Tuesday, November 15, 2011

ந‌ன்றி ம‌ற‌ப்ப‌து ந‌ன்ற‌ன்று


ஏழாம் அறிவு - முருக‌தாஸ் & சூர்யா. இந்த‌ காம்பினேஷ‌னுக்காக‌வும்,  ஆடியோ ரிலீஸின்போது கொடுத்த‌ ஹைப்'பையும் எதிர்பார்த்து, ஆசை ஆசையாக‌ ப‌ட‌ம் பார்க்க‌ப்போனால், நொந்துபோன‌துதான் மிச்ச‌ம். க‌ண்டிப்பாக‌ இது ஒரு வித்தியாச‌மான‌ க‌தைக்க‌ள‌ன். இதில் இருவேறு க‌ருத்துக‌ள் இல்லை. ஆனால் திரைக்க‌தை? செம‌ சொத‌ப்ப‌ல். முத‌ல் பாதியில் வ‌ரும் காட்சிக‌ள் பெரும‌ள‌வு ஈர்க்காத‌து திரைக்க‌தையின் ப‌ல‌வீன‌ம். ஹீரோவும் ஹீரோயினும் காத‌லித்தே ஆக‌வேண்டும் என்ற‌ க‌ட்டாய‌ விதியை த‌ய‌வுசெய்து மாத்துங்க‌ப்பா!

க‌தைக்கு ச‌ம்பந்த‌மே இல்லாம‌ல் வ‌ரும் காமெடி ட்ராக், குத்துப்பாட்டு, லூசு ஹீரோயின், லூசாக‌ இருந்தாலும் அவ‌ளையே காத‌லிக்கும் ஹீரோ..இது போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ள் இல்லாம‌ல் க‌ள‌மிற‌ங்கிய‌து ம‌ட்டுமே ஆறுதலாக‌ இருந்த‌து. ர‌ஜினி, க‌ம‌லுக்குப் பிற‌கு சூர்யாவின் திற‌மையை விய‌ந்து ர‌சிக்கிறேன். ப‌ட், வாட் டு டூ? பெட்ட‌ர் ல‌க் ஃபார் 'மாற்றான்' சூர்யா.

****************

இந்த‌ வ‌ருட‌ க‌டைசியில் பார்க்க‌வேண்டிய‌ ப‌ட‌ங்க‌ளின் லிஸ்ட் நீண்டுகொண்டே போகிற‌து. 

Ra.One,  The Adventures of Tintin,  Rockstar,  Don 2 & Mission Impossible 4. ஷாரூக்கிற்காக‌ ரா.ஒன்னை ரொம்ப‌வும் எதிர்பார்த்தேன். பார்க்கிற‌வ‌ர்க‌ளெல்லாம் நெக‌ட்டிவ்வாக‌வே சொல்லிக்கொண்டிருப்ப‌தால் இதை ம‌ட்டும் ஊரில் பார்த்துவிட்டு, ம‌ற்ற‌ ப‌ட‌ங்களையெல்லாம் ச‌த்ய‌ம், சத்ய‌ம் & ச‌த்ய‌ம்...

****************




சமீப‌ மாத‌ங்க‌ளில் புகைப்ப‌ட‌ம் எடுக்கும் ஆர்வ‌ம் அதிக‌மாயிருக்கிற‌து. பார்க்கும் விஷ‌ய‌ங்க‌ளில் பிடிக்கின்ற‌ எதையும் உட‌னே கைது செய்து, http://flickr.com/photos/raghuclicksல் ரிலீஸ் செய்துவிடுகிறேன். ஃபோட்டோஷாப்பில் எந்த‌ வித்தைக‌ளும் செய்வ‌தில்லை.

இர‌ண்டு கார‌ண‌ங்க‌ள். ஒன்று சோம்ப‌ல். ம‌ற்றொன்று, என்ன‌தான் நாம் எடுக்கும் ப‌ட‌ங்க‌ளை ஃபோட்டோஷாப்பில் விளையாடி கூடுத‌ல் அழ‌காக்கினாலும், அது உண்மைய‌ல்ல‌ என்று ம‌ன‌துக்கு உறுத்தும்போது ந‌ன்றாக‌ வ‌ந்திருக்கும் ஃபோட்டோ கூட‌ பிடிக்காம‌ல் போய்விடுகிற‌து.

****************

பெட்ரோல் விலை -  இதை நினைத்து ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் புல‌ம்புவ‌தை த‌விர‌ ஒன்றும் செய்ய‌முடிய‌வில்லை. இன்னொரு முறை விலையேற்றினால், வீட்டை விட்டு போய்டுவோம் என்று ம‌ம்தா பான‌ர்ஜி ம‌ன்மொக‌ன்சிங்கிற்கு ப‌ய‌ம் காட்டியிருக்கிறார். பிஜேபி, க‌ம்யூனிஸ்ட்டுக‌ளெல்லாம் கார‌சார‌மாக‌ மீடியாவின் ப‌சிக்குதான் உண‌வு அளிக்கிறார்க‌ள். வேறு ஒன்றையும் கிழிக்க‌வில்லை. நான் முடிவு செய்துவிட்டேன். அடுத்த‌ பாராளும‌ன்ற‌த் தேர்த‌லில், சுயேட்சையாக‌ நிற்கும் குப்ப‌னுக்கோ, சுப்ப‌னுக்கோ ஓட்டு போட்டாலும் போடுவேனே த‌விர‌ ச‌த்தியமாக‌ காங்கிர‌சிற்கு கிடையாது.

