Wednesday, March 27, 2013

அக்பர்

ல்லாம் சிறு வயதில், பள்ளியில் படித்ததுதானே. அப்படி என்ன இருந்துவிடப்போகிறது என்று கொஞ்சம் அலட்சியத்துடன்தான் இந்த புத்தகத்தை எடுத்தேன். 

அக்பர், ஹுமாயூன், பாபர், ஜஹாங்கிர், இப்ராஹிம் லோடி, ஹேமு, ஷேர் ஷா, சிக்கந்தர் ஷா என்று இதில் வரும் பெயர்கள், முதலாம் பானிபட் போர், இரண்டாம் பானிபட் போர் என எல்லாமே நாம் கடந்து வந்ததுதான். ஆனாலும் எழுத்து நடை நம்மை கட்டிப்போடுகிறது.

வெளிப்படையாக சொன்னால், "சிறுவயதில் படித்தது" என்று சொல்லவே கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கிறது. ஆங்கில வழி கல்வி என்பதால், புரிந்து படிக்கும் ஆர்வமின்றி, வெறும் மனப்பாடமே உலகம் என்றாகிப்போனது. பின்னே, மதிப்பெண்ணை விட வரலாறு தெரிந்து கொள்வதா முக்கியம்?

இந்த மதிப்பெண் இம்சை ஏதுமின்றி, இப்போது படிக்கும்போதுதான், வரலாறை எந்தளவிற்கு மிஸ் பண்ணியிருக்கிறோம் என்பதை உணரமுடிகிறது.

சரி, அக்பருக்கு வருவோம். யார் அக்பர்?

முகலாயப் பேரரசர் பாபர். பாபரின் மகன் ஹுமாயூன். ஹுமாயூனின் மகன்தான் அக்பர். முதல் ஒன்றிரண்டு அத்தியாயங்களில் இவர்களை நமக்கு பொறுமையாக அறிமுகப்படுத்திவிட்டு, அடுத்ததடுத்த அத்தியாயங்களில், "ஓடியாங்கடா என் பின்னாடி" என்று தடதடவென சம்பவங்களை நகர்த்த ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

அக்பரின் வாழ்க்கை born with silver spoon என்றெல்லாம் ஆரம்பிக்கவில்லை. ஹுமாயூனுக்கென்று ஒரு ராஜ்ஜியம் இல்லாத சூழ்நிலையில்தான் அக்பர் பிறக்கிறார். பின்பு தன் நம்பிக்கைக்குரியவரான பைரம் கானுடன் சேர்ந்து, ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் ஹுமாயூன். தனக்கென ஒரு ராஜ்ஜியம் அமைகிறது.

நாமெல்லாம் 12-14 வயதில் என்ன செய்திருப்போம்? சைக்கிள், பைக் ஓட்ட கற்றுக்கொண்டிருப்போம். சீட்டு இல்லாமல் மளிகை கடைக்குச் சென்று, அம்மா சொன்ன ஐந்தாறு பொருட்களை நினைவில் வைத்து வாங்கி வந்திருப்போம். ரேஷனுக்கு சென்றிருப்போம். எப்போதாவது படித்திருப்போம். நிறைய க்ரிக்கட் விளையாடியிருப்போம். தலையெழுத்தே என ட்யூஷன் சென்றிருப்போம்.

ஏறக்குறைய இதே வயதில், அக்பர் நாட்டை ஆள ஆரம்பித்திருந்தார். ஆம், பத்து வயதிற்குள்ளாகவே அக்பருக்கு, ஒரு வீரனுக்கு தேவையான அனைத்து பயிற்சிகளும், ஏன் நேரடி போர் அனுபவம் கூட கிடைத்திருந்தது. ஹுமாயூனுக்கு கூடவே இருந்ததை போல, அக்பருக்கும் பைரம் கான் உடன் இருந்து, போரிலும், ஆட்சியிலும் வழி நடத்தியிருக்கிறார்.

வெயிலில் இருப்பவனுக்குத்தான், நிழலின் அருமை தெரியும் என்பது போல், எழுத படிக்க தெரியாத அக்பர் புத்தகங்களை சேகரிக்க காட்டிய ஆர்வம் ஆச்சரியப்படவைக்கிறது. அவற்றை வாசித்து காட்டுவதற்கென்றே நிறைய பேர் அக்பரிடம் பணிபுரிந்திருக்கிறார்கள்.

