Sunday, June 20, 2010

எழுத‌வா ஒரு க்ரைம் க‌தையை?

ஒரு ஊர்ல‌ என்று ஆர‌ம்பிக்கும் ப‌ழ‌க்க‌த்தை எப்போதோ விட்டுவிட்டேன். இப்போதெல்லாம் ஆர‌ம்பிக்கும்போதே சென்னைதான். ஆம்..சென்னை...சென்னையில் நானிருக்கும் ஏரியா..இந்த‌ பெய‌ரை ப‌த்து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் சொல்லியிருந்தால் அவுட் ஆஃப் த‌ சிட்டியா என்று ஏள‌ன‌மாக‌ பேசியிருப்ப‌ர். இப்போது அதே ஏரியாவில் சொந்த‌ வீடு என்று சொன்னால் ஒற்றை எழுத்துட‌ன் ஆச்ச‌ரிய‌மும் சேர்ந்து வ‌ரும் 'ஓ!'. இது முக்கிய‌ம‌ல்ல‌ இப்போது. எந்த‌ ஏரியாவாக‌ இருந்தால் என்ன‌, என்ன‌ சொல்கிறேன் என்று கேளுங்க‌ள். அது போதும்.

அழ‌கான‌ வீடு. மொட்டை மாடியில் எனக்கென‌ ஒரு அறை. யாரும‌ற்ற‌ த‌னிமை என‌க்கு இறைவ‌ன் அளித்த‌ வ‌ர‌ம். என் விருப்ப‌த்திற்கேற்ப‌ பாடுவேன், ஆடுவேன். சம‌ய‌ங்க‌ளில் க‌ண்ணாடியில் வெறித்து பார்த்துக்கொண்டிருப்பேன். ஏன் என‌ தெரியாது. யாரேனும் பார்த்திருந்தால் ச‌ரியான‌ சைக்கோ என்று சொல்லியிருப்ப‌ர். அது உண்மையாக‌க் கூட‌ இருக்க‌லாம். என‌க்குத் தெரியாது.

அறையினுள் என‌க்கென‌ ஒரு ரீடிங் டேபிள். புத்த‌க‌ங்க‌ள் வாசிப்ப‌த‌ற்கு, அழ‌கான‌ சிறு விள‌க்குட‌ன் அமைக்க‌ப்ப‌ட்டிருக்கும். சில‌ நாட்க‌ள் வாசித்துக்கொண்டே தூங்கிப்போயிருக்கிறேன். அலுவ‌ல‌க‌ம், வீடு, புத்த‌க‌ம் என்றுதான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்த‌து. எல்லாம் ஸ்வேதா வ‌ரும் வ‌ரை.

அலுவ‌ல‌க‌த்தில் எல்லோரிட‌மிருந்தும் ஒதுங்கியே இருப்ப‌வ‌ன் நான். ஏன்? கேள்வியெல்லாம் கேட்காதீர்க‌ள். என‌க்கு பிடிக்காது. நான் அப்ப‌டித்தான். திமிர் பிடித்த‌‌வ‌ன் என்று தோன்றுகிற‌தா? தோன்றும்தான். ஆனால் ஸ்வேதாவுக்கு தோன்ற‌வில்லை. அவ‌ளாக‌வே வ‌ந்து பேசினாள், அலுவ‌ல் ச‌ம்ப‌ந்த‌மான‌ ச‌ந்தேக‌ங்க‌ளைக் கேட்டாள், ஜோக்க‌டித்தாள், சிரித்தாள்..சிரிக்க‌வும் வைத்தாள். நான் சிரித்த‌தை பார்த்து‌ ப‌ல‌ருக்கும் ஆச்ச‌ரிய‌ம். யாரிட‌மும் ஒரு வார்த்தை அதிக‌ம் பேசாத‌வ‌ன் இப்போது ஒரு பெண்ணிட‌ம் சிரித்து பேசுகிறானே என்று.

