Showing posts with label த்ரில்ல‌ர். Show all posts
Showing posts with label த்ரில்ல‌ர். Show all posts

Tuesday, May 31, 2011

விபரீதக் கோட்பாடு & ஓடாதே! – சுஜாதா

ஒவ்வொரு வருடமும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களில், பாதியையாவது மூன்று நான்கு மாதங்களுக்குள் வாசித்துவிடுவேன். ஆனால் இம்முறை நிலைமை தலைகீழ். பல காரணங்களால் புத்தகங்கள் பக்கம் எட்டிக்கூட பார்க்க வாய்ப்பிலாமல், சில சமயம் விருப்பமில்லாமல் இருந்தது.

சில நாட்கள் முன்பு வாரயிறுதியில் ஊருக்குச் சென்றிருந்தபோது, அங்கு வழக்கம்போல் காலை 11 மணிக்கு மின்சார வாரியம் ஞாயிறென்றும் பாராமல் தன் கடமையில் இறங்கியது. போதாதற்கு சூரிய பகவானும் ஆஸ்ட்ரேலியாவை எதிர்த்தாடும் சச்சினைப் போல் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார். எனவே வெளியே செல்லவும் விருப்பமில்லை. பிறகுதான் இவ்வருடம் வாங்கிய புத்தகங்களின் ஞாபகம் வந்தது.

அலமாரியில் பல புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தாலும், கண்ணும், கையும் முதலில் நோக்கிச் சென்றது சுஜாதாவை நோக்கித்தான். உண்மையெனினும் ’வழக்கம் போல்’ என்ற சொற்றொடர் முந்தைய வரிக்கு அவசியமில்லாதது. இரு புத்தகங்களை எடுத்தேன். விபரீதக் கோட்பாடு & ஓடாதே.

இவ்விரண்டு புத்தகங்களும் கிழக்கு பதிப்பக வெளியீடு. எழுத்துப்பிழையெல்லாம் இல்லாமல், தரமான காகிதத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இது ஒன்று போதும் சுஜாதாவை கெளரவப்படுத்த. சென்ற வருடம் வேறொரு பதிப்பகத்தில் வாங்கிய புத்தகத்தில் அவரது எழுத்தை உயிருடன் போஸ்ட்மார்ட்டம் செய்திருந்தார்கள். அவர் வாசித்திருந்தால் ஆங்கிலத்தில் அர்ச்சனை செய்திருப்பார்.


விபரீதக் கோட்பாடு

சுஜாதாவின் எழுத்தை நிறைய (சு)வாசித்தவர்கள் இக்கதையில் யார் குற்றவாளியென முதல் நான்கைந்து பக்கங்களிலேயே யூகித்துவிடுவார்கள். ஆனால் மூட நம்பிக்கையை மையமாக வைத்து த்ரில்லராய் கதையை நகர்த்தியிருக்கும் விதம் அட்டகாசம்! கணேஷ் வஸந்திற்காகவே வாசிக்கலாம். இப்போது யோசித்துபார்க்கையில் கண்டிப்பாக இது சுஜாதாவின் பெஸ்ட் அல்ல என்றுதான் தோன்றுகிறது. என்றாலும் தவிர்க்கக்கூடிய கதையும் அல்ல.

ஓடாதே!

ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முன் எழுதிய கதை. இப்புத்தகத்தின் முன்னுரையில், நிறைய இயக்குனர்கள் இக்கதையை திரைப்படமாக கெடுப்பதற்கு..ஸாரி...எடுப்பதற்கு தன்னை அணுகியதாகக் குறிப்பிட்டுள்ளார் சுஜாதா. அதுவும் ஒரு வேண்டுகோளுடன். பாழாய்ப் போகாத செண்டிமெண்ட் காரணமாக, தலைப்பை மட்டும் மாற்றவேண்டும் என்றார்களாம். ஆனால் இந்த ‘ராஜனுக்கு ராஜன்’ அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே இக்கதை திரைப்படம் ஆகாமல் தப்பித்தது என்று முன்னுரையில் சொல்லியிருக்கிறார்.

இயக்குனர்கள் இதைக் கேட்குமளவுக்கு கதையில் அப்படியென்ன இருக்கிறது என்ற எண்ணத்தோடுதான் கதையை வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க ஆரம்பித்த சில பக்கங்களிலேயே புரிந்துவிட்டது. புதிதாய் மணமானவர்களிடையே இருக்கும் காமம் கலந்த காதல், இருக்கையின் நுனிக்கு கொண்டுவரச் செய்யும் அட்டகாசமான சேஸிங் - இவையிரண்டையும் சேர்ந்து இக்கதையை ஒரு அட்டகாசமான த்ரில்லராய் படைத்திருக்கிறார் எனதருமை ரங்கன்.

மணமான மூன்றாம் நாளே, ஒரு குற்றமும் செய்யாத ஜோடியை சென்னை, பெங்களூர் காவல்துறையினர் துரத்துகின்றனர். ஏன்? வேண்டாம், சஸ்பென்ஸை உடைக்கவிரும்பவில்லை. கதையை வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவங்கள், இலக்கியத்தரமான எழுத்து ஆகியவற்றை எதிர்பார்ப்போருக்கு இவ்விரண்டு புத்தகங்களும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் போகலாம். ஆனால் த்ரில்லரை மட்டும் விரும்புபவர்களுக்கு இப்புத்தகங்கள் நல்லதொரு விருந்தென்றே கூறுவேன்.

