Wednesday, May 09, 2012

தி.நகர்

தி.நகர். சென்னையின் அனைத்து தேவதைகளும் சங்கமிக்கும் பூந்தோட்டம். பீஹார் - வேளச்சேரி. இவற்றிற்கெல்லாம் அஞ்சவே இல்லை. கொஞ்சம் கூட என்கவுண்டர் பயமின்றி, வருவோர் போவோரையெல்லாம், கடைக்கண் பார்வையிலேயே போட்டு தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள் அழகான ராட்சசிகள். 

கிட்டத்தட்ட  ஆறு மாதங்களுக்குப் பின் கடந்த வாரம்தான் தி.நகர் செல்ல முடிந்தது. சம்மரை சமாளிப்பதற்காக அம்மாவுக்கும் பாட்டிக்கும், ஈரோடு காட்டன், இம்பீரியல் வகை புடவைகளை ஒவ்வொரு வருடமும் எடுத்துகொடுப்பதுண்டு. எப்போதும் போத்தீஸ்தான் முதல் மற்றும் ஒரே சாய்ஸ்.

ஆனால் இந்த வருடம் போத்தீஸ் கொஞ்சம் ஏமாற்றம்தான். அரை மணி நேரம் சுற்றியும் எதுவும் பிடிக்கவில்லை. எனவே குமரனில் எட்டி பார்த்தேன். இங்கும் மனதுக்கு திருப்தி அளிக்கவில்லை.  சுமார்தான். இரண்டு புடவைகளை மட்டும் எடுத்துக்கொண்டு நடையை கட்டினேன்.

அடுத்து சென்னை சில்க்ஸ். நன்றாக இருந்தால் இங்கு எடுப்போம். இல்லையென்றால் ஊருக்கு செல்லும்போது அங்கேயே எடுத்துவிடலாம் என்று அரை மனதோடுதான் உள்ளே சென்றேன். ஆச்சரியம்! நிஜமாகவே அழகழகான டிசைன்கள். ஒவ்வொரு புடவையும் ஏறக்குறைய ரூ.300 ரேஞ்சுக்கு இருக்கிறது. அவ்வளவும் வொர்த். தரத்திற்கும் குறைவில்லை.

சென்னை சில்க்ஸ்காரர்கள் புத்திசாலிகள். உடல் குளிர ஜம்மென்று ஏஸியும், மனம் குளிர  கும்மென்று அனுஷ்கா ஸ்டில்லும் ஒட்டிவைத்து நம்மை ஈர்த்துவிடுகிறார்கள். காய்கிற வெயிலுக்கு, அங்கேயே இன்னும் கொஞ்ச நேரம் சுற்றிகொண்டிருக்கலாம் போலிருந்தது. ஹும்ம்ம்...என்ன செய்ய? சில பல புடவைகளை அள்ளிக்கொண்டு கிளம்பினேன்.
  

தி.நகர் நொறுக்ஸ்

#பேருந்தைவிட ரயில்தான் வசதியாக இருக்கிறது. மாடி ரயிலில் பீச் ஸ்டேஷனுக்கு சென்று, அங்கிருந்து மாம்பலம். சற்று வெயில் நேரத்தில் சென்றால் கூட்டமும் இருக்காது. பர்ஸுக்கும் பங்கம் இல்லை.

#வெயில் காலம் என்பதால் எல்லா ஜூஸ், ஐஸ்க்ரீம் கடைகளிலும் கூட்டம் அம்முகிறது. சில கடைகளில் இன்னமும் கண்ணாடி க்ளாசை ஜூஸுக்கு பயன்படுத்துகிறார்கள். இவற்றை கழுவுவதற்கு எந்தளவு அக்கறை காண்பிப்பார்கள் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. எனவே, எந்தவித கலப்படமுமின்றி, சுத்தமான முறையில் இயற்கை தரும் இளநீர்தான் சாலச்சிறந்ததாக படுகிறது எனக்கு.

#தி.நகரில் மட்டும், "நடைபாதை" என்பதை "கடைபாதை" என பெயர்மாற்றம் செய்திட தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரவேண்டும். முழுக்க முழுக்க கடைகள்தான். சாலையில்தான் நீங்கள் கண்டிப்பாக நடந்தாக வேண்டும். இந்த நடைபாதை வியாபாரிகள் யாரும் திமுகவை சேர்ந்தவர்கள் கிடையாது என்பதை ஆணித்தரமாக நம்புகிறேன். இல்லாவிடில், எப்போதோ நில ஆக்கிரமிப்பு வழக்கில் உள்ளே சென்றிருப்பர்.