****************

ப‌ல‌ நாட்க‌ளாக‌ க‌வ‌னித்துக்கொண்டு இருக்கிறேன். ப‌திவு எழுதும் நிறைய‌ பேர், பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ள் உட்ப‌ட‌, த‌ங்க‌ளுக்கு வ‌ரும் பின்னூட்ட‌ங்க‌ளுக்கு ஒரு ந‌ன்றி பின்னூட்ட‌ம் கூட‌ இடுவ‌தில்லை. ஏன் இப்ப‌டி ஒரு அல‌ட்சிய‌ம்? நேர‌மில்லை என்றெல்லாம் சொன்னால் க‌ண்டிப்பாக‌ நான் ந‌ம்ப‌மாட்டேன். ஆறேழு ப‌த்தியில் ப‌‌திவெழுதி, இருக்கின்ற‌ திர‌ட்டிக‌ளிலெல்லாம் இணைக்க‌‌ நேர‌ம் கிடைக்கும்போது, ஒரு ந‌ன்றி சொல்ல‌வா நேர‌ம் இல்லாம‌ல் போய்விட்ட‌து?


Tuesday, November 01, 2011

தீபாவ‌ளி - ப‌ய‌ண இம்சைக‌ள், ப‌ட‌ங்க‌ள் & SADDA HAQ

MAN PROPOSES, GOD DISPOSES........ON THE FESTIVAL DAY TOO!

தீபாவ‌ளி அன்று ஊருக்குச் செல்ல‌ இதுதான் ப்ளான். காலை ஆறு மணி அளவில் பெருங்குடி ரயில் நிலையத்திலிருந்து பீச் ஸ்டேஷன். பின்பு அங்கிருந்து திருமால்பூர் செல்லும் ரயில் மூலமாக ஊருக்கு செல்ல வேண்டும்.

காலையில் அலாரம் வைத்து மூன்று முறை ஸ்நூஸ் செய்து கஷ்டப்பட்டு எழுந்து அவசரவசரமாக பெருங்குடி ரயில் நிலையத்திற்கு ஓடினால் ஓடினால், வாழ்க்கையின் ஓர‌த்திற்கே ஓடிய‌து போல் ஓடினால், "இன்று ரயில் சேவை ஞாயிறு அட்டவணைப்படி செயல்படும்" என்று போர்ட் வைத்திருந்தார்கள்.


அப்படியென்றால் முதல் ரயில் காலை 6:53க்கு. பீச் ஸ்டேஷனில் திருமால்பூர் ரயில் காலை 7:05க்கு. அடடா ஆரம்பமே அசத்தலா இருக்கே! சரி என்ன செய்வது? பேபி நகர் பஸ் ஸ்டாப் சென்று அங்கிருந்து பஸ் பிடித்து கோயம்பேடு போய்விடலாம்.

ஆர்வ‌மாக‌ ர‌யில் நிலைய‌த்திலிருந்து வெளியே வ‌ந்து பார்த்தால்.............ப‌க்க‌த்தில் ம‌ட்டும் த‌ம‌ன்னா இருந்திருந்தால் "அட‌டா ம‌ழ‌டா அட‌ம‌ழ‌டா" என்று ஆடியிருப்பேன். வான‌த்தை நிமிர்ந்து பார்த்தேன். அந்தாள் (ம‌ன‌துக்கு மிக‌ நெருக்க‌மான‌ க‌ட‌வுள்) அங்கிருந்து "உன்னை அவ்ளோ சீக்கிர‌ம் போக‌ விட்ருவ‌னா?" என்று கேட்ப‌து போலிருந்த‌து. அரை ம‌ணி நேர‌ம் காத்திருந்தேன். க‌ளைத்துப்போன‌ ம‌ழை, தூற‌லாக‌ இளைத்துப்போயிருந்த‌து. ப‌ஸ் ஸ்டாப்புக்கு 'ர‌ன்'னினேன்.

கால் ம‌ணி நேர‌ம் கால் க‌டுக்க‌ காத்திருந்தேன். ஹுஹும் M70 எட்டிக்கூட‌ பார்க்க‌வில்லை. M7 வ‌ந்த‌து. தி.ந‌க‌ர் சென்று அங்கிருந்து ஏசி ப‌ஸ்ஸில் சென்றுவிட‌லாம் என‌ தோன்றிய‌து. ம‌ழையில் ந‌னைந்து, குளிரில் ந‌டுங்கி, ஏசி ப‌ஸ்ஸில் ப‌ய‌ண‌ம் செய்து ஊருக்கு போனால்..... வீட்டில் நுழைந்த‌வுட‌ன் "சமைய‌ல்லாம் முடிஞ்சிடுச்சு, ப‌டைக்க‌ வேண்டிய‌துதான். சீக்கிர‌ம் த‌லைக்கு குளிச்சுட்டு வா" என்றார்க‌ள்.  என்ன‌ வாழ்க்கைடா இது!


ROCKSTAR ர‌ஹ்மான்

விரைவில் வெளிவ‌ர‌‌ப்போகும் ஹிந்தி திரைப்ப‌ட‌மான‌ ராக்ஸ்டார் ப‌ட‌த்திற்கு ந‌ம் ர‌ஹ்மான்தான் இசைய‌மைத்திருக்கிறார். இப்ப‌டத்தில் வ‌ரும் "ச‌ட்டா ஹ‌க்" பாட‌லை கேட்கும்போதே உள்ளுக்குள் ஏதோ செய்கிற‌து. விஷுவ‌லில் ர‌ன்பீர் க‌பூரும் அச‌த்துகிறார். ச‌மீப‌ நாட்க‌ளில் இந்த‌ பாட‌லைப் போல‌ வேறேதும் ம‌ன‌ம் க‌வ‌ர‌வில்லை. அடுத்த‌து வேண்டுமானால் "ச‌ம்ம‌க் ச‌ல்லோ"வை சொல்ல‌லாம்.

