Sunday, February 21, 2010

ல‌ட்சுமிகாந்த‌ன் கொலை வ‌ழ‌க்கு - 2

என்ன‌தான் க‌த்திக்குத்து வாங்கினாலும் ல‌ட்சுமிகாந்த‌ன் சாக‌வில்லை. வ‌ழிந்த‌ ர‌த்த‌த்தோடு நேராக‌ மீண்டும் வ‌ழ‌க்க‌றிஞ‌ர் ந‌ற்குண‌த்தின் வீட்டுக்குச் சென்று ந‌ட‌ந்த‌தைக் கூறினார். த‌ன்னுட‌ன் இருந்த‌ ப்ரூ (Brew) என்னும் ஒரு ஆங்கிலோ இந்திய‌ரை, உட‌ன‌டியாக‌ ல‌ட்சுமிகாந்த‌னை ம‌ருத்துவ‌ம‌னையில் சேர்க்குமாறு சொன்னார் ந‌ற்குண‌ம். பொருத்த‌மான‌ பெய‌ர்தான்.

ஆனால் ல‌ட்சுமிகாந்த‌னுக்கு வ‌ழியும் ர‌த்த‌மும் ச‌ரி, கோப‌மும் ச‌ரி, கொஞ்ச‌மும் அட‌ங்க‌வில்லை. அத‌னால் ம‌ருத்துவ‌ம‌னைக்குச் செல்லும் முன் முத‌லில் வேப்பேரி காவ‌ல் நிலைய‌த்திற்குச் சென்று, வ‌டிவேலுவும், 30 வ‌ய‌து ம‌திக்க‌த்த‌க்க‌ இன்னொரு ந‌ப‌ரும் சேர்ந்து த‌ன்னை க‌த்தியால் குத்திவிட்ட‌தாக‌ புகார் செய்துவிட்டுதான் ம‌ருத்துவ‌ம‌னைக்குச் சென்றார். இதில் குறிப்பிட‌ப்ப‌ட‌வேண்டிய‌ ஒன்று காவ‌ல் நிலைய‌த்துக்கு ரிக்ஷாவில் சென்ற‌ பின் ரிக்ஷாவை விட்டு ல‌ட்சுமிகாந்த‌னால் இற‌ங்க‌க்கூட‌ முடிய‌வில்லை. அத‌னால் அப்போது காவ‌ல் நிலைய‌த்தில் இருந்த‌ இன்ஸ்பெக்ட‌ர் கிருஷ்ண‌ன் ந‌ம்பியார் வெளியே வ‌ந்து, ல‌ட்சுமிகாந்த‌ன் சொல்ல‌ சொல்ல‌, புகாரை அவ‌ரே எழுதிக்கொண்டார்.

அத‌ன் பின் பொது ம‌ருத்துவ‌ம‌னையில், வென்லாக் வார்டில் (Wenlock Ward) ல‌ட்சுமிகாந்த‌ன் அட்மிட் ஆக‌, டாக்ட‌ர் பி.ஆர்.பால‌கிருஷ்ண‌ன் அவ‌ரை பார்த்த‌போது, ஏற‌க்குறைய‌ த‌ன்னுடைய‌ வாழ்வின் முடிவிற்கே ல‌ட்சுமிகாந்த‌ன் வ‌ந்திருந்தார். க‌த்தியால் குத்துப்ப‌ட்ட‌ பின் நிறைய‌ நேர‌ம் தாம‌த‌ப்ப‌டுத்தி வ‌ந்த‌தால், ம‌ருத்துவ‌ர்க‌ளால் காப்பாற்ற‌ முடியவில்லை. ந‌வ‌ம்ப‌ர் 9, 1944 அன்று அதிகாலை 4:15 ம‌ணிக்கு, வ‌ழ‌க்க‌மாக‌ச் சொல்வ‌துபோல், சிகிச்சை ப‌ல‌னின்றி இற‌ந்தார்.

ல‌ட்சுமிகாந்த‌னை வ‌டிவேலுவும், நாக‌லிங்க‌மும் கொன்ற‌து உண்மைதான். ஆனால் இந்த‌ திட்ட‌த்திற்கு பின் ஆரிய‌வீர‌சேன‌ன், ஜெயான‌ந்த‌ம், ராஜாபாத‌ர், ஆறுமுக‌ம் போன்றோரும் இருந்த‌ன‌ர். போலீஸாரின் அதிர‌டியில் முத‌லில் மாட்டிய‌து வ‌டிவேலு. ந‌வ‌ம்ப‌ர் 9ம் தேதிய‌ன்றே வ‌டிவேலுவைக் கைது செய்த‌ன‌ர் போலீஸார். பின்பு ஒவ்வொருவ‌ராக‌ கைது செய்ய‌ப்ப‌ட‌‌, க‌டைசி நேர‌ திருப்ப‌மாக‌ ஜெயான‌ந்த‌ம் அப்ரூவ‌ராக‌ மாறினான். இத‌ன்பின்தான் பெரிய‌ த‌லைக‌ள் உருள‌ ஆர‌ம்பித்த‌ன‌.

ந‌வ‌ம்ப‌ர் 27, 1944 - அசோகா பிலிம்ஸ் அலுவ‌ல‌க‌த்துக்கு போலீஸார் வ‌ந்து என்.எஸ்.கிருஷ்ண‌னை கைது செய்வ‌தாக‌க் கூறின‌ர் போலீஸார். எதுவும் கூற‌வில்லை என்.எஸ்.கே. அமைதியாக‌ அவ‌ர்க‌ளுட‌ன் கிள‌ம்பினார். அதே நேர‌த்தில் மாம்ப‌ல‌த்தில் தியாகராஜ‌ பாக‌வ‌த‌ரும் கைது செய்ய‌ப்ப‌ட்டார். ஆனால் ஸ்ரீராமுலு நாயுடு ம‌ட்டும் ஜ‌ன‌வ‌ரியில்தான் கைது செய்ய‌ப்ப‌ட்டார்.



பாக‌வ‌த‌ரும், என்.எஸ்.கேவும் ஜாமீனில் வெளிவ‌ந்த‌ன‌ர். வெளியே வ‌ந்த‌வுட‌ன் விறுவிறுவென்று ஒப்பந்த‌ம் செய்துகொண்டிருந்த‌ ப‌ட‌ங்க‌ளிலெல்லாம் என்.எஸ்.கே ந‌டித்து முடித்தார். ஜ‌ன‌வ‌ரி 12, 1945 அன்று இருவ‌ரின் ஜாமீனும் ர‌த்தான‌து. உய‌ர்நீதிம‌ன்ற‌ உத்த‌ர‌வுப்ப‌டி, பாக‌வ‌த‌ரும், என்.எஸ்.கேவும் சென்னை ம‌த்திய‌ சிறையில் அடை‌க்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

செஷ‌ன்ஸ் விசார‌ணை ஏப்ர‌ல் 12, 1945 அன்று ஆர‌ம்ப‌மான‌து. ஸ்ரீராமுலு நாயுடு சார்பாக‌ வாதாட‌ பிர‌ப‌ல‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர் கே.எம்.முன்ஷி ப‌ம்பாயிலிருந்து வ‌ர‌வ‌ழைக்க‌ப்ப‌ட்டிருந்தார். அத‌ற்காக‌ முன்ஷிக்கு ஒரு நாளைக்கு ரூ.75,000 கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. பாக‌வ‌த‌ருக்காக‌வும், என்.எஸ்.கேவுக்காக‌வும் வாதாட‌ வி.டி.ர‌ங்க‌சாமி அய்ய‌ங்கார், வி.ராஜ‌கோபால‌ச்சாரி, ரோல‌ண்ட் பிராட‌ல், எஸ்.கோவிந்த‌சாமி நாத‌ன் ஆகியோர் ஆஜ‌ராகி இருந்தார்க‌ள்.

கே.எம்.முன்ஷி வாத‌த் திறமை ஸ்ரீராமுலு நாயுடுவைக் காப்பாற்றிய‌து. ஆம், கொலைத் திட்ட‌ம் தீட்டிய‌தாக‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌ ந‌வ‌ம்ப‌ர் 7, 1944 அன்று, ப‌ம்பாய் தாஜ் ம‌கால் ஹோட்ட‌லில் ச‌ர் ஆர்.கே.ச‌ண்முக‌ம் செட்டியாருட‌ன், ஸ்ரீராமுலு நாயுடு த‌ங்கி இருந்த‌தாக‌ நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த‌ நிரூப‌ண‌ம் ஏற்றுக்கொள்ளப்ப‌ட்டு ஏப்ர‌ல் 20, 1945 அன்று ஸ்ரீராமுலு நாயுடு விடுத‌லை செய்ய‌ப்ப‌ட்டார். இத‌ன்பின் என்.எஸ்.கேவுக்காக‌வும் வாதாட‌ கே.எம்.முன்ஷி நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

ந‌வ‌ம்ப‌ர் 2 முத‌ல் 11 வ‌ரை என்.எஸ்.கே சேல‌ம் ந‌க‌ரில் இருந்த‌தை த‌க்க‌ ஆதார‌ங்க‌ளுட‌ன் நிரூபித்தார் முன்ஷி. சேல‌ம் மாட‌ர்ன் தியேட்ட‌ர்ஸில் ப‌ணிபுரிந்த‌ ப‌ல‌ரும் என்.எஸ்.கேவுக்கு சாத‌க‌மாக‌ சாட்சி அளித்த‌ன‌ர். ஆனாலும் நீதிப‌திக‌ள் நிறைய‌ விஷ‌ய‌ங்க‌ளில் திருப்தி அடைய‌வில்லை. 27 நாட்க‌ள் விசார‌ணை முடிந்த‌பின் மே 5, 1945 அன்று தீர்ப்பு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

