Sunday, April 25, 2010

பிடித்த‌ 10 ப‌ட‌ங்க‌ள்

பிடித்த‌ 10 ப‌ட‌ங்க‌ள் தொட‌ர்ப‌திவுக்கு டிக்கெட் வாங்கி கொடுத்த‌ ப‌திவுல‌கின் குழ‌ந்தை, ந‌ண்ப‌ர் சைவ‌கொத்துப்ப‌ரோட்டாவுக்கு ந‌ன்றி :)

விதிகள்:


1. தமிழ்ப் படங்கள் மட்டுமே
2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.
3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட).............ந‌ல்லாத்தான்யா யோசிக்க‌றீங்க‌ ரூல்ஸையெல்லாம்!


காதலிக்க நேரமில்லை

இன்றல்ல, இன்னும் 20௦ வருடங்கள் கழித்து பார்த்தாலும், ரசித்து பார்க்கலாம். சூப்பர் ஹிட் பாடல்கள், போரடிக்காத திரைக்கதை, கொஞ்சம் கூட விரசமில்லாத நகைச்சுவை...வேறென்ன வேண்டும்? ரவிச்சந்திரன், முத்துராமன் ஆகியோர் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது பாலையா-நாகேஷ் கூட்டணிதான். யாரால் மறக்க முடியும் நாகேஷ் கதை சொல்லும் காட்சியை?

படத்துக்கு மேலும் பலம் சேர்த்தவர் எம்.எஸ்.வி. 'விஸ்வநாதன் வேலை வேண்டும்', 'அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்', 'இந்த பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா' போன்ற பாடல்கள் இன்றும் ரசிக்க வைக்கிறது.

புதிய பறவை

ஒவ்வொருவருக்கும் சிவாஜி நடித்ததில் இதுதான் பெஸ்ட் என்று ஒரு படம் இருக்கும். நான் பார்த்தவரையில் எனக்கு மிகவும் பிடித்த சிவாஜி படம் என்றால் அது புதிய பறவைதான். இப்போது பார்த்தால், க்ளைமேக்ஸுக்கு முந்தைய சீன் வரை வரை சிவாஜியின் நடிப்பை ஓவர் ஆக்டிங், ஓவர் சீன் என்று நம்மால் கமெண்ட் அடிக்கமுடியும். ஆனால் க்ளைமேக்ஸில் தான் நிரபராதிதான் என நிரூபிக்க முயலும்போது அவர் படும் பாடு நம்மை கட்டி போட்டு விடும். தன்னை சுற்றி சரோஜா தேவி, சௌகார் ஜானகி, எம்.ஆர்.ராதா, வி.கே.ராமசாமி என்று பல ஜாம்பவான்கள் இருந்தாலும் எல்லோரையும் வெகு சுலபமாக டாமினேட் செய்து அனாயசமாக ஸ்கோர் செய்துவிடுவார் இந்த நடிப்பு ராட்சசன்.

பி.சுசீலா என்ற‌ழைக்க‌ப்ப‌டும் ஓர் குயில் பாடிய‌ பாட‌ல்க‌ளில் என்னுடைய‌ மோஸ்ட் ஃபேவ‌ரைட், 'உன்னை ஒன்று கேட்பேன்' & 'பார்த்த ஞாபகம் இல்லையோ'. 'பார்த்த‌ ஞாப‌க‌ம் இல்லையோ' பாட‌லில் சிவாஜி சிக‌ரெட் பிடிக்கும் காட்சியை பார்த்திருக்கிறீர்க‌ளா? செம்ம்ம‌ ஸ்டைல் அது!

தில்லு முல்லு

பொதுவாக கே.பாலச்சந்தர் படங்களை நான் விரும்பி பார்ப்ப‌தில்லை. சிக்கலான உறவுகள், உணர்வுகள், பிரச்னைகள்...ஐயையோ வேணாம்பா சாமி என்று ஒதுங்கிவிடுவேன். அடிப்ப‌டையில் fun-loving கேர‌க்ட‌ராக‌ இருப்ப‌தால் என‌க்கு இந்த‌ பட‌ம் பிடித்துபோன‌தில் ஆச்ச‌ரிய‌மில்லை. ப‌ட‌த்தின் டைட்டிலுக்கு முன்பு ர‌ஜினி கொடுக்கும் இன்ட்ரோ முத‌ல் க‌டைசி காட்சி வ‌ரை சிரித்துக்கொண்டே இருந்தேன். 'அய்ய‌ம்பேட்டே அறுவ‌டை ந‌ம்பி க‌லிய‌பெருமாள் ச‌ந்திர‌ன்' என்று ஆர‌ம்பிக்கும்போதும், எத‌ற்கெடுத்தாலும் 'சின்ன‌ வ‌ய‌சுல‌ எங்க‌ப்பா சொல்லிருக்கார் சார்' எனும்போதும் த‌லைவ‌ர் பின்னி எடுப்பார். 'காத‌லிக்க‌ நேர‌மில்லை'க்கு எப்ப‌டி நாகேஷ்‍‍-பாலையாவோ, அதுபோல் இப்ப‌ட‌த்திற்கு தேங்காய் சீனிவாச‌ன். இவ‌ரைப் ப‌ற்றி என்ன‌ சொல்வ‌தென்றே தெரிய‌வில்லை. ச‌ந்தித்த‌ ஒவ்வொரு ப‌ந்தையும் சிக்ஸ‌ராக‌ மாற்றிய‌ பேட்ஸ்மேனுக்கு ச‌ம‌ம் இவ‌ர்.

எப்பொழுதும் அழுது வ‌டியும் கேர‌க்ட‌ரிலேயே வ‌(ஜ‌)ல‌ம் வ‌ந்த‌ செள‌கார் ஜான‌கி காமெடியில் ஒரு க‌ல‌க்கு க‌ல‌க்கியிருப்பார். மாத‌வி...........ஹும்ம்ம்...;)

இந்த‌ ப‌ட‌த்தில் என‌க்கு மிக‌வும் பிடித்த‌ வ‌ச‌ன‌ங்க‌ள்...

நாகேஷ் அடிக்க‌டி சொல்வார் "அதான் நாகேஷ்!"

ர‌ஜினி பூர்ண‌ம் விஸ்வ‌நாத‌னிட‌ம் சொல்வார் "என்னைக் க‌ண்டா எல்லார்க்கும் புடிக்கும்" :)

சிங்கார‌வேல‌ன்

ப‌ல‌ரின் லிஸ்ட்டில் இந்த‌ ப‌ட‌ம் இட‌ம்பெறாது என்றே நினைக்கிறேன். ஆனால் என‌க்கு பிடித்த‌திற்கான‌ கார‌ண‌ம்...வேறென்ன‌ காமெடிதான் :) வ‌டிவேல், ம‌னோ, சார்லி ஆகியோர் இருந்தாலும் க‌ம‌லும் க‌வுண்ட‌ம‌ணியும்தான் மென் ஆஃப் த‌ மேட்ச்.

'யாரும்மா அந்த மூணு பேர்?' என்று கேட்கும் க‌ம‌லை, அவ‌ர் அம்மா 'ரெண்டாம் ஆட்ட‌த்துக்கு சினிமா போகும்போதே நினைச்சேன் இப்ப‌டித்தான் ஆகும்னு' என்று த‌மிழ் சினிமாவை கிண்ட‌ல‌டித்துக்கொண்டே ஆர‌ம்பிக்கும் காட்சி, க‌ருவாட்டு கூடையுட‌ன் வ‌ரும் க‌ம‌லிட‌ம் ஆட்டோ ஓட்டுன‌ர் ப‌டும் அவ‌ஸ்தை, ம‌னோ, க‌வுண்ட‌ம‌ணி & கோ 'சிங்காஆஆஆர‌வேல‌ன், சிங்கார‌வேல‌ன்' என்று க‌ம‌லை குஷ்புக்கு அறிமுக‌ப்ப‌டுத்தும் காட்சி, 'வ‌ர‌மாட்டா சும‌தி..த‌ர‌மாட்டா அமைதி..வ‌ர‌ப்போறோம் நாங்க‌..த‌ர‌ப்போறோம் வீங்க‌' என்று க‌விதையுட‌ன்(!) ஆர‌ம்பிக்கும் ச‌ண்டைக்காட்சி, 'இப்ப‌ என்னடா ப‌ண்ற‌து?..ஒண்ணு ப‌ண்ணுவோம், இன்ட‌ர்வெல் விட்ருவோம்' என்று இடைவேளைக்கு முன் வ‌ரும் காட்சி....100% காமெடிக்கு இப்ப‌ட‌ம் உத்த‌ர‌வாத‌ம். சாதார‌ண‌ ம‌சாலா ஹீரோ ப‌ண்ண‌வேண்டிய‌ க‌தாபாத்திர‌த்தை க‌ம‌ல் செய்த‌தால் இப்ப‌ட‌ம் எல்லோருக்கும் பிடிக்குமா என்று தெரிய‌வில்லை, ப‌ட் ஐ லைக் இட்!

காத‌லுக்கு ம‌ரியாதை

விஜ‌ய் நடித்து நான் மிக‌வும் ர‌சித்த‌ ப‌ட‌ம் இது. இதே‌ விஜ‌ய் தொட‌ர்ந்திருந்தால் இன்று ப‌ல‌ரும் விரும்பும் ந‌டிக‌ராக‌ மாறியிருப்பார். தேவையில்லாம‌ல் ட்ராக் மாறி, இன்று எஸ்எம்எஸ், ஃபார்வார்ட் ஈமெயில்க‌ளின் காமெடி பீஸாக‌ மாறி அவ‌ஸ்தைப‌ட்டுக்கொண்டிருக்கிறார். 'அய்ய‌! பேபி ஷாலினியா, ஓவ‌ர் அல‌ட்ட‌ல்பா' என்று இருந்த‌ எண்ண‌த்தை, வெகு அனாய‌ச‌மாக‌ இந்த‌ ஒரே ப‌ட‌த்திலேயே மாற்றினார் 'பூ விழி பார்வையில் மின்ன‌ல் காட்டிய‌' ஷாலினி. காத‌ல‌ர்க‌ளுக்கான‌ தேசிய‌ கீத‌மாக‌ 'என்னைத் தாலாட்ட‌ வ‌ருவாளோ'வை ப‌டைத்தார் இளைய‌ராஜா. இதுபோன்ற‌ ஒரு சூப்ப‌ர்ஹிட் பாட‌லுக்கு பின்பும் ஏன் ப‌ழ‌னிபார‌தியால் முண்ண‌ணி இட‌த்துக்கு வ‌ர‌முடிய‌வில்லை என்ப‌து இன்னும் என‌க்கு புதிர்தான்!

ப‌க்க‌ம் ப‌க்க‌மாக‌ வ‌ச‌ன‌ம் பேசி முடிக்க‌ வேண்டிய‌ க்ளைமேக்ஸை, ஸ்ரீவித்யாவின் க‌ண்க‌ளும், ஷாலினியின் க‌ண்க‌ளுமே பேசி எளிதாக‌ ந‌ம்மை ஈர்த்துவிடும். குறிப்பாக‌ ஸ்ரீவித்யா...இவ‌ர் ந‌டிப்பை பார்த்து அச‌ந்து போனேன்!

விஜ‌ய் ர‌சிக‌ர்க‌ளுக்காக‌ ஒரு பி.கு.: விஜ‌ய் ந‌டித்த‌ ஃபார்முலா ப‌ட‌ங்க‌ளில் கில்லி பிடித்திருந்த‌து. கார‌ண‌ம் ஹீரோயிஸ‌ம் இருந்தாலும் ஒரு அண்ட‌ர்ப்ளே இருந்த‌து. போக்கிரியும் பிடித்திருந்த‌து..பெல் பாட்ட‌ம் போட்ட‌ போலீஸாக‌ வ‌ரும் காட்சிக்கு முன்பு வ‌ரை. ஆனால் ஆதி, அழ‌கிய‌ த‌மிழ் ம‌க‌ன், குருவி, வில்லு, வேட்டைக்கார‌ன்....என்ன‌ இதெல்லாம்? கொஞ்ச‌ம் பாத்து செய்ய‌ சொல்லுங்க‌ பாஸ் :)

த‌ள‌ப‌தி

'நாய‌க‌ன்' பிடிக்கும்தான். ஆனால் அதில் The Godfatherரிஸ‌ம் நிறைய‌ இருந்த‌தால், இந்த‌ லிஸ்ட்டில் குறிப்பிட‌வில்லை. இதுவும் ந‌ம் எல்லோர்க்கும் தெரிந்த‌ ம‌ஹாபார‌த‌க் க‌தைதான். ஆனால் ப‌ட‌மாக்கிய‌ வித‌த்தில் அச‌த்தியிருப்பார் ம‌ணிர‌த்ன‌ம். வெறும் ஆக்ஷ‌ன், ஸ்டைல், காமெடி என்றே ம‌ன‌தில் ப‌திந்திருந்த‌ சூப்ப‌ர் ஸ்டாரை, 'சின்ன‌த்தாய‌வ‌ள்' பாட்டின் மூல‌ம் ந‌ல்ல‌ 'ந‌டிக‌ராக‌'வும் காட்டினார். எப்போது அந்த‌ பாட‌லை பார்த்தாலும் உட‌ல் சிலிர்க்கும் என‌க்கு. இப்பாட‌லைப் ப‌ற்றி பேசுகையில், மீண்டும் ஸ்ரீவித்யா...இதை எழுதும்போதுதான் தோன்றுகிற‌து, ஒரு மிக‌ச்சிற‌ந்த‌ ந‌டிகையை வெகு சீக்கிர‌ம் இழ‌ந்துவிட்டோம் என்று :(

இன்று இருக்கும் துக்க‌டா ஹீரோக்க‌ளே ட‌புள் ஹீரோ ச‌ப்ஜெக்ட் செய்ய‌ த‌ய‌ங்கும்போது, இரு பெரும் சூப்ப‌ர் ஸ்டார்க‌ள் இணைந்து ந‌டித்த‌து மிக‌ப் பெரிய‌ விஷ‌ய‌ம்தான். இருவ‌ருக்கும் ச‌ம‌மான‌ கேர‌க்ட‌ர்க‌ள் கொடுத்து, ஜ‌ஸ்டிஃபை செய்த‌து ம‌ணி சாரின் டேல‌ன்ட். இப்ப‌ட‌த்தை தியேட்ட‌ரில், டிவியில், டிவிடியில் என்று ப‌ல‌ முறை பார்த்திருக்கிறேன். எத்த‌னை முறை என்ப‌து ச‌த்திய‌மாக‌ நினைவில் இல்லை.

