Sunday, May 23, 2010

ந‌ம்மால் உத‌வ‌ முடியும்



ப‌க்கத்து தெருவில்தான் என் தாத்தா வீடு உள்ள‌து. அவ‌ர்க‌ள் வீட்டின் எதிரே, வாட‌கைக்கு வ‌சித்து வ‌ரும் ஒரு குடும்ப‌ம். வ‌றுமைக்கோட்டிற்கு கீழே உள்ள‌வ‌ர்க‌ள் என்ற‌ சொற்றொட‌ருக்கு ச‌ரியான‌ எடுத்துக்காட்டு. நெச‌வுத் தொழிலை ம‌ட்டுமே முழுமையாக‌ ந‌ம்பியிருக்கும் குடும்ப‌ம். ப‌ல‌ சிர‌ம‌ங்க‌ளுக்கிடையில் வாழ்க்கை த‌றியை நெய்துகொண்டிருக்கின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளின் ம‌க‌ன் ப‌ன்னிர‌ண்டாம் வ‌குப்பு இப்போதுதான் முடித்துள்ளார்.

இரு மாத‌ங்க‌ளுக்கு முன், ப‌ன்னிர‌ண்டாம் வ‌குப்பிற்கு பின் அவ‌ரை மேற்கொண்டு ப‌டிக்க‌ வைக்க‌ ஏதாவ‌து செய்ய‌ முடியுமா என்று பாட்டி கேட்டிருந்தார். அவ‌ரை க‌வ‌லைப்ப‌டாம‌ ப‌டிக்க‌ சொல்லுங்க‌, என்னாலான‌ பொருளாதார‌ உத‌வியை க‌ண்டிப்பாக‌ செய்கிறேன் என்று பாட்டியிட‌ம் சொல்லியிருந்தேன். பின் அலுவ‌ல‌க‌த்தில் ந‌ண்ப‌ர் ஸ்ரீராம் அவ‌ர்க‌ளோடு பேசிக்கொண்டிருக்கையில் இதைப் ப‌ற்றி சொன்ன‌போது, அவ‌ர் உட‌னே, அந்த‌ பைய‌னை ப‌டிக்க‌சொல்லு, எவ்வ‌ள‌வு செல‌வானாலும் நாம‌ பார்த்துக்க‌லாம் என்றார்.

சென்ற‌ வார‌ம் +2 தேர்வு முடிவுக‌ள் வ‌ந்த‌து. ஐநூற்றி சொச்ச‌ம் ம‌திப்பெண்க‌ள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். குறைவான‌ ம‌திப்பெண்க‌ள் பெற்றிருக்கிறோமே என்ற‌ தாழ்வு ம‌ன‌ப்பான்மையா இல்லை மேற்கொண்டு ப‌டிப்ப‌த‌ற்கு வ‌ச‌தியில்லையே என்ற‌ க‌வ‌லையா...எதுவென்று தெரிய‌வில்லை. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள‌ நோக்கியா தொழிற்சாலையில் வேலைக்கு செல்ல‌ முடிவு செய்திருந்தார். சென்ற‌ வார‌ம் வீட்டிற்கு அவ‌ரை வ‌ர‌வ‌ழைத்து சிறிது நேர‌ம் அப்பா பேசிக்கொண்டிருந்தார். +2வில் காம‌ர்ஸ் குரூப் ப‌டித்த‌தால், பி.காம் ப‌டிக்குமாறு அப்பா அறிவுறுத்தினார்.

பி.காம் ப‌டிச்சா வேல்யூ இல்ல‌ன்னு சொல்றாங்க‌ என்றார். பி.காம் ம‌ட்டும் ப‌டிச்சாலும் வேலை கிடைக்கும், ஆனா லைஃப்ல‌ ந‌ல்லா டெவ‌ல‌ப் ஆக‌ணும்னா, பி.காம் முடிச்சுட்டு, எம்.காமோ, எம்பிஏவோ க‌ண்டிப்பா ப‌ண்ண‌னும் என்றேன். ச‌ரி என்று கேட்டுக்கொண்டார். ச‌ரி என்று சொல்லும்போதே அவ‌ர் க‌ண்ணில், 'அந்த‌ள‌வுக்கு வ‌ச‌தி இல்லையே' என்ப‌து தெரிந்த‌து. அடுத்து என்ன‌ பேசுவ‌தென்றே என‌க்கு தெரிய‌வில்லை. பின் அப்பாவிட‌ம் சிறிது நேர‌ம் பேசிவிட்டு அவ‌ர் கிள‌ம்பிவிட்டார்.

பாட்டியிட‌ம், ப‌டிக்க‌ சொல்லுங்க‌ பாட்டி, என்ன‌ வேணும்னாலும் ப‌டிக்க‌ட்டும், எவ்ளோ செல‌வானாலும் பார்த்துக்க‌லாம், காசு இல்ல‌ங்க‌ற‌துக்காக‌லாம் வேலைக்கு போக‌ வேணாம், முத‌ல்ல‌ ப‌டிக்க‌ட்டும். அப்புற‌ம் வேலைக்கு போக‌ட்டும் என்று சொல்லியிருக்கிறேன்.

நான் நாத்திக‌ன் இல்லை. கோயிலுக்கு ஒவ்வொரு வார‌மும் ஞாயிற்றுக்கிழ‌மைக‌ளில் செல்ப‌வ‌ன். ஆனாலும் கோயிலின் உண்டிய‌லில் காசு போட்டு புண்ணிய‌த்‌தை தேடுவ‌தை விட‌ இதுபோல் ப‌டிக்க‌ சிர‌ம‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளுக்கு உத‌வி செய்வ‌தே சிற‌ந்த‌து என‌ நினைக்கிறேன். ஒரு நிமிட‌ம் யோசித்து பார்த்த‌போது, மிக‌ குறைவான‌ ம‌திப்பெண்க‌ள் பெற்றிருக்கிறாரே, இவ‌ர் க‌ல்லூரியில் ந‌ன்றாக‌ ப‌டிப்பாரா என்ற‌ ச‌ந்தேக‌ம் கூட‌ தோன்றிய‌து. புத்த‌ன் அல்ல‌ நான், ச‌ராச‌ரி ம‌ன‌ம்...என்ன‌ செய்ய‌? வீட்டின் பொருளாதார‌ சூழ்நிலையால்கூட‌ அவ‌ருக்கு ப‌டிப்பில் க‌வ‌ன‌ம் சித‌றியிருக்கலாம் என்று தோன்றிய‌து. அவ‌ரை குறை கூற‌ விரும்ப‌வில்லை, குடும்ப‌ நிலை உண‌ர்ந்து க‌ண்டிப்பாக‌ ந‌ன்றாக‌ ப‌டிப்பார் என்றே ந‌ம்புகிறேன்.