வ‌டிவேலு, நாக‌லிங்க‌ம், ஆரிய‌வீர‌சேன‌ன், ராஜாபாத‌ர் ஆகியோர் கொலை, கொலைக்கான‌ ச‌தி ஆகிய‌வ‌ற்றில் குற்ற‌வாளிக‌ளாக‌த் தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். தியாக‌ராஜ‌ பாக‌வ‌த‌ர், என்.எஸ்.கிருஷ்ண‌ன் - இவ‌ர்க‌ள் இருவ‌ரும் கொலைக்கான‌ ச‌தித் திட்டத்துக்கு உட‌ந்தையாக‌ இருந்த‌ன‌ர் என்று ஒன்ப‌து பேர் அட‌ங்கியிருந்த‌ நீதிப‌திக‌ள் குழுவில் ஆறு பேர் தெரிவித்திருந்த‌தால், ஆயுள் த‌ண்ட‌னை அளிக்க‌ப்ப‌ட்டு இருவ‌ரும் மீண்டும் சிறையில் அடைக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

72 கார‌ண‌ங்க‌ளை சுட்டிக்காட்டி ஜுலை 12, 1945 அன்று உய‌ர்நீதிம‌ன்ற‌த்தில் பாக‌வ‌த‌ரும், கிருஷ்ண‌னும் மேல்முறையீடு செய்த‌ன‌ர். மேல்முறையீடு ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட்டு அக்டோப‌ர் 22, 1945 அன்று வ‌ழ‌க்கு விசார‌ணைக்கு வ‌ந்த‌து. ஆனாலும் அக்டோப‌ர் 29 அன்று உய‌ர்நீதிம‌ன்ற‌ தீர்ப்பு, செஷ‌ன்ஸ் நீதிம‌ன்ற‌ம் அளித்த‌ ஆயுள் த‌ண்ட‌னையை உறுதி செய்த‌து. இத‌ற்குப்பின் ல‌ண்ட‌ன் ப்ரிவி க‌வுன்சிலில் (Privy Council) பாக‌வ‌த‌ரும், கிருஷ்ண‌னும் அப்பீல் செய்த‌ன‌ர்.




இந்த‌முறை இருவ‌ருக்காக‌வும் வாதாட‌ வ‌ந்த‌வ‌ர் வேலூர் எல்.எத்திராஜ். பாக‌வ‌த‌ரும், கிருஷ்ண‌னும் ல‌ட்சுமிகாந்த‌னின் சில‌ எதிரிக‌ளை ந‌வ‌ம்ப‌ர் 7, 1944 அன்று ஒற்றைவாடை தியேட்ட‌ரில் ச‌ந்தித்து கொலைக்காக‌ ப‌ணம் கொடுத்த‌ன‌ர் என்று பிராசிக்யூஷ‌ன் த‌ர‌ப்பில் கூற‌ப்ப‌ட்டிருந்த‌து. ஆனால் சாட்சிய‌த்தில், ச‌தித் திட்ட‌ம் தீட்டிய‌ தின‌ம் ந‌வ‌ம்ப‌ர் 7 என்றும், குற்ற‌ப் ப‌த்திரிக்கையில் ந‌வ‌ம்ப‌ர் 8 என்றும் குறிப்பிட‌ப்ப‌ட்டிருந்த‌தை சுட்டிக் காட்டினார் எத்திராஜ். மேலும் அப்ரூவ‌ரான‌ ஜெயான‌ந்த‌ம் கிட்ட‌த‌ட்ட‌ ஆறு வித‌மான‌ வாக்குமூல‌ம் கொடுத்திருந்தார். அதில் ஒவ்வொன்றும் ம‌ற்றொன்றுக்கு ரொம்ப‌வே முற‌ண்ப‌ட்டிருந்த‌தையும் சுட்டிக் காட்டினார் எத்திராஜ். ச‌தித் திட்ட‌ம் தீட்டிய‌தாக‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌ ந‌வ‌ம்ப‌ர் 7 முன்பே, அக்டோப‌ர் 19ம் தேதிய‌ன்று ல‌ட்சுமிகாந்த‌னைக் கொல்ல‌ முய‌ற்சி ந‌ட‌ந்த‌தையும் நிரூபித்தார் எத்திராஜ். இப்ப‌டி ப‌டிப்ப‌டியாக‌ செஷ‌ன்ஸ் கோர்ட் வ‌ழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் இந்த‌ வ‌ழ‌க்கில் விட்டிருந்த‌ நிறைய‌ ஓட்டைக‌ளை எத்திராஜ் த‌ன் திற‌மையால் அடைத்தார்.

தீர்ப்ப‌ளிக்கும் நாள் வ‌ந்த‌து. தீர்ப்பின் சாராம்ச‌ம் இதுதான், "அப்ரூவ‌ர் ஜெயான‌ந்த‌த்தின் வாக்குமூல‌ம் நிரூப‌ண‌மாக‌வில்லை. அத‌னால் ஜெயான‌ந்த‌த்தின் வாக்குமூல‌த்தை வைத்து பார்க்கும்போது தியாக‌ராஜ‌ பாக‌வ‌த‌ரையும், என்.எஸ்.கிருஷ்ண‌னையும் த‌ண்டிப்ப‌து நியாய‌மாகாது". இருவ‌ரும் விடுத‌லை ஆனார்க‌ள். ஏற‌க்குறைய‌ 30 மாத‌ங்க‌ள்.....ஆம், இர‌ண்ட‌ரை வ‌ருட‌ங்க‌ள் சிறையில் க‌ழித்த‌ பிற‌கு!

#சிறையில் இருந்து வ‌ந்த‌ பின்பு பாக‌வ‌த‌ரின் திரையுல‌க‌ வாழ்க்கை ச‌ரிந்து போன‌து. திராவிட‌க் க‌ருத்துக‌ளை ச‌முதாய‌ சீர்திருத்த‌ ப‌ட‌ங்க‌ளாக‌ ம‌க்க‌ள் பார்க்க‌த் தொட‌ங்கிய‌ கால‌ம‌து. பாக‌வ‌த‌ரின் பாட‌ல்க‌ள் நிறைந்த‌ மென் ப‌ட‌ங்க‌ள் எடுப‌டாம‌ல் போன‌து. த‌ன் இறுதிக் கால‌த்தில் ஆண்ட‌வ‌னிட‌‌த்தில் மிகுந்த‌ ப‌க்தி கொண்டு கோயில்க‌ளில் ம‌ட்டுமே பாடி, ஏழ்மையில் மூழ்கி ம‌றைந்தார். த‌ன்னைப் ப‌ற்றிக் குறிப்பிட்டு பாக‌வ‌த‌ர் சொன்ன‌து "என்னைப் போல் வாழ்ந்த‌வ‌னும் இல்லை, என்னைப் போல் தாழ்ந்த‌வ‌னும் இல்லை"

#இத‌ற்கு நேர்மாறாக‌ சிறையில் இருந்து வ‌ந்த‌ பின்பு என்.எஸ்.கே ப‌ல‌ ப‌ட‌ங்க‌ளில் ந‌டித்து புக‌ழின் உச்சியைத் தொட்டார். என்.எஸ்.கிருஷ்ண‌ன்-டி.ஏ. ம‌துர‌ம் ந‌கைச்சுவை காட்சிக‌ள் இருக்கிற‌தா என்று தெரிந்துகொண்ட‌ பின்பே ப‌ட‌ம் பார்க்கும் அள‌வுக்கு, ம‌க்க‌ளின் ம‌ன‌தில் இட‌ம் பெற்றார் என்.எஸ்.கே.

#சிறையிலிருந்து விடுதலையான‌பின் நிறைய‌ ஊர்க‌ளில் என்.எஸ்.கேவுக்கு விழா எடுத்தார்க‌ள். ஜுலை 30, 1947 அன்று திருவ‌ல்லிக்கேணியில் ந‌ட‌ராஜா க‌ல்விக் க‌ழ‌க‌ம் ந‌ட‌த்திய‌ பொதுக்கூட்ட‌த்தில் ப‌ம்ம‌ல் ச‌ம்பந்த‌ முத‌லியார் என்.எஸ்.கேவுக்கு "க‌லைவாண‌ர்" என்ற‌ ப‌ட்ட‌ம் சூட்டி, "க‌லைவாண‌ர்" என்று பொறிக்க‌ப்ப‌ட்ட‌ வெள்ளிக் கேட‌ய‌த்தையும் அளித்தார்.

ல‌ட்சுமிகாந்த‌ன் கொலை வ‌ழ‌க்கு

எல்லா நாளைப்போல‌வே இன்றும் காலை எழுந்து, ஒரு கையில் காபியும், இன்னொரு கையில் செய்தித்தாளையும் எடுத்துப்பார்க்க‌, முத‌ல் ப‌க்க‌த்திலேயே "ர‌ஜினியும், வ‌டிவேலுவும் கொலை வ‌ழ‌க்கில் கைது!" என்று இருந்தால் உங்க‌ளுக்கு எப்ப‌டி இருக்கும்? குறைந்த‌ப‌ட்ச‌ம், புருவ‌ங்க‌ள் உய‌ர்ந்து, க‌ண்க‌ள் அக‌ல‌மாகி, கோப்பையில் இருந்து காபி சிறிது சிந்தி செய்தித்தாளில் ப‌ட்டு, உங்க‌ளுக்கு புரையேறும் அல்ல‌வா. ஏற‌க்குறைய‌ இதே நிலைதான் ஏற்ப‌ட்ட‌து ந‌வ‌ம்ப‌ர் 28, 1944 அன்று செய்தித்தாள் ப‌டித்த‌வ‌ர்க‌ளுக்கு.