'ஏன்?'

'தேவா'

அவ்வ‌ள‌வுதான். சொல்ல‌ நினைத்த‌தை வ‌ள‌வ‌ள‌வென்று சொல்லாம‌ல், ப‌ட‌ம் பார்ப்ப‌வ‌ர்க‌ள் புத்திசாலிக‌ள்தான், அவ‌ர்க‌ளால் புரிந்து கொள்ள‌ முடியுமென்று ஷார்ட்டாக‌ முடித்தார்.

ப‌ட‌த்தில் என‌க்கு மிக‌வும் பிடித்த‌ காட்சி....'நிறுத்த‌ணும், எல்லாத்தையும் நிறுத்த‌ணும்' என்று வ‌ரும் ர‌ஜினி-ம‌ம்முட்டி-அர்விந்த் சுவாமி காட்சி. பிண்ண‌ணி இசையில் இளைய‌ராஜா அடி பின்னியெடுத்திருப்பார் இந்த‌ காட்சியில்!

அன்பே சிவ‌ம்

க‌ம‌ல் மேல் ம‌ரியாதை உண்டாக்கிய‌ ப‌ட‌ம் என்று கூட‌ சொல்வேன். அதுவ‌ரை 'அவ‌ன் இவ‌ன்' என்றே ஒருமையில் குறிப்பிட்டுக்கொண்டிருந்த‌வ‌ன், இப்ப‌ட‌த்திற்கு பின்புதான் க‌ம‌ல் ப‌ற்றி பேசும்போது, 'அவ‌ர்ர்ர்ர், இவ‌ர்ர்ர்ர்' என்று குறிப்பிடுகிறேன். விட்டால் 'க‌ம‌ல்ஹாச‌ர்' என்று கூட‌ சொல்வேன்.:)

எப்போதும் த‌ன்னுட‌ன் இன்னொரு ஹீரோ ந‌டித்தால் அவ‌ரை டாமினேட் செய்து ந‌டித்தே ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌ க‌ம‌ல், இதில் மாத‌வ‌னை த‌ன்னைவிட‌ ஒருப‌டி மேலேயே தூக்கிவைத்தார். மேடியும் லேசுப்ப‌ட்ட ஆளா என்ன‌, கிடைத்த‌ பூந்தியை அழ‌காக‌ ப‌ய‌ன்ப‌டுத்தி ல‌ட்டாக‌ கொண்டுவ‌ந்தார். ர‌யில் விப‌த்தில் சிக்கிய‌ சிறுவ‌னுக்கு ர‌த்த‌ம் கொடுத்தும் காப்பாற்ற‌ முடியாம‌ல் இற‌ந்துவிட‌, அத‌ன்பின் அதை நினைத்து குமுறும் காட்சியில் மாத‌வ‌னை பார்த்து விய‌ந்துபோனேன்.

டைட்டிலில் 'இய‌க்க‌ம் சுந்த‌ர் சி.' என்று காண்பித்த‌து ர‌சிக்க‌த்த‌க்க‌ ஒன்று ;). மேலும் ர‌சிக்க‌ வைத்த‌து ம‌த‌னுடைய‌ காமெடியும், புத்திசாலித்த‌ன‌மும் க‌ல‌ந்த‌ வ‌ச‌ன‌ங்க‌ள்...குறிப்பாக‌ '2:02 டூ 2:22' ;)

இருவ‌ர்

இன்னும் 10 வ‌ருட‌ங்க‌ளாவ‌து க‌ழித்து வ‌ந்திருக்க‌வேண்டிய‌ ப‌ட‌ம். இரு பிர‌ப‌ல‌ங்க‌ளைப் ப‌ற்றிய‌ பட‌ம் எடுப்ப‌து எவ்வ‌ள‌வு ரிஸ்க்! ஒரே ஒரு காட்சியில் பிச‌கினாலும், 'ஹே டைர‌க்ட‌ர் அவ‌ருக்கு ச‌ப்போர்ட் ப‌ண்றாருப்பா' என்ற‌ பேச்சு எழுந்து, ப‌ட‌ம் பார்த்து முடித்த‌ பின்னும் அதுதான் ம‌ன‌தில் நிலைத்திருக்கும். ஆனால் அதுபோல் ஒரு காட்சியிலும் ச‌றுக்காம‌ல், ஆர‌ம்ப‌ம் முத‌ல் இறுதி வ‌ரை 'இது ம‌ணிர‌த்ன‌ம் ப‌ட‌ம்' என்ப‌தை நிரூபித்திருப்பார்.

ப‌ள்ளியில் ப‌டித்துக்கொண்டிருந்த‌போது ரிலீஸான‌து. ஆனால் அப்போது 'போடா இதெல்லாம் போர‌டிக்கும்டா' என்று சொல்லி, ப‌ட‌த்தை பார்க்காம‌ல் விட்டுவிட்டேன். ஆனால் மூன்று வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு 'ச‌ரி இந்த‌ ப‌ட‌த்துல‌ அப்ப‌டி என்ன‌தான் இருக்குன்னு பாத்துட‌லாமே' என்று டிவிடி வாங்கி பார்த்தேன். பார்த்த‌பின் என் ந‌ண்ப‌ர் ஹ‌ரீஷிட‌ம் சொன்னேன், "இந்த‌ மாதிரி ஒரு ப‌ட‌த்துல‌ வொர்க் ப‌ண்ணிட்டு செத்துபோயிட‌ணும் ஹ‌ரீஷ்". ஞாப‌க‌ம் இருக்கா டைர‌க்ட‌ர்?...:)

நான் ர‌சித்த‌ சில....

'ஆயிர‌த்தில் நான் ஒருவ‌ன்' பாட‌ல் - 'எம்ஜிஆர்'ரிஸ‌ம் துளியும் குறையாத‌ பாட‌ல்.

'ந‌றுமுகையே ந‌றுமுகையே' பாட‌ல் - வார்த்தைக‌ளில் விளையாடியிருப்பார் க‌விஞ‌ர்.

ஜெய‌ல‌லிதாவை மிக‌ச்சிற‌ப்பாக‌ portray செய்திருந்தார்‌ ஐஸ்வ‌ர்யா ராய். ஜெய‌ல‌லிதா பார்த்திருந்தால் க‌ண்டிப்பாக‌ ர‌சித்திருப்பார்.

ஜீப்பிலிருந்து கீழே விழுந்த‌பின், ஐஸ்வ‌ர்யா ராயும் மோக‌ன்லாலும் நெருக்க‌மாக‌ நின்று கொண்டு ஒருவ‌ரையொருவ‌ர் பார்த்துகொண்டிருப்பார்க‌ள். அப்போது ஒரு ரொமான்டிக்கான‌ பிஜிஎம் வ‌ரும்......ர‌ஹ்மான் கி 'ஜெய் ஹோ'!

பிர‌காஷ்ராஜ் கூட்ட‌த்தில் பேசிக்கொண்டிருக்கும்போது, வேண்டுமென்றே தாம‌த‌மாக‌ சென்று கூட்ட‌த்தின‌ரை த‌ன் ப‌க்க‌ம் ஈர்ப்பார் மோக‌ன்லால். அப்போது பிர‌காஷ்ராஜ் ஒரு ரியாக்ஷ‌ன் கொடுப்பார்...இந்த‌ ம‌னித‌ருக்கு தேசிய‌ விருது கொடுத்த‌தில் த‌ப்பேயில்லை!

'உட‌ல் ம‌ண்ணுக்கு உயிர் த‌மிழுக்கு, இதை உர‌க்க‌ச் சொல்வோம் உல‌குக்கு' என்று அர்விந்த் சுவாமியின் குர‌லில் வ‌ரும் க‌விதை

'சாவிலும் எனை முந்திக்கொண்டு ச‌ரித்திர‌ம் ப‌டைத்த‌வ‌னே' என்று பிர‌காஷ்ராஜ் இறுதிக்காட்சியில் சொல்லும் க‌விதை

காக்க‌ காக்க‌

1980, 90க‌ளில் வ‌ந்த‌ ப‌ட‌ங்க‌ளை பார்த்தால், போலீஸாக‌ வ‌ருப‌வ‌ர் அர‌சிய‌ல்வாதிக்கு கூஜா தூக்குப‌வ‌ராக‌ வ‌ருவார், க‌ண்டிப்பாக‌ சிறையில் ஒரு அப்பாவி பெண்ணை ப‌லாத்கார‌ம் செய்வார். அப்ப‌டியே ந‌ல்ல‌ போலீஸாக‌ இருந்தாலும், ஹீரோ ந‌ன்றாக‌ ச‌ண்டை போட்டு முடித்த‌பின், க்ளைமேக்ஸில் வ‌ந்து வான‌த்தை நோக்கி துப்பாக்கியால் ஒருமுறை சுட்டு, 'யூ ஆர் அண்ட‌ர் அரெஸ்ட்' என்பார். இல்லையென்றால், ஹீரோவை நோக்கி வில்ல‌ன் சுடும்போது குறுக்கே பாய்ந்து குண்டை தாங்கிக்கொள்வார். அப்ப‌டியும் ஹீரோவின் தோளில் சாய்ந்துகொண்டு, "என்னை ப‌த்தி க‌வ‌லைப்ப‌டாதே, போ, போய் அவ‌னைத் த‌டுத்து ந‌ம்ம‌ நாட்டை காப்பாத்து, உன்னால‌தான் அது முடியும்...போ போ" என்று ஓவ‌ர் சீன் ஒய்யாக்குமாராக‌ ந‌ம்மை க‌ண்ணீரில் ஆழ்த்துவார்.

உங்க‌ளுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். சென்னை போலீஸார் வீர‌‌ம‌ணியை என்க‌வுன்ட‌ர் செய்த‌ கொஞ்ச‌ நாளில் ரிலீஸான‌து இப்ப‌ட‌ம்.

'ஆ' 'ஊ' என்று க‌த்தாம‌ல், ப‌ஞ்ச் டய‌லாக் விடாம‌ல், ஒரு அமைதியான‌ போலீஸாக‌ வாழ்ந்திருந்தார் சூர்யா. இந்த‌ கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி என்கிறார்க‌ளே, அதை நான் +1, +2வில் ப‌டித்த‌தைவிட‌ இந்த‌ ப‌ட‌த்தில்தான் சூர்யா ஜோதிகாவை பார்த்து க‌ற்றுக்கொண்டேன். நாய‌க‌னே க‌தையை ந‌ரேட் செய்வ‌து போல் இருந்த‌து ரிய‌லி வொண்ட‌ர்ஃபுல், அதுவும் சூர்யா வாய்ஸ் எக்ஸ‌ல‌ண்ட்! உண‌மையாக‌ சொல்கிறேன், இந்த‌ ப‌ட‌த்தை பார்த்து முடித்த‌பின் போலீஸ் மேல் ஒரு ம‌ரியாதையே வ‌ந்திருந்த‌து என‌க்கு. ச‌த்ய‌ம் போன‌ற‌ குவாலிட்டியான‌ திரைய‌ர‌ங்கில் இப்போது ரீ‍ரிலீஸ் செய்தாலும் க‌ண்டிப்பாக‌ பார்ப்பேன்.

ர‌சித்த‌ வ‌ச‌ன‌ங்க‌ள்...

'பொண்ணுங்க‌ விஷ‌ய‌த்துல‌ நான் பெரிய‌ எக்ஸ்ப‌ர்ட்லாம் கிடையாது, ஆனா ஒரு பொண்ணுன்னா இப்ப‌டித்தான் இருக்க‌ணும்னு தோணுச்சு'.


************

'உன‌க்கும் என‌க்கும் ஆறு வ‌ய‌சு வித்தியாச‌ம் இருக்கு, ஒய் மீ?'

