Thursday, March 29, 2012

சென்னையில் ஒரு வெயில் காலம்

என்ன ஆச்சு தமிழ் சினிமாவுக்கு?

முன்பெல்லாம், இந்த படம் போகலாமா, அந்த படம் போகலாமா என்று முடிவெடுக்க முடியாமல் திணறுவேன். சமீபத்தில் அம்புலிக்குப் பிறகு எந்த படமும் பார்க்கவில்லை. கடந்த நான்கைந்து வாரங்களில் வெளியான எந்த படத்தையும் பார்க்கும் ஆர்வம் துளிகூட இல்லை. அரவான், கழுகு போன்ற படங்களை, பார்க்கலாமாஆஆ என்று யோசித்தால், சுடச்சுட விமர்சனங்கள் வெளியாகி அதற்கும் முட்டுக்கட்டை போட்டுவிடுகிறது.

வாரத்திற்கு ஒரு படம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, மாதத்திற்கு ஒரு படம் என்று மாறி, இப்போது ஒன்றிரண்டு மாதங்களுக்கு ஒரு படம் என்ற அளவில் வந்திருக்கிறது. நாற்பதாண்டுகள் கழித்து ரிலீசாகியிருக்கும் "கர்ணன்" படம் இந்த அளவு சக்கை போடு போடுவதற்கு சரியான போட்டி இல்லாததும் ஒரு காரணம் என்றுதான் தோன்றுகிறது.





ஆயிரம் சொல்லுங்க, சச்சினின் நூறு நூறுதான்!

நூறாவது சதத்தை கடப்பதற்கு சச்சின் எவ்வளவு கஷ்டப்பட்டாரோ, அதே அளவு சச்சினின் ரசிகனாய் நாமும் பட வேண்டியதாகிவிட்டது. நூறாவது சதம் முன்பு வரை, "99 சதம் அடித்தவருக்கு இன்னும் ஒரு சதம் அடிக்கவா தெரியாது?" என்று பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தேன். அந்த போட்டியில் தோற்ற பின், மறுநாள் அலுவலகத்தில் பழைய பல்லவியை பாட ஆரம்பித்துவிட்டார்கள், "சச்சின் செஞ்சுரி அடிச்சா இந்தியா தோத்துடும்".

சச்சின் இந்த முறை மெதுவாக ஆடினார் என்பதை மட்டும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் டீம் ஸ்கோரை நினைத்து பாருங்கள். 289. பங்களாதேஷுக்கு எதிராக இதனை defend பண்ண முடியவில்லை என்றால் கண்டிப்பாக குறை பெளலிங் மீதுதான். ஆனாலும் சச்சின் பெளலர்களை குறை கூறவில்லை. போட்டி முடிந்த பின் சச்சின் சொன்ன வார்த்தைகள் "Australia scored 434 but still lost to South Africa".  மேன்மக்கள்!

அதே பங்களாதேஷ் டீமை 260க்கும் குறைவான் டார்கெட் வைத்து, லீக் போட்டியிலும், இறுதிப் போட்டியிலும் வென்றது பாகிஸ்தான். கோஹ்லி, ரெய்னா, ரோஹித் ஷர்மா என்று பேட்டிங்கில் அசுரத்தனமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்திய அணி, பெளலிங்கில் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

அன்னை அரசு - அம்மையார் அரசு 

பத்து மாதங்கள் ஆன பின்பும், தமிழக அரசை பாராட்டும்படியான வாய்ப்பு இன்னும் அமையவில்லை. எந்த நேரத்தில் சமச்சீர்க்கல்வி திட்டத்தில் கை வைத்தார்களோ, தொட்டதெல்லாம் "துலங்கிக்கொண்டிருக்கிறது". மின்வெட்டு பிரச்னை பற்றி எல்லோரும் பேசி, புலம்பி, திட்டி தீர்த்து இப்போது அதற்கு பழகிக்கொண்டார்கள். மணி பத்து ஆகப்போகுது..கரண்ட் கட் ஆகற நேரம். ரைட்டு, தண்ணி புடிச்சு வெச்சுடுவோம்..இதுதான் வாழ்கை முறையாக மாறிபோயிருக்கிறது.

அட மாநில அரசுதான் இப்படி இருக்கிறது என்றால், மத்திய அரசு "வடக்கு பட்டி ராமசாமிக்கு கொடுத்த பணம் ஊஊ" கதையாக இருக்கிறது. தொடர்ந்து ஊழல் வழக்குகள், பெட்ரோல் விலையேற்றம், இலங்கைக்கெதிரான தீர்மானத்தில் வழா வழா கொழா கொழா நிலை என்று பத்திரிக்கை தலைப்புச் செய்திகளுக்கு செம தீனி போடுகிறார்கள், கொஞ்சம் நெருப்பு அள்ளி நம் வயிற்றில் போட்டுவிட்டு.

இரண்டு அரசுகளுக்கும் சரியான மாற்று இல்லாததுதான் இன்னும் எரிச்சலாக இருக்கிறது.....:-(

சென்னையில் ஒரு வெயில் காலம்

மே மாதத்தில் காய வேண்டிய வெயில் மார்ச் மாதத்திலேயே காய்ந்து, நாம் சென்னையில்தான் இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது. வெயிலை சமாளிக்க நான் ஃபாலோ பண்ணும் ஒரு விஷயம், அரிசி சாப்பாட்டை குறைத்துக்கொள்வது. சாப்பாட்டை குறைத்துக்கொண்டு நிறைய பழங்கள், இளநீர், ஜூஸ் போன்றவற்றை எடுத்துக்கொண்டால் வெயிலை ஓரளவு சமாளிக்க முடியும்.