ந‌வ‌ம்ப‌ர் 27, 1944 - இன்று சினிமாவில் இருக்கும் மூத்த‌ க‌லைஞ‌ர்க‌ள் யாராலும் ம‌ற‌க்க‌ முடியாத‌ நாள் இது. இந்த‌ நாளில்தான் அன்றைய‌ சூப்ப‌ர் ஸ்டார் எம்.கே.தியாக‌ராஜ‌ பாக‌வ‌த‌ரும், ந‌கைச்சுவை ந‌டிப்பில் பிராத‌ன‌ ந‌டிகராக‌ இருந்த‌ என்.எஸ்.கிருஷ்ண‌னும் ல‌ட்சுமிகாந்த‌ன் கொலை வ‌ழ‌க்கிற்காக‌ கைது செய்ய‌ப்ப‌ட்டார்க‌ள்.


யார் இந்த‌ ல‌ட்சுமிகாந்த‌ன்?

ஒரு வ‌ழ‌க்க‌றிஞ‌ர் ஆக‌வேண்டும் என்ற‌ நியாய‌மான‌ ஆசை கொண்டிருந்த‌வ‌ர்தான் ல‌ட்சுமிகாந்த‌ன். ஆனால் குடும்ப‌ச் சூழ்நிலை கார‌ண‌மாக‌ அவ‌ரால் ச‌ட்ட‌ம் ப‌டிக்க‌ இய‌லாம‌ல் போன‌து. ஆனாலும் ச‌ட்ட‌ம் ப‌ற்றிய‌ நிறைய‌ விஷ‌ய‌ங்க‌ளை அறிந்திருந்தார். ச‌ட்ட‌த்தின் உத‌வியால் ஒரு "ட‌வுட்"ஆக‌வே (Tout - ப‌ண‌த்திற்காக‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர்க‌ளுக்கு கேஸ் பிடித்து த‌ருவ‌து) வாழ்க்கையில் ச‌ம்பாதிக்க‌ ஆர‌ம்பித்தார்.

ஒரு ப‌த்திர‌த்தில் பொய் கையெழுத்திட்ட‌த‌ற்காக‌ ஃபோர்ஜ‌ரி வ‌ழ‌க்கில் கைது ப‌ண்ணி, போலீஸார் ல‌ட்சுமிகாந்த‌னை ராஜ‌முந்திரியில் உள்ள‌ சிறைச்சாலைக்கு, ர‌யில் மூல‌ம் அழைத்துச் சென்ற‌போது, ர‌யிலில் இருந்து குதித்துவிட்டார். பின்பு ஏற்ப‌ட்ட‌ தொட‌ர் விசார‌ணையில் இவ‌ர் ப‌ல‌ குற்ற‌வாளிக‌ளோடு தொட‌ர்பு கொண்டிருப்ப‌து தெரிய‌வ‌ந்த‌து. த‌ப்பித்த‌ சில‌ நாட்க‌ளிலேயே மீண்டும் போலீஸாரிட‌ம் வ‌ச‌மாக‌ மாட்டிக்கொள்ள‌, இம்முறை அந்த‌மான் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்க‌ப்ப‌ட்டார். பின்பு விடுத‌லையாகி மீண்டும் ம‌த‌றாஸுக்கு வ‌ந்த‌போது அவ‌ருக்கு தோன்றிய‌ ஒரே எண்ண‌ம், ஒரு ப‌த்திரிக்கை ஆர‌ம்பிப்ப‌‌து.

ந‌ய‌ன்தாரா ந‌டித்த‌ ச‌மீப‌ கால‌ ப‌ட‌ங்க‌ளில் வெற்றிக‌ர‌மாக‌ ஓடிய‌ பட‌ம் என்ன‌?..........அடுத்த‌ வ‌ரி ப‌டிக்காம‌ல் ச‌ற்று யோசியுங்க‌ள். ஆத‌வ‌ன்? (காமெடி ப‌ண்ணாதீங்க‌:)), வில்லு? ஏக‌ன்? ச‌த்ய‌ம்? குசேல‌ன்? ஹூஹூம்....ப‌தில்...யார‌டி நீ மோகினி. ஆனாலும் எப்ப‌டி இன்னும் ந‌ய‌ன்தாராவால் லைம்லைட்டில் இருக்க‌முடிகிற‌து? சிம்பிள், எப்போதும் அவ‌ரைப் ப‌ற்றிய‌ கிசுகிசு வ‌ந்துகொண்டேயிருக்கிற‌து. இன்று வேண்டுமானால் சினிமாவில் நீடித்து இருப்ப‌த‌ற்கு இந்த‌ கிசுகிசுக்க‌ள் பெரும் உத‌வி செய்ய‌லாம். ஆனால் 1940க‌ளில் கிசுகிசு என்றாலே ஒருவித‌ அச்ச‌த்துட‌னே இருந்த‌ன‌ர் ந‌டிக‌, ந‌டிகைக‌ள்.

இந்த‌ அச்ச‌த்தை ந‌ன்றாக‌ ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டார் ல‌ட்சுமிகாந்த‌ன். "சினிமா தூது" என்றொரு மூன்றாம்த‌ர‌ ம‌ஞ்ச‌ள் ப‌த்திரிக்கையை ஆர‌ம்பித்து, அப்போது புக‌ழின் உச்சியில் இருந்த‌ அனைத்து க‌லைஞ‌ர்க‌ளின் அந்த‌ர‌ங்க‌ வாழ்க்கையைப் ப‌ற்றி எழுத‌ ஆர‌ம்பித்தார். ஆர‌ம்பித்து வைத்த‌ இந்த‌ சுவார‌ஸ்ய‌ம் ம‌க்க‌ளின் ம‌த்தியில் ப‌சியெடுத்த‌ க‌ட‌ல் போல‌ ப‌ர‌வ‌, சுனாமி வ‌ந்த‌து என்ன‌வோ க‌லைஞ‌ர்க‌ளின் வாழ்க்கையில். வாரா வார‌ம் இப்ப‌த்திரிக்கையில் த‌வ‌றாது இட‌ம்பெற்ற‌வ‌ர்க‌ள், எம்.கே.தியாக‌ராஜ‌ பாக‌வ‌த‌ர், என்.எஸ்.கிருஷ்ண‌ன், திரைப்ப‌ட‌ இய‌க்குன‌ர் ஸ்ரீராமுலு நாயுடு ம‌ற்றும் டி.ஆர்.ராஜ‌குமாரி. ப‌ல‌ க‌லைஞ‌ர்க‌ள் ப‌ண‌ம் என்னும் உண‌வால் ல‌ட்சுமிகாந்த‌னின் வாயை அடைத்த‌ன‌ர், அடைத்த‌வ‌ரையெல்லாம் தூ‌ற்றி எழுத‌ ல‌ட்சுமிகாந்த‌னின் பேனாவுக்கு கூட‌ ம‌ன‌து வ‌ராது.

இவ‌ரின் எழுத்தால் வெறுத்துப்போன‌ பாக‌வ‌த‌ர், என்.எஸ்.கே ம‌ற்றும் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர், அப்போது ம‌த‌றாஸ் க‌வ‌ர்ன‌ராக‌ இருந்த‌ ஆர்த‌ர் ஓஸ்வால்ட் ஜேம்ஸ் ஹோப்பிட‌ம் (Arthur Oswald James Hope), "சினிமா தூது" ப‌த்திரிக்கை ப‌ற்றி விரிவாக‌ கூறி, அத‌னுடைய‌ ப‌திப்பை ர‌த்து செய்ய‌வேண்டும் என்றொரு ம‌னு ச‌ம‌ர்ப்பித்த‌ன‌ர். "தூது" வ‌ருவ‌தும் நின்ற‌து. ஆனால் ம‌ஞ்ச‌ள் ப‌த்திரிக்கைக்கு ம‌க்க‌ளிட‌ம் கிடைத்த‌ வ‌ர‌வேற்பை இழ‌க்க‌ ல‌ட்சுமிகாந்த‌ன் த‌யாராக‌ இல்லை. எப்ப‌டியாவ‌து மீண்டும் எழுத‌ ஆர‌ம்பிக்க‌வேண்டும் என்ற‌ வெறி கொண்டிருந்த‌ நேர‌ம‌து.

அப்போது லிங்கிச்செட்டித் தெருவில் "ஹிந்து நேச‌ன்" என்றொரு ப‌த்திரிக்கையை அன‌ந்த‌ய்ய‌ர் என்ப‌வ‌ர் ந‌ட‌த்திக்கொண்டிருந்தார். வெகு சுமாராக‌ போய்க்கொண்டிருந்த‌ இந்த‌ ப‌த்திரிக்கைதான் ல‌ட்சுமிகாந்த‌னுக்கு, வீட்டில் யாருமில்லாத‌போது ச‌ர்க்க‌ரை வியாதிக்கார‌ரின் க‌ண்ணில் பட்ட‌ இனிப்பு போல‌ ஆன‌து. ப‌ண‌த்தைக் கொடுத்தார். வேலை முடிந்த‌து. அடுத்த‌ இத‌ழ் வெளியான‌து, ப‌திப்பாசிரிய‌ர் அன‌ந்த‌ய்ய‌ர், ஆசிரிய‌ர் ல‌ட்சுமிகாந்த‌ன்! :D அடித்தால் வ‌ரும் ஸ்மைலியைப் போல் ப‌ல் இளித்த‌ப்டியே மீண்டும் உலாவ‌ர‌த் தொட‌ங்கிய‌து பிர‌ப‌ல‌ங்க‌ளின் அந்த‌ர‌ங்க‌ வாழ்க்கை!


