Saturday, December 25, 2010

க‌விஞ‌ர் வா(வ்!)லி

புத்த‌க‌ வாசிப்பிற்கென்றே ஒவ்வொரு நாளும் குறைந்த‌து ஒன்று அல்ல‌து இர‌ண்டு ம‌ணி நேர‌ம் செல‌விடுவேன். ப‌ணியிட‌ம் மாறிய‌திலிருந்து இருந்த‌ ஒரேயொரு ந‌ல்ல‌ ப‌ழ‌க்க‌மும், விக்கிர‌மாதித்த‌னிட‌மிருந்து த‌ப்பித்த‌ வேதாள‌மாய் மாறிவிட்ட‌து.

ஆனாலும் ஓர‌ள‌வுக்கு போராடி க‌ட‌ந்த‌ முறை புத்த‌க‌ க‌ண்காட்சியில் வாங்கிய‌ அனைத்து புத்த‌க‌ங்க‌ளையும் வாசித்தாகிவிட்ட‌து. க‌தைக‌ள், க‌விதைக‌ளை நான் விரும்புவ‌தில்லை. இவ்விர‌ண்டிலுமே காத‌ல்தான் பெரும்ப‌ங்கு வ‌கிக்கிற‌து. ந‌ம‌க்கு த்ரில்ல‌ர்க‌ளும், கிழ‌க்கு ப‌திப்ப‌க‌ம் வெளியிடும் ப‌யோகிராஃபிஸும்தான் வெள்ளிக்கிழ‌மை ம‌ன‌நிலையைக் கொடுக்கும். ம‌ற்ற‌தெல்லாம் ஞாயிறு மாலை.

க‌ட‌ந்த‌ முறை வாங்கிய‌தில் மிக‌வும் ர‌சித்து வாசித்த‌து 'ராஜீவ் கொலை வ‌ழ‌க்கு'. ஒரு அர‌சிய‌ல் த‌லைவ‌ரின் ப‌டுகொலை ப‌ற்றிய‌ வ‌ழ‌க்கை ர‌சித்து வாசித்தேன் என‌ சொல்வ‌து ச‌ற்று அசெள‌க‌ரிய‌மாக‌வோ, அநாக‌ரிக‌மாக‌வோ தோன்ற‌லாம். ஆனால் உண்மை அதுதான். உட‌ன் இருந்து நாமும் துப்ப‌றிவ‌து போன்ற‌ உண‌ர்வுதான் தோன்றிய‌து.

இம்முறையும் வேட்டையை கிழ‌க்கு ப‌திப்ப‌க‌ ஸ்டாலில் இருந்துதான் ஆர‌ம்பிக்க‌வேண்டும். என்னென்ன‌ புதிதாக‌ வெளியிட்டிருக்கிறார்க‌ள் என்று தெரிய‌வில்லை. க‌ண்டிப்பாக‌ வாங்க‌வேண்டும் என்ற‌ லிஸ்ட்டில் த‌ற்போதைக்கு முத‌லில் உள்ள‌து தின‌த்த‌ந்தி வெளியிட்டுள்ள‌ 'கால‌ச்சுவ‌டுக‌ள்'. அடுத்த‌து மேலும் சில‌ 'சுஜாதா'(க்)க‌ள்.

******************

சேது, ந‌ந்தா, பிதாம‌க‌ன், நான் க‌ட‌வுள், காத‌ல், சுப்ர‌ம‌ணிய‌புர‌ம், அங்காடி(த் வ‌ருமாங்க‌?) தெரு, மைனா, ந‌ந்த‌லாலா.....

இவையெல்லாம் நான் இதுவ‌ரை பார்க்காத‌ ப‌ட‌ங்க‌ள். இனியும் பார்க்க‌ விருப்ப‌மில்லை. என்ன‌தான் ஹிட் ஆகியிருந்தாலும், இவையெல்லாம் முடிவில் சோக‌த்தைத் த‌ருப‌வை. திரைய‌ர‌ங்கை விட்டு வெளியே வ‌ரும்போது ஒரு க‌ன‌த்த‌ ம‌ன‌துட‌ன் வெளிவ‌ருவ‌து, இர‌வு தூங்க‌ முடியாம‌ல் த‌விப்ப‌து....மிகுந்த‌ வ‌லியைத் த‌ருகிறது. சினிமாதானே, இதுக்கெல்லாமா இப்ப‌டி என‌ கேட்க‌லாம். ஏனோ ப‌ட‌த்துட‌ன் மிக‌வும் ஒன்றிவிடுவ‌தை என்னால் த‌விர்க்க‌ முடிய‌வில்லை.

என‌க்கு தேவை, இருக்கும் பிர‌ச்னைக‌ளை ம‌ற‌க்க‌டிக்க‌ச்செய்யும் இர‌ண்டு ம‌ணி நேர‌ பொழுதுபோக்கு. அவ்வ‌ள‌வே. என‌வே 'த‌மிழ் ப‌ட‌ம்', 'க‌ளவாணி' போன்ற‌ ஃபீல் குட் ப‌ட‌ங்க‌ள்தான் என்னுடைய‌ பெஸ்ட் சாய்ஸ்.

******************ஆன‌ந்த‌ விக‌ட‌ன். புத்த‌க‌ வ‌ண்ண‌ம் இன்னும் க‌றுப்பு, வெள்ளை, சிக‌ப்பில் மாற‌வில்லை. அதிமுக‌வின் அதிகார‌ப்பூர்வ‌ ஏடு என‌ அறிவிக்க‌வில்லை. அவ்வ‌ள‌வுதான். திருமாவேல‌ன் அவ‌ர்க‌ள் எழுதும் அர‌சிய‌ல் க‌ட்டுரை இப்போதெல்லாம் ஒரு ச‌லிப்பையே த‌ருகிற‌து. த‌ற்போதைக்கு விக‌ட‌னில் ர‌சித்து வாசிப்ப‌து க‌விஞ‌ர் வாலி எழுதும் 'நினைவு நாடாக்க‌ள்'தான். நேர்மையான‌ எழுத்துக்க‌ள். ப‌ல‌ ர‌ச‌னையான‌ அனுப‌வ‌ங்க‌ளை ஒரு புன்சிரிப்புட‌ன் வாசிக்க‌வைக்கிறார்.

பாட்டு எழுத‌ற‌வ‌ர்தானே வாலி என‌ அல‌ட்சிய‌மாக‌ எண்ணியிருந்தேன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு. ஒரு மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது (என்ன‌ நிக‌ழ்ச்சி என்று ஞாப‌க‌மில்லை) ச‌ட்டென்று சொன்னார்.

க‌ல்ல‌றைக்குப்
போகும்வ‌ரை
தேவை
சில்ல‌றை

ஏனோ என்னை இவ்வ‌ரிக‌ள் மிக‌வும் ஈர்த்த‌ன‌. அத‌ன்பின் என‌க்கு வாலி..ஸோ ல‌வ்லி என‌ மாறிப்போனார்.

'ப‌ண‌ம் ப‌டைத்த‌வ‌'னில் வ‌ரும் இந்த‌ பாட‌லை முத‌லில் கேட்ட‌போது 'ச்சே! க‌ண்ண‌தாச‌ன் க‌ண்ண‌தாச‌ன்தாம்பா' என்று சிலாகித்திருக்கிறேன். பின்பு பாட‌ல்: க‌விஞ‌ர் வாலி என‌ பார்க்கையில் புருவ‌ங்க‌ள், இருந்த‌ இட‌த்திலிருந்து இர‌ண்டு மில்லிமீட்ட‌ர் உய‌ர்ந்துதான் போயின‌. த‌சாவ‌தார‌த்தில் அவ‌ரே சொன்ன‌து போல் 'ராஜ‌னுக்கு ராஜ‌ன் இந்த‌ ர‌ங்க‌ராஜ‌ன்தான்'!


கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?

பொய்யான சில பேர்க்குப் புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

******************

சென்னையில் ஆதிதிராவிட‌ மாண‌வ‌ர் விடுதியில் போதுமான‌ அடிப்ப‌டை வ‌ச‌திக‌ள் இல்லையென‌ அம்மாண‌வ‌ர்க‌ள் சைதாப்பேட்டையில் சாலை ம‌றிய‌ல் செய்துள்ள‌ன‌ர். அலுவ‌ல‌க‌ம் செல்ப‌வ‌ர்க‌ள், ம‌ருத்துவ‌ம‌னை செல்ப‌வ‌ர்க‌ள் என‌ எத்த‌னை பேருக்கு இது இடையூறாக‌ இருக்கும் என‌ அறியாத‌வ‌ர்க‌ளா அவ‌ர்க‌ள்? போராடுவ‌து என‌ முடிவு செய்த‌பின் முத‌ல்வ‌ர் இல்ல‌ம் முன்போ, ச‌ட்ட‌ச‌பை முன்போ, குறைந்த‌ப‌ட்ச‌ம் ஆதிதிராவிட‌ ந‌ல‌த்துறை அமைச்ச‌ரின் அலுவ‌ல‌க‌ம் முன்போ சென்று போராட‌ வேண்டிய‌துதானே.

ச‌ட்ட‌க் க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் வ‌ன்முறை, விடுதி மாண‌வ‌ர்க‌ள் சாலை ம‌றிய‌ல்.........இந்தியாவின் வ‌ருங்கால‌த் தூண்க‌ள்...ஹும்ம் :(

******************

இப்போதெல்லாம் அலுவ‌ல‌க‌த்தில்தான் பெரும்பாலும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். வீட்டு உரிமையாள‌ரிட‌ம் பேசி வாட‌கையை குறைக்க‌ச் சொல்ல‌ வேண்டும். க‌ட‌ந்த‌ சில‌ மாத‌ங்க‌ளில் ந‌ட்புக‌ள், ஜிமெய்ல், சாட், ப‌ஸ், த‌மிழ்ம‌ண‌ம் என‌ எல்லாமே குறைந்துவிட்ட‌து. ஒருவ‌கையில் ந‌ல்ல‌துதான். ப்ளாகோமேனியாவிலிருந்து பெரும‌ள‌வில் விடுப‌ட்டிருக்கிறேன். ஆனாலும் ப‌திவெழுதி ம‌ற்ற‌வ‌ர்க‌ளை டார்ச்ச‌ர் செய்ய‌வேண்டும் என்ற‌ சைக்கோத்த‌ன‌ம் ம‌ட்டும் குறைய‌வில்லை.

க‌டும் எச்ச‌ரிக்கை: இனி தொட‌ர்ந்து எழுத‌ முடிவு செய்திருக்கிறேன்.


I WILL WRITE


WILL WRITE


WRITE...........
Friday, October 29, 2010

It's all about L O V E

காத‌ல். அவ‌ஸ்தைப‌ட‌ப்போகிறோம் என்று தெரிந்தே விழும் சுக‌மான‌ கிணறு. அதிலும் இந்த‌ காத‌லி என்று ஒருத்தி இருக்கிறாளே. அவ‌ளை இவ்வுல‌கின் மிகச்சிற‌ந்த‌ மேஜிஷிய‌ன் என்பேன். பெற்றோர், ந‌ண்ப‌ர்க‌ள் என‌ எல்லோரையும் ம‌ற‌க்க‌ச்செய்து, ஒரு மிக‌ச்சிறிய‌ ஓர‌ப்பார்வையிலேயே கிறுக்க‌னை கூட‌ வைர‌முத்துவாக‌ மாற்றிவிடுவாள்.
'வாடா ம‌ச்சான் இன்னைக்கு ச‌ர‌க்க‌டிக்க‌லாம்' என்று உயிர் ந‌ண்ப‌னின் அழைப்பு உசுப்பேற்றிவிடும். இல்ல‌ ம‌ச்சி இனிமே த‌ண்ணிய‌டிக்க‌மாட்டேன்னு என் ஆள்கிட்ட‌ ச‌த்திய‌ம் ப‌ண்ணியிருக்கேன்டா என்று சொன்ன‌வுட‌ன் ந‌ண்ப‌னிட‌மிருந்து ஒரு ஏள‌ன‌ச் சிரிப்பும், ப‌ல‌ கெட்டவார்த்தைக‌ளும் கூட்ட‌ணி அமைத்து போர் தொடுக்கும். அப்பா, அம்மா, ஆசிரிய‌ர், பாஸ் என்று ப‌ல‌ரிட‌ம் செய்த‌ பொய் ச‌த்திய‌ம் எண்ணில‌ட‌ங்கா. ஆனால் அவ‌ளுக்கு கொடுத்த‌ ச‌த்திய‌த்தை மீற‌க்கூடாது என்ற‌ வைராக்கிய‌ம் எப்ப‌டி ந‌ம்மை ஆட்கொள்கிற‌து? சிம்பிள்..'என் ஆளு' என்று சொல்லும்போது ஒரு கிக் கிடைக்கிற‌தே, அதை விட‌வா ஒரு பாட்டில் விஸ்கியும், பிராந்தியும் கொடுத்துவிட‌ப்போகிற‌து?

சில‌ நாட்க‌ள் முன் அலுவ‌ல‌க‌த்தில் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் வேக‌வேக‌மாக‌ வ‌ந்து சொன்னார். கையில் PF Transfer Form.

ர‌கு, இதுல‌ ஃபேமிலி மெம்ப‌ர்ஸ் டீடெய்ல் கேக்க‌றான். இதுல‌ அப்பா அம்மாவோட‌ டேட் ஆஃப் ப‌ர்த்லாம் க‌ண்டிப்பா ஃபில் ப‌ண்ண‌ணுமா என்ன‌?

ஆமாங்க‌, க‌ண்டிப்பா ப‌ண்ண‌ணும்

ப்ச்...அவ‌ங்க‌ டேட் ஆஃப் ப‌ர்த் ம‌ற‌ந்து போச்சு

ச‌ரி, அவ‌ங்க‌ளுக்கு கால் ப‌ண்ணி கேளுங்க‌

இல்ல‌ ஜி‌, ரெண்டு வார‌ம் முன்னாடிதான் மெடிக்க‌ல் இன்ஷுர‌ன்ஸ் ஃபார்ம் ஃபில் ப‌ண்ணும்போது கால் ப‌ண்ணி கேட்டேன். இப்ப‌ ம‌றுப‌டியும் கேட்டா திட்டுவாங்க‌

இர‌ண்டு ம‌ணி நேர‌ம் க‌ழித்து மீண்டும் என்ன‌ருகே வ‌ந்தார்.

ர‌கு, அடுத்த‌ மாச‌ம் 24ம் தேதி நான் லீவு, இப்ப‌வே சொல்லிட்டேன், அப்புற‌ம் அதே நாள்ல‌ வேற‌ யாராவ‌து லீவ் எடுத்தா நான் பொறுப்பு கிடையாது

ஓகே பாஸ், நோ இஷ்யூஸ்...ஊருக்கு போறீங்க‌ளா?

இல்ல‌, அன்னைக்கு என் கேர்ள் ஃப்ரெண்டோட‌ ப‌ர்த்டே. க‌ண்டிப்பா லீவு போட‌ணும்னு சொல்லிட்டா

வாழ்க்கையில் இப்ப‌டியொரு மாற்ற‌த்தைக் கொண்டு வ‌ர‌ காத‌லிக்கு ம‌ட்டுமே சாத்திய‌ம்.

ஒரு பெண்ணை பார்த்த‌வுட‌னே காத‌ல் வ‌ய‌ப்ப‌ட்டு, ட்ரூ ல‌வ், தெய்வீக‌ம், அவ‌ளைப் பார்த்த‌வுட‌னே ம‌ன‌சுல‌ ஏதோ தோணுச்சு என்ப‌தெல்லாம் வெறும் பூச்சு வார்த்தைக‌ள். ஆணுக்கு ஒரு பெண்ணை பார்த்த‌வுட‌ன் காம‌ம் என்னும் சிறு புள்ளியில்தான் உண‌ர்வு தொட‌ங்குகிற‌து. அவ‌ளிட‌ம் இருக்கும் ஏதோ ஒரு அழ‌கு ஈர்க்கிற‌து. பின்பு அவ‌ளிட‌ம் ப‌ழ‌க‌த் தொட‌ங்கிய‌பின்தான் அவ‌ளின் சில‌ குணாதிச‌ய‌ங்க‌ள் அந்த‌ ஈர்ப்புக்கு மேலும் வ‌லிமை சேர்க்கிற‌து. ம‌ற்ற‌ப‌டி, கெமிஸ்ட்ரி, ஜ்யாக்ரஃபி, ஜுவால‌ஜி எல்லாம் க‌லா மாஸ்ட‌ர் க‌ண்டுபிடித்த‌ வ‌ஸ்துக‌ள்தான் என்ப‌து அடியேனின் க‌ருத்து.

கிரிக்கெட்டில் சில‌ ச‌ம‌ய‌ம் பேட்ஸ்மேன் ர‌ன் அவுட் ஆகும்போது க‌மெண்ட்ரியில் 'சூஸைட‌ல் அப்ரோச்' என்பார்க‌ள். காத‌லில் இத‌ற்கு நிக‌ரான‌து 'இவ‌ என் ஃப்ரெண்டுடி, பேரு ர‌ம்யா' என்று ஒரு தோழியை காத‌லிக்கு அறிமுக‌ப்ப‌டுத்திவைப்ப‌து. அத‌ன் பின் ஒரு சென்ச‌ஸ் அதிகாரியாக‌ அவ‌தார‌மெடுத்து ஆர‌ம்பிப்பாள். உன‌க்கெப்ப‌டி அவ‌ளைத் தெரியும்? அவ‌ வீடு எங்க‌யிருக்கு? அப்பா அம்மா என்ன‌ ப‌ண்றாங்க‌? எங்க‌ ஒர்க் ப‌ண்றா? அடிக்க‌டி அவ‌ளை மீட் ப‌ண்ணுவியா? சில‌ ச‌ம‌ய‌ம் நான் கால் ப‌ண்ணும்போது உன் லைன் பிஸியா இருக்குமே, அப்போ அவ‌ளோட‌தான் பேசிட்டிருப்பியா? உன்கூட‌ பைக்ல‌ வந்திருக்காளா?.................இன்ஃபினிட்டி.

மிக‌ப்பெரிய‌ விவாத‌ம் ந‌ட‌க்கும் அவ‌ளுட‌ன். விவாத‌ம் என்ப‌தை விட‌ வார்த்தைப்போர் என்று சொல்வ‌தே ச‌ரி. நிமிட‌ங்க‌ள்? ஹுஹும்..சில‌ ம‌ணி நேர‌ங்க‌ளாக‌ நீடிக்கும் இந்த போரின் முடிவில், தலையை லேசாக‌ வ‌ல‌துபுற‌ம் சாய்த்து, க‌ண்க‌ளை கொஞ்ச‌ம் சுருக்கி, 'என்ன‌டா?' என்று கொஞ்ச‌லாய் கேட்கும்போது புரியும். விடாப்பிடியாய் விவாத‌ம் செய்து ஜெயிப்ப‌தைவிட‌ அவ‌ளிட‌ம் தோற்றுப்போவ‌தில் சுக‌ம் அதிக‌மென்று.

காத‌ல் ப‌ற்றிய‌ விவாத‌த்தில் நண்ப‌ன் உதிர்த்த‌ முத்துக்க‌ள் 'ல‌வ்ல‌ No Pain, No Gain கிடையாதுடா, No Gain Only Pain'

நான் சொன்னேன், 'ல‌வ்ல‌ Pain itself is a gainடா' என்று. ச‌ரிதானே?

காத‌ல் ஒரு த‌வ‌ம‌ல்ல‌, வ‌ர‌மோ சாப‌மோ பெறுவ‌த‌ற்கு. எது கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ளும் ம‌ன‌ப்ப‌க்குவ‌ம் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு இது ஒரு சுக‌மான‌ உண‌ர்வு. குடி, போதை என்று தேடிப்போகிற‌வ‌ர்க‌ளுக்கு காத‌ல் இன்னுமோர் கார‌ண‌ம். 'அவ‌ளால‌தான் குடிகார‌னானேன்', 'என் கேரிய‌ரே ஸ்பாய்ல் ஆயிடுச்சு' என்று எவ‌னாவ‌து சொன்னால் 'Bull$*#@' என்றுதான் திட்ட‌த்தோன்றும்.

போதும்..இன்னும் எழுதினால் விக்ர‌ம‌ன் ஆகிவிடுவேனோ? 'நாய‌க‌'னைப் போல் அட‌ம்பிடிக்க‌ மாட்டேன். அவ‌ர்க‌ள் நிறுத்துகிறார்க‌ளோ இல்லையோ நான் நிறுத்திக்கொள்கிறேன். எளிமையாக‌ ஒரு வ‌ரியில் சொல்வ‌தானால்.... Life is all about love, isn't it?

Sunday, October 10, 2010

மே அமிதாப் ப‌ச்ச‌ன் போல் ர‌ஹா ஹுன்

ப‌னைம‌ர‌ம் மாதிரி உய‌ர‌மா இருப்பார். ஹிந்தி ந‌டிக‌ர். அமிதாப் என்றால் இவ்வ‌ள‌வுதான் தெரியும் ப‌ள்ளி நாட்க‌ளில். அந்த‌ வ‌ய‌தில் ப‌டிப்பு க‌ச‌ந்த‌தே த‌விர‌, பொது அறிவு ச‌ம்பந்த‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ங்க‌ளில் ஆர்வ‌ம் அதிக‌ரிக்க‌த்தொட‌ங்கிய‌து. இந்த‌ ச‌ம‌ய‌த்தில்தான் 'கோன் ப‌னேகா க்ரோர்ப‌தி' நிக‌ழ்ச்சி ஆர‌ம்பித்த‌து.

