Friday, October 29, 2010

It's all about L O V E

காத‌ல். அவ‌ஸ்தைப‌ட‌ப்போகிறோம் என்று தெரிந்தே விழும் சுக‌மான‌ கிணறு. அதிலும் இந்த‌ காத‌லி என்று ஒருத்தி இருக்கிறாளே. அவ‌ளை இவ்வுல‌கின் மிகச்சிற‌ந்த‌ மேஜிஷிய‌ன் என்பேன். பெற்றோர், ந‌ண்ப‌ர்க‌ள் என‌ எல்லோரையும் ம‌ற‌க்க‌ச்செய்து, ஒரு மிக‌ச்சிறிய‌ ஓர‌ப்பார்வையிலேயே கிறுக்க‌னை கூட‌ வைர‌முத்துவாக‌ மாற்றிவிடுவாள்.




'வாடா ம‌ச்சான் இன்னைக்கு ச‌ர‌க்க‌டிக்க‌லாம்' என்று உயிர் ந‌ண்ப‌னின் அழைப்பு உசுப்பேற்றிவிடும். இல்ல‌ ம‌ச்சி இனிமே த‌ண்ணிய‌டிக்க‌மாட்டேன்னு என் ஆள்கிட்ட‌ ச‌த்திய‌ம் ப‌ண்ணியிருக்கேன்டா என்று சொன்ன‌வுட‌ன் ந‌ண்ப‌னிட‌மிருந்து ஒரு ஏள‌ன‌ச் சிரிப்பும், ப‌ல‌ கெட்டவார்த்தைக‌ளும் கூட்ட‌ணி அமைத்து போர் தொடுக்கும். அப்பா, அம்மா, ஆசிரிய‌ர், பாஸ் என்று ப‌ல‌ரிட‌ம் செய்த‌ பொய் ச‌த்திய‌ம் எண்ணில‌ட‌ங்கா. ஆனால் அவ‌ளுக்கு கொடுத்த‌ ச‌த்திய‌த்தை மீற‌க்கூடாது என்ற‌ வைராக்கிய‌ம் எப்ப‌டி ந‌ம்மை ஆட்கொள்கிற‌து? சிம்பிள்..'என் ஆளு' என்று சொல்லும்போது ஒரு கிக் கிடைக்கிற‌தே, அதை விட‌வா ஒரு பாட்டில் விஸ்கியும், பிராந்தியும் கொடுத்துவிட‌ப்போகிற‌து?

சில‌ நாட்க‌ள் முன் அலுவ‌ல‌க‌த்தில் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் வேக‌வேக‌மாக‌ வ‌ந்து சொன்னார். கையில் PF Transfer Form.

ர‌கு, இதுல‌ ஃபேமிலி மெம்ப‌ர்ஸ் டீடெய்ல் கேக்க‌றான். இதுல‌ அப்பா அம்மாவோட‌ டேட் ஆஃப் ப‌ர்த்லாம் க‌ண்டிப்பா ஃபில் ப‌ண்ண‌ணுமா என்ன‌?

ஆமாங்க‌, க‌ண்டிப்பா ப‌ண்ண‌ணும்

ப்ச்...அவ‌ங்க‌ டேட் ஆஃப் ப‌ர்த் ம‌ற‌ந்து போச்சு

ச‌ரி, அவ‌ங்க‌ளுக்கு கால் ப‌ண்ணி கேளுங்க‌

இல்ல‌ ஜி‌, ரெண்டு வார‌ம் முன்னாடிதான் மெடிக்க‌ல் இன்ஷுர‌ன்ஸ் ஃபார்ம் ஃபில் ப‌ண்ணும்போது கால் ப‌ண்ணி கேட்டேன். இப்ப‌ ம‌றுப‌டியும் கேட்டா திட்டுவாங்க‌

இர‌ண்டு ம‌ணி நேர‌ம் க‌ழித்து மீண்டும் என்ன‌ருகே வ‌ந்தார்.

ர‌கு, அடுத்த‌ மாச‌ம் 24ம் தேதி நான் லீவு, இப்ப‌வே சொல்லிட்டேன், அப்புற‌ம் அதே நாள்ல‌ வேற‌ யாராவ‌து லீவ் எடுத்தா நான் பொறுப்பு கிடையாது

ஓகே பாஸ், நோ இஷ்யூஸ்...ஊருக்கு போறீங்க‌ளா?

இல்ல‌, அன்னைக்கு என் கேர்ள் ஃப்ரெண்டோட‌ ப‌ர்த்டே. க‌ண்டிப்பா லீவு போட‌ணும்னு சொல்லிட்டா

வாழ்க்கையில் இப்ப‌டியொரு மாற்ற‌த்தைக் கொண்டு வ‌ர‌ காத‌லிக்கு ம‌ட்டுமே சாத்திய‌ம்.

ஒரு பெண்ணை பார்த்த‌வுட‌னே காத‌ல் வ‌ய‌ப்ப‌ட்டு, ட்ரூ ல‌வ், தெய்வீக‌ம், அவ‌ளைப் பார்த்த‌வுட‌னே ம‌ன‌சுல‌ ஏதோ தோணுச்சு என்ப‌தெல்லாம் வெறும் பூச்சு வார்த்தைக‌ள். ஆணுக்கு ஒரு பெண்ணை பார்த்த‌வுட‌ன் காம‌ம் என்னும் சிறு புள்ளியில்தான் உண‌ர்வு தொட‌ங்குகிற‌து. அவ‌ளிட‌ம் இருக்கும் ஏதோ ஒரு அழ‌கு ஈர்க்கிற‌து. பின்பு அவ‌ளிட‌ம் ப‌ழ‌க‌த் தொட‌ங்கிய‌பின்தான் அவ‌ளின் சில‌ குணாதிச‌ய‌ங்க‌ள் அந்த‌ ஈர்ப்புக்கு மேலும் வ‌லிமை சேர்க்கிற‌து. ம‌ற்ற‌ப‌டி, கெமிஸ்ட்ரி, ஜ்யாக்ரஃபி, ஜுவால‌ஜி எல்லாம் க‌லா மாஸ்ட‌ர் க‌ண்டுபிடித்த‌ வ‌ஸ்துக‌ள்தான் என்ப‌து அடியேனின் க‌ருத்து.

கிரிக்கெட்டில் சில‌ ச‌ம‌ய‌ம் பேட்ஸ்மேன் ர‌ன் அவுட் ஆகும்போது க‌மெண்ட்ரியில் 'சூஸைட‌ல் அப்ரோச்' என்பார்க‌ள். காத‌லில் இத‌ற்கு நிக‌ரான‌து 'இவ‌ என் ஃப்ரெண்டுடி, பேரு ர‌ம்யா' என்று ஒரு தோழியை காத‌லிக்கு அறிமுக‌ப்ப‌டுத்திவைப்ப‌து. அத‌ன் பின் ஒரு சென்ச‌ஸ் அதிகாரியாக‌ அவ‌தார‌மெடுத்து ஆர‌ம்பிப்பாள். உன‌க்கெப்ப‌டி அவ‌ளைத் தெரியும்? அவ‌ வீடு எங்க‌யிருக்கு? அப்பா அம்மா என்ன‌ ப‌ண்றாங்க‌? எங்க‌ ஒர்க் ப‌ண்றா? அடிக்க‌டி அவ‌ளை மீட் ப‌ண்ணுவியா? சில‌ ச‌ம‌ய‌ம் நான் கால் ப‌ண்ணும்போது உன் லைன் பிஸியா இருக்குமே, அப்போ அவ‌ளோட‌தான் பேசிட்டிருப்பியா? உன்கூட‌ பைக்ல‌ வந்திருக்காளா?.................இன்ஃபினிட்டி.

மிக‌ப்பெரிய‌ விவாத‌ம் ந‌ட‌க்கும் அவ‌ளுட‌ன். விவாத‌ம் என்ப‌தை விட‌ வார்த்தைப்போர் என்று சொல்வ‌தே ச‌ரி. நிமிட‌ங்க‌ள்? ஹுஹும்..சில‌ ம‌ணி நேர‌ங்க‌ளாக‌ நீடிக்கும் இந்த போரின் முடிவில், தலையை லேசாக‌ வ‌ல‌துபுற‌ம் சாய்த்து, க‌ண்க‌ளை கொஞ்ச‌ம் சுருக்கி, 'என்ன‌டா?' என்று கொஞ்ச‌லாய் கேட்கும்போது புரியும். விடாப்பிடியாய் விவாத‌ம் செய்து ஜெயிப்ப‌தைவிட‌ அவ‌ளிட‌ம் தோற்றுப்போவ‌தில் சுக‌ம் அதிக‌மென்று.