பார்த்து ர‌சிக்க‌

கேட்டு ர‌சிக்க‌




தீபாவ‌ளி ப‌ட‌ங்க‌ள்

ப‌திவு எழுதுப‌வ‌ர்க‌ளிடையே இருக்கும் மிக‌ப்பெரிய‌ பிர‌ச்னை, விம‌ர்ச‌ன‌ம் எழுதுகிறேன் என்று பெரும்பாலும் 90 ச‌த‌வீத‌ம் க‌தையை சொல்லிவிடுகிறார்க‌ள். அத‌ன் பின் தியேட்ட‌ருக்கு போனால் என்ன‌ ஆர்வம் இருக்கும்? என‌வே இப்போதெல்லாம் நான் பார்க்காத‌ ப‌ட‌ங்க‌ளின் விம‌ர்ச‌ன‌ங்க‌ளை ம‌ட்டுமே வாசிக்கிறேன்.

அலுவ‌ல‌க‌த்தில் என்ன‌தான் பாஸிட்டிவ், நெக‌ட்டிவ் க‌மெண்ட்ஸ்க‌ளாக‌ கேட்டாலும், "7ஆம் அறிவு" பார்க்கும் ஆர்வ‌ம் இன்னும் குறைய‌வில்லை. அதேபோல் ஷாருக்கிற்காக‌ "Ra.One". இது 3Dயிலும் ரிலீஸாகியிருக்கிற‌து என்று நினைக்கிறேன். இர‌ண்டையும் ச‌த்ய‌த்தில்தான் பார்க்க‌ வேண்டும்.

வேலாயுத‌ம்? ஜெயா டிவியில் காமெடி சீன்ஸ் போடும்போது பார்த்துக்கொள்கிறேன். :-)

Wednesday, October 12, 2011

வேலை - கிடைக்கும் முன், கிடைத்த‌ பின்

ந‌ன்றாக‌ நினைவிருக்கிற‌து. க‌ல்லூரி ப‌டிப்பு முடித்து வேலை தேடும் ப‌ட‌ல‌ம் ஆர‌ம்பித்த‌ ச‌ம‌ய‌ம். தொட‌க்க‌த்தில் முழு வீச்சுட‌ன் க‌ள‌த்தில் இற‌ங்கினேன். ஆப்டிட்யூட் டெஸ்ட்டில் என‌க்கு இய‌ல்பாக‌வே ஆர்வ‌ம் இருந்த‌தால், எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் ப‌த்திரிக்கையில் வெளியான‌ அத்த‌னை வ‌ங்கி தேர்வுக‌ளுக்கும் விண்ண‌ப்பித்திருந்தேன்.

ப‌ள்ளி, க‌ல்லூரி தேர்வுக‌ளுக்குக் கூட‌ அப்ப‌டி ப‌டித்த‌தில்லை. த‌லையெழுத்தை நிர்ண‌யிக்க‌ப்போகும் தேர்வு என்ப‌தால் ஒவ்வொரு முறையும் முட்டி மோதினேன். ஹுஹூம்.. என்ன‌தான் முட்டி மோதினாலும், 'ஆன‌ந்த‌ விகட‌ன்' தாத்தா போல‌ என் த‌லையும் வீங்கி போன‌தே த‌விர‌ ஒரு பிர‌யோஜ‌ன‌மும் இல்லை. நிஜ‌த்திலும் ஒரு ஐந்து நிமிட‌ பாட‌லில் ப‌ண‌க்கார‌னாகிவிட்டால் எவ்வ‌ள‌வு ந‌ன்றாக‌ இருக்கும் என்று ஏங்கிய‌ த‌ருண‌ங்க‌ள் அது. 

கிட்ட‌த‌ட்ட‌ எழெட்டு தேர்வுக‌ள் எழுதி முடிக்கையில் ப‌ல‌ மாத‌ங்க‌ளை விழுங்கியிருந்த‌து வாழ்க்கை. அத‌ற்கு பின் வேறு வேலை தேட‌ ஆர‌ம்பித்து, சில‌ நேர்முக‌த் தேர்வுக‌ளுக்குப் பின் ஸ்பென்ச‌ர் ப்ளாஸாவிலிருந்த‌ ஒரு அலுவ‌ல‌க‌த்தில் வேலை கிடைத்த‌து. ஆனால் இந்த‌ வேலை கிடைக்கும் முன் வாழ்ந்தேனே ஒன்ற‌ரை வ‌ருட‌ வாழ்க்கை. கொடுமை!

வேலைக்கு போகாம‌ த‌ண்ட‌மா இருக்கியே என்று அப்பாவோ அம்மாவோ ஒருபோதும் கேட்ட‌தில்லை. எப்போதும் ம‌ன‌திற்குள் இருக்கும் க‌ஷ்ட‌த்தை வெளிப்ப‌டுத்திக்கொள்ள‌ மாட்டேன் என்றாலும், என்னை பார்க்கும்போதே அவ‌ர்க‌ளுக்கு புரிந்திருக்க‌க்கூடும். க‌ட‌ந்த‌ ஆட்சியில் திமுக‌வுக்கு பாம‌க‌ போல‌ல்லாம‌ல் மிகுந்த‌ ஆத‌ர‌வாக‌ இருந்தார்க‌ள். 