பெற்றோரின் வ‌ள‌ர்ப்பு முறை, ‌முறையான க‌ல்வி...இவ்விர‌ண்டும்தான் ஒரு ம‌னித‌னை செம்மைப்ப‌டுத்துவ‌தில் பெரும்ப‌ங்கு வ‌கிக்கின்ற‌ன‌. ஆனால் க‌ல்வி என்ப‌து வியாபார‌ம் ஆன‌பின், ப‌ல‌ருக்கு அது எட்டாக்க‌னியாக‌வே மாறிப்போகிற‌து. வ‌ங்கிக்க‌ட‌ன் வாங்கி அவ‌ரை ப‌டிக்க‌ச்சொல்ல‌லாம்தான். ஆனால் 'க‌ட‌ன் வாங்கியிருக்கிறோமே' என்ற‌ எண்ண‌ம் எப்போதும் அவ‌ரின் ம‌ன‌தை ஆக்கிர‌மித்து, ம‌ன‌ அழுத்த‌த்தில் அவ‌ர் ப‌டிப்ப‌தில் சிறிதும் விருப்ப‌மில்லை என‌க்கு. அவ‌ர் ந‌ன்றாக‌ ப‌டிக்க‌ வேண்டும், அதே ச‌ம‌ய‌ம் க‌ல்லூரி வாழ்க்கையை ர‌சித்து வாழ‌ வேண்டும்.

எத்த‌னை பேருக்கு தெரியும் என்று தெரிய‌வில்லை. அஜித் த‌ன் தாய் த‌ந்தை பெய‌ரில் ந‌ட‌த்தி வ‌ரும் 'மோகினி ம‌ணி ஃப‌வுண்டேஷ‌ன்' மூல‌மாக‌ ப‌ல‌ருக்கும் உத‌வி செய்து கொண்டிருக்கிறார். சூர்யாவின் 'அக‌ர‌ம்' ப‌ற்றி ப‌ல‌ரும் அறிந்திருப்பீர்க‌ள். என‌க்கும், ஒரு ஃப‌வுண்டேஷ‌ன் ஆர‌ம்பித்து ப‌ல‌ருக்கும் உத‌வ‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம் இருக்கிற‌து ம‌ன‌தில். ஆனால் அதை ந‌டைமுறைப்ப‌டுத்த த‌ற்போதைய‌ பொருளாதார‌ சூழ்நிலை இட‌ம்கொடுக்க‌ ம‌றுக்கிற‌து. இருந்தாலும் ந‌ண்ப‌ர்க‌ளின் உத‌வியோடு த‌ற்போதைக்கு இந்த‌ ஒரு பிள்ளையையாவ‌து க‌ண்டிப்பாக‌ ப‌டிக்க‌ வைக்க‌ முடியும் என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கிற‌து.

த‌ட்ட‌ச்சு செய்துவிட்டு ஒருமுறை இப்ப‌திவை ப‌டித்து பார்க்கையில், சுய‌த‌ம்ப‌ட்ட‌ம் அதிக‌மாக‌ இருக்கிற‌தோ என்று கூட‌ தோன்றுகிற‌து. சொல்ல‌ப்போனால் ச‌ற்று கூச்ச‌மாய் கூட‌ இருக்கிற‌து. ஆனாலும் ப‌திவிட‌ கார‌ண‌ம், உங்கள் வீட்டின் அருகே கூட‌ குடும்ப‌ சூழ்நிலையின் கார‌ணமாக‌ மேற்கொண்டு ப‌டிக்க‌ சிர‌ம‌ப்ப‌டும் மாண‌வ‌னோ, மாண‌வியோ இருக்க‌லாம். அவ‌ர்க‌ளை க‌ண்ட‌றிந்து இய‌ன்ற‌ வ‌ரை உத‌வுவீர்க‌ள் என்ற‌ ந‌ம்பிக்கைதான். த‌னியாக‌ ந‌ம்மால் செய்ய‌முடியுமா என்றால் கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌ம்தான். ஆனால் ந‌ம‌க்கென‌ ஒரு ந‌ட்பு வ‌ட்ட‌ம் இருக்கும்போது நாம் ஏன் க‌வ‌லைப்ப‌ட‌ வேண்டும்? க‌ர‌ம் கோர்ப்போம், க‌ல்வி கொடுப்போம்!

Sunday, May 16, 2010

பேச்சில‌ர் vs ஹ‌வுஸ் ஓன‌ர்

ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் த‌ங்குவ‌த‌ற்கு வீடு வேண்டும், உங்க‌ள் ஏரியாவில் ஏதாவ‌து வீடு காலியாக‌ இருந்தால் சொல்லுங்க‌ள் என்று இணைய‌ த‌ள‌ப‌தியும், 'சுறா'வ‌ளியும், ஏழுவின் பிர‌ம்மாவும், ப‌ப்லுவிட‌ம் ப‌ல்பு வாங்குவ‌தில் ரெகுல‌ர் க‌ஸ்ட‌ம‌ராக‌ இருக்கும் கார்க்கி கேட்டிருந்தார். ஓப்ப‌னிங் பில்ட‌ப் ஓகேதானே ச‌கா....ஏன் இன்னும் என் அக்க‌வுண்ட்ல‌ அமெள‌ண்ட் ட்ரான்ஸ்ஃப‌ர் ஆக‌ல‌?...;) இந்த‌ மாத‌ம் ந‌ண்ப‌ர் ம‌ட்டும் வ‌ருவ‌தாக‌வும், அடுத்த‌ மாத‌ம் முத‌ல் அவ‌ருடைய‌ ந‌ண்ப‌ர்க‌ள் இர‌ண்டு பேர் அவ‌ருட‌ன் சேர்ந்து த‌ங்கிக்கொள்வ‌தாக‌ ப்ளான் என்றும் கூறினார்.