'இட்ஸ் எ கேர்ள் திங், ஒரு பொண்ணா இருந்து பாருங்க‌, அப்போதான் உங்க‌ளுக்கு புரியும்'

இந்த‌ காட்சியில் சூர்யா ஜோதிகாவின் ந‌டிப்பு.......அவ‌ர்க‌ள் ந‌டித்தார்க‌ளா என்ன‌?...;)





த‌சாவ‌தார‌ம்

இதுல‌ என்ன‌ க‌தை இருக்கு, சில‌ கேர‌க்ட‌ர்ஸ்லாம் தேவையே இல்லாம‌ திணிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து என்றெல்லாம் விம‌ர்ச‌ன‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் ஒரே ஒரு முறை யோசித்து சொல்ல‌ட்டும். இதே ப‌ட‌த்தை ஹாலிவுட்டில், ஹாரிஸ‌ன் ஃபோர்ட், ப்ரூஸ் வில்லிஸ், டாம் க்ரூஸ் போன்ற‌ ஹீரோக்க‌ள் செய்திருந்தால் என்ன‌ சொல்லியிருப்பார்க‌ள். 'வாவ், என்ன‌மா பின்றான் தெரியுமா? க‌ம‌ல்லாம் பிச்சை எடுக்க‌ணும் அவ‌ன்கிட்ட‌', 'ஹாலிவுட்னா ஹாலிவுட்தான்டா, ந‌ம்மாளுங்க‌ளுக்கு ம‌ர‌த்தையும், ஹீரோயினையும் சுத்தி சுத்தி பாட்டு பாட‌த்தான் தெரியும்'...இப்ப‌டி ப‌ல‌.

ப‌த்து கேர‌க்ட‌ர்க‌ள், மேக்க‌ப்பை விடுங்க‌ள், இருக்கிற‌ டெக்னால‌ஜியை வைத்து எப்ப‌டியாவ‌து ப‌ண்ணிவிட‌லாம். ஆனால் ப‌த்து வித‌மான‌ குர‌ல்க‌ள்...முடியுமா? எந்த‌ ந‌டிக‌ர் செய்திருக்கிறார் இப்ப‌டி?

எல்லோரையும் பாடுப‌டுத்திய‌ சுனாமியையே பாஸிட்டிவ்வாக‌ பார்த்து, ஒரு த்ரில்லான‌ சேஸிங்கை கொடுத்திருந்தார் க‌ம‌ல். ஆனால் அதையும் ஓவ‌ராக‌ விம‌ர்ச‌ன‌ம் செய்த‌ அறிவு ஜீவிக‌ள் நிறைய‌வே இருந்த‌ன‌ர்.

கே.எஸ்.ர‌விக்குமார் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். 'ப‌ட‌ம் ஆர‌ம்பிக்க‌ற‌துக்கு முன்னாடி, நிறைய‌ மேக்க‌ப் டெஸ்ட் ப‌ண்ண‌ப்போ, சார் ரொம்ப‌ கஷ்ட‌மாயிருக்கே, விட்ற‌லாமான்னு அவ‌ர்கிட்ட‌ கேட்டேன்'.

அத‌ற்கு க‌ம‌ல் சொன்னாராம் 'க‌ஷ்ட‌ப்ப‌டாம‌ ப‌ண்ண‌னும்னா நான் எதுக்கு?'

**********

ஏற்க‌ன‌வே ஒரு தொட‌ர் ப‌திவுக்கு சில‌ ந‌ண்ப‌ர்க‌ளை அழைத்துள்ள‌தால், இத்தொட‌ரைத் தொட‌ர‌ ந‌ண்ப‌ர் ஹ‌ரீஷை ம‌ட்டும் அழைக்கிறேன். 'ய‌ம்மாடி க்ரேட் எஸ்கேப்பு' என்று ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ம‌கிழ்ச்சிய‌டைய‌ வேண்டாம். அடுத்த‌ தொட‌ர் ப‌திவு ஒன்று இருக்கிற‌து, மாட்டி விடுறேன் இருங்க‌ ;))


Sunday, April 18, 2010

ப‌தின்ம‌ வ‌ய‌து குறும்புக‌ள்


உண்மையாக‌ சொன்னால் எப்ப‌டி ஆர‌ம்பிப்ப‌து, எதை சொல்வ‌து என்றே தெரிய‌வில்லை. அழ‌கான‌ மாலைப்பொழுதில் அந்த‌ ஜில் நினைவுக‌ளை மீண்டும் மீட்டெடுக்க‌வைத்த‌ தோழி விக்னேஷ்வ‌ரிக்கு ந‌ன்றி.

சின்ன்ன்ன‌ வ‌ய‌சுல‌ எவ்வ்வ்வ‌ளோ போராட்ட‌ம்!

முத‌லில் ப‌டிப்பு என‌க்கு வாழைத்த‌ண்டு பொறிய‌லாய் காட்சிய‌ளிக்க‌ ஆர‌ம்பித்த‌து ('உட‌ம்புக்கு ரொம்ப‌ ந‌ல்ல‌துடா' என்று அம்மா சொன்னாலும், இன்றும் என‌க்கென்ன‌வோ வாழைத்த‌ண்டு பொறிய‌ல் ம‌ட்டும் உவ்வ்வ்வே!). டிவிதான் உல‌க‌ம் என்றான‌து. ராமாய‌ண‌ம், ம‌ஹாபார‌த‌ம் தொட‌ங்கி, டாம் & ஜெர்ரி, ஹீமேன், சார்லி சாப்ளின், ர‌ஜினி, க‌ம‌ல், ஒளியும் ஒலியும், சித்ர‌ஹார், சித்ர‌மாலா, சூப்ப‌ர் ஹிட் முகாப்லா என‌ ப‌டிப்பை த‌விர‌ ம‌ற்ற‌ அனைத்திலும் ஆர்வ‌ம் காட்ட‌ தொட‌ங்கினேன்.

போன‌ ஜென்ம‌த்தில் காந்தி தாத்தாவுக்கு பிஏவாய் இருந்தேனோ என்ன‌வோ, போராடுவ‌து என்ப‌து ர‌த்த‌த்தில் ஊறிய‌தாய் இருந்த‌து. ஆம், இள‌வ‌ய‌திலேயே என் போராட்ட‌ம் ஆர‌ம்ப‌மான‌து. அதுவும் என் பெற்றோருக்கு எதிராக‌. போராட்ட‌த்தின் கார‌ண‌ம்....சைக்கிள். ப‌தினொரு வ‌ய‌தில் அப்பாவின் சைக்கிளை ஓட்டிக்கொண்டிருந்த‌போது ஒரு சிறு விப‌த்து(!) ஏற்ப‌ட்டு ப‌த்து நாட்க‌ள் ப‌ள்ளிக்கு "As I am suffering from........Thanking You, Yours Obediently...." என்று சொல்லிவிட்டு, வீட்டில் டிவியை காத‌லித்துக்கொண்டிருந்தேன். டீ விள‌ம்ப‌ர‌த்தில் சொல்வ‌து போல் 'ட‌புள் ஸ்ட்ராங்'காக‌ ஒரு த‌ழும்புவையும் முட்டிக்கு கீழே அந்த‌ விப‌த்து ஏற்ப‌டுத்திய‌தால், என‌க்கான‌ ஒரு சைக்கிளுக்கு நான் மிக‌வும் போராட‌ வேண்டிய‌தாயிருந்த‌து. ப‌ல‌ சுற்று பேச்சுவார்த்தைக‌ளுக்கு பின்பு ம‌ன‌மிற‌ங்கிய‌ மேலிட‌ம், 'ஸ்கூல் விட்டா நேரா வீட்டுக்கு வ‌ர‌ணும், மெயின் ரோட்லலாம் போக‌க்கூடாது' என்ற‌ சில‌ ப‌ல‌ நிபந்தனைக‌ள் போட‌ ச‌ரியென்று ஒப்புக்கொண்டேன். 'கேப்ட‌ன்' வீட்டிற்கு வ‌ந்தார். 'என் சைக்கிள் கேப்ட‌ன்டா'ன்னு பெருமை அ‌டித்துக்கொள்ள‌லாமே என்று, பெய‌ருக்காக‌வே இந்த‌ சைக்கிளை தேர்வு செய்தேன்...:)

ப‌தின்ம‌ வ‌ய‌தில் பெண்க‌ளுக்கு வேண்டுமானால், ரெட்டை ஜ‌டை, ரிப்ப‌ன், க‌ல‌ர் க‌ல‌ராய் ஸ்டிக்க‌ர் பொட்டு, தாவ‌ணி, தாவ‌ணிக்கு மேட்சிங்காய் வ‌ளைய‌ல்க‌ள் என்று ஏக‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ங்க‌ள் இருக்க‌லாம். ஆனால் என‌க்கு, எப்போதுதான் டிர‌வுச‌ரிலிருந்து பேண்ட்டுக்கு மாற‌ப்போகிறோமோ என்றிருந்த‌து. அப்பாவிட‌ம் கேட்ட‌த‌ற்கு 'நீயா ஆசைப்ப‌ட்டா கூட‌ ஒரு ஸ்டேஜுக்கு அப்புற‌ம் டிர‌வுச‌ர் போட‌ முடியாது' என்றார். பிற‌கு 'அவ‌ன் போட்டிருக்கான் தெரியுமா, இவ‌ன் போட்டிருக்கான் தெரியுமா' என்று மீண்டும் சில‌ பேச்சு வார்த்தைக‌ள் நட‌த்தி, பேண்ட்டுரிமையை போராடி பெற்றேன். முத‌ல் முறை பேண்ட் அணிந்து ப‌ள்ளிக்கு சென்ற‌போது, அந்த‌ த்ரில் இருக்கிற‌தே...வாவ்...ஏனோ கொஞ்ச‌ம் கூச்ச‌மாய் கூட‌ இருந்த‌து. ஆனாலும் ம‌ன‌துக்குள் ஒரு ச‌ந்தோஷ‌ம் "நான் பெரிய‌ ஆளாயிட்டேன்டா"!

ந‌ட்பு

அப்பாவின் ந‌ண்ப‌ரின் ம‌க‌னும் என்னுட‌ன் ப‌டித்தான். ரொம்ப‌வே ப‌டிப்ஸ் என்ப‌தால் அவ‌ன் இன்னொரு 'வாழைத்த‌ண்டு பொரிய‌ல்' என‌க்கு. ஒவ்வொரு தேர்வு முடிவின்போதும், ஒவ்வொரு ச‌ப்ஜெக்டிலும் அவ‌ன் மார்க் என்ன‌, அவ‌ன் மார்க் என்ன‌ என்று கேட்டு வீட்டில் க‌டுப்பேத்துவாங்க‌ மை.லா.:( அத‌னால் அவ‌ன் ந‌ட்பை டிவோர்ஸ் செய்த‌பின், பெஸ்ட் ஃப்ரெண்ட் என்ற‌ வார்த்தைக்கு அர்த்த‌மாய் 'ச‌ர‌வ‌ண‌ன்' கிடைத்தான். ச‌ர‌வ‌ண‌னும் ப‌ய‌ங்க‌ர‌ ப‌டிப்ஸ்தான். பொதுவாக‌ ப‌டிப்ஸ்க‌ள் எல்லாம் என்னைப் போன்ற‌ அர‌ட்டைய‌ர்க‌ளுட‌ன் க‌ல‌க்காம‌ல் சாமியார் (நோ பேட் இமே‌ஜினேஷ‌ன் ப்ளீஸ்) போல‌ இருப்பார்க‌ள். ஆனால் ச‌ர‌வ‌ண‌ன் ப‌க்கா க‌ம‌ர்ஷிய‌ல் டைப். ப‌டிப்ப‌திலும் ச‌ரி, என்னுட‌ன் அர‌ட்டை அடிப்ப‌திலும் ச‌ரி...ஹி வாஸ் த‌ பெஸ்ட்!



கிரிக்கெட்டை ர‌சிக்கும் அள‌வுக்கு என‌க்கு ஆட‌த்தெரிய‌வில்லை அப்போது. அத‌னால் எப்போதும் லாஸ்ட் பேட்ஸ்மேனாக‌வே க‌ள‌மிற‌க்க‌ப்ப‌ட்டேன். ப‌ள்ளி விட்ட‌பின், வ‌ய‌சுப் பெண் ப‌த்திர‌மாக‌ வீட்டிற்கு செல்கிறாளா என்று பின்னாடியே போவ‌துபோல், ஃபீல்டிங்கில் ப‌வுண்ட‌ரிக் கோட்டை தாண்டுகிற‌தா என்று ப‌ந்தின் பின்னாடியே ஓடி கோட்டை விடுவ‌தில் நான் அப்போதே ஒரு அனில் கும்ப்ளே. கேட்ச் பிடிப்ப‌திலும் சொங்கியாக‌ இருந்திருக்கிறேன்.

"ச‌ர‌வ‌ணா, நான் அடுத்த‌ மேட்ச் வ‌ர‌ல‌டா"

"ஏன்?"

