Sunday, March 28, 2010

லிவிங் டுகெத‌ர் - நீங்க‌ என்ன‌ சொல்றீங்க‌?

ஐ'ம் இன் ல‌வ் வித் யூ டீ

ஐ டூடா, நீயா வ‌ந்து சொல்வ‌ன்னு காத்துகிட்டு இருந்தேன்

சொல்லு, இன்னைக்கே வாழ‌ ஆர‌ம்பிக்க‌லாம். ஐ கேன்ட் வெய்ட் டு ஸ்டார்ட் எ லைஃப் வித் யூ

ஐ ல‌வ் யூடா. எப்ப‌ ந‌ம்ம‌ வீட்டுக்கு கூட்டிட்டுபோற‌?

அத‌ன்பின் அவ‌ர்க‌ள் ம‌கிழ்ச்சியாக‌ வாழ்க்கையை ஆர‌ம்பித்தார்க‌ள் என்று க‌தை முடியும். க‌ல்யாண‌ம்? எதுக்கு? இன்னும் சில‌ வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து இந்த‌ கேள்வி ப‌ல‌ரிட‌ம் எழ‌லாம். அமெரிக்காவில் அல்ல‌, இந்தியாவிலேதான்...

ஒரு ஆணும், பெண்ணும் திரும‌ண‌மாகாம‌ல் ஒன்றாக‌ வாழ்வ‌து அவ‌ர்க‌ளின் உரிமை. அதை ச‌ட்ட‌ப்ப‌டி குற்ற‌ம் என்று ஏற்றுக்கொள்ள‌ முடியாது. புராண‌த்தில் கிருஷ்ண‌னுக்கும், ராதாவுக்கும் இருந்த‌ உற‌வும் ஏற‌க்குறைய‌ இதே போன்றுதான். அத‌ற்காக‌ அவ‌ர்க‌ளை நாம் குற்ற‌ம் புரிந்த‌வ‌ர்க‌ள் என்று கூறுகிறோமா? இது உச்ச‌ நீதிம‌ன்ற‌ நீதிப‌தியின் கூற்று. இது எந்த‌ள‌வில் ந‌ம்மிடையே சாத்திய‌ம்?

இருப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு டிஸ்கோதே, ப‌ப் என்றால் என்ன‌வென்றே தெரியாது. எப்போது மேற்க‌த்திய‌ க‌ம்பெனிக‌ள் இந்தியாவுக்கு வ‌ருகை த‌ந்த‌தோ, அப்போதே அவ‌ர்க‌ளின் கலாச்சார‌த்தையும் கூட‌வே கூட்டிக்கொண்டு வ‌ந்துவிட்டார்க‌ள். மேற்க‌த்திய‌ க‌ம்பெனிக‌ள் ந‌ம் நாட்டில் வ‌ந்த‌பின்பு பொருளாதார‌ம் முன்னேறியிருக்கிற‌து என்ப‌து ம‌றுக்க‌முடியாத‌ உண்மை. ஆக‌வே அவ‌ர்க‌ளிட‌த்தில் உன்னுடைய‌ வாழ்க்கை முறை ச‌ரிய‌ல்ல‌ என்ப‌து யாராலும் வாதிட‌முடியாத‌ ஒன்று. அவ‌ர்க‌ளுடைய‌ க‌லாச்சார‌த்தால் ந‌ம‌க்கு ந‌ன்மை விளைந்திருக்கிற‌தா, தீமை விளைந்திருக்கிற‌தா என்ற‌ வாதத்திற்குள் செல்ல‌ நான் விரும்ப‌வில்லை. நினைத்துப்பாருங்க‌ள், 1970, 80க‌ளில் காத‌ல் திரும‌ண‌ங்க‌ள் எந்த‌ள‌வு ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட்ட‌து? ஆனால் இப்போது வெகு சாதார‌ண‌ம். கால‌ம் செல்ல‌ செல்ல‌, ந‌ம் ம‌க்க‌ள் மாறிக்கொண்டே வ‌ருகிறார்கள் என்ப‌துதான் உண்மை.

ஏனென்று தெரிய‌வில்லை. ஒரு ஆணும் பெண்ணும் திரும‌ண‌மாகாம‌ல் ஒன்றாக‌ வாழ்கிறார்க‌ள் என்றாலே உட‌ன‌டியாக‌ ந‌ம் க‌ற்ப‌னை குதிரை கொஞ்ச‌மும் நாக‌ரிக‌மின்றி அவ‌ர்க‌ளின் ப‌டுக்கை அறையை‌த்தான் எட்டிப் பார்க்கிற‌து. அவ‌ர்க‌ள் இடையே இருப்ப‌து வெறும் காம‌ம் ம‌ட்டும்தானா? காத‌ல், புரிந்துண‌ர்வு, ந‌ட்பு ஆகிய‌வை எல்லாம் இல்லையா? ஒரு ஆணுக்கு வேண்டுமானால் பெண்ணை பார்த்த‌வுட‌ன் காம‌ உண‌ர்வு பொங்கி எழ‌லாம். ஆனால் ம‌ன‌தால் நெருங்காம‌ல், அவ‌ன் சிற‌ந்த‌ அழ‌க‌னே ஆனாலும், பெண் அவ‌னை ஏற்றுக்கொள்வ‌தில்லை.

ஆறு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு, அப்போது நான்காம் வ‌குப்பு ப‌டித்துக்கொண்டிருந்த‌ என் உற‌வின‌ரின் ம‌க‌ன் "அண்ணா, இன்னைக்கு க்ளாஸ்ல‌ விஜ‌ய், ஷீத்த‌ல்கிட்ட‌ ஐ ல‌வ் யூ சொல்லி கிஸ் ப‌ண்ணிட்டாண்ணா" என்றான். ச‌த்திய‌மாக‌ அப்போது இது என‌க்கு பேர‌திர்ச்சி! நான் நான்காம் வ‌குப்பு ப‌டிக்கும்போது ஐ ல‌வ் யூ என்றால் என்ன‌ அர்த்த‌ம் என்றே தெரியாது (ஹ‌லோ, என்ன‌ சிரிப்பு? ந‌ம்புங்க‌). அவ‌ன் சொன்ன‌த‌ற்கு என்ன‌ ப‌தில் சொல்வ‌த‌ன்றே என‌க்கு தெரிய‌வில்லை. ஏதேதோ பேச்சை மாற்றி ச‌மாளித்தேன். ஆனால் யோசித்து பார்த்த‌போது, ச‌முதாய‌ மாற்ற‌மும், மீடியாவுமே இத‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம் என்று தோன்றிய‌து. இன்று என் பெற்றோரிட‌ம் சென்று "நான் அவ‌ளுட‌ன் திரும‌ண‌ம் செய்துகொள்ளாம‌ல் வாழ‌ப்போகிறேன்" என்று சொன்னால், அவ‌ர்க‌ள் அதை க‌ண்டிப்பாக‌ ஏற்றுக்கொள்ள‌ மாட்டார்க‌ள். இதையே இன்னும் இருப‌து, இருப‌த்தைந்து வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து என் ம‌க‌ன்/ள் என்னிட‌ம் கூறி, அத‌ற்கு நான் ம‌றுத்தால், அவ‌ர்க‌ள் "ச‌ரிப்பா உங்க‌ இஷ்ட‌ம்" என்றா சொல்வார்க‌ள்? ஹுஹும், அப்ப‌டி சொல்வார்க‌ள் என்று என‌க்கு தோன்ற‌வில்லை.


இதெல்லாம் ந‌ம் நாட்டில் நட‌க்காது என்று வாதிடுப‌வ‌ர்க‌ளுக்கு ஒரு வாழும் உதார‌ண‌ம் ந‌டிக‌ர் க‌ம‌ல்ஹாச‌ன். என்னைக் கேட்டால், இருப‌த்தைந்து வ‌ருட‌ங்க‌ளுக்கு பின் இருக்க‌வேண்டிய‌ சினிமா அறிவை, வாழ்க்கை முறையை க‌ம‌ல் இப்போதே பெற்றிருக்கிறார் என்றே கூறுவேன். நான் அறிந்த‌வ‌ரை ப‌ல‌ பெண்க‌ளுக்கு க‌ம‌லை மிக‌வும் பிடித்திருக்கிற‌து. ஆனால் அவ‌ருடைய‌ வாழ்க்கை முறையை அவ‌ர்க‌ள் க‌டுமையாக‌ விம‌ர்ச‌ன‌ம் செய்கின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளுக்கு நான் சொல்ல‌ விரும்புவ‌து, "நூறு ரூபா செல‌வு ப‌ண்ணி ப‌ட‌ம் பாக்க‌றோம், ப‌ட‌ம் ந‌ல்லாருக்கா, அவ‌ர் ந‌ல்லா ந‌டிச்சிருக்காரா? அவ்ளோதான் ந‌ம‌க்கு பேச‌ற‌ உரிமை. யார்கூட‌ வாழ‌ணும்ங்க‌ற‌து அவ‌ரோட‌ விருப்ப‌ம். அதுல‌ த‌லையிட‌ நாம‌ யாரு?"

லிவிங் டுகெத‌ர் வாழ்க்கை முறை த‌ற்போதிருக்கும் திரும‌ண‌ வாழ்க்கை முறையை விட‌ சிற‌ந்த‌து என்று நான் கூற‌வில்லை. ஆனால் சில‌ வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து இந்த‌ வாழ்க்கை முறைதான் அதிக‌ரித்து இருக்கும். அதை எதிர்க்க‌வும் முடியாத‌ சூழ்நிலையில்தான் நாமும் இருப்போம். இது க‌ண்டிப்பாக‌ க‌லாச்சார‌ சீர‌ழிவு கிடையாது. அப்ப‌டி பார்த்தால் 70க‌ளில் அதிக‌ம் ஏற்றுக்கொள்ள‌ப்ப‌டாத‌ காத‌ல் திரும‌ண‌ங்க‌ள் கூட‌ இன்றைய‌ க‌லாச்சார‌ சீர‌ழிவுதான். அதை ம‌ட்டும் எப்ப‌டி இன்று ந‌ம்மால் ஏற்றுக்கொள்ள‌ முடிகிற‌து? நாம் விரும்புகிறோமோ இல்லையோ, நாளை ந‌ம் பிள்ளைக‌ள் இந்த‌ வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்தால் ந‌ம்மால் என்ன‌ செய்ய‌ முடியும்? அப்போது அவ‌ர்க‌ள் "நான் இவ‌னு/ளுட‌ன் வாழ‌ப்போகிறேன்" என்று பெற்றோரிட‌ம் த‌க‌வ‌ல் சொல்வார்க‌ளே த‌விர‌, அனும‌தியை எதிர்பார்த்துக் காத்திருக்க‌ ‌மாட்டார்க‌ள். அடுத்த‌ த‌லைமுறையின் ஐடியால‌ஜியை ஏற்றுக்கொள்ளும் ம‌ன‌நிலையை நாம் இப்போதே உருவாக்கிக்கொள்வ‌தை த‌விர‌ ந‌ம‌க்கு வேறு வ‌ழியில்லை.

இப்ப‌திவைப் ப‌ற்றி ப‌ல‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ள் எழ‌லாம். ஆனால் விம‌ர்ச‌ன‌ங்க‌ளுக்கு ப‌ய‌ந்தால் "யார் தெச்ச ச‌ட்டை, தாத்தா தெச்ச‌ ச‌ட்டை" என்றுதான் எழுதிக்கொண்டிருக்க‌ முடியும். அத‌னால், நாக‌ரிக‌மான‌ வார்த்தைக‌ள் இருக்கும் ப‌ட்ச‌த்தில், இப்ப‌திவைப் ப‌ற்றியோ, என்னைப் ப‌ற்றியோ வ‌ரும் விம‌ர்ச‌ன‌ங்க‌ளை வ‌ர‌வேற்கிறேன். முறைய‌ற்ற‌ வார்த்தைக‌ள் இருந்தால் டெலிட் செய்வ‌தை த‌விர‌ வேறு வ‌ழியில்லை, ம‌ன்னியுங்க‌ள் :)

Thursday, March 25, 2010

108 - பாராட்ட‌ணும்னு தோணுது

க‌ண்ணெதிரே ந‌ட‌ந்த‌ இரு ச‌ம்ப‌வ‌ங்க‌ள். ச‌ம்ப‌வ‌ங்க‌ள்? விப‌த்துக‌ள் என்ப‌தே ச‌ரி. இந்த‌ விப‌த்துக‌ளைப் ப‌ற்றி எழுதி ப‌திவுக‌ளின் எண்ணிக்கையில் மேலும் ஒன்றை அதிக‌ரித்துக்கொள்வ‌த‌ற்காக‌ எழுத‌வில்லை. ம‌ன‌தில் தோன்றிய‌தை அப்ப‌டியே ப‌திவிடுகிறேன்.