சில‌ மாத‌ங்க‌ள் முன் அலுவ‌ல‌க‌த்தில் என்னுட‌ன் ப‌ணிபுரிந்து கொண்டிருந்த‌ ந‌ண்ப‌ர் (இப்போது அவ‌ர் வேறு அலுவ‌ல‌க‌ம்) ஒருவ‌ருக்கு கால் செய்து கேட்டேன். "நான் இப்போ வேள‌ச்சேரியிலேயே இல்ல‌ங்க‌, காசி தியேட்ட‌ர் ப‌க்க‌ம் வ‌ந்துட்டேன்" என்றார். அத‌ன்பின் இன்னொரு தோழிக்கு ட்ரிங்க‌, "எங்க‌ வீட்டு ப‌க்க‌த்துல‌ இப்ப‌தான் ஒரு வீடு காலியாயிருக்கு. நான் வேணும்னா கேட்டு பாக்க‌றேன்" என்றார். வீட்டு உரிமையாள‌ரிட‌ம் பேசிவிட்டு சொன்னார் "அவ‌ர் பைய‌ன் ஊருக்கு போயிருக்க‌றாராம், அவ‌ர் வ‌ந்த‌வுட‌னே கேட்டு சொல்றேன்னிருக்கார்". தோழி சொன்ன‌தை தோழி அப்டேட்ஸ் நாய‌க‌னுக்கு அப்டேட் செய்து விட்டு, இரு நாட்க‌ள் க‌ழித்து தோழியிட‌ம் மீண்டும் பேசினேன். "ஹ‌லோ, அவ‌ர் ச‌ரியாவே ப‌தில் சொல்ல‌மாட்டேங்குறார்ங்க‌, ந‌ம்ப‌ர் த‌ரேன் நீங்க‌ வேணும்னா பேசிப்பாருங்க‌" என்றார். ந‌ம்ப‌ர் வாங்கி அந்த‌ வீட்டு உரிமையாள‌ருக்கு 'செல்'லினேன்.



"ஹ‌லோ சார், என் பேரு ர‌கு, உங்க‌ வீட்டு ப‌க்க‌த்துல‌ இருக்க‌ற‌ சுசிலாதான் இந்த‌ ந‌ம்ப‌ர் குடுத்தாங்க‌"

"சொல்லுங்க‌"

"ரெண்டு நாள் முன்னாடி ஃப்ரெண்ட்ஸ் மூணு பேர் த‌ங்க‌ற‌துக்கு வீடு வேணும், உங்க‌ளுக்கு ஏதாவ‌து இட‌ம் தெரியுமான்னு அவ‌ங்க‌கிட்ட‌ கேட்டிருந்தேன். உங்க‌கிட்ட‌ கேட்ட‌தா சொன்னாங்க‌"

"ஆமாங்க‌, என் பைய‌ன் வெளியூர் போயிருக்கான், வ‌ர்ற‌துக்கு ரெண்டு நாளாகும். அவ‌ன் வ‌ந்த‌வுட‌னே கேட்டு சொல்றேன்"

"ஹ்ம்ம்...ச‌ரி அவ‌ர் வ‌ந்த‌துக்க‌ப்புற‌ம் நீங்க‌ பேசிட்டு சொல்லுங்க‌, சும்மா வீடு பாக்க‌ற‌துக்கு ம‌ட்டும் ஃப்ரெண்ட்ஸை இன்னைக்கு வ‌ர‌சொல்ல‌ட்டுமா சார்?"

"இல்ல‌, எதுக்கும் அவ‌ன் வ‌ந்துட‌ட்டும்ங்க‌, இப்போதைக்கு எதுவும் வேணாம்"

"ஏன் சார் இப்ப‌டி த‌ய‌ங்க‌றீங்க‌? அவ‌ங்க‌ ஜ‌ஸ்ட் வீடு ஓகேவான்னு ‌ம‌ட்டும்தானே பார்க்க‌ போறாங்க‌"

"உங்க‌ளுக்கு க‌ல்யாண‌ம் ஆயிடுச்சா?"

"இல்ல சார், ஏன்?"

"சொல்றேனேன்னு த‌ப்பா நினைச்சுக்காதீங்க‌, பேச்சில‌ர்ஸ்க்குலாம் வீடு குடுக்க‌ற‌ ஐடியா இல்ல‌, அத‌னால‌தான் நீங்க‌ சொல்ல‌ சொல்ல‌ அவாய்ட் ப‌ண்ணேன்"

"சார், நீங்க‌ சொல்ற‌து புரியுது, ப‌ச‌ங்க‌ ந‌ல்ல‌ ப‌ச‌ங்க‌ சார், ஸ்மோக்கிங், ட்ரிங்கிங்னு எந்த‌ ஹாபிட்டும் கிடையாது. உங்க‌ளுக்கு ஒரு பிர‌ச்னையும் வ‌ராது"

"எல்லாரும் ஆர‌ம்ப‌த்துல‌ அப்ப‌டித்தாங்க‌ சொல்றாங்க‌, இதுக்கு முன்னாடி ஐஐடி ப‌ச‌ங்க‌தான் த‌ங்கியிருந்தாங்க‌. ஒரே அட்ட‌காச‌ம்...பிர‌ச்னையாகி என் பைய‌ன் அவ‌ங்க‌கிட்ட‌ ச‌த்த‌ம் போட்டு, இப்ப‌தான் ஒரு வார‌ம் முன்னாடி காலி ப‌ண்ணாங்க‌. காலி ப‌ண்ண‌ப்புற‌ம் உள்ளே போய் பார்த்தா, ஏக‌ப்ப‌ட்ட‌ சிக‌ரெட் பாக்கெட்டும், பாட்டிலும் இருந்த‌து. வேலையாளுங்க‌ள‌ வெச்சு சுத்த‌ம் ப‌ண்ண‌வே ரெண்டு நாளாச்சு. அத‌னால‌ இனிமே ஃபேமிலிக்கு ம‌ட்டுமே வீடு விட‌ற‌தா டிசைட் ப‌ண்ணியிருக்கோம்"

"சார், ரெண்டு மூணு ப‌ச‌ங்க‌ த‌ப்பு ப‌ண்ணா, எல்லாரும் அப்ப‌டியிருக்க‌ மாட்டாங்க‌ சார். வேள‌ச்சேரியில‌ பாருங்க‌. நிறைய‌ இட‌த்துல‌ பேச்சில‌ர்ஸ்தான் ஸ்டே ப‌ண்ணியிருக்காங்க‌"

"தெரியும்ங்க‌, வாட‌கை கூட‌ ரெண்டாவ‌துதான் என‌க்கு, முத‌ல்ல‌ வீட்டை சுத்த‌மா வெச்சுக்க‌ணும். அதுக்கு ப‌ச‌ங்க‌ள்லாம் ச‌ரிப‌ட்டு வ‌ர‌மாட்டாங்க‌."

