Tuesday, May 31, 2011

விபரீதக் கோட்பாடு & ஓடாதே! – சுஜாதா

ஒவ்வொரு வருடமும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களில், பாதியையாவது மூன்று நான்கு மாதங்களுக்குள் வாசித்துவிடுவேன். ஆனால் இம்முறை நிலைமை தலைகீழ். பல காரணங்களால் புத்தகங்கள் பக்கம் எட்டிக்கூட பார்க்க வாய்ப்பிலாமல், சில சமயம் விருப்பமில்லாமல் இருந்தது.

சில நாட்கள் முன்பு வாரயிறுதியில் ஊருக்குச் சென்றிருந்தபோது, அங்கு வழக்கம்போல் காலை 11 மணிக்கு மின்சார வாரியம் ஞாயிறென்றும் பாராமல் தன் கடமையில் இறங்கியது. போதாதற்கு சூரிய பகவானும் ஆஸ்ட்ரேலியாவை எதிர்த்தாடும் சச்சினைப் போல் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார். எனவே வெளியே செல்லவும் விருப்பமில்லை. பிறகுதான் இவ்வருடம் வாங்கிய புத்தகங்களின் ஞாபகம் வந்தது.

அலமாரியில் பல புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தாலும், கண்ணும், கையும் முதலில் நோக்கிச் சென்றது சுஜாதாவை நோக்கித்தான். உண்மையெனினும் ’வழக்கம் போல்’ என்ற சொற்றொடர் முந்தைய வரிக்கு அவசியமில்லாதது. இரு புத்தகங்களை எடுத்தேன். விபரீதக் கோட்பாடு & ஓடாதே.

இவ்விரண்டு புத்தகங்களும் கிழக்கு பதிப்பக வெளியீடு. எழுத்துப்பிழையெல்லாம் இல்லாமல், தரமான காகிதத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இது ஒன்று போதும் சுஜாதாவை கெளரவப்படுத்த. சென்ற வருடம் வேறொரு பதிப்பகத்தில் வாங்கிய புத்தகத்தில் அவரது எழுத்தை உயிருடன் போஸ்ட்மார்ட்டம் செய்திருந்தார்கள். அவர் வாசித்திருந்தால் ஆங்கிலத்தில் அர்ச்சனை செய்திருப்பார்.


விபரீதக் கோட்பாடு

சுஜாதாவின் எழுத்தை நிறைய (சு)வாசித்தவர்கள் இக்கதையில் யார் குற்றவாளியென முதல் நான்கைந்து பக்கங்களிலேயே யூகித்துவிடுவார்கள். ஆனால் மூட நம்பிக்கையை மையமாக வைத்து த்ரில்லராய் கதையை நகர்த்தியிருக்கும் விதம் அட்டகாசம்! கணேஷ் வஸந்திற்காகவே வாசிக்கலாம். இப்போது யோசித்துபார்க்கையில் கண்டிப்பாக இது சுஜாதாவின் பெஸ்ட் அல்ல என்றுதான் தோன்றுகிறது. என்றாலும் தவிர்க்கக்கூடிய கதையும் அல்ல.

ஓடாதே!

ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முன் எழுதிய கதை. இப்புத்தகத்தின் முன்னுரையில், நிறைய இயக்குனர்கள் இக்கதையை திரைப்படமாக கெடுப்பதற்கு..ஸாரி...எடுப்பதற்கு தன்னை அணுகியதாகக் குறிப்பிட்டுள்ளார் சுஜாதா. அதுவும் ஒரு வேண்டுகோளுடன். பாழாய்ப் போகாத செண்டிமெண்ட் காரணமாக, தலைப்பை மட்டும் மாற்றவேண்டும் என்றார்களாம். ஆனால் இந்த ‘ராஜனுக்கு ராஜன்’ அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே இக்கதை திரைப்படம் ஆகாமல் தப்பித்தது என்று முன்னுரையில் சொல்லியிருக்கிறார்.

இயக்குனர்கள் இதைக் கேட்குமளவுக்கு கதையில் அப்படியென்ன இருக்கிறது என்ற எண்ணத்தோடுதான் கதையை வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க ஆரம்பித்த சில பக்கங்களிலேயே புரிந்துவிட்டது. புதிதாய் மணமானவர்களிடையே இருக்கும் காமம் கலந்த காதல், இருக்கையின் நுனிக்கு கொண்டுவரச் செய்யும் அட்டகாசமான சேஸிங் - இவையிரண்டையும் சேர்ந்து இக்கதையை ஒரு அட்டகாசமான த்ரில்லராய் படைத்திருக்கிறார் எனதருமை ரங்கன்.

மணமான மூன்றாம் நாளே, ஒரு குற்றமும் செய்யாத ஜோடியை சென்னை, பெங்களூர் காவல்துறையினர் துரத்துகின்றனர். ஏன்? வேண்டாம், சஸ்பென்ஸை உடைக்கவிரும்பவில்லை. கதையை வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவங்கள், இலக்கியத்தரமான எழுத்து ஆகியவற்றை எதிர்பார்ப்போருக்கு இவ்விரண்டு புத்தகங்களும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் போகலாம். ஆனால் த்ரில்லரை மட்டும் விரும்புபவர்களுக்கு இப்புத்தகங்கள் நல்லதொரு விருந்தென்றே கூறுவேன்.

