதிக‌ம். என‌வே சொந்த‌ விஷ‌ய‌த்தைப் ப‌ற்றியெல்லாம் அதிக‌ம் எழுதி அவ‌ல் கொடுக்க‌ விருப்ப‌மில்லை.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

குசும்பு புடிச்ச‌ கேள்வி இது. நான் எழுத‌ற‌த‌ வெச்சுலாமா ச‌ம்பாதிக்க‌முடியும்? நான் எழுதிய‌தை க‌ணிணித் திரையில் பார்க்கும்போது, யாராவ‌து ஒருத்த‌ர், ரெண்டு பேர் (இதுவே அதிக‌ம்) பாராட்டும்போது 'ம‌ச‌க்க‌லி'யின் ஆர‌ம்ப‌ இசை (ஹே ஹேஹே ஹே...) ம‌ன‌தில் வ‌ந்து போகும். அத‌ற்காக‌த்தான் எழுதுகிறேன்.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

த‌மிழில் இது ஒன்றுதான். நான் பார்த்த‌ ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ளைப் ப‌ற்றியும், என் கேமிராக்குள் சிக்கிய‌ புகைப்ப‌ட‌க் கைதிக‌ளை சிறையில் அடைக்க‌வும் இரு ஆங்கில‌ வ‌லைப்பூக்க‌ளை ஆர‌ம்பித்தேன். ஆனால் தொட‌ர முடிய‌வில்லை. பேஸிக்க‌லி ஐ'ம் எ சோம்பேறி யூ நோ :)

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமை : ஹ‌ரீஷ், ஜெய் & விக்னேஷ்வ‌ரி. ந‌ம்மால் இப்ப‌டி எழுத‌ முடிவ‌தில்லையே என்று ஏங்க‌ வைக்கும் எழுத்துக‌ள் இவ‌ர்க‌ளுடைய‌து. அப்ப‌டி ஏங்கும்போதெல்லாம், நேர‌ங்கால‌ம் தெரியாத மூளை "ச‌ட்டியில‌ இருந்தாத்தானே...." என்ப‌தை ஞாப‌க‌ப்ப‌டுத்தித் தொலைக்கும்.

கோப‌ம் : ந‌ர்சிம். அவ‌ர் எழுதிய‌தை நியாய‌ப்ப‌டுத்த‌வில்லை. ஆனால் அவ‌ர் எழுதிய‌தைக் க‌ண்டிக்கிறேன் என்று ஆளாளுக்கு எழுத‌ ஆர‌ம்பித்த‌போதுதான் ஒவ்வொருவ‌ரின் ஆழ்ம‌ன‌ வ‌க்கிர‌ம் வெளிப்ப‌ட‌த் தொட‌ங்கிய‌து. அவ‌ர்க‌ள் எழுதிய‌ த‌ர‌ங்கெட்ட‌ வார்த்தைக‌ளை வாசிக்கும்போது இவ‌ர்க‌ளெல்லாம் ப‌டித்த‌வ‌ர்க‌ள்தானா என்றுகூட‌த் தோன்றிய‌து. அவ‌ர் எழுதினார், ப‌திலுக்கு நாங்க‌ எழுதினோம் என்ற‌ ச‌மாளிப்பெல்லாம் வேண்டாம். ஒருவ‌ரின் த‌வ‌றை அவ‌ருக்கு உண‌ர்த்துவ‌துதான் புத்திசாலித்த‌ன‌ம், விவேக‌ம். ஆனால் இங்கு திருப்பி அடிக்கும் 'வீர‌ர்'க‌ள்தான் நிறைந்திருந்த‌ன‌ர். வெளிப்ப‌டுத்த‌வில்லை...ஆனால் க‌டுங்கோப‌ம் கொண்ட‌து இந்த‌ வீர‌ப் ப‌திவ‌ர்க‌ள் மீதுதான்.

ந‌ர்சிம் அவ‌ர்க‌ளுட‌ன் என‌க்குத் த‌னிப்ப‌ட்ட‌ முறையில் ப‌ழ‌க்க‌மில்லை. நேரில் பார்த்த‌தில்லை. அலைபேசியில் பேசிய‌தில்லை. மின்ன‌ஞ்ச‌ல் தொட‌ர்பில்லை (ஒரு முறை 'ஏன் இப்போல்லாம் நீங்க‌ க்ரைம் க‌தைக‌ள் எழுத‌ற‌தில்ல‌' என்று கேட்டு மின்ன‌ஞ்ச‌லினேன்..அவ்வ‌ள‌வுதான்). அவ‌ரின் த‌ள‌த்தில் நான் இன்னும் ஃபாலோவ‌ர் ஆக‌வில்லை. ரெகுல‌ராக‌ அவ‌ர் ப‌திவுக‌ளுக்கு பின்னூட்ட‌ம் இடுவ‌துமில்லை. 'வீர‌ர்'க‌ளுக்கு முக்கிய‌மான‌ த‌க‌வ‌ல்..நான் அவ‌ர் ஜாதியுமில்லை ;) (அவ‌ர் என்ன‌ ஜாதி என்ப‌தே ப‌திவுக‌‌ளின் மூல‌ம்தான் அறிந்தேன்). இப்ப‌டிப் ப‌ல‌ 'ல்லை'க‌ள். ஆனாலும் அவ‌ர் எழுத்தை ர‌சிக்கிறேன். அவ‌ரெழுதிய‌ இந்த‌ ஒரு ப‌திவு போதும் "வாவ்!"வென‌ வாயைப் பிள‌க்க‌ வைக்க‌. மீண்டும் ப‌திவெழுத‌ ஆர‌ம்பித்த‌தில் ம‌கிழ்ச்சி. எழுதுங்க‌ ந‌ர்சிம் :)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