இத‌ற்கு மேல் என்ன‌ பேசினாலும் அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவ‌ர் இல்லாததால், மேலும் பேச்சை வ‌ள‌ர்ப்ப‌தில் விருப்ப‌மில்லை என‌க்கு. "ஓகே சார், ச‌ப்போஸ் பேச்சில‌ர்ஸ்க்கு குடுக்க‌ற‌ ஐடியா இருந்தா இந்த‌ ந‌ம்ப‌ருக்கு கால் ப‌ண்ணுங்க‌" என்று சொல்லிவிட்டு அவ‌ருடைய‌ ப‌திலுக்குக்கூட‌ காத்திராம‌ல் ஃபோனை வைத்துவிட்டேன். ஆனால் அந்த‌ நாள் முழுதும் அவ‌ர் சொன்ன‌ வார்த்தைக‌ள் ம‌ட்டும் ம‌ன‌தில் சுழ‌ன்ற‌டித்துக்கொண்டிருந்த‌து. பேச்சில‌ர்ஸ் என்றாலே 'இட‌ம் விட்டா இஷ்ட‌த்துக்கும் ஆடுவானுங்க‌' என்கிற‌ அள‌வில்‌தான் ம‌திப்பிட‌ப்ப‌டுகிறார்க‌ள். பொருளீட்டும் நிமித்த‌ம், வீட்டை விட்டு, உற‌வை விட்டு, ந‌ட்பை விட்டு சென்னைக்கு வ‌ந்தால் முத‌லில் எதிர்கொள்ளும் பிர‌ச்னையே த‌ங்குமிட‌ம்தான்.

மேன்ஷ‌ன் வாழ்க்கை முறை, ச‌கிப்புத்த‌ன்மை அதிகள‌வில் இருந்தால் ம‌ட்டுமே ஏற்றுக்கொள்ள‌க்கூடிய‌ ஒன்று. ஒரு பெரிய‌ அறையையே இர‌ண்டாக‌ பிரித்து, ஒவ்வொரு சிறிய‌ அறையிலும் இர‌ண்டு மூன்று பேராக‌ த‌ங்கிக்கொள்வ‌து, அசுத்த‌மான‌ காம‌ன் பாத்ரூம்....இது போன்ற‌ பிர‌ச்னைக‌ளை ப‌ற்றி மேன்ஷ‌ன் உரிமையாள‌ருக்கு எந்த‌வித‌ அக்க‌றையும் இருக்காது. ஏன் இப்ப‌டி என்று கேட்டால் கூட‌ "ம‌த்த‌வ‌ங்க‌ள்லாம் எப்ப‌டி அட்ஜ‌ஸ்ட் ப‌ண்ணிட்டு இருக்காங்க? இஷ்ட‌மிருந்தா இருங்க‌, இல்ல‌ன்னா காலி ப‌ண்ணிட்டு போயிட்டேயிருங்க‌" என்றுதான் ப‌தில் வ‌ரும் (இந்த‌ வ‌ரி க‌ற்ப‌னை அல்ல‌, திருவ‌ல்லிக்கேணியில் என் ந‌ண்ப‌னுக்கு ஏற்ப‌ட்ட‌ அனுப‌வ‌ம்). அவ‌ரைப் பொறுத்த‌வ‌ரையில் ஒருவ‌ர் அறையை காலி செய்துவிட்டு சென்றால், அந்த‌ இட‌த்திற்கு வேறொருவ‌ரை வ‌ரவ‌ழைக்க‌ அவ‌ர் க‌ஷ்ட‌ப்ப‌ட‌ வேண்டிய‌தேயில்லை.‌ பிழைப்புக்கு சென்னையைத் தேடி ஓடிவ‌ருப‌வ‌ர்க‌ளுக்கா ப‌ஞ்ச‌ம்?

மேன்ஷ‌னை விரும்பாத‌வ‌ர்க‌ள் தேர்ந்தெடுக்கும் முறைதான், மூன்று நான்கு ந‌ண்ப‌ர்க‌ளாக‌ சேர்ந்து ஒரு வீட்டை வாட‌கை எடுத்துக்கொள்வ‌து. யாரோ சில‌ர் வீட்டை ஒழுங்காக‌ வைத்துக்கொள்ள‌வில்லை, த‌ண்ணிய‌டித்துவிட்டு ச‌த்த‌ம் போட்டுக்கொண்டிருந்த‌ன‌ர் என்ப‌தினால், எல்லா பேச்சில‌ர்ஸும் இப்ப‌டித்தான் இருப்பார்க‌ள் என்ற‌ பிம்ப‌த்தை எவ்வாறு அந்த‌ வீட்டு உரிமையாள‌ர் உருவாக்கிக்கொண்டாரோ தெரிய‌வில்லை. எல்லா இளைஞ‌ர்க‌ளுக்கும் குடும்ப‌ பொறுப்பு, பிர‌ச்னை என்று ஒரு சில‌ ஃப்ளாஷ்பேக்குக‌ள் இருக்கும். அத‌ற்கெல்லாம் ஒரு தீர்வு காண‌த்தான், எல்லோரையும் ஊரில் விட்டு விட்டு, சென்னை வ‌ந்து வாழ்க்கையினூடே ப‌ல‌ போராட்ட‌ங்க‌ளை ச‌ந்தித்துக்கொண்டிருக்கின்ற‌ன‌ர். மெரீனாவுக்கும், ஸ்பென்ஸ‌ருக்கும், சிட்டி சென்ட‌ருக்கும், ச‌த்ய‌ம் தியேட்ட‌ருக்கும் சென்று பொழுதை போக்கிக்கொண்டிருக்க‌ யாரும் சென்னை வ‌ர‌வில்லை.

அத‌ற்காக‌ பேச்சில‌ர்ஸ் எல்லோரும் உத்த‌ம‌புத்திர‌ன்க‌ள் என்று நான் சொல்ல‌மாட்டேன். இள‌ம் வ‌ய‌து, என்ன‌ செய்தாலும் த‌ட்டி கேட்க‌ வீட்டின‌ர் யாரும் அருகில் இல்லை, 'ஒரு த‌ட‌வை ட்ரை ப‌ண்ணுடா ம‌ச்சான்' என்று தைரிய‌ம் கொடுக்கும் ந‌ட்பு வ‌ட்ட‌ங்க‌ள்....இது போன்ற‌ சூழ்நிலை க‌ண்டிப்பாக‌ த‌ம், த‌ண்ணி என்று முய‌ற்சி செய்து பார்க்க‌த்தான் தோன்றும். ஆனால் அது டாஸ்மாக்கிலோ, ரெஸ்டார‌ண்ட் பாரிலோ முடிந்துவிட்டால் யாருக்கும் பிர‌ச்னையில்லை. வீட்டினுள் த‌ண்ணிய‌டித்து, ச‌த்த‌ம் போட்டு, ந‌ம் நிலையை நாமே வெளிச்ச‌ம் போட்டுக் காட்டும்போதுதான் அக்க‌ம் ப‌க்க‌ம் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு ஒரு பிர‌ச்னையாக‌ மாறுகிற‌து. இத‌னால்தான் "பேச்சில‌ரா?...ப்ச், இம்சைங்க‌!" என்ற‌ பிம்ப‌ம் வீட்டு உரிமையாள‌ர்க‌ள் ம‌த்தியில் உருவாகிற‌து. நாம் ந‌ம் த‌ங்குமிட‌த்தை ந‌ம‌து சொந்த‌ வீடாக‌ க‌ருதி, ம‌திப்ப‌ளித்து வாழ்ந்தால் ம‌ட்டுமே இது போன்ற‌ பிர‌ச்னைக‌ளை த‌விர்க்க‌ முடியும்.