#திடீரென்று ஏதாவது ஒரு சந்தில் இருந்து, ஒரு ஆட்டோவோ, ஹோண்டா ஆக்டிவாவோ உங்களை ஏறக்குறைய இடித்துவிடும் அளவுக்கு வந்து, ப்ரேக் போட்டு கிறீச்ச்ச்ச்ச்ச்ச்சும். ஓட்டுபவர், உங்கள் குலம், கோத்திரம் ஆகியவற்றை கேட்காமலேயே, கொஞ்சம் அர்ச்சனை செய்துவிட்டு செல்வார். இந்த அர்ச்சனை ஆண்களுக்கு மட்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

#ரங்கநாதன் தெருவில் சரவணா ஸ்டோர்ஸ் உட்பட பல இடங்களில் வெளியே ஸ்நாக்ஸ் அயிட்டங்களை விற்றுகொண்டிருக்கிறார்கள். ஈக்களுக்கும் இந்த ஸ்நாக்ஸ் அயிட்டங்கள் ரொம்ப ஃபேவரைட் போல. சும்மா, பறந்து பறந்து ருசித்துகொண்டிருக்கின்றன. ஜனங்கள் இதையெல்லாம் துளி கூட கண்டுகொள்ளவில்லை. ஒவ்வொரு அயிட்டத்தையும் வெளுத்து வாங்குகிறார்கள். யோவ், இப்படிலாம் இருந்தா பின்ன ஏன் பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல், நீர்வன, பறப்பன, ஊர்வன காய்ச்சல்லாம் வராது?

இவ்வளவு பேர் கூடும் இடத்தில், ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், மக்களை ஒழுங்குபடுத்துவதற்கோ, அவசர உதவிக்கோ போதுமான வசதிகள் இல்லை என்றுதான் தோன்றுகிறது. என்னதான், இது போன்ற ஒரு சில குறைகள் இருந்தாலும், இங்கு கிடைக்கும் பல பொருட்கள் நாம் வசிக்கும் ஏரியாவிலேயே கிடைத்தாலும், இன்னும் தி.நகர் சலிக்கவில்லை என்பது மட்டும் உண்மை.

4 comments:

 1. உண்மை தான். தி நகர் பல்வேறு ஆச்சரியங்களை புதைத்து வைத்துள்ளது. சென்னை வந்த புதிதில் ரங்கநாதன் தெருவில் ஒரு லாட்ஜில் வசித்துள்ளேன் செம வித்தியாச அனுபவம். இரவு/ அதிகாலைகளில் ஆட்களே இன்றி அத்தெருவை பார்த்துள்ளேன்

  நீங்கள் போட்ட படங்களுக்கு ஸ்பெஷல் நன்றி. சென்னை சில்க்சும் அதனால் தான் பிடித்திருக்கும்

  தனியாவே போய் புடவை எடுக்குறீங்க. கல்யாணத்துக்கு ரெடி ஆயாச்சுன்னு யாருக்கோ சொல்ற மாதிரி தெரியுது :))

  ReplyDelete
 2. தனியாப்போய் புடவை எடுப்பதுதான் பெஸ்ட்!

  நம் விருப்பத்துக்கு வாங்கலாம். நானும் மாமியார், பெரியம்மா, அத்தைக்கு எடுக்கணுமுன்னா சுந்தரி ஸில்க்ஸ் போவேன்.

  சென்னை சில்க்ஸ் இந்தமுறை போகணும்.

  காலை எட்டரைக்கு ரங்கநாதன் தெரு ஜிலோன்னு இருக்கும்:-))))) ஹாயா கைவீசி நடக்கலாம்.

  ReplyDelete
 3. நன்றி மோகன், நான் எடுக்கும் புடவைகள் நல்லா இருக்குன்னு அம்மா சொல்லியிருக்காங்க. அந்த தைரியத்தில்தான் தனியா போறேன். மத்தபடி யாருக்கும் மெசெஜ்லாம் சொல்லல :)))

  நன்றி துளசி மேடம், உண்மைதான். தனியா போய் எடுக்கும்போது நிறைய நேரம் செலவழிக்கலாம். நான் ஒன்பதரை மணியளவில் போயிருந்தேன். அப்போவே கூட்டம்தான்.

  சுந்தரி சில்க்ஸ் - இதுவரை பார்த்ததில்லை. அடுத்த முறை போய் பார்க்கணும்.

  ReplyDelete
 4. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
  நன்றி

  வலையகம்

  ReplyDelete