ந‌வ‌ம்ப‌ர் 8, 1944

வேப்பேரியில் உள்ள‌ த‌ன் ந‌ண்ப‌ரும் வ‌ழ‌க்க‌றிஞ‌ருமான‌ ந‌ற்குண‌ம் என்ப‌வ‌ரை ச‌ந்தித்துவிட்டு, புர‌சைவாக்க‌த்தில் உள்ள‌ த‌ன் வீட்டுக்கு ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் திரும்பிக் கொண்டிருந்தார் ல‌ட்சுமிகாந்த‌ன். திடீரென்று சைக்கிள் ரிக்ஷா பின்ப‌க்க‌மாக‌ சாய்ந்து விழுந்த‌து! ரிக்ஷாவின் பின்புற‌ம் இருவ‌ர் நின்று கொண்டிருந்த‌ன‌ர் - வ‌டிவேலு & நாக‌லிங்க‌ம் (வ‌டிவேலுவுக்கும் ல‌ட்சுமிகாந்த‌னுக்கும் வீடு காலி செய்யும் விஷ‌ய‌த்தில் பிர‌ச்னை ஏற்ப‌ட்டு ஏற்க‌ன‌வே முன்விரோத‌ம் இருந்த‌து).

இந்த‌ நேர‌த்தில் ம‌ல்லாந்து விழுந்து கிட‌ந்த‌ ல‌ட்சுமிகாந்த‌னை வ‌டிவேலு க‌த்தியால் குத்தினான். திகைத்து நின்ற‌ ரிக்ஷாக்கார‌ரை நாக‌லிங்க‌ம் அடித்து விர‌ட்டினான். பின்பு த‌ன் ப‌ங்குங்கு நாக‌லிங்க‌மும் கையிலிருந்த‌ பேனாக‌த்தியால் ல‌ட்சுமிகாந்த‌னை குத்தினான். வ‌ந்த‌ வேலை முடிந்த‌வுட‌ன் அங்கிருந்து த‌ப்பித்து ஓடின‌ர் இருவ‌ரும். ஆனால் ல‌ட்சுமிகாந்த‌ன் சாக‌வில்லை........

முடிவு அடுத்த‌ (பிப்ர‌வ‌ரி 25, 2010) ப‌திவில்.......

Tuesday, February 16, 2010

இந்திய‌ சினிமாவின் த‌ந்தை

இந்திய‌ அர‌சு ஒவ்வொரு வ‌ருட‌மும் திரைப்ப‌ட‌த்துறையில் வாழ்நாள் சாத‌னையாள‌ர் என்று ஒருவ‌ரைத் தேர்ந்தெடுத்து "தாதா சாஹேப் பால்கே" விருது கொடுப்ப‌தை நாம் அறிவோம். "தாதா சாஹேப் பால்கே" என்ப‌வ‌ர் யார்? ஏன் இந்த‌ விருது திரைப்ப‌ட‌த்துறையின் பார‌த‌ ர‌த்னா என்னும் அள‌வுக்கு ம‌திக்க‌ப்ப‌டுகிற‌து?



Dhundiraj Govind Phalke - இதுதான் இவ‌ரின் இய‌ற்பெய‌ர். நாசிக் ந‌க‌ரிலிருந்து 30 கிமீ தூர‌த்தில் இருக்கும் திரிம்பகேஷ்வ‌ர் என்னும் ஊரில் ஏப்ர‌ல் 30, 1870 அன்று பிற‌ந்தார். த‌ந்தை ஒரு ச‌மஸ்கிருத‌ ப‌ண்டித‌ர். பரோடாவில் க‌லா ப‌வ‌னில் ப‌டித்த‌ இவ‌ர், அங்கு சிற்ப‌ம், ஒவிய‌ம் ம‌ற்றும் புகைப்ப‌ட‌க் க‌லைக‌ளை பயின்றார். கோத்ராவில் ஒரு புகைப்ப‌ட‌க் க‌லைஞராக‌ வாழ்க்கையைத் துவ‌ங்கிய‌ பால்கே, வெற்றியின் முத‌ல் ப‌டியை மிதிக்க‌ வேண்டிய‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் அமைந்த‌து. ஆம், தோல்விதான்....ஒரு வ‌கையான‌ ப்ளேக் நோயால் அவ‌ருடைய‌ ம‌னைவியும், குழ‌ந்தையும் பால்கேவின் எதிர்கால‌ சாத‌னைக‌ளைப் பார்க்காம‌லேயே நிர‌ந்த‌ர‌மாக‌ உற‌ங்க‌ச் சென்றன‌ர்.

அத‌ன்பின் இந்திய‌ தொல்பொருள் ஆராய்ச்சித்துறையில் சில‌ நாட்க‌ள், ஒவிய‌ர் ராஜா ர‌விவ‌ர்மாவிட‌ம் உத‌வியாள‌ராக‌ சில‌ நாட்க‌ள். ஆனால் ப‌ணியில் முழு திருப்தி அடையாத‌ பால்கே, ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து ஒரு அச்ச‌க‌த்தை ஆர‌ம்பித்தார். ஆர‌ம்பித்த‌ சில‌ நாட்க‌ளிலேயே ந‌ண்ப‌ர்க‌ளிடையே க‌ருத்துவேறுபாடு எழ‌, அச்ச‌க‌த்திலிருந்து வில‌கினார். அத‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம் "The Life of Christ" என்னும் ஒரு மெள‌ன‌ப்ப‌ட‌ம். முத‌ல்முறையாக‌ பால்கேவின் க‌வ‌ன‌ம் சினிமா மீது திரும்பிய‌து.



இயேசு கிறிஸ்து வாழ்க்கையை பிர‌திப‌லித்த‌ அந்த‌ ப‌ட‌ம்தான் பால்கேவை இந்திய‌ சினிமாவுக்கு ஒரு பிள்ளையார் சுழி போட‌வைத்தது. நாமும் இந்திய‌ க‌ட‌வுள்க‌ளைப் ப‌ற்றி ப‌ட‌ம் எடுக்க‌லாமே என்ற‌ எண்ண‌ம் தோன்ற‌, 1912ல் "ராஜா ஹரிச்ச‌ந்திரா" பிற‌ந்தார். பிற‌ந்து, த‌வ‌ழ்ந்து, விழுந்து எழுந்து, அன்றைய‌ பாம்பேயில் இருந்த‌ காரோனேஷன் சினிமாவில் மே 3, 1913 அன்று "ராஜா ஹ‌ரிச்ச‌ந்திரா" அங்கு சூழ்ந்திருந்த‌ ம‌க்க‌ள் க‌ட‌லில், ராஜ‌ந‌டை போட‌ ஆர‌ம்பித்தார். ஆம், மே 3, 1913 ம‌க்க‌ள் க‌ண்டு க‌ளித்த‌, முத‌ல் இந்திய‌ சினிமா வெளியான‌ நாள், இந்த‌ நாளை இந்திய‌ சினிமாவின் பிற‌ந்த‌ நாள் என்றே கூற‌லாம். பட‌த்தைப் பார்த்த‌ அந்த‌ நாற்ப‌து நிமிட‌ங்க‌ளும், ம‌க்க‌ள் ஒரு காண‌முடியாத‌ அதிச‌ய‌த்தை க‌ண்ட‌, வார்த்தைக‌ளில் விவ‌ரிக்க‌முடியாத‌ ஒருவித‌மான உண‌ர்ச்சியில் இருந்த‌ன‌ர் என்ப‌தே உண்மை.

"ராஜா ஹ‌ரிச்ச‌ந்திரா"வின் வெற்றி அப்போது, இருக்கும் ப‌ண‌த்தை வைத்துக்கொண்டு என்ன‌ செய்ய‌ என்று முழித்துக்கொண்டிருந்த‌, பாம்பேயில் இருந்த‌ ஐம்பெரும் செல்வ‌ந்த‌ர்க‌ளை ஈர்க்க‌, அவ‌ர்க‌ள் பால்கேவை தொட‌ர்புகொண்ட‌ன‌ர். பால்கேவும் அவ‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து "ஹிந்துஸ்தான் பிலிம்ஸ்" க‌ம்பெனியை ஆர‌ம்பித்தார். 1918ல் "ஸ்ரீ கிருஷ்ண‌ ஜென்மா", 1919ல் "க‌லிய‌ ம‌ர்த‌ன்" போன்ற‌ ப‌ட‌ங்க‌ளை எடுத்த‌ பால்கே, எவ்வாறு க‌லையை மேலும் மெருகேற்ற‌லாம் என்று யோசித்துக்கொண்டிருக்க‌, ம‌ற்ற‌ ஐவ‌ரும் எவ்வாறு திரைப்ப‌ட‌த்தின் மூல‌ம் அடுத்த‌ இரண்டு, மூன்று த‌லைமுறைக்கு சொத்து சேர்க்க‌லாம் என்று யோசித்துக்கொண்டிருந்த‌ன‌ர்.

ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் ஆர‌ம்பித்த‌ அச்ச‌க‌ அனுப‌வ‌ம் மீண்டும் த‌ன் வாழ்வில் ந‌ட‌ப்ப‌து போன்ற‌ நிலைக்குத் த‌ள்ள‌ப்ப‌ட்ட‌ பால்கே "ஹிந்துஸ்தான் பிலிம்"ஸில் இருந்து வெளியேறி, சினிமாவில் இருந்தே வெளியேறுவ‌தாக‌ அறிவித்தார். ஆனால் வெகு சில‌ நாட்க‌ளிலேயே ச‌ச்சின் டெண்டுல்க‌ர் இல்லாத‌ இந்திய‌ அணியைப் போல‌, பால்கே இல்லாம‌ல் "ஹிந்துஸ்தான் பிலிம்ஸ்" த‌ள்ளாட‌ ஆர‌ம்பித்த‌து. யாரால் வெளியேற‌ வேண்டிய‌ நிலை வ‌ந்த‌தோ, அதே ந‌ப‌ர்க‌ளால் மீண்டும் பால்கே ஹிந்துஸ்தான் பிலிம்ஸிற்கு வ‌ருமாறு கேட்டுக்கொள்ள‌ப்ப‌ட்டார். அத‌ன்பின் 1923ல் "சேது ப‌ந்த‌ன்" வெளிவ‌ந்த‌து.