ஆனால் இந்த‌ சொந்த‌க்கார‌ர்க‌ள் என்னும் பெய‌ரில் சில‌ டார்ச்ச‌ர்க‌ள் இருக்கிறார்க‌ளே, அவ‌ர்க‌ளின் இம்சைதான் பெரிய‌ள‌வில் இருந்த‌து. ஏதாவ‌து உத‌வி செய்வோம் என்றெண்ணி அம்மாவிட‌ம் கேட்டு, காபிதூள் வாங்க‌ க‌டைக்குச் சென்றால், அங்கு யாரேனும் ஒருவ‌ர் வ‌ந்து தொலைப்பார். 





"என்ன‌ப்பா ப‌டிக்க‌ற‌?"

"எம்.எஸ்.சி முடிச்சிருக்கேன். ஜாப் ட்ரை ப‌ண்ணிட்டிருக்கேன்"

பாஸிட்டிவ்வாக‌ இருக்க‌வேண்டும் என்று ப‌ல‌ த‌ன்ன‌ம்பிக்கை க‌ட்டுரைக‌ளில் ப‌டித்திருந்த‌தால், 'ஜாப் ட்ரை ப‌ண்ணிட்டிருக்கேன்' என்றுதான் சொல்வேன். சும்மா இருக்கிறேன் என்று சொல்ல‌ மாட்டேன். ஆனால் உட‌னே அவ‌ர் கேட்பார்.

"ஓ, சும்மாதான் இருக்கியா?"

மிகைப்ப‌டுத்தி சொல்ல‌வில்லை, அக்க‌ண‌த்தில் நிஜமாக‌வே செருப்பால் அடித்த‌து போன்ற‌ ஒரு உண‌ர்வு ஏற்ப‌டும். இதை வீட்டில் சொல்ல‌வும் முடியாது. சொன்னால் அவ‌ர்க‌ளும் வ‌ருத்த‌ப்ப‌டுவார்க‌ள். அவ‌ரிட‌மும் ஏன் இப்ப‌டி கேக்க‌றீங்க‌ என்று நேர‌டியாக‌ கேட்கும‌ள‌வுக்கு ம‌ன‌தில் தெம்பில்லை. நொறுங்கிப்போயிருந்த‌ கால‌க‌ட்ட‌ம் அது. 

காய‌ம் ப‌ட்ட‌ இட‌த்திலேயே திருப்பி திருப்பி அடித்த‌வ‌ர்க‌ளிட‌மிருந்து இன்னும் வில‌கியே இருக்கிறேன். எங்கேயாவ‌து பார்த்து 'எப்ப‌டிப்பா இருக்க‌, எங்க‌ வேலை செய்ய‌ற‌' என்று கேட்டால் கூட‌, 'ந‌ல்லாயிருக்கேன்' என்று ஆர‌ம்பித்து அலுவ‌ல‌க‌ம் ப‌ற்றி சொல்வ‌தோடு ச‌ரி. ம‌ன‌தார‌ யாரிட‌மும் சிரித்து பேசுவ‌தில்லை.

இன்ன‌மும் சில‌ர் ஆட்டிட்யூட் மாற‌வில்லை. அலுவ‌ல‌க‌ம் பெய‌ர் சொல்லி சாஃப்ட்வேர் டெஸ்டிங்ல‌ இருக்கேன் என்று சொன்னால் 'இந்த‌ பேர்ல‌ ஒரு ப‌ஸ் கூட‌ ரோட்ல‌ பார்த்த‌தில்லையே' என்று கேட்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளை பொறுத்த‌வ‌ரை இன்ஃபோசிஸ், டிசிஎஸ், சிடிஎஸ், விப்ரோ...இவைதான் இந்தியாவிலுள்ள‌ மென்பொருள் நிறுவ‌ன‌ங்க‌ள். 

சில‌ரிட‌மிருந்து வில‌கி இருத்த‌லே நல‌ம்.

Wednesday, September 28, 2011

இன்னுமா இப்படிலாம் இருக்காங்க?!

கடந்த சில வாரங்களாக விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியை தவறாமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனக்கென்னவோ விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சிகளிலேயே இது ஒன்றுதான் பிடித்தமானதாக இருக்கிறது. சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், கனா காணும் காலங்கள்...இதையெல்லாம் பார்த்தால் குமட்டிக்கொண்டு வருகிறது. சரி விஷயத்துக்கு வருவோம்.

நீயா நானாவில் கோபியின் ஆளுமை பற்றி சொல்லவேண்டியதில்லை. ஒரு சில் சமயம் படு மொக்கையான தலைப்புகள், கருத்துகள் என கொஞ்சம் குறைகள் இருந்தாலும், பெரும்பாலான சமயம் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. சென்ற வாரம் ‘வார்த்தை’ குறித்தான தலைப்பில் ஆண்கள் ஒரு தரப்பிலும், பெண்கள் ஒரு தரப்பிலும் பேசிக்கொண்டிருந்தனர்.

உங்களை காயப்படுத்திய எந்த வார்த்தை இன்னும் நினைவிலிருக்கிறது என்று கேட்டபோது ஒரு பெண் சொன்னார். அவரின் நண்பர் ஒரு முறை கேட்டாராம், “கூட ஒரு ஆம்பளை நடக்கும்போது நீ பாட்டுக்கு முன்னாடி போறீயே, குடும்ப பொம்பளை மாதிரியா நடந்துக்கறே” என்று. இதைச் சொல்லும் முன் வரை அந்த பெண் மிகுந்த சந்தோஷத்துடன் கலகலப்பாகத்தான் பேசிக்கொண்டிருந்தார். இதைச் சொல்லும்போதுதான், லேசாக அவர் குரல் உடைந்து ஏறக்குறைய அழும் நிலையில் பேசினார். அதற்கு பின் அவருக்கு கோபி பதிலளித்ததெல்லாம் வேறு கதை.