KBC வெற்றிக்கு கேள்விக‌ள், ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்ட‌ வித‌ம் ம‌ட்டும‌ல்லாது அமிதாப்பின் ஈகோ இல்லாத‌ அணுகுமுறையும் ஒரு கார‌ண‌ம். போட்டியாள‌ர்க‌ளுக்கு தான் ஒரு ஸ்டார் எதிரில் அம‌ர்ந்திருக்கிறோம் என்ற‌ பிர‌மிப்பில் இருந்து வெளிகொண‌ர்வ‌தில் சாம‌ர்த்திய‌சாலி. பொது அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள‌லாம் என்று பார்க்க‌ ஆர‌ம்பித்த‌ நிக‌ழ்ச்சி, சில‌ நாட்க‌ளில் அமிதாப்பின் ஸ்டைலுக்கா‌க‌வே பார்க்க‌லாம் என்றாகிப் போன‌தில் விய‌ப்பேதுமில்லை.

மீசை கூட‌ முளைத்திராத‌ வ‌ய‌து. பாண்ட்ஸ் ப‌வுட‌ரை கையில் கொட்டி, க‌ண்ணாடி முன் ப‌த்து நிமிட‌ம் பொறுமையாக‌ பார்த்து பார்த்து, அமிதாப்பின் வெண் பிரெஞ்சு தாடியைப் போன்றே வ‌ரைந்து கொண்டு, அம்மாவின் முன் சென்று "மே ர‌கு போல் ரஹா ஹுன்..கோன் ப‌னேகா க‌ரோர்ப‌தி ஸே" என்று அமிதாப்பின் குர‌லில் மிமிக்ரிய‌து இன்னும் நினைவில் உள்ள‌து. வ‌ய‌தானாலும் வெகு சில‌ரால் ம‌ட்டுமே ப‌ல‌ரையும் வ‌சீக‌ரிக்க‌ முடியும். இத‌ற்கு மிக‌ச்சிற‌ந்த‌ உதார‌ண‌ம் அமிதாப் ம‌ற்றும் ந‌ம்ம‌ எந்ந்ந்ந்ந்ந்...திரா!

'சிவாஜி' ப‌ட‌ம் ரிலீஸை நெருங்கிக்கொண்டிருந்த‌ நேர‌ம். அப்போது அயோத்தி, காம‌ன்வெல்த் கேம்ஸ் எல்லாம் தீனி போட‌வில்லை என்ப‌தால், ஹிந்தி நியூ(ஸ‌ன்)ஸ் சேன‌ல்‌க‌ள், யார் உண்மையான‌ சூப்ப‌ர் ஸ்டார்? அமிதாப்பா ர‌ஜினியா? என்று சும்மா கிட‌ந்த‌ சங்கை...ஆம் அதேதான். இத‌ற்கு ர‌ஜினியே ப‌தில‌ளித்திருந்தார். அந்த‌ க்ளிப்பிங் ஞாப‌க‌மிருக்கிற‌து. 5 ஸ்டார் ஹோட்ட‌ல் என்று நினைக்கிறேன். அங்கிருந்து ர‌ஜினி வெளியே வ‌ரும்போது செய்தியாள‌ர் இதே கேள்வியை கேட்க‌, அத‌ற்கு த‌லைவ‌ர், "No no, I may be a king..may be. But Amitji is an emperor" என்றார்.

சில‌ மாத‌ங்க‌ள் முன்பு 'ஜ‌ப் வி மெட்' ப‌ட‌ டிவிடி வாங்கிய‌போது, அதில் 'பூத்நாத்'தும் இருந்த‌து. போடா குழ‌ந்தைங்க‌ ப‌ட‌ம் என்று முத‌லில் தோன்றினாலும், ச‌ரி பார்ப்போம் என்று ஆர‌ம்பித்து, குழ‌ந்தையாக‌வே மாறிப்போனேன். ப‌ட‌ம் க‌டைசி அரை ம‌ணி நேர‌ம்தான் ரொம்ப‌ சுமாராக‌ இருக்கும். அந்த‌ சிறுவ‌னை ஆர‌ம்ப‌த்தில் ப‌ய‌முறுத்தி, பின்பு அவ‌ன் மேல் பாச‌ம் கொண்டு ஒரு தோழ‌னாக‌ மாறுவ‌தில் அமிதாப் அமிதாப்தான்! உங்க‌ள் இன்டெல‌க்ச்சுவ‌லை கொஞ்ச‌ம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு குழ‌ந்தையாக‌ இந்த‌ ப‌ட‌த்தை பார்த்தால் க‌ண்டிப்பாக‌ பிடிக்கும்.

இதோ மீண்டும் கோன் ப‌னேகா க்ரோர்ப‌தி ஆர‌ம்பிக்க‌ போகிற‌து. வெற்றியாள‌ருக்கு அதிக‌ப‌ட்ச‌ம் 5 கோடி என்கிறார்க‌ள். சேன‌ல் ஸ்டார் இல்லை, சோனி என்கிறார்க‌ள். இருக்க‌ட்டுமே, 'ஸ்டார்'ரில் வ‌ந்தால்‌தான் அமிதாப் ஸ்டார் என்றில்லை. 'சோனி'யில் வ‌ந்தாலும் அமிதாப் ஸ்டார்தான்.

ச்சே எதுக்கு இந்த‌ மொக்கை? ச‌ரி விடுங்க‌ள், சொல்ல‌ வ‌ந்த‌தை சொல்லிவிடுகிறேன். சொன்னாலும் அமிதாப்புக்கு தெரியப்போவ‌தில்லை. என்ன‌வென்று கொஞ்ச‌ம் யோசியுங்க‌ள். அமிதாப்பை ப‌ற்றி ஏதாவ‌து கிசுகிசு? ரேகா? இந்த‌ மாதிரியெல்லாம் யோசிக்காதிங்க‌..பிச்சு புடுவேன் பிச்சு :)) நான் சொல்லவ‌ந்தது....


ஹாப்பி ப‌ர்த்டே அமித்ஜி!


என‌க்கு இன்னொரு ஹிந்தி நடிக‌ரையும் பிடிக்கும். அவ‌ரைப் ப‌ற்றி அடுத்த‌ மாத‌ம் பார்ப்போம். அவ‌ர் யாரென்று தெரிந்து கொள்ள‌ ஒரு க்ளூ...கிகிகி...கிர‌ண்!

Sunday, September 19, 2010

ஒன்று பூஜ்ய‌ம் பூஜ்ய‌ம்

3 இடிய‌ட்ஸ் ச‌மீப‌த்தில்தான் பார்த்தேன். அதுவும் ரீமேக், ஷ‌ங்க‌ர், விஜ‌ய் என்றெல்லாம் ப‌த்திரிக்கைக‌ளில் வாசித்த‌ பின்புதான் பார்க்கும் ஆர்வ‌ம் அதிக‌மான‌து. பார்த்து முடித்தேன். இவ்வ‌ள‌வு நாளா பார்க்காம‌ விட்டுட்டோமே என்றுதான் தோன்றிய‌து.ஆமிர்கான். த‌லைவா என்று க‌த்திக்கொண்டு, என் த‌லைவ‌ன் எப்ப‌டி ப‌ண்ணியிருக்கான் தெரியுமா என்றெல்லாம் த‌லைவ‌ன் புக‌ழ் பாடிக்கொண்டு இருக்கும் நிலையை க‌ட‌ந்துவிட்டேன் என‌த் தோன்றுகிற‌து. சிறு வ‌ய‌து முத‌லே என்ன‌தான் ஷாரூக்கான் ப‌ட‌ங்க‌ளை ர‌சித்து பார்த்தாலும், ஆமிரையும் ர‌சிக்கிறேன். மாத‌வ‌ன், ஷ‌ர்மான் ஜோஷி, க‌ரீனா க‌பூர், போம‌ன் இரானி என்று அனைவ‌ரிட‌மும் அறையும், உதையும் வாங்குகிறார். பார்ப்ப‌த‌ற்கு மிக‌ ய‌தார்த்த‌மாக‌ இருந்த‌து. வேறு யாராவ‌து ந‌டித்திருந்தால் (ஷாரூக் உட்ப‌ட‌), அறை வாங்கும் காட்சிக‌ளை த‌விர்த்திருக்க‌க்கூடும். கொஞ்ச‌ம் கூட‌ ஈகோ இல்லாம‌ல் ந‌டித்த‌தினால் ஆமிரை இன்ன‌மும் பிடிக்கிற‌து.

உங்க‌ளுக்கு எந்த‌ துறை விருப்ப‌மோ அதில் ஈடுப‌டுங்க‌ள். க‌ட்டாய‌த்திற்காக‌ பிடிக்காத‌ துறையைத் தேர்ந்தெடுத்து ப‌டிக்க‌ வேண்டாம் என்று போதிக்கிறார்க‌ள். போத‌னைக‌ள் ந‌ம‌க்கு எப்போதும் 'ப்ச்' ர‌க‌ம்தான். ஆனால் இந்த‌ ப்ட‌ம் பார்க்கும்போது ச‌லிப்பு ஏற்ப‌ட‌வில்லை. ப‌ட‌த்தின் ஒரே குறை என‌ என‌க்குத் தோன்றிய‌து, பிர‌ச‌வ‌ம் பார்க்கும் காட்சி. அப்சொல்யூட் சினிமாத்த‌ன‌ம். கேப்ட‌ன் மொபைல் லைட்டில் ச‌ர்ஜ‌ரி செய்தால் கிண்ட‌ல் செய்கிறோம். ஆமிர் என்றால் 'ஆ'வென்று வாயைப் பிள‌க்க‌ வேண்டுமா என்ன‌?

த‌ற்போதிருக்கும் சூழ்நிலையில் விஜ‌ய்க்கு இது ச‌ரியான‌ வாய்ப்பு. அவ‌ர் எப்ப‌டி ப‌ய‌ன்ப‌டுத்திக் கொ'ல்ல‌'ப் போகிறார் என்ப‌து தெரிய‌வில்லை. ஈகோவை விட்டுவிட்டு, ஷ‌ங்க‌ர் சொல்பேச்சை கேட்டால், விஜ‌ய்க்கு இது க‌ண்டிப்பாக‌ ப்ளாக்ப‌ஸ்ட‌ர்தான்.

****************************************

ஹும்...99 டெஸ்ட்டோடு ஓய்வு(?) பெற்ற‌ அஸாருதீன் போல‌ ஆகிவிடுவோமோ என்று ப‌ய‌ந்துகொண்டேயிருந்தேன். ஏதேதோ ஒப்பேத்தி எழுதி இதோ நூறாவ‌து ப‌திவு வ‌ரை வ‌ந்தாகிவிட்ட‌து.

அழ‌கான‌ வ‌ர்ண‌னைக‌ள். வ‌சீக‌ர‌மான‌ மொழி ந‌டை. இவ‌ற்றோடெல்லாம் கைகோர்த்து ந‌டை ப‌யில‌ இன்னும் ஆர‌ம்பிக்க‌வில்லை. இன்னும் த‌வ‌ழும் ப‌ருவ‌த்தில்தான் இருக்கிறேன். என்றாலும் எழுதும் ஆர்வ‌ம் ம‌ட்டும் இன்னும் குறைய‌வில்லை.

அதும‌ட்டும‌ல்லாது 'அட‌ச்சே! இவ‌னே எழுத‌றான், நாம‌ ஏன் எழுத‌க்கூடாது?' என்று புதிய‌ ப‌திவ‌ர்க‌ளுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக‌ இருப்ப‌தில் ம‌ட்ட‌ற்ற‌ ம‌கிழ்ச்சி. வீட்டிலுள்ள‌ அறையிலேயே உட்கார்ந்து யோசித்த‌தில் இதுவ‌ரை எழுதிய‌திலேயே கொஞ்ச‌ம் பெருமூச்சுட‌ன் 'ஹும்..ஓகே' அப்ப‌டி என‌த் தோன்றுவ‌து இந்த‌ க‌தைதான்.வெகு நாட்க‌ளாக‌ பிடித்திருந்த‌ ப்ளாகோமேனியா கொஞ்ச‌ம் குறைந்திருப்ப‌து போன்ற‌ உண‌ர்வு. கார‌ண‌ம் புதிய‌ வேலை. ஆணிக‌ள் அதேதான். இட‌ம்தான் புதுசு. ஜிமெய்ல், ப்ளாக் அக்ஸ‌ஸ் இருந்தாலும் ச‌ற்று த‌ய‌க்க‌மாக‌ இருக்கிற‌து. அதான் கொஞ்ச‌ நாள் போக‌ட்டும் என்று பொறுத்திருக்கிறேன்.

ஏன் ரொம்ப‌ நாளா எழுத‌வேயில்ல‌ என்று மொபைலிலும், மெய்லிலும் நிறைய‌ பேர் மாற்றி மாற்றி கேட்காவிட்டாலும், இர‌ண்டு மூன்று ந‌ண்ப‌ர்க‌ளாவ‌து கேட்ட‌தில் ம‌கிழ்ச்சியே. முன்பு போல் தொட‌ர்ச்சியாக‌ பின்னூட்ட‌மிடாத‌த‌ற்கு ந‌ண்ப‌ர்க‌ள் ம‌ன்னிக்க‌ வேண்டும். விரைவில் க‌ள‌த்தில் இற‌ங்க‌ முய‌ற்சிக்கிறேன் ;)


புதிய‌ வேலை கிடைத்த‌ ம‌கிழ்ச்சியை ப‌கிர்ந்து கொள்ள‌ ஊரிலிருக்கும் ந‌ண்ப‌னுக்கு மொபைலினேன்.

'ம‌ச்சி, எங்க‌ வெளியே இருக்கியாடா? நாய்ஸியா இருக்கு'

'ப‌ப்ஸ் சாப்புட‌ணும் போல‌யிருந்த‌து, அதான் பேக்க‌ரி வ‌ந்தேன்...என்ன‌ சொல்லு'

'புது ஜாப் கிடைச்சிருக்கு..இன்னைக்குதான் ஜாய்ன் ப‌ண்ணேன், இன்னும் சிஸ்ட‌ம் ரெடியாக‌ல‌..சும்மாதான் உட்கார்ந்துகிட்டிருக்கேன்..அதான் உங்கிட்ட‌ பேச‌லாம்னு...'

'வாவ்! சொல்ல‌வேல்ல‌, சூப்ப‌ர்! கங்கிராட்ஸ்டா'


'தேங்க்ஸ்டா, சொல்ல‌க்கூடாதுன்னுலாம் இல்ல‌, ஜாய்ன் ப‌ண்ண‌துக்க‌ப்புற‌ம்....'


என்னை முடிக்க‌விடாம‌ல் அடுத்து ஒரு கேள்வி கேட்டான். என்ன‌ கேட்டிருப்பான் என்று ச‌ற்று யூகியுங்க‌ள்.

ட்ரீட் எப்போ?

என்ன‌ க‌ம்பெனி?

ஆஃபிஸ் டைம் என்ன‌?

எந்த‌ ஏரியா?

எவ்வ‌ள‌வு ச‌ம்ப‌ள‌ம்?

எப்ப‌டி போற‌? பைக்ல‌யா? ப‌ஸ்ல‌யா?

சாப்பாடுலாம் எப்படி?

அடுத்து என்ன‌ க‌ல்யாண‌ம்தானே?

.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஹுஹும்...அவ‌ன் கேட்ட‌ கேள்வி "ஆஃபிஸ்ல‌ ஃபிக‌ர்லாம் ந‌ல்லாருக்காடா?"


ந‌ண்பேன்டா!Sunday, August 15, 2010

மென்பொருள் துறைகை நிறைய‌ ச‌ம்ப‌ள‌ம். வாய் நிறைய‌ 'ஹே ட்யூட்'. நிறுவ‌ன‌மே பேருந்த‌னுப்பி கூட்டிச் செல்லும். குடும்ப‌த்தோடு வார‌யிறுதியில் திரைப்ப‌ட‌ம், க‌ட‌ற்க‌ரை ம‌ற்றும் உண‌வ‌க‌ம். ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் டிஸ்கோதே. புற‌ந‌க‌ர்ப் ப‌குதியில் சொந்த‌மாக‌ ஒரு வீடு. பிர‌தி மாத‌ம் செலுத்த‌ வேண்டிய‌ வீட்டுக்க‌ட‌ன். ச‌ம‌ய‌ங்க‌ளில் ஆத‌ர‌வ‌ற்றோர் இல்ல‌ம், முதியோர் இல்ல‌ம் ஆகிய‌வைக‌ளுக்குச் சென்று உத‌வி. மிக‌ முக்கிய‌மாக‌, ம‌ற்ற‌ துறையின‌ரின் வ‌யிற்றெரிச்ச‌ல். இவை ம‌ட்டுமே பெரும்பாலான‌ மென்பொருள் துறையின‌ருக்கு வாழ்க்கை முறை.

வ‌ருட‌ம் 2008. உல‌கள‌வில் பொருளாதார‌ச் ச‌ரிவு. உல‌க‌ள‌வில் என்றால் உல‌க‌ள‌வில்தான். ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ளில் ம‌ட்டும்தான் உல‌க‌ம் என்றால் அமெரிக்கா. அமெரிக்கா ம‌ட்டும‌ல்லாது ஜ‌ப்பான், இந்தியா, சீனா உட்ப‌ட‌ அனைத்து நாடுக‌ளும் பொருளாதார‌ச் ச‌ரிவில் ஆட்ட‌ம் க‌ண்ட‌ன‌.

எப்பாடுப‌ட்டேனும் இதை ச‌மாளித்தாக‌வேண்டும். பெருந்த‌லைக‌ள் அறையெடுத்து யோசித்திருப்பார்க‌ள் போல‌. விழுந்த‌து ச‌ம்ம‌ட்டி அடி. வாங்கிய‌து மென்பொருள் துறையின‌ர்.ப‌ணியாள‌ர்க‌ளைக் குறைக்க‌ வேண்டும். எடுத்த‌வுட‌ன் நேர‌டியாக‌ச் சொல்ல‌முடியாது. முத‌லில் வேலை நேர‌த்தை நீட்டித்து உட‌ல‌ள‌விலும், ம‌ன‌த‌ள‌விலும் சோர்வ‌டைய‌ச் செய்ய‌வேண்டும். வேலை இருக்கிற‌தோ இல்லையோ. விடுமுறை நாட்க‌ளில் வ‌ர‌ச்செய்ய‌வேண்டும். நிறுவ‌ன‌ம் அளித்த‌ இல‌வ‌ச‌ டீ, காபி, குறைந்த‌ விலைச் சாப்பாடு அனைத்தும் வில‌க்கிக்கொள்ள‌ப்ப‌டும். மாந‌க‌ர‌ப் போக்குவ‌ர‌த்துக் க‌ழ‌க‌ம் ந‌ம் நிறுவ‌ன‌ம் அமைந்திருக்கும் வ‌ழித்த‌ட‌த்தில் நிறைய‌ பேருந்துக‌ளை அறிமுக‌ப்ப‌டுத்தியிருக்கின்ற‌ன‌ர். அத‌னால் நிறுவ‌ன‌ம் பேருந்து வ‌ச‌தியைத் த‌ற்காலிக‌மாக, சோத‌னை முய‌ற்சிக்காக‌ நிறுத்திவைத்துள்ள‌து என‌ அறிவிக்க‌வேண்டும். அட‌! அனைவ‌ரும் கைக்குட்டை வைத்திருக்கிறீர்க‌ளே, பிற‌கெத‌ற்கு கை க‌ழுவுமிட‌த்தில் டிஷ்யூ காகித‌ம்? சென்ற‌ வ‌ருட‌ம் 25% ஊதிய‌ உய‌ர்வு வாங்கினீர்க‌ள் அல்ல‌வா? இந்த‌ வ‌ருட‌ம் 15% உங்க‌ள் ச‌ம்ப‌ள‌த்தில் குறைக்க‌ப்ப‌டுகிற‌து.

வேறு வ‌ழியில்லை. ஒன்று இந்த‌ இம்சைக‌ளைத் தாங்க‌ முடியாம‌ல் வேலையை நாமே விட்டுவிட‌ வேண்டும். இல்லையென்றால் க‌டைசிப் ப‌ல் இருக்கும்வ‌ரை க‌டித்துக்கொண்டு வாய் மூடி இருக்க‌வேண்டிய‌துதான்.

இத‌ன்பின்னும் யாரையாவ‌து ப‌ணிநீக்க‌ம் செய்ய‌வேண்டுமா? எளிது. குமுத‌த்தில் வ‌ருவ‌து போல் ஆறு வித்தியாச‌மெல்லாம் இல்லை வ‌ணிக‌ ப‌ட‌ வில்ல‌னுக்கும், நிறுவ‌ன‌ மேலாள‌ருக்கும். ஒரு வித்தியாச‌ம் ம‌ட்டுமே. அவ‌ர் "தூக்குங்க‌டா அவ‌னை" என்று க‌ர்ஜிப்பார். இவ‌ர் த‌ன் இருக்கையில் அம‌ர்ந்த‌ப‌டி, அலுவ‌ல‌க‌ ம‌னித‌வ‌ள‌த் துறைக்கு மின் ம‌ட‌லைத் த‌ட்ட‌ச்சிக்கொண்டிருப்பார், "We can terminate the contract of these employees".

நிறுவ‌ன‌த்திற்கு விசுவாச‌மாக‌ இருந்திருக்கிறோம். அவ‌ச‌ர‌மாக‌ முடித்தே ஆக‌வேண்டும் என்ற‌ சூழ்நிலைக‌ளில் ப‌தினான்கு ம‌ணி நேர‌த்திற்கு மேல் வேலை செய்திருக்கிறோம். விடுமுறை நாட்க‌ளில், ப‌ண்டிகை நாட்க‌ளில் கூட‌ குடும்ப‌த்தை ம‌ற‌ந்துவிட்டு அலுவ‌ல‌க‌த்திற்கு வ‌ந்திருக்கிறோம். அத‌னாலென்ன‌? அத‌ற்குத்தான் இவ்வ‌ள‌வு நாளாக‌ 4 ப‌க்க‌த்திலும், 5 ப‌க்க‌த்திலும் நான்கைந்து 0க்க‌ளைப் போட்டு ச‌ம்ப‌ள‌மாக‌ வாங்கினீர்க‌ளே. ஹும்..கிள‌ம்புங்க‌ள்!

