Saturday, July 07, 2012

Exam - உங்கள் அறிவுத்திறனை சோதிக்க ஒரு படம்!

ஒரு படம், பார்ப்பவர்களை உருக வைக்க வேண்டும், நெஞ்சை நெகிழ வைக்க வேண்டும், கண்களை கலங்க வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவரா நீங்கள்? அப்படியெனில் இது உங்களுக்கான படமல்ல. ஒன்று, இப்போதே இந்த விண்டோவை க்ளோஸ் பண்ணிவிடுங்கள் அல்லது கொஞ்சம் நேரம் ஒதுக்கி இந்த படத்தையும் பாருங்கள். ஒன்றரை மணி நேர சுவாரஸ்யத்துக்கு 100% கேரண்டி!

டமால் டுமீல் அதிரடி சண்டை காட்சியெல்லாம் கிடையாது. இங்கிட்டு ஒரு பில்டிங், அங்கிட்டு ஒரு பில்டிங் என்று தத்தி தாவும் ஸ்பைடர்மேனிஸமும் கிடையாது. இவையேதுமின்றி ஒரு த்ரில்லர் படத்தை எடுக்க முடியுமா, பார்ப்பவர்களை கவர முடியுமா என்ற கேள்விக்கு இந்த படத்தை பதிலாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்டுவர்ட் ஹசல்டைன் (Stuart Hazeldine). 

பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வரும் படம் என்பார்களே. அது இந்த படத்துக்கு அட்சர சுத்தமாக பொருந்தும். ஒரேயொரு லொகேஷன். நூற்றியொரு நிமிடங்கள். முழுக்க முழுக்க உரையாடல்கள்தான். இருந்தும் ஒரு இடத்தில் கூட சலிப்பே வரவில்லை. அடுத்து என்ன அடுத்து என்ன என்ற ஆர்வம்தான் அதிகமாகிக்கொண்டே போகிறது. வெகு நாளாயிற்று இப்படியொரு படத்தை பார்த்து!
ஒரு பயோ-டெக் கம்பெனியில்,  சிஇஓவின் பர்சனல் அசிஸ்டன்ட் பதவிக்காக ஒரு தேர்வு வைக்கப்படுகிறது. மொத்தம் எட்டு பேர் அந்த தேர்வை எழுத தகுதி பெற்றிருக்கின்றனர். ஒவ்வொருவரும் வெவ்வேறு சமூகப் பின்னணியை கொண்டவர்கள். அந்த எட்டு பேரில் ஒருவர்தான் சிஇஓவின் பர்சனல் அசிஸ்டன்ட்டாக தேர்வு செய்யப்படுவார்.

தேர்வறையை பற்றி சொல்லியாக வேண்டும். ஒரு ஜன்னல் கூட இல்லாத மூடிய அறை அது. அறை கதவின் பக்கத்திலேயே ஆயுதம் ஏந்திய காவலர் ஒருவர் இருக்கிறார். எட்டு போட்டியாளர்களும் அவரவர் இருக்கையில் அமர்ந்திருக்க, அந்த தேர்வின் ஒருங்கிணைப்பாளர் அறைக்குள் நுழைகிறார். 

அவர் சொல்லும் சில விஷயங்கள்:

இந்த தேர்வுக்கான நேரம் மொத்தம் 80 நிமிடங்கள்

இந்த தேர்வில் போட்டியாளர்கள் பதிலளிக்க வேண்டியது ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே!

மேலும் இந்த தேர்வுக்கு மூன்று நிபந்தனைகள்:

நிபந்தனை #1: போட்டியாளர்கள் யாரும் தேர்வு ஒருங்கிணைப்பாளரிடமோ, அறை கதவின் அருகில் இருக்கும் ஆயுதம் ஏந்திய காவலரிடமோ  பேசக்கூடாது.

நிபந்தனை #2: போட்டியாளர்கள் தங்கள் விடைத்தாளை சேதப்படுத்தக்கூடாது.

நிபந்தனை #3: அந்த அறையை விட்டு வெளியேறக்கூடாது.

இந்த மூன்று நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினாலும், போட்டியாளர்கள் தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள். இவற்றை அறிவித்துவிட்டு அந்த ஒருங்கிணைப்பாளர் தேர்வறையிலிருந்து வெளியேறிவிடுகிறார்.

இப்போது, போட்டியாளர்கள் ஒவ்வொருவரும், தங்கள் முன் வைத்திருக்கும் தாளை திறந்து பார்க்க......அவர்களுக்கு பேரதிர்ச்சி! அந்த தாளில் கேள்வியே இல்லை.  கேள்வியே  இல்லாமல் எப்படி விடையளிப்பது? எப்படி தேர்ச்சி பெறுவது? 

ஒரு சில  நிமிடங்களுக்குப் பின், அந்த அறைக்குள்தான்  கேள்வி எங்கேயோ ஒளிந்திருக்கிறது என்று முடிவு செய்து, தேட ஆரம்பிக்கிறார்கள். கேள்வியை கண்டுபிடித்தார்களா, எட்டு பேரில் யார் வெற்றி பெற்றது என்பதையெல்லாம், வெள்ளித்.....கணிணித்திரையில் கண்டு மகிழுங்கள்!

நான்கெழுத்து F*** வார்த்தையை தவிர்த்து, துளியும் விரசமின்றி நகருகிறது படம். தைரியமாக குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கலாம்.  படம் பார்த்து முடித்தவுடன், "ச்சே...நம்மால ஏன் அந்த கேள்வியை கண்டுபிடிக்க முடியல?" என்ற கேள்விதான் வெகுநேரம் எனக்குள் உறுத்திக்கொண்டிருந்தது.  கொஞ்சம் சுவாரஸ்யமான உறுத்தல்தான். படம் பார்த்தால், அது உங்களுக்கும் கிடைக்கும்.

பி.கு: திரைப்படம் குறித்து வெகு நாட்களாய் எழுதாததால் இந்த பதிவை முயற்சித்தேன். ஜாக்கிகள், கேபிள்கள் அளவுக்கெல்லாம் எனக்கு எழுத வராது. பொறுத்தருள்க :)