"ம‌ணி திட்ட‌றான்டா, நான் என்ன‌ வேணும்னேவா கேட்ச் வுட்டேன்...நான் வ‌ர‌ல‌"

"அது ல‌ட்டு கேட்ச்டா, நீ புடிச்சிருந்தினா இன்னும் ஈஸியா ஜெயிச்சிருக்க‌லாம், ம‌வ‌னே தோத்திருந்தோம்னா நானே உன‌க்கு ரெண்டு குடுத்திருப்பேன்"

"இதுக்குத்தான்...நான் வ‌ர‌ல‌"

"ஒழுங்கா கேட்ச் ப்ராக்டிஸ் ப‌ண்ணு....டீம் லிஸ்ட்டை ம‌ணி எங்கிட்ட‌ காட்டும்போது நான் சொல்லிக்க‌றேன்"

இப்போது நினைத்துப் பார்க்கும்போது இது ஒரு சாதார‌ண‌ நிக‌ழ்வாக‌ தோன்றுகிற‌து. ஆனால் ஒரு திறமையும் இல்லாம‌லிருந்த‌ என்னை எப்ப‌டியும் டீமுக்குள் கொண்டுவ‌ர‌ அவ‌ன் முய‌ற்சித்த‌து, ந‌ட்பேய‌ன்றி வேறென்ன‌? அவ‌ன் சொன்ன‌போது என் க‌ண்க‌ளில்.... ந‌ல்ல‌வேளையாக‌ அடுத்த‌ மேட்சில் கேட்ச் எதுவும் என‌க்கு வ‌ர‌வில்லை. ஃபார்வார்டில் நின்று சில‌ சிங்கிள்ஸை ம‌ட்டும் த‌டுத்தேன். ஒவ்வொரு முறை த‌டுக்கும்போதும் கைத்த‌ட்ட‌லுட‌ன் ஒரு குர‌ல் கேட்கும் "ஃபீல்டிங்டா ஃபீல்டிங்டா". ஒருவ‌ழியாய் ப‌டிப்ப‌டியாக‌ இம்ப்ரூவ் ஆகி என‌க்கு என் மேல் ந‌ம்பிக்கை பிற‌ந்த‌ ச‌ம‌ய‌த்தில் ச‌ர‌வ‌ண‌ன் சொன்னான்...

"டேய் இந்த‌ வ‌ருஷ‌ம் +2, ஒழுங்கா ப‌டிக்க‌ற‌ வேலைய‌ பாப்போம், இனிமே கிரிக்கெட்லாம் வேணாம்"

"இருக்க‌ட்டும்டா, அதுக்காக‌? அப்போ பி.டி பீரிய‌ட்ல‌கூட‌ கிர‌வுண்டுக்கு போகாம‌ க்ளாஸ்ல‌ உக்காந்து ப‌டிக்க‌ணுமா?

"கிர‌வுண்டுக்கு போலாம், ம‌த்த‌ க்ளாஸ் ப‌ச‌ங்க‌ மேட்ச் ஆடுற‌து பாக்க‌லாம், நாம‌ விளையாடினா ந‌ம‌க்கு கான்ச‌ன்ட்ரேஷ‌ன் அதுல‌யே இருக்கும்"

இப்ப‌டி ஒரு இடியை தூக்கி போட்டு, இந்திய‌ அணிக்கு ஒரு ஜான்டி ரோட்ஸ் கிடைக்காம‌ல் செய்த‌தினால் ம‌ட்டும் ச‌ர‌வ‌ண‌னின் அக்க‌வுண்ட்டில் பாவ‌க்க‌ண‌க்கு ஒன்று கூடிய‌து! எம்.ஈ முடித்து இப்போது அவ‌ன் பெங்க‌ளூரில் ப‌ணிபுரிந்துகொண்டிருக்கிறான். ஆறு மாத‌ம் முன்பு வ‌ரை ஜாலியாக‌ ச‌ந்தோஷ‌மாக‌த்தான் இருந்தான். யார் க‌ண் ப‌ட்ட‌தோ, அவ‌னுக்கு இப்போது திரும‌ண‌ம் ஆகிவிட்ட‌து ;)

'ச‌ர‌வ‌ண‌ ப‌வ‌ன்', 'ச‌ர‌வ‌ணா ஸ்டோர்ஸ்', ப‌ருத்தி வீர‌ன் டைட்டில் கார்டில் 'ச‌ர‌வ‌ண‌ன்', ப‌திவ‌ர்/ந‌ண்ப‌ர் ஜெட்லி ச‌ர‌வ‌ண‌ன், ந‌ண்ப‌ர் தினேஷ் ச‌ர‌வ‌ண‌ன் என்று ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் அவ‌ன் பெய‌ரை பார்க்கும்போதெல்லாம், ஒரு க‌ர்ஸ‌ர் ப்ளிங்க் ஆகும் நேர‌த்தில் அவ‌ன் முக‌ம் ம‌ன‌தில் தோன்றி போகும்......

டேக் ஒன்...காலேஜ்...ஃபிக‌ர்...ஆக்ஷ‌‌ன்!

ஆதி (அந்த‌ ப‌ட‌‌ம் இல்ல‌ங்க‌) கால‌த்திலிருந்தே சினிமாக்க‌ளில், க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ளை த‌றுத‌லைக‌ளாக‌வே காண்பிப்ப‌து வ‌ழ‌க்க‌மாயிருக்கிற‌து. என் விஷ‌ய‌த்தில் இது அப்ப‌டியே உல்டா. க‌ல்லூரியில்தான் ப‌டிப்பு என‌க்கு 'உருளைக்கிழ‌ங்கு பொறிய‌ல்'ஆக‌ தெரிந்த‌து. இறுதியாண்டு ப‌டிக்கும்போது, ஹெச்ஓடி "என்ன‌டா, ர‌கு செட்டுதான் க்ளாஸ்லேயே டிஸிப்ளின்ல‌ பெஸ்ட்டுன்னு (ஷைல‌ஜா) மேம் ச‌ர்ட்டிஃபிகேட் த‌ர்றாங்க‌"ன்னு சொன்னபோது, ம‌கிழ்ச்சியாயிருந்த‌து. ஹி..ஹி..ந‌ம்புங்க‌, நான் கொஞ்ச‌ம் உருப்ப‌டியா மாறுன‌தே காலேஜ்ல‌தான்!

ஆண்க‌ள் ம‌ட்டுமே ப‌டிக்கும் க‌ல்லூரியில் என்னை சேர்க்க‌ எவ்வ‌ள‌வோ முய‌ற்சித்த‌ன‌ர் மை டிய‌ர் ப்ரொட்யூச‌ர்ஸ். ஆனால் விதிக்க‌ப்ப‌ட்ட‌தென்ன‌வோ ஒரு கோ-எட் க‌ல்லூரி! ஃபிக‌ர், க‌ல‌ர், டிக்கெட்டு, சைட்டு, கில்மா ('செம‌' என்ப‌து ம‌ட்டும் இந்த‌ ஐந்து வார்த்தைக‌ளுக்கும் முன்னாடி வ‌ர‌க்கூடிய‌ காம‌ன் வேர்ட்) என்று புதிய‌ புதிய‌ வார்த்தைக‌ள் ஹார்மோன்க‌ளின் த‌ய‌வினால் அறிமுக‌மாயின‌. ம‌கிழ்ச்சியுட‌ன் முத‌ல் நாள் க்ளாஸுக்கு சென்ற‌ பின்புதான் தெரிந்த‌து, க்ளாஸில் மொத்த‌மிருந்த‌ 39 பேரில், ஒரே ஒரு பெண்! க்ளாஸ் ஆர‌ம்பித்த‌ ஒரு வார‌த்திலேயே சேஃப‌ர் சைடுக்கு அந்த‌ பெண் எல்லாருக்கும் ராக்கி க‌ட்டிவிட‌, இதுக்கு மென்ஸ் காலேஜே சேர்ந்திருக்க‌லாம் என்று தோன்றிய‌து.


ந‌ம் க்ளாஸில் இல்லாவிட்டால் என்ன‌, சீனிய‌ர் எவ்வ்வ‌ள‌வு பேர் இருக்கிறார்க‌ள்! சீனிய‌ர்க‌ளில் ஆண்க‌ளை ம‌ட்டுமே ஆர‌ம்ப‌த்தில் 'அண்ணா' என்று அழைத்தோம் (பின்பு பெய‌ர் சொல்லி கூப்பிடும‌ள‌வுக்கு அவ‌ர்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ள் ஆனார்க‌ள்). சீனிய‌ர் பெண்க‌ளிட‌ம் "உங்க‌ ரெக்கார்ட் நோட் த‌ர்றீங்க‌ளா?" என்று கொஸ்டின் மார்க்கோடு முடித்துவிடுவோமே த‌விர‌, த‌ப்பித்த‌வ‌றி கூட‌ 'க்கா'வை சேர்த்துக்கொள்ள‌ மாட்டோம். அல‌ர்ட்ட்ட்டா இருப்போம்!..;) வ‌ய‌தில் மூத்த‌‌ பெண்க‌ளை சைட் அடிக்கிறோமே என்ற‌ குற்ற‌ உண‌ர்ச்சி வ‌ந்தபோது, எங்க‌ளை காத்த‌வ‌ர் ச‌ச்சின். "ஹே ச‌ச்சினை விட‌ ச‌ச்சின் ஒய்ஃபுக்கு அஞ்சு வ‌ய‌சு அதிக‌ம்டா" என்று ப‌க்காவான‌ லாஜிக்கை க‌ண்டுபிடித்து சீனிய‌ர்ஸை சைட் அடிக்கும் ப‌ணியை செவ்வ‌னே தொட‌ர்ந்தோம்..:)

இன்னும் நிறைய‌ சொல்ல‌லாம். ஆனால் இத‌ற்கு மேல் எழுதினால், ஃப்யூச்ச‌ரில் தொட‌ர் ப‌திவு எழுத‌ கூப்பிட‌ நினைப்ப‌வ‌ர்க‌ள், 'ஐயையோ அவ‌னா' என்று டெர‌ராகும் சாத்திய‌ம் இருப்ப‌தால் இதோடு நிறுத்திக்கொள்கிறேன். பாவ‌ம், இத‌ற்கே விக்னேஷ்வ‌ரி எப்ப‌டியெல்லாம் ஃபீல் ப‌ண்கிறாரோ?!

இத்தொட‌ரை தொட‌ர‌ ந‌ட்புக‌ளை அழைக்கிறேன் (மாட்டினீங்க‌ளா?...;))

ப்ரியா
வித்யா
ஹ‌ரீஷ்
மோக‌ன்
ஜெட்லி

Thanking You,

Yours Obediently,

:)))


Sunday, April 11, 2010

நான் ஒண்ணாங்கிளாஸ்தான்


என்னையும் ஆட்ட‌த்தில் சேர்த்துக்கொண்டு, ஒரு ர‌வுடியாக‌ ம‌தித்து சன்ஷைன் விருதை வ‌ழ‌ங்கியிருக்கின்ற‌ன‌ர் இரு ந‌ல்ல‌ ர‌வுடிக‌ள்..:) தோழி ப்ரியாவுக்கும், ந‌ண்ப‌ர் சைவ‌கொத்துப்ப‌ரோட்டாவுக்கும் மிக்க‌ ந‌ன்றி. அதென்ன‌ ச‌ன்ஷைன்? திமுக‌ தொட‌ர்ந்து இடைத்தேர்த‌ல்க‌ளில் வெற்றி பெறுவ‌தை குறிக்கிற‌தா? அல்ல‌து 'ச‌ம்ம‌ர் ஆர‌ம்பிச்சிடுச்சு, உஷாரா இருந்துக்கோ மாமு' என்ற‌ எச்ச‌ரிக்கையா? 'உன‌க்கு குடுக்க‌ற‌தே அதிக‌ம், இதுல‌ இப்ப‌டிலாம் குடைஞ்சினா, அவார்ட் வாப‌ஸ்' என்று அவ‌ர்க‌ள் எச்ச‌ரிக்கை விடுப்ப‌த‌ற்கு முன் கேள்விக‌ளை சாய்ஸில் விட்டுவிடும்ப‌டி க‌ன‌ம் அல்ல‌து லைட்டான‌ கோர்ட்டார் அவ‌ர்க‌ளை தாழ்மையுட‌ன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்விருதை அவ‌ர்க‌ளிட‌மிருந்து இப்பிடிக்கா வாங்கி இவ‌ர்க‌ளுக்கு அப்பிடிக்கா பாஸ் செய்கிறேன்.