வ‌ருட‌ம் 2009. நிறுவ‌ன‌ங்க‌ள் 2008ல் ந‌ட‌த்திய‌ 'ப‌ணியாள‌னே வெளியேறு' வைப‌வ‌த்தில் த‌ப்பித்து, க‌த்தியின் கீழ் தொங்கிக்கொண்டு ப‌ணிபுரிந்த‌ நிலை. வ‌ருட‌யிறுதி அப்ரைச‌ல் (த‌மிழ்ல‌ எப்ப‌டி சொல்ற‌து‌?). 'இன்க்ரிமென்ட்' ஒன்றையே ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ அப்ரைச‌லில் பார்த்த‌வ‌ர்க‌ளுக்கு புதிதாக‌ ஒரு வ‌ஸ்து காத்துக்கொண்டிருந்த‌து. ரிஸ‌ஷ‌ன். இதுவ‌ரை அறியாத‌ வார்த்தை. அறிமுக‌ப்ப‌டுத்திய‌து மேலாள‌ர். புரிய‌வைத்த‌து கூகுள் ம‌ற்றும் MS Wordல் Shift F7.

"உன‌க்கே தெரியும்பா மார்க்கெட் எப்ப‌டியிருக்குன்னு. உன் பேரும் லிஸ்ட்ல‌ இருந்த‌து. நான்தான் ஸ்ட்ராங்கா ரெக‌ம‌ண்ட் ப‌ண்ணி உன்னை ரீட்டெய்ன் ப‌ண்ணியிருக்கேன். இன்க்ரிமெண்ட்லாம் இல்லியேன்னு நினைக்காதே. இன்னும் வேலைல‌ இருக்கோம்னு ச‌ந்தோஷ‌ப்ப‌டு" என்று நாக‌ரிக‌மான‌ எச்ச‌ரிக்கை கிடைக்கும். ஒரு ரூபாய் கூட‌ ந‌ஷ்ட‌ம‌டையாத‌ நிறுவ‌ன‌ங்க‌ளும் ரிஸ‌ஷ‌னைக் கார‌ண‌‌ம் காட்டி, ச‌லுகைக‌ளைப் ப‌றித்த‌தும் அர‌ங்கேறிய‌து. அவ‌ர்க‌ளைக் குறை சொல்ல‌ முடியாது. ரிஸ‌ஷ‌ன் என்ற‌ புய‌ல் வீசிய‌து. தூற்றிக்கொண்டார்க‌ள்.வ‌ருட‌ம் 2010. இந்த‌ வ‌ருட‌மும் உங்க‌ள் மேலாள‌ர் ரிஸ‌ஷ‌ன் ராக‌த்திலேயே பாட‌ ஆர‌ம்பித்தால், அப்ரைச‌ல் க‌ச்சேரி முடிந்த‌வுட‌ன் தைரிய‌மாக‌ முடிவெடுத்து வேறு வேலையைப் பாருங்க‌ள். ச‌த்திய‌மாக‌ இப்போது ரிஸ‌ஷ‌ன் இல்லை. வேலை வாய்ப்பூ(க்)க‌ள் மீண்டும் துளிர்விட‌த் தொட‌ங்கியுள்ள‌ன‌. இன்ஃபோசிஸும், டிசிஎஸ்ஸும் இவ்வ‌ருட‌ம் வேலைக்கு அள்ள‌ப்போகும் ந‌ப‌ர்க‌ளின் எண்ணிக்கை 30000. வேலை வாய்ப்புக்கான‌ மின்ம‌ட‌ல்க‌ள் சென்ற‌ வ‌ருட‌த்தில் இதே ச‌ம‌ய‌த்தில் மாத‌ம் மூன்று நான்குதான் வந்துகொண்டிருந்த‌ன‌. இப்போது, வார‌த்திற்கே ஏழெட்டு மின்ம‌ட‌ல்க‌ள்!

புதிய‌ வேலை கிடைத்த‌தும் வ‌ற‌ட்டு கெள‌ர‌வ‌த்துக்காக‌, அவ‌சிய‌ம‌ற்ற‌ ஆட‌ம்ப‌ர‌ப் பொருள்க‌ளில் ப‌ண‌த்தை விர‌ய‌மாக்காதீர்க‌ள். அடுத்து எவ‌னாவ‌து லூசுப் ப‌ய‌ல் விமான‌த்தை எடுத்துக்கொண்டு பில்டிங்கில் போய் பார்க் செய்தால், மீண்டும் பொருளாதார‌ம் த‌டுமாறும் என்ப‌து உண்மை. என‌வே குறைந்த‌து ஆறு மாத‌ங்க‌ளுக்குத் தேவையான‌ ப‌ண‌ம் எப்போதும் வ‌ங்கி க‌ண‌க்கில் இருக்க‌ட்டும். இவை யாவும் அறிவுரை அல்ல‌. ரிஸஷ‌ன் நேர‌த்தில் மன‌ உளைச்ச‌லில் ப‌ல‌ர் அவ‌ஸ்தைப்ப‌ட்ட‌தை நேரில் பார்த்திருக்கிறேன். ஒரு சில‌ என் அனுப‌வ‌மும் கூட‌. ஒரு ந‌ண்ப‌னாக‌ ப‌கிர‌ ஆசைப்ப‌ட்டேன். அவ்வ‌ள‌வுதான். ஓவ‌ரா பேசுறான்டா என்று தோன்றினால் ம‌ன்னிக்க‌வும்.

ஒரு சின்ன‌ யோச‌னை. வேலை தேடும்போது உங்க‌ள் விப‌ர‌ங்க‌ளை நாக்ரியில் ப‌தித்திருப்பீர்க‌ள். ஒவ்வொரு ஞாயிறு அல்ல‌து திங்க‌ட் கிழ‌மைக‌ளில், உங்க‌ள் ரெஸ்யூமை ரீஅப்லோட் செய்யுங்க‌ள். ஒவ்வொரு மாத‌ முடிவிலும், உங்க‌ள் அனுப‌வ‌த்தில் ஒரு மாத‌ம் கூடுகிற‌து. அதையும் அப்டேட் ப‌ண்ண‌வேண்டும். இப்ப‌டிச் செய்வ‌தால் ப்ரொஃபைல் பெய‌ருக்குக் கீழே Updated on என்று அப்டேட் செய்ய‌ப்ப‌ட்ட‌ தேதி குறிப்பிட‌ப்ப‌ட்டிருக்கும். நிறுவ‌ன‌ங்க‌ள் நாக்ரி போன்ற‌ வேலைவாய்ப்புத் த‌ள‌ங்க‌ளில் தேடும்போது, recently updated profileக‌ளுக்கு முன்னுரிமை த‌ருகின்ற‌ன‌ர். இது என‌க்குத் தெரிந்த‌ ஒன்று.

வேறு ஏதேனும் யோச‌னை இருந்தால், பின்னூட்ட‌த்தில் ப‌கிருங்க‌ள். ப‌ல‌ருக்கும் ப‌ய‌னுள்ள‌தாக‌ இருக்கும்.

Tuesday, August 10, 2010

எழுதுங்க‌ ந‌ர்சிம்

சோம்பேறி. ர‌கு. என்னால் ச‌ரியாக‌ உண‌ர‌ முடிகிற‌து இவ்விரு வார்த்தைக‌ளுக்கும் பெரிதொரு வித்தியாச‌ம் இல்லையென‌. வேலைப்ப‌ளு என்ப‌து ச‌ப்பைக்க‌ட்டு. அழ‌காய் ஒரு ப‌திவெழுத‌வேண்டும் என‌த் தோன்றினால், ஏனோ ம‌ன‌ம் ஒரு அமைதியான‌ சூழ்நிலையையும் த‌னிமையையும் நாடுகிற‌து.

இதையாவ‌து ஒழுங்கா எழுதுடா சோம்பேறிப்ப‌ய‌லே என்று ஒரு தொட‌ர் ப‌திவிற்கு அழைத்திருக்கிறார் தோழி ப்ரியா. இதோ ஆர‌ம்பிக்க‌றேங்க‌ சுய‌புராண‌த்தை. எந்திர‌னின் அரிமா அரிமாவை ரொம்ப‌வே ர‌சித்துக்கொண்டிருக்கிறேன். அத‌னால் இப்ப‌திவின் பிண்ண‌ணி இசையாக‌ இதை க‌ற்ப‌னை செய்துகொண்டே வாசிக்க‌த் தொட‌ங்குங்க‌ள் :) கொஞ்ச‌ம் ஓவ‌ராத்தான் போறோமோ!

இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்....

(என்ன‌டா விள‌ம்ப‌ர‌ம்?)
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ர‌கு

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ஹுக்கும்..உண்மையான பெய‌ர் ச‌ச்சின் டெண்டுல்க‌ர். ஏங்க‌? முத‌லில் குறும்ப‌ன் என்ற‌ பெய‌ரில்தான் எழுத‌ ஆர‌ம்பித்தேன். மைலாப்பூர் க‌பாலீஸ்வ‌ர‌ர் கோயிலில், சாமி சிலைக‌ளுப் பின்ன‌ர் த‌மிழ் மாத‌ம் எழுதி ஒவ்வொரு பெய‌ர் எழுதியிருந்த‌ன‌ர். அப்ப‌டி நான் பிற‌ந்த‌ மாதத்திற்கு எழுதியிருந்த‌ பெய‌ர் பெரும‌ழிசைக் குறும்ப‌ர். முத‌ல்வ‌ர் இளைய‌வ‌ராக‌ இருந்த‌தால் 'முத‌ல்வ‌ன்' ஆன‌து போல் நானும் குறும்ப‌ன் ஆனேன். பின் த‌மிழ்ம‌ண‌த்தில் உலாவ‌ரும்போது இதே பெய‌ரில் வேறொருவ‌ர் இருப்ப‌த‌றிந்து, உண்மையான‌ பெய‌ரிலேயே எழுத‌லாம் என்று மாற்றிவிட்டேன். த‌விர‌ வெறும் ந‌கைச்சுவை ம‌ட்டும‌ன்றி எல்லாம் க‌ல‌ந்து எழுது என்று ந‌ட்புக‌ளின் 'மிர‌ட்ட‌ல்'க‌ளும் ஒரு கார‌ண‌ம். ஸ்ஸ்ஸ்ஸ்..இதுதான் 'குறும்ப‌ன்' 'ர‌கு'வான‌ க‌தை.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

அது த‌மிழ் வ‌லைப்ப‌திவுலகின் போதாத‌ நேர‌ம். வாசிப்ப‌வ‌ர்க‌ளின் ஜாத‌க‌த்தில் ச‌னியின் உச்ச‌ம். நீண்ட‌ நாட்க‌ளாக‌ நிறைய‌ ப‌திவுக‌ளை வாசித்துக் கொண்டே இருந்த‌தில், நாம‌ ஏன் எழுத‌க்கூடாது என்ற‌ ஏடாகூட‌மான‌ எண்ண‌ம் தோன்றியதால் வ‌ந்த‌ அபாய‌க‌ர‌மான‌ விளைவுதான் இந்த‌ வ‌லைப்பூ!

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

திர‌ட்டிக‌ள். இதைத் த‌விர‌ வேறொன்றும் செய்ய‌வில்லை. நிறைய‌ பேருக்கு க‌மெண்ட் போடு அப்ப‌தான் உன‌க்கும் க‌மெண்ட் வ‌ரும் என்று ச‌க‌ ப‌திவ‌ர்க‌ளும், ந‌ண்ப‌ர்க‌ளும் அறிவுறுத்திய‌துண்டு. க‌மெண்ட் போட‌க்கூடாது என்று வேண்டுத‌லெல்லாம் இல்லை. அலுவ‌ல‌க‌த்தில் ச‌ற்று ப்ரைவ‌ஸி இல்லாத‌ கார‌ண‌த்தால் நிறைய‌ ப‌திவுக‌ளுக்கு க‌மெண்ட் போட‌முடிவ‌தில்லை. ஆனாலும் இய‌ன்ற‌வ‌ரை சில‌ருக்குத் தொட‌ர்ந்து க‌மெண்ட்டிக்கொண்டுதான் இருக்கின்றேன்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ப்ளூக்ராஸ், 108 அவ‌ச‌ர‌ சேவை போன்று சில‌ அனுப‌வ‌ங்க‌ளை ம‌ட்டும் எழுதிய‌துண்டு. பெரும்பாலும் சொந்த‌ விஷ‌ய‌ங்க‌ளை எழுத‌ விரும்புவ‌தில்லை. இவ‌ள் என்னுடைய‌ தோழி என்று ஒரு பெண்ணைப் ப‌ற்றி எழுதினால்கூட‌ 'அவ‌ங்க‌ளுக்குள்ள‌ என்ன‌மோ ஓடுதுபா' என்று புற‌ம் பேசுப‌வ‌ர்க‌ளை ந‌ன்றாக‌ அறிவேன். அவ‌ர்க‌ள் பேசுவ‌து உண்மை இல்லையென்றாலும் இத‌னால் கிடைக்கும் காய‌ங்க‌ளும், வ‌லிக‌ளும் மிக‌ அதிக‌ம். என‌வே சொந்த‌ விஷ‌ய‌த்தைப் ப‌ற்றியெல்லாம் அதிக‌ம் எழுதி அவ‌ல் கொடுக்க‌ விருப்ப‌மில்லை.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

குசும்பு புடிச்ச‌ கேள்வி இது. நான் எழுத‌ற‌த‌ வெச்சுலாமா ச‌ம்பாதிக்க‌முடியும்? நான் எழுதிய‌தை க‌ணிணித் திரையில் பார்க்கும்போது, யாராவ‌து ஒருத்த‌ர், ரெண்டு பேர் (இதுவே அதிக‌ம்) பாராட்டும்போது 'ம‌ச‌க்க‌லி'யின் ஆர‌ம்ப‌ இசை (ஹே ஹேஹே ஹே...) ம‌ன‌தில் வ‌ந்து போகும். அத‌ற்காக‌த்தான் எழுதுகிறேன்.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

த‌மிழில் இது ஒன்றுதான். நான் பார்த்த‌ ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ளைப் ப‌ற்றியும், என் கேமிராக்குள் சிக்கிய‌ புகைப்ப‌ட‌க் கைதிக‌ளை சிறையில் அடைக்க‌வும் இரு ஆங்கில‌ வ‌லைப்பூக்க‌ளை ஆர‌ம்பித்தேன். ஆனால் தொட‌ர முடிய‌வில்லை. பேஸிக்க‌லி ஐ'ம் எ சோம்பேறி யூ நோ :)

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமை : ஹ‌ரீஷ், ஜெய் & விக்னேஷ்வ‌ரி. ந‌ம்மால் இப்ப‌டி எழுத‌ முடிவ‌தில்லையே என்று ஏங்க‌ வைக்கும் எழுத்துக‌ள் இவ‌ர்க‌ளுடைய‌து. அப்ப‌டி ஏங்கும்போதெல்லாம், நேர‌ங்கால‌ம் தெரியாத மூளை "ச‌ட்டியில‌ இருந்தாத்தானே...." என்ப‌தை ஞாப‌க‌ப்ப‌டுத்தித் தொலைக்கும்.

கோப‌ம் : ந‌ர்சிம். அவ‌ர் எழுதிய‌தை நியாய‌ப்ப‌டுத்த‌வில்லை. ஆனால் அவ‌ர் எழுதிய‌தைக் க‌ண்டிக்கிறேன் என்று ஆளாளுக்கு எழுத‌ ஆர‌ம்பித்த‌போதுதான் ஒவ்வொருவ‌ரின் ஆழ்ம‌ன‌ வ‌க்கிர‌ம் வெளிப்ப‌ட‌த் தொட‌ங்கிய‌து. அவ‌ர்க‌ள் எழுதிய‌ த‌ர‌ங்கெட்ட‌ வார்த்தைக‌ளை வாசிக்கும்போது இவ‌ர்க‌ளெல்லாம் ப‌டித்த‌வ‌ர்க‌ள்தானா என்றுகூட‌த் தோன்றிய‌து. அவ‌ர் எழுதினார், ப‌திலுக்கு நாங்க‌ எழுதினோம் என்ற‌ ச‌மாளிப்பெல்லாம் வேண்டாம். ஒருவ‌ரின் த‌வ‌றை அவ‌ருக்கு உண‌ர்த்துவ‌துதான் புத்திசாலித்த‌ன‌ம், விவேக‌ம். ஆனால் இங்கு திருப்பி அடிக்கும் 'வீர‌ர்'க‌ள்தான் நிறைந்திருந்த‌ன‌ர். வெளிப்ப‌டுத்த‌வில்லை...ஆனால் க‌டுங்கோப‌ம் கொண்ட‌து இந்த‌ வீர‌ப் ப‌திவ‌ர்க‌ள் மீதுதான்.

ந‌ர்சிம் அவ‌ர்க‌ளுட‌ன் என‌க்குத் த‌னிப்ப‌ட்ட‌ முறையில் ப‌ழ‌க்க‌மில்லை. நேரில் பார்த்த‌தில்லை. அலைபேசியில் பேசிய‌தில்லை. மின்ன‌ஞ்ச‌ல் தொட‌ர்பில்லை (ஒரு முறை 'ஏன் இப்போல்லாம் நீங்க‌ க்ரைம் க‌தைக‌ள் எழுத‌ற‌தில்ல‌' என்று கேட்டு மின்ன‌ஞ்ச‌லினேன்..அவ்வ‌ள‌வுதான்). அவ‌ரின் த‌ள‌த்தில் நான் இன்னும் ஃபாலோவ‌ர் ஆக‌வில்லை. ரெகுல‌ராக‌ அவ‌ர் ப‌திவுக‌ளுக்கு பின்னூட்ட‌ம் இடுவ‌துமில்லை. 'வீர‌ர்'க‌ளுக்கு முக்கிய‌மான‌ த‌க‌வ‌ல்..நான் அவ‌ர் ஜாதியுமில்லை ;) (அவ‌ர் என்ன‌ ஜாதி என்ப‌தே ப‌திவுக‌‌ளின் மூல‌ம்தான் அறிந்தேன்). இப்ப‌டிப் ப‌ல‌ 'ல்லை'க‌ள். ஆனாலும் அவ‌ர் எழுத்தை ர‌சிக்கிறேன். அவ‌ரெழுதிய‌ இந்த‌ ஒரு ப‌திவு போதும் "வாவ்!"வென‌ வாயைப் பிள‌க்க‌ வைக்க‌. மீண்டும் ப‌திவெழுத‌ ஆர‌ம்பித்த‌தில் ம‌கிழ்ச்சி. எழுதுங்க‌ ந‌ர்சிம் :)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

க‌ல்வி உத‌வி ப‌ற்றி எழுதிய‌போது க‌ணேஷ் வெளிநாட்டிலிருந்து தொட‌ர்புகொண்டு தானும் உத‌வ‌த் த‌யாராயிருப்ப‌தாக‌ தெரிவித்தார். எழுத்தின் தாக்க‌ம் அப்போதுதான் புரிந்த‌து. எவ்வ‌ள‌வு மொக்கையாக‌ எழுதினாலும், உற்சாக‌ப்ப‌டுத்துவ‌தில்..ச்சே..உசுப்பேத்துவ‌தில் ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ங்கு அதிக‌ம் :) ம‌ற்ற‌படி, பாராட்டு......ஹும்ம்ம்ம் இந்த‌ மாதிரி ச‌ம்ப‌வ‌மெல்லாம் ந‌ட‌க்க‌வில்லை என்ப‌தை த‌ன்ன‌ட‌க்க‌த்துட‌னும், ஏக்க‌த்துட‌னும் தெரிவித்துக்கொள்கிறேன்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

ரொம்ப‌ முக்கிய‌ம்! ச‌ராச‌ரி, சோம்பேறி, சாஃப்ட்வேர் த‌மிழ‌ன் நான். அப்புற‌ம்..நாட்டுக்குத் தேவையான‌ விஷ‌ய‌ம்....I'm still happy, not married ;))இத்தொட‌ரை தொட‌ர‌ நான் அழைக்க‌ விரும்புவ‌‌து

ஹ‌ரீஷ்

ஜெய்

விக்னேஷ்வ‌ரிSunday, August 01, 2010

வார‌யிறுதியில் மூன்று ஆக்ஷ‌ன் திரைப்ப‌ட‌ங்க‌ள்

சில‌ வ‌ருட‌ங்க‌ள் முன்பு, ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ள் என்றாலே என்னைப் பொறுத்த‌வ‌ரை ஜுராஸிக் பார்க்கும், ஜாக்கி சான் ப‌ட‌ங்க‌ளும்தான். ப‌ரிந்துரை செய்கிறேன் என்ற‌ பெய‌ரில் இந்த‌ ம‌னுஷ‌ன் ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ளுக்கு அடிமையாக‌க் க‌ட‌வ‌து என்று சாப‌மிட்டுவிட்டார். போதாதென்று இவ‌ர் வேறு. ப‌ட‌ங்க‌ளுக்கு விம‌ர்ச‌ன‌ம் எழுதுப்பா என்றால், குவென்டின் தெரியுமா, குப்ரிக் தெரியுமா, நோல‌ன் தெரியுமா என்று குரோர்ப‌தி ரேஞ்சுக்கு கேள்வி கேட்டு வெறுப்பேத்துகிறார்.