அக்பர் என்றால், பீர்பால் இல்லாமலா? பீர்பாலும் இருக்கிறார். எல்லாவற்றையும் இங்கேயே எழுதிவிட்டால்? ஹுஹும்...இதற்கு மேல் புத்தகத்தை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.

பெயர்: அக்பர்

ஆசிரியர்: என். சொக்கன்

விலை: ரூ.90/-

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

இணையம் மூலமாக வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-781-7.html

Monday, January 21, 2013

2013 சென்னை புத்தக கண்காட்சி

புத்தக கண்காட்சிக்கு செல்ல ஆரம்பித்ததிலிருந்து, மிகப் பொறுமையாக, நிதானமாக, ரசித்து ரசித்து புத்தகங்கள் வாங்கியது இந்த வருடம்தான். மதிய நேரத்தில் சென்றால், கூட்டம் குறைவாக இருக்கும் என்றெண்ணி கடந்த சில வருடங்களில் ஏமாந்ததுதான் மிச்சம். எனவே, இந்த வருடம், வாரயிறுதியில், காலையிலேயே செல்ல முடிவெடுத்தேன்.


வாரயிறுதியில் கண்காட்சி 11 மணிக்கு ஆரம்பிக்கிறது என்றாலும், சனிக்கிழமை (19-01-13) காலை 10:30க்கே ஒய்எம்சிஏ சென்றடைந்தேன். நுழைவுச்சீட்டு வாங்கும் வரிசையில், எனக்கு முன்னர் ஏறக்குறைய இருபது பேர் நின்றிருந்தனர். 10:45க்கு நுழைவுச்சீட்டு தர ஆரம்பித்தனர். வாங்கிய பின், பின்னால் பார்த்தேன். "சாப்பிட வாங்க". வயிற்றுக்கு ஏற்கனவே ஈயப்படிருந்ததாலும், அவர்கள் நிர்ணயித்திருக்கும் விலையை கேள்விப்படிருந்ததாலும், "வரமாட்டேன் போங்க" என்று உள்ளே போகாமலேயே வெளிநடப்பு செய்தேன்.

கண்காட்சி அரங்கம். கடைசி வாயிலிலிருந்து ஆரம்பித்தேன். காலை நேரம் என்பதால், நியாயத்திற்கு காலியாக இருந்தது. எப்போதும் கண்காட்சியை ரங்கநாதன் தெருவை போல் பார்த்து பழகிய எனக்கு, இது ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது. கொஞ்சம் மகிழ்ச்சியும். ரிலாக்ஸாக நிறைய ஸ்டால்களை சுற்றி பார்க்கலாம்.முதலில் சென்றது வாலி பதிப்பகம். "வாலிப வாலி" வாங்கிவிட்டு, பில் போடும்போது அங்கிருந்த பெரியவரிடம் கேட்டேன்.

"இது கவிஞர் வாலி...அவரோட பதிப்பகமா சார்?"

சிரித்தார். 

"இல்லங்க, அவர்கிட்ட அனுமதி வாங்கிட்டு, அவர் பேர்ல நடத்தறோம். திங்க கிழமை (21-01-13) வந்தீங்கன்னா அவரை பார்க்கலாம், இங்க வரார்"

தலைக்கு மேல் இடது பக்கத்தில், ஒரு BUBBLE தோன்றி, திங்கள் மாலை அட்டெண்ட் பண்ணவேண்டிய க்ளையண்ட் கால் தெரிந்தது. என்ன வாழ்க்கடா இது! புத்தகத்திற்கான காசையும், ஒரு "தேங்க் யூ சார்"ஐயும் கொடுத்துவிட்டு கிளம்பினேன்.