காத‌ல் ப‌ற்றிய‌ விவாத‌த்தில் நண்ப‌ன் உதிர்த்த‌ முத்துக்க‌ள் 'ல‌வ்ல‌ No Pain, No Gain கிடையாதுடா, No Gain Only Pain'

நான் சொன்னேன், 'ல‌வ்ல‌ Pain itself is a gainடா' என்று. ச‌ரிதானே?

காத‌ல் ஒரு த‌வ‌ம‌ல்ல‌, வ‌ர‌மோ சாப‌மோ பெறுவ‌த‌ற்கு. எது கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ளும் ம‌ன‌ப்ப‌க்குவ‌ம் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு இது ஒரு சுக‌மான‌ உண‌ர்வு. குடி, போதை என்று தேடிப்போகிற‌வ‌ர்க‌ளுக்கு காத‌ல் இன்னுமோர் கார‌ண‌ம். 'அவ‌ளால‌தான் குடிகார‌னானேன்', 'என் கேரிய‌ரே ஸ்பாய்ல் ஆயிடுச்சு' என்று எவ‌னாவ‌து சொன்னால் 'Bull$*#@' என்றுதான் திட்ட‌த்தோன்றும்.

போதும்..இன்னும் எழுதினால் விக்ர‌ம‌ன் ஆகிவிடுவேனோ? 'நாய‌க‌'னைப் போல் அட‌ம்பிடிக்க‌ மாட்டேன். அவ‌ர்க‌ள் நிறுத்துகிறார்க‌ளோ இல்லையோ நான் நிறுத்திக்கொள்கிறேன். எளிமையாக‌ ஒரு வ‌ரியில் சொல்வ‌தானால்.... Life is all about love, isn't it?

Sunday, October 10, 2010

மே அமிதாப் ப‌ச்ச‌ன் போல் ர‌ஹா ஹுன்

ப‌னைம‌ர‌ம் மாதிரி உய‌ர‌மா இருப்பார். ஹிந்தி ந‌டிக‌ர். அமிதாப் என்றால் இவ்வ‌ள‌வுதான் தெரியும் ப‌ள்ளி நாட்க‌ளில். அந்த‌ வ‌ய‌தில் ப‌டிப்பு க‌ச‌ந்த‌தே த‌விர‌, பொது அறிவு ச‌ம்பந்த‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ங்க‌ளில் ஆர்வ‌ம் அதிக‌ரிக்க‌த்தொட‌ங்கிய‌து. இந்த‌ ச‌ம‌ய‌த்தில்தான் 'கோன் ப‌னேகா க்ரோர்ப‌தி' நிக‌ழ்ச்சி ஆர‌ம்பித்த‌து.

KBC வெற்றிக்கு கேள்விக‌ள், ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்ட‌ வித‌ம் ம‌ட்டும‌ல்லாது அமிதாப்பின் ஈகோ இல்லாத‌ அணுகுமுறையும் ஒரு கார‌ண‌ம். போட்டியாள‌ர்க‌ளுக்கு தான் ஒரு ஸ்டார் எதிரில் அம‌ர்ந்திருக்கிறோம் என்ற‌ பிர‌மிப்பில் இருந்து வெளிகொண‌ர்வ‌தில் சாம‌ர்த்திய‌சாலி. பொது அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள‌லாம் என்று பார்க்க‌ ஆர‌ம்பித்த‌ நிக‌ழ்ச்சி, சில‌ நாட்க‌ளில் அமிதாப்பின் ஸ்டைலுக்கா‌க‌வே பார்க்க‌லாம் என்றாகிப் போன‌தில் விய‌ப்பேதுமில்லை.





மீசை கூட‌ முளைத்திராத‌ வ‌ய‌து. பாண்ட்ஸ் ப‌வுட‌ரை கையில் கொட்டி, க‌ண்ணாடி முன் ப‌த்து நிமிட‌ம் பொறுமையாக‌ பார்த்து பார்த்து, அமிதாப்பின் வெண் பிரெஞ்சு தாடியைப் போன்றே வ‌ரைந்து கொண்டு, அம்மாவின் முன் சென்று "மே ர‌கு போல் ரஹா ஹுன்..கோன் ப‌னேகா க‌ரோர்ப‌தி ஸே" என்று அமிதாப்பின் குர‌லில் மிமிக்ரிய‌து இன்னும் நினைவில் உள்ள‌து. வ‌ய‌தானாலும் வெகு சில‌ரால் ம‌ட்டுமே ப‌ல‌ரையும் வ‌சீக‌ரிக்க‌ முடியும். இத‌ற்கு மிக‌ச்சிற‌ந்த‌ உதார‌ண‌ம் அமிதாப் ம‌ற்றும் ந‌ம்ம‌ எந்ந்ந்ந்ந்ந்...திரா!

'சிவாஜி' ப‌ட‌ம் ரிலீஸை நெருங்கிக்கொண்டிருந்த‌ நேர‌ம். அப்போது அயோத்தி, காம‌ன்வெல்த் கேம்ஸ் எல்லாம் தீனி போட‌வில்லை என்ப‌தால், ஹிந்தி நியூ(ஸ‌ன்)ஸ் சேன‌ல்‌க‌ள், யார் உண்மையான‌ சூப்ப‌ர் ஸ்டார்? அமிதாப்பா ர‌ஜினியா? என்று சும்மா கிட‌ந்த‌ சங்கை...ஆம் அதேதான். இத‌ற்கு ர‌ஜினியே ப‌தில‌ளித்திருந்தார். அந்த‌ க்ளிப்பிங் ஞாப‌க‌மிருக்கிற‌து. 5 ஸ்டார் ஹோட்ட‌ல் என்று நினைக்கிறேன். அங்கிருந்து ர‌ஜினி வெளியே வ‌ரும்போது செய்தியாள‌ர் இதே கேள்வியை கேட்க‌, அத‌ற்கு த‌லைவ‌ர், "No no, I may be a king..may be. But Amitji is an emperor" என்றார்.

சில‌ மாத‌ங்க‌ள் முன்பு 'ஜ‌ப் வி மெட்' ப‌ட‌ டிவிடி வாங்கிய‌போது, அதில் 'பூத்நாத்'தும் இருந்த‌து. போடா குழ‌ந்தைங்க‌ ப‌ட‌ம் என்று முத‌லில் தோன்றினாலும், ச‌ரி பார்ப்போம் என்று ஆர‌ம்பித்து, குழ‌ந்தையாக‌வே மாறிப்போனேன். ப‌ட‌ம் க‌டைசி அரை ம‌ணி நேர‌ம்தான் ரொம்ப‌ சுமாராக‌ இருக்கும். அந்த‌ சிறுவ‌னை ஆர‌ம்ப‌த்தில் ப‌ய‌முறுத்தி, பின்பு அவ‌ன் மேல் பாச‌ம் கொண்டு ஒரு தோழ‌னாக‌ மாறுவ‌தில் அமிதாப் அமிதாப்தான்! உங்க‌ள் இன்டெல‌க்ச்சுவ‌லை கொஞ்ச‌ம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு குழ‌ந்தையாக‌ இந்த‌ ப‌ட‌த்தை பார்த்தால் க‌ண்டிப்பாக‌ பிடிக்கும்.

இதோ மீண்டும் கோன் ப‌னேகா க்ரோர்ப‌தி ஆர‌ம்பிக்க‌ போகிற‌து. வெற்றியாள‌ருக்கு அதிக‌ப‌ட்ச‌ம் 5 கோடி என்கிறார்க‌ள். சேன‌ல் ஸ்டார் இல்லை, சோனி என்கிறார்க‌ள். இருக்க‌ட்டுமே, 'ஸ்டார்'ரில் வ‌ந்தால்‌தான் அமிதாப் ஸ்டார் என்றில்லை. 'சோனி'யில் வ‌ந்தாலும் அமிதாப் ஸ்டார்தான்.

ச்சே எதுக்கு இந்த‌ மொக்கை? ச‌ரி விடுங்க‌ள், சொல்ல‌ வ‌ந்த‌தை சொல்லிவிடுகிறேன். சொன்னாலும் அமிதாப்புக்கு தெரியப்போவ‌தில்லை. என்ன‌வென்று கொஞ்ச‌ம் யோசியுங்க‌ள். அமிதாப்பை ப‌ற்றி ஏதாவ‌து கிசுகிசு? ரேகா? இந்த‌ மாதிரியெல்லாம் யோசிக்காதிங்க‌..பிச்சு புடுவேன் பிச்சு :)) நான் சொல்லவ‌ந்தது....


ஹாப்பி ப‌ர்த்டே அமித்ஜி!


என‌க்கு இன்னொரு ஹிந்தி நடிக‌ரையும் பிடிக்கும். அவ‌ரைப் ப‌ற்றி அடுத்த‌ மாத‌ம் பார்ப்போம். அவ‌ர் யாரென்று தெரிந்து கொள்ள‌ ஒரு க்ளூ...கிகிகி...கிர‌ண்!