இந்த‌ மாதிரி ஆட்க‌ளையெல்லாம் சமாளிப்ப‌த‌ற்காக‌வே ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ளை பார்க்க‌த் தொட‌ங்கினேன். இப்போதெல்லாம் வார‌ம் குறைந்த‌து ஒரு ப‌ட‌மாவ‌து பார்க்கிறேன். அதிக‌ப‌ட்ச‌ம் மூன்று. எல்லா புக‌ழும் டோர‌ன்ட்டில் ட‌வுண்லோடித் த‌ரும் ந‌ண்பருக்கே :)

காமெடி, ஹார‌ர் ப‌ட‌ங்க‌ளை விட‌ த்ரில்ல‌ர்தான் என்னுடைய‌ தேநீர் கோப்பை. அதுவும் ஆக்ஷ‌ன்/க்ரைம் த்ரில்ல‌ர் என்றால் திருப்ப‌திதான். அப்ப‌டி சென்ற‌‌ வார‌ இறுதியில் பார்த்த‌ ப‌ட‌ங்க‌ள் The Delta Force, The Delta Force 2 : The Colombian Connection & Assault on Precinct 13.The Delta Force & The Delta Force 2 : The Colombian Connection


இவ்விர‌ண்டு ப‌ட‌ங்க‌ளும் எண்ப‌துக‌ளில் வ‌ந்த‌வை. ஆனால் இன்று பார்த்தாலும் ர‌சிக்க‌ முடிகிற‌து. கார‌ண‌ம் விறுவிறுப்பான‌ திரைக்க‌தை, பிர‌மிப்பூட்டும் இய‌க்க‌ம். ஒரு தீவிர‌வாத‌ கும்ப‌ல் அமெரிக்க‌ ப‌ய‌ணிக‌ள் விமான‌த்தைக் க‌ட‌த்திவிடுகின்ற‌ன‌ர். "எங்க‌ ஜ‌ன‌ங்க‌ பாவ‌ம் அவ‌ங்க‌ள‌ விட்டுடுங்க‌, உங்க‌ கும்ப‌லைச் சேர்ந்த‌வ‌ங்க‌ யாரை வேணும்னாலும் ரிலீஸ் ப‌ண்றோம்" என்றெல்லாம் கொஞ்சிக்கொண்டிருக்காம‌ல், அதிர‌டியாக‌ இற‌ங்கி அவ‌ர்க‌ளை மீட்கிறார்க‌ள் ஹீரோ & கோ.

ஹீரோ Chuck Norris. அச‌ர‌ வைக்கும் லுக் இல்லாவிட்டாலும் ஆக்ஷ‌னில் அச‌த்துகிறார். அதுவும் இறுதிக்காட்சியில் பைக்கில் இருந்து விமான‌த்தில் தாவுவ‌து எல்லாம் வாவ்! ர‌க‌ம்.

இர‌ண்டாம் பாக‌மும் ந‌ன்றாக‌த்தானிருந்த‌து. த‌ன் ந‌ண்ப‌ன் ம‌ற்றும் ந‌ண்ப‌னின் ம‌னைவி ஆகியோரின் ம‌ர‌ண‌த்துக்கு கார‌ண‌மான‌ ஒரு போதை ம‌ருந்து தாதாவை எப்ப‌டி ஹீரோ ஒழித்துக்க‌ட்டுகிறார் என்ப‌துதான் க‌தை. முத‌ல் பாக‌ம் அள‌வுக்கு இதில் வ‌லுவான‌ திரைக்க‌தை இல்லாவிட்டாலும், ஆக்ஷ‌ன் காட்சிக‌ளின் மூல‌ம் அந்த‌ குறையை ம‌ற‌க்க‌ச் செய்துவிடுகின்ற‌ன‌ர்.Assault on Precinct 13

இந்த‌ ப‌ட‌ம் எல்லோருக்கும் பிடிக்குமா என்றால்..பிடிக்க‌லாம். பிடிக்காம‌லும் போக‌லாம். என‌க்கு மிக‌வும் பிடித்திருந்த‌து. கார‌ண‌ம் ப‌ட‌த்தின் அருமையான‌ Plot. ஒரு காவ‌ல் நிலைய‌ம். அங்குள்ள‌ போலீஸாரை (ஹீரோ ம‌ற்றும் ந‌ண்ப‌ர்க‌ள்) வேறு சில‌ போலீஸார் கொலை செய்ய‌ முய‌ற்சிக்கின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளிட‌மிருந்து த‌ப்பிக்க‌ ஹீரோ ஒரு முடிவெடுக்கிறார். அது என்ன‌வென்று சொல்லி த்ரில்லை குறைக்க‌ விரும்ப‌வில்லை. ப‌ட‌த்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்க‌ள்.


ஹீரோ Ethan Hawke. பார்ப்ப‌த‌ற்கு Tom Cruiseன் த‌ம்பி போலிருக்கிறார். ப‌ய‌த்தை, த‌விப்பை, சோக‌த்தை, இய‌லாமையை ந‌ன்றாக‌வே வெளிப்ப‌டுத்தியிருக்கிறார். பொதுவாக‌ ஆக்ஷ‌ன் ப‌ட‌ங்க‌ளில் ந‌டிப்ப‌த‌ற்கு அவ்வ‌ள‌வாக‌ தீனி இருக்காது. இதிலும் அப்ப‌டித்தான். ஆனால் கிடைத்த‌ வாய்ப்புக‌ளை வீணடிக்காம‌ல் ப‌ல‌ காட்சிக‌ளில் அனைவ‌ருமே வெளுத்து வாங்கியிருக்கிறார்க‌ள். இன்னும் நிறைய‌ எழுத‌வேண்டும் போலிருக்கிற‌து. வேண்டாம். காட்சிக‌ளை விவ‌ரிக்க‌ ஆர‌ம்பித்துவிடுவேன். சுருக்க‌மாக‌ச் சொன்னால் இந்த‌ வார‌ம் பார்த்த‌ மூன்று ப‌ட‌ங்க‌ளிலேயே இதுதான் டாப்!

Monday, July 26, 2010

க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை!

அவ‌னுக்கு வ‌ய‌து 22. மாநிற‌ம். வ‌ண்டியில் போகும்போது வீசும் எதிர்காற்றிலேயே ப‌ற‌ந்துவிடுவ‌து போன்ற‌ மெலிந்த‌ தேக‌ம். த‌னுஷை விட‌ ஒல்லி!. அதிர்ந்து பேச‌மாட்டான். மிக‌ அமைதியான‌வ‌ன்.

சொந்த‌ ஊர் என்ன‌வோ திருவ‌ண்ணாம‌லைதான். ஆனால் வ‌சிப்ப‌து வ‌றுமைக்கோட்டுக்கு கீழே‌. நோக்கியா, ஹுண்டாய் என‌ ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ள் ஸ்ரீபெரும்புதூரை ஆண்டுகொண்டிருந்தாலும், அவ‌ற்றிற்கு அடிப‌ணியாம‌ல் இருக்கும் ஒரு குறுநில‌ ம‌ன்ன‌ரைப் போன்ற‌வ‌ர் அவ‌னுடைய‌ த‌ந்தை. தேர்ந்த‌ நெச‌வாளி. அவ‌ருக்கு உத‌வியாய் அவ‌ன‌து அம்மா. க‌ல்லூரி செல்லும் வ‌ய‌தில் ஒரு த‌ங்கை.

அவ‌னுடைய‌ த‌ந்தை என்ன‌மோ ஸ்ரீபெரும்புதூர் ஜாம்ப‌வான்க‌ளுக்கு அடிப‌ணியாத‌வ‌ர்தான். ஆனால் அவ‌ன் ப‌ணிந்துபோக‌ த‌யாராக‌யிருந்தான். வ‌றுமைக்கோடு. எப்பாடுப‌ட்டேனும் இந்த‌ கோட்டிலிருந்து வில‌கி த‌ன் குடும்ப‌த்தை ஒரு ந‌ல்ல‌ நிலைமைக்குக் கொண்டுவ‌ந்துவிட‌ வேண்டும் என்கிற‌ வெறி.

பெரும் முய‌ற்சிக்குப் பின்ன‌ர், சென்னையில் ஒரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தில் அவ‌னுக்கு வேலை கிடைத்த‌து. மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் ரூ.6000. திருவ‌ண்ணாம‌லையில் இருந்து தின‌மும் பேருந்தில் வ‌ந்து போக‌ முடியாது. ப‌ண‌ விர‌ய‌ம் ம‌ட்டும‌ல்லாம‌ல் ப‌ய‌ண‌த்தால் ஏற்ப‌டும் உட‌ற்க‌ளைப்பும் ஒரு கார‌ண‌ம். வேறு வ‌ழியில்லை. தாம்ப‌ர‌த்தில் உள்ள‌ உற‌வின‌ர் வீட்டில் தங்கி வேலைக்கு செல்வ‌து என‌ முடிவு செய்தான்.

பிற‌ந்த‌து முத‌ல், அதிக‌ப‌ட்ச‌ம் இர‌ண்டு நாட்க‌ளுக்கு மேல் த‌ன் பெற்றோரை பிரிந்த‌தில்லை அவ‌ன். ப‌ணியில் சேர்ந்த‌ பின் வார‌ம் ஒரு முறைதான் வீட்டுக்குப் போக‌ முடிந்த‌து. இந்த‌ பிரிவு அவ‌னை வ‌ருத்த‌ம‌டைய‌ச் செய்தாலும், த‌ன் குடும்ப‌ம் ந‌ல்ல‌ பொருளாதார‌ நிலைமைக்கு உய‌ர‌ இது அவ‌சிய‌ம் என்று க‌ருதி த‌ன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.

ப‌ண‌ம்..ப‌ண‌ம்..ப‌ண‌ம்..இது ஒன்றே முக்கிய‌ம். குடும்ப‌த்தின் வ‌றுமை ஒழிய‌ த‌ன் க‌வ‌ன‌ம் முழுதும் ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌திலேயே இருக்க‌ வேண்டும் என்ப‌து அவ‌னுடைய‌ ல‌ட்சிய‌ம், வெறி, சித்தாந்த‌ம், கொள்கை, கோட்பாடு எல்லாமே. காலை 6:30 ம‌ணிக்கு அவ‌னுடைய‌ ஷிஃப்ட் துவ‌ங்கும். ஆறு ம‌ணிக்கு முன்னே அலுவ‌ல‌க‌த்துக்குச் சென்றுவிடுவான்.

அன்று திங்க‌ள் கிழ‌மை. ப‌னி வில‌காத‌ காலை நேர‌ம். ஆறாவ‌து த‌ள‌த்தில் உள்ள‌து அலுவ‌ல‌க‌ம். த‌ரைத் த‌ள‌த்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தினான். ஆறாம் த‌ள‌ம் சென்ற‌டைந்த‌வுட‌ன் லிஃப்ட் க‌த‌வு திற‌ந்த‌போது கீழே விழுந்த‌து அவ‌னுடைய‌ உயிர‌ற்ற‌ உட‌ல்!
அங்கிருந்த‌ செக்யூரிட்டிக‌ள் அவ‌னுடைய‌ டீமுக்கு த‌க‌வ‌ல் அளித்து அவ‌னை ம‌ருத்துவ‌ம‌னைக்குக் கொண்டு செல்ல‌ ஏற்பாடு செய்த‌ன‌ர். ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ரிசோதித்த‌ ம‌ருத்துவ‌ர் ம‌றுநொடியே சொன்னார், "ஸாரி ஹி ஈஸ் நோ மோர்". 'டெட் ஆன் அரைவ‌ல்' என்று ரிப்போர்ட்டில் ப‌திவு செய்தார்.

பின்ன‌ர் அவ‌னுக்கு நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்த‌போது தெரிய‌வ‌ந்த‌து. அவ‌னுக்கு புகை, குடி என்று எந்த‌ ப‌ழ‌க்க‌மும் இல்லை. ஒவ்வொரு மாத‌மும் அவ‌னுக்கென்று ரூ.1500 எடுத்துக்கொண்டு மீதி ப‌ண‌த்தை த‌ன் குடும்ப‌த்துக்கு அனுப்பிவிடுவான். அந்த‌ 1500ல் போக்குவ‌ர‌த்து, அலைபேசி, உண‌வு ஆகிய‌வ‌ற்றிற்கான‌ செல‌வுக‌ள் அட‌ங்கும். செல‌வைக் க‌ட்டுப்ப‌டுத்த‌ அவ‌ன் மேற்கொண்ட‌ ஒரு முடிவு..தினமும் காலை உண‌வைத் த‌விர்த்து ஒரு நாளைக்கு இரு வேளை ம‌ட்டுமே உண்ணுவ‌து.

இந்த‌ ப‌ழ‌க்க‌ம் வெகு நாட்க‌ளாய்த் தொட‌ர்ந்து உட‌லுக்குள் வாயு உருவாகி அது இத‌ய‌த்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 வ‌ய‌தில் மார‌டைப்பு! இது ஏதோ க‌ற்ப‌னையாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ வ‌ரி அல்ல‌. அவ‌னுடைய‌ உண‌வு ப‌ழ‌க்க‌த்தை அவ‌ன் ந‌ண்ப‌ர்க‌ள் கூற‌க்கேட்டு அறிந்த‌ பின் ம‌ருத்துவ‌ர் சொன்ன‌து.

ப‌ண‌ம் ஒன்றையே பிராத‌ன‌மாக‌க் க‌ருதி ப‌ர‌ப‌ர‌வென‌ ப‌ற‌ந்துகொண்டிருக்கும் இந்த‌ யுக‌த்தில், ந‌ம்மில் பெரும்பாலானோர் காலை உண‌வைத் த‌விர்த்துவிடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும் கார‌ண‌ம்.."டைம் இல்ல‌". சாப்பிடுவ‌த‌ற்குக் கூட‌ நேர‌மில்லாம‌ல் அப்ப‌டி என்ன‌ கிழித்துவிட‌ப் போகிறோம்?

இத‌ற்கு மேல் இதைப்ப‌ற்றி நீங்க‌ளே சொல்லுங்க‌ள்!

பி.கு: நானும் இந்த‌ ம‌ட‌த்த‌ன‌மான‌ கார‌ண‌த்தைக் காட்டி ப‌ல‌ நாட்க‌ள் காலை உண‌வைத் த‌விர்த்திருக்கிறேன். அவ‌ன் ம‌ர‌ண‌ம்...என‌க்கொரு பாட‌ம். அன்றிலிருந்து என்னுடைய‌ காலை உண‌வு நேர‌ம் 10 அல்ல‌து 10:30க்குள்.

Wednesday, July 21, 2010

ஆஃபிஸிலும் கும்மாங்குத்து

க்ளோப‌ல் கிக்கிங், உல‌க‌ குத்தும‌ய‌மாக்க‌ல் தின‌ம் ஆகிய‌வ‌ற்றையொட்டி ப‌திவுல‌கில் வ‌ய‌சான‌...ஸாரி மூத்த‌ ப‌திவ‌ர்க‌ள் குத்த‌ ஆர‌ம்பித்திருப்ப‌தால், எல‌ச்சி ஆத்தாவை வேண்டிக்கொண்டு நானும் க‌ள‌த்தில் இற‌ங்குகிறேன்.

நமக்கு தோழி, மனைவி, நண்பன்னு எந்த இம்சையுமில்லை. இம்சையில்லாம வாழ்க்கையான்னு சந்தோஷப்படாதீங்க. எல்லா இம்சையையும் ஒண்ணாக் குடுக்க தான் ஆஃபிஸ்ல இருக்காரே டேமஜர். அவர் மத்தவங்களுக்கு குத்துறதையெல்லாம் சேர்த்து நமக்கே குத்தறார். நேர்ல அவரைக் குத்த முடியல. பதிவுலயாவது குத்துவோம்.#சுவாரஸியமா தமிழ்மணத்துல மேஞ்சிட்டு இருக்கும் போது நாலு மணிக்கு மீட்டிங்னு அஞ்சு நிமிஷம் முன்னாடி சொல்லி வர சொல்லும் போது.

#பெர்ஃபார்ம‌ன்ஸில் டாப்பில் நாம இருந்தாலும் அப்ரைசல் டைம்ல “என்னால எதுவும் ரெகமெண்ட் பண்ண முடியாதுப்பா. எல்லாம் மேனேஜ்மெண்ட் தான் டிசைட் பண்ணனும்”ன்னு சீரியஸ் சீனிவாசனா டயலாக் அடிக்கும் போது.

#என்றாவ‌து ஒரு நாள் டைம் ஷீட் அப்டேட் ப‌ண்ணாம‌ல் போயிருப்போம். ம‌றுநாள் டீம் கொலிக்ல இருந்து, க‌ம்பெனியின் வைஸ் ப்ரெசிட‌ன்ட் வ‌ரை சிசியில் போட்டு "இன்னும் டைம் ஷீட் அப்டேட் ப‌ண்ண‌வேலியா"ன்னு கேட்டு மெய்ல் வ‌ருமே.... அந்த சமயம்.

#மீட்டிங் முடிச்சிட்டு ஒண்ணுமே புரியாம தூங்கி எழுந்த மாதிரி கண்ணைக் கசக்கிகிட்டு வெளில வரும் போது “மீட்டிங்கோட மினிட்ஸ் ஒண்ணு ப்ரிப்பேர் பண்ண்டுங்களேன். நாளைக்கு எல்லாருக்கும் சர்குலர் பண்ணிடலாம்”ன்னு தனக்கு மட்டும் எல்லாம் புரிஞ்சுட்ட மாதிரி சொல்லும் போது.

# ப்ராஜெக்ட் டெட்லைன். டே அண்ட் நைட் ஷிஃப்ட் போட்டு வேலை பார்த்திட்டிருப்போம். இங்கேயே இருந்த டேமேஜரை எங்கே காணோம்ன்னு தேடும் போது தான் ஆஃபிஸ் பாய் சொல்வான் அவர் கேண்டீன்ல அரட்டை அடிச்சிட்டு கெஸ்ட் ஹவுஸ்ல தூங்கிட்டதா... அப்போ மட்டும் அவர் கைல கிடைச்சாரு, செம குத்து தான்.

#வேலைக்கு சேர்ந்த‌ முத‌ல் நாள். டேமேஜ‌ர் சிரித்துக்கொண்டே சொல்லுவார், உங்க‌ளுக்கு என்ன‌ ப்ராப்ள‌ம்னாலும் எப்ப‌ வேணும்னாலும் எங்கிட்ட‌ வ‌ந்து பேசலாம். சில‌ நாட்க‌ள் க‌ழித்து ந‌ம‌க்கும் சொல்லிவைத்தாற் போல் ஒரு பிர‌ச்னை வ‌ரும். அவ‌ர்தான் சொல்லியிருக்காரேன்னு ந‌ம்ம்ம்பி அவ‌ரிட‌ம் போவோம் "ஒரு சின்ன‌ இஷ்யூ உங்க‌கிட்ட‌ பேச‌ணும்". ம‌டிக்க‌ணிணியை பார்த்த‌ப‌டியே சொல்லுவார் "கொஞ்ச‌ம் பிஸியா இருக்கேன்பா அப்புற‌ம் நானே கூப்பிட‌றேன்". கொஞ்ச‌ம் அவ‌ர் ம‌டிக்க‌ணிணி திரையை எட்டிப் பார்த்தால் மாயாஜால் ஆன்லைன் புக்கிங் அவ‌ரை வ‌ர‌வேற்றுக்கொண்டிருக்கும். நீங்க‌ளே சொல்லுங்க‌ என‌க்கு அப்போ ஒரு குத்து விட‌ணும்னு தோணுமா தோணாதா...

#10, 15 நாள் ஃபேமிலியோடு வெளிநாட்டுக்கு வெக்கேஷ‌ன் போய் திரும்பியிருப்பார். நாம போய் நாலு நாள் லீவு வேணும், ஃபேமிலியோட‌ திருப்ப‌தி போறேன் ஒரு சின்ன‌ வேண்டுத‌ல்னு இவ‌ர்கிட்ட‌ வேண்டுத‌ல் வெச்சா கூலா திருப்பி கேட்பார்.."ஏம்பா இதெல்லாம் வீக் எண்ட்ல‌ வெச்சுக்க‌லாம்ல‌". டேமேஜ‌ர்க‌ளா! இப்ப‌டிலாம் இருந்தா சாமியே க‌ண்ணை குத்திடும்!

#அப்ரைச‌ல். ஒன் டூ ஒன்னில் சொல்லுவார்.."இத‌ப்பாருப்பா இந்த‌ ரிஸ‌ஷ‌ன் டைம்ல‌யும் உன‌க்குதான் டீம்ல‌யே அதிக‌மா போட்டிருக்கேன் யார்கிட்ட‌யும் சொல்லிக்காத‌". சிவாஜியின் க‌ண்க‌ள்ல வெளியே வ‌ர‌ட்டுமா வேண்டாமான்னு துடிச்சுட்டிருக்குற கிளிச‌ரின் மாதிரி ந‌ம்ம க‌ண்லேயும் க‌ண்ணீர் துடிச்சுக்கிட்டிருக்கும். வெளியே வந்தா கூட இருக்கற டீம் மெம்ப‌ர் சொல்லுவான் "ம‌ச்சான் இந்த‌ அப்ரைச‌ல்ல‌ என‌க்குதான் அதிக‌மா போட்டிருக்காராம், யார்கிட்டேயும் சொல்லாத‌ன்னு சொல்லிருக்காரு. நான் உன்கிட்ட‌ ம‌ட்டும்தான் சொல்லியிருக்கேன், உன‌க்குள்ளேயே மேட்ட‌ர‌ வெச்சிக்கோ". அப்போ ந‌ம்ம‌ டேம்ஸை க‌ட்டிப்போட்டு, ஒரே ட‌ய‌லாகை எல்லார்கிட்டேயும் சொல்லுவியா சொல்லுவியான்னு கேட்டுகிட்டே ரெண்டு கைல‌யும் ர‌த்த‌ம் வ‌ர்ற‌ வ‌ரைக்கும் குத‌த‌ணும்.

#ரெண்டு நாள் ம‌ழை பெய்தாலே வீட்டு ப‌க்க‌த்தில் ஒரு மினி நீச்ச‌ல் குள‌ம் உருவாகிடும். ச‌ரி லீவு போடவேணாம்னு க‌ஷ்ட‌ப்ப‌ட்டு நீந்தி ஆஃபிஸுக்கு வ‌ந்தா, பெருசா க‌ண்டுபுடிச்சுட்ட‌ மாதிரி ஷெர்ல‌க் ஹோம்ஸ் ரேஞ்சுக்கு முக‌த்தை வெச்சுகிட்டு கேட்பார், "ஏம்பா செப்ப‌ல்ல‌ வ‌ந்திருக்க‌....". காதை க‌டிக்க‌க்கூடாது ஆனா மைக் டைச‌னா ஒரு நிமிஷ‌ம் மாற‌ணும்னு தோணும் பாருங்க‌..ஸ்ஸ்ஸ்!