க‌ல்வி உத‌வி ப‌ற்றி எழுதிய‌போது க‌ணேஷ் வெளிநாட்டிலிருந்து தொட‌ர்புகொண்டு தானும் உத‌வ‌த் த‌யாராயிருப்ப‌தாக‌ தெரிவித்தார். எழுத்தின் தாக்க‌ம் அப்போதுதான் புரிந்த‌து. எவ்வ‌ள‌வு மொக்கையாக‌ எழுதினாலும், உற்சாக‌ப்ப‌டுத்துவ‌தில்..ச்சே..உசுப்பேத்துவ‌தில் ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ங்கு அதிக‌ம் :) ம‌ற்ற‌படி, பாராட்டு......ஹும்ம்ம்ம் இந்த‌ மாதிரி ச‌ம்ப‌வ‌மெல்லாம் ந‌ட‌க்க‌வில்லை என்ப‌தை த‌ன்ன‌ட‌க்க‌த்துட‌னும், ஏக்க‌த்துட‌னும் தெரிவித்துக்கொள்கிறேன்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

ரொம்ப‌ முக்கிய‌ம்! ச‌ராச‌ரி, சோம்பேறி, சாஃப்ட்வேர் த‌மிழ‌ன் நான். அப்புற‌ம்..நாட்டுக்குத் தேவையான‌ விஷ‌ய‌ம்....I'm still happy, not married ;))



இத்தொட‌ரை தொட‌ர‌ நான் அழைக்க‌ விரும்புவ‌‌து

ஹ‌ரீஷ்

ஜெய்

விக்னேஷ்வ‌ரி



Sunday, August 01, 2010

வார‌யிறுதியில் மூன்று ஆக்ஷ‌ன் திரைப்ப‌ட‌ங்க‌ள்

சில‌ வ‌ருட‌ங்க‌ள் முன்பு, ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ள் என்றாலே என்னைப் பொறுத்த‌வ‌ரை ஜுராஸிக் பார்க்கும், ஜாக்கி சான் ப‌ட‌ங்க‌ளும்தான். ப‌ரிந்துரை செய்கிறேன் என்ற‌ பெய‌ரில் இந்த‌ ம‌னுஷ‌ன் ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ளுக்கு அடிமையாக‌க் க‌ட‌வ‌து என்று சாப‌மிட்டுவிட்டார். போதாதென்று இவ‌ர் வேறு. ப‌ட‌ங்க‌ளுக்கு விம‌ர்ச‌ன‌ம் எழுதுப்பா என்றால், குவென்டின் தெரியுமா, குப்ரிக் தெரியுமா, நோல‌ன் தெரியுமா என்று குரோர்ப‌தி ரேஞ்சுக்கு கேள்வி கேட்டு வெறுப்பேத்துகிறார்.

இந்த‌ மாதிரி ஆட்க‌ளையெல்லாம் சமாளிப்ப‌த‌ற்காக‌வே ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ளை பார்க்க‌த் தொட‌ங்கினேன். இப்போதெல்லாம் வார‌ம் குறைந்த‌து ஒரு ப‌ட‌மாவ‌து பார்க்கிறேன். அதிக‌ப‌ட்ச‌ம் மூன்று. எல்லா புக‌ழும் டோர‌ன்ட்டில் ட‌வுண்லோடித் த‌ரும் ந‌ண்பருக்கே :)

காமெடி, ஹார‌ர் ப‌ட‌ங்க‌ளை விட‌ த்ரில்ல‌ர்தான் என்னுடைய‌ தேநீர் கோப்பை. அதுவும் ஆக்ஷ‌ன்/க்ரைம் த்ரில்ல‌ர் என்றால் திருப்ப‌திதான். அப்ப‌டி சென்ற‌‌ வார‌ இறுதியில் பார்த்த‌ ப‌ட‌ங்க‌ள் The Delta Force, The Delta Force 2 : The Colombian Connection & Assault on Precinct 13.