இர‌வு வீட்டுக்கு வ‌ந்து க‌ண்ணாடி முன் நின்று ஸ்வேதாவிட‌ம் சிரித்த‌து போல் சிரித்து பார்த்தேன். கொஞ்ச‌ம் வ‌ழிந்திருக்கிறேன். என‌க்கு பிடிக்க‌வில்லை. நாளையிலிருந்து அவ‌ளிட‌ம் பேச‌க்கூடாது என்று முடிவு செய்தேன். அவ‌ள் சிரிக்க‌தானே வைத்தாள், ஏன் இத‌ற்கு இவ்வ‌ள‌வு கோப‌ம் என்று கேட்கிறீர்க‌ளா? போன‌ ப‌த்தியிலேயே சொன்னேன் கேள்வியெல்லாம் கேட்காதீர்க‌ள் என‌க்கு பிடிக்காதென்று. ம‌றுப‌டியும் கேட்டால் என்ன‌ அர்த்த‌ம்? ஐ'ம் ரிய‌லி டாம் சீரிய‌ஸ்!

ம‌றுநாள் அலுவ‌ல‌க‌ம் சென்ற‌போது அவ‌ளே வ‌ந்து ஹாய் என்றாள். மானிட்ட‌ரிலிருந்து க‌ண் வில‌க்காம‌ல் மிக‌ மெல்லிய‌ குர‌லில் ஹ‌லோ என்றேன்.


உன‌க்காக‌ ஒரு கிஃப்ட் வாங்கி வ‌ந்துருக்கேன். என்ன‌ன்னு க‌ண்டுபுடி

என‌க்கு கிஃப்ட் வேண்டாம்

உட‌னே கோப‌ம் வ‌ந்துடுமே. டேய் ராஸ்க‌ல், கொலையுதிர் கால‌ம் வாங்கிட்டு வ‌ந்திருக்கேன்டா, சுஜாதா எழுதின‌து!

இப்போது என் பார்வை மானிட்ட‌ரின் மேலில்லை. உத‌டும் வல‌து க‌ன்ன‌த்தை நோக்கி அரை இஞ்ச் ந‌க‌ர்ந்த‌து. சுஜாதா. என் ஆத‌ர்ச‌ம். என‌க்கும்.

கொஞ்ச‌ம் ந‌ல்லாத்தான் சிரியேன்...இந்தா ப‌டிச்சிட்டு சொல்லு

தேங்க்ஸ்

நான்கு நாட்க‌ள் அலுவ‌ல் அதிக‌ம். மிக‌ அதிக‌ம். இந்த‌ நான்கு நாட்க‌ளில் அவ‌ள் பேசிய‌து மொத்த‌ம் எட்டு வார்த்தைக‌ள். தின‌மும் காலையில் 'ஹாய்'. மாலையில் 'பை'. என்னுடைய‌ வேலைக‌ளை நேற்றே முடித்துவிட்ட‌தால் இன்று என‌க்கெந்த‌ ப‌ணியும் இல்லை. வ‌ழ‌க்க‌ம் போல் த‌மிழ்ம‌ண‌த்திலும், த‌மிழிஷிலும் உல‌விக்கொண்டிருந்தேன். ஸ்வேதா வ‌ந்தாள்.

ஹாய்..என்ன‌டா எப்ப‌ பார்த்தாலும் ப்ளாகா? நாலு நாளா ச‌ரியாவே உங்கிட்ட‌ பேச‌லியே என்ன‌ன்னு ஏதாவ‌து கேட்டியா?

நீ பிஸி

நான் பிஸின்னா நீயா வ‌ந்து பேச‌மாட்டியா?

............

ச‌ரி விடு, கொலையுதிர் கால‌ம் ப‌டிச்சியா? எப்ப‌டியிருந்த‌து? என‌க்கு சொல்லு

புத்த‌க‌த்தை வாங்கிக் கொடுத்த‌வ‌ள். க‌தை கேட்கிறாள். சொன்னேன்.