Thursday, May 13, 2010

விட்டத்தில் விண்மீன்கள்

சென்னையின் கோடையை சொல்லித் தெரிய வேண்டாம். சென்னையிலிருக்கும் ஒரே சீசன் வெயில். எப்போதாவது மழை வந்து நம் ரோடுகளின் லட்சணத்தைக் காட்டினாலும் ஆதவனும் அடுத்த நாளே ஆஜராகிவிடுவார். ஆஃபிஸ் ஷிஃப்ட் முடிந்து நான் வீட்டிற்குள் தஞ்சமடைந்தேன். அடுத்த‌ ஷிஃப்ட்டுக்கு ச‌ந்திர‌ன் வ‌ந்த‌பின்பும், ஆத‌வ‌னின் அற்புத‌மான‌ பகல் ப‌ணியால் அறையினுள் அன‌ல் த‌கித்துக்கொண்டிருந்த‌து. இன்று மொட்டை மாடியில்தான் உற‌க்க‌ம் என‌ முடிவு செய்து, க‌ட்டிலுட‌ன் கிள‌ம்பினேன். மொட்டை மாடியில் உற‌ங்கியிருக்கிறீர்க‌ளா? ஜில்லென்று வீசும் காற்றும், யாரும‌ற்ற‌ த‌னிமையும்....க‌விதை எழுத‌த் தூண்டும் க‌ண‌ம் அது!

க‌ட்டிலில் ப‌டுத்துக்கொண்டு விண்ணைப் பார்க்கையில், "ம்மா, எத்த‌னை ஸ்டார்ஸ் இருக்குன்னு நான் எண்ணிச் சொல்றேன்மா.....ஓன், டூ, த்ரீ......" என்ற‌ சிறுவ‌ய‌து அச‌ட்டுத்த‌ன‌ம்தான் ஞாப‌க‌த்துக்கு வ‌ந்த‌து. சில‌ நிமிட‌ங்க‌ளில் உற‌ங்க‌ ஆர‌ம்பிக்க‌, ஜில் காற்று எந்த‌ வித‌ ராக்கெட்டும் இல்லாம‌ல், என்னை நீல் ஆர்ம்ஸ்ட்ராங்காக‌ மாற்றி ச‌ந்திர‌னில் கால் ப‌திக்க‌ச் செய்த‌து.




இதோ இப்போது என‌க்கு மிக‌ அருகே ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள். ஒவ்வொரு ந‌ட்ச‌த்திர‌த்திலும் என‌க்கு மிக‌ பிடித்த‌வ‌ர்க‌ளின் முக‌ம் தெரிவ‌து போன்ற‌ ஒரு உண‌ர்வு. காலையில் இருந்த‌ புழுக்க‌ம், விய‌ர்வை, வெயில் எதுவுமில்லை. இது குளிருமில்லை. தென்ற‌ல்? வ‌ச‌ந்த‌ம்? ஊஹூம் இத‌ற்கு என்ன‌ பெய‌ர் என்றே தெரிய‌வில்லை. எதுவாகவோ இருக்கட்டும். நான் இதற்கு “விரும்பிய ஸ்பரிசம்” எனப் பெயரிட்டுக் கொள்கிறேன்.

ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளிடையே மித‌ந்து கொண்டிருக்கிறேன். ஒரே ஒரு ந‌ட்ச‌த்திர‌ம் ம‌ட்டும் பிரகாசமாய் மின்னிக் கொண்டிருப்ப‌து போல் தோன்ற‌, அருகே சென்று பார்த்தேன். அதில் அவ‌ள் முக‌ம்!

மிக‌ அருகே சென்று க‌ண்மூடி நின்றேன். இட‌து க‌ன்ன‌த்தில் திடீரென்று ஈர‌ம். க‌ண் திற‌க்காம‌லேயே என்னால் உண‌ர‌ முடிந்த‌து, க‌ண்டிப்பாக‌ இது அவ‌ள் இத‌ழ் ப‌தித்த‌ ஈர‌ம‌ல்ல‌ என்று. பின் வேறென்ன‌ இது என்று யோசிக்கும் முன்ன‌ரே இப்போது வ‌ல‌து க‌ன்ன‌த்திலும் அதே ஈர‌ம்....ரொமான்டிக்கான‌ நேர‌ம், ரொமான்டிக்கான‌ சூழ்நிலை...வான‌ம், ந‌ட்ச‌த்திர‌ம், மேக‌ம் என்று ரொமான்டிக்கான‌ இட‌ம் கூட‌...ஏன்? ஏன்? ஏன் அந்த‌ ஈர‌ம் இப்போது அதிக‌மாகிக்கொண்டிருக்கிற‌து?

"ர‌கு..டேய்...எழுந்திருடா, தூற‌ல் போடுற‌து கூட‌ தெரியாம‌ எம‌ன் வாக‌ன‌ம் மாதிரி தூங்கிட்டிருக்க‌, எழுந்து உள்ளே வ‌ந்து ப‌டு" த‌ம்பியின் குர‌ல் கேட்டு, க‌ட்டிலைத் தூக்கிக்கொண்டு உள்ளே ஓட‌த் துவ‌ங்கினேன். உள்ளே போவ‌த‌ற்கு முன் ஒருமுறை நிமிர்ந்து வான‌த்தைப் பார்த்தேன். தொலைவில் ஒரே ஒரு ந‌ட்ச‌த்திர‌ம் இன்னும் மின்னிக்கொண்டிருந்த‌து....


Sunday, May 09, 2010

+2....நெக்ஸ்ட்?


+2 தேர்வு முடிவை எதிர்நோக்கியிருக்கும் அனைத்து மாண‌வ‌, மாண‌வியருக்கும் வாழ்த்துக‌ள்.