#ச‌த்ய‌ம்..ச‌னிக்கிழ‌மை..காதலிகூட ச‌ந்தோஷ‌மா ஒரு நூன் ஷோ, சாயங்காலமா மெரினா, முடிச்சதும் கேண்டில் லைட் டின்னர்ன்னு ப்ளான் ப‌ண்ணி க‌ன‌வோடு அந்த‌ வார‌ இறுதிக்குக் காத்திட்டிருப்போம். என்ன‌ டிர‌ஸ், எவ்வ‌ளோ மேக்க‌ப் ன்னு அவ‌ளும் முடிவு செஞ்சிருப்பா. வெள்ளிக்கிழ‌மை சாயங்காலம் டீம் மீட்டிங் போட்டு "Guys, we are working tomorrow" ன்னுவார். அதுக்கு ச‌(னி)ரின்னு சொல்லுவோம். ஆனா காத‌லி நம்ம மூஞ்சிலேயே நாளைக்குத் துப்புவாளேன்னு பயம் வரும். "நாளைக்கு நான் ஆஃபிஸுக்கு வ‌ந்தா எவ்ளோ பிர‌ச்னை தெரியுமாய்யா என் வாழ்க்கைல‌" ன்னு க‌த‌றிக் க‌த‌றி அழுதுட்டே குத்த‌ணும் போல‌ருக்கும்!

#பதிவுலகமே எழுதுதே நாம எழுதினா என்ன ஆகிடப் போகுதுன்னு இந்தப் பதிவ ஜாலியா எழுதிருக்கேனே. இதை அவர் பார்த்துட்டுக் கத்துக் கத்துன்னு கத்துவாரு பாருங்க. அப்போ நம்ம கை வலிக்குற வரைக்கும் அவர் மூஞ்சில குத்தத் தோணும்.

இந்தப்ப‌திவு என் டேமேஜ‌ர் க‌ண்ல ப‌டாம‌ இருந்தா இதை ஆர‌ம்பிச்சு வெச்சவருக்கு மொட்டைய‌டிச்சு, அடுத்து எழுதினவ‌ருக்குக் காது குத்தி, அப்புறமும் தொட‌ர்ந்த‌வ‌ங்க நாக்குல வேல் குத்தி தேர் இழுக்க‌ வைக்கிறேன்னு ப்ளாக்காத்த அம்ம‌ன்கிட்ட வேண்டிக்குறேன்.

Sunday, July 04, 2010

இதுவ‌ல்ல‌வோ வாடிக்கையாள‌ர் சேவை!

உங்க‌ள் அலைபேசியை யாரேனும் 'அடித்து'விடுகிறார்க‌ள் அல்ல‌து தெரியாம‌ல் நீங்க‌ளே தொலைத்துவிடுகிறீர்க‌ள். இந்த‌ சூழ்நிலையில் உட‌னே நீங்க‌ள் என்ன‌ செய்வீர்க‌ள்? வாடிக்கையாள‌ர் சேவை மைய‌த்தைத் தொட‌ர்பு கொண்டு உங்க‌ள் 'சிம்'மை ப்ளாக் செய்ய‌ சொல்வீர்க‌ள் ச‌ரியா?

சென்ற‌ வார‌ம் இதையேதான் என் ந‌ண்ப‌ரும் அவ‌ர‌து வோட‌ஃபோன் இணைப்பு பெற்ற‌ அலைபேசியை தொலைத்த‌போது செய்தார். சேவை மைய‌ அதிகாரியும் ந‌ண்ப‌ரின் அலைபேசி விப‌ர‌ங்க‌ளை கேட்டு அறிந்து கொண்டு அவ்வாறே செய்வ‌தாக‌ உறுதி அளித்தார். பின்பு யோசித்து பார்க்கையில் ந‌ண்ப‌ர்க‌ள், உற‌வின‌ர்க‌ள், வ‌ங்கி, அலுவ‌ல‌க‌ம் என‌ ப‌ல‌ இட‌ங்க‌ளில் இந்த‌ எண்ணை கொடுத்திருப்ப‌தால், இதே எண்ணை மீண்டும் வாங்கினால் ந‌ன்றாக‌ இருக்குமென‌ தோன்றியிருக்கிற‌து ந‌ண்ப‌ருக்கு. மீண்டும் சேவை மைய‌ அதிகாரியுட‌ன் தொட‌ர்பு கொண்டு இதே எண் வேண்டுமென்றால், என்னென்ன‌ வ‌ழிமுறைக‌ள் பின்ப‌ற்ற‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ கேட்ட‌றிந்தார்.


ந‌ண்ப‌ர் இருக்குமிட‌ம் குரோம்பேட்டை. என‌வே சேவை மைய‌ அதிகாரி, குரோம்பேட்டையிலுள்ள‌ வோட‌ஃபோன் அலுவ‌ல‌க‌த்திலேயே புதிய‌ 'சிம்'மை பெற்றுக்கொள்ள‌லாம் என‌ தெரிவித்தார். மேலும் அவ‌ர் தெரிவித்த‌ சில‌ விவ‌ர‌ங்க‌ள்...

1. குரோம்பேட்டையிலுள்ள‌ வோட‌ஃபோன் அலுவ‌ல‌க‌த்தின் வேலை நேர‌ம் காலை 10 முத‌ல் இர‌வு 8 வ‌ரை. இந்த‌ நேர‌த்திற்குள் எப்போது சென்றாலும் நீங்க‌ள் வாங்கிக்கொள்ள‌லாம்

2. இர‌ண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்ப‌ட‌ங்க‌ள்

3. குடியிருக்கும் இருப்பிட‌த்திற்கான‌ அத்தாட்சி

4. அலுவ‌ல‌க‌ அடையாள‌ அட்டையின் ஜெராக்ஸ் காப்பி (சியூஜி க‌னெக்ஷ‌ன் என்ப‌தால்)

5. புதிய‌ 'சிம்'முக்கான‌ கட்ட‌ண‌ம் ரூ.50

6. புதிய‌ 'சிம்' ஆக்டிவேட் ஆக‌ 24 ம‌ணி நேர‌ம் ஆகும்


காலை 11 ம‌ணிக்கு அலுவ‌ல‌க‌ம் வ‌ர‌வேண்டுமென்ப‌தால், ந‌ண்ப‌ர் காலை 10:15க்கே வோட‌ஃபோன் அலுவ‌ல‌க‌த்திற்குச் சென்று விட‌, பின்புதான் தெரிந்த‌து.

1. குரோம்பேட்டையிலுள்ள‌ வோட‌ஃபோன் அலுவ‌ல‌க‌த்தின் வேலை நேர‌ம் காலை 11 முத‌ல் இர‌வு 9 வ‌ரை. இத‌னைத் தெரிவித்த‌வ‌ர் வெளியே நின்றிருந்த‌ செக்யூரிட்டி. 10 ம‌ணிக்கே அவ‌ர்க‌ள் அலுவ‌ல‌க‌த்தைத் திற‌ந்து விட்டாலும், வாடிக்கையாள‌ர்க‌ளை உள்ளே அனும‌திக்க‌வில்லை. வ‌ந்திருந்த‌ வாடிக்கையாள‌ர்க‌ளை வெளியே வெயிலில் சாலையிலேயே நிற்க‌ வைத்த‌ன‌ர்.

2. 11 ம‌ணிக்கு உள்ளே சென்ற‌பின் த‌ன‌து பிர‌ச்னையை எடுத்துக் கூறி, த‌ன‌து இர‌ண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்ப‌ட‌ங்க‌ளைக் கொடுக்க‌, அவ‌ர்க‌ள் புகைப்ப‌ட‌ம் தேவையில்லை என்ற‌ன‌ர்!

3. குடியிருக்கும் இருப்பிட‌த்திற்கான‌ அத்தாட்சி......தேவையில்லை

4. அலுவ‌ல‌க‌ அடையாள‌ அட்டையின் ஜெராக்ஸ் காப்பி (சியூஜி க‌னெக்ஷ‌ன் என்ப‌தால்)......அதுவும் தேவையில்லை

5. புதிய‌ 'சிம்'முக்கான‌ க‌ட்ட‌ண‌ம் ரூ.50......இது ம‌ட்டும் ச‌ரி

6. புதிய‌ 'சிம்' ஆக்டிவேட் ஆக‌ எடுத்துக்கொள்ளும் நேர‌ம்...15 நிமிட‌ங்க‌ள்


அவ‌ர்க‌ள் புகாரை கேட்ட‌தும் பெயரையும், பிற‌ந்த‌ தேதியையும் ம‌ட்டுமே கேட்ட‌ன‌ர். சில‌ நிமிட‌ங்க‌ளில் ப‌ழைய‌ எண்ணிலேயே புதிய‌ சிம் கிடைத்த‌து. ந‌ண்ப‌ருக்கு ம‌கிழ்ச்சி! They lived happily ever after என்ப‌து போல் இத்துட‌ன் இப்ப‌திவை முடித்துவிட‌லாம்தான்.
ஒன்று ம‌ட்டும் ம‌ன‌தை உறுத்துகிற‌து. அதென்ன‌ ப‌ண்பு..வ‌ந்திருக்கும் வாடிக்கையாள‌ர்க‌ளை உள்ளே அழைத்து அம‌ர‌வைக்காம‌ல், வெளியே சாலையில் நிற்க‌ச்செய்வ‌து? நாங்க‌ளென்ன‌ உங்க‌ள் வீட்டு செல்ல‌ப்பிராணிக‌ளா..எப்போது உண‌வு கிடைக்கும் என்று உங்க‌ளையே பார்த்து வாலாட்டிக்கொண்டு கிட‌க்க‌.

வாடிக்கையாள‌ர்க‌ளை க‌வ‌ர்வ‌த‌ற்கு, ப‌ல் தேய்ப்ப‌து முத‌ல் இர‌வு போர்வை போர்த்தி விடும் வ‌ரை பின்தொட‌ரும் நாய்க்குட்டி விள‌ம்ப‌ர‌ம், ஜுஜுக்க‌ளின் குறும்புக‌ள் என‌ இவ‌ற்றிலெல்லாம் க‌வ‌ன‌ம் செலுத்தி ர‌சிக்க‌ வைப்ப‌வ‌ர்க‌ள் அடிப்ப‌டை ம‌னித‌ப் ப‌ண்பு கூட‌ தெரியாம‌ல் இருப்ப‌வ‌ர்க‌ளை வாடிக்கையாள‌ர் சேவைப் ப‌ணியில் அம‌ர்த்தியிருப்ப‌து வேடிக்கை.

இதை நுக‌ர்வோர் நீதிம‌ன்ற‌த்திற்கு கொண்டு செல்ல‌லாம் என்றெண்ணினால் வ‌ழ‌க்கு இழுத்த‌டிக்குமோ என்ற‌ அச்ச‌மே அந்த‌ எண்ண‌த்திற்குத் த‌டையாய் நிற்கிற‌து. இதுபோல‌ ஒரு எண்ண‌ம் ம‌ன‌தில் தோன்ற‌ கார‌ண‌மாயிருக்கும் இந்திய‌ நீதித்துறையே, ஐ ல‌வ் யூ சோ ம‌ச்!

வெளியே ஸ்ப்ரைட் விலை 7 என்றால் கோய‌ம்பேடு பேருந்து நிலைய‌த்தில் ம‌ட்டும் 10. இன்னும் என்னென்ன‌ விஷ‌ய‌ங்க‌ளுக்கு எத்த‌னை இட‌ங்க‌ளில்தான் அனுச‌ரித்துக் கொண்டே போக‌வேண்டும்? மார்க்கெட்டில் புதிதாக‌ அறிமுக‌மாகும்போது கும்பிடு போட்டு வ‌ர‌வ‌ழைத்து, பின் அவ‌ர்க‌ள் எவ்வ‌ள‌வு குட்டினாலும் தாங்கிக் கொள்வ‌தில் ம‌ட்டும் முன்னேறிக் கொண்டே இருக்கிறோம். எங்க‌ளின் ச‌கிப்புத்த‌ன்மையை இன்னும் ஒரு ப‌டி உய‌‌ர்த்திய‌ வோ(ட்)ட‌ஃபோனுக்கு நெஞ்சார்ந்த ந‌ன்றி!

Thursday, July 01, 2010

சென்னை சாலைக‌ளுக்குத் த‌மிழில் பெய‌ர் மாற்ற‌ம்

இரு வார‌ங்க‌ளுக்கு முன்.......வ‌ழ‌க்க‌ம் போல் இர‌வு தாம‌த‌மாக‌த் தூங்கி, காலை தாம‌த‌மாக‌ எழுந்து அலுவ‌ல‌க‌த்திற்கு ப‌ர‌ப‌ர‌வென‌ ப‌ற‌ந்துகொண்டிருந்தேன். ச்சே இன்னைக்காவ‌து ரொம்ப‌ நேர‌ம் புக் ப‌டிக்காம‌ சீக்கிர‌ம் ப‌டுக்க‌ணும் என்று ப‌ல‌ நாளாக‌ எடுத்துக்கொண்டிருக்கும், ஆனால் ஒரு நாளும் நிறைவேற்ற‌ முடியாத‌ ச‌ப‌த‌த்தை மீண்டும் எடுத்துக்கொண்டே எஃப்எம் ஆன் செய்தேன்.

ரேடியோ மிர்ச்சியில் சென்னை மேய‌ர் மா.சுப்பிர‌ம‌ணிய‌ன், "க்ரீம்ஸ் ரோட், டெய்ல‌ர்ஸ் ரோட், ஸ்டெர்லிங் ரோட், ஜோன்ஸ் ரோட் உட்ப‌ட‌ 50 சாலைக‌ளைத் த‌மிழில், த‌மிழ‌றிஞ‌ர்க‌ள் பெய‌ரில் பெய‌ர் மாற்ற‌ம் செய்ய‌வுள்ளோம்" என்று செம்மொழி மாநாட்டுக்கு இங்கே ப‌ட்ட‌ர்ஃப்ளை எஃபெக்ட்டை...ம‌ன்னிக்க‌வும்..ப‌ட்டாம்பூச்சி விளைவை நிக‌ழ்த்திக்காட்டினார்.

ஹோட்ட‌லில் பூரி கொஞ்ச‌ம் உப்ப‌லாக‌ இல்லாவிட்டால், இந்த‌ உப்ப‌ல் பிர‌ச்னையை ப‌திவாக‌ எழுத‌லாமா என்று யோசிப்ப‌வ‌ன், சாலைக‌ளின் பெய‌ர் மாற்ற‌ அறிவிப்பைக் கேட்டுவிட்டு சும்மாவா இருப்பேன்?ஏன் மாற்ற‌ வேண்டும்?

ப்ளாக் & ஒயிட் கால‌த்தில், வெள்ளைக்கார‌ 'தொர‌'யின் குதிரை வ‌ண்டியை ஓட்டிய‌த‌ற்காக‌ அவ‌ரின் பெய‌ரில் ஒரு சாலை, புக‌ழ் பெற்ற‌ க‌ட்டிட‌த்தை க‌ட்டிய‌த‌ற்காக‌ கொத்த‌னாரின் பெய‌ரில் ஒரு சாலை என்று சென்னையில் ப‌ல‌ சாலைக‌ள் 'தொர‌' கால‌த்து பெய‌ர்க‌ளிலேயே அமைந்துள்ள‌ன‌. காந்தி, காம‌ராஜ‌ர், அண்ணா என்று சாதித்த‌ ப‌ல‌ த‌லைவ‌ர்க‌ளின் பெய‌ரில் ஆங்காங்கே சாலைக‌ள் இருந்தாலும், ஸ்டெர்லிங் ரோட், எல்டாம்ஸ் ரோட், மில்லர்ஸ் ரோட், பிளவர்ஸ் ரோட், டெய்லர்ஸ் ரோட், பட்டுள்ளாஸ் ரோட், உட்ஸ் ரோட், கிரீம்ஸ் ரோட், போக் ரோட், ஜோன்ஸ் ரோட் என‌ பெரும்பான்மையாக‌ இருப்ப‌து 'பீட்ட‌ர்'ஸ் ரோட்தான்.

வ‌ள்ளுவ‌ர் சாலை, பார‌திதாச‌ன் சாலை, க‌ண்ண‌தாச‌ன் சாலை என‌ ந‌ம் சாலைக‌ளுக்கு நாம் த‌மிழில் பெய‌ர் வைக்காம‌ல், இங்கிலாந்தில் எலிச‌பெத் ராணி குடியிருக்கும் சாலைக்கா த‌மிழில் பெய‌ர் வைக்க‌ முடியும்? ந‌ம் பிள்ளைக‌ளுக்கு சுந்த‌ர், ராம், பாலாஜி, ச‌ங்க‌ர், ஹேமா, ரேணுகா, லாவ‌ண்யா, க‌ல்ப‌னா என்றுதான் பெய‌ர் வைக்கிறோம். வில்லிய‌ம் ஸ்மித், க்ரெக் பெல்ட்ஸ், டேம‌ன் ஆன்ட‌ர்ச‌ன் என்ற‌ல்ல‌. த‌ய‌வுசெய்து இதில் ம‌த‌த்தை இழுக்க‌ வேண்டாம் ப்ளீஸ்...நாம் குடியிருக்கும் சாலைக்கு ம‌ட்டும் ஏன் பெய‌ர் த‌மிழில் இருக்கக்கூடாது?

அப்ப‌டியெனில் ஸ்டாலின் அவ‌ர் பெய‌ரை மாற்றிக்கொள்வாரா என்றெல்லாம் கேட்க‌வேண்டாம். அவ‌ருக்கு ஏன் அந்த‌ பெய‌ர் வைக்க‌ப்ப‌ட்ட‌து என்ப‌தை க‌லைஞ‌ர் எவ்வ‌ள‌வோ மேடைக‌ளில் சொல்லிவிட்டார். ஆத‌லால் புதிதாக‌ அரிசியை எடுத்து போட்டு அரைக்க‌ முய‌லுவோம்.

மாற்றினால்?

அர‌சு நினைத்தால் ஒரே இர‌வில், ஒவ்வொரு சாலையிலும் இருக்கும் போர்டுக‌ளில், புதிய‌ ம‌ஞ்ச‌ள் பெயிண்ட் அடித்து, க‌ருப்பு வ‌ண்ண‌த்தில் அழ‌கு த‌மிழில் பெய‌ர் மாற்றி எழுதிவிட்டு போய்விட‌லாம். மெட்ராஸை சென்னையாக‌ மாற்றிய‌வ‌ர்க‌ளுக்கு இது ஒரு விஷ‌ய‌மே அல்ல‌. ஆனால் ஒரு சாதார‌ண‌ குடிம‌க‌ன் ரேஷ‌ன் அட்டை, வாக்காள‌ர் அடையாள‌ அட்டை, வ‌ங்கி க‌ண‌க்கு புத்த‌க‌ம், தொலைபேசி பில், கேஸ் ஏஜென்சி, பாஸ்போர்ட், அலுவல‌க‌ம், ப‌ள்ளி என‌ த‌ன்னுடைய‌ முக‌வ‌ரி கொடுத்திருக்கும் ஒவ்வொரு இட‌த்திற்கும் போய் சாலையின் பெய‌ரை மாற்றிக்கொண்டா இருக்க‌முடியும்? இந்த‌ பிர‌ச்னையை ச‌மாளிக்க‌ அர‌சு பொதும‌க்க‌ளுக்கு எந்த‌ வித‌த்தில் உத‌வி செய்ய‌ப்‌ போகிற‌து?

மெட்ராஸ் என்ப‌தை சென்னை என்று மாற்றினாலும், இன்ன‌மும் சென்னை த‌விர்த்து ப‌ல‌ ஊர்க‌ளில் மெட்ராஸ்தான். 'பைய‌ன் மெட்ராஸ்ல‌ வேலைல‌ இருக்கான்பா', 'பொண்ணு மெட்ராஸ்ல‌ பெரிய‌வ‌ வீட்ல‌ த‌ங்கி ப‌டிக்க‌றா', 'ம‌ச்சி இங்க‌ ஏன்டா ட்ர‌ஸ் எடுக்க‌ற‌, மெட்ராஸ்ல‌யே எடுக்க‌ வேண்டிய‌துதானே' என்று சென்னையை விட‌ மெட்ராஸ்க‌ள்தான் புழ‌ங்கிக் கொண்டிருக்கின்ற‌ன‌.

இந்த‌ பெய‌ர் மாற்ற‌ விஷ‌ய‌த்தில் சென்னைக்கு முத‌ன்முறை வ‌ருப‌வ‌ர்க‌ள் ம‌ட்டும‌ன்றி ம‌ற்ற‌ எல்லோரையும் விட‌ அதிக‌மாக‌ அவ‌திப்ப‌ட‌ப்போவ‌து த‌பால் துறையும், கொரிய‌ர் நிறுவ‌ன‌ங்க‌ளும். இவ‌ர்க‌ள்தான் ம‌ற்ற‌ எல்லோரையும் விட‌ அதிகமாக‌, பெய‌ர் மாற்றிய‌ சாலைக‌ளை க‌வ‌ன‌த்தில் கொள்ள‌ வேண்டிய‌வ‌ர்க‌ள். இவ‌ர்க‌ளே விழி பிதுங்கினால், பாதிக்க‌ப்ப‌ட‌ப்போவ‌து நாம்தான். 'புள்ளி ராஜா'வையும், 'தில்லு துர‌'வையும் வெகுவாக‌ விள‌ம்ப‌ர‌ப்ப‌டுத்தி, ம‌க்க‌ளிடையே பிர‌ப‌ல‌ம‌டைய‌ச் செய்த‌து போல், பெய‌ர் மாற்ற‌ம் செய்த‌ சாலைக‌ளின் புதிய‌ பெய‌ர்க‌ள், ப‌ழைய‌ பெய‌ர்க‌ள் ஆகிய‌வ‌ற்றை ஆங்காங்கே பேன‌ர்க‌ள் வைத்து விள‌ம்ப‌ர‌ப்ப‌டுத்தினால் ப‌ய‌னுள்ள‌தாக‌ இருக்கும்.