இவர்கள் 7Cயா என தெரியாது. ஆனால், ஒரு ஆசிரியர் இந்த மாணவர்களை அழைத்து வந்திருந்தார்


ஸ்டாலை வடக்கு நோக்கி போட்டிருக்கிறார்களா, தெற்கு நோக்கி போட்டிருக்கிறார்களா என்றெல்லாம் பார்க்காமல், கிழக்கு நோக்கி விரைந்தேன். கிழக்கு பதிப்பகம். ALWAYS FAVOURITE! முதலில் கொஞ்சம் சுஜாதா(க்)கள். வாத்தியார் எழுத்தில் வாசிக்காதது இன்னும் நிறைய இருக்கிறது. மற்ற சில பதிப்பகங்களை விட, இங்கு விலை சற்று அதிகம் என்றாலும், தொடர்ந்து இங்கு வாங்குவதற்கான காரணம் புத்தக உள்ளடக்கம் மற்றும் தாளின் தரம்.

ஏனோ, என்.சொக்கன், மருதன், முகில் ஆகியோரின் புதிய புத்தகங்கள் அதிகளவில் தென்படவில்லை. மிக கொஞ்சமே. சில புத்தகங்களை எடுத்துக்கொண்டேன். நல்ல வேளை, பில் போடும்போது, "கிழக்கு பதிப்பகம் தி.மு.க.வோடதா" என்று கேட்கக்கூடாத அளவிற்கு அறிவிருப்பதை நினைத்து அகமகிழ்ந்தேன்.

பின்பு ஒரு காமிக்ஸ், உயிர்மையில் மேலும் ஒரு சுஜாதா. அவ்வளவுதான்.

இந்த வருடம் வாங்கிய புத்தகங்கள்

 1. வாலிப வாலி - நெல்லை ஜெயந்தா - வாலி பதிப்பகம் - ரூ.250/-
 2. உணவின் வரலாறு - பா.ராகவன் - கிழக்கு பதிப்பகம் - ரூ.140/-
 3. பிரபல கொலை வழக்குகள் - SP. சொக்கலிங்கம் - கிழக்கு பதிப்பகம் - ரூ.140/-
 4. பாட்ஷாவும் நானும் - சுரேஷ் கிருஷ்ணா & மாலதி ரங்கராஜன் - வெஸ்ட்லேண்ட் லிமிடெட் - ரூ.125/-
 5. லெனின் - மருதன் - கிழக்கு பதிப்பகம் - ரூ.120/-
 6. எடிசன் - இலந்தை சு. இராமசாமி - கிழக்கு பதிப்பகம் - ரூ.115/-
 7. பரலோகப் பாதை பச்சை! - லயன் காமிக்ஸ் - ரூ.100/-
 8. திப்பு சுல்தான் - மருதன் - கிழக்கு பதிப்பகம் - ரூ.90/-
 9. அக்பர் - என்.சொக்கன் - கிழக்கு பதிப்பகம் - ரூ.90/-
 10. எப்படி ஜெயித்தேன்? (நாடோடி - மன்னன் திரைப்படம் வெற்றியடைந்தது பற்றி) - எம்.ஜி.ஆர். - நாதன் பதிப்பகம் - ரூ.50/-
 11. ஆரோக்கிய கீரை சமையல் - காஞ்சன மாலா - மினி மேக்ஸ் - ரூ.40/-


சுஜாதா ஸ்பெஷல்

 1. கொலையுதிர் காலம் - உயிர்மை பதிப்பகம் - ரூ.200/-
 2. இதன் பெயரும் கொலை - கிழக்கு பதிப்பகம் - ரூ.115/-
 3. சொர்க்கத் தீவு - கிழக்கு பதிப்பகம் - ரூ.95/-
 4. விடிவதற்குள் வா - கிழக்கு பதிப்பகம் - ரூ.95/-
 5. 24 ரூபாய் தீவு - கிழக்கு பதிப்பகம் - ரூ.90/-
 6. மிஸ். தமிழ்த்தாயே நமஸ்காரம்! - கிழக்கு பதிப்பகம் - ரூ.85/-
 7. ஆயிரத்தில் இருவர் - கிழக்கு பதிப்பகம் - ரூ.70/-
 8. அப்ஸரா - கிழக்கு பதிப்பகம் - ரூ.50/-
 9. தப்பித்தால் தப்பில்லை - கிழக்கு பதிப்பகம் - ரூ.35/-

வாங்கிய அன்றே, வாத்தியாரின் ஒரு கதையை வாசித்து முடித்து, இந்த வருடத்தின் கணக்கை துவக்கியிருக்கிறேன். :-)