ந‌ண்ப‌ர்க‌ளுக்கு.........உங்க‌ள் பிள்ளைக‌ளோ, உங்க‌ளுக்கு தெரிந்த‌வ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளோ ந‌ன்றாக‌ ம‌திப்பெண் பெற்றால், த‌ய‌வுசெய்து அவ‌ர்க‌ளை எல‌க்ட்ரானிக்ஸ் & க‌ம்யூனிகேஷ‌ன், க‌ம்ப்யூட்ட‌ர் ச‌யின்ஸ், எல‌க்ட்ரிக‌ல் & எல‌க்ட்ரானிக்ஸிலேயே போய் விழ‌ச் சொல்லாதீர்க‌ள். உல‌க‌ம் ப‌யோ & நேனோ டெக்னால‌ஜியை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிற‌து!




இன்று ஐடியில் இருப்ப‌வ‌ர்க‌ளை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு முன்னேறும் வாய்ப்பு, எதிர்கால‌த்தில் ப‌யோ & நேனோ டெக்னால‌ஜி ப‌டித்த‌வ‌ர்க‌ளுக்கே.

இங்கே ப‌யோ டெக்னால‌ஜி ம‌ற்றும் நேனோ டெக்னால‌ஜி ப‌ற்றி எளிதாக‌ கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து

ப‌டித்துப் பாருங்க‌ள். பிடித்திருந்தால் ப‌ரிந்துரை செய்யுங்க‌ள், பிள்ளைக‌ளுக்கும் இவ‌ற்றை ப‌டிப்ப‌தில் விருப்ப‌ம் இருந்தால்.‌ அவ‌ர்களுக்கு விருப்ப‌ம் இல்லையெனில் க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ வேண்டாம். அவ‌ர்க‌ளுக்கு எது விருப்ப‌மோ அதை ப‌டிக்கட்டும்.

காம‌ர்ஸ் துறையின‌ருக்கு............பி.காம் சேர்ந்து ப‌டித்துவிட்டு, உட‌னே வேலை என்ற‌ க‌ன‌வை ம‌ட்டும் காணாதீர்க‌ள். இன்று இருக்கும் ப‌ல‌ BPO க‌ம்பெனிக‌ள் பி.காம் ப‌டித்த‌வ‌ர்க‌ளை ஆர‌ம்ப‌த்திலேயே 8000 முத‌ல் 12000 வ‌ரை ச‌ம்ப‌ள‌ம் கொடுத்து எடுத்துக்கொள்கின்ற‌ன‌ர். இது இருப‌த்தொரு வ‌ய‌தில் பெரிய‌ விஷ‌ய‌மாக‌ இருக்க‌லாம். ஆனால் இது நிலையான‌ வ‌ள‌ர்ச்சியை ஆண்டுதோறும் த‌ருமா என்றால், ச‌ந்தேக‌மே. ஒரு சில‌ருக்கு வேண்டுமானால் அவ‌ர்க‌ளுடைய‌ ப்ராஜ‌க்ட்டை பொறுத்து ந‌ல்ல‌ வ‌ள‌ர்ச்சி இருக்க‌லாம். ஆனால் ப‌ல‌ருக்கு அப்ப‌டி இல்லை. என‌வே பி.காம் ப‌டிப்ப‌வ‌ர்க‌ள், அவ‌சிய‌ம் எம்.காமோ, எம்பிஏவோ ப‌டியுங்க‌ள். அதும‌ட்டும‌ல்லாம‌ல், பி.காமிலும் குறைந்த‌து 70% எடுத்து தேர்ச்சி பெற‌ முய‌ற்சி செய்யுங்க‌ள். இது ப‌ல‌ நேர்முக‌த் தேர்வுக‌ளில் உங்க‌ளுக்கு போட்டியை குறைக்கும்....ஆல் த‌ பெஸ்ட்!

இன்னும் நிறைய‌ விஷ‌ய‌ங்க‌ள் எழுத‌ எண்ணியிருந்தேன். நேற்று பைக்கில் சென்ற‌போது ஏற்ப‌ட்ட‌ சிறு விப‌த்தால் வ‌ல‌து கையில் ர‌த்த‌ம் க‌ட்டிக்கொள்ள‌, உப்பிய‌ ச‌ர‌வ‌ண‌ ப‌வ‌ன் பூரி போல‌ ம‌ணிக்க‌ட்டு தோற்ற‌ம‌ளிக்கிற‌து. அத‌னால் இட‌து கையாலேயே கிட்ட‌தட்ட‌ ஓன்ற‌ரை ம‌ணி நேர‌மாக‌ த‌ட்ட‌ச்சிக்கொண்டிருக்கிறேன். இதுக்கு மேல‌..........முடிய‌ல‌!


Monday, May 03, 2010

சுஜாதா....என்ன‌ அவ‌ச‌ர‌ம்யா உன‌க்கு!

எல்லாரும் த‌லைல‌ தூக்கி வெச்சுட்டு ஆடுறாங்க‌ளே, அப்ப‌டி என்ன‌தான் எழுத‌றாரு இவ‌ரு என்ற‌ எண்ண‌த்தோடுதான் முத‌ன் முத‌லில் "க‌ற்ற‌தும் பெற்ற‌தும்"மை வாசிக்க‌த் தொட‌ங்கினேன். வாசிக்க‌ ஆர‌ம்பித்த‌ சில‌ வார‌ங்க‌ளிலேயே நானும் த‌.தூ ஆட‌ ஆர‌ம்பித்தேன். என்ன‌ ம‌னித‌ர் இவ‌ர், அக‌நானூறு, புற‌நானூறு ப‌ற்றியும் எழுதுகிறார், அறிவிய‌லிலும் விளையாடுகிறார், ந‌ல்ல‌ ந‌ல்ல‌ க‌விதைக‌ளை அறிமுக‌ப்ப‌டுத்துகிறார்...இவ‌ர் ம‌ண்டையில் இருப்ப‌து மூளைதானா என்று விய‌ந்தேன். "ஹைக்கூ" என்னும் வார்த்தையையே இவ‌ர் மூல‌ம்தான் அறிந்தேன்.

ப‌ள்ளியில் ப‌டிக்கும்போது அறிவிய‌ல் என்றால் "அது ந‌ம்ம‌ள‌ நோக்கிதான் வ‌ருது, எல்லோரும் ஓடுங்க‌" என்ற‌ ரேஞ்சில் ஓடிய‌வ‌ன், அவ‌ர் எழுதுவ‌தை ம‌ட்டும் ர‌சித்து ப‌டிக்க‌த் துவ‌ங்கினேன். இப்போது கூட‌ சில‌ ச‌ம‌ய‌ம் நினைப்ப‌துண்டு, ப‌ள்ளியில் வ‌ரும் அறிவிய‌ல் பாட‌ங்க‌ள் எல்லாம் அவ‌ர் எழுதியிருந்தால், எல்லா‌ மாண‌வ‌/மாண‌விக‌ளும் ம‌ன‌ப்பாட‌ம் என்னும் ந‌ம‌து மோச‌மான‌ க‌ல்வி வ‌ழிமுறையை விட்டுவிட்டு, ஆர்வ‌த்துட‌ன் ப‌டிப்பார்க‌ளே என்று. இதேபோல் த‌மிழில் வ‌ரும் செய்யுள்க‌ளுக்கெல்லாம் ஏ.ஆர்.ர‌ஹ்மான் இசை வ‌டிவ‌ம் கொடுத்தால்....!




