Monday, March 07, 2011

சாப்பாட்டு இராவணன்

ஊரிலிருக்கும் வரை, வீட்டில் அம்மா செய்யும் டிஃபன் பட்டியலில் இடம்பெறுவது பெரும்பாலும் இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி & உப்புமா. இவைதான் ரொட்டேஷனில் வலம் வந்து கொண்டிருக்கும். சைட் டிஷ்ஷில் மட்டும் நிறைய வெரைட்டி இருக்கும்படி பார்த்துக்கொள்வார் அம்மா.

இது தவிர வெளியே வேறொன்றும் ரசித்து சாப்பிட்டதில்லை. மூட் பொறுத்து பேக்கரியில் பப்ஸும், தள்ளுவண்டியில் சுண்டலும் துவம்சம் செய்யப்படும். தள்ளுவண்டியில் இருக்கும் சுண்ட ல், பேல்பூரி எல்லாம் சாப்பிட்டிருக்கிறீர்களா? பள்ளியிலிருந்து கல்லூரி நாட்கள் வரை, நான் மிகவும் ரசித்து சாப்பிட்டிருக்கிறேன். இப்போதெல்லாம் அப்போதிருந்த தரமும், சுவையும் மிகவும் குறைந்திருக்கிறது.

உணவின் மீது அப்போதெல்லாம் அதிக ஆர்வம் இல்லாததால் அம்மா தப்பித்தார்கள். உப்பு சரியாக இருக்கிறதா என்று கூட கணிக்கத் தெரியாது. செய்வதை குறை சொல்லாமல் சாப்பிட்டிருக்கிறேன். இவையெல்லாம் ஊரிலிருக்கும்வரைதான்.


சென்னை. பெருமளவில் என் உணவுப்பழக்கத்தில் மாற்றம் வந்தது சென்னை வந்தபின்புதான். வந்த புதிதில் எப்போது ஹோட்டல் சென்றாலும் அதே வீட்டு புத்திதான் முன் வந்து நின்றது. எப்போதும் இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்திதான்.

பணியில் சேர்ந்த பின்பு, ’என்ன இது, சின்ன தோசையில ஏதோ வெங்காயம் தக்காளி அரிஞ்சு போட்ட மாதிரியிருக்கு’ என்று கிண்டல் செய்ததில் முறைத்து சொன்னாள் தோழியொருத்தி. இது பீட்ஸாடா! அதன்பின் அவ்வப்போது பீட்ஸா குடிசைக்குச் சென்று, விதம்விதமான பீட்ஸாக்களை உள்ளே தள்ளுவதில் மட்டும்தான் கவனம் இருந்தது.

இப்படியே இருந்தால் எப்படி? அடுத்த கட்டத்திற்கு போகவேண்டாமா என்று யோசித்ததினால் வந்த மாற்றம். அதுமட்டுமின்றி பேச்சிலராயிருப்பதில் கிடைக்கும் சுதந்திரம்.

அன்னையைப் பொறுத்தவரை
நான் வெஜிட்டேரியன்
சென்னையைப் பொறுத்தவரை
நான்வெஜிட்டேரியன்

அறிமுகமாயினர் அண்ணா நகர் அஞ்சப்பரும், வடபழனி பொன்னுசாமியும். பெரும்பாலும் எக் பிரியாணி அல்லது சிக்கன் பிரியாணி, ஒரு சிக்கன் சைட் டிஷ். இதுவரை எத்தனை கோழிகளின் பாவத்திற்கு ஆளாகியிருக்கிறேன் என்று தெரியவில்லை.

வீட்டில் அனைவரும் வெஜ். சென்னை வந்தபின்புதான் நான் நான் வெஜ். எதற்காவது கோபப்பட்டு பேசினால், ’நான் வெஜ் சாப்பிடற இல்ல, மிருக குணம், அதான் இவ்ளோ கோவம் வருது’ என்று ஒரு யார்க்கர் வீசுவார்கள் வீட்டில். ’அப்போ எவன் நல்லவன்னு சொல்லுங்க, அவனை கொன்னு சாப்பிடறேன், நல்ல குணம் வரும்’ என்று வந்த யார்க்கரை சிக்ஸராக்குவதில் அலாதி சுகம் எனக்கு.

நான் வெஜ் சாப்பிட ஆரம்பித்த சில நாட்களில் பெரிய வித்தியாசம் தெரிந்தது. பேண்ட் சைஸ். மிகுந்த யோசனைக்குப் பிறகு முடிவெடுத்தேன். பிழைத்தன சில கோழிகள்.



வேளச்சேரியில் வசிப்பதில் இருக்கும் பெரிய செளகரியம், மாடி ரயிலும், இங்கு குவிந்து கிடக்கும் உணவகங்களும். அஞ்சப்பர், நளாஸ், காரைக்குடி, திண்டுக்கல் தலப்பாகட்டி, கலிங்கா கெபாப் கோர்ட், ஹாட் சிப்ஸ், திருவல்லிக்கேணி ரத்னா கேஃப், அடுப்பங்கரை, வேங்க்ஸ் கிச்சன், டோமினோஸ் பீட்ஸா, மெக்டோனால்ட்ஸ், கேஎஃப்சி, மேரிப்ரவுன், பேஸ்கின் ராபின்ஸ், ஸ்நோ பார்க் என சொல்லிக்கொண்டே போகலாம்.

சமீப நாட்களில் சென்றதில், திண்டுக்கல் தலப்பாகட்டி (கவனிக்க: தலப்பாகட்டு அல்ல..தலப்பாகட்டி) ரொம்பவே பிடித்திருக்கிறது. சில உணவகங்களில் பிரியாணி சாப்பிட்டால் அடுத்த வேளை சாப்பிடமுடியாதபடி வயிறு கும்மென்றிருக்கும், ஏன்டா சாப்பிட்டோம் என்றெண்ணும் அளவிற்கு. ஆனால் இங்கு அந்த பிரச்னை துளிகூட இல்லை. தரமான அரிசி பயன்படுத்துகிறார்கள். அற்புதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஆம்பியன்ஸில் குறையொன்றுமில்லை. நண்பர்களோடு, குடும்பத்தினரோடு சென்று அரட்டையடித்துக்கொண்டு சாப்பிட சரியான இடம்.

இன்னொன்று. வேங்க்ஸ் கிச்சன். இங்கு ஒருவருக்கு ஆர்டர் செய்தாலே இரண்டூ பேர் உண்ணும் அளவிற்கு இருக்கிறது குவாண்டிட்டி. அவர்களுடைய ஃப்ரைட் ஐஸ்க்ரீமிற்காகவே இன்னொரு முறை போகவேண்டும்.....ம்ம்ம்ம்!

க்ரிக்கெட் பார்ப்பதற்கு அடுத்து, இது போன்று விதவிதமான உணவு வகைகளை சுவைத்து பார்ப்பதில்தான் இப்போதெல்லாம் எனக்கு ஆர்வம் பொங்குகிறது. அடுத்தது மெக்ஸிகன் உணவு வகைகளை முயற்சி செய்து பார்க்க ஆசை. தற்போது சென்னையில் நல்லதொரு மெக்ஸிகன் ரெஸ்டாரண்ட்டைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

என்னதான் பலவிதமாய் சாப்பிட்டாலும், உடல் நலமில்லாதபோது, இது கிடைக்காதா என மிகவும் ஏங்குவது ஒன்றே ஒன்றுதான். ஊரிலிருக்கும்போது அம்மா செய்து தரும் ரசம் சாதம்.