இதை பார்த்துக்கொண்டிருக்கும்போது எனக்குள் எழுந்த கேள்வி, இன்னும் கூடவா ஒரு பெண் தனக்கு பின்தான் வரவேண்டும் என்று நினைக்கும் ஆண்கள் இருக்கிறார்கள்? நிஜமாகவே ஆச்சரியமாக இருக்கிறது. நான் ஏதோ பெண் விடுதலைக்குப் போராடுபவனோ, மேடைகளில் பெண்களின் புகழைப் பாடுபவனோ அல்ல.

பெண்ணை சக மனுஷியாக மட்டுமே பார்க்கிறேன். அலுவலகத்தில் சிறப்பாக பணிபுரிந்தால் பாராட்டுகிறேன், ஏதேனும் தவறு செய்தால் சற்றே கடிந்துகொள்கிறேன், நெருங்கிய நட்பென்றால் சகஜமாக கிண்டலடிக்கிறேன். அவ்வளவே. ‘டி’ போட்டு பேசும் உரிமை கொடுத்தவளை ஏன் ‘டா’ போட்டு பேசுகிறாய் என்று ஒருபோதும் கேட்டதில்லை.

சில நாட்கள் முன் பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார். அவர்களுடைய எதிர் வீட்டில் இருக்கும் பையனுக்கு பெண் பார்க்க சென்றிருக்கின்றனர். குடும்பத்தோடு போயிருந்ததில், மூத்த உறுப்பினர் ஒருவர் சபையிலேயே கேட்டிருக்கிறார், “பொண்ணுக்கு சமைக்கத் தெரியுமா” என்று. பதிலுக்கு அந்த பெண், ”நீங்க என்ன சமையல்காரியையா பார்க்க வந்திருக்கீங்க” என்று எதிர் கேள்வி தொடுத்திருக்கிறார். இதைச் சொல்லும்போது, பாட்டி அந்த பெண்ணை பற்றித்தான் குறைபட்டுக்கொண்டார்.

ஆனால் எனக்கு அந்த பெண் கேட்டது பிடித்திருந்தது. சமைக்கத் தெரியுமா என்று கேட்பது நியாயமெனில், பையனோட மெடிக்கல் சர்டிஃபிகேட் வேண்டும் என்று பெண் வீட்டார் கேட்டால் அதுவும் நியாயம்தான். ஆனால் இன்றைய சமூகத்தில் இதை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள்?

பெண் என்பவள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எண்ணம் இன்னும் வீட்டிலுள்ள பெரியவர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் காணமுடிகிறது. நாம் ஏதேனும் எடுத்துச் சொல்லி இந்த வயதிற்கு மேல் அவர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கை துளியும் இல்லை. எனவே அதுபோன்ற ஆபத்தான முயற்சிகளிலும் ஈடுபடுவதில்லை. ஆனால் வருங்காலத்தில் இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் இருக்காது என்றே எண்ணுகிறேன்...பார்ப்போம்.

Tuesday, August 16, 2011

ம‌ங்காத்தா - ம‌ச்சி ஓப்ப‌ன் த‌ பாட்டில்!

நான் பெரும்பாலும் ப‌ட‌த்தின் இய‌க்குன‌ரை பொறுத்துதான் ப‌ட‌ம் பார்க்க‌லாமா வேண்டாமா என்ப‌தை முடிவு செய்வேன். சும்மா சீனுக்காக‌ சொல்லவில்லை. என்னை பொறுத்த‌வ‌ரை த‌லைவ‌ர் (ஸ்க்ரீனில் ம‌ட்டும்) என்றால் அது சூப்ப‌ர் ஸ்டார்தான்.

என் த‌ம்பி அஜித் ர‌சிக‌ன். ப‌ட‌ ரிலீஸ‌ன்று கொடி க‌ட்டி க‌ட் அவுட் வைக்கும் அள‌வுக்கு போக‌வில்லையே த‌விர‌ ஜ‌னா, ஆஞ்ச‌னேயா, ஆழ்வார் முத‌ற்கொண்டு அஜித் எவ்வ‌ள‌வு அடித்தாலும் தாங்கும் வ‌ல்ல‌மை கொண்ட‌வ‌ன்.

வீட்டிலுள்ள‌ க‌ணிணியில் ம‌ங்காத்தா பாட‌ல்க‌ளை ட‌வுண்லோட் செய்துவைத்திருந்தான். 'டே செல்லப்பா என்ன‌மோ சினிமா எடுக்க‌ப்போறேன் சினிமா எடுக்க‌ப்போறேன்னு சுத்த‌றியே, அந்த‌ க‌தைய‌தான் சொல்லேன்' என்று ஒரு அல‌ட்சிய‌ தொனியில் பாலையா கேட்பாரே, அதே தொனியில்தான் பாட‌ல்க‌ளை கேட்க‌ ஆர‌ம்பித்தேன்.

ச‌ரி எந்த‌ பில்ட‌ப்பும் வேண்டாம். மொத்த‌ம் நான்கு பாட‌ல்க‌ள் ப்ள‌ஸ் ஒரு தீம் ம்யூசிக். மீண்டும் மீண்டும் மொத்த‌ம் மூன்று முறை கேட்டேன். க‌டைசியில் மிக‌வும் பிடித்துப் போன‌து, ச‌த்திய‌மாக‌ தீம் ம்யூசிக்தான்.

என‌க்கு எப்போதும் ஒரு ப‌ட‌த்தின் தீம் ம்யூசிக்தான் ஃபேவ‌ரைட். அதை கேட்கும்போதே ப‌ட‌த்தின் மூட் ந‌ம‌க்கு செட்டாக‌வேண்டும். அப்ப‌டி ஆகிவிட்டால், க‌ண்டிப்பாக‌ அந்த‌ ம்யூசிக் ஹிட்தான். இன்ற‌ள‌விலும், எத்த‌னை முறை கேட்டாலும் ச‌லிக்காம‌ல் இருப்ப‌து 'மிஷ‌ன் இம்பாஸிபிள்' தீம் ம்யூசிக்தான்.




