Saturday, December 31, 2011

2011ல் ரசித்து பார்த்த படங்கள்

எங்கேயும் எப்போதும் 

தமிழ் இயக்குனர்களின் முதல் படத்தின் முதல் காட்சியை யோசித்து பாருங்கள். பெரும்பாலும் அது ஒரு பாஸிட்டிவ் செண்டிமென்ட்டையே பிரதிபலிக்கும். இந்த விஷயத்தில் இயக்குனர் சரவணனை பாராட்டியே ஆகவேண்டும். முதல் காட்சியே விபத்து. பலர் இறந்து போகிறார்கள். இதுதான் க்ளைமேக்ஸும் கூட‌. 

முதலிலேயே க்ளைமேக்ஸை காட்டிவிட்டால் பின்பு படத்தில் என்ன ஆர்வம் இருக்கும் என்று எண்ணியவர்களுக்கு நிறைய ஆச்சரியங்களை வைத்திருந்தார். தினந்தோறும் செய்தித்தாள் வாசிக்கும்போது எங்கேனும் விபத்து குறித்த செய்திகள் இருந்தால் இந்த படம் நினைவுக்கு வருவதை இன்னும் தவிர்க்க முடியவில்லை.  


ஜெய்-அஞ்சலி மற்றும் ஷ்ராவனந்த்-அனன்யா ஆகியோரின் காதல் காட்சிகள் படு யதார்த்தம். பொதுவாக பெண்களுக்கு முன், நான் நல்லவன் என்று காட்டிகொள்ளும் கேரக்டர்கள் மத்தியில், அனன்யாவிடமே தம்மடிக்க சில்லறை கேட்கும் ஷ்ராவனந்த் கேரக்டர் ரசிக்கும்படி இருந்தது. 

அஞ்சலி - போல்டான பெண்ணுக்குண்டான பாடி லாங்க்வேஜ், குரல் எல்லாமே சிறப்பாக அமைந்திருந்தது. குறிப்பாக ஜெய்யை டாமினேட் செய்யும் காட்சிகள்,  காதலன் இறந்துகிடக்கும்போது உடல் உறுப்பு தானம் பற்றி டாக்டரிடம் அழுதுகொண்டே சொல்லும் காட்சி.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்போதெல்லாம் அனுஷ்காவிற்கு பிறகு அஞ்சலியைத்தான் கவனிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

ஆடுகளம் 

ஈகோவை நேட்டிவிட்டியுடன் அழகாக கட்டிய படம். ஹீரோயிசத்திற்கான வாய்ப்புகள் இருந்தும் அதை தவிர்த்ததினாலேயே தனுஷை ரொம்பவும் பிடித்துப்போனது. செல்வராகவனால் மட்டுமே தனுஷிடமிருந்து சிறப்பான நடிப்பை வெளிக்கொணர முடியும் என்று நம்பியிருந்த எனக்கு, நானும் ஆட்டத்துல இருக்கேன் என்று வெற்றிமாறன் புரியவைத்தார். 

சேவல் சண்டையில் முதல் முறை வெற்றி பெறும் காட்சியில் தனுஷின் நடிப்பை பார்த்து அசந்துபோய்விட்டேன்.  ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளேயும் தோல்வியை தாங்க முடியாத ஒரு ஈகோ பிடித்தவன் இருக்கிறான் என்பதை உணரவைத்த படம். 

மங்காத்தா

அந்த படத்திலிருந்து சுட்டது, இந்த படத்திலிருந்து சுட்டது என குறை கூற ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அஜித்தின் ஸ்க்ரீன் ப்ரெச‌ன்ஸிற்காகவே ரசித்து ரசித்து பார்த்த படம். ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. அஜித்தின் 50௦வது படத்தை கெளதம் இயக்குவதாக இருந்தது. ஒரு சில காரணங்களால் அது நடக்காததால் கெளதம் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார், "நாலு பசங்க ஹீரோவா நடிக்கறாங்க, அவங்களோட இவரும் நடிக்கறார்". இதற்கு அஜித் எந்த பதிலும் சொல்லவில்லை.  மங்காத்தாவில் நடித்தார்.  அவ்வளவே.

இதற்கு முன் மேக்கிங்கிற்காக பில்லா பிடித்திருந்தது.  அதற்கு முன் வந்த சில படங்களில் அஜித் செய்யும் பில்டப்பை வெகுவாக கிண்டல் செய்திருக்கிறேன்.  ஆனால் இந்த படத்தில் அஜித்தை முழுக்க முழுக்க ரசித்து பார்த்தேன். அந்த இன்டர்வெல் சீன்....என்ன மாதிரியான மாஸ்! 

