Tuesday, January 24, 2012

நில் கவனி தாக்கு - சுஜாதா

1960களில் வெளியான ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் மீது தலைவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்திருக்க வேண்டும். இந்த கதையை வாசித்து முடித்த பின் அப்படித்தான் எனக்கு தோன்றியது. தமிழில் இது போன்ற ஒரு ஸ்பை த்ரில்லர் கதையை இப்போதுதான் வாசித்திருக்கிறேன். என்னா ஒரு ஃப்ளோடா!

2011 புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம் இது. புத்தக வாசிப்பிற்கும் எனக்கும் பெரிய இடைவெளி விழுந்த வருடம் 2011. இந்த வருடம் அதை ஈடுகட்டுவதற்காகவே, நான்கு நாட்கள் பட்டினி கிடந்தவன் சரவண பவன் ஃபுல் மீல்ஸை பார்த்தது போல, வெறித்தனமாக வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். எந்த தடையும் இல்லாமல் இது தொடர வேண்டும்.



கதைக்கு வருவோம். பம்பாயிலிருந்து (அப்போ மும்பை இல்லப்பா) டெல்லிக்கு வரும் ஒரு அணு விஞ்ஞானியை ரிசீவ் செய்து பத்திரமாக ஒரு இடத்திற்கு  அழைத்து வரும் பொறுப்பு நாயகனுக்கு தரப்படுகிறது. ஜேம்ஸ் பாண்ட் பாணி கதை என்பதால் ஒரு அழகிய பெண்ணை பார்த்தவுடன் சற்று கடமையிலிருந்து தவறுகிறான் நாயகன். அடையாளம் தெரியாத நபர்களால் அணு விஞ்ஞானி கடத்தப்படுகிறார். இதனால் கடிந்துகொள்ளும் மேலதிகாரியிடம், எப்படியாவது அவரை மீட்டு கொண்டு வருகிறேன் என்று இருபத்து நாலு மணி நேரம் டைம் கேட்கிறான் நாயகன். 

சில பல ஸ்டண்ட்களுக்கு பின் அணு விஞ்ஞானியை மீட்கிறான். நிற்க. கதை இதோடு முடிவதில்லை. இது வெறும் இடைவேளைதான். விஞ்ஞானியை கடத்தியவர்களின் பின்புலத்தை ஆராயும்போதுதான் அவனுக்கு நிறைய விஷயங்கள் தெரிய வருகிறது. இதற்கு மேல் கதை சொல்லி சஸ்பென்ஸை உடைக்க விரும்பவில்லை. இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

துப்பாக்கி, சண்டை, ரத்தம், ஆதர்சம், துரோகம் என்று செல்லும் கதையில், வாசகர்களுக்கு கடைசி அத்தியாயம் ஆரம்பிக்கும் முன் ஒரு சவால் விடுகிறார் தலைவர். கடைசி அத்தியாயம் வாசிக்கும் முன் கதை இப்படித்தான் முடியும் என்று யூகித்தால் நீங்கள் புத்திசாலிதான் என்கிறார். சத்தியமாக கடைசி அத்தியாயத்தின் பாதியை வாசிததபின்தான் யூகிக்கவே முடிந்தது. அதனாலென்ன, தலைவரிடம் தோற்பது கூட மகிழ்ச்சியைத்தான் தருகிறது.

இந்த கதையில், ஃப்ளோவை அடுத்து நான் ரசித்தது தலைவர் தரும் விவரமான வர்ணனைகள்தான். ஹோட்டல், அன்னெக்ஸ், காபரே நடனம் ஆடும் அழகி, அரங்கம் மற்றும் வழக்கம் போல் நாயகியின் அழகு. வாசிக்க வாசிக்க, கற்பனையில் ஒரு அட்டகாசமான த்ரில்லர் படத்தை காணமுடிகிறது. ஹாலிவுட் படங்களில், டைட்டிலில் BASED ON THE NOVEL என்று கதையின்  பெயரையும், ஆசிரியரின்  பெயரையும்  போடுவார்கள். தமிழில் ஏன் அது போல் இயக்குனர்கள் முயற்சிப்பதில்லை? கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று அனைத்திலும் தன் பெயர்தான் வரவேண்டும் என்ற பிடிவாதமோ? 

