Friday, February 10, 2012

பதிவர் மோகன்குமாருடன் ஒரு சந்திப்பு

சென்னையில் இதுவரை நடந்த எந்தவொரு பதிவர் சந்திப்புக்கும் சென்றதில்லை. சிலர் எழுத்துக்களை ரசித்து வாசித்தாலும், அவர்களுக்குள் இருக்கும் அரசியல், குழு மனப்பான்மை ஆகியவையெல்லாம் பார்க்கும்போது சற்று ஒதுங்கி இருக்கவே விரும்புகிறேன். இப்பொழுதும், திரட்டிகளில் சுற்றுமபோது, "பிரபல பதிவரும் ............." என்று ஏதாவது ஜூ.வி., நக்கீரன், ரிப்போர்ட்டர் வகையறா டைட்டிலை பார்த்தாலே அலர்ஜியாக இருக்கிறது. ப்ளீஸ், கொஞ்சம் மாத்திகோங்கப்பா!

ஆரம்பத்தில் ப்ளாக் மீது ஒரு போதை இருந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் பதிவுலகில் நடந்த சில நிகழ்வுகளினாலேயே போதை குறைந்து ஒரு "ச்சே" பீலிங் வந்துவிட்டது. பிரபல பதிவர்களுக்கு நன்றி. இப்போதெல்லாம் எப்போது எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதுதான் எழுதுகிறேன் :)

பிரபலங்களிலும் ஒரு சிலர் விதிவிலக்காய் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் எனக்கு பிடித்தமானவர்கள் வரிசையில், கண்டிப்பாக 'வீடு திரும்பல்' மோகன்குமார் அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. எளிமையாக, டீசன்ட்டாக எழுதுவதினாலேயே இவரின் பதிவுகள் எனக்கு பிடிக்கும். 

சில நாட்கள் முன் புத்தக கண்காட்சியின்போது வாங்கிய புத்தகங்கள் பற்றி எழுதியபோது, தலைவர் புத்தகங்களை exchange பண்ணிக்கலாமா என்று கேட்டிருந்தார். தலைவர் எழுத்து பலரிடம் செல்வது குறித்து எனக்கு மகிழ்ச்சியே. எனவே நான்கு புத்தகங்களை அவருக்கு தபாலில் அனுப்பிவிட்டேன். அவர் அத்துடன் விடவில்லை. "என்னிடம் சில புத்தகங்கள் இருக்கிறது. ஒரே ஏரியாவில் இருந்துகொண்டு சந்திக்காமலேயே இருக்கிறோம், நேரில் வாங்க சந்திப்போம்" என்றார்.

நெருங்கிய நண்பர்கள் அருகில் இருக்கும்போதுதான் அரட்டையில் அரண்மனை கட்டி விளையாடுவேன். புதிதாக சந்திப்பவர்களோடு நான் அதிகம் பேசுவதில்லை. இது என் இயல்பான சுபாவமே தவிர நான் ஏன் பேசவேண்டும், வேண்டும் என்றால் அவர்கள் பேசட்டுமே என்ற ஈகோ அல்ல. மோகன் அழைத்தவுடன், ஒரு குறிப்பிட்ட தினத்தில் மதியம் அவருடைய அலுவலகத்தில் சந்திப்பது என்று முடிவு செய்தோம். சரியாக மதியம் பன்னிரண்டரை மணிக்கு வருவதாக சொல்லியிருந்தேன். ஆனால் வீட்டிலிருந்து கிளம்பும்போதே மணி பன்னிரண்டரை. நாம எப்போ சொன்ன நேரத்துக்கு கரெக்டா போயிருக்கிறோம்?
வீட்டிலிருந்து அவர் பணிபுரியும் அலுவலகத்துக்கு வெறும் பத்து நிமிட தூரம்தான். எனவே ஒருவழியாக சமாளித்துவிட்டேன். நேரில் சந்தித்தபோது ரொம்ப கேஷுவலாக பேசினார். தனி கேபின், அழகான சுத்தமான டேபிள், பக்கத்தில் அவரின் துறை சம்பந்தமான பார்ட் 1, பார்ட் 2, பார்ட் 3 என்று தடிமனான சில புத்தகங்கள் என்று கிட்டத்தட்ட ஒரு எம்.டி லுக்கில்தான் இருந்தார். பேச்சின் போது நடுநடுவே சிலர்  ஃபோன் செய்து சில கேள்விகள் கேட்க, அவர்களின் சந்தேகங்களையும் தீர்த்துவைத்தார். "போனை எடுத்தா நச்சு நச்சுன்றானுங்கப்பா" என்று கவுண்டர் மாதிரி அலுத்துக்கொள்ளவில்லையே தவிர, சார் நிஜமாவே பிஸிதான்!