Sunday, September 19, 2010

ஒன்று பூஜ்ய‌ம் பூஜ்ய‌ம்

3 இடிய‌ட்ஸ் ச‌மீப‌த்தில்தான் பார்த்தேன். அதுவும் ரீமேக், ஷ‌ங்க‌ர், விஜ‌ய் என்றெல்லாம் ப‌த்திரிக்கைக‌ளில் வாசித்த‌ பின்புதான் பார்க்கும் ஆர்வ‌ம் அதிக‌மான‌து. பார்த்து முடித்தேன். இவ்வ‌ள‌வு நாளா பார்க்காம‌ விட்டுட்டோமே என்றுதான் தோன்றிய‌து.



ஆமிர்கான். த‌லைவா என்று க‌த்திக்கொண்டு, என் த‌லைவ‌ன் எப்ப‌டி ப‌ண்ணியிருக்கான் தெரியுமா என்றெல்லாம் த‌லைவ‌ன் புக‌ழ் பாடிக்கொண்டு இருக்கும் நிலையை க‌ட‌ந்துவிட்டேன் என‌த் தோன்றுகிற‌து. சிறு வ‌ய‌து முத‌லே என்ன‌தான் ஷாரூக்கான் ப‌ட‌ங்க‌ளை ர‌சித்து பார்த்தாலும், ஆமிரையும் ர‌சிக்கிறேன். மாத‌வ‌ன், ஷ‌ர்மான் ஜோஷி, க‌ரீனா க‌பூர், போம‌ன் இரானி என்று அனைவ‌ரிட‌மும் அறையும், உதையும் வாங்குகிறார். பார்ப்ப‌த‌ற்கு மிக‌ ய‌தார்த்த‌மாக‌ இருந்த‌து. வேறு யாராவ‌து ந‌டித்திருந்தால் (ஷாரூக் உட்ப‌ட‌), அறை வாங்கும் காட்சிக‌ளை த‌விர்த்திருக்க‌க்கூடும். கொஞ்ச‌ம் கூட‌ ஈகோ இல்லாம‌ல் ந‌டித்த‌தினால் ஆமிரை இன்ன‌மும் பிடிக்கிற‌து.

உங்க‌ளுக்கு எந்த‌ துறை விருப்ப‌மோ அதில் ஈடுப‌டுங்க‌ள். க‌ட்டாய‌த்திற்காக‌ பிடிக்காத‌ துறையைத் தேர்ந்தெடுத்து ப‌டிக்க‌ வேண்டாம் என்று போதிக்கிறார்க‌ள். போத‌னைக‌ள் ந‌ம‌க்கு எப்போதும் 'ப்ச்' ர‌க‌ம்தான். ஆனால் இந்த‌ ப்ட‌ம் பார்க்கும்போது ச‌லிப்பு ஏற்ப‌ட‌வில்லை. ப‌ட‌த்தின் ஒரே குறை என‌ என‌க்குத் தோன்றிய‌து, பிர‌ச‌வ‌ம் பார்க்கும் காட்சி. அப்சொல்யூட் சினிமாத்த‌ன‌ம். கேப்ட‌ன் மொபைல் லைட்டில் ச‌ர்ஜ‌ரி செய்தால் கிண்ட‌ல் செய்கிறோம். ஆமிர் என்றால் 'ஆ'வென்று வாயைப் பிள‌க்க‌ வேண்டுமா என்ன‌?

த‌ற்போதிருக்கும் சூழ்நிலையில் விஜ‌ய்க்கு இது ச‌ரியான‌ வாய்ப்பு. அவ‌ர் எப்ப‌டி ப‌ய‌ன்ப‌டுத்திக் கொ'ல்ல‌'ப் போகிறார் என்ப‌து தெரிய‌வில்லை. ஈகோவை விட்டுவிட்டு, ஷ‌ங்க‌ர் சொல்பேச்சை கேட்டால், விஜ‌ய்க்கு இது க‌ண்டிப்பாக‌ ப்ளாக்ப‌ஸ்ட‌ர்தான்.

****************************************

ஹும்...99 டெஸ்ட்டோடு ஓய்வு(?) பெற்ற‌ அஸாருதீன் போல‌ ஆகிவிடுவோமோ என்று ப‌ய‌ந்துகொண்டேயிருந்தேன். ஏதேதோ ஒப்பேத்தி எழுதி இதோ நூறாவ‌து ப‌திவு வ‌ரை வ‌ந்தாகிவிட்ட‌து.

அழ‌கான‌ வ‌ர்ண‌னைக‌ள். வ‌சீக‌ர‌மான‌ மொழி ந‌டை. இவ‌ற்றோடெல்லாம் கைகோர்த்து ந‌டை ப‌யில‌ இன்னும் ஆர‌ம்பிக்க‌வில்லை. இன்னும் த‌வ‌ழும் ப‌ருவ‌த்தில்தான் இருக்கிறேன். என்றாலும் எழுதும் ஆர்வ‌ம் ம‌ட்டும் இன்னும் குறைய‌வில்லை.

அதும‌ட்டும‌ல்லாது 'அட‌ச்சே! இவ‌னே எழுத‌றான், நாம‌ ஏன் எழுத‌க்கூடாது?' என்று புதிய‌ ப‌திவ‌ர்க‌ளுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக‌ இருப்ப‌தில் ம‌ட்ட‌ற்ற‌ ம‌கிழ்ச்சி. வீட்டிலுள்ள‌ அறையிலேயே உட்கார்ந்து யோசித்த‌தில் இதுவ‌ரை எழுதிய‌திலேயே கொஞ்ச‌ம் பெருமூச்சுட‌ன் 'ஹும்..ஓகே' அப்ப‌டி என‌த் தோன்றுவ‌து இந்த‌ க‌தைதான்.



வெகு நாட்க‌ளாக‌ பிடித்திருந்த‌ ப்ளாகோமேனியா கொஞ்ச‌ம் குறைந்திருப்ப‌து போன்ற‌ உண‌ர்வு. கார‌ண‌ம் புதிய‌ வேலை. ஆணிக‌ள் அதேதான். இட‌ம்தான் புதுசு. ஜிமெய்ல், ப்ளாக் அக்ஸ‌ஸ் இருந்தாலும் ச‌ற்று த‌ய‌க்க‌மாக‌ இருக்கிற‌து. அதான் கொஞ்ச‌ நாள் போக‌ட்டும் என்று பொறுத்திருக்கிறேன்.

ஏன் ரொம்ப‌ நாளா எழுத‌வேயில்ல‌ என்று மொபைலிலும், மெய்லிலும் நிறைய‌ பேர் மாற்றி மாற்றி கேட்காவிட்டாலும், இர‌ண்டு மூன்று ந‌ண்ப‌ர்க‌ளாவ‌து கேட்ட‌தில் ம‌கிழ்ச்சியே. முன்பு போல் தொட‌ர்ச்சியாக‌ பின்னூட்ட‌மிடாத‌த‌ற்கு ந‌ண்ப‌ர்க‌ள் ம‌ன்னிக்க‌ வேண்டும். விரைவில் க‌ள‌த்தில் இற‌ங்க‌ முய‌ற்சிக்கிறேன் ;)


புதிய‌ வேலை கிடைத்த‌ ம‌கிழ்ச்சியை ப‌கிர்ந்து கொள்ள‌ ஊரிலிருக்கும் ந‌ண்ப‌னுக்கு மொபைலினேன்.

'ம‌ச்சி, எங்க‌ வெளியே இருக்கியாடா? நாய்ஸியா இருக்கு'

'ப‌ப்ஸ் சாப்புட‌ணும் போல‌யிருந்த‌து, அதான் பேக்க‌ரி வ‌ந்தேன்...என்ன‌ சொல்லு'

'புது ஜாப் கிடைச்சிருக்கு..இன்னைக்குதான் ஜாய்ன் ப‌ண்ணேன், இன்னும் சிஸ்ட‌ம் ரெடியாக‌ல‌..சும்மாதான் உட்கார்ந்துகிட்டிருக்கேன்..அதான் உங்கிட்ட‌ பேச‌லாம்னு...'

'வாவ்! சொல்ல‌வேல்ல‌, சூப்ப‌ர்! கங்கிராட்ஸ்டா'


'தேங்க்ஸ்டா, சொல்ல‌க்கூடாதுன்னுலாம் இல்ல‌, ஜாய்ன் ப‌ண்ண‌துக்க‌ப்புற‌ம்....'


என்னை முடிக்க‌விடாம‌ல் அடுத்து ஒரு கேள்வி கேட்டான். என்ன‌ கேட்டிருப்பான் என்று ச‌ற்று யூகியுங்க‌ள்.

ட்ரீட் எப்போ?

என்ன‌ க‌ம்பெனி?

