Wednesday, June 27, 2012

ஒரு நடுப்பகல் மரணம் - சுஜாதா


சில கதைகளின் பெயரை பார்த்தாலே சட்டென ஈர்த்துவிடும். ஆனாலும் இருமுறை யோசிப்பேன், தலைப்பில் இருக்கும் வசீகரம் உள்ளடக்கத்தில் இருக்குமா என. இந்த புத்தகம் வாங்குவதற்கு அப்படிப்பட்ட யோசனை எதுவும் தேவைப்படவில்லை. காரணம், மேலட்டையில் இருந்த மூன்று எழுத்துக்கள். சு. ஜா. தா.

பங்களூருக்கு (வாத்தியாருக்கு எப்பவும் பங்களூர்தான், பெங்களூர் அல்ல) தேனிலவு செல்கிறார்கள் புதுமண ஜோடி. ஒரு மதிய வேளையில், மனைவி வெளியே சென்றிருக்கும்போது, ஹோட்டல் அறையிலேயே வைத்து கணவன் கொலை செய்யப்படுகிறான். அறை கண்ணாடியில் ரத்தத்தால் MAYA என்று எழுதப்பட்டிருக்கிறது.

ஆம். கொலை செய்த நபர், 'முடிந்தால் என்னை பிடியுங்கள் பார்க்கலாம்' என்று கிட்டத்தட்ட நேரடியாகவே போலீசுக்கு சவால் விட, கதை சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. MAYA என்றால் என்ன, எதை குறிக்கிறது என்று பின்தொடரும் போலீஸ், ஒரு கட்டத்தில், கொலைகாரனை கைது செய்கிறார்கள்.

கடைசியில், எல்லோரையும் அழைத்து, யார் கொலை செய்தது, எப்படி கண்டுபிடித்தோம் என்பதையெல்லாம் போலீசார் விளக்குகிறார்கள். இங்கு ஒரு ட்விஸ்ட் வைக்கிறார் வாத்தியார். அது என்ன என்பதை இந்த கதையை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.



இதை விட சுருக்கமாக இந்த கதையை பற்றி சொல்ல எனக்கு தெரியவில்லை. வேறு எதை சொன்னாலும் சஸ்பென்ஸ் உடைந்துவிடும். அதனால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

கதை பெரும்பாலும் பெண்ணின் பார்வையிலேயே செல்கிறது. திருமணத்திற்கு பின் பெற்றோரை பிரிவது, முதலிரவு, தேனிலவு, கணவன் கொலையுண்ட பின் கிடைக்கும் அதிர்ச்சி, மாமியாருடன் ஏற்படும் உரசல் என்று பல விஷயங்கள்.

கணவனை இழந்த இளம் பெண்கள், உறவினர்களாக இருந்தாலும் வேறு ஆண்களோடு பேசினால், அதை எல்லோரும் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை. கண், காது, மூக்கு மட்டுமின்றி, இன்ன பிற அங்கங்களும் வைத்து அழகு பார்த்து, ஆகச் சிறந்த கதையொன்றை கட்டுவதில் நம் சமூகம் இன்னும் சிறந்து விளங்கிகொண்டிருக்கிறது. இதை ஒரு புத்திமதி மாதிரியோ, கருத்து மாதிரியோ இடித்துரைக்காமல், போகிற போக்கில், ஒரு கதாபாத்திரம் வழியாக மிகச் சாதாரணமாக சொல்லிவிட்டு போகிறார் வாத்தியார்.

மற்ற கதைகளை ஒப்பிடுகையில், இந்த கதையின் க்ளைமேக்ஸ் அவ்வளவாக பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்தாதது ஒரு மைனஸ்தான். ஆனால் அதையும் தாண்டி இந்த கதையை ரசிக்க வைப்பது, அதன் ஃப்ளோ. அடுத்து என்ன ஆகும், அடுத்து என்ன ஆகும் என்று ஒரு படபடப்புடன் ஓடிக்கொண்டே இருக்கிறது கதை!

Strictly for Sujatha Fans!


4 comments:

  1. நான் இன்னும் படிக்கலை. சோ ரீ டைரக்ட் பிளீஸ்

    அப்பப்ப படிக்கிற புக், இன்னும் கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் இங்கே ஷேர் பண்ணுங்க நிறைய கேப் விட வேணாம்

    ReplyDelete
  2. சுஜாதாவின் புத்தகப் பட்டியல் ஒன்னும் போடுங்க. சென்னைக்குப்போகும் வேளை நெருங்கி வருது.

    வாங்கணும் வாங்கணும்

    ReplyDelete
  3. முன்பே படித்த நினைவில்லை....

    //சுஜாதாவின் புத்தகப் பட்டியல் ஒன்னும் போடுங்க. //

    ரிப்பீட்டு!!!

    ReplyDelete
  4. நன்றி மோகன், கண்டிப்பா...அடுத்த சந்திப்பின்போது கொண்டுவருகிறேன் :)

    எழுதக்கூடாதுன்னு இல்லை, அடிக்ட் ஆகிடகூடாதேன்னு ஒரு சின்ன பயம்தான் காரணம். இனி அதிகம் இடைவெளி இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன்.

    நன்றி டீச்சர், இன்னொரு கதையும் வாசித்து முடித்திருக்கிறேன். விரைவில் பகிர்கிறேன்

    நன்றி வெங்கட், லிஸ்ட் ரெடி பண்றேன்!

    ReplyDelete