இர‌ண்டு மாத‌ங்க‌ளுக்கு முன்பு......

ஒரு ஞாயிற்றுக்கிழ‌மை மாலையில், 'பைக்'கிற்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு வ‌ரும் வ‌ழியில், வெகு நாளாய் ச‌ந்தித்திராத‌ ந‌ண்ப‌ன் ஒருவ‌னை ச‌ந்தித்தேன். 'பைக்'கை ஓர‌மாக‌ நிறுத்திவிட்டு இருவ‌ரும் பேசிக்கொண்டிருந்தோம். ப‌த்து அல்ல‌து ப‌தினைந்து நிமிட‌ங்க‌ள் ஆகியிருக்கும். கொஞ்ச‌ தூர‌த்தில் ஒரு ச‌த்த‌ம். எப்ப‌டி சொல்வ‌தென்று தெரிய‌வில்லை. ப‌டார் என்றா? ட‌மார் என்றா? ச‌த்த‌த்தை விட‌ நாங்க‌ள் பார்த்த‌ காட்சி கொடுமையான‌து. 'பைக்'கில் சென்ற‌ ஒருவ‌ர், வ‌ண்டி ச‌றுக்கி, உருண்டு புர‌ண்டு சில‌ அடி த‌ள்ளி கீழே விழுந்தார். நாங்க‌ள் இருவ‌ரும் அருகில் சென்று பார்க்கும்போது, அங்கு அத‌ற்குள் கூடிவிட்ட‌ ந‌ப‌ர்க‌ளிட‌மிருந்து, :(, :(( போன்ற‌வை ம‌ட்டும‌ல்லாம‌ல் வார்த்தை பின்னூட்ட‌ங்க‌ள் வ‌ர‌த் தொட‌ங்கியிருந்த‌து.

'த‌ண்ணிபா, அதான் இவ்ளோ ஃபாஸ்ட்டா வ‌ந்துக்குறான்', 'இல்ல‌ங்க‌, நாய் குறுக்க‌ பூந்துடுச்சு, வ‌ண்டிய‌ அவ‌னால‌ க‌ண்ட்ரோல் ப‌ண்ண‌ முடிய‌ல‌', 'யாராவ‌து 108க்கு கால் ப‌ண்ணுங்க‌'

நான் என் அலைபேசியை எடுப்ப‌த‌ற்குள், ஒருவ‌ர் சொன்னார், "ப‌ண்ணியாச்சுங்க‌, இதோ வ‌ரேன்னிருக்க‌றாங்க‌".

சென்ற‌ வார‌ம்......

இந்த‌ மாத‌ம் இரவுப் ப‌ணியாத‌லால், விடிய‌ற்காலை மூன்று ம‌ணிக்கு ஒரு ப்ரேக் எடுக்க‌லாம் என்றெண்ணி, நானும் ந‌ண்ப‌ர்க‌ளும் ஒரு வாக் போனோம். கிண்டி ஒலிம்பியா டெக் பார்க் அருகே சாலைப் ப‌ணியாள‌ர்க‌ள் அந்த‌ நேர‌த்திலும், எதிரே வ‌ரும் வாக‌ன‌ங்க‌ளின் ஓட்டுன‌ர்க‌ளுக்கு உண‌ர்த்தும் பொருட்டு, சிவ‌ப்பு கோன் ஒன்றை சாலையில் வைத்துவிட்டு, வேலை செய்துகொண்டிருந்த‌ன‌ர். சூடான‌ ம‌சால் வ‌டையை ஒரு கை (வாய்?) பார்க்க‌ டீக்க‌டைக்கு நாங்க‌ள் சென்றுகொண்டிருக்கையில், ப‌ய‌ங்க‌ர‌ ச‌த்த‌ம். ஏனோ இரண்டு மாத‌ங்க‌ளுக்கு முன் பார்த்த‌/கேட்ட‌‌ அந்த‌ விப‌த்து/ச‌த்த‌ம் ம‌ன‌தில் வ‌ந்துபோன‌து. ஒலிம்பியா என்ட்ர‌ன்ஸ் அருகே செக்யூரிட்டிக‌ள் கூடியிருந்த‌ன‌ர். அருகே சென்று பார்த்த‌போது, அங்கு வேலை செய்து கொண்டிருந்த‌ சாலைப் ப‌ணியாள‌ர் ஒருவ‌ர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். கொஞ்ச‌ம் மேலும் கீழுமாய் அசைவிலிருந்த‌ அவ‌ரின் வ‌யிறு ம‌ட்டுமே அவ‌ர் உயிரோடு இருப்ப‌தை உறுதிப‌டுத்திய‌து. ம‌ற்ற‌ப‌டி அவ‌ரிட‌ம் எந்த‌ அசைவும் இல்லை.

மீண்டும் பின்னூட்ட‌ங்க‌ள். 'ஒரு பொ.போ இடிச்சுட்டு அவ‌ன் பாட்டுக்கு போய்ட்டாங்க‌', 'கார் ந‌ம்ப‌ரை நோட் ப‌ண்ணியாப்பா?', 'ஆள் அவுட்டுன்னு நினைக்குறேன்', 'இவ‌னுங்க‌ ஏன் இந்த‌ டைம்ல‌ வேலை செய்ய‌றானுங்க‌?'

உட‌ன் வ‌ந்திருந்த‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் துளியும் தாம‌த‌மின்றி த‌ன் அலைபேசியை எடுத்து 108க்கு கால் செய்தார் (என்னுடைய‌தை அலுவ‌ல‌க‌த்தில் கீபோர்ட் ப‌க்க‌த்திலேயே வைத்துவிட்டேன்). இட‌ம், ந‌ண்ப‌ரின் பெய‌ர் எல்லாம் கேட்டுக்கொண்டார்க‌ள்.



ஏன் இந்த‌ ப‌திவு?

மேற்கூறிய‌ இரு விப‌த்துக‌ளின்போதும், 108க்கு கால் செய்த‌பின், ஆம்புல‌ன்ஸ் அங்கு வ‌ந்து சேர‌ எடுத்துக்கொண்ட‌ நேர‌ம் வெறும் 10 நிமிட‌ங்க‌ளுக்குள். இதில் குறிப்பிட‌த்த‌க்க‌ விஷ‌ய‌ம், ம‌ருத்துவ‌ம‌னையில் ம‌ட்டும் ஆம்புல‌ன்ஸை நிறுத்திவைக்காம‌ல், குறிப்பிட்ட‌ ஏரியாக்க‌ளுக்கு த‌லா ஒரு ஆம்புல‌ன்ஸ் என்று எளிதாக‌ இச்சேவையை ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ளும்ப‌டி திட்ட‌மிட்டு செய‌ல்ப‌டுத்துகிறார்க‌ள். நாங்க‌ள் கிண்டியிலிருந்து கால் செய்த‌போது, வ‌ண்டி ஆல‌ந்தூரிலிருந்து வ‌ருவ‌தாக‌ சேவை மைய‌ அதிகாரி தெரிவித்தார்.

ஆம்புல‌ன்ஸில் வ‌ந்த‌வ‌ர்க‌ளும், யாரையும் ப‌த‌ற்ற‌ம‌டைய‌விடாம‌ல், துளியும் மெத்த‌ன‌மின்றி, மிகுந்த‌ பொறுப்பாக‌வே செய‌ல்ப‌ட்ட‌ன‌ர். அவ‌ர்க‌ள் அணுகுமுறையை பார்க்கும்போது கை கொடுத்து பாராட்ட‌ வேண்டும் போலிருந்த‌து‌ என‌க்கு. ஆனால் அந்த‌ சூழ்நிலையில் அச்செய‌ல் ச‌ரிய‌ல்ல‌ என்று தோன்றிய‌தால் கை கொடுக்க‌ நினைத்த‌தை கைவிடும்ப‌டியான‌து.

பெட்ரோல் விலையை ஏற்றும்போது, காய்க‌றி விலையை ஏற்றும்போது, சாலைக‌ள் குண்டும் குழியுமாக‌ இருப்ப‌தை காணும்போது என‌ ஒரு நாளில் எவ்வ‌ள‌வோ கார‌ண‌ங்க‌ளுக்காக‌, மாநில‌ அர‌சையோ, ம‌த்திய‌ அர‌சையோ குறை கூறுகிறோம். ஆனால் இந்த‌ 108 அவ‌ச‌ர‌ச்சேவையை என்றாவ‌து பாராட்டியிருக்கிறோமா? ச‌த்திய‌மாக‌ நான் இதுவ‌ரை யாரிட‌மும் பாராட்டி சொன்ன‌தில்லை. அப்ப‌டி பாராட்டாம‌ல் இருப்ப‌து ச‌ற்று உறுத்த‌லாக‌வே இருக்கிற‌து, அத‌ற்காக‌த்தான் இப்ப‌திவு.

என்னைக் கேட்டால், நாட்டின் மிக‌ச்சிற‌ந்த‌ திட்ட‌ங்க‌ளில் (அப்ப‌டி உண்மையாக‌வே நிறைய‌ திட்ட‌ங்க‌ள் இருந்தால்) இந்த‌ 108தான் சிற‌ந்த‌து என்பேன். உயிர் காப்ப‌தைவிட‌ சிற‌ந்த‌து வேறென்ன‌ இருக்க‌முடியும்?

எந்த‌ புண்ணிய‌வான் இந்த‌ திட்ட‌த்திற்கு ஐடியா கொடுத்தார் என்று தெரிய‌வில்லை. அந்த‌ ம‌ண்டைக்கார‌ர் எங்கிருந்தாலும் ந‌ன்றாக‌ இருக்க‌வேண்டும். ம‌க்க‌ளை காப்ப‌து அர‌சின் க‌ட‌மைதானே, இத‌ற்கு ஏன் பாராட்ட‌ வேண்டும் என்று கேட்க‌லாம். தேர்வில் ந‌ல்ல‌ மார்க் எடுக்க‌ வேண்டிய‌து ஒரு ம‌க‌னி/ளின் க‌ட‌மை. முத‌ல் ரேங்க் வாங்கினால் ஏன் அவ‌ர்க‌ளுக்கு ப‌ரிசு, பாராட்டு எல்லாம்? நான் ஃப‌ர்ஸ்ட் ரேங்க்பா என்று சொன்ன‌வுட‌ன், 'ம்' என்ப‌த‌ற்கும், த‌ட்டிக்கொடுத்து 'வெரிகுட்றா செல்ல‌ம்' என்ப‌த‌ற்கும் எவ்வ‌ள‌வு வித்தியாச‌ம் என்ப‌தை சொல்ல‌ வேண்டிய‌தில்லை. அர‌சை குட்ட‌ வேண்டிய‌ விஷ‌ய‌ங்க‌ளில் க‌ண்டிப்பாக‌ குட்டுவோம், த‌வ‌றில்லை. ஆனால் த‌ட்டிக்கொடுக்க‌ வேண்டிய‌ விஷ‌ய‌ங்க‌ளில் நாம் க‌ண்டும் காணாம‌ல் இருப்ப‌து ச‌ரியா?

இந்த‌ 108 அவ‌ச‌ரச்சேவையில், வெறும் க‌ட‌மையென‌ நினைக்காம‌ல், மிகுந்த‌ அக்க‌றையுட‌ன் ப‌ணிபுரிந்து கொண்டிருக்கும் அனைவ‌ருக்கும், பாராட்டுக‌ள்....பாராட்டுக‌‌ளைவிட‌ ச‌ரியான‌து.... ந‌ன்றிக‌ள்!