"இப்போ ஹீரோ என்ட்ரி, அதாவது என் என்ட்ரி. த கிங்.....த கிங்மேக்கர்!" என்று கர்ஜிக்கும்போதும் சரி, பணத்தை இழந்த பின் வைபவ்விடம் "பயமா இருக்குல்ல, உனக்கெல்லாம் ஐநூறு கோடி வந்தா என்ன போனா என்ன? ஆனா எனக்கு வேணும், ஐ'ம் எ கிங்மேக்கர்டா" என்று ஆவேசப்படும்போதும் சரி....தல தலதான்! 


சில காட்சிகளில் வரும் அநாகரிகமான வார்த்தைகளை மட்டும் தவிர்த்திருக்கலாம். வெறும் உதட்டசைவாக இருந்தாலும் எளிதாக கண்டுபிடிக்கமுடிந்தது.

EXAM

உணர்வுபூர்வமாக பல படங்களை பார்த்திருக்கிறோம். இது முழுக்க முழுக்க அறிவுபூர்வமான படம்.  படம் பார்ப்பவர்களின் இன்டெலிஜென்ஸுக்கு கண்டிப்பாக இந்த படம் ஒரு சவால்தான்.

ஒரு நிறுவனத்தில் சிஇஓவின் பிஏ பணிக்கான கடைசி கட்ட தேர்வு. எட்டு பேர் போட்டியாளர்கள். அதில் ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார். எட்டு பேரும் ஒரு அறையில் அமரவைக்கப்படுகின்றனர். தேர்விற்கான நேரம் மொத்தம் 80௦ நிமிடங்கள்.  தேர்வு அறையினுள் வரும் அந்த அலுவலகத்தை சேர்ந்த ஒருவர் இந்த தேர்வின் விதிமுறைகளை சொல்கிறார்.

1. அவரிடமோ அல்லது அங்கு நிற்கும் செக்யூரிட்டியிட‌மோ யாரும் பேசக்கூடாது
2. விடைத்தாளுக்கு எந்த சேதமும் ஏற்படக்கூடாது
3. எந்த காரணத்திற்காகவும் தேர்வு நேரம் முடியும் முன் யாரும் வெளியே போகக்கூடாது

இந்த விதிகளை மீறுபவர்கள் தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப்படுவர். இவற்றை எல்லாம் சொல்லிவிட்டு அவர் சென்றுவிட, போட்டியாளர்கள் தேர்வுக்கு தயாராகின்றனர். தாளை திறந்தவுடன் அவர்களுக்கு அதிர்ச்சி. அதில் கேள்வியே இல்லை. கேள்வியே இல்லாமல் என்ன பதில் எழுதுவது?........இதற்கு மேல், கேள்வி என்ன‌, யார் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


ROCKSTAR

டெல்லியில் இருக்கும் ஒரு சாதாரண இளைஞன் எப்படி ஒரு ராக்ஸ்டாராக மாறுகிறான் என்பதே கதை. மனதில் வலி இருந்தால்தான் பெரிய அளவில் சாதிக்க முடியும் என்று ஒருவர் கூற, அதற்கு காதல்தான் சரியான வழி என முடிவு செய்து நர்கிஸ் உடன் பழக ஆரம்பிக்கிறார் ரன்பீர். பழகிய சில நாட்களில் நர்கிஸ் திருமணமாகி Pragueக்கு சென்றுவிட, அதன்பின் அவரை மறக்க முடியாமல் தவித்தாலும், இசையில் கொஞ்சம் கொஞ்சமாக ரன்பீருக்கு புகழ் கிடைக்க ஆரம்பிக்கிறது.

Pragueல் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு ரன்பீருக்கு கிடைக்க, அதை பயன்படுத்தி நர்கிஸை மீண்டும் சந்திக்கிறார். அதன் பின் அவர்கள் வாழ்கையில் பல மாற்றங்கள். அதையெல்லாம் படம் பா.தெ.கொ.

இரண்டாம் பாதியில் கொஞ்சம் திரைக்கதையில் தொய்வு ஏற்படுவது போன்று தோன்றினாலும் ரன்பீர் கபூரின் நடிப்பு அதையெல்லாம் தாண்டி மனதில் நின்றது படத்திற்கு பெரிய ப்ளஸ். எனக்கென்னமோ இது ரன்பீர் கபூரை மனதில் வைத்தே எழுதப்பட்ட கதை என்று தோன்றியது.

ஏ.ஆர்.ரஹ்மான். இந்த பெயர் மட்டும்தான் இந்த படத்தை பார்ப்பதற்கு முக்கிய காரணம்.  என்ன ஒரு இசை! படத்தில் இசையின் முக்கியத்துவத்தை உணர்ந்து மோஹித் செளகான் ஒவ்வொரு பாடலையும் அசத்தலாக பாடியிருக்கிறார். அடுத்த வருடம் இந்த படம் இசை சம்பந்தப்பட்ட நிறைய விருதுகளை அள்ளப்போவது மட்டும் உறுதி.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!