இந்த‌ இடைப்ப‌ட்ட‌ கால‌த்தில் பேசும் ப‌ட‌ங்க‌ளுக்கு வ‌ர‌வேற்பு கிடைக்க‌ ஆர‌ம்பித்த‌து. அத‌னால், 1923ல் வெளிவ‌ந்த‌ "சேது ப‌ந்தன்" பால்கேவின் க‌டைசி மெள‌ன‌ப்ப‌ட‌ம் என்று பெய‌ர் பெற்று, பிற்காலத்தில் ராஜ் க‌பூர்க‌ளும், சிவாஜிக‌ளும், க‌ம‌ல்க‌ளும் தெரிந்துகொள்ள‌ட்டும் என்று வ‌ர‌லாற்றில் சென்று அம‌ர்ந்துகொண்ட‌து. பின்பு பிண்ண‌ணிக் குர‌ல்க‌ள் ப‌திவு செய்து 1932ல் மீண்டும் "சேது ப‌ந்த‌"னை வெளியிட்டார் பால்கே. அத‌ன் பின் 1937ல் வெளிவ‌ந்த‌ "க‌ங்காவ‌த‌ர‌ன்" ப‌ட‌மே பால்கேவின் க‌டைசிப்ப‌ட‌ம். "க‌ங்காவ‌த‌ர‌"னுக்கு பிற‌கு சினிமாவில் இருந்து ஒதுங்கி நாசிக் ந‌க‌ரில் த‌ன் முதுமை கால‌த்தைக் க‌ழித்த‌ பால்கேவுக்கு , 73 வ‌ய‌தில், பிப்ர‌வ‌ரி 16, 1944 அன்று, க‌ட‌வுள் "The End" கார்ட் போட‌ வேண்டிய‌ நேர‌ம் வ‌ந்த‌து. ஆம், இன்று தாதா சாஹேப் பால்கேவின் நினைவு தின‌ம்.

பி.கு 1: ஏன் என்று தெரிய‌வில்லை, "தாதா சாஹேப் டோர்ன்" என்ற‌ழைக்க‌ப்ப‌டும் "ராம‌ச்ச‌ந்திர‌ கோபால்" 1912லேயே "புண்ட்லிக்" (22 நிமிட‌ங்க‌ள்) என்ற‌ திரைப்ப‌ட‌த்தை அதே காரோனேஷன் சினிமாவில் வெளியிட்டும் இன்று வ‌ரை தாதா சாஹேப் பால்கேதான் (ராஜா ஹ‌ரிச்ச‌ந்திரா ‍ 1913) இந்திய‌ சினிமாவின் த‌ந்தை என்று குறிப்பிட‌ப்ப‌டுகிறார். முத‌ன் முத‌லாக செய்தித்தாளில் விள‌ம்ப‌ர‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌ இந்திய‌ சினிமாவும் "புண்ட்லிக்"தான். மே 25, 1912ல் வெளியான‌ "டைம்ஸ் ஆஃப் இந்தியா"வில், விள‌ம்ப‌ர‌ம் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

பி.கு 2: பால்கேவை கெளர‌விக்கும் வித‌த்தில் ம‌த்திய‌ அர‌சு, திரைப்ப‌ட‌த்துறையில் வாழ்நாள் சாத‌னையாள‌ர் என்று ஒவ்வொரு வ‌ருட‌மும் ஒருவ‌ரைத் தேர்ந்தெடுத்து 1969 முத‌ல் "தாதா சாஹேப் பால்கே" விருது வ‌ழங்கி வ‌ருகிற‌து. முத‌ல் விருது பெற்ற‌வ‌ர் ஆந்திராவைச் சேர்ந்த‌ தேவிகா ராணி. த‌மிழ் நாட்டிலிருந்து இந்த‌ விருதை வாங்கிய‌வ‌ர் ந‌டிக‌ர் தில‌க‌ம் சிவாஜி க‌ணேச‌ன் (1996ல்) ம‌ட்டுமே. அதுவும் ராஜ் கபூர், அசோக் குமார், ல‌தா ம‌ங்கேஷ்க‌ர், நாகேஸ்வ‌ர‌ ராவ், திலீப் குமார், ராஜ் குமார் என்று ப‌ல‌ருக்கும் வ‌ழ‌ங்கிய‌ பின்புதான் த‌மிழ‌க‌த்திலிருந்து கூக்குர‌ல்க‌ள் கேட்க‌ ஆர‌ம்பித்தது. ம‌த்திய‌ அர‌சும் ச‌ரி வ‌ம்பு வேண்டாம் என்று ந‌டிப்பின் இம‌ய‌த்துக்கு விருது த‌ந்து விருதுக்கு பெருமை சேர்த்த‌து.

பி.கு 3: 2009ல் ப‌ரேஷ் மோகாஷி இய‌க்கிய‌ "ஹரிச்ச‌ந்திர‌ச்சி ஃபேக்ட‌ரி" (Harishchandrachi Factory) என்னும் மராத்தி மொழி திரைப்ப‌ட‌ம்தான் இந்தியாவிலிருந்து, 'சிற‌ந்த‌ வெளிநாட்டு மொழி திரைப்ப‌ட‌'த்திற்கான‌ ஆஸ்க‌ர் விருதுக்கு ப‌ரிந்துரைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

Sunday, February 14, 2010

யாருக்கும் தெரியாமல்...

டிஸ்கி: நானே ஒத்துக்க‌றேங்க‌, கொஞ்ச‌ம் கெள‌த‌ம் ப‌ட‌ ஸ்மெல் அடிக்கும். இருந்தாலும் க‌ர்ச்சீப் க‌ட்டிகிட்டு க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ('க‌'னாவுக்கு, 'க‌'னாவுக்கு, 'க‌'னா...எப்பூடி!) ப‌டிச்சிடுங்க‌. ஓட்டெல்லாம் போட‌ணும்னு அவ‌சிய‌ம் இல்ல‌, க‌மெண்ட் போட்டாகூட‌ போதும். என்னோட‌ எழுத்தை திருத்திக்க‌ற‌துக்கு உப‌யோக‌மா இருக்கும்:)


திங்க‌ள் காலை 8:42

அவ‌ளைப் பார்த்த‌வுட‌ன்....ம‌ன்னிக்க‌வும்....அதைப் பார்த்த‌வுட‌ன் சுல‌ப‌மாக‌த் தெரிந்த‌து, இது த‌ற்கொலை அல்ல‌, கொலைதான் என்று. க‌ண்க‌ள் இர‌ண்டும் அக‌ல‌மாக‌ விரிந்துகிட‌க்க‌, ஹால் சோபாவில் இதோ இந்த‌ வார்த்தையைப் போல‌ து-லை-க‌-ந் கிட‌ந்தாள்...ம‌றுப‌டியும் ம‌ன்னியுங்க‌ள்..கிட‌ந்த‌து. பார்த்த‌வுட‌ன் இது கொலைதான் என்று சொல்வ‌த‌ற்கு நீங்க‌ள் என்னைப் போல‌ ராம‌ச்ச‌ந்திர‌ன் ஐபிஎஸ்ஸாக‌ இருக்க‌ வேண்டிய‌தில்லை. நிறைய‌ த்ரில்ல‌ர் ப‌ட‌ங்க‌ளை பார்த்திருந்தாலே போதுமான‌து.

விதவித‌மான‌ ஆங்கிளில் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தன‌ர், ஸ்மைல் செய்திருந்தால் அழ‌காக‌த்தான் இருந்திருப்பாள். வீட்டை சுற்றிப் பார்த்தேன், எதுவும் திருடு போன‌த‌ற்கான‌ அடையாள‌ம் இல்லை. குறைந்த‌ப‌ட்ச‌ம் ப‌டுக்கை அறை பீரோகூட‌ திற‌க்க‌வில்லை. ஹாலிலும் எதுவும் க‌லைந்து இருக்க‌வில்லை. அவ‌ள் (ஒரு தேவ‌தையை அது என்று சொல்ல‌ என்னால் இய‌ல‌வில்லை, ஆம்...இற‌ந்தாலும் அவ‌ள் தேவ‌தை போல‌த்தான் இருந்தாள்) அம‌ர்ந்திருந்த‌ சோபா ம‌ட்டும்தான் கீழே விழுந்திருந்த‌து.

நான் அவ‌ள் அது என்று சினிமா டைட்டிலைப்போல் சொல்லிக்கொண்டேயிருந்தால் உங்க‌ளுக்கு விவ‌ர‌ம் தெரிய‌வேண்டாமா? ம், சொல்கிறேன்....ஒரு நிமிட‌ம், அவ‌ளை போஸ்ட்மார்ட்ட‌த்திற்கு அனுப்பிவிட்டு வ‌ருகிறேன்......இருங்க‌ள், சில‌ ஃபார்மாலிட்டீஸ் வேறு இருக்கிற‌து......மாலை சொல்கிறேனே.



மாலை 4:00

ம், இப்போது சொல்கிறேன்......அது சாம‌ர்ஸ் அபார்ட்மெண்ட்ஸின் (Charmers Apartments) நான்காவ‌து மாடி, இந்த‌ ஃப்ளாட்டில் வ‌சிக்கும் சுந‌ந்தாதான் கொலை செய்ய‌ப்ப‌ட்டிருக்கிறாள். சுந‌ந்தா கால் செண்ட‌ரில் ப‌ணிபுரிப‌(ந்த‌)வ‌ள். 24 வ‌ய‌து, சினிமா ஹீரோயின் போல‌ இல்லாவிட்டாலும், பார்க்கும் யாரையும் வ‌சீக‌ரிக்க‌க்கூடிய‌, அழ‌கு, அள‌வு, உய‌ர‌ம் அனைத்தும் கொண்ட‌வ‌ள். கொலை ந‌ட‌ந்த‌து நான் வ‌சிக்கும் ஏரியாவில் என்ப‌தால் நானே நேர‌டியாக‌க் க‌ள‌மிற‌ங்கியிருக்கிறேன்.