Sunday, March 21, 2010

என‌க்கு (மிக‌வும்) பிடித்த‌ ப‌த்து பெண்க‌ள்

"ப‌த்து பெண்க‌ள் ப‌த்த‌ல‌" என்றுதான் (காப்பிய‌டித்து) இப்ப‌திவுக்கு த‌லைப்பு வைக்க‌ யோசித்திருந்தேன். ஆனால் அது ட‌புள், ட்ரிபிள் மீனிங் ஆகி, வெண்ணிற‌ ஆடை மூர்த்தி ரேஞ்சுக்கு ந‌ம்மை மாற்றி விடுமோ என்றெண்ணி மாற்றிவிட்டேன். இந்த‌ தொட‌ர் ப‌திவிற்கு அழைத்த‌ 'நாய்க்குட்டி ம‌ன‌சு'க்கு ந‌ன்றி.

விதிக‌ள்:

1. உற‌வின‌ர்க‌ளாக‌ இருக்கக்கூடாது
2. வ‌ரிசை முக்கிய‌மில்லை
3. ஒரே துறையில், பிடித்த‌ ப‌ல‌ பெண்க‌ள் இருந்தாலும் ஒருவ‌ரைத்தான் குறிப்பிட‌வேண்டும்

4. ப்ரேக் த‌ ரூல்ஸ்....இது சொந்த‌ ச‌ர‌க்கு (நாம‌ல்லாம் எப்போ ம‌த்த‌வ‌ங்க‌ சொல்றத‌ கேக்க‌றோம் :)))

அன்னை தெர‌சா, இந்திரா காந்தி, ஐஸ்வ‌ர்யா ராய் போன்றோரையெல்லாம் யாருக்குத்தான் பிடிக்காது? மேலும் இவ‌ர்க‌ளைப் ப‌ற்றி நிறைய‌ பேர் எழுதிவிட்டார்க‌ள். அத‌னால்தான் ப்ரேக் த‌ ரூல்ஸ் :)

ஹேமா

க‌ல்லூரியில் என‌க்கு சீனிய‌ர். முதலாம் ஆண்டு இள‌நிலை க‌ணிணி அறிவிய‌ல் ப‌டிக்கும்போது FORTRAN, COBOL ஆகிய‌வ‌ற்றைத் தெரிந்துகொள்வ‌த‌ற்கு முன் நாங்க‌ள் தெரிந்துகொண்ட‌ வார்த்தை FIGURE. ஹேமா - அவ்வ்வ்வ‌ள‌வு ஹோம்லியாக‌, அழ‌காக‌ இருப்பார். ப‌டிப்பிலும் எப்பொழுதும் 70 ச‌த‌வீத‌த்திற்கு குறைந்த‌தில்லை. கொஞ்ச‌ தூர‌த்தில் எதிரே வ‌ந்தாலும் 'H' வ‌ருதுடா, 'H' வ‌ருதுடா என்று எங்க‌ளுக்குள் சிக்ன‌ல்க‌ள் ப‌ரிமாற‌ப்ப‌டும். அவ‌ர் வ‌ரும்போது, க‌ண்க‌ள் அவ‌ரை பார்க்காத‌துபோல் வேறெங்கோ பார்த்து, பின்பு எங்க‌ளை க‌ட‌ந்து போகும்போது ஓர‌க்க‌ண்ணால் பார்த்து....ஹும்...சைட் அடிக்க‌ற‌து ஒரு 'க‌லை'ங்க‌. ச‌னிக்கிழ‌மைக‌ளில், க‌ல்லூரிக்கு சில‌ ச‌ம‌ய‌ம் தாவ‌ணியில் வ‌ந்து, கூட‌வே 'தாவ‌ணி பெண் போல் யார‌ழ‌கு" என்ற‌ பாட‌ல் வ‌ரியையும் எங்க‌ள் நினைவுக்கு கொண்டு வ‌ருவார். அவ்வ‌ள‌வு அழ‌காய் இருந்தும் ஒருவ‌ரும் ப்ரொபோஸ் ப‌ண்ண‌வில்லை. கார‌ண‌ம், அவ‌ர் ஒரு 'போலீஸ்கார‌ன் ம‌க‌ள்'!

க‌ல்லூரி முடித்த‌பின் ஒரு நாள் கோயிலில், உற்ச‌வ‌ர் ச‌ன்ன‌தியில் க‌ண் மூடிக் கும்பிட்டு, க‌ண் திற‌ந்த‌பின் எதிரே பார்த்தால் ஹேமா! "ஹாய் எப்ப‌டியிருக்கீங்க‌" என்று கேட்ப‌த‌ற்கு கூட‌ தைரிய‌ம் வ‌ர‌வில்லை. வ‌ந்த‌து ஒரு க‌விதைதான்...

தெய்வ‌ த‌ரிச‌ன‌ம் வேண்டி
கோயிலுக்கு வ‌ந்தேன்
கிடைத்த‌து
தேவ‌தையின் த‌ரிச‌ன‌ம்!

இதை க‌விதை என்று யாராவ‌து ஏற்றுக்கொள்ளாவிட்டால், ஒரு முழு ப‌திவே க‌விதைக‌ளாக‌ வெளியிட‌ப்ப‌டும் என்று கொஞ்சூண்டு க‌டுமையாக‌ எச்ச‌ரிக்கிறேன் :)

ஷைல‌ஜா மேம்

க‌ல்லூரி இறுதியாண்டில் எங்க‌ளுக்கு Microprocessor ச‌ப்ஜெக்ட் எடுக்க‌ வ‌ந்த‌ லெக்ச‌ர‌ர். லெக்ச‌ர‌ர் என்றால் த‌ய‌வுசெய்து 45, 50 வ‌ய‌துக்கு மேல் இருக்கும் என்று க‌ற்ப‌னை செய்துவிடாதீர்க‌ள். எங்க‌ளை விட‌ வெறும்....வெறும் 3 வ‌ய‌து ம‌ட்டுமே மூத்த‌வ‌ர். இவ‌ர் ப‌க்க‌த்தில் த‌ம‌ன்னாவை நிற்க‌வைத்தால் அப்ப‌டியே ட்வின்ஸ் போல‌ இருப்பார்க‌ள். ஆனால் வெறும் அழ‌குக்காக‌ ம‌ட்டும் இவ‌ர் என்னை ஈர்க்க‌வில்லை. மிக‌ப் பொறுப்புட‌ன் வ‌குப்பெடுத்தார். பெரும்பாலும், வ‌குப்பில் நான்காவ‌து ரேங்கில் இருந்த‌ என்னை, ஒருமுறை கூப்பிட்டு, "டெஸ்ட்ல‌ உன்னோட‌ பேப்ப‌ர் ப்ர‌ச‌ன்டேஷ‌ன் ந‌ல்லாருக்கு, நீ க‌ண்டிப்பா அண்ணா யூனிவ‌ர்சிட்டியில‌ MCA என்ட்ர‌ன்ஸ் எக்ஸாம் எழுது, கிடைக்க‌ற‌துக்கு சான்ஸ் இருக்கு" என்றார். "இல்ல‌ மேம், நீங்க‌ என்னை த‌ப்பா புரிஞ்சுட்ருக்கீங்க‌, நான் அப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ன் இல்ல‌" என்றேன் சிரித்துக்கொண்டே. "இத‌னால‌தான் நீ இன்னும் ஃப‌ர்ஸ்ட் ரேங்க் வாங்காம‌ இருக்க‌" என்றார். என் மேல் என‌க்கிருந்த‌ ந‌ம்பிக்கையின்மையை உண‌ர‌வைத்த‌வ‌ர்.

வேண்டுமென்றே அவ‌ர் க‌வ‌ன‌த்தை த‌ன் ப‌க்க‌ம் ஈர்க்க‌, சக மாணவ‌ன் ஒருவ‌ன் ஒருமுறை "மேம், நீங்க‌ நட‌த்துற‌தே புரிய‌ல‌" என்றான். ப‌திலுக்கு "நீங்க‌ க்ளாஸை க‌வ‌னிச்சாத்தானே? என்னையே பாத்துட்டிருந்தா?" என்று ப‌டாரென்று சொல்லி அவ‌னை ஸ்விட்ச் ஆஃப் செய்தார். Boldness - என‌க்கு இவ‌ரிட‌ம் மிக‌வும் பிடித்த‌ ஒன்று. இப்போது எங்கிருக்கிறார் என்று தெரிய‌வில்லை. ஒரு முறையாவ‌து பார்க்க‌வேண்டும் என்று நினைக்கிறேன், பார்ப்போம்...

பி.சுசீலா


ஏதாவ‌து பிர‌ச்னை, டென்ஷ‌ன் என்றால் நான் உட‌ன‌டியாக‌ கேட்க‌ விரும்புவ‌து இந்த‌ குயிலின் ஓசையைத்தான். இர‌வு தூங்க‌ப்போகும் முன் இவ‌ர் பாடிய‌ பாட‌ல்க‌ளை கேட்டுப்பாருங்க‌ள். ம‌ன‌துக்கு அப்ப‌டியொரு ரிலாக்ஸேஷ‌ன் கிடைக்கும். இவ‌ர் பாடிய‌ அனைத்து பாட‌ல்க‌ளுமே அருமைதான் என்றாலும் "புதிய‌ ப‌ற‌வை" ப‌ட‌த்தில் வ‌ரும் "உன்னை ஒன்று கேட்பேன்", "பார்த்த‌ ஞாப‌க‌ம் இல்லையோ" பாட‌ல்க‌ள் என்னுடைய‌ மோஸ்ட் ஃபேவ‌ரைட்.

ஜெய‌ல‌லிதா

தைரிய‌த்தில் இவ‌ர‌ள‌வுக்கு இணையாக‌ இந்தியாவில் ஒரு பெண் அல்ல‌, ஆண் அர‌சிய‌ல்வாதி கூட‌ கிடையாது. ஆனால் அந்த‌ தைரிய‌த்தை பெரும்பாலும், உட‌ன்பிற‌வா ச‌கோத‌ரியை ச‌பாநாய‌க‌ர் நாற்காலியில் உட்கார‌வைத்து அழ‌கு பார்ப்ப‌து போன்ற‌ தேவைய‌ற்ற‌ வேலைக‌ளுக்குத்தான் செய‌ல்ப‌டுத்துகிறார். ம‌ழை நீர் சேக‌ரிப்புத் திட்ட‌ம், சென்னைக்கு வீராண‌ம் குடிநீர், எதிர்ப்பு வ‌ரும் என்று தெரிந்தும் ஜெயேந்திர‌ரை கைது செய்த‌து, காட்டுக்கு கோபாலையும், பெட்டியையும் ம‌ட்டுமே அனுப்பிய‌ அர‌சுக‌ள் போல‌ல்லாம‌ல், காவ‌ல்துறைக்கு முழு சுத‌ந்திர‌ம் கொடுத்து, வீர‌ப்ப‌னை வீழ்த்திய‌து, அர‌சு ஊழிய‌ர்க‌ளை மிர‌ள‌ வைத்த‌து என‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ள் இவ‌ரின் தைரிய‌த்திற்கும், திற‌மைக்கும் எடுத்துக்காட்டு.

பிர‌தம‌ராகும் த‌குதியிருந்தும் த‌ன் ஆண‌வ‌ப் போக்காலேயே அதை இழ‌ந்து நிற்கிறார். "என் அர‌சு", "நான் ஆணையிட்டேன்" என்றுதான் பெரும்பாலும் பேச்சில் நிறைந்திருக்கும். இவ‌ர் பிர‌த‌ம‌ர் ஆகியிருந்தால் 11/26க்கு பிற‌கு க‌ண்டிப்பாக‌ பாகிஸ்தான் தீவிர‌வாதிக‌ளை ஒரு வ‌ழி ப‌ண்ணியிருப்பார். ஆனால் இன்றுள்ள‌ த‌லைவ‌ர்க‌ளோ, இன்னும் க‌சாபுக்கு பிரியாணி ச‌ப்ளை செய்துகொண்டிருக்கின்ற‌ன‌ர். என‌க்கு ஒரே ஒரு ப‌ய‌ம்தான்.....இவ‌ர் மீண்டும் ஆட்சிக்கு வ‌ந்தால், த‌மிழ்நாட்டின் த‌லைந‌க‌ராக‌ கொட‌நாடு மாறிவிடுமோ என்று!