வித்யா
விக்னேஷ்வ‌ரி
மோக‌ன்
கார்க்கி
ஜெட்லி
ராஜு

***********************************************************

க‌ல்லூரி இறுதியாண்டு ப‌டிக்கும்போது ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம் இது. பேருந்தில் ஃபுட்போர்டில் ப‌ய‌ணித்த‌ ஒருவ‌ன், ர‌ன்னிங்கில் இற‌ங்க‌ முய‌ற்சிக்கும்போது, கால் ஸ்லிப் ஆகி, விழுந்து உருண்டு புர‌ண்டு நான்கு அடி த‌ள்ளி போய் விழுந்தான். அவ‌ன் அதிர்ஷ்ட‌ம், அந்த‌ நேர‌ம் பின்னால் எந்த‌ வாக‌ன‌மும் வ‌ர‌வில்லை. ப‌ல‌மான‌ காய‌ம் ஏற்ப‌ட்ட‌தே த‌விர‌ உயிருக்கு எந்த‌ ஆப‌த்துமில்லை. இன்று பேருந்தில் ர‌ன்னிங்கில் ஏறுகிறேன், கூட்ட‌ம் அதிக‌மாக‌ இருக்கும்போது ஃபுட்போர்டில் ப‌ய‌ணிக்கிறேன். ஆனால் அந்த‌ ச‌ம்ப‌வ‌ம் என் ஆழ்ம‌ன‌தில் ப‌திந்துபோன‌தால், ர‌ன்னிங்கில் இற‌ங்குவ‌தென்றால் ம‌ட்டும், இன்னும் என‌க்கு பய‌ம்தான்.

சென்ற‌ வார‌ம் அலுவ‌ல‌க‌ம் முடிந்து இர‌வு 9:30 ம‌ணிக்கு வீட்டுக்கு பேருந்தில் வ‌ந்துகொண்டிருந்தேன். இர‌வு நேர‌மாத‌லால் வெறும் 15 முத‌ல் 20 ப‌ய‌ணிக‌ளே இருந்த‌ன‌ர் (M15 - மேட‌வாக்க‌ம் டூ மைலாப்பூர்). பேபி ந‌க‌ர் ஸ்டாப் அருகே போய்க்கொண்டிருக்கும்போது இற‌ங்குவ‌த‌ற்காக‌ ஃபுட்போர்டில் நின்றுகொண்டிருந்தேன். ஓட்டுன‌ர் வ‌ண்டியை கொஞ்ச‌ம் ஸ்லோவாக‌ ஓட்டினார். "சார் பேபி ந‌க‌ர் எற‌ங்க‌ணும்" என்றேன். திடீரென்று "அட‌ நிறுத்தி தொலைப்பா, எற‌ங்க‌ட்டும்" என்று கோப‌மான‌ குர‌ல், ந‌ட‌த்துன‌ரிட‌மிருந்து. ஓட்டுன‌ரிட‌ம் எரிச்ச‌லை காண்பித்த‌பின் அவ‌ருடைய‌ அடுத்த‌ டார்கெட் அடியேன். நான் இற‌ங்கிய‌வுட‌ன் என்னை பார்த்து "ஸ்லோ ப‌ண்ணா எற‌ங்க‌வேணாமா, மூணாங்கிளாஸ் பைய‌ன்கூட‌ எற‌ங்குவான்" என்று க‌த்தினார். பேருந்தில் இருந்த‌வ‌ர்க‌ளில் ப‌ல‌ரும் திரும்பி பார்க்க‌ கொஞ்ச‌ம் அவ‌மான‌மாக‌வே இருந்த‌து என‌க்கு. கூட‌வே உள்ளுக்குள் கோப‌மும் எட்டிப்பார்க்க‌, "நான் ஒண்ணாங்கிளாஸ்தான்" என்று ப‌திலுக்கு க‌த்தினேன். பேருந்து கிள‌ம்பிய‌தாலும், அவ‌ரின் வ‌ய‌தின் கார‌ண‌மாக‌வும், மேலும் வார்த்தைப்போரில் ஈடுப‌ட‌ நான் விரும்ப‌வில்லை.

உட‌ன் இற‌ங்கிய‌ ஒரு ந‌ப‌ர், "விடுங்க‌ சார், இவ‌னுங்க‌ என்னைக்கு ந‌ம்ம‌ள‌ ம‌திச்சிருக்கானுங்க‌, ர‌ன்னிங்க‌ல‌ நாம‌ எற‌ங்குனா, அதான் நிக்குதில்ல‌ அதுக்குள்ள‌ என்ன‌ அவ‌ச‌ர‌ம்னு க‌த்துவானுங்க‌. இல்ல‌னா, இப்ப‌டிதான் ____ மாதிரி ந‌ம்ம‌ மேல‌ ஏறுவானுங்க‌" என்றார். "ம்.." என்று சொல்வ‌தை த‌விர‌ என‌க்கு அப்போது வேறு வார்த்தைக‌ள் கிடைக்க‌வில்லை. ஏன் இப்ப‌டி ப‌ல‌ பேர் முன்னிலையில் என்னை திட்ட‌வேண்டும்? பேருந்து நின்ற‌வுட‌ன் இற‌ங்க‌லாம் என்று நான் நினைத்த‌து குற்ற‌மா? எத்த‌னையோ முறை 5.50 டிக்கெட்டுக்கு 6 ரூபாய் வாங்கிவிட்டு "சில்ல‌றை இல்ல‌" என்று சொல்லும்போது எதுவுமே எதிர்த்து பேசாம‌ல் அமைதியாய் இருந்திருக்கிறேன். வெறும் 50 பைசாவாக‌ இருந்தாலும் அது என்னுடைய‌ காசு. எப்போதும் Aggressiveஆ இருக்க‌ணும் இல்ல‌ன்னா நாம எப்ப‌வும் ஏமாந்துகிட்டு இருக்க‌வேண்டிய‌துதான் என்று ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் சொல்வேன். ஆனால் ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ளின் அறிவுரைப்ப‌டி இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ கொஞ்ச‌ம் சாந்த‌மாக‌ மாறியிருக்கிறேன். இந்த‌ நட‌த்துன‌ர் என்னை ட்ரீட் செய்த‌ வித‌த்தால் அன்று இர‌வு வீட்டுக்கு வ‌ந்த‌வுட‌ன் தோன்றிய‌து, Aggressiveஆ இருந்தாத்தான் வேலைக்காவும் போல‌.....

***********************************************************

தூத்துக்குடியில் த‌ம‌ன்னாவுக்கு ரசிக‌ர் ம‌ன்ற‌ம் ஆர‌ம்பித்து, பையா ப‌ட‌ ரிலீஸின்போது க‌ட்அவுட் வைத்து, பாலாபிஷேக‌ம் எல்லாம் செய்திருக்கின்ற‌ன‌ர். ஒரு ந‌டிக‌ரை/ந‌டிகையை இர‌ண்ட‌ரை ம‌ணி நேர‌ம் ர‌சிக்கிறோம். அவ்வ‌ள‌வுதான் நாம் அவ‌ர்க‌ளுக்காக‌ செய்ய‌வேண்டிய‌து. இப்ப‌டி பாலை கொட்டி அதை வீணாக்குவ‌த‌ற்கு ப‌தில், குழ‌ந்தைக‌ள் காப்ப‌க‌த்திற்கு சென்று அவ‌ர்க‌ளுக்கு மூன்று வேளை உண‌விற்கு ஏற்பாடு செய்திருந்தால் க‌ண்டிப்பாக‌ பாராட்ட‌லாம். அதை செய்யாம‌ல், இதுபோன்ற‌ முட்டாள்த‌ன‌மான‌ ந‌டவ‌டிக்கையில் ஈடுப‌டுப‌வ‌ர்க‌ளை என்னென்று சொல்ல‌?

ஒரு ந‌ல்ல‌ விஷ‌ய‌ம், "க‌ட‌வுளுக்கு செய்யும் பாலாபிஷேக‌த்திற்கு இணையாக‌ என் க‌ட்அவுட்டுக்கு பாலாபிஷேக‌ம் செய்வ‌தில் என‌க்கு உட‌ன்பாடில்லை" என்று த‌ம‌ன்னாவே இதை டிஸ்க‌ரேஜ் செய்திருக்கிறார். ச்சே, குழ‌ந்தைக்கு என்ன ஒரு ந‌ல்ல‌ ம‌ன‌சு!...:)

ஒரு போட்டி: இதுவ‌ரை இந்த‌ வ‌லைப்பூவில் எத்த‌னை முறை த‌ம‌ன்னாவின் புகைப்பட‌ம் இட‌ம்பெற்றுள்ள‌து என்ப‌தை க‌ண்டுபிடித்து, ப‌திலை மெயிலில் அனுப்பினால் ஒரு த‌ம‌ன்னா புகைப்பட‌ம் ப‌ரிசாக‌ அனுப்ப‌ப்ப‌டும் ;)

***********************************************************

இலங்கையில் 3 லட்சம் அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவித்தவர் ராஜபக்ச. அவரது ஆதரவாளரான கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியில் இடம் பெற்றிருந்தார்.

‌இ‌ந்‌நிலை‌யி‌ல், அவர் சென்னையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் விளையாடினால் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என அறிவித்திருந்தேன். அதன்படி தொண்டர்களுடன் நேற்று முன்தினம் விமான நிலையத்திற்குச் சென்றோம்.

ஆனால் திட்டமிட்டபடி வராமல் முன்கூட்டியே காலை 8.45 மணிக்கு விமானத்தில் சென்னை வந்துவிட்டார் ஜெயசூர்யா. ஆனா‌ல், நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் அவர் விளையாடவில்லை. இது புதிய தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த வெற்றி
என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

அர‌சிய‌ல் செய்திக‌ளில் ஆர்வ‌ம் ஏற்ப‌ட்ட‌ புதிதில் என‌க்கு இவ‌ர் வித்தியாச‌மாக‌ தெரிந்தார். த‌மிழ‌க‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் என்றால் எப்போதும் வேட்டி ச‌ட்டையிலேயே இருப்பார்க‌ள் என்ற‌ பிம்ப‌ம் இவ‌ரை பார்த்த‌போது மாறிப்போன‌து. ஆனால் ஜாதியை ம‌ட்டுமே ந‌ம்பி, நானும் ஒரு ச‌ராச‌ரி அர‌சிய‌ல்வாதிதான் என்று சொல்லாம‌ல் சொல்லி செல்லாக்காசாகி போனார். ச‌ண்டிய‌ரை விருமாண்டியாக்கிய‌து கின்ன‌ஸ் புத்த‌க‌த்தில் ப‌திக்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ இவ‌ர‌து சாத‌னைக‌ளில் ஒன்று. இது போதாதென்று இப்போது இந்த‌ 'ஜெய‌சூர்யா' அறிக்கை விட்டு, சுப்பிர‌ம‌ணிய‌ சாமிக்கு நான் எந்த‌வித‌த்திலும் குறைந்த‌வ‌ன‌ல்ல‌ என்று காமெடி பீஸாகியிருக்கிறார். எ.கொ.கி.சாமி இது?!

***********************************************************

அடிக்க‌டி தூக்க‌த்தில், குறிப்பாக‌ விடிய‌ற்காலையில், ப‌திவில் எழுத‌ வேண்டும் என்று ம‌ன‌தில் ஏதேதோ எண்ண‌ங்க‌ள் அலைபாய்கிற‌து. சென்ற‌ வார‌த்தில் ஒரு நாள், ஒரு க‌தையே தோன்றிய‌து. எப்ப‌டி ஆர‌ம்பிக்க‌ வேண்டும், என்னென்ன‌ கேர‌க்ட‌ர்க‌ள், க‌தையில் வ‌ரும் க‌ண‌வ‌ன் ம‌னைவி ஆகியோரின் பெய‌ர்க‌ள்‌, க‌தை நட‌க்கும் நேர‌ம் என்ன‌, காலையா மாலையா, எப்ப‌டி முடிக்க‌ வேண்டும் என்ப‌து வ‌ரை எல்லாமே. சோம்ப‌லா, ட‌ய‌ர்ட்ன‌ஸ்ஸா..எதுவென்று தெரிய‌வில்லை, அந்த‌ ச‌ம‌ய‌த்தில் எழுந்து இதையெல்லாம் குறித்துக்கொள்ள‌ விருப்ப‌ம் இல்லாம‌ல் (பாதி தூக்க‌த்தில்) இருந்தேன். ஆனால் காலையில் எழுந்த‌வுட‌ன் நிறைய‌ ம‌ற‌ந்துபோய் க‌தைக்க‌ரு ம‌ட்டும் ஞாப‌க‌ம் இருந்த‌து.

இது எல்லோருக்கும் ந‌ட‌க்கிற‌தா அல்ல‌து நான் ப்ளாகோமேனியா பிடித்து அலைகிறேனா என்ப‌து தெரிய‌வில்லை. ப்ளாக‌ராண்ட‌வா, இன்னும் என்னை எப்ப‌டிலாம் சோதிக்க‌ப்போறீயோ தெரிய‌ல‌!

***********************************************************

தோழியுட‌ன் பேசிக்கொண்டிருந்த‌போது சொன்னேன், "வார‌த்துல‌ செவ்வாய், புத‌ன், வியாழ‌க்கிழ‌மைக‌ளை டெலிட் செஞ்சுட்டா எப்ப‌டியிருக்கும் இல்ல‌?". திங்க‌ள் கிழ‌மை வேலை, ம‌றுநாள் வெள்ளிக்கிழ‌மை கொஞ்ச‌ம் வேலை..அடுத்து வீக் எண்ட் ரெஸ்ட். வாவ் எப்ப‌டி இருக்கும்?! ஆனால் அந்த‌ சைடிலிருந்து பாஸிட்டிவ்வாக‌ ப‌தில் இல்லை. "கிரியேட்டிவ்வா திங்க் ப‌ண்றேனே, பாராட்டுனா என்ன‌வாம்?" என்றேன். இந்த‌ முறை வ‌ந்த‌து...பாராட்டு அல்ல‌, ப‌தில் "இதுக்கு பேரு கிரியேட்டிவ் அல்ல‌, கிறுக்கேட்டிவ்". ம்...என்ன‌ ப‌ண்ற‌து, சென்னைல‌ வெயில் அதிக‌ம்!