ஆஃபிஸ் டைம் என்ன‌?

எந்த‌ ஏரியா?

எவ்வ‌ள‌வு ச‌ம்ப‌ள‌ம்?

எப்ப‌டி போற‌? பைக்ல‌யா? ப‌ஸ்ல‌யா?

சாப்பாடுலாம் எப்படி?

அடுத்து என்ன‌ க‌ல்யாண‌ம்தானே?

.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஹுஹும்...அவ‌ன் கேட்ட‌ கேள்வி "ஆஃபிஸ்ல‌ ஃபிக‌ர்லாம் ந‌ல்லாருக்காடா?"


ந‌ண்பேன்டா!



Sunday, August 15, 2010

மென்பொருள் துறை



கை நிறைய‌ ச‌ம்ப‌ள‌ம். வாய் நிறைய‌ 'ஹே ட்யூட்'. நிறுவ‌ன‌மே பேருந்த‌னுப்பி கூட்டிச் செல்லும். குடும்ப‌த்தோடு வார‌யிறுதியில் திரைப்ப‌ட‌ம், க‌ட‌ற்க‌ரை ம‌ற்றும் உண‌வ‌க‌ம். ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் டிஸ்கோதே. புற‌ந‌க‌ர்ப் ப‌குதியில் சொந்த‌மாக‌ ஒரு வீடு. பிர‌தி மாத‌ம் செலுத்த‌ வேண்டிய‌ வீட்டுக்க‌ட‌ன். ச‌ம‌ய‌ங்க‌ளில் ஆத‌ர‌வ‌ற்றோர் இல்ல‌ம், முதியோர் இல்ல‌ம் ஆகிய‌வைக‌ளுக்குச் சென்று உத‌வி. மிக‌ முக்கிய‌மாக‌, ம‌ற்ற‌ துறையின‌ரின் வ‌யிற்றெரிச்ச‌ல். இவை ம‌ட்டுமே பெரும்பாலான‌ மென்பொருள் துறையின‌ருக்கு வாழ்க்கை முறை.

வ‌ருட‌ம் 2008. உல‌கள‌வில் பொருளாதார‌ச் ச‌ரிவு. உல‌க‌ள‌வில் என்றால் உல‌க‌ள‌வில்தான். ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ளில் ம‌ட்டும்தான் உல‌க‌ம் என்றால் அமெரிக்கா. அமெரிக்கா ம‌ட்டும‌ல்லாது ஜ‌ப்பான், இந்தியா, சீனா உட்ப‌ட‌ அனைத்து நாடுக‌ளும் பொருளாதார‌ச் ச‌ரிவில் ஆட்ட‌ம் க‌ண்ட‌ன‌.

எப்பாடுப‌ட்டேனும் இதை ச‌மாளித்தாக‌வேண்டும். பெருந்த‌லைக‌ள் அறையெடுத்து யோசித்திருப்பார்க‌ள் போல‌. விழுந்த‌து ச‌ம்ம‌ட்டி அடி. வாங்கிய‌து மென்பொருள் துறையின‌ர்.



ப‌ணியாள‌ர்க‌ளைக் குறைக்க‌ வேண்டும். எடுத்த‌வுட‌ன் நேர‌டியாக‌ச் சொல்ல‌முடியாது. முத‌லில் வேலை நேர‌த்தை நீட்டித்து உட‌ல‌ள‌விலும், ம‌ன‌த‌ள‌விலும் சோர்வ‌டைய‌ச் செய்ய‌வேண்டும். வேலை இருக்கிற‌தோ இல்லையோ. விடுமுறை நாட்க‌ளில் வ‌ர‌ச்செய்ய‌வேண்டும். நிறுவ‌ன‌ம் அளித்த‌ இல‌வ‌ச‌ டீ, காபி, குறைந்த‌ விலைச் சாப்பாடு அனைத்தும் வில‌க்கிக்கொள்ள‌ப்ப‌டும். மாந‌க‌ர‌ப் போக்குவ‌ர‌த்துக் க‌ழ‌க‌ம் ந‌ம் நிறுவ‌ன‌ம் அமைந்திருக்கும் வ‌ழித்த‌ட‌த்தில் நிறைய‌ பேருந்துக‌ளை அறிமுக‌ப்ப‌டுத்தியிருக்கின்ற‌ன‌ர். அத‌னால் நிறுவ‌ன‌ம் பேருந்து வ‌ச‌தியைத் த‌ற்காலிக‌மாக, சோத‌னை முய‌ற்சிக்காக‌ நிறுத்திவைத்துள்ள‌து என‌ அறிவிக்க‌வேண்டும். அட‌! அனைவ‌ரும் கைக்குட்டை வைத்திருக்கிறீர்க‌ளே, பிற‌கெத‌ற்கு கை க‌ழுவுமிட‌த்தில் டிஷ்யூ காகித‌ம்? சென்ற‌ வ‌ருட‌ம் 25% ஊதிய‌ உய‌ர்வு வாங்கினீர்க‌ள் அல்ல‌வா? இந்த‌ வ‌ருட‌ம் 15% உங்க‌ள் ச‌ம்ப‌ள‌த்தில் குறைக்க‌ப்ப‌டுகிற‌து.

வேறு வ‌ழியில்லை. ஒன்று இந்த‌ இம்சைக‌ளைத் தாங்க‌ முடியாம‌ல் வேலையை நாமே விட்டுவிட‌ வேண்டும். இல்லையென்றால் க‌டைசிப் ப‌ல் இருக்கும்வ‌ரை க‌டித்துக்கொண்டு வாய் மூடி இருக்க‌வேண்டிய‌துதான்.

இத‌ன்பின்னும் யாரையாவ‌து ப‌ணிநீக்க‌ம் செய்ய‌வேண்டுமா? எளிது. குமுத‌த்தில் வ‌ருவ‌து போல் ஆறு வித்தியாச‌மெல்லாம் இல்லை வ‌ணிக‌ ப‌ட‌ வில்ல‌னுக்கும், நிறுவ‌ன‌ மேலாள‌ருக்கும். ஒரு வித்தியாச‌ம் ம‌ட்டுமே. அவ‌ர் "தூக்குங்க‌டா அவ‌னை" என்று க‌ர்ஜிப்பார். இவ‌ர் த‌ன் இருக்கையில் அம‌ர்ந்த‌ப‌டி, அலுவ‌ல‌க‌ ம‌னித‌வ‌ள‌த் துறைக்கு மின் ம‌ட‌லைத் த‌ட்ட‌ச்சிக்கொண்டிருப்பார், "We can terminate the contract of these employees".

நிறுவ‌ன‌த்திற்கு விசுவாச‌மாக‌ இருந்திருக்கிறோம். அவ‌ச‌ர‌மாக‌ முடித்தே ஆக‌வேண்டும் என்ற‌ சூழ்நிலைக‌ளில் ப‌தினான்கு ம‌ணி நேர‌த்திற்கு மேல் வேலை செய்திருக்கிறோம். விடுமுறை நாட்க‌ளில், ப‌ண்டிகை நாட்க‌ளில் கூட‌ குடும்ப‌த்தை ம‌ற‌ந்துவிட்டு அலுவ‌ல‌க‌த்திற்கு வ‌ந்திருக்கிறோம். அத‌னாலென்ன‌? அத‌ற்குத்தான் இவ்வ‌ள‌வு நாளாக‌ 4 ப‌க்க‌த்திலும், 5 ப‌க்க‌த்திலும் நான்கைந்து 0க்க‌ளைப் போட்டு ச‌ம்ப‌ள‌மாக‌ வாங்கினீர்க‌ளே. ஹும்..கிள‌ம்புங்க‌ள்!

வ‌ருட‌ம் 2009. நிறுவ‌ன‌ங்க‌ள் 2008ல் ந‌ட‌த்திய‌ 'ப‌ணியாள‌னே வெளியேறு' வைப‌வ‌த்தில் த‌ப்பித்து, க‌த்தியின் கீழ் தொங்கிக்கொண்டு ப‌ணிபுரிந்த‌ நிலை. வ‌ருட‌யிறுதி அப்ரைச‌ல் (த‌மிழ்ல‌ எப்ப‌டி சொல்ற‌து‌?). 'இன்க்ரிமென்ட்' ஒன்றையே ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ அப்ரைச‌லில் பார்த்த‌வ‌ர்க‌ளுக்கு புதிதாக‌ ஒரு வ‌ஸ்து காத்துக்கொண்டிருந்த‌து. ரிஸ‌ஷ‌ன். இதுவ‌ரை அறியாத‌ வார்த்தை. அறிமுக‌ப்ப‌டுத்திய‌து மேலாள‌ர். புரிய‌வைத்த‌து கூகுள் ம‌ற்றும் MS Wordல் Shift F7.