ஸ்டெபி கிராப்


குதிரை பின்ன‌ல் அணிந்து, இவ‌ர் டென்னிஸ் ஆடுவ‌தை பார்க்க‌ வேண்டுமே, கொள்ளை கொள்ளும் அழ‌கு. பேஸ்லைனிலிருந்து இவ‌ர் அடிக்கும் ஷாட்டுக‌ள் ஒவ்வொன்றும் 'நச்' ர‌க‌ம். 1988ல் ஆஸ்திரேலிய‌ன் ஓப்ப‌ன், ஃப்ரெஞ்ச் ஓப்ப‌ன், விம்பிள்ட‌ன், யுஎஸ் ஓப்ப‌ன் ம‌ற்றும் ஒலிம்பிக்கில் த‌ங்க‌ம் என்று அனைத்திலும் வெற்றி பெற்று, அந்த‌ வ‌ருட‌த்தை 'கோல்ட‌ன் ஸ்லாம்'ஆக‌ கொண்டாடினார். இதை வேறெந்த‌ டென்னிஸ் ப்ளேய‌ராலும் இன்ற‌ள‌வும் சாதிக்க‌முடிய‌வில்லை. வெறும் அழ‌கையும், க‌வ‌ர்ச்சியையும் வைத்து டென்னிஸில் டேக் ஆஃப் ஆகி, மாட‌லிங்கில் லேண்ட் ஆகும் இன்றைய‌ வீராங்க‌னைக‌ளை(!) விட‌ ஸ்டெபி thousand times better. என்னைக் கேட்டால் துளிகூட‌ முக‌த்தில் டென்ஷ‌ன் இல்லாம‌ல் விளையாடுவ‌தில் இவ‌ரொரு லேடி ஸ்டீவ் வாஹ் என்பேன்.


ட்ரூ பேரிமோர் (Drew Barrymore)


இவ‌ர் ந‌டித்து இதுவ‌ரை நான் இர‌ண்டு ப‌ட‌ங்க‌ள்தான் பார்த்திருக்கிறேன். Charlie's Angels ம‌ற்றும் Charlie's Angels: Full Throttle. ஆனாலும் ம‌ன‌தில் ப‌ச்ச‌க்கென்று ஒட்டிக்கொண்டார். கொஞ்ச‌ம் ப‌ப்ளியாக‌, குழி விழும் க‌ன்ன‌த்துட‌ன், சுருள் முடியுட‌ன்......ஹும்ம்ம்ம். ச‌மீப‌த்தில் Whip It என்ற‌ ப‌ட‌த்தை த‌யாரித்து, இய‌க்கி இருந்தார். ரிச‌ல்ட்டும் பாஸிட்டிவாக‌வே வ‌ந்த‌து. இவ‌ர் ந‌டித்து வேறெந்த‌ ப‌ட‌ங்க‌ளும் நான் பார்க்காத‌தால், இவ‌ரின் ந‌டிப்பை ப‌ற்றி என‌க்கு அவ்வ‌ள‌வாக‌த் தெரிய‌வில்லை. ந‌டிப்பாங்க‌ முக்கிய‌ம்?.......ஹி...ஹி...:)

ஃப‌ரா கான் (Farah Khan)


பெண் இய‌க்குன‌ர்க‌ள் ப‌ட‌மென்றால் பெரும்பாலும் உண‌ர்ச்சி மிகுந்த‌ க‌தைக‌ளாக‌வே இருக்கும் (உதா: தீபா மேத்தா, ரேவ‌தி, ந‌ந்திதா தாஸ்...) என்ற‌ பிம்ப‌த்தை தூள் தூளாக‌ உடைத்து, ஆண்க‌ளுக்கு இணையாக‌ க‌ம‌ர்ஷிய‌ல் ஹிட்க‌ளையும் கொடுக்க‌ முடியும் என்று Main Hoon Na ம‌ற்றும் Om Shanti Om மூல‌ம் நிரூபித்த‌வ‌ர். Om Shanti Om ப‌ட‌த்தை குறைந்த‌பட்ச‌ம் 25 த‌ட‌வையாவ‌து பார்த்திருப்பேன்.ஷாரூக் ப‌ட‌மாக‌ இருந்தாலும், தீபிகா ப‌டுகோனுக்கும் ச(செ)ம வாய்ப்பு கொடுத்து ஒரே ப‌ட‌த்திலேயே அவ‌ரை ஸ்டார் ரேஞ்சுக்கு கொண்டு வ‌ந்த‌வ‌ர். ச‌மீப‌மாக‌ நீண்ட‌ கால‌ ந‌ண்ப‌ர் ஷாரூக்குட‌ன் ஏதோ ம‌ன‌ஸ்தாப‌ம் என்று பேச்சு அடிப‌டுகிற‌து. விரைவில் இருவ‌ரும் இணைந்தால் இன்னுமொரு ப‌க்காவான‌ வெற்றிப்ப‌ட‌த்தை எதிர்பார்க்க‌லாம்.

'பெப்ஸி' உமா


"மேட‌ம், உங்க‌கிட்ட‌ பேச‌ணும்னு ரெண்டு வ‌ருஷ‌மா ட்ரை ப‌ண்றேன் மேட‌ம்" என்ற‌ ட‌ய‌லாக் பிர‌ப‌ல‌ம‌டைய‌ கார‌ண‌மாக‌ இருந்த‌வ‌ர். ப‌ள்ளியில் ப‌டிக்கும்போது (அப்ப‌வேவா என்றெல்லாம் கேட்க‌கூடாது) வியாழ‌க்கிழ‌மை என்றால், எங்க‌ள் முக‌த்தில் அப்ப‌டியொரு ச‌ந்தோஷ‌ம் நிறைந்திருக்கும். என‌க்கு மிக‌வும் பிடித்த‌ நிற‌ம் க‌றுப்பு. அம்மா ஒருமுறை "உமா அடிக்க‌டி ப்ளாக் ஸாரியிலேயே வ‌ர்ற‌ மாதிரி இருக்கு" என்ற‌போது ம‌ன‌தில் 'ந‌க்ருத‌னா திர‌ன‌னா திர‌ன‌னா ந‌க்ருத‌னா தினா'.

"மீண்டும் இதே நாள் இதே நேர‌ம் உங்க‌ளை ச‌ந்திக்கும்வ‌ரை உங்க‌ளிட‌மிருந்து விடைபெறுவ‌து உங்க‌ள் உமா" என்பார், அப்ப‌டியே தேன் ஒழுகும் பேச்சில். ஒரே கான்செப்ட். ஆனால் ப‌த்து வ‌ருட‌ங்க‌ளாகியும் நிக‌ழ்ச்சி போர‌டிக்காம‌ல் போன‌து. சில‌ வ‌ருட‌ங்க‌ள், 'பெப்ஸி' உமாவிற்காக‌வே 'கோக்' குடிக்காம‌ல் கூட‌ இருந்திருக்கிறேன். ஹி..ஹி...அது விவ‌ர‌ம் தெரியாத‌ வ‌ய‌து...ஆனால் உமா ம‌ட்டும் தெரிந்தார். இவ்வ‌ள‌வு வ‌ருட‌ங்க‌ள் ஆகியும் இன்றும்‌ அழ‌காக‌த்தான் இருக்கிறார். இதைச் சொன்னால் "ஐய்ய‌, உமா இப்ப‌ ஆன்ட்டிடா' என்பார்க‌ள் சில‌ர். ப‌ர‌வாயில்லை, நான் ஒரு ஆன்ட்டி-ஹீரோவாக‌வே இருந்துவிட்டு போகிறேன். :)


த‌ம‌ன்னா


ஷைல‌ஜா மேம் போல் இருந்த‌தால் 'கேடி' ப‌ட‌த்தில் முத‌ல் முறை பார்த்த‌வுட‌னே பிடித்துவிட்ட‌து. ஆனாலும் ப‌ட‌ம் ஹிட்டாகாததால் ந‌ம் த‌மிழ் சினிமா குல‌ வ‌ழ‌க்க‌ப்ப‌டி ராசியில்லாத‌ ஹீரோயின் லிஸ்ட்டில் சேர்ந்தார். பின்பு சில‌ கால‌ம், ஆந்திராவில் மாட்லாடினாலும், 'க‌ல்லூரி'யில் ப‌டிக்க‌ வ‌ந்து, இப்போது 'அய‌ன்'ஐ பார்த்த‌வுட‌ன், 'க‌ண்டேன் காத‌லை' என்று மீண்டும் க‌ல‌க்க‌ ஆர‌ம்பித்துள்ளார். அடுத்து 'பையா'வையும் சொக்க‌வைத்துவிடுவார் என்றே நினைக்கிறேன். 'க‌ண்டேன் காத‌லை' ப‌ட‌த்தில் அப்ப‌டியே கரீனா க‌பூரை இமிடேட் செய்திருந்தார் என்று சில‌ர் குறை கூறின‌ர். இமிடேட் ப‌ண்ணுவ‌த‌ற்கு கூட‌ ஒரு டேல‌ண்ட் வேணுங்க‌.

'கேடி' ப‌ட‌த்தில் வில்லியாக‌ வ‌ந்தாலும், இவ‌ர் காத‌லித்த‌ க‌தாபாத்திர‌த்தின் பெய‌ர் 'ர‌கு' என்ப‌தை வ‌ர‌லாற்றில் பொறிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ விஷ‌ய‌மாக‌ நான் க‌ருத‌வில்லை. இதை மிகுந்த‌ தாழ்மையுட‌ன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அவ‌ர் ந‌டித்த‌ ப‌ட‌ங்க‌ளின் ஹீரோக்க‌ள் பெய‌ரோ, ஹீரோக்க‌ளுடைய‌ க‌தாபாத்திர‌ங்க‌ளின் பெய‌ரோ 'மோக‌ன் குமார்' இல்லை என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. :))

விக்னேஷ்வ‌ரி


இணைய‌த்தில் என‌க்கு கிடைத்த‌ முத‌ல் ந‌ட்பு. சென்ற‌ வ‌ருட‌ம் அக்டோப‌ரில்தான் இவ‌ர் ப‌திவை ப‌டிக்க‌ ஆர‌ம்பித்தேன். முத‌ல் முறை ப‌டித்த‌ அன்றே, இவ‌ர் அத‌ற்கு முன் எழுதிய‌ அனைத்து ப‌திவுக‌ளையும் ப‌டித்து முடித்தேன். நான் ஆர‌ம்ப‌த்தில் எழுதிய‌தையெல்லாம் ப‌டித்து பார்த்தால், என‌க்கே 'ச்சே' என்றிருக்கிற‌து. அங்கே யாரோ "இப்ப‌ ம‌ட்டும்?"னு கேட்க‌ற‌து புரியுது, இதெல்லாம் ச‌ரியில்ல‌ சொல்லிட்டேன். ஆனால் அப்போதிலிருந்தே பின்னூட்ட‌மிட்டு ஊக்க‌ப்ப‌டுத்தியவ‌ர், ஒரு க‌ட்ட‌த்தில் அவ‌ருக்கே ச‌லித்து போன‌தோ என்ன‌வோ, "ஏங்க‌ எப்ப‌வும் மொக்கையாவே எழுத‌றீங்க‌?" என்று உரிமையுட‌ன் கேட்டார். "நான் என்ன‌ங்க‌ ப‌ண்ற‌து, எழுத‌ ஆர‌ம்பிச்சா ஏதாவ‌து காமெடியாதான் தோணுது. சீரிய‌ஸா எழுத‌ணும்னா நீங்க‌ ஏதாவ‌து சொல்லுங்க‌" என்றேன். "இன்னைக்கு தாதா சாஹேப் பால்கே நினைவு தின‌ம், அவ‌ரை ப‌த்தி எழுதுங்க‌, ஆனா காமெடியா எழுதிடாதீங்க‌" என்றார். சீரிய‌ஸாக‌வே எழுதினேன். கொஞ்ச‌ நாள் க‌ழித்து வ‌லையில் சுற்றிக்கொண்டிருந்த‌போது ய‌தேச்சையாக‌ பார்த்தேன், விக‌ட‌ன் 'குட்பிளாக்ஸ்' லிஸ்ட்டில் அந்த‌ ப‌திவும் இருந்த‌து.