நீ இருக்க‌ற‌ தெரு பெய‌ரை மாத்திட்டாங்க‌ளா, அத‌னால‌தான் இப்ப‌டி குதிக்க‌றியான்னு கேக்காதீங்க‌. நான் குடியிருக்கும் தெரு ஒரு ப‌ழைய‌ த‌மிழ் ந‌டிகையின் பெய‌ரில் இருப்ப‌தால் அதை க‌ண்டிப்பாக‌ மாற்ற‌ மாட்டார்க‌ள்.

மேய‌ர் சார், த‌மிழில் பெய‌ர் மாற்ற‌ம்லாம் ந‌ன்றாக‌த்தான் இருக்கிற‌து. ஒரு நாள் ம‌ழை பெய்தாலே சாலையெல்லாம் மினி நீச்ச‌ல் குள‌மாக‌ மாறிவிடுகிற‌தே. அதுவும் மே மாத‌த்தில் பெய்த‌ லேசான‌ ம‌ழைக்கே. அப்போது போர்டுக‌ளில் சாலையை நீக்கிவிட்டு, காம‌ராஜ‌ர் நீச்ச‌ல் குள‌ம், பார‌திதாச‌ன் நீச்ச‌ல் குள‌ம் என்றா பெய‌ர் மாற்ற‌ம் செய்வீர்க‌ள்? கொஞ்ச‌ம் பார்த்து செய்ங்க‌ சார்!


Sunday, June 27, 2010

ர‌ஹ்மானின் ராக‌ங்க‌ள் - 1

ஏ.ஆர்.ர‌ஹ்மான்

இந்த‌ பெய‌ருக்குத்தான் எத்த‌னை வ‌சீக‌ர‌ம். 'சின்ன‌ சின்ன‌ ஆசை'யை எல்லோரும் ர‌சிக்க‌ ஆர‌ம்பித்திருந்த‌‌ நேர‌ம். நானோ த‌ட‌த‌ட‌க்கும் இசையில் அமைந்திருந்த‌ 'ருக்கும‌ணி ருக்கும‌ணி'க்காக‌வும், ஆர‌ம்பிக்கும்போதே மன‌தை ம‌ய‌க்கிய‌ 'காத‌ல் ரோஜாவே'வுக்காக‌வும், ம‌ன‌தில் ர‌ஹ்மானுக்காக‌ ஒரு நிலையான‌ சிம்மாச‌ன‌த்தை போட்டு வைத்தேன். ஆர‌ம்ப‌த்தில் சில‌ ப‌த்திரிக்கைக‌ள் ர‌குமான் என்றே எழுத‌, முத‌ல் ரெண்டெழுத்தை நினைத்து கிடைத்த‌ அற்ப‌ ச‌ந்தோஷ‌மும் சிம்மாச‌ன‌த்திற்கான‌ அதிமுக்கிய‌ கார‌ண‌ம் :)ர‌ஹ்மானை ர‌சிப்ப‌தால் ராஜாவை வெறுப்ப‌தில்லை நான். த‌மிழ் சினிமாவில் இசை என்று ஆர‌ம்பித்தால், கே.வி.ம‌ஹாதேவ‌ன், விஸ்வ‌நாத‌ன் ராம‌மூர்த்தி, இளையாராஜா, ர‌ஹ்மான் என்றுதான் சொல்வேன். இவ‌ர்க‌ள் ஒவ்வொருவ‌ரும் இசை(யுல‌கை) ஆண்ட‌வ‌ர்க‌ள். ராஜாவும் ச‌ரி, ர‌ஹ்மானும் ச‌ரி தான் வ‌ருவ‌த‌ற்கு முன்பிருந்த‌ இசையை, த‌மிழ‌ர்க‌ளின் இசை ர‌ச‌னையை வேறு த‌ள‌த்திற்கு கொண்டு சென்ற‌ன‌ர். ஹாரிஸ், யுவ‌ன், விஜ‌ய் ஆண்ட‌னி, ஜி.வி.பிர‌காஷ், ம‌ணிச‌ர்மா ஆகியோரின் இசையையும் ர‌சிக்கிறேன். ஆனால் ர‌ஹ்மான் போட்டு கொடுத்த‌ பாதையில்தான் இன்றிருக்கும் ப‌ல‌ ஹிட் இசைய‌மைப்பாள‌ர்க‌ள் ப‌ய‌ணிக்கின்ற‌ன‌ர் என்ப‌து ம‌று(றை)க்க‌ முடியாத‌ உண்மை.

ர‌ஹ்மானின் இசையை 'ரோஜா' முத‌ல் இன்றைய‌ 'இராவ‌ண‌ன்' வ‌ரை க‌வ‌னித்து ர‌சித்து வ‌ந்திருக்கிறேன். உண்மையாக‌ சொல்கிறேன். ஸ்ல‌ம்டாக் மில்லிய‌ன‌ர் கேட்ட‌போது, 'அட‌ப்பாவிங்க‌ளா இதுக்கேவா ஆஸ்க‌ர்?' என்றுதான் தோன்றிய‌து. ம‌ன‌தை ஈர்க்கும் இசையோ, ம‌ய‌க்கும் இசையோ ஸ்ல‌ம்டாக் மில்லிய‌ன‌ரில் இல்லை என்ப‌து என் எண்ண‌ம். 'ஜெய்ஹோ'வை விட‌ ர‌ஹ்மான் இசைத்த‌ சிற‌ந்த‌ பாட‌ல்க‌ள் ஏராள‌ம்.

இது ர‌ஹ்மானின் வாழ்க்கை ப‌ற்றிய‌ ப‌திவ‌ல்ல‌. நான் மிக‌வும் ர‌சித்த‌ ர‌ஹ்மானின் ப‌ல‌ பாட‌ல்க‌ளை ப‌கிர்ந்து கொள்ள‌வே இப்ப‌திவு. என‌க்குள் இருக்கும் சோம்பேறி அர‌க்க‌னை ச‌ம்ஹார‌ம் செய்து, இதை ஒரு தொட‌ராக‌ எழுத‌ விருப்ப‌ம். ஆனால் செய‌ல்ப‌டுத்துவ‌தில் எந்த‌ள‌வு முனைப்பாக‌ இருப்பேன் என்ப‌து என‌க்கே தெரிய‌வில்லை. பார்க்க‌லாம்.....


தாஜ்ம‌ஹால்.....க‌ண்ணை மூடி இப்ப‌ட‌த்தைப் ப‌ற்றி நினைத்து பார்த்தால் ச‌ட்டென்று ம‌ன‌தில் தோன்றுவ‌து, பார‌திராஜா, ம‌னோஜ், ரியாசென் ம‌ற்றும் 'சொட்ட‌ சொட்ட‌ ந‌னையுது தாஜ்ம‌ஹாலு' பாட‌ல். ஹீரோ பில்ட‌ப் பாட‌லான‌ 'திருப்பாச்சி அருவாளை தீட்டிகிட்டு வாடா வாடா' பாட‌லும், 'சொட்ட‌ சொட்ட‌ ந‌னையுது தாஜ்ம‌ஹாலு' பாட‌லும் ப‌ல‌முறை தொலைக்காட்சிக‌ளில் ஒளிப‌ர‌ப்ப‌ப்ப‌ட்டு எல்லோரையும் க‌வ‌ர்ந்த‌து.

ஆனால் கேட்ட‌ முத‌ல் முறையிலேயே நான் சொக்கிப் போன‌ பாட‌ல் 'குளிருது குளிருது'. அருவியில் வ‌ழிந்தோடும் நீரைப்போல் காத‌லையும், காம‌த்தையும் வ‌ரிக‌ளில் வ‌ழிந்தோட‌விட்டிருப்பார் க‌விஞ‌ர் வைர‌முத்து. வார்த்தைக‌ளை ஆதிக்க‌ம் செய்யாத‌ இசை. 'பூக‌ம்ப‌ வேளையிலும்' என்று ஹைபிட்சில் எகிறும்போது உன்னி பின்னியிருப்பார்.

ப‌ட‌ம்: தாஜ்ம‌ஹால்
பிண்ண‌ணி பாடிய‌வ‌ர்க‌ள்: உன்னி கிருஷ்ண‌ன், ஸ்வ‌ர்ண‌ல‌தா

ப‌ல்ல‌வி:

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடலிலே தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலின் உறவுகள் எரிவதில்லை

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி

ச‌ர‌ண‌ம் 1:

இதயத்தில் வலி ஒன்று வருது
உன் இமைகளின் முடி கொண்டு தடவு

நெஞ்சுக்குள்ளும் எரியுது நெருப்பு
இதை நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்பு

இது தண்ணீர் ஊற்றியா தீரும்
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்

தேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடமாறும்
பேரின்ப பூஜைகளே உன் பெண்மைக்கு பரிஹாரம்

மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும்
நம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும்

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி

ச‌ர‌ண‌ம் 2:

நெஞ்சுக்குழி விட்டு விட்டு துடிக்கும்
அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்

முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையா
அட முத்தமிட வேறு இடம் இல்லையா

மழைத்துளி மழைத்துளி தொல்லையா
அட அடைமழை காக்க எண்ணம் இல்லையா

சுற்றி எல்லாம் எரிகின்ற போதும்
நாம் இன்பம் கொள்வது தீது

அடி பூகம்ப வேளையிலும்
இரு வான்கோழி கலவிக்கொள்ளும்

தேகத்தை அணைத்து விடு
சுடும் தீக்கூட அணைந்துவிடும்

அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்
சுற்றி நின்றாடும் தீவண்ணம் அணைவது திண்ணம்

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடல் அலை தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலின் உறவுகள் எரிவதில்லை


Sunday, June 20, 2010

எழுத‌வா ஒரு க்ரைம் க‌தையை?

ஒரு ஊர்ல‌ என்று ஆர‌ம்பிக்கும் ப‌ழ‌க்க‌த்தை எப்போதோ விட்டுவிட்டேன். இப்போதெல்லாம் ஆர‌ம்பிக்கும்போதே சென்னைதான். ஆம்..சென்னை...சென்னையில் நானிருக்கும் ஏரியா..இந்த‌ பெய‌ரை ப‌த்து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் சொல்லியிருந்தால் அவுட் ஆஃப் த‌ சிட்டியா என்று ஏள‌ன‌மாக‌ பேசியிருப்ப‌ர். இப்போது அதே ஏரியாவில் சொந்த‌ வீடு என்று சொன்னால் ஒற்றை எழுத்துட‌ன் ஆச்ச‌ரிய‌மும் சேர்ந்து வ‌ரும் 'ஓ!'. இது முக்கிய‌ம‌ல்ல‌ இப்போது. எந்த‌ ஏரியாவாக‌ இருந்தால் என்ன‌, என்ன‌ சொல்கிறேன் என்று கேளுங்க‌ள். அது போதும்.

அழ‌கான‌ வீடு. மொட்டை மாடியில் எனக்கென‌ ஒரு அறை. யாரும‌ற்ற‌ த‌னிமை என‌க்கு இறைவ‌ன் அளித்த‌ வ‌ர‌ம். என் விருப்ப‌த்திற்கேற்ப‌ பாடுவேன், ஆடுவேன். சம‌ய‌ங்க‌ளில் க‌ண்ணாடியில் வெறித்து பார்த்துக்கொண்டிருப்பேன். ஏன் என‌ தெரியாது. யாரேனும் பார்த்திருந்தால் ச‌ரியான‌ சைக்கோ என்று சொல்லியிருப்ப‌ர். அது உண்மையாக‌க் கூட‌ இருக்க‌லாம். என‌க்குத் தெரியாது.

அறையினுள் என‌க்கென‌ ஒரு ரீடிங் டேபிள். புத்த‌க‌ங்க‌ள் வாசிப்ப‌த‌ற்கு, அழ‌கான‌ சிறு விள‌க்குட‌ன் அமைக்க‌ப்ப‌ட்டிருக்கும். சில‌ நாட்க‌ள் வாசித்துக்கொண்டே தூங்கிப்போயிருக்கிறேன். அலுவ‌ல‌க‌ம், வீடு, புத்த‌க‌ம் என்றுதான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்த‌து. எல்லாம் ஸ்வேதா வ‌ரும் வ‌ரை.

அலுவ‌ல‌க‌த்தில் எல்லோரிட‌மிருந்தும் ஒதுங்கியே இருப்ப‌வ‌ன் நான். ஏன்? கேள்வியெல்லாம் கேட்காதீர்க‌ள். என‌க்கு பிடிக்காது. நான் அப்ப‌டித்தான். திமிர் பிடித்த‌‌வ‌ன் என்று தோன்றுகிற‌தா? தோன்றும்தான். ஆனால் ஸ்வேதாவுக்கு தோன்ற‌வில்லை. அவ‌ளாக‌வே வ‌ந்து பேசினாள், அலுவ‌ல் ச‌ம்ப‌ந்த‌மான‌ ச‌ந்தேக‌ங்க‌ளைக் கேட்டாள், ஜோக்க‌டித்தாள், சிரித்தாள்..சிரிக்க‌வும் வைத்தாள். நான் சிரித்த‌தை பார்த்து‌ ப‌ல‌ருக்கும் ஆச்ச‌ரிய‌ம். யாரிட‌மும் ஒரு வார்த்தை அதிக‌ம் பேசாத‌வ‌ன் இப்போது ஒரு பெண்ணிட‌ம் சிரித்து பேசுகிறானே என்று.

இர‌வு வீட்டுக்கு வ‌ந்து க‌ண்ணாடி முன் நின்று ஸ்வேதாவிட‌ம் சிரித்த‌து போல் சிரித்து பார்த்தேன். கொஞ்ச‌ம் வ‌ழிந்திருக்கிறேன். என‌க்கு பிடிக்க‌வில்லை. நாளையிலிருந்து அவ‌ளிட‌ம் பேச‌க்கூடாது என்று முடிவு செய்தேன். அவ‌ள் சிரிக்க‌தானே வைத்தாள், ஏன் இத‌ற்கு இவ்வ‌ள‌வு கோப‌ம் என்று கேட்கிறீர்க‌ளா? போன‌ ப‌த்தியிலேயே சொன்னேன் கேள்வியெல்லாம் கேட்காதீர்க‌ள் என‌க்கு பிடிக்காதென்று. ம‌றுப‌டியும் கேட்டால் என்ன‌ அர்த்த‌ம்? ஐ'ம் ரிய‌லி டாம் சீரிய‌ஸ்!

ம‌றுநாள் அலுவ‌ல‌க‌ம் சென்ற‌போது அவ‌ளே வ‌ந்து ஹாய் என்றாள். மானிட்ட‌ரிலிருந்து க‌ண் வில‌க்காம‌ல் மிக‌ மெல்லிய‌ குர‌லில் ஹ‌லோ என்றேன்.


உன‌க்காக‌ ஒரு கிஃப்ட் வாங்கி வ‌ந்துருக்கேன். என்ன‌ன்னு க‌ண்டுபுடி

என‌க்கு கிஃப்ட் வேண்டாம்

உட‌னே கோப‌ம் வ‌ந்துடுமே. டேய் ராஸ்க‌ல், கொலையுதிர் கால‌ம் வாங்கிட்டு வ‌ந்திருக்கேன்டா, சுஜாதா எழுதின‌து!

இப்போது என் பார்வை மானிட்ட‌ரின் மேலில்லை. உத‌டும் வல‌து க‌ன்ன‌த்தை நோக்கி அரை இஞ்ச் ந‌க‌ர்ந்த‌து. சுஜாதா. என் ஆத‌ர்ச‌ம். என‌க்கும்.

கொஞ்ச‌ம் ந‌ல்லாத்தான் சிரியேன்...இந்தா ப‌டிச்சிட்டு சொல்லு

தேங்க்ஸ்

நான்கு நாட்க‌ள் அலுவ‌ல் அதிக‌ம். மிக‌ அதிக‌ம். இந்த‌ நான்கு நாட்க‌ளில் அவ‌ள் பேசிய‌து மொத்த‌ம் எட்டு வார்த்தைக‌ள். தின‌மும் காலையில் 'ஹாய்'. மாலையில் 'பை'. என்னுடைய‌ வேலைக‌ளை நேற்றே முடித்துவிட்ட‌தால் இன்று என‌க்கெந்த‌ ப‌ணியும் இல்லை. வ‌ழ‌க்க‌ம் போல் த‌மிழ்ம‌ண‌த்திலும், த‌மிழிஷிலும் உல‌விக்கொண்டிருந்தேன். ஸ்வேதா வ‌ந்தாள்.

ஹாய்..என்ன‌டா எப்ப‌ பார்த்தாலும் ப்ளாகா? நாலு நாளா ச‌ரியாவே உங்கிட்ட‌ பேச‌லியே என்ன‌ன்னு ஏதாவ‌து கேட்டியா?

நீ பிஸி

நான் பிஸின்னா நீயா வ‌ந்து பேச‌மாட்டியா?

............

ச‌ரி விடு, கொலையுதிர் கால‌ம் ப‌டிச்சியா? எப்ப‌டியிருந்த‌து? என‌க்கு சொல்லு

புத்த‌க‌த்தை வாங்கிக் கொடுத்த‌வ‌ள். க‌தை கேட்கிறாள். சொன்னேன்.

நீ சொன்ன‌தே என‌க்கு ஒரு ப‌ட‌த்தை பார்த்த‌ மாதிரியிருக்கு. வாவ் என்ன‌மா சொல்றே! நீ ஏன் ஒரு க்ரைம் ஸ்டோரி எழுத‌க்கூடாது?

என‌க்கு அனுப‌வ‌மில்ல

எழுது. எழுத‌ ஆர‌ம்பிச்ச‌துக்க‌ப்புற‌ம் என்கிட்ட‌ உன்னோட‌ ட்ராஃப்ட்ஸ் குடு. க‌ரெக்ஷ‌ன்ஸ் தேவைப்ப‌ட்டா நான் சொல்றேன்

சாய‌ந்த‌ர‌ம் வீட்டுக்கு வா

வ்வாட்?! நீயா கூப்பிட‌ற‌! யூ ஆர் நாட் ஜோக்கிங் ரைட்?

ப‌தில‌ளிக்காம‌ல் மானிட்ட‌ரை வெறிக்க‌த் தொட‌ங்கினேன். சிரித்தாலும், ஏதோ திட்டிக்கொண்டே சென்றாள்.

மாலை ச‌ரியாக‌ ஆறும‌ணிக்கு வ‌ந்தாள். வீடு ந‌ல்லாருக்கு, என்ன‌ புக்ஸ்லாம் ப‌டிக்க‌ற‌, உன்னோட‌ டிவிடி க‌லெக்ஷ‌ன்ஸ் ந‌ல்லாருக்குப்பா..எல்லாமே க்ரைம் & சைக்க‌லாஜிக்க‌ல் த்ரில்ல‌ரா வெச்சிருக்க‌..வித்தியாச‌மா இருக்கு, என‌க்கும் சுஜாதான்னா ரொம்ப‌ புடிக்கும் அண்ட் ஷெல்ட‌ன் ட்டூ, நீயே ச‌மைப்பியா, கிச்ச‌ன்லாம் கூட‌ சுத்த‌மாயிருக்கு என்று அவ‌ள்தான் பேசிக்கொண்டிருந்தாள். பேசிக்கொண்டேயிருந்தாள். வ‌ழ‌க்க‌ம் போல்.


மீண்டும் ஆர‌ம்பித்தாள்.

உன்னோட‌ டேஸ்ட்டுக்கு ஒரு க்ரைம் ஸ்டோரி எழுதுப்பா..ந‌ல்லா வ‌ரும்

என‌க்கு எழுத‌ வ‌ராது

அப்ப‌டி சொல்லாதே, ட்ரை ப‌ண்ணு. எல்லார்க்கும் ஒரு வித்தியாச‌மான‌ அனுப‌வ‌ம் இருக்கும். அதையே ஒரு க்ரைம் வியூவ்ல‌ திங்க் ப‌ண்ணு. அதை எழுத்துல‌ கொண்டு வா. இப்போ நான் ஒண்ணு சொல்றேன்....

சுவ‌ர்க் க‌டிகாரத்தில் ஒரே ஒரு ம‌ணி அடித்த‌து. ம‌ணி ஆற‌ரை.
ரீடிங் டேபிளில் ம‌டிக்க‌ணிணியை வைத்து த‌ட்ட‌ச்சு செய்ய‌ ஆர‌ம்பித்த‌போது ம‌ணி பார்த்தேன். ஆறு நாற்ப‌து. இப்போது ம‌ணி ஏழு. ஆவ‌லாக‌த் த‌ட்ட‌ச்சிக்கொண்டிருந்த‌தில் முத‌லில் தெரிய‌வில்லை. இப்போதுதான் காலில் ஏதோ ச‌ற்று பிசுபிசுவென‌ ஒட்டுவ‌து போலிருந்த‌து. ம்ம்..ஸ்வேதாவின் ர‌த்த‌ம்தான்.

ஆறு முப்ப‌திலிருந்து ஆறு நாற்ப‌து வ‌ரை என்ன‌ ந‌ட‌ந்த‌தென்று கேட்காதீர்க‌ள். கேள்வி கேட்டால் என‌க்கு பிடிக்காதென்று சொல்லியிருக்கிறேன். ஒரு க்ரைம் க‌தையை எழுது எழுது என‌ என்னை ந‌ச்ச‌ரித்த‌ ஸ்வேதா இப்போது உயிரோடு இல்லை. அவ‌ள் ர‌த்த‌ம் என் காலில் ப‌ட்ட‌து, என‌க்கு அருவ‌ருப்பாய் இருக்கிற‌து. நான் போய் கால் க‌ழுவி விட்டு வ‌ருகிறேன்.

அத‌ற்குள் நீங்க‌ள் யோசித்து சொல்லுங்க‌ள்.

எழுத‌வா ஒரு க்ரைம் க‌தையை?Friday, June 11, 2010

ஏனெனில்..ஏனெனில்..ஏனெனில்...