***********************************************************

நேற்று காலை சுமார் 11 ம‌ணி இருக்கும். சைக்கிளில் ஒருவ‌ர் இள‌நீர் விற்றுக்கொண்டிருந்தார். காலில் செருப்பு கூட‌ இல்லாம‌ல். ஒரு இள‌நீர் குடித்த‌பின்தான் அதனை க‌வ‌னித்தேன். இன்னொன்று வெட்ட‌ சொல்லிய‌பின், அவ‌ரிட‌ம் கேட்டேன், 'ஏன் இந்த‌ வெயில்ல‌ செருப்பு கூட‌ போடாம‌ இருக்கீங்க‌?'. வெறும் புன்ன‌கையை ம‌ட்டுமே ப‌திலாக‌த் த‌ந்தார். அடுத்த‌ இள‌நீரையும் குமுக்கிவிட்டு காசு கொடுத்த‌பின் சொன்னேன், 'முத‌ல்ல‌ செருப்பு வாங்கி போட்டுகிட்டு வேலை செய்ங்க‌'. பாக்கி சில்ல‌றையுட‌ன், மீண்டும் புன்ன‌கையையே ப‌திலாக‌ அளித்தார். ஏனோ ம‌ன‌து கொஞ்ச‌ம் க‌ன‌த்து போன‌து...:(



Thursday, April 08, 2010

பையா - க‌.மை.லா......

சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்புதான் சுசி.க‌ணேச‌ன் அரை கிலோ 'சிவாஜி'யையும், அரை கிலோ 'ர‌ம‌ணா'வையும் க‌ல‌ந்து க‌ட்டி ஒரு கிலோ 'க‌ந்த‌சாமி'யாக‌ த‌ந்தார். It's Lingusamy's turn now. 'ர‌ன்', 'ச‌ண்ட‌க்கோழி' ஹாங்ஓவ‌ரிலிருந்து வெளியே வ‌ர‌முடியாம‌ல், இர‌ண்டையும் க‌ல‌ந்து ஒரு காக்டெயிலாக‌ கொடுத்திருக்கிறார் லிங்கு.

'ர‌ன்' ப‌ட‌ம் வ‌ந்த‌ புதிதில் சில‌ காட்சிக‌ளை டிவியில் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது என் த‌ம்பி சொன்னான் "யார் தெரியுமா இந்த‌ ப‌ட‌த்துக்கு டைர‌க்ட‌ர்....லிங்குசாமி". உண்மையாக‌வே நான் அச‌ந்துபோனேன். 'ஆன‌ந்த‌ம்' பட‌ம் எடுத்த‌ இய‌க்குன‌ரின் ப‌ட‌மா இது? அதுவும் அந்த‌ ச‌ப்வே சீன் ந‌ச்! அடுத்து 'ஜி'யில் ஏமாற்றினாலும், 'ச‌ண்ட‌க்கோழி'யை நான் மிக‌வும் ர‌சித்தேன். கார‌ண‌ம், மீரா ஜாஸ்மின் & கிட்ட‌த‌ட்ட‌ முத‌ல் நாற்ப‌து நிமிட‌ங்க‌ளுக்கு விஷாலின் ட‌ய‌லாக் வெறும் ப‌த்து வ‌ரிக‌ள்தான் இருக்கும். அத‌னாலேயே லிங்குசாமி இய‌க்கியிருக்கிறார் என்ற‌வுட‌ன், 'பையா'வுக்கு கொஞ்ச‌ம் எதிர்பார்ப்பு அதிக‌ரிக்க‌த்தான் செய்த‌து.

க‌தை ரொம்ப‌ சிம்பிள். பார்த்த‌வுட‌ன் த‌ம‌ன்னாவை கார்த்திக்கு பிடித்துவிடுகிற‌து (யாருக்குத்தான் பிடிக்காது?...;))) பின்பு ஒரு சில‌ இட‌ங்க‌ளில் மீண்டும் அவ‌ரை பார்த்தும் பேச‌முடியாம‌ல் போகிற‌து. த‌ற்செய‌லாக‌ த‌ம‌ன்னாவே கார்த்தியின் காரில் ப‌ய‌ண‌ம் செய்ய‌வேண்டிய‌ சூழ்நிலை. பின்பு எப்ப‌டி அவ‌ர்க‌ளுக்குள் கெமிஸ்ட்ரி, மேத்ஸ், சோஷிய‌ல் ச‌யின்ஸ் எல்லாம் ஒர்க்அவுட் ஆகிற‌து என்ப‌தை ப‌ட‌த்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்க‌ள்..





கார்த்தி இந்த‌ ப‌ட‌த்தில் ப‌டு ஸ்மார்ட். அழுக்கு பைய‌னாக‌வே இர‌ண்டு ப‌ட‌ங்க‌ளிலும் வ‌ல‌ம் வ‌ந்த‌ கார்த்தியை அழ‌கு பைய‌னாக‌ காட்டியிருக்கிறார்க‌ள். வித‌வித‌மான‌ காஸ்ட்யூம்க‌ளில் அச‌த்துகிறார். ச‌மீப‌ வ‌ருட‌ங்க‌ளில் அறிமுக‌மான‌ ஹீரோக்க‌ளில் இவ‌ர‌ள‌வுக்கு காமெடியில் க‌ல‌க்குவ‌து வேறு யாரும் இல்லை. விஷால் நெளிந்து, குழைந்து சிரிப்ப‌தை நினைத்துப்பாருங்க‌ள். க‌ண்டிப்பாக‌ கார்த்தி எவ்வ‌ள‌வோ பெட்ட‌ர் என்ப‌தை ஒத்துக்கொள்வீர்க‌ள். அறிமுக‌க்காட்சியில் ம‌ட்டும் ஏன் இவ்வ‌ள‌வு சொத‌ப்ப‌ல் என்று தெரிய‌வில்லை. அவ‌ரின் தோழி "அவ‌ன் நிக்க‌ற‌ ப‌ஸ்ல‌ ஏற‌மாட்டானாம்" என்று சொல்ல‌, ப‌ஸ் கிள‌ம்பும்போது கார்த்தி ஓடி வ‌ந்து ஏறுகிறார். அட‌ப்போங்க‌ பாஸ், வ‌டிவேலு இதை 'காத‌ல் தேச‌ம்' ப‌ட‌த்திலேயே ப‌ண்ணிட்டார் :)

ந‌டிப்ப‌த‌ற்கு அதிக‌ம் ஸ்கோப் இல்லாவிட்டாலும்....ஹுக்கும், அதுதான் இப்ப‌ முக்கிய‌மா? 'துளி துளி ம‌ழையாய் வ‌ந்தாளே' பாட‌லில் ஒரு வ‌ரி, 'தேவ‌தை அவ‌ள் ஒரு தேவ‌தை' என்று வ‌ரும். ப‌ட‌ம் முழுவ‌தும் அப்ப‌டித்தான் இருக்கிறார் த‌ம‌ன்னா. ஹும்ம்ம்ம்ம்....என்ன‌த்த‌ சொல்ல‌! த‌முவுக்கு ஒரு த‌ம்ஸ் அப்! த‌ம‌ன்னாவின் முக‌த்திலேயே, அழ‌கு, குழ‌ந்தைத்த‌ன‌ம், மாட‌ர்ன், க்ளாம‌ர் எல்லாம் இருக்கிற‌து. எத‌ற்கு அவ‌ரை ஸ்கின் எக்ஸ்போஷ‌ருக்கு உட்ப‌டுத்துகிறார்க‌ள் என்றே தெரிய‌வில்லை. ஸ்கின் ஷோ வேண்டுமென்றால் போய் ம‌ல்லிகா ஷெராவ‌த்தை புக் ப‌ண்ணுங்க‌ய்யா!

லிங்குசாமியின் ப‌ட‌ங்க‌ளில் எப்போதும் சில் க்யூட் வ‌ச‌ன‌ங்க‌ள் இருக்கும். 'ர‌ன்'னில், மீரா ஜாஸ்மினுக்கு எழுத‌ பென் கொடுக்கும்போது 'ஹீரோ பென்னுங்க‌' என்பார் மாத‌வ‌ன். அதுபோல‌ இந்த‌ ப‌ட‌த்திலும் சில‌ க்யூட் வ‌ச‌ன‌ங்க‌ள் (வ‌ச‌ன‌ம் - பிருந்தா சார‌தி)....ப‌ட‌ம் முடியும்போது த‌ம‌ன்னா சொல்லும் ட‌ய‌லாக் உட்ப‌ட...ப‌ட‌த்திற்கு மேலும் ப‌ல‌ம் சேர்ப்ப‌வ‌ர்க‌ள் ஒளிப்ப‌திவாள‌ர் ம‌தி & யுவ‌ன் ஷ‌ங‌க‌ர் ராஜா. சில‌ காட்சிக‌ளில் பாட‌ல்க‌ள் திணிக்க‌ப்ப‌ட்ட‌து போல் தோன்றினாலும், அனைத்து பாட‌ல்க‌ளுமே சூப்ப்ப்ப‌ர்!

ச‌ண்டைக்காட்சிக‌ள் ம‌ட்டும்தான் ஓவ‌ர் பில்ட‌ப். சுற்றி 20, 25 பேர் நின்றாலும், ச‌ளைக்காம‌ல் பின்னி எடுக்கிறார் கார்த்தி. இரும்பு ராடால் அவ‌ரை அடிக்கும்போது 'ண‌ங்' 'ண‌ங்'கென்று பிண்ண‌ணி இசை. அதை கேட்கும்போது ந‌ம‌க்கே வ‌லிக்கும் போலிருக்கிற‌து. ஆனால் டைனோச‌ர் மேல் ஏறிய‌ எறும்பாய் அதை கார்த்தி பொருட்ப‌டுத்த‌வேயில்லை. யாருப்பா அது ஸ்ட‌ண்ட் மாஸ்ட‌ர்?

இர‌ண்ட‌ரை ம‌ணி நேர‌ம் ப‌ட‌த்தை பார்த்து என்ஜாய் ப‌ண்ண‌வே தியேட்ட‌ருக்கு செல்கிறேன். அத‌னாலேயே 'அங்காடித் தெரு' ப‌க்க‌ம் எட்டிப் பார்க்க‌வே ப‌ய‌மாக‌ இருக்கிற‌து. நான் சாதார‌ண‌ சினிமா ர‌சிக‌ன். என‌க்கு ஒல‌க‌ சினிமாவும் வேண்டாம், அழ‌ வைக்கும் உள்ளூர் சினிமாவும் வேண்டாம். என்னைப் போல‌ வெறும் entertainmentஐ ம‌ட்டும் எதிர்பார்த்து போகும் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு, 'பையா' ந‌ல்ல‌ சாய்ஸ்தான். என்ன‌........ச‌ண்டைக் காட்சிக‌ளில் ம‌ட்டும்.....க‌டுப்பேத்த‌றான் மை லார்ட்!


Monday, April 05, 2010

வ‌லியுட‌ன்...

ஸ்ரீ காமாட்சி திரும‌ண‌ ம‌ண்ட‌ப‌ம்.

க‌டிகார‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ளில் வ‌ருவ‌து போல் என் கைக்க‌டிகார‌ம் நேர‌ம் 10:10 என்று காட்டியது.......ச்சே, தூக்க‌ க‌ல‌க்க‌த்தில் ச‌ரியாக‌ க‌வ‌னிக்க‌வில்லை, ம‌ணி 11:10. ம‌டியில் அம‌ர்‍ந்திருந்த என் மூன்று வ‌ய‌து ம‌க‌ள் மீரா அப்ப‌டியே தூங்கிவிட்டிருந்தாள். எனக்கும் தூக்க‌ம், க‌ண்க‌ளை மூடிக்கொள்ளுமாறு க‌ட்ட‌ளையிட‌, க‌ண்க‌ள் சொகுசு பேருந்துக‌ளில் இருக்கும் தானியங்கி க‌த‌வுக‌ளைப் போல் மூட‌ முய‌ற்சி செய்த‌து.

அப்போது, "சுந்தர‌ம்..." த‌ன‌ம் அத்தையின் குர‌ல் கேட்ட‌து. க‌ண்க‌ள் ச‌ட்டென்று திற‌ந்துகொள்ள‌...

அத்தையின் ப‌க்க‌த்திலிருந்த‌ என் கார் டிரைவ‌ரை முறைத்தேன், "என்ன‌த்தே...இப்ப‌தான் வ‌ர்றே...என்னாச்சு? வ‌ர்ற‌ வ‌ழியில‌ எதாவ‌து பிர‌ச்ச‌னையா...?"

