Tuesday, January 24, 2012

நில் கவனி தாக்கு - சுஜாதா

1960களில் வெளியான ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் மீது தலைவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்திருக்க வேண்டும். இந்த கதையை வாசித்து முடித்த பின் அப்படித்தான் எனக்கு தோன்றியது. தமிழில் இது போன்ற ஒரு ஸ்பை த்ரில்லர் கதையை இப்போதுதான் வாசித்திருக்கிறேன். என்னா ஒரு ஃப்ளோடா!

2011 புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம் இது. புத்தக வாசிப்பிற்கும் எனக்கும் பெரிய இடைவெளி விழுந்த வருடம் 2011. இந்த வருடம் அதை ஈடுகட்டுவதற்காகவே, நான்கு நாட்கள் பட்டினி கிடந்தவன் சரவண பவன் ஃபுல் மீல்ஸை பார்த்தது போல, வெறித்தனமாக வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். எந்த தடையும் இல்லாமல் இது தொடர வேண்டும்.கதைக்கு வருவோம். பம்பாயிலிருந்து (அப்போ மும்பை இல்லப்பா) டெல்லிக்கு வரும் ஒரு அணு விஞ்ஞானியை ரிசீவ் செய்து பத்திரமாக ஒரு இடத்திற்கு  அழைத்து வரும் பொறுப்பு நாயகனுக்கு தரப்படுகிறது. ஜேம்ஸ் பாண்ட் பாணி கதை என்பதால் ஒரு அழகிய பெண்ணை பார்த்தவுடன் சற்று கடமையிலிருந்து தவறுகிறான் நாயகன். அடையாளம் தெரியாத நபர்களால் அணு விஞ்ஞானி கடத்தப்படுகிறார். இதனால் கடிந்துகொள்ளும் மேலதிகாரியிடம், எப்படியாவது அவரை மீட்டு கொண்டு வருகிறேன் என்று இருபத்து நாலு மணி நேரம் டைம் கேட்கிறான் நாயகன். 

சில பல ஸ்டண்ட்களுக்கு பின் அணு விஞ்ஞானியை மீட்கிறான். நிற்க. கதை இதோடு முடிவதில்லை. இது வெறும் இடைவேளைதான். விஞ்ஞானியை கடத்தியவர்களின் பின்புலத்தை ஆராயும்போதுதான் அவனுக்கு நிறைய விஷயங்கள் தெரிய வருகிறது. இதற்கு மேல் கதை சொல்லி சஸ்பென்ஸை உடைக்க விரும்பவில்லை. இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

துப்பாக்கி, சண்டை, ரத்தம், ஆதர்சம், துரோகம் என்று செல்லும் கதையில், வாசகர்களுக்கு கடைசி அத்தியாயம் ஆரம்பிக்கும் முன் ஒரு சவால் விடுகிறார் தலைவர். கடைசி அத்தியாயம் வாசிக்கும் முன் கதை இப்படித்தான் முடியும் என்று யூகித்தால் நீங்கள் புத்திசாலிதான் என்கிறார். சத்தியமாக கடைசி அத்தியாயத்தின் பாதியை வாசிததபின்தான் யூகிக்கவே முடிந்தது. அதனாலென்ன, தலைவரிடம் தோற்பது கூட மகிழ்ச்சியைத்தான் தருகிறது.

இந்த கதையில், ஃப்ளோவை அடுத்து நான் ரசித்தது தலைவர் தரும் விவரமான வர்ணனைகள்தான். ஹோட்டல், அன்னெக்ஸ், காபரே நடனம் ஆடும் அழகி, அரங்கம் மற்றும் வழக்கம் போல் நாயகியின் அழகு. வாசிக்க வாசிக்க, கற்பனையில் ஒரு அட்டகாசமான த்ரில்லர் படத்தை காணமுடிகிறது. ஹாலிவுட் படங்களில், டைட்டிலில் BASED ON THE NOVEL என்று கதையின்  பெயரையும், ஆசிரியரின்  பெயரையும்  போடுவார்கள். தமிழில் ஏன் அது போல் இயக்குனர்கள் முயற்சிப்பதில்லை? கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று அனைத்திலும் தன் பெயர்தான் வரவேண்டும் என்ற பிடிவாதமோ? 

Ctrl+C, Ctrl+V வேலையையெல்லாம் செய்யும் ஷங்கர் இந்த கதையை படமாக எடுத்தால் கண்டிப்பாக சூப்பர் டூப்பர் ஹிட்டாகும். இல்லையென்றால் கெளதம். இவர்களை தவிர யார் எடுத்தாலும், வரும் அவுட்புட்டை தலைவர் மேலிருந்தபடியே கெட்ட ஆங்கிலத்தில் திட்டுவார்.

பெயர்: நில் கவனி தாக்கு
ஆசிரியர்: சுஜாதா
விலை: ரூ.75/-
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-565-3.html

6 comments:

 1. நன்றி மோகன், புக் நான் தரேன். வாசிச்சுட்டு சொல்லுங்க

  நன்றி வித்யா

  ReplyDelete
 2. அருமை.
  படிக்க வேண்டும்.
  நன்றி.

  ReplyDelete
 3. Your post is in top 30 best posts for the day in Tamil Manam.

  ReplyDelete
 4. நன்றி ரத்னவேல்

  நன்றி மோகன், எல்லா புகழும் தலைவருக்கே :)

  ReplyDelete