எப்படி சமீப நாட்களில் நிறைய எழுதுகிறீர்கள் என்று கேட்டேன். சொன்னார். ம்ம்.....அது ஆஃப் த ரெக்கார்டாகவே இருக்கட்டும். சில புத்தகங்களை தந்து எது வேணுமோ எடுத்துகோங்க என்றார். கிளி கழுத்தை கண்ட அர்ஜுனன் போல் நான் தலைவரின் கதைகளை மட்டுமே எடுத்துக்கொண்டேன். அவருடைய சமீபத்திய பயணம், என்னுடைய வொர்க் டைமிங், பதிவர்கள் சந்திப்பு, சத்யம் தியேட்டர் என்று டாபிக் மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருந்தோம். வேளச்சேரியில் புதிதாக வரப்போகும் திரைஅரங்குகள் பற்றி சொன்னார். நான்தான் நிறைய பேசினேன் என்று நினைக்கிறேன். நிறைய பேசினாலும் ரொம்ப  ஃபார்மலாகத்தான் பேச முடிந்தது. முதன் முறை சந்திப்பதினால் இருக்கும் சிறு தயக்கம். மேலும் சில சந்திப்புகளில் கொஞ்சம் இயல்பாக பேசுவேன் என்று நம்புகிறேன்.

வயிற்றுக்கு ஈயும் நேரம் வந்ததால், ஏற்கனவே பேசிவைத்தபடி இருவரும் தலப்பாகட்டி'னோம். ஒரு கோழியை கொன்ற பாவத்தை அக்கவுன்ட்டில் ஏற்றிகொண்ட பிறகு விடைபெற்றேன். ஒரு பந்தா இல்லாத, பழகுவதற்கு எளிமையான, கண்ணியமான மனிதரை சந்தித்தோம் என்ற திருப்தி கிடைத்தது. விரைவில் மேலும் சில புத்தகங்களோடு மீண்டும் சந்திப்போம் மோகன்.

15 comments:

 1. ரகு: இப்படி ஒரு பதிவு எழுதுவீங்கன்னு நினைக்கவே இல்லை. தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் நல்லவன் மாதிரி காட்டியிருக்கலாம் :))

  என்னை குறித்து சற்று அதிகமாகவே பாராட்டியிருப்பதாக உணர்கிறேன்.

  பிரபல பதிவர்களை சற்று குத்தி விட்டு என்னை பாராட்டியது சங்கடமாக உள்ளது. நீங்கள் பலரையும் இதுவரை நேரில் சந்திக்க வில்லை. அவர்கள் எழுத்தை வைத்தே அவர்களை குறித்து ஜட்ஜ் செய்துள்ளீர்கள் கேபிள், உண்மை தமிழன், ஜாக்கி, KRP செந்தில் என சென்னையில் உள்ள பிரபல பதிவர்கள் பலரும் மிக எளிமையாக பழகுபவர்களே. பழகி பார்த்தால் உணர்வீர்கள். எழுத்த்தில் சற்று பந்தா காட்டும் சிலரும் நேரில் மிக அன்பாக பழகுவார்கள். தனி தனியாக ஒவ்வொருவரும் நல்லவரே !!

  நிச்சயம் அவ்வப்போது சந்திப்போம்

  ReplyDelete
 2. சமூக அக்கறை, வாசிப்பு, பயணம், முன்னேறிப் பார்க்கலாம் தொடர், வானவில் எனப் பல்சுவை ப்ளாகராகப் பரிமளித்து வருபவரின் எளிமை குறித்த தங்களின் பதிவும் எளிமையாக, இதமாக உள்ளது:)! பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 3. ”வீடு திரும்பல்” வலைப்பூ & ஓனர் குறித்து கூறப்பட்டுள்ளவை சரியே. நிகழ்வுகளை இயல்பாகவும், சுவாரசியமாகவும் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. புத்தகப் பரிமாறல் மூலம் சந்திக்க முடிந்தது மகிழ்ச்சியான விஷயம்.