"உன‌க்கே தெரியும்பா மார்க்கெட் எப்ப‌டியிருக்குன்னு. உன் பேரும் லிஸ்ட்ல‌ இருந்த‌து. நான்தான் ஸ்ட்ராங்கா ரெக‌ம‌ண்ட் ப‌ண்ணி உன்னை ரீட்டெய்ன் ப‌ண்ணியிருக்கேன். இன்க்ரிமெண்ட்லாம் இல்லியேன்னு நினைக்காதே. இன்னும் வேலைல‌ இருக்கோம்னு ச‌ந்தோஷ‌ப்ப‌டு" என்று நாக‌ரிக‌மான‌ எச்ச‌ரிக்கை கிடைக்கும். ஒரு ரூபாய் கூட‌ ந‌ஷ்ட‌ம‌டையாத‌ நிறுவ‌ன‌ங்க‌ளும் ரிஸ‌ஷ‌னைக் கார‌ண‌‌ம் காட்டி, ச‌லுகைக‌ளைப் ப‌றித்த‌தும் அர‌ங்கேறிய‌து. அவ‌ர்க‌ளைக் குறை சொல்ல‌ முடியாது. ரிஸ‌ஷ‌ன் என்ற‌ புய‌ல் வீசிய‌து. தூற்றிக்கொண்டார்க‌ள்.



வ‌ருட‌ம் 2010. இந்த‌ வ‌ருட‌மும் உங்க‌ள் மேலாள‌ர் ரிஸ‌ஷ‌ன் ராக‌த்திலேயே பாட‌ ஆர‌ம்பித்தால், அப்ரைச‌ல் க‌ச்சேரி முடிந்த‌வுட‌ன் தைரிய‌மாக‌ முடிவெடுத்து வேறு வேலையைப் பாருங்க‌ள். ச‌த்திய‌மாக‌ இப்போது ரிஸ‌ஷ‌ன் இல்லை. வேலை வாய்ப்பூ(க்)க‌ள் மீண்டும் துளிர்விட‌த் தொட‌ங்கியுள்ள‌ன‌. இன்ஃபோசிஸும், டிசிஎஸ்ஸும் இவ்வ‌ருட‌ம் வேலைக்கு அள்ள‌ப்போகும் ந‌ப‌ர்க‌ளின் எண்ணிக்கை 30000. வேலை வாய்ப்புக்கான‌ மின்ம‌ட‌ல்க‌ள் சென்ற‌ வ‌ருட‌த்தில் இதே ச‌ம‌ய‌த்தில் மாத‌ம் மூன்று நான்குதான் வந்துகொண்டிருந்த‌ன‌. இப்போது, வார‌த்திற்கே ஏழெட்டு மின்ம‌ட‌ல்க‌ள்!

புதிய‌ வேலை கிடைத்த‌தும் வ‌ற‌ட்டு கெள‌ர‌வ‌த்துக்காக‌, அவ‌சிய‌ம‌ற்ற‌ ஆட‌ம்ப‌ர‌ப் பொருள்க‌ளில் ப‌ண‌த்தை விர‌ய‌மாக்காதீர்க‌ள். அடுத்து எவ‌னாவ‌து லூசுப் ப‌ய‌ல் விமான‌த்தை எடுத்துக்கொண்டு பில்டிங்கில் போய் பார்க் செய்தால், மீண்டும் பொருளாதார‌ம் த‌டுமாறும் என்ப‌து உண்மை. என‌வே குறைந்த‌து ஆறு மாத‌ங்க‌ளுக்குத் தேவையான‌ ப‌ண‌ம் எப்போதும் வ‌ங்கி க‌ண‌க்கில் இருக்க‌ட்டும். இவை யாவும் அறிவுரை அல்ல‌. ரிஸஷ‌ன் நேர‌த்தில் மன‌ உளைச்ச‌லில் ப‌ல‌ர் அவ‌ஸ்தைப்ப‌ட்ட‌தை நேரில் பார்த்திருக்கிறேன். ஒரு சில‌ என் அனுப‌வ‌மும் கூட‌. ஒரு ந‌ண்ப‌னாக‌ ப‌கிர‌ ஆசைப்ப‌ட்டேன். அவ்வ‌ள‌வுதான். ஓவ‌ரா பேசுறான்டா என்று தோன்றினால் ம‌ன்னிக்க‌வும்.

ஒரு சின்ன‌ யோச‌னை. வேலை தேடும்போது உங்க‌ள் விப‌ர‌ங்க‌ளை நாக்ரியில் ப‌தித்திருப்பீர்க‌ள். ஒவ்வொரு ஞாயிறு அல்ல‌து திங்க‌ட் கிழ‌மைக‌ளில், உங்க‌ள் ரெஸ்யூமை ரீஅப்லோட் செய்யுங்க‌ள். ஒவ்வொரு மாத‌ முடிவிலும், உங்க‌ள் அனுப‌வ‌த்தில் ஒரு மாத‌ம் கூடுகிற‌து. அதையும் அப்டேட் ப‌ண்ண‌வேண்டும். இப்ப‌டிச் செய்வ‌தால் ப்ரொஃபைல் பெய‌ருக்குக் கீழே Updated on என்று அப்டேட் செய்ய‌ப்ப‌ட்ட‌ தேதி குறிப்பிட‌ப்ப‌ட்டிருக்கும். நிறுவ‌ன‌ங்க‌ள் நாக்ரி போன்ற‌ வேலைவாய்ப்புத் த‌ள‌ங்க‌ளில் தேடும்போது, recently updated profileக‌ளுக்கு முன்னுரிமை த‌ருகின்ற‌ன‌ர். இது என‌க்குத் தெரிந்த‌ ஒன்று.

வேறு ஏதேனும் யோச‌னை இருந்தால், பின்னூட்ட‌த்தில் ப‌கிருங்க‌ள். ப‌ல‌ருக்கும் ப‌ய‌னுள்ள‌தாக‌ இருக்கும்.

Tuesday, August 10, 2010

எழுதுங்க‌ ந‌ர்சிம்

சோம்பேறி. ர‌கு. என்னால் ச‌ரியாக‌ உண‌ர‌ முடிகிற‌து இவ்விரு வார்த்தைக‌ளுக்கும் பெரிதொரு வித்தியாச‌ம் இல்லையென‌. வேலைப்ப‌ளு என்ப‌து ச‌ப்பைக்க‌ட்டு. அழ‌காய் ஒரு ப‌திவெழுத‌வேண்டும் என‌த் தோன்றினால், ஏனோ ம‌ன‌ம் ஒரு அமைதியான‌ சூழ்நிலையையும் த‌னிமையையும் நாடுகிற‌து.

இதையாவ‌து ஒழுங்கா எழுதுடா சோம்பேறிப்ப‌ய‌லே என்று ஒரு தொட‌ர் ப‌திவிற்கு அழைத்திருக்கிறார் தோழி ப்ரியா. இதோ ஆர‌ம்பிக்க‌றேங்க‌ சுய‌புராண‌த்தை. எந்திர‌னின் அரிமா அரிமாவை ரொம்ப‌வே ர‌சித்துக்கொண்டிருக்கிறேன். அத‌னால் இப்ப‌திவின் பிண்ண‌ணி இசையாக‌ இதை க‌ற்ப‌னை செய்துகொண்டே வாசிக்க‌த் தொட‌ங்குங்க‌ள் :) கொஞ்ச‌ம் ஓவ‌ராத்தான் போறோமோ!

இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்....

(என்ன‌டா விள‌ம்ப‌ர‌ம்?)




1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ர‌கு

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ஹுக்கும்..உண்மையான பெய‌ர் ச‌ச்சின் டெண்டுல்க‌ர். ஏங்க‌? முத‌லில் குறும்ப‌ன் என்ற‌ பெய‌ரில்தான் எழுத‌ ஆர‌ம்பித்தேன். மைலாப்பூர் க‌பாலீஸ்வ‌ர‌ர் கோயிலில், சாமி சிலைக‌ளுப் பின்ன‌ர் த‌மிழ் மாத‌ம் எழுதி ஒவ்வொரு பெய‌ர் எழுதியிருந்த‌ன‌ர். அப்ப‌டி நான் பிற‌ந்த‌ மாதத்திற்கு எழுதியிருந்த‌ பெய‌ர் பெரும‌ழிசைக் குறும்ப‌ர். முத‌ல்வ‌ர் இளைய‌வ‌ராக‌ இருந்த‌தால் 'முத‌ல்வ‌ன்' ஆன‌து போல் நானும் குறும்ப‌ன் ஆனேன். பின் த‌மிழ்ம‌ண‌த்தில் உலாவ‌ரும்போது இதே பெய‌ரில் வேறொருவ‌ர் இருப்ப‌த‌றிந்து, உண்மையான‌ பெய‌ரிலேயே எழுத‌லாம் என்று மாற்றிவிட்டேன். த‌விர‌ வெறும் ந‌கைச்சுவை ம‌ட்டும‌ன்றி எல்லாம் க‌ல‌ந்து எழுது என்று ந‌ட்புக‌ளின் 'மிர‌ட்ட‌ல்'க‌ளும் ஒரு கார‌ண‌ம். ஸ்ஸ்ஸ்ஸ்..இதுதான் 'குறும்ப‌ன்' 'ர‌கு'வான‌ க‌தை.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

அது த‌மிழ் வ‌லைப்ப‌திவுலகின் போதாத‌ நேர‌ம். வாசிப்ப‌வ‌ர்க‌ளின் ஜாத‌க‌த்தில் ச‌னியின் உச்ச‌ம். நீண்ட‌ நாட்க‌ளாக‌ நிறைய‌ ப‌திவுக‌ளை வாசித்துக் கொண்டே இருந்த‌தில், நாம‌ ஏன் எழுத‌க்கூடாது என்ற‌ ஏடாகூட‌மான‌ எண்ண‌ம் தோன்றியதால் வ‌ந்த‌ அபாய‌க‌ர‌மான‌ விளைவுதான் இந்த‌ வ‌லைப்பூ!