மீராவின் த‌லையை லேசாக‌ வ‌ருடிக்கொண்டே, "அதெல்லாம் ஒண்ணுமில்ல‌ப்பா...வ‌ர்ற‌ வ‌ழியில‌ ஏதோ க‌ட்சித் த‌லைவ‌ர் மீட்டிங், அப்ப‌டி போ, இப்ப‌டி போன்னு திருப்பி விட்டுட்டிருந்தாங்க‌. டிரைவ‌ர் த‌ம்பியும் காரை ந‌ல்லாத்தான் ஒட்டுச்சு, அத‌னால‌தான் இப்ப‌வாவ‌து வ‌ந்து சேந்தேன்" என்று சொல்ல‌, டிரைவ‌ருக்கு செய்ய இருந்த‌ அர்ச்ச‌னையை ர‌த்து செய்தேன்.

"இதுக்குத்தான் அத்தே காலையிலேயே வ‌ந்துடுன்னு சொன்னேன், நீதான் ஸ்கூலு, எக்ஸாமுன்னு ஏதேதோ சொன்ன‌, இப்ப‌ பாரு...எவ்ளோ லேட்டு, ச‌ரி வா, வ‌ந்து சாப்பிடு"

"சாப்பாடுலாம் நான் பாத்துக்க‌றேன்‍, என‌க்கென்ன‌, கொஞ்ச‌ம் மோர் சாத‌ம், ஒரு ப்ர‌ஷ‌ர் மாத்திரை. வ‌ரும்போதே அம்மாகிட்ட‌ ஃபோன்ல‌ பேசினேன், சாப்பாடு என‌க்கு எடுத்து வெச்சிருக்க‌ற‌தா சொன்னாங்க‌...நான் பாத்துக்க‌றேன். நீ போய் தூங்கு..."

மீராவை அவ‌ள் தூக்க‌ம் க‌லையாம‌ல் ப‌டுக்க‌வைத்தேன். எழுந்துவிட்டால் அவ‌ள் செய்யும் சேட்டைக்கு ம‌ண்ட‌ப‌த்தில் உள்ள‌ அனைவ‌ரும் த‌ம் தூக்க‌த்தைத் தியாக‌ம் செய்ய‌வேண்டி வ‌ரும். நானும் ப‌டுத்துக்கொண்டேன். க‌ண்க‌ளை மூடிக்கொண்டிருந்தாலும், தூக்க‌த்தை பின்னுக்குத் த‌ள்ளிவிட்டு, ப‌ழைய‌ நினைவுக‌ள் முன்னுக்கு வ‌ந்துகொண்டிருந்த‌து.

********************


த‌ன‌ம் அத்தை - என் த‌ந்தையின் ஐந்தாவ‌து ம‌ற்றும் க‌டைசி த‌ங்கை. என்னைப் பொறுத்த‌வ‌ரை என் இன்னொரு அம்மா. என் அத்தைக்கும் என‌க்கும் 13 வ‌ருட‌ம் வ‌ய‌து வித்தியாச‌ம். இருந்தாலும் என் முத‌ல் தோழியும் அத்தைதான். என்னுட‌ன் தாய‌ம் விளையாடுவ‌து, ப‌ள்ளிக்கு கூட்டிச்செல்வ‌து, பாட‌ம் சொல்லிக்கொடுப்ப‌து, ஏதாவ‌து த‌வ‌று செய்தால் அப்பா அடிக்கும் அடியில் இருந்து என்னைக் காப்பாற்றுவ‌து என‌ என் உல‌க‌ம் அத்தை...அத்தை... அத்தைதான். என் வாழ்நாளில், நான் அம்மா என்று உச்ச‌ரித்த‌தைவிட‌ "அத்தே" என்றுதான் அதிக‌ம் உச்ச‌ரித்திருக்கிறேன்.

ஒருமுறை ஒரு மாந்தோப்பிலிருந்து மாங்காய்க‌ளை அள்ளிக்கொண்டு வ‌ரும்போது சாலை திருப்ப‌த்தில் வ‌ந்த‌ கார் அத்தையின் காலில் முட்டி, அத்தை இர‌ண்ட‌டி த‌ள்ளிப்போய் விழ‌, அதிர்ச்சியில் "அத்தே!!!" என்று க‌த்துவ‌தைத் த‌விர‌ வேறு என்ன‌ செய்ய‌வேண்டும் என்று என‌க்கு எதுவும் தோன்ற‌வில்லை. எல்லா மாங்காய்க‌ளையும் விசிறி அடித்தேன். காரை ஒட்டி வ‌ந்த‌வ‌னே அத்தையையும் என்னையும் காரில் ம‌ருத்துவ‌ம‌னைக்கு அழைத்துச் சென்றான். சிகிச்சை முடிந்த‌தும் என்னிட‌ம் முக‌வ‌ரி விசாரித்து எங்க‌ளை வீட்டுக்கு கூட்டிவ‌ந்தான்.

பின்புதான் தெரிந்த‌து, அவ‌ன் எங்க‌ள் எதிர் வீட்டில் இருப்பவ‌ர்க‌ளின் உற‌வின‌ன், விடுமுறைக்காக‌ எங்க‌ள் கிராம‌த்திற்கு வ‌ந்திருக்கிறான். ஒரு மாத‌ம் த‌ங்குவ‌தாக‌ உத்தேச‌மாம். அத்தையை டாக்ட‌ர் ப‌த்து நாள் வீட்டைவிட்டு வெளியே போக‌க்கூடாது என்று கூறியிருந்தார். இந்த‌ ப‌த்து நாட்க‌ளும் ஊரைச் சுற்றி பார்க்க‌ வ‌ந்த‌வ‌ன், என் அத்தையையே சுற்றிச் சுற்றி வ‌ந்தான். என‌க்கு அவ‌னை துளி கூட‌ பிடிக்க‌வில்லை.

அத்தையிட‌ம் சொன்னேன், "அத்தே, அந்தாளு ஏன் எப்ப‌வும் உங்கிட்டேயே வ‌ந்து பேசிட்டிருக்கான், என‌க்கு புடிக்க‌வேயில்ல‌ அவ‌ன‌. அவ‌ன் பேரு ம‌ணிக‌ண்ட‌னாம்...நான் அவ‌னுக்கு ச‌னிக‌ண்ட‌ன்னு பேர் வெச்சிருக்கேன்". சொல்லிவிட்டு சிரித்தேன்.

முத‌ன்முறையாக‌ அத்தையிட‌ம் ஒரு கோப‌ம் க‌ல‌ந்த‌ முறைப்பை பார்த்தேன். அந்த‌ முறைப்பையே என்னால் தாங்க‌முடிய‌வில்லை, அழுதுவிடுவேன் என்று தோன்றிய‌து. என்னைப் புரிந்துகொண்டவ‌ளாய், ச‌ட்டென்று ச‌ற்று புன்ன‌கையுட‌ன் சொன்ன‌ வார்த்தைக‌ள், "அப்ப‌டிலாம் பெரிய‌வ‌ங்க‌ள‌ சொல்ல‌க்கூடாதுடா. அவ‌ர‌ நீ ம‌ணி மாமான்னுதான் சொல்ல‌ணும். அவ‌ன் இவ‌ன்லாம் சொல்ல‌க்கூடாது".

காரில் வ‌ந்து காலில் முட்டிய‌வ‌ன், அதே காரில் கையை பிடித்து கூட்டிக்கொண்டுபோக‌த் த‌யாரானான். அவ‌னு(ரு)க்கும் அத்தைக்கும் இரு வீட்டாரின் ச‌ம்ம‌த‌த்துட‌ன் திரும‌ண‌ம் ந‌ட‌ந்த‌து. அத்தையை க‌ட்டிக்கொண்டு அழுதேன், அடித்தேன், கெஞ்சினேன், "என் கூட‌ இரு அத்தே, என்ன‌ விட்டுட்டு போவாத‌". அத்தையின் க‌ண்க‌ளில்.....................சொல்ல‌ வேண்டுமா என்ன‌?. கார் கிள‌ம்பிய‌து. அதுவ‌ரை அப்ப‌டி ஒரு பார‌த்தை என் ம‌ன‌து சும‌ந்த‌தில்லை. என்னால் அந்தப் பிரிவை ஏற்றுக்கொள்ள‌ முடிய‌வில்லை.

யாரிட‌மும் சொல்லாம‌ல் கோயிலுக்கு ஒடினேன். இர‌ண்டு ம‌ணி நேர‌ம், "புள்ளையாரே, என் அத்தே என‌க்கு வேணும்" என்று அழுதுகொண்டே ம‌னு போட்டுக்கொண்டிருந்தேன். அத‌ற்கும் ப‌ல‌ன் இருந்த‌து. மூன்று வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து, அத்தை திரும்ப‌வும் எங்க‌ள் வீட்டிற்கு வ‌ர‌ நேர்ந்த‌து, த‌ன் க‌ண‌வ‌னை விப‌த்தில் ப‌றிகொடுத்துவிட்டு.

அம்மாவிட‌ம், "த‌னம் இனிமே ந‌ம்மோட‌யே இருக்க‌ட்டுண்டி" என்றார் அப்பா. ஹைய்யா ஜாலி என்று என் ம‌ன‌து துள்ளினாலும், அத்தையை பார்ப்ப‌த‌ற்கு க‌ஷ்ட‌மாயிருந்த‌து. முக‌ம் வாடி, யாருட‌னும் பேசாம‌ல், த‌னி அறையிலேயே இருந்துகொண்டு...ஹுஹூம், இது என் அத்தையே இல்லை. லேசான புன்ன‌கையைப் பார்க்க‌வே ப‌ல‌ மாத‌ங்க‌ள் ஆன‌து. வாயாடி, பொம்பள‌ ர‌வுடி என்றெல்லாம் செல்ல‌மாய் அத்தையை கூப்பிட்டுக்கொண்டிருந்த‌ என் உற‌வின‌ர்க‌ள், இப்பொழுது இன்னொரு பெய‌ர் வைத்த‌ன‌ர். 'தாலி அறுத்த‌வ‌'. நாக‌ரிக‌மாக‌ சொல்வ‌தென்றால் 21 வ‌ய‌து இள‌ம் கைம்பெண்.

வ‌ருட‌ங்க‌ள் க‌ட‌ந்த‌ன‌. இப்பொழுது நான் சென்னை பொருளாதார‌த்தின் செல்ல‌ப்பிள்ளைக‌ளான‌ சாஃப்ட்வேர் இஞ்சினிய‌ர்க‌ளில் ஒருவன். அத்தை இப்பொழுது எங்க‌ள் ஊரிலேயே இருக்கும் ஒரு ப‌ள்ளியில் க‌ணித‌ ஆசிரியை. த‌மிழ் சினிமாவில் செண்டிமெண்ட் காட்சிக‌ளைப் பார்த்துவிட்டு ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் எவ்வ‌ள‌வோ கிண்ட‌ல‌டித்திருக்கிறேன். ஆனால் ஃபோனில் பேசும்போது, எந்த‌ குழ‌ந்தையை பார்த்தாலும், சுந்த‌ர‌த்தைப் பாக்குற‌ மாதிரியே இருக்குதுன்னு சொல்றாடா த‌ன‌ம் என்று அப்பா சொன்ன‌போது, ம‌ன‌து ஏனோ வ‌லித்த‌து, க‌ண்ணில் நீரும் எட்டிப்பார்த்த‌து.

28 வ‌ய‌தில், என்னுட‌ன் ப‌ணிபுரிந்த‌ சுதாவுட‌ன் காத‌ல் திரும‌ண‌ம். ஒரே வ‌ருட‌த்தில் மீராவை எனக்கு கொடுத்துவிட்டு, நிர‌ந்த‌ர‌ நித்திரையில் மூழ்கிவிட்டாள் என் ம‌னைவி.....

********************

"சுந்த‌ர‌ம்...சுந்த‌ர‌ம்..." அத்தையின் குர‌ல் என்னை எழுப்பிய‌து. க‌ண்க‌ளை க‌ச‌க்கிக்கொண்டே, எழுந்து ம‌ணி பார்த்தேன். விடிய‌ற்காலை 3:50.

"என்ன‌ அத்தே, தூங்க‌வேயில்லியா நீ?"