The Delta Force & The Delta Force 2 : The Colombian Connection


இவ்விர‌ண்டு ப‌ட‌ங்க‌ளும் எண்ப‌துக‌ளில் வ‌ந்த‌வை. ஆனால் இன்று பார்த்தாலும் ர‌சிக்க‌ முடிகிற‌து. கார‌ண‌ம் விறுவிறுப்பான‌ திரைக்க‌தை, பிர‌மிப்பூட்டும் இய‌க்க‌ம். ஒரு தீவிர‌வாத‌ கும்ப‌ல் அமெரிக்க‌ ப‌ய‌ணிக‌ள் விமான‌த்தைக் க‌ட‌த்திவிடுகின்ற‌ன‌ர். "எங்க‌ ஜ‌ன‌ங்க‌ பாவ‌ம் அவ‌ங்க‌ள‌ விட்டுடுங்க‌, உங்க‌ கும்ப‌லைச் சேர்ந்த‌வ‌ங்க‌ யாரை வேணும்னாலும் ரிலீஸ் ப‌ண்றோம்" என்றெல்லாம் கொஞ்சிக்கொண்டிருக்காம‌ல், அதிர‌டியாக‌ இற‌ங்கி அவ‌ர்க‌ளை மீட்கிறார்க‌ள் ஹீரோ & கோ.

ஹீரோ Chuck Norris. அச‌ர‌ வைக்கும் லுக் இல்லாவிட்டாலும் ஆக்ஷ‌னில் அச‌த்துகிறார். அதுவும் இறுதிக்காட்சியில் பைக்கில் இருந்து விமான‌த்தில் தாவுவ‌து எல்லாம் வாவ்! ர‌க‌ம்.

இர‌ண்டாம் பாக‌மும் ந‌ன்றாக‌த்தானிருந்த‌து. த‌ன் ந‌ண்ப‌ன் ம‌ற்றும் ந‌ண்ப‌னின் ம‌னைவி ஆகியோரின் ம‌ர‌ண‌த்துக்கு கார‌ண‌மான‌ ஒரு போதை ம‌ருந்து தாதாவை எப்ப‌டி ஹீரோ ஒழித்துக்க‌ட்டுகிறார் என்ப‌துதான் க‌தை. முத‌ல் பாக‌ம் அள‌வுக்கு இதில் வ‌லுவான‌ திரைக்க‌தை இல்லாவிட்டாலும், ஆக்ஷ‌ன் காட்சிக‌ளின் மூல‌ம் அந்த‌ குறையை ம‌ற‌க்க‌ச் செய்துவிடுகின்ற‌ன‌ர்.



Assault on Precinct 13

இந்த‌ ப‌ட‌ம் எல்லோருக்கும் பிடிக்குமா என்றால்..பிடிக்க‌லாம். பிடிக்காம‌லும் போக‌லாம். என‌க்கு மிக‌வும் பிடித்திருந்த‌து. கார‌ண‌ம் ப‌ட‌த்தின் அருமையான‌ Plot. ஒரு காவ‌ல் நிலைய‌ம். அங்குள்ள‌ போலீஸாரை (ஹீரோ ம‌ற்றும் ந‌ண்ப‌ர்க‌ள்) வேறு சில‌ போலீஸார் கொலை செய்ய‌ முய‌ற்சிக்கின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளிட‌மிருந்து த‌ப்பிக்க‌ ஹீரோ ஒரு முடிவெடுக்கிறார். அது என்ன‌வென்று சொல்லி த்ரில்லை குறைக்க‌ விரும்ப‌வில்லை. ப‌ட‌த்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்க‌ள்.


ஹீரோ Ethan Hawke. பார்ப்ப‌த‌ற்கு Tom Cruiseன் த‌ம்பி போலிருக்கிறார். ப‌ய‌த்தை, த‌விப்பை, சோக‌த்தை, இய‌லாமையை ந‌ன்றாக‌வே வெளிப்ப‌டுத்தியிருக்கிறார். பொதுவாக‌ ஆக்ஷ‌ன் ப‌ட‌ங்க‌ளில் ந‌டிப்ப‌த‌ற்கு அவ்வ‌ள‌வாக‌ தீனி இருக்காது. இதிலும் அப்ப‌டித்தான். ஆனால் கிடைத்த‌ வாய்ப்புக‌ளை வீணடிக்காம‌ல் ப‌ல‌ காட்சிக‌ளில் அனைவ‌ருமே வெளுத்து வாங்கியிருக்கிறார்க‌ள். இன்னும் நிறைய‌ எழுத‌வேண்டும் போலிருக்கிற‌து. வேண்டாம். காட்சிக‌ளை விவ‌ரிக்க‌ ஆர‌ம்பித்துவிடுவேன். சுருக்க‌மாக‌ச் சொன்னால் இந்த‌ வார‌ம் பார்த்த‌ மூன்று ப‌ட‌ங்க‌ளிலேயே இதுதான் டாப்!