ஐ டூடா, நீயா வந்து சொல்வன்னு காத்துகிட்டு இருந்தேன்
சொல்லு, இன்னைக்கே வாழ ஆரம்பிக்கலாம். ஐ கேன்ட் வெய்ட் டு ஸ்டார்ட் எ லைஃப் வித் யூ
ஐ லவ் யூடா. எப்ப நம்ம வீட்டுக்கு கூட்டிட்டுபோற?
அதன்பின் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்க்கையை ஆரம்பித்தார்கள் என்று கதை முடியும். கல்யாணம்? எதுக்கு? இன்னும் சில வருடங்கள் கழித்து இந்த கேள்வி பலரிடம் எழலாம். அமெரிக்காவில் அல்ல, இந்தியாவிலேதான்...
ஒரு ஆணும், பெண்ணும் திருமணமாகாமல் ஒன்றாக வாழ்வது அவர்களின் உரிமை. அதை சட்டப்படி குற்றம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. புராணத்தில் கிருஷ்ணனுக்கும், ராதாவுக்கும் இருந்த உறவும் ஏறக்குறைய இதே போன்றுதான். அதற்காக அவர்களை நாம் குற்றம் புரிந்தவர்கள் என்று கூறுகிறோமா? இது உச்ச நீதிமன்ற நீதிபதியின் கூற்று. இது எந்தளவில் நம்மிடையே சாத்தியம்?
இருபது வருடங்களுக்கு முன்பு டிஸ்கோதே, பப் என்றால் என்னவென்றே தெரியாது. எப்போது மேற்கத்திய கம்பெனிகள் இந்தியாவுக்கு வருகை தந்ததோ, அப்போதே அவர்களின் கலாச்சாரத்தையும் கூடவே கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள். மேற்கத்திய கம்பெனிகள் நம் நாட்டில் வந்தபின்பு பொருளாதாரம் முன்னேறியிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆகவே அவர்களிடத்தில் உன்னுடைய வாழ்க்கை முறை சரியல்ல என்பது யாராலும் வாதிடமுடியாத ஒன்று. அவர்களுடைய கலாச்சாரத்தால் நமக்கு நன்மை விளைந்திருக்கிறதா, தீமை விளைந்திருக்கிறதா என்ற வாதத்திற்குள் செல்ல நான் விரும்பவில்லை. நினைத்துப்பாருங்கள், 1970, 80களில் காதல் திருமணங்கள் எந்தளவு ஏற்றுக்கொள்ளப்பட்டது? ஆனால் இப்போது வெகு சாதாரணம். காலம் செல்ல செல்ல, நம் மக்கள் மாறிக்கொண்டே வருகிறார்கள் என்பதுதான் உண்மை.
ஏனென்று தெரியவில்லை. ஒரு ஆணும் பெண்ணும் திருமணமாகாமல் ஒன்றாக வாழ்கிறார்கள் என்றாலே உடனடியாக நம் கற்பனை குதிரை கொஞ்சமும் நாகரிகமின்றி அவர்களின் படுக்கை அறையைத்தான் எட்டிப் பார்க்கிறது. அவர்கள் இடையே இருப்பது வெறும் காமம் மட்டும்தானா? காதல், புரிந்துணர்வு, நட்பு ஆகியவை எல்லாம் இல்லையா? ஒரு ஆணுக்கு வேண்டுமானால் பெண்ணை பார்த்தவுடன் காம உணர்வு பொங்கி எழலாம். ஆனால் மனதால் நெருங்காமல், அவன் சிறந்த அழகனே ஆனாலும், பெண் அவனை ஏற்றுக்கொள்வதில்லை.