சென்னை வ‌ந்த‌பின் த‌னியாக‌ த‌ங்க‌ ஆர‌ம்பித்த‌போது, பொழுதுபோக்கிற்கு டிவி கூட‌ கிடையாது என‌க்கு. ஆனால் பொழுதையும், வ‌ருத்த‌த்தையும் போக்கிய‌வ‌ர் இவ‌ர்தான். இவ‌ரின் எழுத்தை வாசிக்க‌ ஆர‌ம்பித்த‌ சில‌ நாட்க‌ளிலேயே "ந‌ல்ல‌வேளை ந‌ம்மிட‌ம் டிவி இல்லை, இருந்திருந்தால் இந்த‌ க‌தைக‌ளையெல்லாம் எப்ப‌டி ப‌டித்திருப்போம்?" என்று தோன்றும‌ள‌வுக்கு என்னை ஆட்கொண்டிருந்தார். இதுவ‌ரை நான் ப‌டித்த‌ க‌தைக‌ளிலேயே ''வும், 'கொலையுதிர் கால‌ம்'மும்தான் என்னுடைய‌ மோஸ்ட் ஃபேவ‌ரைட்.

- ப‌ல‌ருக்கும் நினைவிருக்க‌லாம். விக‌ட‌னில் தொட‌ராக‌ வெளிவ‌ந்த‌து இந்த‌ க‌தை. அந்த‌ ச‌ம‌ய‌த்தில் நான் ரொம்ப‌ குட்டி பாப்பாவாக‌ இருந்த‌தினால், க‌தையை ப‌டிப்ப‌தில் ஆர்வ‌ம் காட்ட‌வில்லை. மூன்று வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு ப‌த்திரிக்கையிலோ, இணைய‌த்திலோ இந்த‌ க‌தையை ப‌ற்றி சில‌ வ‌ரிக‌ள் ப‌டித்தேன். 'ஆ'ர்வ‌ம் தாங்க‌ முடியாம‌ல், ஹிக்கின்பாத‌ம்ஸ் சென்று வாங்கினேன். வாங்கி கிட்ட‌த‌ட்ட‌ மூன்று அல்ல‌து நான்கு நாட்க‌ளிலேயே மொத்த‌ க‌தையையும் ப‌டித்து முடித்தேன். அத‌ற்கு பின் அவ‌ரின் மேலிருந்த‌ ம‌ரியாதையும், பிர‌மிப்பும்...ப‌ன்ம‌ட‌ங்கு உய‌ர்ந்த‌து என்ப‌தெல்லாம் சாதார‌ண‌ வார்த்தை. அந்த‌ உண‌ர்வு அத‌ற்கும் மேல்!

"ஆ" என்ற‌ ஒற்றை எழுத்து டைட்டிலே, இந்த‌ க‌தை க‌ண்டிப்பாக‌ ச‌ம்திங் ஸ்பெஷ‌ல் என்று உள்ளுக்குள் அலார‌ம் அடித்த‌து. க‌தையின் ஒவ்வொரு அத்தியாய‌மும் "ஆ"வென்றே முடியும். "ஆ"வென்று முடிக்க‌ வேண்டுமே என்ப‌த‌‌ற்காக‌, ஏதோ மொக்கை கார‌ண‌ங்க‌ள் எல்லாம் காண்பித்து முடிக்க‌மாட்டார். ஒவ்வொன்றிலும் ஏதாவ‌து ஒரு அவ‌சிய‌ம் இருக்கும்....அந்த‌ கால‌க‌ட்ட‌த்திலேயே, சிஸ்ட‌ம் ப்ரொக்ராமிங்கில் ப‌ய‌ன்ப‌டுத்தும் ப‌ல‌ வார்த்தைக‌ளை க‌தையில் ப‌ய‌ன்ப‌டுத்தியிருப்பார். நீங்க‌ள் த்ரில்ல‌ர் க‌தை விரும்பிக‌ளாக‌ இருந்தால், க‌ண்டிப்பாக‌ இக்க‌தையை வாசித்து பாருங்க‌ள். ஒவ்வொரு அத்தியாய‌ம் ப‌டித்து முடிக்கும்போதும், "ச‌ரி மீதிக்க‌தையை அப்புற‌ம் ப‌டிச்சுக்க‌லாம்" என்ற‌ எண்ண‌ம் க‌ண்டிப்பாக‌ தோன்றாது. அந்த‌ த்ரில் தொட‌ர்ந்த‌ப‌டியே இருக்கும். வேறு வ‌ழியின்றி, ப‌டித்து முடிக்க‌ மூன்று நான்கு நாட்க‌ள் ஆன‌து என‌க்கு. இந்த‌ க‌தையை வைத்து சினிமா எடுக்க‌லாம் என்று பிர‌காஷ்ராஜ் ப‌ல‌முறை த‌ன்னிட‌ம் கேட்ட‌தாக‌ ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். என்ன‌ கார‌ண‌மோ, அந்த‌ முய‌ற்சி ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட‌வேயில்லை.

கொலையுதிர் கால‌ம் - இந்த‌ வ‌ருட‌ புத்த‌க‌ க‌ண்காட்சியில் வாங்கிய‌ "மூன்று குற்ற‌ங்க‌ள்" புத்த‌க‌த்தை ப‌டித்து முடித்த‌பின், சில‌ 'கணேஷ் வ‌ஸ‌ந்த்' க‌தைக‌ளை வாங்கினேன். அதில் என்னை மிக‌வும் புர‌ட்டிபோட்ட‌து "கொலையுதிர் கால‌ம்". டைட்டிலை பார்த்த‌தும் சின்ன‌ ஸ்மைலுட‌ன், "ம‌னுஷ‌ன் எப்ப‌டிலாம் யோசிச்சிருக்க‌றார் பாரேன்" என்ற‌ எண்ண‌ம் தோன்றிய‌து. அலுவ‌ல‌க‌ம் 11 ம‌ணிக்கு என்ப‌தால் காலை எழ‌ரை ம‌ணி முத‌ல் எட்ட‌ரை ம‌ணி வ‌ரை புத்த‌க‌ம் ப‌டிப்ப‌தை தொட‌ர்ந்துகொண்டிருக்கிறேன். அப்ப‌டி ஒரு நாள் ஆர‌ம்பித்த‌துதான் "கொலையுதிர் கால‌ம்". ப‌டிக்க‌ ஆர‌ம்பித்த‌ அரை ம‌ணி நேர‌த்திலேயே நான் நிக‌ழ்கால‌த்திலிருந்து கொ.கால‌த்திற்கே சென்றுவிட்டேன். ஆர்வ‌ம் தாங்க‌முடிய‌வில்லை...ச‌ரி நைட் வ‌ந்து ப‌டிச்சிக்க‌லாம் என்று யோசித்தேன். ஹூஹூம்..ம‌ட‌ப்ப‌ய‌ ம‌ன‌சு கேட்க‌வில்லை. டீம் மேனேஜ‌ருக்கு ட்ரிங்கினேன்.