நீ சொன்ன‌தே என‌க்கு ஒரு ப‌ட‌த்தை பார்த்த‌ மாதிரியிருக்கு. வாவ் என்ன‌மா சொல்றே! நீ ஏன் ஒரு க்ரைம் ஸ்டோரி எழுத‌க்கூடாது?

என‌க்கு அனுப‌வ‌மில்ல

எழுது. எழுத‌ ஆர‌ம்பிச்ச‌துக்க‌ப்புற‌ம் என்கிட்ட‌ உன்னோட‌ ட்ராஃப்ட்ஸ் குடு. க‌ரெக்ஷ‌ன்ஸ் தேவைப்ப‌ட்டா நான் சொல்றேன்

சாய‌ந்த‌ர‌ம் வீட்டுக்கு வா

வ்வாட்?! நீயா கூப்பிட‌ற‌! யூ ஆர் நாட் ஜோக்கிங் ரைட்?

ப‌தில‌ளிக்காம‌ல் மானிட்ட‌ரை வெறிக்க‌த் தொட‌ங்கினேன். சிரித்தாலும், ஏதோ திட்டிக்கொண்டே சென்றாள்.

மாலை ச‌ரியாக‌ ஆறும‌ணிக்கு வ‌ந்தாள். வீடு ந‌ல்லாருக்கு, என்ன‌ புக்ஸ்லாம் ப‌டிக்க‌ற‌, உன்னோட‌ டிவிடி க‌லெக்ஷ‌ன்ஸ் ந‌ல்லாருக்குப்பா..எல்லாமே க்ரைம் & சைக்க‌லாஜிக்க‌ல் த்ரில்ல‌ரா வெச்சிருக்க‌..வித்தியாச‌மா இருக்கு, என‌க்கும் சுஜாதான்னா ரொம்ப‌ புடிக்கும் அண்ட் ஷெல்ட‌ன் ட்டூ, நீயே ச‌மைப்பியா, கிச்ச‌ன்லாம் கூட‌ சுத்த‌மாயிருக்கு என்று அவ‌ள்தான் பேசிக்கொண்டிருந்தாள். பேசிக்கொண்டேயிருந்தாள். வ‌ழ‌க்க‌ம் போல்.


மீண்டும் ஆர‌ம்பித்தாள்.

உன்னோட‌ டேஸ்ட்டுக்கு ஒரு க்ரைம் ஸ்டோரி எழுதுப்பா..ந‌ல்லா வ‌ரும்

என‌க்கு எழுத‌ வ‌ராது

அப்ப‌டி சொல்லாதே, ட்ரை ப‌ண்ணு. எல்லார்க்கும் ஒரு வித்தியாச‌மான‌ அனுப‌வ‌ம் இருக்கும். அதையே ஒரு க்ரைம் வியூவ்ல‌ திங்க் ப‌ண்ணு. அதை எழுத்துல‌ கொண்டு வா. இப்போ நான் ஒண்ணு சொல்றேன்....

சுவ‌ர்க் க‌டிகாரத்தில் ஒரே ஒரு ம‌ணி அடித்த‌து. ம‌ணி ஆற‌ரை.
ரீடிங் டேபிளில் ம‌டிக்க‌ணிணியை வைத்து த‌ட்ட‌ச்சு செய்ய‌ ஆர‌ம்பித்த‌போது ம‌ணி பார்த்தேன். ஆறு நாற்ப‌து. இப்போது ம‌ணி ஏழு. ஆவ‌லாக‌த் த‌ட்ட‌ச்சிக்கொண்டிருந்த‌தில் முத‌லில் தெரிய‌வில்லை. இப்போதுதான் காலில் ஏதோ ச‌ற்று பிசுபிசுவென‌ ஒட்டுவ‌து போலிருந்த‌து. ம்ம்..ஸ்வேதாவின் ர‌த்த‌ம்தான்.