எந்த கடையில் ஜூஸ் குடித்தாலும், ஐஸ் போடாமல் குடிப்பது சாலச்சிறந்தது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, ஐஸ் போட்டு குடிப்பது உடம்பை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவாது. இன்னொரு காரணம், அவ்வளவு பெரிய ஐஸ் கட்டியை எப்படி தூள் தூளாக்குகிறார்கள் என்பதை பார்த்தால் சத்தியமாக ஐஸ் போட்டு ஜூஸ் குடிக்க மனசே வராது.

Let me be myself...please!

எல்லோரும் விரும்பும்படி நடந்துகொள்வது யாருக்கும் சாத்தியமில்லை. நம்மைச் சுற்றி பத்து பேர் இருந்தால், கண்டிப்பாக இரண்டு பேருக்காவது நம் மீது கொஞ்சம் பொறாமையோ, எரிச்சலோ இருக்கக்கூடும். எட்டு பேருக்கு நம்மை பிடித்திருந்தாலும், நம்மை பிடிக்காத இரண்டு பேரின் வார்த்தைகள் ஆறாத காயத்தை ஏற்படுத்திவிடுவதுண்டு. எனவே எல்லோருடைய விருப்பப் பட்டியலிலும் இடம் பெற வேண்டும் என்று ரொம்பவே மெனக்கெடுவேன்.

இப்போது அந்த ஆட்டிட்யூட் கொஞ்சம் மாறியிருக்கிறது. எல்லோருக்கும் பிடித்தவனாக மாற முயற்சிக்கையில், என்னுடைய தனித்தன்மையை இழப்பதை நன்றாக உணரமுடிகிறது. நான் நானாக இருக்கவே விரும்புகிறேன். என்னுடைய கோபம், அன்பு, நட்பு, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்வோர் மட்டும் எனக்கு நெருக்கமானவர்களாக இருந்தால் போதும். இதை திமிராக சொல்லவில்லை. If you can't love me, please ignore me..


8 comments:

  1. // If you can't love me, please ignore me.//
    நல்ல அழகான பஞ்ச்.. அர்த்தங்களும் நிறைய...
    நட்புடன்
    கவிதை காதலன்

    ReplyDelete
  2. சச்சின் நூறாவது நூறு அடிசிட்டாரா? :))

    வெய்யில்.. ஹும்

    தமிழ் படம் பற்றி நானும் நீங்கள் நினைத்ததை தான் நினைத்து கொண்டுள்ளேன்

    அனைத்து பகுதிகளும் அருமை. அவ்வப்போதாவது இப்படி எழுதுங்கள்

    ReplyDelete
  3. நன்றி கவிதை காதலன்

    நன்றி மோகன், காந்தி செத்துட்டாராங்கற மாதிரி கலாய்க்கறீங்க :)

    ReplyDelete
  4. வணக்கம் ரகு,
    உங்கள் பதிவு படிச்சு ரொம்ப நாள் ஆன மாதிரியிருக்கு... காரணம் நீங்களல்ல நான்தான்... சாரி...
    வெயிலில் இருந்து நாங்கள் (படக்குழு) தப்பிக்க முடிந்தவரை நைட் டைம் டிஸ்கஷன்-ஐ கையாளலாம் என்று முடிவெடுத்துள்ளோம்... ஆனா காமெடியென்னன்னா... 3 மணிக்கு மேல எல்லாரும் தூங்கிடுவோம்னு எல்லாருக்கும் தெரியும்... என்னயிருந்தாலும் நம்ம மிட்நைட் ப்ரேக் செஷன் மாதிரி மீண்டும் அமையுமா..?...
    -
    DREAMER

    ReplyDelete
  5. வாவ்.. நல்ல எழுத்து நடை. இப்போதான் முதல் முறையாக இங்கு வருகிறேன். தமிழ் சினிமா இப்பொழுது கொஞ்சம் மொக்கையாகத்தானிருக்கிறது. எல்லாமே பார்த்துச் சலித்த அதே கதைகளாக இருப்பதுவும் ஒரு காரணம் :))

    ReplyDelete
  6. நன்றி ஹரிஷ், அதெல்லாம் பொன்னான தருணங்கள்..:)

    நன்றி செல்வக்குமார், இந்த வருடம் முதல் மூன்று மாதங்களில் வந்த படங்களை வைத்து பார்த்தால், தமிழ் சினிமா கொஞ்சம் ஏமாற்றத்தைத்தான் கொடுத்திருக்கிறது

    ReplyDelete
  7. //எல்லோருக்கும் பிடித்தவனாக மாற முயற்சிக்கையில், என்னுடைய தனித்தன்மையை இழப்பதை நன்றாக உணரமுடிகிறது//....உண்மைதான் ரகு நானும் உணர்ந்து இருக்கேன்.

    ReplyDelete
  8. நன்றி ப்ரியா

    ReplyDelete