"ஹ‌லோ...ஹ்ம்..கொஞ்ச‌ம் உட‌ம்பு ச‌ரியில்ல‌, காலையில‌ருந்து கோல்ட் அதிக‌மா இருக்கு, இன்னைக்கு ஒரே ஒரு நாள் ம‌ட்டும் லீவ் எடுத்துக்க‌றேன்"

அன்று உண்மையிலேயே ஜ‌ல‌தோஷ‌த்தால் அவ‌திப்ப‌ட்டுக்கொண்டிருந்தேன். என்ன‌...'அதிக‌மா' என்ப‌து ம‌ட்டும்தான் அதிக‌மான‌ வார்த்தை. 'லேசா' என்ப‌தே அந்த‌ வாக்கிய‌த்திற்கு ஷாரூக் காஜோல் போல‌ பொருத்த‌மாக‌ இருந்திருக்கும்.

டீம் மேனேஜ‌ர் என‌க்கு லீவ் கொடுக்கும் விஷ‌ய‌த்தில் ரொம்ம்ம்ப‌ ந‌ல்ல‌வ‌ராத‌லால் பாஸிட்டிவ்வான‌ ரிச‌ல்ட்டையே எதிர்பார்த்தேன்.

"ஆங், ஓகே, உட‌ம்பு பாத்துக்க‌ப்பா, மெடிக்க‌ல் ஷாப்ல‌லாம் மாத்திரை வாங்கி போடாத‌, போய் டாக்ட‌ரைப் பாரு" என்றார்.


ம‌ன‌துக்குள், "க‌ண்டிப்பா.....டாக்ட‌ர் க‌ணேஷை‌ போய் பார்த்து, அவ‌ர் எழுதிக்கொடுக்க‌ற‌ மாத்திரையை வ‌ஸ‌ந்த் மெடிக்க‌ல்ஸில் வாங்கிக்க‌றேன்" என்றெண்ணிக்கொண்டேன். அவ‌ரிட‌ம் ந‌ன்றி சொல்லிவிட்டு ஃபோனை வைத்த‌பின் சிறிது குற்ற‌ உண‌ர்ச்சி கூட‌ இருந்த‌து (என்னைக்கும் இந்த‌ ப‌திவு ம‌ட்டும் அவ‌ர் க‌ண்ணுல‌ ப‌டாம‌ நீதான் காப்பாத்த‌ணும் க‌ணேஷா!). ஆனால் அதெல்லாம் மீண்டும் புத்த‌க‌த்தை எடுக்கும்வ‌ரைதான். ப‌டிக்க‌ ஆர‌ம்பித்த‌பின், துளிகூட‌ த்ரில் குறையாம‌ல் த‌ட‌த‌ட‌வென்று இர‌ட்டைக்கிள‌வியை த‌ண்ட‌வாள‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்தி 'க‌தை' ர‌யில் 'சூப்ப‌ர் ஃபாஸ்ட்'டாக‌ ஓடிக்கொண்டிருந்த‌து. ப‌டித்து முடித்த‌ பின் "சே! என்ன‌ ம‌னுஷ‌ன்யா இவ‌ரு, சான்ஸே இல்ல‌"...இன்னும் என்னென்னமோ தோன்றிய‌து. பிற‌குதான் உண‌ர்ந்தேன், காலையிலிருந்து குளிக்க‌வுமில்லை, சாப்பிட‌வுமில்லையென‌. அத‌ற்கு பின்தான் கொ.கால‌த்திலிருந்து நிக‌ழ்கால‌த்திற்கு மீண்டும் வந்தேன்....வ‌ர‌ ம‌ன‌மில்லாம‌ல்!


வாழ்க்கையில் ஒரு முறையேனும் பார்த்துவிட‌வேண்டும் என்று நான் நினைத்த‌ ஒரே விஐபி அவ‌ர்தான். ஏனோ அது நிறைவேறாம‌லேயே போன‌து. இப்போது இருந்திருந்தால் ஒரு ஈமெயிலாவ‌து அனுப்பியிருப்பேன் இன்றைக்கு, "ஹாப்பி ப‌ர்த்டே ஸார் :)" என்று. குறைந்த‌து இன்னும் 20 வ‌ருட‌ங்க‌ளாவ‌து இருந்திருக்க‌லாம்........என்ன‌ அவ‌ச‌ர‌ம்யா உன‌க்கு!

இதுவ‌ரை ப‌டித்த‌ கணேஷ் வ‌ஸ‌ந்த் க‌தைக‌ள்

ஆ!

நைலான் க‌யிறு

ம‌றுப‌டியும் க‌ணேஷ்

மேற்கே ஒரு குற்ற‌ம்

மீண்டும் ஒரு குற்ற‌ம்

மேலும் ஒரு குற்ற‌ம்

கொலையுதிர் கால‌ம்

வ‌ஸ‌ந்த் வ‌ஸ‌ந்த்!

இப்ப‌திவை வாசிக்கும் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ஒரு வேண்டுகோள். க‌ணேஷ் வ‌ஸ‌ந்த் இட‌ம்பெறும் ம‌ற்ற‌ க‌தைக‌ளையும் வாசிக்க‌ ஆர்வ‌மாயிருக்கிறேன். ஆனால் என்னென்ன‌ க‌தைக‌ள் என்று தெரியாம‌ல் 'ஙே'ங்கிக்கொண்டிருக்கிறேன். ஆத‌லால், பின்னூட்ட‌த்திலோ, மின்ன‌ஞ்ச‌லிலோ அக்க‌தைக‌ளை தெரிவித்தால், மே மாத‌த்தில் ம‌ழையைக் க‌ண்ட‌து போல் மிக்க‌ ம‌கிழ்ச்சிய‌டைவேன் :)