நல்லவேளை, வாரயிறுதியாக இருந்தாலும் அன்று மின்சார வாரியத்தினர் கடமையே கஜினியாயிருந்தனர். இல்லையெனில் இவ்விரண்டு புத்தகங்களையும் வாசித்திருக்கமாட்டேன். ஆட்சி மாறினாலும் ஆற்காட்டாருக்கு நன்றி! :)


Tuesday, May 17, 2011

சுதா ரகுநாதன்

பதிவெழுத ஆரம்பித்து கிட்டதட்ட இரண்டு வருடங்கள் ஆகிறது. வலைப்பூ மீதான போதை தற்போது குறைந்திருந்தாலும் அவ்வப்போது எழுத வேண்டும் என்ற ஆசை மட்டும் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. ஆரம்பத்தில் எழுதியதை இப்போது வாசிக்கையில் எரிச்சல்தான் மிஞ்சுகிறது என் மீது எனக்கு. தட்டுத்தடுமாறி ஏதேதோ எழுதிக்கொண்டிருக்கிறேன். இதுவரை எழுதியதில் மனதிற்கு மகிழ்ச்சியோ, திருப்தியோ தருமளவுக்கு எதுவும் இல்லை. வார்த்தை ஜாலங்கள் எல்லாம் கைகூடாததால் அத்தருணத்தில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதுகிறேன்.



ம்ம்ம்...யோசித்து பார்க்கையில், மற்றவர்கள் மனம் நோகும்படியோ, அநாகரிகமாகவோ இதுவரை எதையும் எழுதியதில்லை. இவ்விரண்டு வருடங்களில் இதுதான் என்னால் முடிந்த அதிகபட்ச சாதனை(!)


**********


வேலைப்பளு. கடந்த சில மாதங்களாக அலுவலகமே வாழ்க்கையாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் (கவனிக்க: குறைந்தபட்சம்) 12 முதல் 14 மணி நேரங்கள்.


இதனால் இழப்பது நிறைய, குறிப்பாக நட்புகள். நான் குருவாக மதிக்கும் என் நண்பரின் இல்லத்திருமணத்திற்குக்கூட செல்ல முடியாத சூழ்நிலை. அவன் ஓவரா படம் காட்றான், திமிரு புடிச்சவன், எனக்கு கால் பண்றதே இல்ல என்று சில முத்துகள் பலரின் வாயிலிருந்து உதிர்வதை அறிய முடிகிறது. ஒரே ஒரு நண்பர் மட்டும் உன் சிச்சுவேஷன் எனக்கு புரியுதுடா என்றார். மகிழ்ச்சியாக இருந்தது இவர் ஒருவராவது நம்மை புரிந்துகொண்டாரே என்று. பின்பு சொன்னார், எனக்கும் உன் நிலைமைதான்டா, டெய்லி 12 ஹவர்ஸ். ஹுக்கும்...அதானே பார்த்தேன்!


உண்மையான நட்புகளுக்கு ஒவ்வொன்றுக்கும் விளக்கம் தரவேண்டியதில்லை. ஒவ்வொன்றுக்கும் விளக்கம் எதிர்பார்க்கும் மனிதர்கள் நட்புகளாய் இருக்க வாய்ப்பில்லை. எல்லா மனிதர்களும் எனக்கு வேண்டாம். எனக்குப் பிடித்த, என்னைப் பிடித்த ஒரு சில நட்புகள் போதும்.


**********


சமீபத்தில் ஒரு ஞாயிறன்று நண்பனொருவனின் கிரஹப்பிரவேசத்திற்காக நானும் என் இரு நண்பர்களும் சென்றிருந்தோம். எல்லோருடனான அரட்டையின்போதுதான், சில நாட்களாய் தொலைத்திருந்த நகைச்சுவையுணர்வை மீட்டெடுத்தது போன்று உணர்ந்தேன்.


கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்குப் பின் சிலரை சந்தித்தேன். எப்போதும் தாமதமாக வந்தவன், இப்போதும் தாமதமாகத்தான் வருகிறான். வாய்ச்சவடாலில் (மட்டும்) வீரனாக இருந்தவன், தன் குணம் மாறாத நீலாம்பரியைப் போல் இன்னும் அப்படியேதானிருக்கிறான். அன்று சிம்ரனை காதலித்தவன் இன்று அனுஷ்காவை பூஜிக்கிறான். எல்லோரையும் பிடித்து கலாய்த்துக்கொண்டிருந்ததில் அந்த நாள் இனிய நாளாக அமைந்தது.


இது போன்றதொரு சந்தர்ப்பம் அடிக்கடி (சனி, ஞாயிறுகளில்) கிடைக்கவேண்டும்.