ஆறு வருடங்களுக்கு முன்பு, அப்போது நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த என் உறவினரின் மகன் "அண்ணா, இன்னைக்கு க்ளாஸ்ல விஜய், ஷீத்தல்கிட்ட ஐ லவ் யூ சொல்லி கிஸ் பண்ணிட்டாண்ணா" என்றான். சத்தியமாக அப்போது இது எனக்கு பேரதிர்ச்சி! நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது ஐ லவ் யூ என்றால் என்ன அர்த்தம் என்றே தெரியாது (ஹலோ, என்ன சிரிப்பு? நம்புங்க). அவன் சொன்னதற்கு என்ன பதில் சொல்வதன்றே எனக்கு தெரியவில்லை. ஏதேதோ பேச்சை மாற்றி சமாளித்தேன். ஆனால் யோசித்து பார்த்தபோது, சமுதாய மாற்றமும், மீடியாவுமே இதற்கு முக்கிய காரணம் என்று தோன்றியது. இன்று என் பெற்றோரிடம் சென்று "நான் அவளுடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழப்போகிறேன்" என்று சொன்னால், அவர்கள் அதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதையே இன்னும் இருபது, இருபத்தைந்து வருடங்கள் கழித்து என் மகன்/ள் என்னிடம் கூறி, அதற்கு நான் மறுத்தால், அவர்கள் "சரிப்பா உங்க இஷ்டம்" என்றா சொல்வார்கள்? ஹுஹும், அப்படி சொல்வார்கள் என்று எனக்கு தோன்றவில்லை.

இதெல்லாம் நம் நாட்டில் நடக்காது என்று வாதிடுபவர்களுக்கு ஒரு வாழும் உதாரணம் நடிகர் கமல்ஹாசன். என்னைக் கேட்டால், இருபத்தைந்து வருடங்களுக்கு பின் இருக்கவேண்டிய சினிமா அறிவை, வாழ்க்கை முறையை கமல் இப்போதே பெற்றிருக்கிறார் என்றே கூறுவேன். நான் அறிந்தவரை பல பெண்களுக்கு கமலை மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் அவருடைய வாழ்க்கை முறையை அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, "நூறு ரூபா செலவு பண்ணி படம் பாக்கறோம், படம் நல்லாருக்கா, அவர் நல்லா நடிச்சிருக்காரா? அவ்ளோதான் நமக்கு பேசற உரிமை. யார்கூட வாழணும்ங்கறது அவரோட விருப்பம். அதுல தலையிட நாம யாரு?"
லிவிங் டுகெதர் வாழ்க்கை முறை தற்போதிருக்கும் திருமண வாழ்க்கை முறையை விட சிறந்தது என்று நான் கூறவில்லை. ஆனால் சில வருடங்கள் கழித்து இந்த வாழ்க்கை முறைதான் அதிகரித்து இருக்கும். அதை எதிர்க்கவும் முடியாத சூழ்நிலையில்தான் நாமும் இருப்போம். இது கண்டிப்பாக கலாச்சார சீரழிவு கிடையாது. அப்படி பார்த்தால் 70களில் அதிகம் ஏற்றுக்கொள்ளப்படாத காதல் திருமணங்கள் கூட இன்றைய கலாச்சார சீரழிவுதான். அதை மட்டும் எப்படி இன்று நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது? நாம் விரும்புகிறோமோ இல்லையோ, நாளை நம் பிள்ளைகள் இந்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்தால் நம்மால் என்ன செய்ய முடியும்? அப்போது அவர்கள் "நான் இவனு/ளுடன் வாழப்போகிறேன்" என்று பெற்றோரிடம் தகவல் சொல்வார்களே தவிர, அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருக்க மாட்டார்கள். அடுத்த தலைமுறையின் ஐடியாலஜியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை நாம் இப்போதே உருவாக்கிக்கொள்வதை தவிர நமக்கு வேறு வழியில்லை.
இப்பதிவைப் பற்றி பல விமர்சனங்கள் எழலாம். ஆனால் விமர்சனங்களுக்கு பயந்தால் "யார் தெச்ச சட்டை, தாத்தா தெச்ச சட்டை" என்றுதான் எழுதிக்கொண்டிருக்க முடியும். அதனால், நாகரிகமான வார்த்தைகள் இருக்கும் பட்சத்தில், இப்பதிவைப் பற்றியோ, என்னைப் பற்றியோ வரும் விமர்சனங்களை வரவேற்கிறேன். முறையற்ற வார்த்தைகள் இருந்தால் டெலிட் செய்வதை தவிர வேறு வழியில்லை, மன்னியுங்கள் :)