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

திர‌ட்டிக‌ள். இதைத் த‌விர‌ வேறொன்றும் செய்ய‌வில்லை. நிறைய‌ பேருக்கு க‌மெண்ட் போடு அப்ப‌தான் உன‌க்கும் க‌மெண்ட் வ‌ரும் என்று ச‌க‌ ப‌திவ‌ர்க‌ளும், ந‌ண்ப‌ர்க‌ளும் அறிவுறுத்திய‌துண்டு. க‌மெண்ட் போட‌க்கூடாது என்று வேண்டுத‌லெல்லாம் இல்லை. அலுவ‌ல‌க‌த்தில் ச‌ற்று ப்ரைவ‌ஸி இல்லாத‌ கார‌ண‌த்தால் நிறைய‌ ப‌திவுக‌ளுக்கு க‌மெண்ட் போட‌முடிவ‌தில்லை. ஆனாலும் இய‌ன்ற‌வ‌ரை சில‌ருக்குத் தொட‌ர்ந்து க‌மெண்ட்டிக்கொண்டுதான் இருக்கின்றேன்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ப்ளூக்ராஸ், 108 அவ‌ச‌ர‌ சேவை போன்று சில‌ அனுப‌வ‌ங்க‌ளை ம‌ட்டும் எழுதிய‌துண்டு. பெரும்பாலும் சொந்த‌ விஷ‌ய‌ங்க‌ளை எழுத‌ விரும்புவ‌தில்லை. இவ‌ள் என்னுடைய‌ தோழி என்று ஒரு பெண்ணைப் ப‌ற்றி எழுதினால்கூட‌ 'அவ‌ங்க‌ளுக்குள்ள‌ என்ன‌மோ ஓடுதுபா' என்று புற‌ம் பேசுப‌வ‌ர்க‌ளை ந‌ன்றாக‌ அறிவேன். அவ‌ர்க‌ள் பேசுவ‌து உண்மை இல்லையென்றாலும் இத‌னால் கிடைக்கும் காய‌ங்க‌ளும், வ‌லிக‌ளும் மிக‌ அதிக‌ம். என‌வே சொந்த‌ விஷ‌ய‌த்தைப் ப‌ற்றியெல்லாம் அதிக‌ம் எழுதி அவ‌ல் கொடுக்க‌ விருப்ப‌மில்லை.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

குசும்பு புடிச்ச‌ கேள்வி இது. நான் எழுத‌ற‌த‌ வெச்சுலாமா ச‌ம்பாதிக்க‌முடியும்? நான் எழுதிய‌தை க‌ணிணித் திரையில் பார்க்கும்போது, யாராவ‌து ஒருத்த‌ர், ரெண்டு பேர் (இதுவே அதிக‌ம்) பாராட்டும்போது 'ம‌ச‌க்க‌லி'யின் ஆர‌ம்ப‌ இசை (ஹே ஹேஹே ஹே...) ம‌ன‌தில் வ‌ந்து போகும். அத‌ற்காக‌த்தான் எழுதுகிறேன்.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

த‌மிழில் இது ஒன்றுதான். நான் பார்த்த‌ ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ளைப் ப‌ற்றியும், என் கேமிராக்குள் சிக்கிய‌ புகைப்ப‌ட‌க் கைதிக‌ளை சிறையில் அடைக்க‌வும் இரு ஆங்கில‌ வ‌லைப்பூக்க‌ளை ஆர‌ம்பித்தேன். ஆனால் தொட‌ர முடிய‌வில்லை. பேஸிக்க‌லி ஐ'ம் எ சோம்பேறி யூ நோ :)

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமை : ஹ‌ரீஷ், ஜெய் & விக்னேஷ்வ‌ரி. ந‌ம்மால் இப்ப‌டி எழுத‌ முடிவ‌தில்லையே என்று ஏங்க‌ வைக்கும் எழுத்துக‌ள் இவ‌ர்க‌ளுடைய‌து. அப்ப‌டி ஏங்கும்போதெல்லாம், நேர‌ங்கால‌ம் தெரியாத மூளை "ச‌ட்டியில‌ இருந்தாத்தானே...." என்ப‌தை ஞாப‌க‌ப்ப‌டுத்தித் தொலைக்கும்.

கோப‌ம் : ந‌ர்சிம். அவ‌ர் எழுதிய‌தை நியாய‌ப்ப‌டுத்த‌வில்லை. ஆனால் அவ‌ர் எழுதிய‌தைக் க‌ண்டிக்கிறேன் என்று ஆளாளுக்கு எழுத‌ ஆர‌ம்பித்த‌போதுதான் ஒவ்வொருவ‌ரின் ஆழ்ம‌ன‌ வ‌க்கிர‌ம் வெளிப்ப‌ட‌த் தொட‌ங்கிய‌து. அவ‌ர்க‌ள் எழுதிய‌ த‌ர‌ங்கெட்ட‌ வார்த்தைக‌ளை வாசிக்கும்போது இவ‌ர்க‌ளெல்லாம் ப‌டித்த‌வ‌ர்க‌ள்தானா என்றுகூட‌த் தோன்றிய‌து. அவ‌ர் எழுதினார், ப‌திலுக்கு நாங்க‌ எழுதினோம் என்ற‌ ச‌மாளிப்பெல்லாம் வேண்டாம். ஒருவ‌ரின் த‌வ‌றை அவ‌ருக்கு உண‌ர்த்துவ‌துதான் புத்திசாலித்த‌ன‌ம், விவேக‌ம். ஆனால் இங்கு திருப்பி அடிக்கும் 'வீர‌ர்'க‌ள்தான் நிறைந்திருந்த‌ன‌ர். வெளிப்ப‌டுத்த‌வில்லை...ஆனால் க‌டுங்கோப‌ம் கொண்ட‌து இந்த‌ வீர‌ப் ப‌திவ‌ர்க‌ள் மீதுதான்.

ந‌ர்சிம் அவ‌ர்க‌ளுட‌ன் என‌க்குத் த‌னிப்ப‌ட்ட‌ முறையில் ப‌ழ‌க்க‌மில்லை. நேரில் பார்த்த‌தில்லை. அலைபேசியில் பேசிய‌தில்லை. மின்ன‌ஞ்ச‌ல் தொட‌ர்பில்லை (ஒரு முறை 'ஏன் இப்போல்லாம் நீங்க‌ க்ரைம் க‌தைக‌ள் எழுத‌ற‌தில்ல‌' என்று கேட்டு மின்ன‌ஞ்ச‌லினேன்..அவ்வ‌ள‌வுதான்). அவ‌ரின் த‌ள‌த்தில் நான் இன்னும் ஃபாலோவ‌ர் ஆக‌வில்லை. ரெகுல‌ராக‌ அவ‌ர் ப‌திவுக‌ளுக்கு பின்னூட்ட‌ம் இடுவ‌துமில்லை. 'வீர‌ர்'க‌ளுக்கு முக்கிய‌மான‌ த‌க‌வ‌ல்..நான் அவ‌ர் ஜாதியுமில்லை ;) (அவ‌ர் என்ன‌ ஜாதி என்ப‌தே ப‌திவுக‌‌ளின் மூல‌ம்தான் அறிந்தேன்). இப்ப‌டிப் ப‌ல‌ 'ல்லை'க‌ள். ஆனாலும் அவ‌ர் எழுத்தை ர‌சிக்கிறேன். அவ‌ரெழுதிய‌ இந்த‌ ஒரு ப‌திவு போதும் "வாவ்!"வென‌ வாயைப் பிள‌க்க‌ வைக்க‌. மீண்டும் ப‌திவெழுத‌ ஆர‌ம்பித்த‌தில் ம‌கிழ்ச்சி. எழுதுங்க‌ ந‌ர்சிம் :)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