புற‌ம் பேசும் சில‌ வ‌ழிச‌ல் ந‌ப‌ர்க‌ளை நாம் திட்டினால்கூட‌, "ச‌ரி விடுங்க‌, என்னை ப‌த்தி க‌மெண்ட் அடிக்க‌றாங்க‌ங்க‌ற‌துக்காக‌ அவ‌ங்க‌ளை கெட்ட‌வ‌ங்க‌ன்னு சொல்ல‌முடியுமா, வேற‌ சில‌ருக்கு அவ‌ங்க‌ ந‌ல்ல‌வ‌ங்க‌ளாகூட‌ இருக்க‌லாம் இல்லியா" என்றார். கொஞ்ச‌ம் 'லைலா'த்த‌ன‌மாக‌வே தோன்றிய‌து என‌க்கு. என்ன‌தான் வாக்குவாத‌ம் செய்தாலும், க‌டைசியில் ஜ‌ஸ்ட் இக்னோர் இட் என்றே முடித்தார். ப‌த்து நாளைக்கு ஒரு முறை எழுதினாலும் ச‌ரி, இர‌ண்டு வார‌ங்க‌ளுக்கு ஒரு முறை எழுதினாலும் ச‌ரி, க‌மெண்ட்டுக‌ளை அள்ளுகிறார் இந்த‌ பிர‌ப‌ல‌ மாஸ் ப‌திவ‌ர். அச‌த்துங்க‌ அம்ம‌ணி! என் ந‌ண்ப‌ர் தினேஷ் யாரையும் த‌ர‌க்குறைவாக‌வோ, ம‌ன‌ம் புண்ப‌டும்ப‌டியாக‌வோ பேச‌க்கூடாது என்பார். விக்னேஷ்வ‌ரியும் பெரும்பாலும் இதுபோல‌த்தான் த‌ன் ம‌ன‌ உண‌ர்வை வெளிப்ப‌டுத்துகிறார். எப்ப‌டி என்று தெரிய‌வில்லை, சிறு வ‌ய‌திலிருந்தே சிற‌ந்த‌ ந‌ட்புக‌ள் என‌க்கு கிடைத்துக்கொண்டிருக்கின்ற‌ன‌. க‌ட‌வுளுக்கு ந‌ன்றி! இவ‌ரைப் ப‌ற்றி இன்னும் நிறைய‌ எழுத‌லாம், எழுதுகிறேன் ந‌ண்ப‌ர்க‌ள் தின‌த்த‌ன்று :)


எழுதி முடித்த‌ பிற‌குதான் தெரிகிற‌து, இவ்வ்வ்ளோ பெரிய‌ ப‌திவா என்று. பொறுமையாக‌ ப‌டித்த‌ அனைவ‌ருக்கும் ந‌ன்றி. அங்க‌ங்கே கொஞ்ச‌ம் 'ஜொள் ஆறு' ஓடியிருந்தாலும், ஓர‌ள‌விற்கு உண்மையாக‌த்தான் எழுதியுள்ளேன். இத்தொட‌ரை தொட‌ர‌ மேலும் சில‌ரை அழைக்கிறேன். உங்க‌ளுக்கு விருப்ப‌மிருந்தால் எழுதுங்க‌ என்றெல்லாம் சொல்ல‌மாட்டேன். எழுதுங்க‌ என்பேன் உரிமையுட‌ன் :)

விக்னேஷ்வ‌ரி
ப்ரியா
மோக‌ன்
ஜெட்லி
சைவ‌கொத்துப்ப‌ரோட்டா
ராஜு

Sunday, March 14, 2010

'பீட்ட‌ர்' விடுங்க‌, த‌ப்பேயில்ல‌!

"வ‌ண‌க்க‌ம்" - இதை இங்கிலீஷ்ல‌ எப்ப‌டி சொல்ற‌து? PG ப‌டிக்கும்போது என் ந‌ண்ப‌ன் கேட்டான்.

வ‌குப்பிலிருந்த‌ யாருக்குமே தெரிய‌வில்லை. "ஹ‌லோ"தானே என்ற‌ன‌ர் சில‌ர். "ஹுஹும்...'வ‌ண‌க்க‌'த்திற்கு இணையான‌ ஆங்கில‌ வார்த்தை கிடையாது. 'சிர‌ம் தாழ்த்தி வ‌ண‌ங்குகிறோம்' போன்ற‌ ம‌ரியாதையான‌ வ‌ண‌க்க‌த்திற்குத்தான் "Obeisance" என்று கூறுவ‌ர்" என்றான். ம‌றுநாளிலிருந்து நாங்க‌ள் ஒவ்வொருவ‌ரும் வ‌குப்புக்குள் நுழையும்போதே "Hi"க்கு ப‌திலாக‌ "Obeisance" என்றுதான் காலை வ‌ண‌க்க‌ம் சொல்ல‌த் தொட‌ங்கினோம். அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு புதிய‌ வார்த்தையை அக‌ராதியில் பார்த்து எங்க‌ளுக்கு சொல்லிக்கொடுப்பான். இதை ஏன் இப்போது சொல்கிறேன்? ப‌த்தாம் ம‌ற்றும் ப‌ன்னிர‌ண்டாம் வ‌குப்புத் தேர்வுக‌ள் எப்ப‌டியும் இன்னும் சில‌ வார‌ங்க‌ளில் முடிந்துவிடும். அத‌ற்கு பின் உங்க‌ள் பிள்ளைக‌ளையோ, உங்க‌ளுக்குத் தெரிந்த‌வ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளையோ ஸ்போக்க‌ன் இங்கிலீஷ் கோர்ஸில் சேர‌ச்சொல்லுங்க‌ள். த‌குதி இருந்தும், தான் செய்யும் வேலையில், ஒருவ‌ர் மேலும் வ‌ள‌ர‌ முடியாம‌ல் போவ‌த‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம் lack of communication skill. இத‌னால் நானும் ப‌ல‌ தோல்விக‌ளை ச‌ந்தித்திருக்கிறேன்!



நானும் ஒரு ஜீரோதான்


எல்.கே.ஜி முத‌ல் க‌ல்லூரி வ‌ரை நான் ப‌டித்த‌து ஆங்கில‌ வ‌ழிமுறைக் (இங்கிலீஷ் மீடிய‌ம்) க‌ல்விதான். ஆனால் க‌ல்லூரி முடிக்கும்போதுகூட‌, என் எதிரே இருப்ப‌வ‌ர் ஆங்கில‌த்தில் பேசினால், என்னால் புரிந்துகொள்ள‌ முடியுமே த‌விர‌, ப‌தில் கூற‌ ச‌ற்றே த‌டுமாறுவேன். கார‌ண‌ம், ப‌ள்ளியில் ப‌டித்த‌தெல்லாம் புரிந்து கொண்டு ப‌டித்த‌து அல்ல‌. வெறும் ம‌ன‌ப்பாட‌ம். வேலைக்கான‌ என் முத‌ல் நேர்முக‌த் தேர்வில், இது பெரிதாக‌ என்னை பாதிக்க‌வில்லை. வெறும் "Tell about yourself"தான். சுல‌பமாக‌ ச‌மாளித்தேன், வேலை கிடைத்த‌து. ஆனால் வேறு வேலைக்கு முய‌ற்சிக்கும்போது ஒரு நேர்முக‌த் தேர்வில், "Tell me, why do you think you're the right person for this job" என்று என்னை கேட்க‌, ப‌தில் நெஞ்சுக்குள் ம‌ட்டுமே இருந்த‌து. ஏதேதோ த‌ட்டுத் தடுமாறி சொல்லி சமாளித்தேன்.

ஆப்ஷ‌ன் ஏ - ர‌குவுக்கு இந்த‌ வேலை கிடைக்கும், ஆப்ஷ‌ன் பீ - ர‌குவுக்கு இந்த‌ வேலை கிடை‌க்காது என்று எந்த‌ சேன‌லாவ‌து எஸ்எம்எஸ் போட்டி வைத்திருந்தால், ஆப்ஷ‌ன் 'பீ'க்கே நூறு ச‌த‌வீத‌ ஓட்டு கிடைத்திருக்கும். இந்த‌ முடிவு என‌க்கும் தெரிந்திருந்த‌து. அத‌னால் இந்த‌ வேலை கிடைக்காம‌ல் போன‌த‌ற்காக‌ வ‌ருத்த‌ப்ப‌டாம‌ல், முத‌லில் க‌ம்யூனிகேஷ‌ன் ஸ்கில்லை டெவ‌ல‌ப் ப‌ண்ண‌ வேண்டும் என்று முடிவு செய்தேன். என‌க்கு முக்கிய‌ உத‌வியாய் இருந்த‌து "THE HINDU" ப‌த்திரிக்கை. கிரிக்கெட், சினிமா, அர‌சிய‌ல் தொட‌ர்பான‌ நிறைய‌ க‌ட்டுரைக‌ளை ப‌டித்து அக‌ராதி பார்த்து அர்த்த‌ம் புரிந்துகொள்ள‌ துவ‌ங்கினேன். பின்பு நேர்முக‌த் தேர்வுக்கு போகும் முன்பு வீட்டில் க‌ண்ணாடி பார்த்து எப்ப‌டியெல்லாம் பேச‌வேண்டும் என்று ப‌ழ‌கிக்கொண்டேன்.

சினிமாவில் ஐந்து நிமிட‌ங்க‌ளில் ப‌ண‌க்கார‌ராகும் ஹீரோ அல்ல‌வே நான். என‌வே முத‌லில் சில‌ நேர்முக‌த் தேர்வுக‌ளில் என‌க்குத் தோல்வியே கிடைத்த‌து. ஆனால் என்னாலும் ஆங்கில‌த்தில் பேச‌முடியும் என்ற‌ ந‌ம்பிக்கையை ம‌ட்டும் ஒவ்வொரு நேர்முக‌த் தேர்வும் கொடுக்க‌த் துவ‌ங்கிய‌து. என்னை தோல்வியுற‌ச் செய்த‌ அனைத்து க‌ம்பெனிக‌ளுக்கும் என‌து ந‌ன்றிக‌ள். சில‌ நாட்க‌ள் க‌ழித்து, "ப‌க‌வான் க‌ண்ணை தொற‌ந்துட்டான்" - வேலை கிடைத்த‌து.


இங்கிலீஷ் தெரியும்..............ஆனா American Accent.......

இரு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் டீம் மாறிய‌போது, அமெரிக்க‌ அண்ண‌ன்க‌ளோடும், அக்காக்க‌ளோடும் பேச‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம். முத‌ல் நாள் Conferece Callல் ஒரு Trainer அக்காவுட‌ன் அள‌வ‌ளாவிய‌தில் ஒன்றுமே புரிய‌வில்லை. கிரேஸி மோக‌ன் கேட்டிருந்தால் க‌ண்டிப்பாக‌ "என்ன‌ க‌ண்றாவிடா இது" என்றிருப்பார். பின்பு எங்க‌ள் மேல் இர‌க்க‌ப்ப‌ட்ட‌ அந்த‌ Trainer அக்கா Communicatorரிலேயே முத‌ல் நாள் ட்ரெய்னிங்கை முடித்தார். என் மேல் என‌க்கே எரிச்ச‌ல் வ‌ர‌, ஆன‌து ஆக‌ட்டும் என்று, ம‌றுநாளிலிருந்து அவ‌ரை Callலிலேயே ட்ரெயினிங் த‌ருமாறு கேட்டுக்கொண்டோம். ஆர‌ம்ப‌த்தில் கொஞ்ச‌ம் சிர‌ம‌மாக‌த்தான் இருந்த‌து...