நான் என்றால்? அதான் முத‌ல் ப‌த்தியிலேயே சொன்னேனே, ச‌ரி விடுங்க‌ள், இத‌ற்காக‌ நீங்க‌ள் ம‌றுப‌டியும் முத‌ல் ப‌த்தி ப‌டிக்க‌வேண்டாம். நான் ராம‌ச்ச‌ந்திர‌ன் ஐபிஎஸ், அஸிஸ்டெண்ட் க‌மிஷ‌ன‌ர் ஆஃப் போலீஸ். சொல்வ‌த‌ற்கே கொஞ்ச‌ம் கூச்ச‌மாக‌த்தான் இருக்கிற‌து. முன்பெல்லாம் த‌மிழ் சினிமாவில் போலீஸை வைத்து காமெடி செய்வ‌தென்றால், க்ளைமேக்ஸில் ச‌ண்டை முடிந்த‌ பிற‌கு போலீஸார் வ‌ருவார்க‌ள். இப்போதேல்லாம் ஹீரோவை அஸிஸ்டெண்ட் க‌மிஷ‌ன‌ராக‌ காட்டி காமெடி செய்கிறார்க‌ள்.

சமீப‌ நாட்க‌ளில் ஏன் அபார்ட்மெண்ட்டுக‌ளில் திருட்டு, கொலை போன்ற‌வை ச‌ர்வ‌சாதார‌ண‌மாக‌ நட‌க்கிற‌து? அக்க‌ம் ப‌க்க‌ம் இருப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் இருந்து ஒதுங்கியே இருப்ப‌துதான். திடீரென்று ஒரு உத‌வி தேவைப்ப‌ட்டால், ந‌ண்ப‌ர்க‌ளோ, உற‌வின‌ர்க‌ளோ....அப்புற‌ம்தான். முத‌லில் ப‌க்க‌த்து ஃப்ளாட்டில்/வீட்டில் குடியிருப்ப‌வ‌ர்க‌ளால்தான் உத‌வ‌ முடியும். நான் அறிவுரை கூற‌வில்லை, உங்க‌ள் ந‌ல்......இதோ அடாப்ஸி ரிப்போர்ட் வ‌ந்துவிட்ட‌து (நான் அவ‌ச‌ர‌ப்ப‌டுத்திய‌த‌ன் கார‌ண‌த்தால்). ம்...பெய‌ர், வ‌ய‌து, உய‌ர‌ம்...இதெல்லாம் என‌க்குத் தெரியும். இதோ...என‌க்கு வேண்டிய‌து, கொலையுண்ட‌ வித‌ம் - த‌லைய‌ணையை வைத்து முக‌த்தில் அழுத்தி மூச்சுத் திண‌ற‌ திண‌ற‌ சாக‌டித்திருக்கிருக்கிறான். ஆம், 'றான்'தான், ஒரு பெண் இப்ப‌டி கொலை செய்திருப்பாள் என்று என‌க்குத் தோன்ற‌வில்லை.

இர‌வு 9:15

இதுதான் அவ‌ள் ப‌ணிபுரிந்த‌ கால் செண்ட‌ர். பெய‌ர் கேட்காதீர்க‌ள், இப்போது அது முக்கிய‌மில்லை. ஒரு க‌ல்யாண‌ ம‌ண்ட‌ப‌ ஹாலை அங்க‌ங்கு பிரித்து கேபின்க‌ளால் நிர‌ப்பிய‌து போலிருந்த‌து அந்த‌ ஃப்ளோர். காலையிலேயே அபார்ட்மெண்ட்டில் உள்ள‌வ‌ர்க‌ளையெல்லாம் விசாரித்து முடித்துவிட்டேன். சுந‌‌ந்தாவின் டீமில் இருப்ப‌வ‌ர்க‌ளையெல்லாம் இப்போது விசாரிக்க‌வேண்டும். போலீஸ் உடையில் இல்லாம‌ல், அவ‌ர்க‌ளில் ஒருவ‌னைப்போல‌ சாதார‌ண‌மாக‌, க்ரே நிற‌ டிஷ‌ர்ட்டிலும், க‌றுப்பு நிற‌ ஜீன்ஸிலும் புகுந்திருந்தேன்.

நான் விசாரிப்ப‌த‌ற்கென்று த‌னி க‌ண்ணாடி அறையை ஒதுக்கியிருந்தார்க‌ள். உள்ளே பேசுவ‌து வெளியே கேட்காது. முத‌லில் அவ‌ர்க‌ளுடைய‌ இன்றைய‌ அட்டெண்டென்ஸை கேட்டேன். வ‌ந்த‌து. விநாய‌க், பாலாஜி, சுந்த‌ர், ராம்பாபு ஆகியோர் டூர் சென்றிருப்ப‌தால் லீவில் இருப்ப‌தாக‌க் குறிப்பிட‌ப்ப‌ட்டிருந்த‌து. உட‌ல் நிலை ச‌ரியில்லாத‌ கார‌ண‌த்தால் க‌ல்ப‌னா, ப்ரிய‌த‌ர்ஷினி, கிருஷ் ஆகியோர் வ‌ர‌வில்லை. முகேஷ் ஷ‌ர்மா...வ‌ர‌வில்லை, நோ இன்ஃப‌ர்மேஷ‌ன் என்றிருந்த‌து. ம்ம்...ஏன் நோ இன்ஃப‌ர்மேஷ‌ன்? போலீஸ்கார‌ன் புத்தி வேலை செய்ய‌ ஆர‌ம்பித்த‌து.....முகேஷ், உன்னை மைண்ட்ல‌ வெச்சுக்க‌றேன்.

பொறுமையாக‌ ஒவ்வொருவ‌ரையும் விசாரித்தேன். எல்லோரும் த‌ன்னுட‌ன் ப‌ணிபுரிந்த‌ ஒரு பெண் கொலை செய்ய‌ப்ப‌ட்டிருக்கிறாள் என்ற‌ அதிர்ச்சியைத்தான் வெளிப்ப‌டுத்தினார்க‌ளே த‌விர‌, என‌க்கு உப‌யோக‌மாக‌ ஒரு த‌க‌வ‌லும் கிடைக்க‌வில்லை. டீம் மெம்ப‌ர்ஸ் எல்லோரையும் விசாரித்தாகிவிட்ட‌து. இன்னும் டீம் லீட் ச‌ஞ்ச‌ய் ம‌ட்டுமே பாக்கி. ம‌ணி பார்த்தேன், 11:40. சஞ்ச‌ய் உள்ளே வ‌ர‌....

"ஹலோ ஸார், ஐ'ம் ச‌ஞ்ச‌ய்"

"ஹ‌லோ ச‌ஞ்ச‌ய், இந்நேர‌ம் உங்க‌ளுக்கு தெரிஞ்சிருக்கும், எல்லாரும் சொல்லியிருப்பாங்க‌, நான் ஏஸிபி ராம‌ச்ச‌ந்திர‌ன்"

"ஓ யா, சொன்னாங்க‌ ஸார், ஹ‌வ் கேன் ஐ ஹெல்ப் யூ?"

ச‌ம்பிர‌தாய‌ ம‌ற்றும் ச‌ந்தேக‌ கேள்விக‌ளைக் கேட்டேன். ஹூஹூம், ப‌தில்க‌ள் எல்லாமே க‌ட‌ந்த‌ இர‌ண்டு ம‌ணி நேர‌மாக‌ எல்லோரும் அரைத்த‌ அதே மாவுதான். ச‌ட்டென்று தோன்றிய‌து, கேட்டேன்.

"ச‌ஞ்ச‌ய், இங்க‌ முகேஷ்ங்க‌ற‌வ‌ர் யாரு?"

"யூ மீன் முகேஷ் ஷ‌ர்மா?"

"யெஸ்"

"முகேஷும் ஒரு டீம் லீட்தான் ஸார், என்னோட‌ ஃப்ரெண்டுதான்"

"அவ‌ர் இன்னைக்கு ஏன் வ‌ர‌லைன்னு உங்க‌ளுக்குத் தெரியுமா?"

"தெரிய‌ல‌ ஸார், இன்னைக்கு காலைல‌ ஒரு ப‌ட‌ம் போக‌லாம்னு ப்ளான் ப‌ண்ணியிருந்தோம், நைன் த‌ர்ட்டிக்கு நான் கால் ப‌ண்ணேன், ப‌ட் நாட் ரீச்ச‌பிள்னே வ‌ந்துகிட்டு இருந்த‌து. எங்கே போனான்னே தெரிய‌ல‌"

"ஆஃபிஸ்க்கும் இன்ஃப‌ர்ம் ப‌ண்ண‌ல‌, அதான் உங்க‌கிட்ட‌..."

சொல்லிக்கொண்டிருக்கும்போதே ச‌ஞ்சய்யின் மொபைலில் "ஆறரை கோடி பேர்க‌ளில் ஒருவ‌ன், அடியேன் த‌மிழ‌ன் நான் உங்க‌ள் ந‌ண்ப‌ன்" என்று ர‌ஹ்மான் பாட ஆர‌ம்பித்தார்.

"இருங்க‌ ஸார், ஏதோ புது ந‌ம்ப‌ரா இருக்கு, அட்டெண்ட் ப‌ண்ணிட்டு வ‌ர்றேன்" வெளியே கிள‌ம்ப் ச‌ஞ்ச‌ய் முய‌ற்சிக்க‌, ச‌ட்டென்று ஒரு பொறி அல்ல‌, தீப்ப‌ந்த‌மே த‌ட்டிய‌து.