**********


மே மாத சென்னை வெயில் பற்றி சொல்லவேண்டியதில்லை. சூரிய பகவான் தீயாய் வேலை செய்துகொண்டிருக்கிறார். இரு வாரங்களுக்கு முன் வழக்கமாக காலை சிற்றுண்டிக்குச் செல்லும் உணவகத்திற்குச் சென்றிருந்தேன். அன்று திரு.சூனா பனாவின் உக்கிரம் காலையிலேயே அதிகமாயிருந்தது. ஏதேனும் குளிர்பானம் அருந்தலாமென்றெண்ணி அங்கிருந்த ஒரு ஸ்ட்ராபெர்ரி ஃபேளேவரை வாங்கி குடித்தேன்.


அந்த பாட்டிலில் MRP 15 என்று போட்டிருக்க, காசு வாங்கியவரோ 17 என்று பில் போட்டார்.


"இதுல 15தான் போட்டிருக்கு, ஏன் பில்ல 17 போட்டிருக்கீங்க?"


"17தாங்க"


"இங்க பாருங்க, 15தான் போட்டிருக்கு". பாட்டிலைக் காட்டினேன்.


"இதெல்லாம் நாங்க ஃபிக்ஸ் பண்றதுதான் சார், இது 17 ரூபா"


அதற்கு மேல் அவரிடத்தில் விவாதம் செய்வதில் அர்த்தமில்லை எனத் தோன்றியது. இதில் கொடுமை என்னவென்றால், அங்கிருந்த ஒரு சிலரும், 2 ரூபாய்க்கு ஏன் அநாவசியமாக பேசுகிறான் என்பது போல் என்னை முறைத்துப் பார்த்தனர். நல்லாயிருங்கப்பு!


இந்த பிரச்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் இருக்கிறது. எந்த பொருள் வாங்கினாலும் வெளியே விற்கும் விலையை விட அதிகமாகத்தான் இருக்கிறது. கேட்டால் மிக அலட்சியமான பதில்தான் கிடைக்கும்.


நானொன்றும் அ ந் நி ய ன் அல்ல, இம்மாதிரி ஆட்களுக்கு, கபீம்குபாம் என்று எழுதிவிட்டு தண்டனை தர. என்னால் செய்ய முடிந்தது, எங்கெல்லாம் இம்மாதிரி அதிக விலை வைத்து விற்கிறார்களோ, அங்கெல்லாம் எந்த பொருளையும் வாங்குவதில்லை, முற்றிலும் தவிர்க்கிறேன். நம் நீதிமன்றங்களின் சுறுசுறுப்பை நினைத்தாலே, நுகர்வோர் நீதிமன்றத்திற்குச் செல்லவும் தயக்கமாயிருக்கிறது. இவர்களை வேறென்னதான் செய்ய?


**********



பெயர் குறித்த தொடர் பதிவிற்கு ப்ரியா அழைத்திருந்தார், பல நாஆஆஆஆஆட்களுக்கு முன்பு. ஸாரி ப்ரியா, பெட்டர் லேட் தேன் நெவர் இல்லையா?


சிறுவயதில் என் பெயர் எனக்கு பிடிக்காது. ஸ்டைலிஷாக இல்லாமல் ஏதோ பழைய பெயர் வைத்துவிட்டார்கள் என்று கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. அதுவும் ஒரு பழைய கறுப்பு வெள்ளை படத்தில், நாயகி நாயகனை அப்போதுதான் தூங்கியெழுந்தது போன்ற toneல் ‘நாதா நாதாஎன்றழைக்க, ‘ரகுநாதன்என்னும் பெயர் மீது இன்னும் எரிச்சல் கூடியது.


பள்ளி, கல்லூரி நாட்களில்....ஏன் இப்போது கூட என் பெயரில் பில் போடும்போது பலர், RAGUNATHAN என்றுதான் எழுதுவர். நான் RAGHUNATHAN. அவர்கள் விட்டுவிடுவது ஓரெழுத்துதான் என்றாலும் என்னமோ அது ஒரு பெரிய மனக்குறையாகவே தோன்றும். நல்லவேளை, மார்க் ஷீட், பாஸ்போர்ட் போன்றவற்றிலெல்லாம் இந்த பிரச்னை வரவில்லை.


எனக்கு ரகு என்று அழைத்தால்தான் பிடிக்கும், அழைப்பவர்களைத்தான் பிடிக்கும். பெயரை சுருக்கி கூப்பிடுவதும், செல்லப்பெயர் வைத்துக் கூப்பிடுவதும்தான் நட்பின் நெருக்கத்தை அதிகரிக்கிறது என்பது என் எண்ணம்.


இப்போது நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. கண்டிப்பாக ‘சுதாஎன்கிற பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று கூட யோசித்திருக்கிறேன் (இப்போது அந்த ஆசை இல்லை). அப்பெண்ணுக்கு பாட வருகிறதோ இல்லையோ, ‘நான் சுதா ரகுநாதன் என்றாவது அறிமுகப்படுத்திக்கொள்ளலாம் இல்லையா? J