அமெரிக்க‌ ஆங்கில‌த்தை புரிந்துகொள்ள‌, த‌க்க‌ ச‌ம‌ய‌த்தில் என‌க்கு மிக‌வும் உத‌வியாய் இருந்த‌வ‌ர்க‌ள், Harrison Fordம், Bruce Willisம். ஆங்கில‌ப் ப‌ட‌ங்க‌ள் டிவிடி வாங்கி இர‌ண்டு முறை ச‌ப்டைட்டிலுட‌ன் பார்த்து, பின்பு ச‌ப்டைட்டில் இல்லாம‌ல் ஒரு முறை பார்த்து, அவ‌ர்க‌ள் பேசுவ‌தை புரிந்துகொள்ள‌ முய‌ற்சி செய்தேன். இந்த‌ முறை நிஜ‌மாக‌வே ப‌ல‌ன் அளித்த‌து. "ஹாய்டா மச்சி" "Hey Dude" ஆன‌து. "Friend", "Buddy" ஆனான். இன்ற‌ள‌வும் American Accentஐ சுல‌பமாக‌ க‌ற்றுக்கொள்ள‌ நான் என் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ப‌ரிந்துரைப்ப‌து, ஆங்கில‌ ப‌ட‌ங்க‌ளை முத‌ல் இர‌ண்டு முறை ச‌ப்டைட்டிலுட‌னும், பின்பு ச‌ப்டைட்டில் இல்லாம‌லும் பார்க்க‌ச் சொல்வ‌துதான். முத‌லிர‌ண்டு முறை ச‌ரியாக‌ க‌வ‌னித்திருந்தால், மூன்றாவ‌து முறை பார்க்கும்போது அவ‌ர்க‌ள் பேசுவ‌து க‌ண்டிப்பாக‌ புரியும். என்ன‌....சில‌ ச‌ம‌ய‌ம் கோப‌ம் கொள்ளும்போதோ, எரிச்ச‌ல் அடையும்போதோ அந்த‌ நான்கெழுத்து F*** வார்த்தை சர‌ள‌மாக‌ வ‌ந்து தொலைக்கிற‌து. கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ இதை த‌விர்க்க‌ முய‌ன்றுகொண்டிருக்கிறேன்.

நீங்க‌ளாவ‌து.....

என்னுடைய‌ மொழி பிர‌ச்னைக்கு முக்கிய‌ கார‌ண‌ம், ப‌ள்ளியில் ப‌டிக்கும்போதே க‌ம்யூனிகேஷ‌ன் ஸ்கில்லை வ‌ள‌ர்த்துக்கொள்ள‌ பாட‌த்திட்ட‌த்தில்‌ எந்த‌ வ‌ழியும் இல்லாத‌து. இப்போது நான் சொல்லி, த‌மிழ‌க‌ க‌ல்வி அமைச்ச‌ர் பாட‌த்திட்ட‌த்தில் அதை கொண்டுவ‌ர‌ப் போவ‌தும் இல்லை. அத‌னால் அதைப் ப‌ற்றி எழுதுவ‌து கால‌ விர‌ய‌ம் என்றே நினைக்கிறேன். இப்போதுள்ள‌ சூழ்நிலையில், த‌மிழ்நாட்டில் உள்ள‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் வேலைக்கு சேர‌வேண்டுமென்றால், யாராயிருந்தாலும், ஆங்கில‌ம் மிக‌ மிக‌ அவ‌சிய‌ம். த‌மிழ்நாட்டை தாண்டி வ‌ட‌ இந்தியாவிற்கு போகிறீர்க‌ளா? ஹிந்தி மிக‌ மிக‌. டெல்லியில் வேலை செய்யும்போது அலுவ‌ல‌க‌த்தில் ஆங்கில‌த்தை வைத்து ச‌மாளிக்க‌லாம். ஆனால் Chandni Chowk சென்று காய்க‌றி வாங்கும்போது Can I have 1 kg of potato and 1/2 kg of tomato என்று கேட்டால், ஒரு ஏலிய‌னை விட‌ அதிச‌ய‌ப் பொருளாக‌ பார்க்க‌ப்ப‌டுவீர்க‌ள்.

பிள்ளைக‌ளை க‌ம்யூனிகேஷ‌ன் ஸ்கில் கோர்ஸுக்கு அனுப்பிவிட்டு 'என் க‌ட‌மை முடிந்த‌து' என்று இருந்துவிடாதீர்க‌ள். தின‌மும் ஒரு ம‌ணி நேர‌ம் ஆங்கில‌த்திலேயே அவ‌ர்க‌ளுட‌ன் உரையாடுங்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு கோர்ஸ் ப‌டிப்ப‌து ஒரு க‌ட‌மை என்ப‌து மாறி, பெற்றோருக்கு ச‌ம‌மாக‌ நாமும் ஆங்கில‌த்தில் பேச‌ வேண்டும் என்ற‌ ஆர்வ‌ம் அதிக‌ரிக்கும். இது மெட்ரிகுலேஷ‌ன் மாண‌வ‌ர்க‌ளின் பெற்றோர்க‌ளுக்கு அல்ல‌, ஸ்டேட் போர்டில் ப‌டிக்கும் மாண‌வ‌ர்க‌ளின் பெற்றோர்க‌ளுக்கு. நானும் ஸ்டேட் போர்டுதான்.

இந்த‌ ப‌திவு வெறும் சுய‌த‌ம்ப‌ட்ட‌த்திற்காக‌ அல்ல‌. த‌ம்ப‌ட்ட‌ம் அடித்துக்கொள்ளும் அள‌விற்கு நான் எல்லாம் அறிந்த‌வ‌னும் அல்ல‌, இன்ற‌ள‌வும் நான் க‌ற்றுக்கொள்வ‌தை நிறுத்த‌வில்லை. சென்ற‌ வார‌ம் கூட‌, "Thank You" என்று சொல்லும்போது நாக்கு, வாய் மேலே ஒட்ட‌க்கூடாது, வாயின் ம‌த்தியிலேயே இருக்க‌வேண்டும் என்று ந‌ட்பிட‌ம் இருந்து க‌ற்றுக்கொண்டேன். ஆனால், வாயின் ம‌த்தியிலேயே நாக்கை வைத்து "ஹேங்க் யூ" என்றே இன்னும் உள‌றிக்கொண்டிருக்கிறேன் :)))

Thursday, March 11, 2010

முள்ள‌ம்ப‌ன்றித் த‌லைய‌ன் நான்


ஏலே கேசவா ஏன்யா வாரதுக்கு இம்புட்டு நேரம்...


ஹாய் கேத்ரல். ஹவ் ஆர் யூ.

கொளுத்துற வெயில்ல இவ்ளோ முடியை வெச்சுக்கிட்டு பாடாபடுது பயபுள்ள. நல்லா ஒட்ட கட் பண்ணிப்புடுப்பா

லேட்ட‌ஸ்ட் ஸ்டைல்ல‌ க‌ட் ப‌ண்ணுங்க‌, மொத்தமா எல்லாம் கட் பண்ண வேண்டாம். அங்கங்கே அப்படி அப்படி இருந்தாத்தான் லுக்கா இருக்கும். என் கேர்ள் ஃப்ரெண்டுக்குப் பிடிக்கணும்

யப்பா... என்ன வெயில். இதுல ஒரு வேலையும் ஓட மாட்டேங்குது. ஆகாசவாணி செய்தி நேரமாச்சே, அந்த ரேடியோவ‌ த‌ட்டுப்பா

பாஸ், இட்ஸ் டூ ஹாட்......ஏஸில டெம்பரேட்சர் கொஞ்சம் கம்மி பண்ணுங்களேன், ஹேய், இந்த ராப் மியூஸிக் நல்லா இருக்குங்க. என்ன ஆல்பம்‌?


ம்..மேஸ்திரிகிட்ட‌ சொல்லியாச்சு, சொசைட்டில‌ லோன் அப்ளை ப‌ண்ணியிருக்கேன்பா, அந்த‌ அமெள‌ண்ட் வ‌ந்தாத்தான் க‌ட‌கால் எடுக்க‌ற‌துக்கே ஆர‌ம்பிக்க‌ணும்

வேற‌ ஜாப் பாத்துட்டிருக்கேன், ஃபினான்ஷிய‌லா செட்டில் ஆக‌ணும், அதுக்க‌ப்புற‌ம்தான் பாஸ் க‌ல்யாண‌ம்லாம்

என்ன‌ப்பா நீ.......பின்னாடிலாம் அப்ப‌டியே விட்டு வெச்சிருக்கியே, இன்னும் கொஞ்ச‌ம் ஒட்ட‌ப்புடி. ப‌ய‌ இன்னும் ரெண்டு வார‌த்துக்கு சீப்பையே எடுக்க‌க்கூடாது

ரொம்ப‌ ஷார்ட்லாம் வேணாம், கொஞ்ச‌ம் மீடிய‌மாவே இருக்க‌ட்டும். சீப்புக்கு கொஞ்ச‌ம் வேலை வைங்க‌ த‌லைவா!

நாலு ரூபாவா? என்ன‌ப்பா, திடீர்னு ரேட்டு அதிகமாக்கிட்ட!

எய்ட்டி? கூல்.........ப‌ட் என்கிட்ட‌ ஹ‌ண்ட்ர‌டாதான் இருக்கு, பர‌வால்ல‌, பேல‌ன்ஸ் நெக்ஸ்ட் டைம் வ‌ரும்போது அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.



வீட்டிற்கு வ‌ந்த‌பின்.....

ம்மா, என் த‌லைய‌ பாரும்மா :((

(அப்பாவிட‌ம் கோப‌மாக‌) என்ன‌ங்க‌ இது, த‌லைய‌ இப்ப‌டி குச்சி குச்சியா, முள்ள‌ம்ப‌ன்றித் த‌லைய‌னாட்ட‌ம் ஆக்கிவெச்சிருக்கிங்க‌? கொஞ்ச‌ம் திட்ட‌மா வெட்ட‌ சொல்ல‌க்கூடாது?

ஹாய் மாம், எப்ப‌டியிருக்கு நியூ ஹேர் ஸ்டைல்?!

(என்னிட‌ம் பாச‌மாக‌) என்ன‌டா‌ இது, த‌லைய‌ இப்ப‌டி குச்சி குச்சியா, முள்ள‌ம்ப‌ன்றித் த‌லைய‌னாட்ட‌ம் ஆக்கிவெச்சுருக்க‌? கொஞ்ச‌ம் திட்ட‌மா வெட்ட‌ சொல்ல‌க்கூடாது‌?

(அப்போ அப்பா) ஏய், இதுதாண்டி இப்ப‌ பேஸ‌ன், பேரு ச‌ம்ம‌ர் க‌ட்டிங்!

(இப்போ நான்) ம்மா, இதுதான்மா இப்ப‌ ஃபேஷ‌ன், பேரு ஸ்பைக் க‌ட்டிங்!


டிஸ்கி: இவ‌ர் எழுதிய‌தைப் பார்த்து இதுபோல் நாமும் எழுத‌வேண்டும் என்ற‌ எண்ண‌ம் தோன்றிய‌பின் அவ‌ரிட‌ம் முறையான‌ அனும‌தி பெற்ற‌ பின்பே எழுத‌ப்ப‌ட்ட‌ ப‌திவு இது. அத‌னால் "நீ காப்பிய‌டித்துவிட்டாய், இது பெருங்குற்ற‌ம்" என்று கூறி, என் மேல் காபிபோஸா (COFEPOSA) ச‌ட்ட‌ப்ப‌டி வ‌ழ‌க்கு தொட‌ர‌ முய‌ற்சிப்ப‌வ‌ர்க‌ளின் வீட்டுக்கு, 'ஜெய‌ம்' ராஜா இய‌க்கிய‌ ப‌ட‌ங்க‌ளின் டிவிடிக்க‌ள் த‌ய‌வு தாட்ச‌ண்ய‌மின்றி அனுப்பிவைக்க‌ப்ப‌டும்.

Sunday, March 07, 2010

ஐ லேடீஸ் லேடீஸ்!


நான் சிறுவ‌ய‌தில் வ‌ள‌ர்ந்த‌ சூழ‌லே பெண்க‌ள் நிறைந்த‌துதான். அத‌னால் பெண்க‌ள் இல்லாம‌ல் என் வாழ்க்கை இல்லை - க‌ம‌ல்ஹாச‌ன்.

க‌ல்லூரியில் ப‌டிக்கும்போது, எங்க‌ள் க‌ணிணி பிரிவு த‌லைவ‌ரை ப‌ற்றி பெருமையாக‌ குறிப்பிடுகையில் என் ந‌ண்ப‌ன் ஒரு முறை சொன்னான், "அவ‌ருக்கு பொண்ணுங்க‌ன்னாலே புடிக்காதுடா". நான் ப‌திலுக்கு கேட்டேன், "அப்ப‌ அவ‌ரு என்ன‌ இன்னொரு ஆம்ப‌ளையை க‌ல்யாண‌ம் ப‌ண்ணிப்பாரா?". பெற்றெடுக்க‌, வ‌ள‌ர்க்க‌, ம‌ண‌ம் புரிய‌, இவ‌ன் ஆண்தான் என‌ ச‌மூக‌த்துக்கு நிரூபிக்கும் பொருட்டு ஒரு பிள்ளை பெற்றுக்கொடுக்க‌, நோயுற்று ப‌டுக்கையில் விழும்போது க‌வ‌னித்துக் கொள்ள‌ என‌ ஒரு ஆணுக்கு பெண், பிற‌ப்பு முத‌ல் இற‌ப்பு வ‌ரை தேவைப்ப‌டுகிறாள்.


