Thursday, January 19, 2012

சத்யம் சினிமாஸ் - பெஸ்ட் இன் சென்னை

அவதார் ரிலீஸ் ஆகி இருந்த சமயம். சென்னையில் எந்த தியேட்டரிலும் வார இறுதியில் டிக்கெட் கிடைக்கவில்லை. பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் அதிகமாக இருந்தது. சரி ஊரிலேயே பார்த்து விடலாம் என்று முடிவு செய்தேன். மாலை 6:30 மணிக்கு ஷோ. கூட்டம் அதிகம்தான். அடித்து பிடித்து டிக்கெட் வாங்கியாகிவிட்டது.

தியேட்டர் உள்ளே சென்றேன். சீட்டு நம்பர் எல்லாம் கிடையாது. கொஞ்சம் புண்ணியம் செய்திருந்தால் ஃபேன் இருக்கும் பகுதியில் சீட் கிடைக்கும். இதற்கு சாமர்த்தியமும் மிக அவசியம். அங்கிங்கு தேடி நல்ல இடத்தை பிடித்து உட்கார்ந்தேன். உலகமே எதிர்பார்த்த சினிமா இன்னும் சில நிமிடங்களில் நானும் காணப்போகிறேன். மகிழ்ச்சியாக இருந்தது. 

படம் ஆரம்பித்தது. வடிவேலு சொல்வதுபோல் நன்றாகத்தான் போய்கொண்டிருந்தது. பத்து பதினைந்து நிமிடங்களில் சிகரெட் வாசம் வர,  என்னடா இது என்று பக்கத்தில் திரும்பி பார்த்தால் இரு நல்ல 'குடிமகன்கள்' வாயில் சிகரெட்டோடும், கையில் பாட்டிலோடும், தியேட்டரை டெம்பரவரி 'பார்' ஆக மாற்றிகொண்டிருந்தனர். எனக்கு கடுப்பாகிவிட்டது. கேட்காவிட்டால் வேலைக்காகாது. கேட்டேன்.

"ஹலோ இதென்ன தியேட்டரா இல்ல பாரா?"

அந்த 'இருவரில்', ஒரு பிரகாஷ்ராஜ் "டேய் இங்க குடிக்க கூடாதாம்டா" என்று பக்கத்திலிருந்த மோகன்லாலை உசுப்பேற்ற, அவர் ஒருவித வெறுப்பு கலந்த சலிப்போடு என்னை பார்த்துவிட்டு, "எழுந்து போலாம் வா" என்று பிரகாஷ்ராஜை கூப்பிட்டுக்கொண்டு தியேட்டரை விட்டு வெளியே போய்விட்டார். 

அவர்கள் போய்விட்டாலும், என்னடா இது தியேட்டரில் போய் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்களே என்ற எண்ணம்தான் மனதில் மேலோங்கி இருந்தது. படத்தை என்னால் முழுமையாக என்ஜாய் பண்ணி பார்க்கமுடியவில்லை. ரொம்பவும் ஆசைப்பட்டு போன படம். கொஞ்சம் தலைவலியோடு திரும்பி வந்ததுதான் மிச்சம்.

அதிலிருந்து ஏதாவது ஒரு படத்தை பார்க்கவேண்டும் என்று ஆசைபட்டாலே என்னுடைய முதல் மற்றும் ஒரே சாய்ஸ் 'சத்யம்'தான். டிக்கெட் விலை 120, 115 என்று இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் கண்டிப்பாக சத்யம் வொர்த். சத்யம் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். இது தெரியாதவர்களுக்காக - வாரயிறுதியில் போவதென்றால் புதன் கிழமை காலை ஆறு மணிக்கே ஆன்லைனில் புக் செய்துகொள்ளுங்கள். கொஞ்சம் தாமதித்தாலும் டிக்கெட் கிடைப்பது கஷ்டம்.  பின்னர் உங்கள் மொபைலுக்கு டிக்கெட் கன்ஃபர்மேஷன் மெசேஜ் வரும். அதை சேவ் பண்ணிகொள்ளுங்கள். அது போதும். அதோடு படம் போவதற்கு ஐந்து நிமிடம் முன்னால் தியேட்டருக்கு போய் கவுண்டரில் டிக்கெட் ஐடி சொல்லி டிக்கெட் வாங்கிகொள்ளலாம். 