யுவ‌னின் 7ஜி ரெய்ன்போ கால‌னி தீம் ம்யூசிக் கேட்டிருப்பீர்க‌ள். கொஞ்ச‌ம் காத‌ல், கொஞ்ச‌ம் சோக‌ம், கொஞ்ச‌ம் உற்சாக‌ம், கொஞ்ச‌ம் நெகிழ்வு என்று அள்ளி கொடுத்திருப்பார். என‌க்கென்ன‌வோ 7ஜிக்கு பிற‌கு ம‌ங்காத்தா தீம் ம்யூசிக்தான் பெஸ்ட் என்று தோன்றுகிற‌து.

முத‌ன்முறை கேட்கும்போதே ம‌ன‌ம் ஒரு த்ரில்ல‌ர் மூடுக்கு போய்விடுகிற‌து. இன்று ம‌ட்டும் கிட்ட‌த‌ட்ட‌ ப‌தினைன்து முறைக்கு மேல் கேட்டிருப்பேன். துளியும் ச‌லிக்க‌வில்லை.




தீம் ம்யூசிக்கிற்கு அடுத்த‌து, பாட‌ல்க‌ள் கேட்கையில், முத‌ன் முறை கேட்ட‌வுட‌ன் பிடித்த‌து, 'ம‌ச்சி, ஓப்ப‌ன் த‌ பாட்டில்'தான். யுவ‌ன்-வெங்க‌ட்பிர‌புவின் அடுத்த‌ 'ச‌ரோஜா சாமான் நிகாலோ'. ப‌ட‌ம் ரிலீஸான‌வுட‌ன், இந்த‌ பாட‌லை இசை சேன‌ல்க‌ளில் த‌ம‌க்கு பிடித்த‌மான‌வ‌ர்க‌ளுக்கு டெடிகேட் செய்ய‌ ந‌ம் ம‌க்க‌ள் ஆவ‌லோடு காத்துக்கொண்டிருப்ப‌ர்.

ப்ரேம்ஜியின் குர‌லில் 'ம‌ச்சி ஓப்ப‌ன் த‌ பாட்டில்' என்று ஆர‌ம்பிக்கும் உற்சாக‌ம், பாட‌ல் முடியும்வ‌ரை துளியும் குறையாதிருக்கிற‌து. வெகு நாட்க‌ளுக்குப்பின் ம‌னோ குர‌லை கேட்ப‌து இனிமை. 'ராம‌ன் ஆண்டாலும் ராவ‌ண‌ன் ஆண்டாலும் என‌க்கொரு க‌வ‌லையில்லே' என்ற‌ வ‌ரிக‌ளை சேர்த்திருப்ப‌து த‌யாரிப்பாள‌ருக்குத் தெரியுமா? ஆனாலும் வெங்க‌ட்பிர‌புவுக்கு குசும்பு ஜாஸ்திதான் :)

'விளையாடு ம‌ங்காத்தா'வை முத‌லில் ர‌சித்த‌ அள‌வு இப்போது ர‌சிக்க‌முடிய‌வில்லை. அந்த‌ இட‌த்தை தீம் ம்யூசிக் பறித்துவிட்ட‌து. 'இது எங்க‌ ப‌ல்லேல‌க்கா'வும், 'வாடா பின்லேடா'வும் இன்னும் அவ்வ‌ள‌வாக‌ ஈர்க்க‌வில்லை. கொஞ்ச‌ம் த‌னுஷ் டைப் பாட‌ல்க‌ளாக‌ இருக்கின்ற‌ன‌. இன்னும் சில‌ முறை கேட்க‌வேண்டும்.

Saturday, August 13, 2011

ப்ளாஸ்டிக் கவர்களுக்கு மாற்று வழி இல்லையா?

சமீபத்தில் ‘மோர்’ சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றிருந்தேன். எல்லா பொருள்களும் வாங்கியபின் பில் போடுகையில், அந்த பெண் கேட்டார், “பை கொண்டுவந்திருக்கீங்களா?”

எனக்கு சட்டென புரியவில்லை, எப்போதும் கேட்காதவர் ஏன் இப்போது கேட்கிறார்? “இல்லை” என்றேன்.

“கவருக்கு எக்ஸ்ட்ரா சார்ஜ், ரெண்டு ரூபா சார்”

“ஏன்?”

“கவர்ன்மெண்ட் ப்ளாஸ்டிக் கவர்லாம் பேன் பண்ணியிருக்காங்க சார், நீங்க வீட்டுலர்ந்து கவர் எடுத்துட்டு வரலாம் இல்ல எங்ககிட்ட வாங்கினீங்கன்னா கவருக்கு சார்ஜ் போட்டு கொடுத்துடுவோம்”




ஏதோ கவுன்டர் அட்டாக் கொடுப்பதாக நினைத்து ”அப்படின்னா கவர் சார்ஜையும் பில்லில் போட்டுக்குடுங்க” என்றேன். அப்படியே பில் போட்டு கொடுத்துவிட்டாலும், நுகர்வோர் நீதி மன்றத்தில் முதலில் வழக்கு ஒன்றை தொடுத்துவிட்டுதான் மறு வேலை பார்ப்பது போல.

சிறிதும் தயக்கமின்றி அவரும் பில்லில் கவர் சார்ஜை போட்டுத்தந்தார். வேறேதும் பேசாமல் வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன்.