பேருந்தில் ந‌ட‌த்துன‌ரிட‌ம் காசு கொடுத்து ப‌ய‌ண‌ச்சீட்டு வாங்கும்போது அடிக்க‌டி ந‌ட‌க்கும் விஷ‌ய‌ம் இது. 5.50 ப‌ய‌ண‌ச்சீட்டுக்கு 10 ரூபாய் கொடுத்தால், 4 ரூபாய்தான் திருப்பி தருவார். எப்போதும் அவ‌ர் த‌ரும் பாக்கி சில்ல‌றையில் 50 காசு குறைவாக‌ இருக்கும். வெறும் 50 காசுதானே என்று நீங்க‌ள் சொன்னாலும், அது என் காசு. இருந்தாலும் அதை கேட்காம‌ல் விட்டுவிடுவேன், கேட்காம‌லிருப்ப‌து த‌ப்பென்று தெரிந்தும். ஏனெனில்...

____________________________________________________________________________

அதே பேருந்தில் இருக்கையில் அம‌ர்ந்திருப்பேன். ம‌ற்ற‌ இருக்கைக‌ளில் அம‌ர்ந்திருக்கும் எவ‌ரும் தூங்காம‌ல் இருப்ப‌ர். ஆனால் என் ப‌க்க‌த்தில் அம‌ர்ந்திருக்கும் ஆசாமி ம‌ட்டும் தூங்கி வ‌ழிந்து, அடிக்க‌டி என் தோளில் வ‌ந்து இடித்துக்கொண்டிருப்பார். நான் இன்னும் கொஞ்ச‌ம் த‌ள்ளி உட்கார்ந்து கொள்வேனே த‌விர‌ எதுவும் சொல்ல‌மாட்டேன். ஏனெனில்...


"இதுவே ப‌க்க‌த்துல‌ ஒரு பொண்ணு இருந்தா..." என்றெல்லாம் பின்னூட்ட‌ம் வேண்டாம் பாஸ். ப‌திலைத் தெரிந்துகொண்டே கேள்வியைக் கேட்டால் நானென்ன சொல்ல‌?...;))

____________________________________________________________________________

ஒரு முறை தி.ந‌க‌ருக்கு அவ‌ச‌ர‌மாக‌ செல்ல‌ வேண்டிய‌ சூழ்நிலை. ப‌ஸ் ஸ்டாப்பில் வெகு நேர‌மாய் நின்று கொண்டிருந்தேன். தி.ந‌க‌ருக்கு செல்ல‌ வேண்டிய‌ பேருந்துக‌ள் அனைத்தும்‌, கூட்ட‌ மிகுதியால் பைசா கோபுர‌ம் போல் ஒரு ப‌க்க‌மாய் சாய்ந்து கொண்டே வ‌ர‌, ச‌ரி ஆட்டோவில் போய்விட‌லாம் என்று முடிவு செய்தேன். சிறிது நேர‌த்தில் ஆட்டோ ஒன்று வ‌ர‌, நான் கேட்ப‌த‌ற்கு முன் அருகில் நின்றுகொண்டிருந்த‌வ‌ர் "டி.ந‌க‌ர் போக‌ணும்.....எவ்ளோ" என்று கேட்டார். அந்த‌ ஆட்டோ டிரைவ‌ர் ம‌ற‌ந்து, யூனிஃபார்மோடு ம‌ன‌சாட்சியையும் கழ‌ற்றி வைத்துவிட்டார் போல‌. ச‌ர்வ‌ சாதார‌ண‌மாக‌ "ஒன் ஃபிஃப்டி குடுங்க‌" என்றார். அந்த‌ ந‌ப‌ர் ஆட்டோ வேண்டாம் என்று சொல்லி ஒதுங்கி நின்று கொண்டார். அவ‌ருட‌ன் பேசி ஒரே ஆட்டோவை பிடித்து தி.ந‌க‌ருக்கு சென்று ஆட்டோ சார்ஜை ஷேர் செய்திருக்க‌லாம். ஆனால் நான் செய்ய‌வில்லை. ஏனெனில்...

____________________________________________________________________________


அடையார் ஆன‌ந்த‌ ப‌வ‌ன் ரெஸ்டார‌ண்ட்டுக்கு சென்று ஆசையாக‌ ஒரு ஆனிய‌ன் ர‌வாவை அள்ளி அள்ளி உள்ளே த‌ள்ளிக்கொண்டிருப்பேன். 80% முடித்த‌பின்பு மீத‌ம் இருக்கும் தோசைக்கு தொட்டுக்கொள்ள‌ சாம்பாரும் இருக்காது, ச‌ட்னியும் இருக்காது. ச‌ர்வ‌ரிட‌ம் கூப்பிட்டு கேட்டால், 'இம்மாத்துண்டு தோசைக்கு ஒரு க‌ப்பு சாம்பார் கேக்குதா' என்று அழ‌கு சென்னைத் த‌மிழில், பார்வையாலேயே ந‌ம் இராசி, ந‌ட்ச‌த்திர‌ம் கேட்காம‌ல் அர்ச்ச‌னை செய்வார். செய்தால் என்ன‌? என் ப‌சிக்கு சாப்பிடுகிறேன். என‌க்கு தேவை இர‌ண்டு க‌ப் சாம்பார், ச‌ட்னி என்றால் அவ‌ர் த‌ர‌வேண்டும். ஆனால் கேட்க‌மாட்டேன். வெறும் தோசையையே அள்ளி ம‌டித்து, ச‌மோசா ஷேப்புக்கு கொண்டு வ‌ந்த‌ பின், பூலோக‌த்தை வாயினுள் காட்டிய‌ க‌ண்ணன் போல் வாயைத் திற‌ந்து, வெற்றிலை போடுவ‌து போல் உள்ளே த‌ள்ளிவிடுவேன். ஏனெனில்...

____________________________________________________________________________

ஒரு அழ‌கான‌ பெண்ணை பார்த்து சைட் அடிக்கும்போது இருக்கும் தைரிய‌ம், அதே பெண்ணிட‌ம் முத‌ல் முறை பேசும்போது இருப்ப‌தில்லை. முத‌ல் முறை ம‌ட்டும். அது போல், பெற்றோரோ, உற‌வின‌ரோ அருகில் இருக்கும்போது, ஒரு பேஏஏஏர‌ழ‌கி க‌ட‌ந்து போனாலும், போக்கிரி விஜ‌ய் ரேஞ்சிற்கு முக‌த்தில் எந்த‌வித‌ ரியாக்ஷ‌னும் காட்டாம‌ல் இருப்ப‌துண்டு. ஏனெனில்...

____________________________________________________________________________

இன்று மெரீனாவில் காந்தி சிலை அருகே ப‌திவ‌ர் ச‌ந்திப்பு. அவ‌சிய‌ம் வ‌ர‌வும் என்று அனைத்து பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ளும் ப‌திவிட்டிருப்ப‌ர். அப்ப‌திவுக‌ளை ப‌டிப்ப‌தோடு ச‌ரி. ச‌ந்திப்பில் க‌ல‌ந்துகொள்வ‌தில்லை. ஆனால் 'ப‌திவ‌ர் ச‌ந்திப்பில் ந‌ட‌ந்த‌து என்ன‌' என்று ம‌றுநாள் அவ‌ர்க‌ள் எழுதியிருப்ப‌தை த‌வ‌றாம‌ல் ப‌டித்து, புகைப்ப‌ட‌ம் பார்த்து யார் யாரெல்லாம் ச‌ந்திப்பிற்கு சென்றிருந்தார்க‌ள் என்ப‌தையும், யார் யாரெல்லாம் ச‌ந்திப்பு முடிந்த‌வுட‌ன் "ஸ்பெஷ‌ல் டீ" குடிப்ப‌த‌ற்கு சென்றார்க‌ள் என்ப‌தையும் அறிந்துகொள்வேன். எழுத‌ ஆர‌ம்பித்து ஒரு வ‌ருட‌ம் ஆகியும், இன்னும் ஒரு முறை கூட‌ ப‌திவ‌ர் ச‌ந்திப்பிற்குச் சென்ற‌தில்லை. ஏனெனில்...


ஏனெனில்..ஏனெனில்..ஏனெனில்...


பேஸிக்க‌லி ஐ'ம் ஷை டைப் யூ நோ ;))


Thursday, June 10, 2010

டிச‌ம்ப‌ர் 2104....சென்னை - 2

டிச‌ம்ப‌ர் 2104....சென்னை முத‌ல் பாக‌ம்


டைம் மெஷினில் இருந்த‌ திரை டிச‌ம்ப‌ர் 26, 2054 என்று க‌ண்ண‌டித்துக்கொண்டிருந்த‌து. ச‌ரியாக‌ நேர‌ம் விடிய‌ற்காலை 4:10. டைம் மெஷின் இற‌ங்க‌ மெசேஜ் வாயிலாக‌ இட‌ம் கேட்க‌, திரையில் க்ருபாள‌னியை பார்த்தான் சுன‌ந்த‌ன். க்ருபாள‌னி அண்ணா சாலை என்று டைப் செய்ய‌ சொல்ல‌, அவ‌ர் சொன்ன‌தை த‌ட்டாம‌ல் கீபோர்டில் த‌ட்ட‌ச்சினான். எந்த‌வித‌ ச‌த்த‌முமின்றி மெதுவாக‌ டைம் மெஷின் மெள்ள‌ இற‌ங்கிய‌து. டைம் மெஷினில் 'இன்விஸிபிள்' ஆப்ஷ‌ன் இருந்த‌தால் அதை யாரும் கவ‌னிக்க‌வில்லை. விடிய‌ற்காலை நேர‌மாத‌லால் ம‌க்க‌ள் ந‌ட‌மாட்ட‌ம் அவ்வ‌ள‌வாக‌ இல்லை.

மெல்ல‌ மூவ‌ரும் சாலையில் இற‌ங்கி ந‌ட‌ந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் நின்றிருந்த‌ இட‌த்திற்கு எதிரே ஒரு ப‌ழ‌ம்பெரும் க‌ட்டிட‌ம் ஒன்று இருந்த‌து. அத‌ன‌ருகே சென்று பார்க்கும்போது, ஒரு டிஜிட்ட‌ல் திரையில் Good Morning...Welcome to Spencer Plaza என்ற‌ மெசேஜ் இட‌து புற‌த்திலிருந்து வ‌ல‌து புற‌த்திற்கு ஓடிக்கொண்டிருந்த‌து. மூவ‌ரும் சாலையின் ஓர‌மாக‌ ந‌ட‌ந்துகொண்டே சென்னையின் விடிய‌ற்காலை வாழ்க்கையை ர‌சித்துக்கொண்டிருந்த‌ன‌ர்.

காரை வானில் ஓட்டியே ப‌ழ‌க்க‌மிருந்த‌தால், இவ‌ர்க‌ள் எப்ப‌டிதான் சாலையில் ஓட்டுகிறார்க‌ளோ என்றெண்ணி மிகுந்த‌ ஆச்ச‌ரிய‌ம‌டைந்தான் சுன‌ந்த‌ன். ந‌டைபாதையின் அருகே ஒரு சிறிய‌ பூத் ஒன்று இருந்த‌து. அத‌னுள்ளே ஒரு சிறிய‌ தொடுதிரை இருந்த‌து. தொடுதிரையின் கீழே இன்றைய‌ செய்திக‌ள், சினிமா, அர‌சிய‌ல், விளையாட்டு என்று நான்கு சுட்டிக‌ள் தெரிய‌, சுன‌ந்த‌னுக்கு முத‌லில் செய்திக‌ளை அறியும் ஆர்வ‌ம் ஏற்ப‌ட்ட‌து. செய்திக‌ள் சுட்டியை தொட்ட‌வுட‌ன்

வ‌ரும் தேர்த‌லில் மீண்டும் எங்க‌ள் க‌ட்சியை ஆட்சியில் அம‌ர்த்தினால், அனைத்து ம‌க்க‌ளுக்கும், உய‌ர் ர‌க‌ காரும், த‌ங்க‌ள் விருப்ப‌த்திற்கு ஏற்ப‌ நிக‌ழ்ச்சிக‌ளை உருவாக்க‌ ஒரு சேன‌லும் இல‌வ‌ச‌மாக‌ வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் என்று முத‌ல்வ‌ர் உத‌ய‌நிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும்....

அடுத்து விளையாட்டு சுட்டியை தொட‌, அது ஒரு கிரிக்கெட் பேட்ஸ்மேனின் புகைப்ப‌ட‌த்தை ஒளிப‌ர‌ப்பிய‌து. புகைப்ப‌ட‌த்தில் அந்த‌ பேட்ஸ்மேன் த‌ன் ஹெல்மெட்டை க‌ழ‌ற்றி, பேட்டை உய‌ர்த்தி, ர‌சிக‌ர்க‌ளை நோக்கி காண்பித்த‌ப‌டி இருந்தார். புகைப்ப‌ட‌த்தின் கீழ், கொட்டை எழுத்தில் "என்னுடைய‌ ஆட்ட‌ம் இன்று திருப்தி த‌ரும் வ‌கையில் அமைந்திருந்த‌து. அத‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம் என்னுடைய‌ தாத்தா ச‌ச்சின் டெண்டுல்க‌ர்தான். அவ‌ர் கொடுத்த‌ சில‌ அறிவுரைக‌ளை பின்ப‌ற்றிய‌தால்தான் என்னால் அணிக்கு வெற்றி தேடித்த‌ர‌ முடிந்த‌து" என்று போட்டிருந்த‌து. மேலும் வேறெதையும் தெரிந்து கொள்ள‌ ஆர்வ‌மில்லாத‌தால், சுன‌ந்த‌னும், நான்சியும் மிட்டுவுடன் மீண்டும் டைம் மெஷினுக்கு திரும்பின‌ர்.

திரையை ஆன் செய்து, "மேம், இட்ஸ் சோ ஸ்ட்ரேஞ்ச், 2054ல‌ எல்லாரும் கீழே ரோட்ல‌ கார் ட்ரைவ் ப‌ண்றாங்க‌. ஹோட்ட‌ல்ஸ்லாம் நிறைய‌ மூடியிருக்கு. வொர்க்கிங் ஹ‌வ‌ர்ஸ் 6:00 டூ 11:00ன்னு போட்டிருக்காங்க‌. ஆனா ந‌ம்ம‌ 2104ல‌ பாருங்க‌, 24 ஹ‌வ‌ர்ஸும் எல்லாமே அவைல‌பிள்....திஸ் ஈஸ் ரிய‌லி எக்சைட்டிங், நான் இன்னும் ஒரு 50 வ‌ருஷ‌ம் பின்னாடி போய் பாக்க‌றேன் மேம்" என்றான்.

"ஓகே சுன‌ந்த‌ன், நான் இங்கே மானிட்ட‌ர்ல‌ பார்த்துகிட்டுதான் இருக்கேன். கோ அஹெட்..இய‌ரை ரீசெட் ப‌ண்ணி, 2004னு என்ட‌ர் ப‌ண்ணுங்க‌. அடுத்த‌து GO ப‌ட்ட‌ன்"

"தேங்க்ஸ் மேம்"

இப்போது கீபோர்டில் 2..0..0..4 என்று டைப் செய்து, 'GO'வை த‌ட்டிவிட்டு த‌ன் இருக்கையில் அம‌ர்ந்தான். இர‌ண்டு ம‌ணி நேர‌ ப‌ய‌ணத்திற்கு பின்...எங்கு இற‌ங்க‌ வேண்டும் என்று வ‌ழ‌க்க‌ம் போல் மெசேஜ் கேட்க‌, இம்முறை மேப்பை பார்த்து அவ‌னே இட‌த்தை தேர்ந்தெடுத்தான். இட‌த்தை அடைந்த‌வுட‌ன் டைம் மெஷினை விட்டு இற‌ங்கி மூவ‌ரும் ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்த‌ன‌ர். காலை நேர‌மாத‌லால், ம‌க்க‌ள் புழ‌க்க‌ம் ச‌ற்று மித‌மாக‌வே இருந்த‌து. வ‌ந்திருந்த‌ ப‌ல‌ரும் வாக்கிங் செய்துகொண்டே, ச‌க‌ வாக்க‌ர்க‌ளுட‌ன் அர‌ட்டை அடித்துக்கொண்டிருந்த‌ன‌ர். நூறு வ‌ருட‌த்திற்கு முன் வாழ்ந்த‌ ம‌க்க‌ளை பார்த்துக்கொண்டிருக்கும் ம‌கிழ்ச்சியில் த‌ங்க‌ளை ம‌ற‌ந்திருந்த‌ன‌ர் சுன‌ந்த‌னும், நான்சியும். அம்ம‌னித‌ர்க‌ள் பேசும் வித‌மும், உடைக‌ளும் அவ‌ர்க‌ளுக்கு மிகுந்த‌ ஆச்ச‌ரிய‌த்தை அளித்த‌ன‌. ஒருவித‌ ப‌ரவ‌ச‌ நிலையிலிருந்த‌ இருவ‌ரையும், மிட்டுதான் பிடித்து உலுக்கினாள். "டேட், லுக் அட் தேர், ஐ'ம் ஸ்கேர்ட்!!!"


க்ருபாள‌னி திரையில் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, ஏதோ ஒன்று அவ‌ரின் டைம் மெஷினை தாக்கி, எல்லாவ‌ற்றையும் செய‌லிழ‌க்க‌ச் செய்த‌து. எவ்வ‌ள‌வோ முய‌ற்சிக‌ள் செய்தும், அவ‌ரால் சுன‌ந்த‌ன் குடும்ப‌த்தின‌ரோடு தொட‌ர்பு கொள்ள‌ முடிய‌வில்லை. அதிர்ச்சியில் உறைந்து போன‌ க்ருபாள‌னி த‌ன் க‌ணிணியை ஆன் செய்து, இணைய‌த்தில் சென்னை ப‌ற்றிய‌ ப‌ழைய‌ வ‌ர‌லாற்றை தேடிப் ப‌டித்தார். அரை ம‌ணி நேர‌ம் ப‌டித்த‌ பின், மீண்டும் சுன‌ந்த‌னோடு தொட‌ர்பு கொள்ள‌ முய‌ற்சித்தார். ஊஹும்......முடிய‌வில்லை. ஏன்? உங்க‌ளால் யூகிக்க‌ முடிகிற‌தா?

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவ‌ர்க‌ள் மூவ‌ரும் இருந்த‌ இட‌ம், சென்னை மெரீனா க‌ட‌ற்க‌ரை. டிச‌ம்ப‌ர் 26, 2004. காலை நேர‌ம்.

Time machine

SUnandhan

NAncy

MIttu.....


Tuesday, June 08, 2010

டிச‌ம்ப‌ர் 2104....சென்னை

டிச‌ம்ப‌ர் 2104
சென்னை

சுன‌ந்த‌னின் ச‌ட்டைப் பையில் இருந்த குளிர் க‌ண்ணாடி, "க்ருபாள‌னி காலிங், க்ருபாள‌னி காலிங்" என்று அல‌றிய‌து. சுன‌ந்த‌ன் ஸ்பீக்க‌ர் இருந்த‌ அக்க‌ண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டான். க‌ண்ணாடி பெட்டியை திற‌க்க‌, அதிலிருந்த‌ திரையில் விஞ்ஞானி க்ருபாள‌னி பேச‌ ஆர‌ம்பித்தார்.

"சுன‌ந்த‌ன், எப்ப‌டி போயிட்டிருக்கு கிறிஸ்தும‌ஸ்லாம்?"

"இட்ஸ் வொண்ட‌ர்ஃபுல் மேம்"

"தேர் ஈஸ் எ கான்ஃபிட‌ன்ஷிய‌ல் திங், ஐ திங் உங்க‌ள ம‌ட்டும்தான் ந‌ம்பி சொல்ல‌முடியும். ஹ‌வ் லாங் இட் வுட் டேக் டூ ரீச் மை லேப்?"

"மேம், மை ஒய்ஃப் அண்ட் கிட் ஆர் ஹிய‌ர், தே வில் கில் மீ இஃப் ஐ க‌ம் டூ ஒர்க் டுடே"

"ஹாஹ்ஹா...இட்ஸ் ஓகே, அவ‌ங்க‌ளையும் கூட்டிட்டு வாங்க‌, மிட்டுவை பார்த்து ரொம்ப‌ நாளாச்சு"

க்ருபாள‌னி, வ‌ய‌து 56. சுன‌ந்த‌ன் ப‌ணிபுரிந்து கொண்டிருக்கும் ப்ராஜ‌க்ட்டின் சூப்ப‌ர்வைச‌ர். பொதுவாக‌ ஒருபோதும் விடுமுறை தின‌ங்க‌ளில் ப‌ணியாள‌ர்க‌ளை வ‌ர‌ச்சொல்லாத‌வ‌ர், இன்று ஏன் த‌ன்னை வ‌ர‌ச்சொல்கிறார்...அதுவும் குடும்ப‌த்தின‌ருட‌ன் இருக்கிறேன் என்று சொல்லியும். பொறுமையாக‌ நான்சிக்கு விஷ‌ய‌த்தைச் சொல்லி, அவ‌ளை ச‌மாதான‌ப்ப‌டுத்தி, குழ‌ந்தை மிட்டுவோடு சுன‌ந்த‌ன் கிள‌ம்பினான். காருக்குள் உட்கார்ந்து ஸ்டார்ட் செய்ய‌...டேஷ்போர்டில் பீப் பீப் என்ற‌ ஒலி வ‌ர‌ ஆர‌ம்பித்த‌து.