  ReplyDelete
 4. மோகன் சார் குறித்து தாங்கள் எழுதியிருப்பது மிகையல்ல. அவருடன் பேசிக் கொண்டிருந்தால் நேரம் போவது தெரியாது. ஆரம்ப நிலையில் நான் பிளாக்-ஐ தொடர்ந்து எழுத அவரும் ஒரு காரணம். என்னுடைய அடையாளத்தை மறைத்து, நான் எழுதிய போதும், அவருடைய எழுத்தும், என் நண்பரின் அண்ணனும் அவருடைய கல்லூரி நண்பருமான மறைந்த திரு லட்சுமணன் அவர்களின் நினைவுகளோடு அவர் இன்றளவும் இருப்பதும், என்னை அவர் முன் கொண்டு நிறுத்தியது என்பதே உண்மை.

  பதிவர்கள் சந்திப்பு என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில், பதிவர்கள் வேறு பணிகளுக்கிடையே எழுதி வருபவர்கள். பார்க்கின்ற வேலைகளுக்கிடையே நேரம் கிடைப்பது அபூர்வம். அப்புறம் தூரம். உங்கள் இருவருக்குமிடையே தூரம் பிரச்னை இல்லை என்கிற போது அடிக்கடி நிகழட்டும் உங்கள் சந்திப்பு. வளரட்டும் உங்கள் நட்பு.


  பிரபல பதிவர்கள் குறித்து மோகன் சார் சொல்வதே சரியாக இருக்க முடியும். எழுத்து வேறு இயல்பு வேறாக இருப்பவர்கள் பலர். எழுத்தும் இயல்பும் ஒன்றாக அமைவது வெகு சிலருக்கே. அதில் ஒருவர்தான் மோகன் சார்.


  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 5. நன்றி மோகன், சந்தர்ப்பம் கிடைத்தால் அவசியம் மற்ற பதிவர்களையும் சந்திக்கிறேன். ஹாப்பி? :)

  நன்றி ராமலஷ்மி மேடம்

  நன்றி ஹுசைனம்மா, எங்களை சந்திக்கவைத்த தலைவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் :)

  நன்றி அமைதி அப்பா, மோகனும் சொல்லியிருக்கிறார். நீங்களும் சொல்கிறீர்கள். கண்டிப்பாக பிரபல பதிவர்கள் குறித்த எனது கருத்தை மாற்றிகொள்கிறேன்.

  ஒன்றே ஒன்றுதான் உறுத்துகிறது. பின்னூட்டம் இடுபவர்களுக்கு ஏன் சில பிரபலங்கள் பதில் பின்னூட்டமோ, நன்றி பின்னூட்டமோ இடுவதில்லை?

  ReplyDelete
 6. உங்கள் நடை இயல்பாக இருக்கிறது. மோகன்குமார் சார்தான் நான் 2011-ல் தமிழ்மணம் ரேங்க் எடுத்திருந்தபோது எனக்கு முதன் முதலில் வாழ்த்து சொன்னவர். அன்பு கண்டு நெகிழ்ந்தேன். டீசண்டான பிளாக்கர்தான் அவர். இந்த குழு மனப்பான்மைகளில் சிக்கிக் கொள்வதை நானும்தான் விரும்பவில்லை. ஒன்றே ஒன்றுதான் உறுத்துகிறது. பின்னூட்டம் இடுபவர்களுக்கு ஏன் சில பிரபலங்கள் பதில் பின்னூட்டமோ, நன்றி பின்னூட்டமோ இடுவதில்லை? என்ற உங்கள கேள்விதான் எனக்கும் சில நேரங்களில் எழுகிறது. அதுவும் இந்த ஜாக்கிசேகர் இருக்கிறாரே. நான் எழுதினால் எழுதுவேன். எழுதாவிட்டால் இல்லை என்ற ரீதியில் சொல்லிப்போகும் இந்த எடுத்தெறியும் போக்கில் சொல்லும் போக்கு எனக்கு வருத்தமே. (பெயரைச் சொன்னால் தவறா சார். மனதில் பட்டதை சொல்கிறேன்) இவரைப் போல சிலர் உண்டு. நான் பொதுவாக இவர்களை படிப்பதில்லை. எவருக்குமே கமெண்ட் போடாத ஒருவருக்கும் யாருமே கமெண்ட் போடமாட்டார்கள் என்பது என் கருத்து.