ஆறு முப்ப‌திலிருந்து ஆறு நாற்ப‌து வ‌ரை என்ன‌ ந‌ட‌ந்த‌தென்று கேட்காதீர்க‌ள். கேள்வி கேட்டால் என‌க்கு பிடிக்காதென்று சொல்லியிருக்கிறேன். ஒரு க்ரைம் க‌தையை எழுது எழுது என‌ என்னை ந‌ச்ச‌ரித்த‌ ஸ்வேதா இப்போது உயிரோடு இல்லை. அவ‌ள் ர‌த்த‌ம் என் காலில் ப‌ட்ட‌து, என‌க்கு அருவ‌ருப்பாய் இருக்கிற‌து. நான் போய் கால் க‌ழுவி விட்டு வ‌ருகிறேன்.

அத‌ற்குள் நீங்க‌ள் யோசித்து சொல்லுங்க‌ள்.

எழுத‌வா ஒரு க்ரைம் க‌தையை?12 comments:

 1. எழுதுங்க..அதுக்காக என்னையக் கொன்னுட்டு எழுதீராதீங்க!

  ReplyDelete
 2. ஹேய் ரகு, கலக்குறப்பா. செம ரைட்டிங்.

  ReplyDelete
 3. இந்த ப்ளாக் அண்ட் வொய்ட் ஃபோட்டோல சிரிச்சிட்டிருக்குறது தானா நீங்க...

  ReplyDelete
 4. இது கதையாக இருந்தா, சூப்பர்... முக்கியமா கொஞ்சம் ஜாலியான ஸ்டைல்... கலக்கறீங்க...

  இது நிஜ அனுபவம்னா!!!, போலீஸ்.. போலீஸ்...

  ReplyDelete
 5. குட் அட்டம்ப்ட்

  ReplyDelete
 6. ஜெய் said...


  இது நிஜ அனுபவம்னா!!!, போலீஸ்.. போலீஸ்...

  June 21, 2010 3


  helllooo 100 mmm yes raghu name la oruthar murder panirukarnu ninaikren ssss sikram vanga ...... ipdi expand ah podunga

  ReplyDelete
 7. அதுசரி...ரத்தம் வந்திருக்கு ஏன் ....எதுக்குன்னு கேள்வி கேட்கக்கூடாதாம்ல!
  சரி எழுதுங்க.அப்போ படிச்சுக்கிறோம்.எழுதுங்க ரகு.

  ReplyDelete
 8. ந‌ன்றி ராஜு, முய‌ற்சி ப‌ண்றேன்ணே ;)))

  வாங்க‌ விக்கி, ஹுக்கும்...அந்த‌ ஃபோட்டோல‌ இருக்க‌ற‌து நாந்தான்னு சொன்னா ந‌ம்பிட‌வா போறீங்க‌...

  ReplyDelete
 9. ந‌ன்றி ஜெய், நிஜ‌ அனுப‌வ‌ம்லாம் இல்ல‌..ப‌ச்ச‌ ம‌ண்ணுங்க‌ நானு :))

  ந‌ன்றி நேச‌மித்ர‌ன்

  ReplyDelete
 10. ந‌ன்றி வித்யா

  ந‌ன்றி ஏஞ்ச‌ல், ஜெய்க்கு சொன்ன‌ ப‌திலை பாருங்க‌...ப‌.ம‌.நானு

  ந‌ன்றி ஹேமா, ஹி..ஹி..நீங்க‌தாங்க‌ தைரிய‌சாலி :)

  ReplyDelete
 11. வாவ். இப்பதான் முத தடவையா உங்க பிளாக் படிக்கிறேன். ஆரம்பமே அசத்தல். அருமையான கோணம். இன்னும் எழுதுங்கன்னெல்லாம் சொல்ல மாட்டேன். யாராவது சொன்னா தட்டாம எழுதுங்ணா. கண்டிப்பா கிரைம் :))

  ReplyDelete