என‌க்கு பிடித்த‌ பெண்க‌ள் என்று சொல்லும்போது என் அம்மா, பாட்டி, அன்னை தெர‌ஸா, கிர‌ண்பேடி, சோனியா காந்தி என்று க‌ண்டிப்பாக‌ சீன் போட‌மாட்டேன். சினிமாவை பொறுத்த‌வ‌ரை, கொஞ்ச‌ம் காஜோல், கொஞ்ச‌ம் ராணி முக‌ர்ஜி, எலும்பு கூடு சைஸ் ஆவ‌த‌ற்கு முன் இருந்த‌ க‌ரினா க‌பூர், என்றும் ஐஸ்வ‌ர்யா ராய், நேற்று ஜோதிகா, இன்று த‌ம‌ன்னா (ந‌ண்ப‌ர் மோக‌ன் பின்னூட்ட‌ம் உறுதி...ஹி..ஹி..)..........நாளை ஸ்ருதிஹாச‌னாக‌ கூட‌ இருக்க‌லாம். அர‌சு ஊழிய‌ர்க‌ளை வீட்டிற்கு அனுப்பி அவ‌ர்க‌ளுக்கு டெர‌ர் கொடுக்கும்போதும், இந்தியாவே ஒரு சாமியாரை 'சூப்ப‌ர் ப‌வ‌ர்' ரேஞ்சுக்கு நினைத்துக் கொண்டிருக்கையில் வெகு அல‌ட்சிய‌மாக‌ அவ‌ரை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய‌‌போதும் செல்வி ஜெய‌ல‌லிதா அச‌த்தினார். ஆனால் அத‌ற்கு பின்பு ம‌ம்மி கொஞ்ச‌ம் ப‌ம்மிவிட்டார் என்றே சொல்ல‌வேண்டும். அழ‌கையும் தாண்டி, உல‌க‌ லெவ‌லில் டாப் 30ல் வ‌ந்த‌த‌ற்காக‌ சானியா மிர்ஸாவை என‌க்கு மிக‌வும் பிடித்திருந்த‌து. ஆனால் அவ‌ரையும், நீ ஒரு ஸ்போர்ட்ஸ் பெர்ச‌ன், பிரியாணி சாப்பிட‌லாமா? முஸ்லிம் பெண் இப்ப‌டி அரைகுறை ஆடை அணிந்து டென்னிஸ் ஆட‌லாமா என்று ரூம் போடாம‌லேயே சிந்தித்து, ப‌ல‌ புத்திசாலித்த‌ன‌மான‌ கேள்விக‌ள் கேட்டு ஒரு வ‌ழி செய்த‌ன‌ர் ந‌ம் அறிஞ்ர் பெரும‌க்க‌ள்.

என்னைப் பொறுத்த‌வ‌ரை தைரிய‌மான‌ பெண்க‌ளையே நான் விரும்புகிறேன் (விரும்புகிறேன் என்ப‌த‌ற்கு த‌ய‌வுசெய்து காத‌ல் என்ற‌ அர்த்த‌ம் கொள்ள‌வேண்டாம்). யாரிட‌மும் பேசாம‌ல் அமைதியாக‌ அட‌க்க‌மாக‌ இருக்கும் பெண்க‌ளை என‌க்கு பிடிப்ப‌தில்லை. ஒரு ஆண் திமிர்பிடித்த‌வ‌னாக‌ மாறுவ‌த‌ற்கு அல்ல‌து இருக்கும் திமிர் இன்னும் அதிக‌மாக‌ ஏறுவ‌தில் ச‌த்திய‌மாக‌, இந்த‌ அமைதி, அட‌க்க‌ பெண்க‌ள் பெரும் ப‌ங்கு வ‌கிக்கிறார்க‌ள்.


இந்திரா நூயி பெப்ஸிகோவுக்கு CEOவாக‌ ஆன‌போது, "இந்திய‌ பெண்", "இந்திய‌ பெண்" என்றே ஊட‌க‌ங்க‌ள் குறிப்பிட்டன‌ர். 2008ல், அமெரிக்காவில் லூஸியானா மாகாண‌த்திற்கு ஆளுந‌ராக‌ பாபி ஜிண்டால் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌போதோ, ப‌ல‌ ஹிட் ப‌ட‌ங்க‌ளை ம‌னோஜ் நைட் ஷியாம‌ள‌ன் கொடுத்த‌போதோ "இந்திய‌ ஆண்" என்று குறிப்பிட‌ப்ப‌ட‌வில்லை. "இந்திய‌ர்" - அவ்வ‌ள‌வுதான். ஆணும் பெண்ணும் ச‌ம‌ம் என்று வாய் கிழிய‌ க‌த்திக்கொண்டு, நாற்ப‌து பேரை உட்கார‌ வைத்து, நாலு பேரைக் கூப்பிட்டு விவாத‌ம் செய்யும் சேன‌ல்க‌ளின் உண்மையான‌ முக‌ம் இதுதான்.

பெண் என்ப‌தால் ஸ்பெஷ‌லாக‌ குறிப்பிடுகிறார்க‌ள், அதிலென்ன‌ த‌வ‌று என‌ நீங்க‌ள் கேட்க‌லாம். ஆம், த‌வ‌றே அதில்‌தான் இருக்கிற‌து. "இந்திரா நூயி பெப்ஸிகோவுக்கு CEOவாக‌ தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்டுள்ளார், அவ‌ர் இந்திய‌ர் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து" என்று சொல்லிவிட்டுப் போக‌ட்டும். எந்த‌ பிர‌ச்னையும் இல்லை. ஏன் "இந்திய‌ப் பெண்" என்று சொல்ல‌ வேண்டும்? After all ஒரு பெண்ணே இந்த‌ அள‌விற்கு முன்னேறியுள்ளாரே என்ற‌ கேவ‌ல‌மான‌ எண்ண‌த்தின் வெளிப்பாடுதான் அது.

உட‌ல் ஊன‌முற்ற‌வ‌ர்க‌ளிட‌ம் ச‌ற்று ப‌ரிதாப‌த்துட‌ன் அணுகிப் பாருங்க‌ள். அப்போது தெரியும் அவ‌ர்க‌ளின் கோப‌ம். ப‌ரிதாப‌த்தை அவ‌ர்க‌ள் ஒருபோதும் எதிர்பார்ப்ப‌தில்லை, எதிரியாக‌த்தான் பார்க்கின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளுக்கு தேவை வெறும் அன்பு, பாச‌ம்...அவ்வ‌ள‌வே. ஏற‌க்குறைய‌ இதே ப‌ரிதாப‌ அணுகுமுறைதான் ஊட‌க‌ங்க‌ளுக்கும் பெண்க‌ளிட‌த்தில்.

இணைய‌த்தில் பெண்க‌ளுக்கு ஏற்ப‌டும் சில‌ அசெள‌க‌ரிய‌ங்க‌ளையும் தாண்டி, வ‌லையுல‌கிலும் ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ள் கொடி க‌ட்டி ப‌ற‌க்கிறார்க‌ள். இங்கு கொடி என்ப‌து துணி காய‌ வைக்கும் கொடிய‌ல்ல‌ என்ப‌தை ம‌ன‌தில் ஃபெவிகால் போடாம‌லேயே ப‌ச்ச‌க் என்று ஒட்டிக்கொள்ள‌வும். க‌தை, க‌விதை, ஓவிய‌ம், ச‌மைய‌ல் குறிப்புக‌ள், ந‌கைச்சுவை என்று க‌ல‌ந்துக‌ட்டி அடிக்கிறார்க‌ள். என்ன‌.......சில‌ நேர‌ம் க‌விதைக‌ள் (த‌மிழாயிருந்தாலும்) ம‌ட்டும் புரிவ‌தில்லை. சில‌ நேர‌ம் த‌லைப்பே கூட‌! புரியாம‌ல் விழித்தால், "நீயெல்லாம் ஒரு த‌மிழ‌னான்னு கேக்க‌றாங்க‌ய்யா" என்று அஜித் போல் புல‌ம்ப‌வைத்துவிடுகிறார்க‌ள்..:)

இப்ப‌டியெல்லாம் சொல்வ‌த‌ற்காக‌ நான் ஏதோ மக‌ளிரை காக்க‌ வ‌ந்த‌ மாணிக் பாட்ஷா, வேலைக்கு செல்லும் பெண்க‌ளின் துய‌ர் துடைக்க‌ வ‌ந்த‌ வேலு நாய‌க்க‌ர் என்றெல்லாம் சொல்ல‌ மாட்டேன். அழ‌கான‌ ஒரு பெண் எதிரே வ‌ந்தால், அவ‌ளைப் பார்த்து ஒரு 'லுக்' விடும் சாதார‌ண‌ ஆண் நான். ஆனால் எந்த‌ள‌விற்கு ர‌சிக்கிறேனோ அந்த‌ள‌விற்கு ம‌திக்க‌வும் செய்கிறேன். இப்ப‌டி ம‌திப்ப‌தாலேயே, "ச்சே, இந்த‌ மாதிரி ஒரு அண்ண‌ன் ந‌ம‌க்கில்லையே" என்று எந்த‌ பெண்ணாவ‌து என்னை அண்ண‌னாக நினைத்து என் hearthurt செய்தால், அப்பெண்ணுக்கு க‌டும் க‌ண்ட‌ன‌ங்க‌ளை தெரிவித்துக் கொள்வ‌தோடு, வீட்டிற்கு ஷேர் ஆட்டோவாவ‌து அனுப்ப‌ப்ப‌டும் என்ப‌தை மீட்ட‌ருட‌ன் எச்ச‌ரிக்கிறேன்!

டிய‌ர் ஆண்ஸ், ந‌ம‌க்கும் ச‌ர்வ‌தேச‌ ஆண்க‌ள் தின‌ம் கொண்டாட‌ ஒரு நாள் (ந‌வ‌ம்ப‌ர் 19) உள்ள‌து. அன்று ஒரு ப‌திவு போட்டு ந‌ம் குமுற‌ல்க‌ளைக் கொட்டுவோம். அத‌னால் இப்போதைக்கு, அம்மா, பாட்டி, எல்கேஜி முத‌ல் நான்காம் வ‌குப்பு வ‌ரை என்னை செல்ல‌மாக‌ பார்த்துக் கொண்ட‌ சித்ரா மிஸ், அனைத்து தோழிக‌ள், நான் சைட் அடித்த‌ பெண்க‌ள், என்னை சைட் அடித்த‌ பெண்க‌ள் (அப்ப‌டி யாராவ‌து இருந்தால் அவ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் ஸ்பெஷ‌லாக‌) என‌ அனைவ‌ருக்கும் ச‌ர்வ‌தேச‌ ம‌க‌ளிர் தின‌ வாழ்த்துக்க‌ள்....:)

Monday, March 01, 2010

சுஜாதா..க‌ணேஷ்..வ‌ஸ‌ந்த்


த‌லைவ‌ன் இருக்கின்றான்

இர‌ண்டு மாத‌ங்க‌ளுக்கு முன் புத்த‌க க‌ண்காட்சியில் வாங்கிய‌ புத்த‌க‌ங்க‌ளில், அனைத்து சுஜாதா புத்த‌க‌ங்க‌ளையும் சென்ற‌ வார‌ம்தான் படித்து முடித்தேன். எல்லாமே க‌ணேஷ்-வ‌ஸ‌ந்த் க‌தைக‌ள். ஆயிர‌த்தில் இருவ‌ர், மூன்று குற்ற‌ங்க‌ள், இத‌ன் பெய‌ரும் கொலை, நைலான் க‌யிறு, ம‌றுப‌டியும் க‌ணேஷ் & கொலையுதிர் கால‌ம். இவ‌ற்றில் மூன்று குற்ற‌ங்க‌ள் ப‌ற்றி ஏற்க‌ன‌வே எழுதியிருக்கிறேன். ம‌ற்ற‌ க‌தைக‌ள் ப‌ற்றி எழுதினால் ப‌டிக்கும்போது உங்க‌ளுக்கு ச‌ற்று சுவார‌ஸ்ய‌ம் இல்லாம‌ல் போக‌லாம். அதனால் அவைக‌ளைப் பற்றி எழுத‌ப்போவ‌தில்லை. நீங்க‌ள் த்ரில்ல‌ர் விரும்பியாக‌ இருந்தால் க‌ண்டிப்பாக‌ வாசிக்க‌லாம். குறிப்பாக "கொலையுதிர் கால‌ம்" சிம்ப்ளி சூப்ப‌ர்ப்!