இது என்ன லாஜிக் என்றே தெரியவில்லை. ப்ளாஸ்டிக் கவர்களை தடை செய்வது சுற்றுப்புறச்சூழலுக்கு ரொம்ப நல்ல விஷயம்தான். ஆனால் அதற்கு ஒரு மாற்று வழி ஒன்றை முறைப்படுத்தாமல் எப்படி இதை அமல்படுத்துகிறார்கள் என்றே தெரியவில்லை.

அரசாங்கத்தை நொந்துகொள்வதா அல்லது வாய்க்கு வந்தபடி திட்டுவதா? ஓரிரு பொருட்கள் வாங்கும்போது சரி, வீட்டிலிருந்து ஏதேனும் ஒரு பையை எடுத்துக்கொண்டு போகலாம். வேறு வேறு கடைகளுக்குச் சென்று பல பொருள்கள் வாங்கும்போது, நாமென்ன கோணிப்பையையா தூக்கிக்கொண்டு போகமுடியும்?

ப்ளாஸ்டிக்கை தடை செய்தபின் அதற்கு மாற்றாக விற்பனையாளர்கள்தானே நுகர்வோருக்கு வேறு ஏதேனும் ஒன்றை ஈடுசெய்ய வேண்டும். அதை செய்யாமல் ஏன் நம் மீது திணிக்கிறார்கள்? ம்ம்...என்ன கத்தினாலும் ஒன்றும் மாறிவிடப்போவதில்லை. சலித்துப்போகும் வரை புலம்பவேண்டியதுதான்.


Thursday, June 23, 2011

சீரியல்.......கில்லர்தான் இப்பொழுதும்

ஆசை ஆசையாக ஒரு எல்சிடி டிவி வாங்கி ஆறு மாதம் ஆகிறது. முன்பே சொன்னதுபோல் சத்தியமாக சச்சினுக்காகத்தான் வாங்கினோம். எனவே உலகக்கோப்பையை இந்தியா வென்றதில் மிகுந்த மகிழ்ச்சியே.


உலகக் கோப்பைக்கு பின்புதான் மற்ற சேனல்களை கொஞ்சம் கொஞ்சமாக பார்க்க ஆரம்பித்தேன். ஒரு வார காலத்தில் ஐபிஎல் ஆரம்பித்தாலும், மனம் பெரிதளவில் அதில் லயிக்கவில்லை. எல்லா சேனல்களிலும் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் பெரிய தலைவலி. ஆடுவதும், பாடுவதும், அதற்கு நாட்டாமைகள் மூவர் தீர்ப்பு சொல்வதும் ஒருவித எரிச்சலையே தருகிறது. ஒரு சில வாரங்கள் மட்டுமே ’நீயா நானா’ கோபி ஈர்க்கிறார். மற்ற சமயங்களில் மரண மொக்கை. சிவகார்த்திகேயனின் ‘அது இது எது’வுக்கும் இது பொருந்தும்.

ஹிந்தி நியூஸ் சேனல்கள் பற்றி ஏற்கனவே அறிந்ததுதான். இருந்தாலும் எப்படி ஒன்றுக்கும் உதவாத செய்திகளையெல்லாம் ஓவர் நைட்டில் சென்சேஷன் ஆக்குகிறார்கள் என்றே தெரியவில்லை. அதுவும் ராஜ்தீப் சர்தேசாய்...ம்ம் ஒன்றும் சொல்வதற்கில்லை. தமிழில் பரவாயில்லை, சன் நியூஸையும், ஜெயாவையும் பார்ப்பது மிகுந்த ஆனந்தத்தையே தருகிறது. ஒருவரை ஒருவர் எவ்வளவு அழகாக மானத்தை வாங்குகிறார்கள். கீப் இட் அப் கைஸ்!

ஆங்கில படங்கள் பக்கம் போனால், இப்போதைக்கு ஸ்டார் மூவிஸ், ஹெச்பீஓ, சோனி பிக்ஸ், ஸீ ஸ்டுடியோ, யூடிவி வேர்ல்ட் மூவிஸ் ஆகிய சேனல்களை சப்ஸ்க்ரைப் செய்திருக்கிறேன். மூவிஸ் நவ் எப்படியிருக்கிறதென்று தெரியவில்லை. இவற்றில் தினமும் படம் பார்க்க முடியவில்லை என்றாலும், ஞாயிறுகளிலாவது ஏதேனும் ஒரு படம் முழுதாய் பார்க்கமுடிகிறது. வாரயிறுதிகளில் மட்டும் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக்கொண்டு நல்ல நல்ல படங்களை ஒளிபரப்புகிறார்கள். 

திரைப்படங்கள் ஒளிபரப்புவதில் நிஜமாகவே அசத்துபவர்கள் ஹிந்தி சேனல்கள்தான். வெளியான சில நாட்களிலேயே, எவ்வளவு சூப்பர் ஹிட்டாக இருந்தாலும், ஏதேனும் ஒரு சேனலில் ஹிந்தி படங்கள் ரிலீஸாகிவிடுகின்றன. கஜினி, டபங், பேண்ட் பாஜா பாராத், கோல்மால் 3 என ஹிட்டான படங்களையும் சீக்கிரம் சின்னத்திரையில் பார்ப்பது ஆச்சரியத்தையே தருகின்றன. நம்மாட்கள்தான் விசேஷ நாட்களில் மட்டும், இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக வெளியிடுகின்றனர். 