இரு சக்கர வண்டிகளுக்கு பார்க்கிங் கட்டணமாக சில தியேட்டர்கள் எல்லாம் ரூ.20௦ வாங்கும் காலகட்டத்தில், இன்னும் சத்யத்தில் பத்து ரூபாய்தான். என்ன, வெயில் அதிகமாக இருந்தால் வண்டிக்கு சன்பாத்தும், மழையாக இருந்தால், ஃப்ரீ வாட்டர் சர்வீசும் கிடைப்பது தவிர்க்க முடியாதது. மற்றபடி குறையொன்றுமில்லை.

பெரும்பாலும் ஞாயிறன்று புக் செய்துவிடுவதால், அண்ணா சாலையிலிருக்கும் வழக்கமான போக்குவரத்து இம்சை ஏதும் இருப்பதில்லை. வேளச்சேரியிலிருந்து சத்யம் போவதற்கு அரை மணி நேரம்தான் ஆகிறது. இப்படித்தான் கடந்த சில மாதங்களில் மங்காத்தா, Rockstar,  The Adventures of Tintin,  Mission Impossible: Ghost Protocol,  Don 2 போன்ற படங்களை எந்த வித மன உளைச்சலும், உடல் அலைச்சலும் இல்லாமல் நிம்மதியாக ரசித்து பார்த்தேன்.

ஆனால் எல்லா படங்களையும் சத்யத்தில்தான் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிப்பதில்லை. இப்போதும் சில படங்களை வார இறுதியில் ஊருக்கு போகும்போதுதான் பார்க்கிறேன். ஒரு சில படங்கள் மட்டுமே 'இத சத்யம்லதான் பாக்கணும்' என்று தோன்ற வைக்கின்றன. அடுத்த சில மாதங்களுக்கு நோ சத்யம். பில்லா 2விற்காக வெய்ட்டிங்!4 comments:

 1. நம்ம மெட்ராஸ் பவன் சிவகுமார் கூட சத்யமில் மட்டும் தான் படம் பார்ப்பார். அதுவும் காலை காட்சி (ஏழு மணி இருந்தா கூட) பார்துருவார். இதுக்கு காரணம் "மதியம் போகணும்னா காலையில் இருந்து இதே யோசனையா இருப்போம். காலையே போயிட்டு வந்தா வேலை முடிஞ்சுது !

  சென்னையின் சிறந்த தியேட்டர் சத்யம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. புது படம் ரிலீஸ் அன்று மற்ற தியேட்டர்கள் கண்ணா பின்னா என டிக்கெட் விலை வைக்கும் போது இவர்கள் அதே 120-ல் விற்பது பெரிய விஷயம்.

  நான் சத்யம் போய் பல வருஷம் ஆகிடுச்சு. தூரம் தான் காரணம்.

  ReplyDelete
 2. நான் கடைசியாக சத்யத்தில் பார்த்த படம் மங்காத்தா.

  சத்யமின் க்ரூப்பான ESCAPEல் ஒரு படம் பாருங்க. சத்யத்தை விட தரம் அதிகம். லவ்லி ஆம்பியன்ஸ்.

  கொடுக்கிற காசு செரிக்கும்.

  ReplyDelete
 3. “வித்யா said...

  நான் கடைசியாக சத்யத்தில் பார்த்த படம் மங்காத்தா.

  சத்யமின் க்ரூப்பான ESCAPEல் ஒரு படம் பாருங்க. சத்யத்தை விட தரம் அதிகம். லவ்லி ஆம்பியன்ஸ்.

  கொடுக்கிற காசு செரிக்கும்.“

  ஆனால் பார்க்கிங் கட்டணம் அய்யோ... அய்யோ... என்று இருக்கும்...

  ReplyDelete
 4. நன்றி மோகன், வேளச்சேரி வந்து மவுண்ட் ரோட் புடிங்க. அரை மணி நேரம்தான் ஆகும்...ஞாயிற்றுக்கிழமைகளில் :)

  நன்றி வித்யா, எஸ்கேப்பில் இன்னும் ஒரு படம் கூட பார்த்ததில்லை. சத்யத்தை விட தரம் அதிகம்ங்கறீங்க. நெக்ஸ்ட் டைம் அங்க ட்ரை பண்ணி பார்க்கிறேன்

  நன்றி குடந்தை அன்புமணி, சிட்டி செண்டரிலும் அதே அதே :(

  ReplyDelete