Ctrl+C, Ctrl+V வேலையையெல்லாம் செய்யும் ஷங்கர் இந்த கதையை படமாக எடுத்தால் கண்டிப்பாக சூப்பர் டூப்பர் ஹிட்டாகும். இல்லையென்றால் கெளதம். இவர்களை தவிர யார் எடுத்தாலும், வரும் அவுட்புட்டை தலைவர் மேலிருந்தபடியே கெட்ட ஆங்கிலத்தில் திட்டுவார்.

பெயர்: நில் கவனி தாக்கு
ஆசிரியர்: சுஜாதா
விலை: ரூ.75/-
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-565-3.html

Thursday, January 19, 2012

சத்யம் சினிமாஸ் - பெஸ்ட் இன் சென்னை

அவதார் ரிலீஸ் ஆகி இருந்த சமயம். சென்னையில் எந்த தியேட்டரிலும் வார இறுதியில் டிக்கெட் கிடைக்கவில்லை. பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் அதிகமாக இருந்தது. சரி ஊரிலேயே பார்த்து விடலாம் என்று முடிவு செய்தேன். மாலை 6:30 மணிக்கு ஷோ. கூட்டம் அதிகம்தான். அடித்து பிடித்து டிக்கெட் வாங்கியாகிவிட்டது.

தியேட்டர் உள்ளே சென்றேன். சீட்டு நம்பர் எல்லாம் கிடையாது. கொஞ்சம் புண்ணியம் செய்திருந்தால் ஃபேன் இருக்கும் பகுதியில் சீட் கிடைக்கும். இதற்கு சாமர்த்தியமும் மிக அவசியம். அங்கிங்கு தேடி நல்ல இடத்தை பிடித்து உட்கார்ந்தேன். உலகமே எதிர்பார்த்த சினிமா இன்னும் சில நிமிடங்களில் நானும் காணப்போகிறேன். மகிழ்ச்சியாக இருந்தது. 

படம் ஆரம்பித்தது. வடிவேலு சொல்வதுபோல் நன்றாகத்தான் போய்கொண்டிருந்தது. பத்து பதினைந்து நிமிடங்களில் சிகரெட் வாசம் வர,  என்னடா இது என்று பக்கத்தில் திரும்பி பார்த்தால் இரு நல்ல 'குடிமகன்கள்' வாயில் சிகரெட்டோடும், கையில் பாட்டிலோடும், தியேட்டரை டெம்பரவரி 'பார்' ஆக மாற்றிகொண்டிருந்தனர். எனக்கு கடுப்பாகிவிட்டது. கேட்காவிட்டால் வேலைக்காகாது. கேட்டேன்.

"ஹலோ இதென்ன தியேட்டரா இல்ல பாரா?"

அந்த 'இருவரில்', ஒரு பிரகாஷ்ராஜ் "டேய் இங்க குடிக்க கூடாதாம்டா" என்று பக்கத்திலிருந்த மோகன்லாலை உசுப்பேற்ற, அவர் ஒருவித வெறுப்பு கலந்த சலிப்போடு என்னை பார்த்துவிட்டு, "எழுந்து போலாம் வா" என்று பிரகாஷ்ராஜை கூப்பிட்டுக்கொண்டு தியேட்டரை விட்டு வெளியே போய்விட்டார். 

அவர்கள் போய்விட்டாலும், என்னடா இது தியேட்டரில் போய் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்களே என்ற எண்ணம்தான் மனதில் மேலோங்கி இருந்தது. படத்தை என்னால் முழுமையாக என்ஜாய் பண்ணி பார்க்கமுடியவில்லை. ரொம்பவும் ஆசைப்பட்டு போன படம். கொஞ்சம் தலைவலியோடு திரும்பி வந்ததுதான் மிச்சம்.

அதிலிருந்து ஏதாவது ஒரு படத்தை பார்க்கவேண்டும் என்று ஆசைபட்டாலே என்னுடைய முதல் மற்றும் ஒரே சாய்ஸ் 'சத்யம்'தான். டிக்கெட் விலை 120, 115 என்று இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் கண்டிப்பாக சத்யம் வொர்த். 