"வாட் நான்சி, காருக்கு பேட்ட‌ரி போட‌லியா, பாரு 'பேட்ட‌ரி லோ'ன்னு மெஸேஜ் டிஸ்ப்ளே ஆகுது"

"சுன‌ன், இட்ஸ் நாட் மை ஜாப், உங்க‌ கார்..நீங்க‌தான் பாத்துக்க‌ணும்..வேணும்னா வாங்க‌ என்னோட‌ கார்ல‌ ஃபுல் பேட்ட‌ரி இருக்கு"

"இட்ஸ் ஓகே, இப்போ இருக்க‌ற‌ பேட்ட‌ரி எப்ப‌டியும் டூ அவ‌ர்ஸ் வ‌ரும், க்ருபாள‌னி மேட‌ம் அபார்ட்மெண்ட் இங்க‌ருந்து ஹாஃப் அன் ஹ‌வ‌ர்தானே, வீ கேன் மேனேஜ்"

காரை கிள‌ப்பினான். விடுமுறை தின‌மாத‌லால், அன்று வானில் ட்ராஃபிக் குறைவாக‌வே காண‌ப்ப‌ட்ட‌து. 'யூ ஷுட் ஃப்ளை ஃபாஸ்ட‌ர் டேடி' என்று மிட்டு க‌த்த‌...ஏற‌க்குறைய‌ மிர‌ட்ட‌வே ஆர‌ம்பித்தாள். கார் சீறிப் ப‌ற‌ந்த‌து. சில நொடிக‌ளில் 'TOO FAST, FLY SLOW' என்று மெஸேஜ் டிஸ்ப்ளே ஆக‌, வேக‌த்தை குறைத்துக் கொண்டு மிட்டுவை பார்த்தான். அவ‌ள் முறைத்துக்கொண்டிருந்தாள்.

க்ருபாள‌னி வீட்டை அடைந்தார்க‌ள். வீடு என்று சொல்ல‌ முடியாது அதை. அறுநூற்றி ஐம்ப‌து ஃப்ளோர்க‌ள் கொண்ட‌ ஒரு அபார்ட்மெண்ட் அது. க்ருபாள‌னி 20.04 எண்ணுடைய‌ ஃப்ளோரில் த‌ங்கியிருந்தார். வ‌ர‌வேற்ப‌ரையில் பாதியை பிரித்து ஒரு ஆராய்ச்சிக்கூட‌த்தை அமைத்திருந்தார். "ஹ‌வ் லாங் இட் வுட் டேக் டூ ரீச் மை லேப்" என்ற‌ கேள்வியிலேயே ஏதோ ஒரு புதுவித‌மான‌ ஆராய்ச்சியைப் ப‌ற்றி பேச‌த்தான் த‌ன்னை அழைத்துள்ளார் என்ப‌தை சுன‌ந்த‌ன் புரிந்துகொண்டான். க்ருபாள‌னியே ஆர‌ம்பித்தார்.

"ஹாலிடேல‌ குடும்ப‌த்தோட‌ உங்க‌ள‌ வ‌ர‌வ‌ழைச்ச‌துக்கு ஸாரி, ப‌ட் இட்ஸ் ரிய‌லி இம்பார்ட்ட‌ண்ட்"

"ஐ கேன் அண்ட‌ர்ஸ்டேன்ட் மேம்"

"தேங்க்ஸ்....நான்சி, வான்ட் டூ ஹாவ் ச‌ம் காஸ்ட்லி ஹெச்2ஓ? யூ மிட்டு?" இருவ‌ரும் வேண்டாமென்று த‌லையாட்ட‌, அவ‌ர் தொட‌ர்ந்தார். "ஓகே, இன்றைய‌ தின‌ம் என்னோட‌ வாழ்க்கையில் ம‌ற‌க்க‌ முடியாத‌ தின‌ம். ரொம்ப‌ நாளா நான் ப‌ர்ச‌ன‌லா ஈடுப‌ட்டிருந்த‌ ஒரு ஆராய்ச்சி இன்னைக்கு ச‌க்ஸ‌ஸ் ஆகியிருக்கு. அதை உங்க‌ளோட‌ ஷேர் ப‌ண்ணிக்க‌ற‌துக்காக‌த்தான் உங்க‌ளை வ‌ர‌ச்சொன்னேன்"

"ரிய‌லி? என்ன‌ மேம் அது?"

"இட்ஸ் எ டைம் மெஷின்!"

சுன‌ந்த‌னும், நான்சியும் ஒரே குர‌லில் "டைம் மெஷின்?!" என்று ஒரு கேள்வியையும், ஆச்ச‌ரிய‌த்தையும் ஒரு சேர‌ வெளிப்ப‌டுத்தின‌ர்.

பின்பு இருப‌து நிமிட‌ங்க‌ள் டைம் மெஷினை ப‌ற்றி ஒரு நீண்ட‌ லெக்ச‌ரை க்ருபாள‌னி கொடுக்க‌, சுன‌ந்த‌னும், நான்சியும் ஆர்வ‌த்துட‌ன் கேட்டுக்கொண்டிருந்த‌ன‌ர். க‌டைசியாக சொன்னார்....

"முத‌ல் முறை டைம் மெஷினில் ட்ராவ‌ல் ப‌ண்ண‌க்கூடிய‌ அதிர்ஷ்ட‌ம் உன‌க்கு, நான்சிக்கு, மிட்டுக்கு கிடைச்சிருக்கு"

"மேம் ஆர் யு சீரிய‌ஸ்?"

"யெஸ்"

"நீங்க‌?"

"இல்ல‌, நான் இங்க‌ருந்து என்னோட் ஸ்க்ரீன்ல‌ நீங்க‌ ட்ராவ‌ல் ப‌ண்ற‌ தேதியையும், இட‌ங்க‌ளையும் பார்த்துகிட்டிருப்பேன், ஐ ஹாவ் டூ நோட் ஸ‌ம் ஸ்ட‌ஃப். ஆர் யூ ரெடி டூ கோ பேக் டூ தி பாஸ்ட் வித் யுவ‌ர் ஃபேமிலி?"

"வித் ப்ள‌ஷ‌ர் மேம், திஸ் ஈஸ் ரிய‌லி எக்ஸைட்டிங்!"

சுன‌ந்த‌னால் மிட்டுவுக்கு புரிய‌வைக்க‌ முடிய‌வில்லை. ஆனால் ஒரு டூர் போகிறோம் என்ற‌வுட‌ன் வ‌ருவ‌த‌ற்கு அவ‌ளும் ஆர்வ‌த்துட‌ன் த‌யாரானாள். மூவ‌ரும் உருளை வ‌டிவ‌த்திலிருந்த‌ அந்த‌ மெஷினில் ஏறி உள்ளே அம‌ர்ந்தார்க‌ள். நாளைய‌ அறிவிய‌ல் உல‌க‌ம், த‌ங்க‌ளைப் ப‌ற்றிய‌ வ‌ர‌லாறை ப‌திவு செய்யும் என்ற‌ ந‌ம்பிக்கையோடு ப‌ய‌ண‌ப்ப‌ட‌ ஆர‌ம்பித்த‌ன‌ர். வெளியே த‌ன் அறையில் அம‌ர்ந்திருந்த‌ க்ருபாள‌னி மைக்கில் பேச‌, அது டைம் மெஷின் உள்ளேயிருந்த‌ ஸ்பீக்க‌ரில் கேட்ட‌து.

"சுன‌ந்த‌ன், டைம் மெஷினில் இது என்னுடைய‌ முத‌ல் முய‌ற்சி. உங்க‌ளோடு‌ ம‌னைவியும், குழ‌ந்தையும் இருப்ப‌தால் ரிஸ்க் எடுப்ப‌தில் என‌க்கு விருப்ப‌மில்லை. அத‌னால் முத‌லில் 50 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால், அதாவ‌து 2054க்கு ப‌ய‌ண‌ம் செய்யுங்க‌. உங்க‌ளுக்கு முன்னாடி இருக்க‌ற‌ கீபோர்ட்ல‌ 2..0..5..4 டைப் ப‌ண்ணி 'GO' ப‌ட்ட‌னை ப்ர‌ஸ் ப‌ண்ணுங்க‌. உங்க‌ ப‌ய‌ண‌த்தை நான் இங்கிருந்து மானிட்ட‌ரில் பார்த்துகிட்டிருப்பேன்...ஆல் த‌ பெஸ்ட்"

"தேங்க்ஸ் மேம்"

2054 என்று டைப் செய்துவிட்டு, 'GO' ப‌ட்ட‌னை ப்ர‌ஸ் செய்தான் சுன‌ந்த‌ன். பெரிய‌ள‌வில் ச‌த்த‌மின்றி டைம் மெஷின் கிள‌ம்ப‌ ஆர‌ம்பித்த‌து...விரைவில் நிக‌ழ‌ப்போவ‌தை அப்போது யாரும் அறிந்திருக்க‌வில்லை....க்ருபாள‌னி உட்ப‌ட‌!

முடிவு அடுத்த‌ (10.06.2010) ப‌திவில்....


Thursday, June 03, 2010

ஜாதிக‌ள் இல்லைய‌டி பாப்பா

ப‌திவுல‌கில் கால‌டி எடுத்து வைத்து கிட்ட‌த‌ட்ட‌ ஒரு வ‌ருட‌மாகிவிட்ட‌து. எழுத‌ ஆர‌ம்பித்த‌ புதிதில், விஷ‌ய‌மே இல்லாத‌ விஷ‌ய‌ங்க‌ளையெல்லாம் எழுதி ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் ப‌டிக்க‌ச் சொல்லி இம்சை செய்த‌தை, இப்போது நினைத்து பார்க்கையில் சிரிப்புதான் வ‌ருகிற‌து. என்ன‌ எழுத‌வேண்டும், எப்ப‌டி எழுத‌வேண்டும் என்று எந்த‌ யோச‌னையும், ப‌யிற்சியும் கிடையாது. அவ்வ‌ப்போது என்ன‌ தோன்றுகிற‌தோ, அதை அப்ப‌டியே கிறுக்கியிருக்கிறேன். உண்மையில் சொல்ல‌ப்போனால், சென்ற‌ வ‌ருட‌த்தில் எழுதிய‌ ப‌ல‌ ப‌திவுக‌ளை, ப‌திவு என்று சொல்வ‌த‌ற்கே ம‌ன‌சாட்சி உறுத்துகிற‌து.

ஏதாவ‌து உருப்ப‌டியா எழுத‌லாம்ல‌ என்று ந‌ட்புக‌ள் அக்க‌றையுட‌ன் இடிந்துரைக்கும்போது உண‌ர்கிறேன், நாம்‌ இன்னும் உருப்ப‌டியாக‌ எழுத‌ ஆர‌ம்பிக்க‌வில்லை என்று. அச‌ர‌ வைக்கும் வார்த்தை பிர‌யோக‌ங்க‌ள் எல்லாம் கைகூடாம‌லிருக்கிற‌து இன்னும். என்னுடைய‌ புத்த‌க‌ வாசிப்ப‌னுப‌வ‌ம் அப்ப‌டி. சுஜாதா. இல்லையென்றால் குமுத‌ம், ஆன‌ந்த‌ விக‌ட‌ன். இதைத் தாண்டி வேறேதும் வாசிக்க‌ விரும்பிய‌தில்லை. இன்னும் கூட‌ நிறைய‌ குறைக‌ளிருக்கிற‌து. அவ‌சிய‌ம் முய‌ற்சி செய்கிறேன், கொஞ்ச‌மாவ‌து என்னை மாற்றிக்கொள்ள‌....

*************************

2011 ச‌ட்ட‌ச‌பை தேர்த‌லில் எங்க‌ளையும் கூட்ட‌ணியில் சேர்த்துக்கொண்டு, வ‌ர‌விருக்கும் மாநில‌ங்கள‌வைத் தேர்த‌லில் எங்க‌ள் வேட்பாள‌ருக்கு ஆத‌ர‌வ‌ளிக்க‌ வேண்டும் என்று க‌லைஞருக்கு க‌டித‌ம் எழுதியிருக்கிறார் ம‌ருத்துவ‌ர் ராம‌தாஸ். மாநில‌ங்க‌ள‌வை வேட்பாள‌ர்? வேறு யார், அன்பும‌ணி ராம‌தாஸ்தான்.

த‌ற்போதிருக்கும் அர‌சிய‌ல் சூழ்நிலையில், அதிமுக‌வுட‌ன் விஜ‌ய‌காந்த் கூட்ட‌ணி அமைப்ப‌த‌ற்கான‌ வாய்ப்பிருப்ப‌தாக‌த் தெரிகிற‌து. அத‌னால் எப்ப‌டியும் அதிமுக‌ அணியில் பாம‌க‌ சேர‌முடியாது. இப்போதைக்கு பாம‌க‌வின‌ருக்கு ஒரே ஆப‌த்பாந்த‌வ‌ன் திமுக‌தான். இதை உண‌ர்ந்து கொண்ட‌ க‌லைஞர், 2011 ச‌ட்ட‌ச‌பை தேர்த‌லுக்கு கூட்ட‌ணியில் சேர்த்துக்கொள்கிறோம், ஆனால் அத‌ன்பின் வ‌ர‌விருக்கும் மாநில‌ங்க‌ள‌வைத் தேர்த‌லில்தான் உங்க‌ள் வேட்பாள‌ருக்கு ஆத‌ர‌வ‌ளிக்க‌ முடியும் என்று ம‌ருத்துவ‌ருக்கே அதிர்ச்சி வைத்திய‌ம் கொடுத்துவிட்டார். சாண‌க்கிய‌த்த‌ன‌ம் - ச‌த்திய‌மாக‌ க‌லைஞருக்கு பொருந்த‌க்கூடிய‌ வார்த்தைதான்.

*************************

ஜிம்பாப்வேயிட‌ம் தோற்கும் அள‌வுக்கு, 'திற‌மையுட‌ன்' இருக்கின்ற‌ன‌ர் ந‌ம் இந்திய‌ கிரிக்கெட் அணியின‌ர். என்ன‌தான், இது இர‌ண்டாம் நிலை அணிதானே என்று ச‌ப்பைக் க‌ட்டு க‌ட்டினாலும், தோற்ற‌தென்ன‌ ஆஸ்திரேலியாவுக்கு எதிராக‌வா? இதுக்கே இப்ப‌டி என்றால், அடுத்த‌ வ‌ருட‌ம் உல‌க‌க் கோப்பை. என்ன‌ செய்ய‌ப்போகின்ற‌ன‌ர்?

இன்றைய‌ நில‌வ‌ர‌ப்ப‌டி, லியாண்ட‌ர் ப‌ய‌ஸ் & லோஹி ஜோடி, ஃபிரெஞ்ச் ஓப்ப‌ன் ஆட‌வ‌ர் இர‌ட்டைய‌ர் பிரிவில், அரையிறுதிக்கு த‌குதி பெற்றுள்ள‌ன‌ர். காலிறுதியில், வெகு சுல‌ப‌மாக‌ நேர் செட்க‌ளில் வென்றிருக்கின்ற‌ன‌ர். லியாண்ட‌ர் லோஹியின் இதே‌ ஆட்ட‌ம் தொட‌ருமேயானால், இறுதிப்போட்டியில் கோப்பை நிச்ச‌ய‌ம்! பார்ப்போம் என்ன‌ ந‌ட‌க்கிற‌தென்று...

*************************ஞாயிற‌ன்று 'சிங்க‌ம்' பார்த்தேன். சூர்யா ப‌க்க‌ம் பக்க‌மாக‌ வ‌ச‌ன‌ம் பேசுகிறார். அவ‌ர் ஓங்கி விடும் ஒரு குத்திலேயே அடியாட்க‌ள் முப்ப‌த‌டி த‌ள்ளி போய் விழுகிறார்க‌ள். 'அனுஷ்கா அழ‌காயிருக்கிறார்' இவ்விர‌ண்டு வார்த்தைக‌ளுக்கு ந‌டுவே 'மிக‌' என்ப‌தை சேர்க்காம‌ல் விட்டால் பெரும் த‌வ‌று செய்த‌வ‌னாவேன். அதனால் 'மிக‌'வை சேர்த்து ப‌டித்துவிடுங்க‌ள். அதிலும் 'காத‌ல் வ‌ந்தாலே' பாட‌லில் முக‌த்தில் ரியாக்ஷ‌ன் இல்லாம‌ல் ஆடும் காட்சி 'வாவ்'வென‌ ர‌சிக்கும் ர‌க‌ம். பிர‌காஷ்ராஜ் வ‌ழ‌க்க‌ம் போல். பாட‌ல் ம‌ற்றும் காத‌ல் காட்சிக‌ளில் சூர்யா அனுஷ்கா உய‌ர‌ வித்தியாச‌ம் தெரிய‌த்தான் செய்கிற‌து. ஆனால் உருவ‌ அமைப்பை வைத்து கிண்ட‌ல‌டிப்ப‌தில் என‌க்கு விருப்ப‌மில்லை. அப்ப‌டி கிண்ட‌ல‌டிக்க‌ ஆர‌ம்பித்தால், த‌மிழ் ந‌டிக‌ர்க‌ளில், க‌ம‌ல்ஹாச‌ன், அஜித் த‌விர‌ ம‌ற்ற‌ எல்லோரையும் வ‌றுத்தெடுக்க‌லாம். ஏன், க‌ம‌லை கூட‌ நால‌டி தூர‌த்தில் அருகே பார்த்திருக்கிறேன், அலுவ‌ல‌க‌ம் அருகில் த‌சாவ‌தார‌ம் ப‌ட‌ப்பிடிப்பு நட‌ந்த‌போது. க‌ம‌லும் ச‌ற்று உய‌ர‌ம் க‌ம்மிதான். அவ‌ர் உய‌ர‌மான‌ சிம்ர‌னோடு ந‌டிக்க‌வில்லையா என்ன‌?


ப‌ட‌த்தின் முத‌ல் பாதி கொஞ்ச‌ம் இழுவை. இர‌ண்டாம் பாதி, பல‌ லாஜிக் மீற‌ல்க‌ள் இருந்தாலும் செம‌ விறுவிறு. விஜ‌ய்யின் ஐம்பதாவ‌து ப‌ட‌த்திற்காக‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌ க‌தையாம் இது. ஒரு வெற்றிப்ப‌ட‌த்தை விஜ‌ய் இழ‌ந்துவிட்டார் என்றே சொல்வேன். 'சிங்க‌ம்' உறுமுவ‌தை தைரிய‌மாக‌ ஒரு முறை பார்க்க‌லாம். ஒரு முறைதான்.


*************************


உசுரே போகுதே உசுரே போகுதே, உத‌ட்டை நீ கொஞ்ச‌ம் சுழிக்கையில‌ என்று உசுரை எடுக்கிறார் கார்த்திக். பாட‌ல் கேட்கும்போதே ப‌ட‌த்தை எப்ப‌டா பார்ப்போம் என்று ஏங்குகிற‌து ம‌ன‌ம். ஜுன் 18 அன்று ரிலீஸ். எப்ப‌டியாவ‌து முத‌ல் மூன்று நாட்க‌ளுக்குள் பார்த்துவிட‌ வேண்டுமென்று துடித்துக்கொண்டிருக்கிறேன். ம்ம்ம்....ச‌த்ய‌ம் ஆண்ட‌வ‌ர் ஆன்லைனில் வ‌ர‌ம‌ளிக்க‌ வேண்டும்.


*************************


விளையாட்டு வினையாகும் என்ப‌த‌ற்கு ச‌ரியான‌ உதார‌ண‌ம், ச‌மீப‌த்திய‌ ப‌திவுல‌க‌ நிகழ்வு. விளையாட்டாய் கிண்ட‌ல் செய்து ஒரு ப‌திவு, ப‌திலுக்கு ஒரு க‌தை என‌ ஆர‌ம்பித்து, இப்போது ஆணாதிக்க‌ம், ஜாதி வெறி, ந‌ம்பிக்கை துரோக‌ம் என்று திசை மாறி ப‌ய‌ணித்துக்கொண்டிருக்கிற‌து.


ந‌ர்சிம் அவ‌ர்க‌ளின் க‌தை மிக‌ மிக‌ மிக‌ மிக‌த் த‌வ‌று. அத‌ற்கு அவ‌ர் இப்போது ப‌திவ‌ர் ச‌ந்த‌ன‌முல்லையிட‌ம் ப‌கிர‌ங்க‌மாக‌ ம‌ன்னிப்பும் கேட்டுள்ளார். இன்னும் என்ன‌ வேண்டும்? அவ‌ர் எழுதிய‌ வார்த்தைக‌ளை விட‌ இப்போது அவ‌ரைப் ப‌ற்றி எழுதுகையில் ப‌ல‌ர் உப‌யோகிக்கும் வார்த்தைக‌ள் ப‌டு கீழ்த்த‌ர‌மான‌து.


நான‌றிந்த‌வ‌ரை ந‌ர்சிம் அக்க‌தையில் எழுதிய‌து போன்ற‌ இழிசொற்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்துப‌வ‌ர‌ல்ல‌ர். அவ‌ரை அவ்வார்த்தைக‌ளை பிர‌யோகிக்கும் அள‌வுக்கு தூண்டிய‌து யார், என்ன‌ என்ப‌தெல்லாம் விடுத்து, இது நாள் வ‌ரை காத்திருந்து இப்போது இரை சிக்கிய‌து போல், ஜாதியை கையிலெடுத்திருக்கின்ற‌ன‌ர் அவ‌ரின் எதிர்ப்பாள‌ர்க‌ள். இதில் எங்கெய்யா வ‌ந்த‌து ஜாதி? அவ‌ர் உப‌யோகித்த‌ வார்த்தைக‌ளை அவ‌ர் சார்ந்த‌ ஜாதியின‌ர் ம‌ட்டும்தான் உப‌யோகிக்கின்ற‌ன‌ரா? உங்க‌ள் ஜாதியின‌ர் உப‌யோகித்த‌தே இல்லையா?


ப‌திவுல‌க‌ம் அறிமுக‌மான‌போது, மிக்க‌ ப‌டித்த‌வ‌ர்க‌ளும், த‌மிழ் ஆர்வ‌ல‌ர்க‌ளும் நிறைந்திருக்கின்ற‌ன‌ர் என்று நினைத்தேன். இப்போதுதான் தெரிகிற‌து, நாக‌ரீக‌ம‌ற்ற‌வ‌ர்க‌ளும், ஜாதி வெறி பிடித்த‌வ‌ர்க‌ளும் உட‌ன் இருக்கின்ற‌ன‌ர் என்று. 2010ல் இருக்கிறோம், ஜாதிக‌ள் இல்லைய‌டி பாப்பா என்று சொன்ன‌ ம‌னித‌னின் பிற‌ந்த‌ நாள் நூற்றாண்டு விழாவையே கொண்டாடி முடித்துவிட்டோம். ஆனால் இன்னும்..........திருந்தி தொலைங்க‌ய்யா!