  ReplyDelete
 7. ரகு said

  ஒன்றே ஒன்றுதான் உறுத்துகிறது. பின்னூட்டம் இடுபவர்களுக்கு ஏன் சில பிரபலங்கள் பதில் பின்னூட்டமோ, நன்றி பின்னூட்டமோ இடுவதில்லை?

  ரகு: ஒரு லெவலுக்கு மேல் வளர்ந்த பின் சில பதிவர்கள் தங்களை எழுத்தாளர்கள் என நினைக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.அல்லது எழுத்தாளர்கள் ஆகிவிடுகிறார்கள். அதன் பின் " எழுதுவது மட்டும் தான் என் வேலை. எழுதி முடித்த பின் அடுத்த படைப்பை குறித்து சிந்திப்பேனே ஒழிய கமன்ட் போடுவோருக்கு பதில் சொல்வது என் வேலை அல்ல" என நினைக்கிறார்கள். இதன் அடுத்த படியாக கமன்ட் பாக்சையே தூக்கி விடுவோரும் உண்டு. இது சரியா தவறா என விவாதிக்க விரும்ப வில்லை. சொல்ல போனால் எல்லா கமன்டுக்கும் " நன்றி" என சொல்லாதாது கூட பரவாயில்லை. பதிவை குறித்து சிலர் எழுப்பும் கேள்விகளுக்காவது அவர்கள் பதில் தரலாம் !

  ReplyDelete
 8. நன்றி துரைடேனியல், சில மாதங்களுக்கு முன் வாசகர் ஒருவர் சுட்டி காட்டிய பிறகு, ஜாக்கி தொடர்ந்து நன்றி பின்னூட்டம் இடுகிறார் என்றே நினைக்கிறேன்.

  //எவருக்குமே கமெண்ட் போடாத ஒருவருக்கும் யாருமே கமெண்ட் போடமாட்டார்கள் என்பது என் கருத்து.//

  பதில் பின்னூட்டம் என்பதை "உங்களுக்கு நான் கமெண்ட் போடுறேன், எனக்கு நீங்க கமெண்ட் போடுங்க" என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. பதிவு குறித்து ஏதேனும் கேள்வி எழுப்பினால் கூட சிலர் கண்டுகொள்வதில்லை. அதைத்தான் பதில் பின்னூட்டம் இடுவதில்லை என்று சொல்லியிருந்தேன்.


  //கமன்ட் பாக்சையே தூக்கி விடுவோரும் உண்டு//

  நன்றி மோகன், இது தவறென்று நான் நினைக்கவில்லை! :)

  ஹிட்ஸ் வேண்டும், கமெண்ட்ஸ் வேண்டும், ஆனால் நன்றி சொல்வதற்கெல்லாம் எனக்கு டைம் இல்லை என்பதுதான் தவறான attitudeஆக தோன்றுகிறது.

  ReplyDelete
 9. எழுத்தும் இயல்பும் ஒன்றாக அமைவது வெகு சிலருக்கே. //பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 10. சரி ரெண்டு பேரும் படிச்ச முடிச்ச புக்கெயெல்லாம் இங்க அனுப்பி வைங்க பார்க்கலாம். கூடவே தலப்பாக்கட்டு பிரியாணி பார்சல் ஒன்னும்:))

  I just love it:))

  ReplyDelete
 11. நன்றி வித்யா, கண்டிப்பா புக்ஸ் அனுப்பறேன். நீங்க தலப்பாகட்டி போயிருக்கீங்களா? 'கொட்டிக்கலாம் வாங்க'வில் வாசிச்ச மாதிரி ஞாபகம் இல்ல :)

  ReplyDelete
 12. I second the post. Mohan is humble, enterprising and smart person.

  Only thin i missed was thalapakkatti briyani :)

  ReplyDelete
 13. நன்றி கார்க்கி, எட்டி பார்க்கிற தூரத்தில் இருந்துகிட்டு இன்னும் தலப்பாகட்டிக்கு போகாம இருக்கீங்களே...bad :)

  ReplyDelete
 14. தொலைபேசி மூலமும் மின்னஞ்சல் மூலமும் அடிக்கடி தொடர்பு கொண்டிருக்கிறோம். சென்ற சென்னை பயணத்தின் போது சந்தித்தோம்... நல்ல மனிதர். உங்கள் சந்திப்பினைப் பற்றி நன்றாக எழுதி இருக்கீங்க ரகு! வாழ்த்துகள்.

  இனித் தொடர்ந்து வருகிறேன்.

  ReplyDelete