"நான் அலார‌ம் வெச்சு எழுந்துட்டேன், நீ என்ன‌ இன்னும் தூங்கிட்டிருக்க‌? ம‌ணி பார்...நாலு ஆக‌ப்போகுது. அஞ்ச‌ரை ம‌ணிக்கு நீ ரெடியா இருக்க‌ணும். மாப்பிள்ளையா ல‌ட்ச‌ண‌மா சீக்கிர‌ம் ரெடியாவியா? அத‌ விட்டுட்டு இன்னும் தூங்கிட்டிருக்க‌...மீராவை நான் ரெடி ப‌ண்றேன். நீ போய் உன் வேலையெல்லாம் பாரு...சீக்கிர‌ம்"

"ம்" என்ற‌வாறே எழுந்து அம‌ர்ந்தேன். என்னிட‌மிருந்து ஒரு "ம்" (இர‌ண்டாவ‌து திரும‌ண‌த்திற்கு ச‌ம்ம‌த‌ம்) வாங்க‌ அனைவ‌ரும் ப‌ல‌ மாத‌ங்க‌ளாக‌ ப‌டாத‌பாடுப‌ட்ட‌ன‌ர். அவ‌ர்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ மிக‌ப்பெரிய‌ ஆயுத‌ம், மீரா. அவ‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ ஒரு தாயின் பாச‌ம் தேவை என்று சொல்லி சொல்லியே என்னை ச‌ம்ம‌திக்க‌ வைத்த‌ன‌ர். நான்தான் பெண்ணை தேர்ந்தெடுப்பேன் என்று கூறிய‌த‌ற்கு எந்த‌வித‌ ம‌றுப்பும் இல்லை. பெண் தேடினேன். ப‌த்மா என‌க்கு பொருத்த‌மான‌வ‌ள் என்று தோன்றிய‌து. இதோ, இன்னும் சில‌ ம‌ணி நேர‌ங்க‌ளில், என் வாழ்வில் இர‌ண்டாம் முறையாக‌ தாலி க‌ட்ட‌ப்போகிறேன். நினைக்கும்போது ச‌ற்று கூச்ச‌மாக‌த்தான் இருக்கிற‌து.

கேட்க‌லாமா கூடாதா என்று யோசிக்கும் முன்ன‌ரே, மீராவைத் த‌ன் தோளில் போட்டுக்கொண்டிருந்த‌ அத்தையிட‌ம் கேட்டேன்.

"நீ ஏன் அத்தே இன்னொரு க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ல‌?"

இந்த‌ கேள்வியை அத்தை எதிர்பார்க்க‌வில்லை என்ப‌தை அத்தையின் க‌ண்க‌ளே காட்டிக்கொடுத்த‌து. ப்ச்..கேட்டிருக்க‌க்கூடாதோ? மிக‌ச்சிறிய‌ புன்ன‌கை ஒன்றை ம‌ட்டுமே ப‌திலாக‌க் கொடுத்துவிட்டு, மீராவுட‌ன் அத்தை அறையை விட்டு வெளியே சென்றுவிட‌, ம‌ண்ட‌ப‌த்தின் கூட‌த்தைவிட்டு வெளியே வ‌ந்தேன்.

வெளியேயிருந்த‌ ப‌ல‌கையில் R. SUNDARESAN B.E WEDS M. PADMA M.C.A என்று எழுத‌ப்ப‌ட்டிருந்த‌து. இர‌ண்டாம் திரும‌ண‌த்திற்காக‌ என்னை க‌ட்டாய‌ப்ப‌டுத்திய‌வ‌ர்க‌ள் (என் தாய்,த‌ந்தை உட்ப‌ட‌) ஏன் ஒரு பேச்சுக்குக்கூட‌ என் அத்தையிட‌ம் ம‌றும‌ண‌த்தைப் ப‌ற்றி கேட்க‌வில்லை. அத்தையும் ஒரு சாதார‌ண‌ ம‌னித‌ப்பிற‌விதானே...ம‌கிழ்ச்சியாயிருந்தால் அணைத்துக்கொள்ள‌, வ‌ருத்த‌மாயிருந்தால் தோளில் சாய்ந்துகொள்ள‌, சின்ன‌ச் சின்ன‌ ச‌ண்டைக‌ள் போட‌ என்று ப‌ல‌ ஆசைக‌ளும் உண‌ர்ச்சிக‌ளும் அத்தைக்கு இருந்திருக்குமே, அதை ஏன் யாரும் புரிந்துகொள்ள‌வில்லை?

இவ்ளோ சொல்றியே, நீ ம‌ட்டும் புரிஞ்சுகிட்டியா என்று நீங்க‌ள் கேட்ப‌து புரிகிற‌து. M. PADMA M.C.A 26 வ‌ய‌தான‌ இள‌ம் கைம்பெண்.

Friday, April 02, 2010

ச‌ங்க‌ம்?....நான் வ‌ர‌மாட்டேன்‌!



"நீங்க‌ வ‌ர்றீங்க‌ளா?" என்றார் ச‌க‌ ப‌திவ‌ர்/ந‌ண்ப‌ர்.

"எப்போ?" என்றேன்.

"ச‌னிக்கிழ‌மை சாய‌ந்த‌ரம்"

"இல்ல‌ங்க‌, நிறைய‌ பேர் வ‌ருவாங்க‌‌, என‌க்கு ஜென்ர‌லா கூட்ட‌ம்னாலே......அதுவுமில்லாம‌ ஐபிஎல் வேற‌ பார்க்க‌ணுமே"

"ஐபிஎல்லாம் அப்புற‌ம் பாத்துக்க‌லாம்......நிறைய‌ பேர் வ‌ரட்டுங்க‌...அத‌னால‌ என்ன‌ இப்போ? இப்ப‌டிலாம் இருந்தீங்க‌ன்னா வேலைக்காவ‌மாட்டீங்க‌"

"பாஸ், உண்மையா சொல்லுங்க‌, இது இப்ப‌ க‌ண்டிப்பா அவ‌சிய‌மா?"

"என்ன‌ இப்ப‌டி கேக்க‌றீங்க‌? ந‌ம்ம‌ வெயிட்ட‌ காட்ட‌வேணாம்?"

"அதுக்கு வெயிட் மிஷின்ல‌ நின்னு, வ‌ர்ற‌ கார்டை ஃபோட்டோ எடுத்து ப‌திவுல‌ போடுங்க‌"

"இதுக்குலாம் ஒண்ணும் குறைச்ச‌ல் இல்ல‌, ஆனா வாங்க‌ன்னா மட்டும், கூட்ட‌ம், ஐபிஎல் ஆட்ட‌ம்னு சீன் போடுங்க‌"

"யார் யார் வ‌ர்ற‌து‌?"

சில‌ மூத்த்த்த்த்த‌ ப‌திவ‌ர்க‌ளின் பெய‌ரைச் சொன்னார்.

"ஐயையோ, அவ‌ங்க‌ள்லாமா வ‌ராங்க‌?"

"ஏன் அவ‌ங்க‌ வ‌ந்தா உங்க‌ளுக்கென்ன‌ ப்ராப்ள‌ம்?"

"இல்ல‌, நான் கொஞ்ச‌ம் ஷை டைப். அவ‌ங்க‌ள்லாம் மூத்த‌ ப‌திவ‌ர்க‌ள். நான் இப்ப‌தான் கொஞ்ச‌ நாளா ஏதோ கிறுக்கிட்டிருக்கேன்"

"அத‌னால‌ என்ன‌?"

"அவ‌ங்க‌ள்லாம் வ‌ந்தாங்க‌ன்னா என‌க்கு ரொம்ப‌வே கூச்ச‌மா இருக்கும். ச‌க‌ஜ‌மா பேச‌ முடியாது"

"இதெல்லாம் ஓவ‌ர் பாஸ், இப்போ என்கிட்ட‌ எப்ப‌டி பேச‌றீங்க‌?"

"உங்க‌ளோட‌ ஃப‌ர்ஸ்ட் டைம் பேசும்போதும் கொஞ்ச‌ம் நெர்வ‌ஸாதான் இருந்தேன். அப்புற‌ம் கொஞ்ச‌ம் பேச‌ பேச‌தான் கேஷுவ‌லா பேச‌ ஆர‌ம்பிச்சேன்"

"இந்த‌ த‌னுஷ் ட‌ய‌லாகுக்குலாம் ஒண்ணும் குறைச்ச‌ல் இல்ல‌"

"ஹி..ஹி...கோச்சுக்காதீங்க‌, நீங்க‌ போயிட்டு வாங்க‌"

"ஏன் இப்ப‌டி ஒதுங்கி ஒதுங்கி போறீங்க‌? வ‌ந்து எல்லாரோடும் மிங்கிள் ஆகுங்க‌"

"வ‌ர‌லாம்.......ஆனா...."

"சும்மா கூச்ச‌ம் அது இதுன்னு மொக்கைய‌ போடாதீங்க‌. இப்ப‌டி கூச்ச‌ப்ப‌ட‌றீங்க‌ளே, நாளைக்கு க‌ல்யாண‌ம் ஆச்சுன்னா வொய்ஃப்கிட்ட பேசுவீங்க‌ளா? அட்லீஸ்ட் ஆஃபிஸ்ல‌யாவ‌து லேடீஸ்கிட்ட‌ பேசுவீங்க‌ளா?"

"ஹ‌லோ, என‌க்கு ரொம்ப‌வும் புடிச்ச‌து கார‌ம் போட்ட‌ வேர்க்'க‌ட‌லை'தான்"

"ஓ! அப்போ ஃபீமேல் ப்ளாக‌ர்ஸ் வ‌ந்தா வ‌ருவீங்க‌ இல்ல‌?"

"த‌ல‌, ஏன் இப்ப‌டி? அவ‌ங்க‌ள்லாம் நிறைய‌ பேரு மேரீட், அவ‌ங்க‌கிட்ட‌ க‌ட‌லை போடுற‌துலாம் த‌ப்பு இல்ல‌?"

"இதெல்லாம் வ‌க்க‌ணையா பேசுங்க‌...."

"ஹி...ஹி..."

"ச‌ரி இந்த‌ பேச்சுலாம் விடுங்க‌......ஓவ‌ர் சீன் வேணாம், ச‌னிக்கிழ‌மை நாம‌ போறோம்"

"ஐயோ, சீன்லாம் இல்ல‌ங்க‌.....(சிறிது யோச‌னைக்குப் பிற‌கு) ம்ம்ம்.....ச‌ரி.....ஓகே"

"அப்பாடா! எவ்வ‌ளோ போராட‌ வேண்டிய‌தா இருக்குது உங்க‌கிட்ட‌....ச‌ரி, லேட் ப‌ண்ணிடாதீங்க‌, ஆர‌ம்பிக்க‌ற‌துக்கு முன்னாடி க‌ரெக்ட் டைமுக்கு வ‌ந்துடுங்க‌"

"ஷ்யூர்....ஹ‌லோ...முத‌ல்ல‌ எங்க‌ வ‌ர‌ணும்னு சொல்லுங்க‌"

"ஓ ஸாரி......ச‌ங்க‌ம்"

"ச‌ங்க‌மா?"

"ஆமா. ச‌ங்க‌த்துல‌தான் 25 டிக்கெட் புக் ப‌ண்ணியிருக்கேன். நீங்க‌தான் ஒரு ப‌திவுல‌ த‌ம‌ன்னா புடிக்கும்னு எழுதியிருந்தீங்க‌ளே. அதான் 'பையா' போக‌லாம்னு டிசைட் ப‌ண்ண‌வுட‌னே, உங்க‌ள‌‌ க‌ண்டிப்பா கூப்பிட‌ணும்னு நினைச்சேன்."

"பாஸ், அதுக்காக‌ ச‌ங்க‌மா? ச‌த்ய‌ம், ஐநாக்ஸ்னா ப‌ர‌வாயில்ல‌. அட, திருவான்மியூர் தியாக‌ராஜான்னா கூட ஓகே. ச‌ங்க‌ம்லாம் இங்க‌யிருந்து அநியாய‌த்துக்கு தூர‌ம். ப‌ட‌ம் பாத்துட்டு வ‌ர்ற‌துக்கு நைட் ஆயிடும். லேட்டா வ‌ந்து ஹ‌வுஸ்ஓன‌ரை வேற‌ டிஸ்ட‌ர்ப் ப‌ண்ற‌ மாதிரி இருக்கும். என்னை விட்ருங்க‌, நான் வ‌ர‌லை..."

"என்ன‌ க‌டைசியில‌ இப்ப‌டி சொல்றீங்க‌? த‌ம‌ன்னா பாஸ் த‌..ம‌..ன்..னா! வான‌வில் வ‌ரைய‌ற‌வ‌ரும் வ‌ராரு"

"ஹும்...ப‌ர‌வால்ல‌ த‌ல‌, என்ன‌ ப‌ண்ற‌து...ஐ'ம் ரிய‌லி ஸாரி....த‌ப்பா நினைச்சுக்காதீங்க‌"

"இவ்ளோ சொல்றேன்......ச‌ரி, அப்புற‌ம் உங்க‌ இஷ்ட‌ம்"

******************************************************

ச‌ங்க‌ம் என்ற‌வுட‌ன் வேறு ஒரு விஷ‌ய‌த்தைப் ப‌ற்றி எழுதியிருப்பேன் என்றெண்ணி வ‌ந்திருந்தால்....ஹி..ஹி....ம‌ன்னியுங்க‌ள்......யு ஆர் இன் த‌ ராங் ப்ளேஸ். அதுதான் க‌ட‌ந்த‌ ஒரு வார‌மாக‌ ஒவ்வொருவ‌ரும் கும்மு கும்மு என்று கும்முகிறார்க‌ளே. நான் வேறு எத‌ற்கு? பை த‌ வே, 'ந‌ம்' தின‌த்தை ஏப்ர‌ல் 1 ம‌ட்டும‌ல்ல‌, 2 ம‌ற்றும் 3ம் தேதி வ‌ரை கூட‌ கொண்டாட‌லாமாம். அத‌ற்காக‌த்தான் இந்த‌ ப‌திவு ;))