சத்யம் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். இது தெரியாதவர்களுக்காக - வாரயிறுதியில் போவதென்றால் புதன் கிழமை காலை ஆறு மணிக்கே ஆன்லைனில் புக் செய்துகொள்ளுங்கள். கொஞ்சம் தாமதித்தாலும் டிக்கெட் கிடைப்பது கஷ்டம்.  பின்னர் உங்கள் மொபைலுக்கு டிக்கெட் கன்ஃபர்மேஷன் மெசேஜ் வரும். அதை சேவ் பண்ணிகொள்ளுங்கள். அது போதும். அதோடு படம் போவதற்கு ஐந்து நிமிடம் முன்னால் தியேட்டருக்கு போய் கவுண்டரில் டிக்கெட் ஐடி சொல்லி டிக்கெட் வாங்கிகொள்ளலாம். 

இரு சக்கர வண்டிகளுக்கு பார்க்கிங் கட்டணமாக சில தியேட்டர்கள் எல்லாம் ரூ.20௦ வாங்கும் காலகட்டத்தில், இன்னும் சத்யத்தில் பத்து ரூபாய்தான். என்ன, வெயில் அதிகமாக இருந்தால் வண்டிக்கு சன்பாத்தும், மழையாக இருந்தால், ஃப்ரீ வாட்டர் சர்வீசும் கிடைப்பது தவிர்க்க முடியாதது. மற்றபடி குறையொன்றுமில்லை.

பெரும்பாலும் ஞாயிறன்று புக் செய்துவிடுவதால், அண்ணா சாலையிலிருக்கும் வழக்கமான போக்குவரத்து இம்சை ஏதும் இருப்பதில்லை. வேளச்சேரியிலிருந்து சத்யம் போவதற்கு அரை மணி நேரம்தான் ஆகிறது. இப்படித்தான் கடந்த சில மாதங்களில் மங்காத்தா, Rockstar,  The Adventures of Tintin,  Mission Impossible: Ghost Protocol,  Don 2 போன்ற படங்களை எந்த வித மன உளைச்சலும், உடல் அலைச்சலும் இல்லாமல் நிம்மதியாக ரசித்து பார்த்தேன்.

ஆனால் எல்லா படங்களையும் சத்யத்தில்தான் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிப்பதில்லை. இப்போதும் சில படங்களை வார இறுதியில் ஊருக்கு போகும்போதுதான் பார்க்கிறேன். ஒரு சில படங்கள் மட்டுமே 'இத சத்யம்லதான் பாக்கணும்' என்று தோன்ற வைக்கின்றன. அடுத்த சில மாதங்களுக்கு நோ சத்யம். பில்லா 2விற்காக வெய்ட்டிங்!



Friday, January 13, 2012

2012 சென்னை புத்தக கண்காட்சி

2012 சென்னை புத்தக கண்காட்சி. கடந்த வாரம் ஞாயிறு அன்று சென்றிருந்தேன்.  என்னதான் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று தெரிந்தாலும் நமக்கு ஞாயிறுதான் செட் ஆகிறது. மதியம் 3:30 மணிக்கு சென்றுவிட்டேன். சிறிது நேரத்தில் அலுவலக நண்பரும் சேர்ந்துகொள்ள, அவரிடம் ரெண்டு மூணு மணி நேரம் சுத்தணும் பரவாயில்லியா என்றேன். அவரும் சரி என்று சொல்லிவிட, முதல் வாயிலில் இருந்து ஆரம்பித்தோம். 

அங்கு இங்கு என சுற்றினாலும், கிழக்கு எங்கே என எதிர்பார்ப்பதில் நான் இன்னும் தாமரையாகவே இருக்கிறேன். உண்மையாக சொன்னால், கிழக்கு இந்த முறை சற்று ஏமாற்றம்தான் அளித்தது. சென்ற வருடம் இருந்த அளவு, இந்த வருடம் பல புத்தகங்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. ரெண்டு ஸ்டாலாக போட்டிருந்தாலும், பெரும்பாலும் அதே புத்தகங்கள்தான் குவிந்திருந்தது. 