க‌ல்வி உத‌வி ப‌ற்றி எழுதிய‌போது க‌ணேஷ் வெளிநாட்டிலிருந்து தொட‌ர்புகொண்டு தானும் உத‌வ‌த் த‌யாராயிருப்ப‌தாக‌ தெரிவித்தார். எழுத்தின் தாக்க‌ம் அப்போதுதான் புரிந்த‌து. எவ்வ‌ள‌வு மொக்கையாக‌ எழுதினாலும், உற்சாக‌ப்ப‌டுத்துவ‌தில்..ச்சே..உசுப்பேத்துவ‌தில் ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ங்கு அதிக‌ம் :) ம‌ற்ற‌படி, பாராட்டு......ஹும்ம்ம்ம் இந்த‌ மாதிரி ச‌ம்ப‌வ‌மெல்லாம் ந‌ட‌க்க‌வில்லை என்ப‌தை த‌ன்ன‌ட‌க்க‌த்துட‌னும், ஏக்க‌த்துட‌னும் தெரிவித்துக்கொள்கிறேன்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

ரொம்ப‌ முக்கிய‌ம்! ச‌ராச‌ரி, சோம்பேறி, சாஃப்ட்வேர் த‌மிழ‌ன் நான். அப்புற‌ம்..நாட்டுக்குத் தேவையான‌ விஷ‌ய‌ம்....I'm still happy, not married ;))



இத்தொட‌ரை தொட‌ர‌ நான் அழைக்க‌ விரும்புவ‌‌து

ஹ‌ரீஷ்

ஜெய்

விக்னேஷ்வ‌ரி



Sunday, August 01, 2010

வார‌யிறுதியில் மூன்று ஆக்ஷ‌ன் திரைப்ப‌ட‌ங்க‌ள்

சில‌ வ‌ருட‌ங்க‌ள் முன்பு, ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ள் என்றாலே என்னைப் பொறுத்த‌வ‌ரை ஜுராஸிக் பார்க்கும், ஜாக்கி சான் ப‌ட‌ங்க‌ளும்தான். ப‌ரிந்துரை செய்கிறேன் என்ற‌ பெய‌ரில் இந்த‌ ம‌னுஷ‌ன் ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ளுக்கு அடிமையாக‌க் க‌ட‌வ‌து என்று சாப‌மிட்டுவிட்டார். போதாதென்று இவ‌ர் வேறு. ப‌ட‌ங்க‌ளுக்கு விம‌ர்ச‌ன‌ம் எழுதுப்பா என்றால், குவென்டின் தெரியுமா, குப்ரிக் தெரியுமா, நோல‌ன் தெரியுமா என்று குரோர்ப‌தி ரேஞ்சுக்கு கேள்வி கேட்டு வெறுப்பேத்துகிறார்.

இந்த‌ மாதிரி ஆட்க‌ளையெல்லாம் சமாளிப்ப‌த‌ற்காக‌வே ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ளை பார்க்க‌த் தொட‌ங்கினேன். இப்போதெல்லாம் வார‌ம் குறைந்த‌து ஒரு ப‌ட‌மாவ‌து பார்க்கிறேன். அதிக‌ப‌ட்ச‌ம் மூன்று. எல்லா புக‌ழும் டோர‌ன்ட்டில் ட‌வுண்லோடித் த‌ரும் ந‌ண்பருக்கே :)

காமெடி, ஹார‌ர் ப‌ட‌ங்க‌ளை விட‌ த்ரில்ல‌ர்தான் என்னுடைய‌ தேநீர் கோப்பை. அதுவும் ஆக்ஷ‌ன்/க்ரைம் த்ரில்ல‌ர் என்றால் திருப்ப‌திதான். அப்ப‌டி சென்ற‌‌ வார‌ இறுதியில் பார்த்த‌ ப‌ட‌ங்க‌ள் The Delta Force, The Delta Force 2 : The Colombian Connection & Assault on Precinct 13.



The Delta Force & The Delta Force 2 : The Colombian Connection


இவ்விர‌ண்டு ப‌ட‌ங்க‌ளும் எண்ப‌துக‌ளில் வ‌ந்த‌வை. ஆனால் இன்று பார்த்தாலும் ர‌சிக்க‌ முடிகிற‌து. கார‌ண‌ம் விறுவிறுப்பான‌ திரைக்க‌தை, பிர‌மிப்பூட்டும் இய‌க்க‌ம். ஒரு தீவிர‌வாத‌ கும்ப‌ல் அமெரிக்க‌ ப‌ய‌ணிக‌ள் விமான‌த்தைக் க‌ட‌த்திவிடுகின்ற‌ன‌ர். "எங்க‌ ஜ‌ன‌ங்க‌ பாவ‌ம் அவ‌ங்க‌ள‌ விட்டுடுங்க‌, உங்க‌ கும்ப‌லைச் சேர்ந்த‌வ‌ங்க‌ யாரை வேணும்னாலும் ரிலீஸ் ப‌ண்றோம்" என்றெல்லாம் கொஞ்சிக்கொண்டிருக்காம‌ல், அதிர‌டியாக‌ இற‌ங்கி அவ‌ர்க‌ளை மீட்கிறார்க‌ள் ஹீரோ & கோ.

ஹீரோ Chuck Norris. அச‌ர‌ வைக்கும் லுக் இல்லாவிட்டாலும் ஆக்ஷ‌னில் அச‌த்துகிறார். அதுவும் இறுதிக்காட்சியில் பைக்கில் இருந்து விமான‌த்தில் தாவுவ‌து எல்லாம் வாவ்! ர‌க‌ம்.

இர‌ண்டாம் பாக‌மும் ந‌ன்றாக‌த்தானிருந்த‌து. த‌ன் ந‌ண்ப‌ன் ம‌ற்றும் ந‌ண்ப‌னின் ம‌னைவி ஆகியோரின் ம‌ர‌ண‌த்துக்கு கார‌ண‌மான‌ ஒரு போதை ம‌ருந்து தாதாவை எப்ப‌டி ஹீரோ ஒழித்துக்க‌ட்டுகிறார் என்ப‌துதான் க‌தை. முத‌ல் பாக‌ம் அள‌வுக்கு இதில் வ‌லுவான‌ திரைக்க‌தை இல்லாவிட்டாலும், ஆக்ஷ‌ன் காட்சிக‌ளின் மூல‌ம் அந்த‌ குறையை ம‌ற‌க்க‌ச் செய்துவிடுகின்ற‌ன‌ர்.



Assault on Precinct 13

இந்த‌ ப‌ட‌ம் எல்லோருக்கும் பிடிக்குமா என்றால்..பிடிக்க‌லாம். பிடிக்காம‌லும் போக‌லாம். என‌க்கு மிக‌வும் பிடித்திருந்த‌து. கார‌ண‌ம் ப‌ட‌த்தின் அருமையான‌ Plot. ஒரு காவ‌ல் நிலைய‌ம். அங்குள்ள‌ போலீஸாரை (ஹீரோ ம‌ற்றும் ந‌ண்ப‌ர்க‌ள்) வேறு சில‌ போலீஸார் கொலை செய்ய‌ முய‌ற்சிக்கின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளிட‌மிருந்து த‌ப்பிக்க‌ ஹீரோ ஒரு முடிவெடுக்கிறார். அது என்ன‌வென்று சொல்லி த்ரில்லை குறைக்க‌ விரும்ப‌வில்லை. ப‌ட‌த்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்க‌ள்.


ஹீரோ Ethan Hawke. பார்ப்ப‌த‌ற்கு Tom Cruiseன் த‌ம்பி போலிருக்கிறார். ப‌ய‌த்தை, த‌விப்பை, சோக‌த்தை, இய‌லாமையை ந‌ன்றாக‌வே வெளிப்ப‌டுத்தியிருக்கிறார். பொதுவாக‌ ஆக்ஷ‌ன் ப‌ட‌ங்க‌ளில் ந‌டிப்ப‌த‌ற்கு அவ்வ‌ள‌வாக‌ தீனி இருக்காது. இதிலும் அப்ப‌டித்தான். ஆனால் கிடைத்த‌ வாய்ப்புக‌ளை வீணடிக்காம‌ல் ப‌ல‌ காட்சிக‌ளில் அனைவ‌ருமே வெளுத்து வாங்கியிருக்கிறார்க‌ள். இன்னும் நிறைய‌ எழுத‌வேண்டும் போலிருக்கிற‌து. வேண்டாம். காட்சிக‌ளை விவ‌ரிக்க‌ ஆர‌ம்பித்துவிடுவேன். சுருக்க‌மாக‌ச் சொன்னால் இந்த‌ வார‌ம் பார்த்த‌ மூன்று ப‌ட‌ங்க‌ளிலேயே இதுதான் டாப்!