சில வருடங்கள் முன்பு எந்த நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தாலும், விளம்பரங்கள் வந்துவிட்டால் சேனலை மாற்றிவிடுவேன். விளம்பரங்களைப் பார்ப்பதற்கா ரிமோட் வைத்திருக்கிறோம் எனத் தோன்றும். ஆனால் இப்போதெல்லாம் விளம்பரங்கள்தான் தொலைக்காட்சி அனுபவத்தை சுவாரஸ்யப்படுத்துகின்றன. நிறைய பேர் க்ரியேட்டிவிட்டியில் பின்னி எடுக்கிறார்கள்.



டெய்ரி மிலக் - ‘எங்கிட்ட எப்ப கடைசியா ஐ லவ் யூ சொன்ன’ என்று கேட்கும் மனைவியிடம், கணவன் முதலில் கொஞ்சம் தயங்கி டெய்ரி மில்க் கொடுத்துவிட்டு ‘இதோ இப்போ’ என சொல்லும் விளம்பரம். இந்த விளம்பரத்தில், அலட்டிக்கொள்ளாத கணவனும், கடைசியில் அசத்தலான ரியாக்‌ஷன் காட்டும் மனைவியும், மனதை அள்ளுகின்றனர். இசையும் ரசிக்கும்படி இருந்தது.

இப்போது யோசிக்கையில் எதற்கான விளம்பரம் என்று நினைவுக்கு வரவில்லை. ஒரு முகமூடித் திருடன் வங்கியை கொள்ளையடித்துக்கொண்டு போனபின், வயதான பெண்மணியொருவர் ‘செக்யூரிட்டீஈஈஈஈ’ என கத்த, முகமூடி திருடனே வந்து சலாம் போட்டு நிற்பார். திரைப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சி போல் இவ்விளம்பரம் அமைந்திருந்தது அருமை.

முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், ரன்பீர் கபூரின் ரியாக்‌ஷன்ஸ் அசத்தலாய் இருக்கிறது டோகோமோ விளம்பரத்தில். ரன்பீரை தவிர பெரியளவு பொருட்செலவு செய்யாமல் எடுத்திருக்கின்றனர். அவர்களுடைய பாஸ் சொல்லியிருப்பார் போல, ‘கீப் இட் சிம்பிள் ஸில்லி’ என்று. 

அறிமுகமான புதிதில் இருந்த சுவாரஸ்யம் இப்போது அவ்வளவாய் ஜுஜூ விளம்பரங்களில் இருப்பதில்லை, மூன்று பேருடன் டேபிள் டென்னிஸ் ஆடும் விளம்பரம் தவிர்த்து. இவ்விளம்பரத்தைப் பார்த்தபோது, கை தொடாமல் முறைத்து பார்த்தே ஒரு ரயிலை பின்னோக்கி ஓடச்செய்யும் பாலகிருஷ்ணா நினைவுக்கு வந்தார். ஜுஜு விளம்பரங்களுக்கு இசையும் மிகப்பெரிய பலம்.





சீரியல்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. பள்ளி நாட்களில்தான் சித்தி, அலைகள், மர்மதேசம் என ஒரு சில சீரியல்களைத் தொடர்ந்து பார்த்திருக்கிறேன். இப்போது மறுஒளிபரப்பு செய்தால்கூட மர்மதேசம் கதைகளை ஆர்வமாக உட்கார்ந்து பார்ப்பேன்.

யதேச்சையாய் ஒரு நாள் மதியம் அலுவலகம் கிளம்புவதற்கு முன் சேனல்களை மாற்றிக்கொண்டிருக்கும்போது, ஏதோவொரு சீரியலில் ‘அலைகள்’ துர்காவைக் காண நேர்ந்தது. அழகு! சில வருடங்களுக்கு முன் பார்த்த ‘அலைகள்’ துர்காவாகவே இன்னமும் இருக்கிறார். என் நினைவு சரியெனில், அப்போதே எஸ்பி சரண் நடித்த ஒரு சீரியலில் வில்லியாகவும் நடித்திருக்கிறார். இந்த பச்சிளங்குழந்தையைப் போய் அழுமூஞ்சி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க எப்படித்தான் இயக்குனருக்கு மனது வருகிறதோ!

சரி துர்காவுக்காக பார்க்கலாம் என முடிவு செய்து அந்த சீரியலைப் பார்த்தால்......ஒரு நாள் துர்கா குடும்பத்தைப் பற்றி காட்சி வந்தால் அடுத்த நான்கு நாட்கள் வேறு சில குடும்பங்களை நோக்கி காட்சி நகர்கிறது.

  • ‘அவளை நான் பழி வாங்காம விடமாட்டேன்’ என கண்ணை உருட்டுகிறார் ஒரு பெண்மணி.

    •  ‘சொத்தை பிரிச்சே ஆகணும்’ என்கிறார் குடும்பத்தின் மூத்த மகன்.

      • ‘எங்கப்பா மேலயா கை வெச்ச, உன்னை கொல்லாம விட மாட்டேண்டா’ என காவல் நிலையம் முன்பே வில்லனை மிரட்டுகிறார் ஒருவர்.

        •  ’எங்க அண்ணனை ஏமாத்துன இல்ல, அதான் நான் உன்னை ஏமாத்தி எங்கண்ணனுக்கு வர வேண்டிய பணத்தை வாங்கிட்டேன்’ என்கிறார் தம்பி. 

          • வீட்டு வெளியே ஒருவர் வந்து, ‘டேய் வெளியே வாடா எங்க ஒளிஞ்சிருக்க’ என்று சத்தம் போட, உள்ளேயிருந்து அமைதியாய் ஒரு பெண் வந்து கூலாக சொல்கிறார், ‘எங்கண்ணண் வீட்ல இல்ல, என் புருஷன் மேல கம்ப்ளைண்ட் குடுக்க போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிருக்கார்’. 


          ப்பா சாமி......முடியல!