என்னைப் பொறுத்த‌வ‌ரை சுஜாதா ஒரு எழுத்து யானை என்றே சொல்வேன். இற‌ந்தாலும், ஆயிர‌ம் பொன் என்ன‌....அவ‌ர் கோடி பொன்னுக்கு ச‌ம‌ம். வி மிஸ் யு சார்:(

Buzzல் கிரிக்கெட்

ஏனோ Google Buzzல் ப‌ய‌ண‌ம் செய்ய‌ ப‌ல‌ருக்கு பிடிக்க‌வில்லை. ப்ரைவ‌ஸி இல்லை, தானாக‌ வ‌ந்து உட்கார்ந்துகொண்ட‌து என்று ப‌ல‌ருக்கும் ச‌ற்று வெறுப்பு. இத‌ற்கு ப‌தில் ட்விட்டுவ‌துதான் பெட்ட‌ர் என்ப‌தும் நிறைய‌ பேருடைய‌ அபிப்ராய‌ம். ஆனால் என‌க்கென்ன‌வோ Buzzதான் வ‌ச‌தியாயிருக்கிற‌து. ப‌ணியிட‌த்தில் உள்நாட்டு ச‌தி செய்து ட்விட்ட‌ரையெல்லாம் ப்ளாக் செய்துவிட்டார்க‌ள். ந‌ம‌க்கு Buzzஸே போதும்:)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக‌ ச‌ச்சின் ஆடிய‌ ருத்ர‌தாண்ட‌வ‌த்தை Cricinfoவில்தான் பார்(ப‌டி)த்தேன். 41வ‌து ஓவ‌ரின்போது ச‌ச்சின் 168ல் இருக்க‌, இன்று ச‌ச்சின் 200 அடிக்க‌க்கூடும் என்று தோன்றிய‌து. 150 அடித்த‌போதே ப‌ல‌பேருக்கு தோன்றியிருக்க‌லாம். இதை "ம‌ன‌சுக்குள்ள‌ ச‌ச்சின் ப‌த்தி ஒண்ணு நினைக்கிறேன், ஆனா அத‌ சொன்னா....வேணாம்பா நான் எதுவும் சொல்ல‌ல‌" என்று நான் Buzzஸ‌, ப‌ய‌ண‌ம் செய்த‌ ந‌ட்புக‌ளிட‌ம் இருந்து "ரகு..... வேண்டாம்" என்று வ‌ந்த‌து. ம்...அந்த‌ ப‌‌ய‌ம் இருக்க‌ட்டும்! 190 வ‌ந்த‌வுட‌ன், இருந்த‌ டென்ஷ‌ன் இன்னும் எகிறிய‌து. எல்லாவ‌ற்றையும் Buzzல் புல‌ம்பிக்கொண்டே இருந்தோம். ஒருவ‌ழியாக‌ ச‌ச்சின் 200 அடிக்க‌, உயிர் திரும்பிய‌து. டிவியில் பார்க்க‌முடியாவிட்டாலும், இப்ப‌டி Buzzல் ப‌ய‌ண‌ம் செய்துகொண்டே ந‌ட்புக‌ளோடு பார்த்த‌தும் த்ரில்லிங்காக‌த்தான் இருந்த‌து:). ச‌ச்சினைப் ப‌ற்றி என‌க்கு மிக‌வும் பிடித்த‌ வாச‌க‌ம் - Commit all your crimes when Sachin is batting, they will go unnoticed because even the Lord is watching!

யாமிருக்க‌ ப‌ய‌மேன்......ஆர‌ம்பிச்சுட்டாங்க‌ய்யா!

என்ன‌தான் ஹிட்டானாலும், குடும்ப‌மே சேர்ந்து கும்மி அடித்துக்கொண்டு பார்த்தாலும், சூப்ப‌ர் சிங்க‌ர் ஜூனிய‌ர் நிக‌ழ்ச்சியை நான் அற‌வே வெறுக்கிறேன். குழ‌ந்தைக‌ள் பாடுவ‌து ர‌சிக்க‌வேண்டிய‌ ஒன்றுதான். அத‌ற்காக‌ ச‌ரியாக‌ பெர்ஃபார்ம் ப‌ண்ணாத‌ குழ‌ந்தைக‌ளை ப‌ல‌ர் ம‌த்தியில் "இப்ப‌டி ப‌ண்ணிருக்க‌ணும், அப்ப‌டி ப‌ண்ணிருக்க‌ணும்" என்று சொல்லி, அவ‌ர்க‌ளுடைய‌ பெற்றோர் அழுவ‌தை ஸ்லோமோஷ‌னில் காண்பிக்கிறார்க‌ள். க‌ண்ணை மூடிக்கொண்டு கேட்டால், ஏதோ ம‌ர்ம‌ தேச‌ம் நாட‌க‌ம்தான் ஒளிப‌ர‌ப்பாகிக் கொண்டிருக்கிற‌தோ என்னும் அள‌வுக்கு, ஒரு திகிலான‌ பிண்ண‌ணி இசை.

தொலைக்காட்சியில் ஒளிப‌ர‌ப்பான‌பின், தோல்வியுற்ற‌ குழ‌ந்தை எப்ப‌டி ம‌றுநாள் ப‌ள்ளிக்குச் சென்று இய‌ல்பாக‌ இருக்க‌ முடியும்? ம‌ற்ற‌ பிள்ளைக‌ள் கிண்ட‌ல் செய்யாம‌லா இருப்பார்க‌ள்? இது ம‌ன‌த‌ள‌வில் மிக‌வும் பாதிக்கும் என்றே நினைக்கிறேன். டிய‌ர் பெற்றோர்ஸ், உங்க‌ள் பிள்ளைக‌ளுக்கென்று ஒரு திற‌மை இருக்கும், அதைக் க‌ண்ட‌றிந்து அதில் சிற‌ந்த‌வ‌னா/ளாக‌ வ‌ர‌ உத‌வி செய்யுங்க‌ள். உங்க‌ள் ஆசைக‌ளை அவ‌ர்க‌ள் மேல் திணிக்க‌வேண்டாம். "என் பைய‌ன் ந‌ல்ல‌ சிங்க‌ரா வ‌ர‌ணும்னு நினைக்க‌ற‌து தப்பா?" என்று நீங்க‌ள் கேக்க‌லாம். ப‌திலுக்கு அவ‌ர்க‌ளும், "ஏன்பா, எப்ப‌ பாத்தாலும் ஆபிஸுக்கே போறிங்க‌ளே, நீங்க‌ கிரிக்கெட்டரா ஆயிருக்க‌லாம் இல்ல‌, ச‌ரியான‌ போர்பா நீங்க‌" என்று சொன்னால், உங்க‌ளால் என்ன‌ சொல்ல‌ முடியும்?

இதில் புதிதாக‌ "யாமிருக்க‌ ப‌ய‌மேன்" என்றொரு தொட‌ரை ஆர‌ம்பித்திருக்கிறார்க‌ள். Promotional Stillsல் ஒரு பைய‌ன் விபூதி குங்கும‌த்தை நெற்றியில் இட்டுக்கொண்டு விஷால் ரேஞ்சுக்கு முறைத்துக் கொண்டிருக்கிறான். இது எங்கு போய் முடிய‌ப்போகிற‌தோ?:( ஏன் இப்ப‌டி குழ‌ந்தைக‌ளை போட்டு டார்ச்ச‌ர் செய்கிறார்க‌ள்? அவ‌ர்க‌ளுக்கு TRP ரேட்டிங் ம‌ட்டும்தான் முக்கிய‌ம் போல‌. தொலைக்காட்சி தொட‌ர்க‌ளுக்கு உட‌ன‌டி தேவை ஒரு சென்சார் போர்ட். சென்சார் ஆர‌ம்பித்தால், ப‌ல‌ சீரிய‌ல்க‌ளுக்கு "A" ச‌ர்டிபிக்கேட்தான் வ‌ழ‌ங்க‌ வேண்டியிருக்கும்.

விண்ணைத் தாண்டி வ‌ருவாயா............யோசிச்சு சொல்றேன்

என்ன‌து?! அமெரிக்காவின் வ‌ள‌ர்ச்சிக்காக‌ ஓபாமா ஜெய‌ல‌லிதாவை ச‌ந்திக்கிறாரா? இல‌வ‌ச‌ங்க‌ளை நிறுத்திவிட்டு வேலை வாய்ப்புக‌ளை உருவாக்குவோம் என்கிறாரா க‌லைஞ‌ர்? அடுத்த‌ வ‌ருட‌ம் க‌ட்சி ஆர‌ம்பிப்ப‌து உறுதி என்கிறாரா ர‌ஜினி? சிம்பு ப‌ட‌ம் ந‌ல்லாயிருக்கா?

இந்த‌ ப‌ட‌த்திற்காக‌, ஊரில் இருக்கும் ஆஸ்க‌ர் அவார்ட், பாஸ்க‌ர் அவார்ட் என்று அனைத்து அவார்ட்க‌ளையும் சிம்பு வாங்கினாலும் ப‌ர‌வாயில்லை. அவ‌ரின் விர‌ல் வித்தைக‌ளில் ம‌ய‌ங்கி நான் இன்னும் கோமாவிலேயே இருப்ப‌தால் இப்போதைக்கு ப‌ட‌ம் பார்க்க‌க்கூடாது என்றே இருந்தேன். ஆனால் மிக‌ அதிச‌ய‌மாக‌ "ப‌ட‌ம் ந‌ல்லாயிருக்கு" என்று ந‌ட்புக‌ள் ரெக‌ம‌ண்ட் செய்கிறார்க‌ள். பார்க்க‌லாம் என்றே நினைக்கிறேன், பார்த்தே ஆக‌வேண்டும் என்ற‌ல்ல‌. பார்க்க‌ நினைத்தாலும், அது ர‌ஹ்மானின் இசைக்காக‌வும், க‌வுத‌ம் ப‌ட‌ங்க‌ளில் ம‌ன‌தை கொள்ளை அடிக்கும் ஒளிப்ப‌திவிற்காக‌வும்.


நேய‌ர் விருப்ப‌ம்

ச‌மீப‌ நாட்க‌ளில் இந்த‌ பாட‌ல்க‌ளை மிக‌வும் விரும்பி கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

விண்ணைத் தாண்டி வ‌ருவாயா - ஆரோம‌லே - அல்ஃபோன்ஸ்

ஆர‌ம்பிக்கும்போதே "வாவ்" என்று சொல்ல‌வைக்கிற‌து. பாட‌ல் வ‌ரிக‌ள் புரியாவிட்டாலும் கிடாரின் இசையில் ஆர‌ம்பித்து, எப்ப‌டியோ ஈர்த்துவிடுகிறார் ர‌ஹ்மான்:)

கோவா - இதுவ‌ரை இல்லாத‌ உண‌ர்விது - ஆன்ட்ரியா, அஜிஷ்

ந‌டிகை ஆன்ட்ரியாதான்.....எக்ஸ‌ல‌ண்ட் வாய்ஸ், "ஹோஹோஹோ" என்று ஹ‌ம்மிங் செய்யும்போது சொக்க‌வைக்கிறார்.

பையா - துளி துளி - ஹரிச‌ர‌ண், த‌ன்வி

முத‌லில் கேட்கும்போது பாடிய‌து கார்த்திக்கோ என்று நினைத்தேன். அழ‌கான, புரியும்ப‌டியான‌ வார்த்தை உச்ச‌ரிப்புக‌ள். ந‌ம்ம‌ த‌மு ந‌டித்திருக்கும்‌ ப‌ட‌ம். இதிலாவ‌து பெண்க‌ள் ர‌சிக்கும்ப‌டி கார்த்தியை காண்பித்திருப்பார்க‌ள் என்று எல்லாம் வ‌ல்ல‌ (லிங்கு)சாமியை வேண்டிக்கொள்வோம்.