"மிஸ்ட‌ர் ச‌ஞ்ச‌ய், இஃப் யூ டோண்ட் மைண்ட், நீங்க‌ இங்கேயே ல‌வுட்ஸ்பீக்க‌ர்ல‌ போட்டு பேச‌முடியுமா....ப‌ர்ச‌ன‌ல்னா ஓகே, நோ ப்ராப்ள‌ம், புது ந‌ம்ப‌ர்னு சொல்ல‌வேதான் கேக்குறேன், ப‌ட் ஐ வோன்ட் இன்ஸிஸ்ட் யூ"

"ஷ்யூர் ஸார், இட்ஸ் நாட் அட் ஆல் எ ப்ராப்ள‌ம்". ச‌ஞ்ச‌ய் ப‌ச்சை ப‌ட்ட‌னை அழுத்தி ல‌வுட்ஸ்பீக்க‌ரில் வைத்தான்.

"ஹலோ, சஞ்சய்! முகேஷ் பேச‌றேன்டா"

"ஏ, முகேஷ், எங்க‌டாயிருக்க‌? யார் ந‌ம்ப‌ர் இது?"

"மச்சான், நான் இப்போ பெங்களூரூல சித்த‌ப்பா வீட்ல இருக்கேன். ஆஃபிஸ்ல‌ ஒரு மாசம் லீவு சொல்லிடு, கேட்டா டைபாய்டு ஃபீவ‌ர்னு சொல்லு, ஓகே? இதுதான் என்னோட புது மொபைல் ந‌ம்ப‌ர், யாருக்கும் தரவேணாம். உனக்கு நாளைக்கு நைட் கால் பண்றேன், ஓகேவா, பை"

சஞ்ச‌ய் கால் க‌ட் செய்துவிட்டு என்னை பார்த்தான். அவ‌ன் முக‌ம் மாறிய‌து. என் முக‌த்தில் தெரிந்த‌ ஒரு சின்ன‌ ஸ்மைலை பார்த்த‌ அவ‌ன்.....

"இல்ல‌ ஸார், முகேஷ் ரொம்ப‌ ந‌ல்ல‌ டைப், அவ‌னா இருக்கா..." அவ‌ன் பேசி முடிப்ப‌த‌ற்குள் "வாங்க‌ போலாம்" என்றேன்.

செவ்வாய் காலை 5:27

முகேஷ் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டான், தான் ஒருதலையாக சுநந்தாவை காதலித்தது (சஞ்சய்யிடம் கூட இந்த விஷயத்தை பகிர்ந்துகொள்ளவில்லை), ப்ரோபோஸ் பண்ண சுந‌‌ந்தாவின் அபார்ட்மெண்ட்டுக்குச் சென்றது, தான் இன்னொருவரை காதலிப்பதாக அவள் சொன்னது, அவர்களுக்குள் வாக்குவாதங்கள் நடந்தது, பிறகு அவளை கோபத்தில் சோபாவில் கிட‌ந்த‌ தலையணையை வைத்துக் கொலை செய்தது, அனைத்தையும் ஒப்புக்கொண்டான்.

லீக‌ல் ஃபார்மாலிட்டீஸ் எல்லாவற்றையும் முடித்துவிட்டு, ராம‌ச்ச‌ந்திர‌ன் மாலை 6:30 மணிக்கு மீடியாவுக்கு தீனி போட்டுக்கொண்டிருந்தார். சில கேள்விகளுக்குப் பின், "இப்போதைக்கு அவ்வளவுதான், இதுக்கு மேல கேக்காதீங்க, ப்ளீஸ்" என்றார்.

இரவு 9:45

ராம‌ச்ச‌ந்திர‌ன் தன்னுடைய வீட்டிற்கு வந்தார். இரண்டு நாட்களாக தூங்காததில் அவரது இரு கண்களும் சிவந்திருந்தது. வீட்டின் உள்ளே வந்து கதவை தாழிட்டார். டிவி ஆன் செய்து ஆதித்யா சேன‌லை பார்‌த்தார். வ‌டிவேலு "நான் ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன்" என்று அறிவித்துக்கொண்டிருந்தார். முகேஷ் ஞாப‌க‌ம் வ‌ந்த‌து. கண்ணாடி முன் நின்று தன் முகத்தைப் பார்த்தார். அதில் கொஞ்சம் வெற்றியின் பெருமிதம் இருந்தது........

புதன் காலை 11:00

க‌மிஷ‌ன‌ர், "என்ன ராம், கண்ணெல்லாம் இப்படி வீங்கீயிருக்கு, என்னாச்சு?" என்றார்.

"ஒண்ணுமில்ல சார், சுந‌ந்தா ம‌ர்ட‌ர் கேஸ்ல ரெண்டு நாளா பிஸியா இருந்துட்டேன், சரியா தூக்கமில்ல அதான்".

"டேக் கேர் ஆஃப் யுவ‌ர் ஹெல்த் ராம், இன்னைக்கு லீவ் எடுத்துக்கோங்க. நாளைக்கு உங்கள பழையபடி என‌ர்ஜ‌டிக்கா நான் பாக்கணும், கிள‌ம்புங்க‌ முத‌ல்ல‌"

"ஓகே, தேங்க்யூ ஸார்"

ராம‌ச்ச‌ந்திர‌ன் வீட்டுக்குத் திரும்பினார்.தூக்கமில்லாததுதான் அவருடைய தளர்வுக்குக் காரணம். ஆனால் அது மட்டும்தானா? முன் நாள் இரவு நடந்ததை நினைவு கூர்ந்தார். டிவி ஆன் செய்து ஆதித்யா சேன‌லை பார்‌த்தார். வால்யூம் ச‌ற்று அதிகமாக வைத்துவிட்டு கண்ணாடி முன் நின்று தன் முகத்தைப் பார்த்தார். அதில் கொஞ்சம் வெற்றியின் பெருமிதம் இருந்தது. இரண்டு நிமிடம்தான், அதற்கு மேல் அவரால் முடியவில்லை, அழுதார், வாய்விட்டு அழுதார். இரவு முழுக்க அழுதுகொண்டேயிருந்தார். அவர் அழுவதை யாருக்கும் தெரியாமல் வ‌டிவேலு, விவேக், ச‌ந்தான‌ம் ஆகியோர் காப்பாற்றிக்கொண்டிருந்த‌ன‌ர். அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை, அழுதுகொண்டேயிருந்தார், கொலை செய்யப்பட்ட தன் காதலி சுந‌ந்தாவை நினைத்து நினைத்து......காக்கிச் சட்டை தோற்று, காதல் ஜெயித்துக்கொண்டிருந்தது.....

Sunday, February 07, 2010

முத‌ல் 'பீட்ட‌ர்' நாவ‌ல்

டிஸ்கி: இந்த‌ ப‌திவு, நானும் ஆங்கில‌ நாவ‌ல்க‌ள்லாம் ப‌டிப்பேன்னு சீன் போடுற‌துக்காக‌ இல்ல‌. நான் ர‌சிச்சு ப‌டிச்ச‌ ஒரு ந‌ல்ல‌ த்ரில்ல‌ரை எல்லோரிட‌மும் ப‌கிர்ந்துக்க‌ணும், ம‌த்த‌வ‌ங்க‌ளும் ப‌டிக்க‌ணும்னு ஒரு சின்ன‌ ஆசை, அவ்ளோதான்...................ந‌‌ம்புங்க‌, நான் கொஞ்சூண்டு ந‌ல்ல‌வ‌ன்....................ந‌ம்ப‌மாட்டீங்க‌ளே! இப்ப‌டித்தான் சாக்ர‌டீஸைக்கூட‌...........ச‌ரி ச‌ரி, உட‌னே விண்டோவை க்ளோஸ் ப‌ண்ணாதீங்க‌, மேட்ட‌ருக்கு வ‌ந்துட‌றேன்:)


"க‌ண்டேன் காத‌லை" ப‌ட‌ம் வ‌ந்திருந்த‌ ச‌ம‌ய‌ம். ஐநாக்ஸ்ல‌ டிக்கெட் வாங்கிட்டு, ப‌ட‌ம் ஆர‌ம்பிக்க‌ற‌துக்கு இன்னும் கொஞ்ச‌ நேர‌ம் இருந்த‌தால‌, 'லேண்ட்மார்க்'ல‌ கொஞ்ச‌ நேர‌ம் சுத்திட்டு வ‌ர‌லாமுன்னு போயிருந்தேன். சில‌ புத்த‌க‌ங்க‌ளை புர‌ட்டிபார்த்துட்டு, ஆங்கில‌ நாவ‌ல்க‌ள் இருக்க‌ற‌ ப‌க்க‌ம் போனேன். அதென்ன‌வோ ந‌டிகைக‌ள்கிட்ட‌ "நீங்க‌ ஷுட்டிங் ப்ரேக் டைம்ல‌ என்ன‌ ப‌ண்ணுவீங்க‌"ன்னு கேட்டா, ஸிட்னி ஷெல்ட‌ன், ஜெஃப்ரி ஆர்ச்ச‌ர், ஏ ஃபார் ஆப்பிள், பீ ஃபார் பால் மாதிரியான‌ ஆங்கில‌ எழுத்தாள‌ர்க‌ள் எழுதுன‌ நாவ‌ல்க‌ளை ப‌டிப்பேன்னுதான் சொல்றாங்க‌. என‌க்கும் ஸிட்னி ஷெல்ட‌ன் பேரை பாத்த‌துமே, த‌ம‌ன்னா ஒரு கையால‌ த‌லைமுடியை கோதிகிட்டே ஒரு சின்ன‌ ஸ்மைலோட‌ அவ‌ர் எழுதுன‌ நாவ‌லை ப‌டிக்க‌ற‌மாதிரியான‌ ஒரு சீன் மைண்ட்ல‌ வ‌ந்த‌து.