சுஜாதா. இன்னமும் தலைவர் புத்தகங்கள்தான் நிறைய பேருக்கு பிடித்தமானதாக இருக்கிறது. கிழக்கில் பார்த்த வரை, புத்தகம் வாங்கும் அனைவரும் குறைந்தபட்சம் தலைவர் எழுதிய ஒரு புத்தகத்தையேனும் வாங்குகிறார்கள். இருபது முப்பது வருடங்களுக்கு முன் எழுதிய கதைகளெல்லாம் இன்று வாசிப்பவர்களுக்கும் பிடிக்கிறதென்றால், என்ன மாதிரியான மனுஷன் இவர்?! ரஜினி, ரஹ்மான், சச்சின்...இவர்களை எல்லாம் பிடித்திருந்தாலும் சந்திக்கவேண்டும் என்று இதுவரை ஆசைப்பட்டதில்லை. ஆனால் தலைவரை ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டும் என்று ஆவலாய் இருந்தேன். ப்ச்...ஒரு லோடு மண் :(

கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தது கவிஞர் வாலியின் 'நினைவு நாடாக்கள்'தான். மற்றதெல்லாம் கண்காட்சிக்கு போன பின் அலைந்து திரிந்து வாங்கியதுதான். நான் பெரும்பாலும் தீவிர இலக்கியங்களையோ, மனம் நெகிழவைக்கும் கதைகளையோ வாசிக்க விரும்புவதில்லை. த்ரில்லர் கதைகள் மற்றும் கிழக்கு வெளியிடும் முக்கிய நபர்கள், நிறுவனங்கள், நிகழ்வுகள் குறித்த புத்தகங்கள்தான் இன்னும் ஃபேவரைட்டாக இருக்கிறது.

புத்தகங்கள் வாங்கி முடித்த பின் கிளம்பும்போது நாங்கள் கண்ட காட்சி. புத்தக அரங்கிற்கு வெகு அருகில் ஒரு கார் நின்றிருந்தது. அங்கு நின்றிருந்த செக்யூரிட்டி, டிரைவரிடம் வண்டியை எடுக்க சொல்லிகொண்டிருக்கும்போது, ஒருவர் கொஞ்சம் கால் ஊன்றியபடி கார் அருகே நடந்து வந்தார். இயக்குனர் மணிவண்ணன்! முன்பு படத்தில் பார்த்தது போலில்லை. உடல் நலம் குன்றி கொஞ்சம் இளைத்திருந்தார். அவரை பார்ப்பதற்கே ரொம்ப கஷ்டமாக இருந்தது. மனதில் ஒரு நிமிடம், அவ்வை சண்முகி காட்சிகள் ஞாபகத்திற்கு வந்தன. கவுண்டருக்கு பிறகு, விவேக், வடிவேல் ஆகியோர் முன்னணிக்கு வரும்முன் இவர்தானே சில காலம் ஒரு கலக்கு கலக்கிகொண்டிருந்தார்!


இந்த வருடம் வாங்கிய புத்தகங்கள்

1. நினைவு நாடாக்கள் - கவிஞர் வாலி - ரூ.140/-
2. சச்சின் - ஒரு சுனாமியின் சரித்திரம் - கே.ஆர். ரமேஷ் - ரூ.140/-
3. யுத்தம் - நக்கீரன் கோபால் - ரூ.300/-
4. வாழ்க வளமுடன் - வி.ராம்ஜி - ரூ.75/-
5. இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி - என்.சொக்கன் - ரூ.85/-
6. ஃபேஸ்புக் வெற்றி கதை - என்.சொக்கன் - ரூ.115/-
7. வாரன் பஃபட் - பணக் கடவுள் - செல்லமுத்து குப்புசாமி - ரூ.110/-
8. கிளியோபாட்ரா - முகில் - ரூ.95/-
9. வில்லாதி வில்லன் - பாலா ஜெயராமன் - ரூ.125/-

தலைவர் ஸ்பெஷல்

1. 14 நாட்கள் - ரூ.60/-
2. சிவந்த கைகள் - ரூ.60/-
3. இருள் வரும் நேரம் - ரூ.90/-
4. தங்க முடிச்சு - ரூ.60/-
5. ஆ! - ரூ.120/-

இன்னமும் மனதுக்கு ஏதோ ஒரு திருப்தி கிடைக்காமல் இருக்கிறது. மறுபடியும் காணும் பொங்கல் அன்று செல்லலாம் என்றிருக்கிறேன். தலைவரின் மேலும் சில புத்தகங்கள், இஸ்ரேல் உளவு அமைப்பு குறித்த ஒரு புத்தகம், யுவகிருஷ்ணாவின் அழிக்கப்பிறந்தவன் மற்றும் சில காமிக்ஸ்கள் எல்லாம் லிஸ்டில் இருக்கின்றன. பார்ப்போம்!