Monday, July 26, 2010

க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை!

அவ‌னுக்கு வ‌ய‌து 22. மாநிற‌ம். வ‌ண்டியில் போகும்போது வீசும் எதிர்காற்றிலேயே ப‌ற‌ந்துவிடுவ‌து போன்ற‌ மெலிந்த‌ தேக‌ம். த‌னுஷை விட‌ ஒல்லி!. அதிர்ந்து பேச‌மாட்டான். மிக‌ அமைதியான‌வ‌ன்.

சொந்த‌ ஊர் என்ன‌வோ திருவ‌ண்ணாம‌லைதான். ஆனால் வ‌சிப்ப‌து வ‌றுமைக்கோட்டுக்கு கீழே‌. நோக்கியா, ஹுண்டாய் என‌ ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ள் ஸ்ரீபெரும்புதூரை ஆண்டுகொண்டிருந்தாலும், அவ‌ற்றிற்கு அடிப‌ணியாம‌ல் இருக்கும் ஒரு குறுநில‌ ம‌ன்ன‌ரைப் போன்ற‌வ‌ர் அவ‌னுடைய‌ த‌ந்தை. தேர்ந்த‌ நெச‌வாளி. அவ‌ருக்கு உத‌வியாய் அவ‌ன‌து அம்மா. க‌ல்லூரி செல்லும் வ‌ய‌தில் ஒரு த‌ங்கை.

அவ‌னுடைய‌ த‌ந்தை என்ன‌மோ ஸ்ரீபெரும்புதூர் ஜாம்ப‌வான்க‌ளுக்கு அடிப‌ணியாத‌வ‌ர்தான். ஆனால் அவ‌ன் ப‌ணிந்துபோக‌ த‌யாராக‌யிருந்தான். வ‌றுமைக்கோடு. எப்பாடுப‌ட்டேனும் இந்த‌ கோட்டிலிருந்து வில‌கி த‌ன் குடும்ப‌த்தை ஒரு ந‌ல்ல‌ நிலைமைக்குக் கொண்டுவ‌ந்துவிட‌ வேண்டும் என்கிற‌ வெறி.

பெரும் முய‌ற்சிக்குப் பின்ன‌ர், சென்னையில் ஒரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தில் அவ‌னுக்கு வேலை கிடைத்த‌து. மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் ரூ.6000. திருவ‌ண்ணாம‌லையில் இருந்து தின‌மும் பேருந்தில் வ‌ந்து போக‌ முடியாது. ப‌ண‌ விர‌ய‌ம் ம‌ட்டும‌ல்லாம‌ல் ப‌ய‌ண‌த்தால் ஏற்ப‌டும் உட‌ற்க‌ளைப்பும் ஒரு கார‌ண‌ம். வேறு வ‌ழியில்லை. தாம்ப‌ர‌த்தில் உள்ள‌ உற‌வின‌ர் வீட்டில் தங்கி வேலைக்கு செல்வ‌து என‌ முடிவு செய்தான்.

பிற‌ந்த‌து முத‌ல், அதிக‌ப‌ட்ச‌ம் இர‌ண்டு நாட்க‌ளுக்கு மேல் த‌ன் பெற்றோரை பிரிந்த‌தில்லை அவ‌ன். ப‌ணியில் சேர்ந்த‌ பின் வார‌ம் ஒரு முறைதான் வீட்டுக்குப் போக‌ முடிந்த‌து. இந்த‌ பிரிவு அவ‌னை வ‌ருத்த‌ம‌டைய‌ச் செய்தாலும், த‌ன் குடும்ப‌ம் ந‌ல்ல‌ பொருளாதார‌ நிலைமைக்கு உய‌ர‌ இது அவ‌சிய‌ம் என்று க‌ருதி த‌ன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.

ப‌ண‌ம்..ப‌ண‌ம்..ப‌ண‌ம்..இது ஒன்றே முக்கிய‌ம். குடும்ப‌த்தின் வ‌றுமை ஒழிய‌ த‌ன் க‌வ‌ன‌ம் முழுதும் ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌திலேயே இருக்க‌ வேண்டும் என்ப‌து அவ‌னுடைய‌ ல‌ட்சிய‌ம், வெறி, சித்தாந்த‌ம், கொள்கை, கோட்பாடு எல்லாமே. காலை 6:30 ம‌ணிக்கு அவ‌னுடைய‌ ஷிஃப்ட் துவ‌ங்கும். ஆறு ம‌ணிக்கு முன்னே அலுவ‌ல‌க‌த்துக்குச் சென்றுவிடுவான்.

அன்று திங்க‌ள் கிழ‌மை. ப‌னி வில‌காத‌ காலை நேர‌ம். ஆறாவ‌து த‌ள‌த்தில் உள்ள‌து அலுவ‌ல‌க‌ம். த‌ரைத் த‌ள‌த்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தினான். ஆறாம் த‌ள‌ம் சென்ற‌டைந்த‌வுட‌ன் லிஃப்ட் க‌த‌வு திற‌ந்த‌போது கீழே விழுந்த‌து அவ‌னுடைய‌ உயிர‌ற்ற‌ உட‌ல்!




அங்கிருந்த‌ செக்யூரிட்டிக‌ள் அவ‌னுடைய‌ டீமுக்கு த‌க‌வ‌ல் அளித்து அவ‌னை ம‌ருத்துவ‌ம‌னைக்குக் கொண்டு செல்ல‌ ஏற்பாடு செய்த‌ன‌ர். ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ரிசோதித்த‌ ம‌ருத்துவ‌ர் ம‌றுநொடியே சொன்னார், "ஸாரி ஹி ஈஸ் நோ மோர்". 'டெட் ஆன் அரைவ‌ல்' என்று ரிப்போர்ட்டில் ப‌திவு செய்தார்.

பின்ன‌ர் அவ‌னுக்கு நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்த‌போது தெரிய‌வ‌ந்த‌து. அவ‌னுக்கு புகை, குடி என்று எந்த‌ ப‌ழ‌க்க‌மும் இல்லை. ஒவ்வொரு மாத‌மும் அவ‌னுக்கென்று ரூ.1500 எடுத்துக்கொண்டு மீதி ப‌ண‌த்தை த‌ன் குடும்ப‌த்துக்கு அனுப்பிவிடுவான். அந்த‌ 1500ல் போக்குவ‌ர‌த்து, அலைபேசி, உண‌வு ஆகிய‌வ‌ற்றிற்கான‌ செல‌வுக‌ள் அட‌ங்கும். செல‌வைக் க‌ட்டுப்ப‌டுத்த‌ அவ‌ன் மேற்கொண்ட‌ ஒரு முடிவு..தினமும் காலை உண‌வைத் த‌விர்த்து ஒரு நாளைக்கு இரு வேளை ம‌ட்டுமே உண்ணுவ‌து.

இந்த‌ ப‌ழ‌க்க‌ம் வெகு நாட்க‌ளாய்த் தொட‌ர்ந்து உட‌லுக்குள் வாயு உருவாகி அது இத‌ய‌த்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 வ‌ய‌தில் மார‌டைப்பு! இது ஏதோ க‌ற்ப‌னையாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ வ‌ரி அல்ல‌. அவ‌னுடைய‌ உண‌வு ப‌ழ‌க்க‌த்தை அவ‌ன் ந‌ண்ப‌ர்க‌ள் கூற‌க்கேட்டு அறிந்த‌ பின் ம‌ருத்துவ‌ர் சொன்ன‌து.

ப‌ண‌ம் ஒன்றையே பிராத‌ன‌மாக‌க் க‌ருதி ப‌ர‌ப‌ர‌வென‌ ப‌ற‌ந்துகொண்டிருக்கும் இந்த‌ யுக‌த்தில், ந‌ம்மில் பெரும்பாலானோர் காலை உண‌வைத் த‌விர்த்துவிடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும் கார‌ண‌ம்.."டைம் இல்ல‌". சாப்பிடுவ‌த‌ற்குக் கூட‌ நேர‌மில்லாம‌ல் அப்ப‌டி என்ன‌ கிழித்துவிட‌ப் போகிறோம்?

இத‌ற்கு மேல் இதைப்ப‌ற்றி நீங்க‌ளே சொல்லுங்க‌ள்!

பி.கு: நானும் இந்த‌ ம‌ட‌த்த‌ன‌மான‌ கார‌ண‌த்தைக் காட்டி ப‌ல‌ நாட்க‌ள் காலை உண‌வைத் த‌விர்த்திருக்கிறேன். அவ‌ன் ம‌ர‌ண‌ம்...என‌க்கொரு பாட‌ம். அன்றிலிருந்து என்னுடைய‌ காலை உண‌வு நேர‌ம் 10 அல்ல‌து 10:30க்குள்.