அத‌னால‌தான் வாங்கிட்டேன்னு நினைக்காதீங்க‌. அங்க‌ ப‌ல‌ நாவ‌ல்க‌ள் இருந்தாலும் பாத்த‌வுட‌னே இத‌ வாங்கித்தான் பாப்போமேங்க‌ற‌ மாதிரி ஒரு டைட்டில் ம‌ன‌சுல‌ ப‌திஞ்சுது - Are You Afraid of the Dark?


நியூயார்க், டென்வ‌ர், பாரிஸ், பெர்லின் இந்த‌ நான்கு ந‌க‌ர‌த்திலும், நான்கு பேர் விப‌த்தில் சிக்கி இற‌ந்துவிடுகிறார்க‌ள்‌. இதை போலீஸ் விசாரிக்கும்போது நான்கு பேரும் கிங்க்ஸ்லே இண்ட‌ர்நேஷ‌ன‌ல் கரூப்‌ (KIG - Kingsley International Group) என்னும் ஒரு ச‌ர்வ‌தேச‌ நிறுவ‌ன‌த்தில‌ வேலை செய்துகொண்டிருந்த‌வ‌ர்க‌ள் என்ப‌து தெரிய‌ வ‌ருகிற‌து.

இற‌ந்த‌வ‌ர்க‌ளில் ஒருவ‌ர் ரிச்ச‌ர்ட் ஸ்டீவ‌ன்ஸ் (Richard Stevens), இவ‌ரின்‌ ம‌னைவி டைய‌ன் ஸ்டீவ‌ன்ஸ் (Diane Stevens). இற‌ந்த‌ ரிச்ச‌ர்டின் உட‌ல்கூட‌ கிடைக்காத‌ப‌டி ஒரு ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌க்க‌, அதுவ‌ரை விப‌த்தினால்தான் ரிச்ச‌ர்ட் இற‌ந்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டிருந்த‌ டைய‌னுக்கு லேசாக‌ ச‌ந்தேக‌ம் வ‌ர‌ ஆர‌ம்பிக்கிற‌து.

பாரிஸில் இற‌ந்த‌ மார்க் ஹாரிஸின் (Mark Harris) ம‌னைவி கெல்லி ஹாரிஸ் (Kelly Harris). கெல்லி ஒரு அழ‌கிய‌ மாட‌லும்கூட‌. சிறுவ‌ய‌தில் ந‌ட‌ந்த‌ ஒரு ச‌ம்ப‌வ‌த்தால்‌ கெல்லிக்கு இருளைக் க‌ண்டாலே ப‌ய‌ம். தூங்கும்போதும், விள‌க்கு அணைக்காம‌ல் தூங்கும் ப‌ழ‌க்க‌ம் உடைய‌ கெல்லிக்கு மார்க்குட‌னான‌ திரும‌ண‌மும், மார்க்கின் அன்பும் அர‌வ‌ணைப்புமே அவ‌ளை மெல்ல‌ மெல்ல‌ மாற‌வைக்கிற‌து. ஆனால் அந்த‌ ம‌கிழ்ச்சியும், மார்க்கின் ம‌ர‌ண‌த்தால‌ அவ‌ளை மறுப‌டியும் இருளைக் க‌ண்டு பய‌ப்ப‌ட‌வைக்கிற‌து.

இத‌ற்கிடையில் ந‌ட‌ந்த‌து விப‌த்த‌ல்ல‌, கொலைதான் என்று உறுதி செய்து போலீஸ் துப்ப‌றிய‌ ஆர‌ம்பிக்கிறார்க‌ள்‌. KIGயின்‌ சேர்ம‌ன் டேன‌ர் கிங்ஸ்லே (Tanner Kingsley) டைய‌னையும், கெல்லியையும் த‌ன் நிறுவ‌ன‌த்துக்கு வ‌ர‌வழைத்து கொலையாளியை‌ சீக்கிர‌ம் க‌ண்டுபிடித்து அவ‌ர்க‌ளுக்கு த‌ண்ட‌னை வாங்கி கொடுப்போம் என்று வாக்குறுதி த‌ருகிறார். கிங்ஸ்லேயை ச‌ந்தித்துவிட்டு வ‌ரும் டைய‌ன், கெல்லியும் த‌ன்னுடைய‌ நிலையில் இருப்ப‌தை தெரிந்துகொள்கிறாள்.

கெல்லிக்கோ டைய‌னிட‌ம் பேசுவ‌தில் ஆர்வ‌ம் இல்லை. அத‌னால் டைய‌னை த‌விர்த்துவிட்டு பாரிஸுக்கு கிள‌ம்ப‌ முய‌ற்சிக்கிறாள். ஆனால் அதே ச‌ம‌ய‌ம் அவ‌‌ர்க‌ள் இருவ‌ரையும் கொலை செய்ய‌ ஒரு முய‌ற்சி ந‌ட‌க்கிற‌து. அதிலிருந்து அதிர்ஷ்ட‌வ‌ச‌மாக‌ இருவ‌ரும் உயிர் த‌ப்பித்து, டைய‌னுடைய‌ அபார்ட்மெண்ட்டுக்கு வ‌ருகிறார்க‌ள். அங்கும் ஒரு கொலை முய‌ற்சி ந‌ட‌க்க‌, மீண்டும் த‌ப்பித்து ஓட‌ ஆர‌ம்பிக்கிறார்க‌ள்.

ஏன் இவ‌ர்க‌ள் இருவ‌ரையும் கொலை செய்ய‌ முய‌ற்சி நட‌க்கிற‌து? யாருடைய‌ திட்ட‌ப்ப‌டி இதெல்லாம் நட‌க்கிற‌து? எந்த‌ இட‌த்திற்கு போனாலும் இவ‌ர்க‌ள் இருப்ப‌தை கொலையாளிக‌ள் க‌ண்டுபிடித்து கொலை செய்ய‌ முய‌ற்சிக்கின்ற‌ன‌ர், இது எப்ப‌டி சாத்திய‌ம்? ஊரைவிட்டு எங்கும் ஓட‌முடியாத‌ப‌டி அவ‌ர்க‌ளுடைய‌ வ‌ங்கி அக்க‌வுண்ட்டும் முட‌க்க‌ப்ப‌டுகிற‌து, கையில் இருக்கும் ப‌ண‌த்தை வைத்து எவ்வ‌ள‌வு நாள் ச‌மாளிக்க‌முடியும்?

ஒரு க‌ட்ட‌த்தில் யார் இத‌ற்கெல்லாம் கார‌ண‌ம் என்ப‌தை டைய‌னும், கெல்லியும் க‌ண்டுபிடித்துவிட‌, அந்த‌ ந‌ப‌ரிட‌ம் இருந்து எத்த‌னை நாள்தான் த‌ப்பிக்க‌ முடியும் என்றெண்ணி, ஓடுவ‌தை நிறுத்திவிட்டு மோத‌த் த‌யாராகின்ற‌ன‌ர். போலீஸிட‌ம் போக‌ முடியாத‌ சூழ்நிலை, துணைக்கு வேறு யாருமில்லை, கையில் எந்த‌வித‌ ஆயுத‌முமில்லை. எப்ப‌டி இவ்விரு பெண்க‌ளும் ஒரு ம‌லையிட‌ம் மோதி வெற்றி பெறுகிறார்க‌ள்? இருளை எதிர்கொள்ள‌ முடியாம‌ல் ப‌ய‌ந்துகொண்டிருக்கும் கெல்லியின் நிலை என்ன‌வான‌து?

பாதி க‌தையில‌ அடியாளா வ‌ர்ற‌ ஒருவ‌ரோட‌ ஃப்ளாஷ்பேக்லாம்தான் கொஞ்ச‌ம் போர‌டிக்குது. ம‌த்த‌ப‌டி இது ஒரு ப‌க்காவான‌ த்ரில்ல‌ர் நாவ‌ல்! வில்ல‌ன் யாருன்னு முத‌ல்ல‌யே சொல்லிட்டாலும், க‌தையோட‌ ஃப்ளோ துளிகூட‌ குறைய‌ல‌. நேர‌மின்மையால‌, ஒரு நாளைக்கு மூணு இல்ல‌ நாலு அத்தியாய‌த்துக்கு மேல‌ என்னால‌ படிக்க‌முடியாது. ஆனா க‌டைசி சில‌ ப‌க்க‌ங்க‌ள்ல‌ இருந்த‌ த்ரில்லிங் (ஒவ்வொரு அத்தியாய‌த்திலும் ஏக‌ப்ப‌ட்ட‌ ட்விஸ்ட்டுக‌ள்) தூக்க‌த்தையெல்லாம் ஒதுக்கி வெச்சுட்டு தின‌மும் இர‌வு ப‌ன்னிர‌ண்டு அல்ல‌து ப‌ன்னிர‌ண்ட‌ரை ம‌ணி வ‌ரை என்னை ப‌டிக்க‌வெச்சுது. ஆஃபிஸ் விட்டு கிள‌ம்பும்போதே "எப்ப‌டா வீட்டுக்கு போய் புக்கை எடுக்க‌ போறோம்"னு ம‌ன‌சுல‌ அலார‌ம் அடிக்க‌ ஆர‌ம்பிச்சுடும்.

இந்த‌ நாவ‌ல் படிச்சு முடிச்சுட்டு விக்கிபீடியால‌ பாத்தா, ஒரு ஸ்ட்ரேஞ்சான‌ விஷ‌ய‌ம். நான் முத‌ல் முத‌லா ப‌டிச்ச‌ ஸிட்னி ஷெல்ட‌னோட‌ இந்த‌ நாவ‌ல்தான், அவ‌ர் எழுதின‌ க‌டைசி நாவ‌ல்:(