ஏழாம் அறிவு - முருகதாஸ் & சூர்யா. இந்த காம்பினேஷனுக்காகவும், ஆடியோ ரிலீஸின்போது கொடுத்த ஹைப்'பையும் எதிர்பார்த்து, ஆசை ஆசையாக படம் பார்க்கப்போனால், நொந்துபோனதுதான் மிச்சம். கண்டிப்பாக இது ஒரு வித்தியாசமான கதைக்களன். இதில் இருவேறு கருத்துகள் இல்லை. ஆனால் திரைக்கதை? செம சொதப்பல். முதல் பாதியில் வரும் காட்சிகள் பெருமளவு ஈர்க்காதது திரைக்கதையின் பலவீனம். ஹீரோவும் ஹீரோயினும் காதலித்தே ஆகவேண்டும் என்ற கட்டாய விதியை தயவுசெய்து மாத்துங்கப்பா!
கதைக்கு சம்பந்தமே இல்லாமல் வரும் காமெடி ட்ராக், குத்துப்பாட்டு, லூசு ஹீரோயின், லூசாக இருந்தாலும் அவளையே காதலிக்கும் ஹீரோ..இது போன்ற விஷயங்கள் இல்லாமல் களமிறங்கியது மட்டுமே ஆறுதலாக இருந்தது. ரஜினி, கமலுக்குப் பிறகு சூர்யாவின் திறமையை வியந்து ரசிக்கிறேன். பட், வாட் டு டூ? பெட்டர் லக் ஃபார் 'மாற்றான்' சூர்யா.
****************
இந்த வருட கடைசியில் பார்க்கவேண்டிய படங்களின் லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது.
Ra.One, The Adventures of Tintin, Rockstar, Don 2 & Mission Impossible 4. ஷாரூக்கிற்காக ரா.ஒன்னை ரொம்பவும் எதிர்பார்த்தேன். பார்க்கிறவர்களெல்லாம் நெகட்டிவ்வாகவே சொல்லிக்கொண்டிருப்பதால் இதை மட்டும் ஊரில் பார்த்துவிட்டு, மற்ற படங்களையெல்லாம் சத்யம், சத்யம் & சத்யம்...
****************
சமீப மாதங்களில் புகைப்படம் எடுக்கும் ஆர்வம் அதிகமாயிருக்கிறது. பார்க்கும் விஷயங்களில் பிடிக்கின்ற எதையும் உடனே கைது செய்து, http://flickr.com/photos/raghuclicksல் ரிலீஸ் செய்துவிடுகிறேன். ஃபோட்டோஷாப்பில் எந்த வித்தைகளும் செய்வதில்லை.
இரண்டு காரணங்கள். ஒன்று சோம்பல். மற்றொன்று, என்னதான் நாம் எடுக்கும் படங்களை ஃபோட்டோஷாப்பில் விளையாடி கூடுதல் அழகாக்கினாலும், அது உண்மையல்ல என்று மனதுக்கு உறுத்தும்போது நன்றாக வந்திருக்கும் ஃபோட்டோ கூட பிடிக்காமல் போய்விடுகிறது.
****************
பெட்ரோல் விலை - இதை நினைத்து சமூக வலைத்தளங்களில் புலம்புவதை தவிர ஒன்றும் செய்யமுடியவில்லை. இன்னொரு முறை விலையேற்றினால், வீட்டை விட்டு போய்டுவோம் என்று மம்தா பானர்ஜி மன்மொகன்சிங்கிற்கு பயம் காட்டியிருக்கிறார். பிஜேபி, கம்யூனிஸ்ட்டுகளெல்லாம் காரசாரமாக மீடியாவின் பசிக்குதான் உணவு அளிக்கிறார்கள். வேறு ஒன்றையும் கிழிக்கவில்லை. நான் முடிவு செய்துவிட்டேன். அடுத்த பாராளுமன்றத் தேர்தலில், சுயேட்சையாக நிற்கும் குப்பனுக்கோ, சுப்பனுக்கோ ஓட்டு போட்டாலும் போடுவேனே தவிர சத்தியமாக காங்கிரசிற்கு கிடையாது.
****************
பல நாட்களாக கவனித்துக்கொண்டு இருக்கிறேன். பதிவு எழுதும் நிறைய பேர், பிரபல பதிவர்கள் உட்பட, தங்களுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு ஒரு நன்றி பின்னூட்டம் கூட இடுவதில்லை. ஏன் இப்படி ஒரு அலட்சியம்? நேரமில்லை என்றெல்லாம் சொன்னால் கண்டிப்பாக நான் நம்பமாட்டேன். ஆறேழு பத்தியில் பதிவெழுதி, இருக்கின்ற திரட்டிகளிலெல்லாம் இணைக்க நேரம் கிடைக்கும்போது, ஒரு நன்றி சொல்லவா நேரம் இல்லாமல் போய்விட்டது?