நல்லவேளை, வாரயிறுதியாக இருந்தாலும் அன்று மின்சார வாரியத்தினர் கடமையே கஜினியாயிருந்தனர். இல்லையெனில் இவ்விரண்டு புத்தகங்களையும் வாசித்திருக்கமாட்டேன். ஆட்சி மாறினாலும் ஆற்காட்டாருக்கு நன்றி! :)


Sunday, August 01, 2010

வார‌யிறுதியில் மூன்று ஆக்ஷ‌ன் திரைப்ப‌ட‌ங்க‌ள்

சில‌ வ‌ருட‌ங்க‌ள் முன்பு, ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ள் என்றாலே என்னைப் பொறுத்த‌வ‌ரை ஜுராஸிக் பார்க்கும், ஜாக்கி சான் ப‌ட‌ங்க‌ளும்தான். ப‌ரிந்துரை செய்கிறேன் என்ற‌ பெய‌ரில் இந்த‌ ம‌னுஷ‌ன் ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ளுக்கு அடிமையாக‌க் க‌ட‌வ‌து என்று சாப‌மிட்டுவிட்டார். போதாதென்று இவ‌ர் வேறு. ப‌ட‌ங்க‌ளுக்கு விம‌ர்ச‌ன‌ம் எழுதுப்பா என்றால், குவென்டின் தெரியுமா, குப்ரிக் தெரியுமா, நோல‌ன் தெரியுமா என்று குரோர்ப‌தி ரேஞ்சுக்கு கேள்வி கேட்டு வெறுப்பேத்துகிறார்.

இந்த‌ மாதிரி ஆட்க‌ளையெல்லாம் சமாளிப்ப‌த‌ற்காக‌வே ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ளை பார்க்க‌த் தொட‌ங்கினேன். இப்போதெல்லாம் வார‌ம் குறைந்த‌து ஒரு ப‌ட‌மாவ‌து பார்க்கிறேன். அதிக‌ப‌ட்ச‌ம் மூன்று. எல்லா புக‌ழும் டோர‌ன்ட்டில் ட‌வுண்லோடித் த‌ரும் ந‌ண்பருக்கே :)

காமெடி, ஹார‌ர் ப‌ட‌ங்க‌ளை விட‌ த்ரில்ல‌ர்தான் என்னுடைய‌ தேநீர் கோப்பை. அதுவும் ஆக்ஷ‌ன்/க்ரைம் த்ரில்ல‌ர் என்றால் திருப்ப‌திதான். அப்ப‌டி சென்ற‌‌ வார‌ இறுதியில் பார்த்த‌ ப‌ட‌ங்க‌ள் The Delta Force, The Delta Force 2 : The Colombian Connection & Assault on Precinct 13.



The Delta Force & The Delta Force 2 : The Colombian Connection


இவ்விர‌ண்டு ப‌ட‌ங்க‌ளும் எண்ப‌துக‌ளில் வ‌ந்த‌வை. ஆனால் இன்று பார்த்தாலும் ர‌சிக்க‌ முடிகிற‌து. கார‌ண‌ம் விறுவிறுப்பான‌ திரைக்க‌தை, பிர‌மிப்பூட்டும் இய‌க்க‌ம். ஒரு தீவிர‌வாத‌ கும்ப‌ல் அமெரிக்க‌ ப‌ய‌ணிக‌ள் விமான‌த்தைக் க‌ட‌த்திவிடுகின்ற‌ன‌ர். "எங்க‌ ஜ‌ன‌ங்க‌ பாவ‌ம் அவ‌ங்க‌ள‌ விட்டுடுங்க‌, உங்க‌ கும்ப‌லைச் சேர்ந்த‌வ‌ங்க‌ யாரை வேணும்னாலும் ரிலீஸ் ப‌ண்றோம்" என்றெல்லாம் கொஞ்சிக்கொண்டிருக்காம‌ல், அதிர‌டியாக‌ இற‌ங்கி அவ‌ர்க‌ளை மீட்கிறார்க‌ள் ஹீரோ & கோ.

ஹீரோ Chuck Norris. அச‌ர‌ வைக்கும் லுக் இல்லாவிட்டாலும் ஆக்ஷ‌னில் அச‌த்துகிறார். அதுவும் இறுதிக்காட்சியில் பைக்கில் இருந்து விமான‌த்தில் தாவுவ‌து எல்லாம் வாவ்! ர‌க‌ம்.

இர‌ண்டாம் பாக‌மும் ந‌ன்றாக‌த்தானிருந்த‌து. த‌ன் ந‌ண்ப‌ன் ம‌ற்றும் ந‌ண்ப‌னின் ம‌னைவி ஆகியோரின் ம‌ர‌ண‌த்துக்கு கார‌ண‌மான‌ ஒரு போதை ம‌ருந்து தாதாவை எப்ப‌டி ஹீரோ ஒழித்துக்க‌ட்டுகிறார் என்ப‌துதான் க‌தை. முத‌ல் பாக‌ம் அள‌வுக்கு இதில் வ‌லுவான‌ திரைக்க‌தை இல்லாவிட்டாலும், ஆக்ஷ‌ன் காட்சிக‌ளின் மூல‌ம் அந்த‌ குறையை ம‌ற‌க்க‌ச் செய்துவிடுகின்ற‌ன‌ர்.



Assault on Precinct 13

இந்த‌ ப‌ட‌ம் எல்லோருக்கும் பிடிக்குமா என்றால்..பிடிக்க‌லாம். பிடிக்காம‌லும் போக‌லாம். என‌க்கு மிக‌வும் பிடித்திருந்த‌து. கார‌ண‌ம் ப‌ட‌த்தின் அருமையான‌ Plot. ஒரு காவ‌ல் நிலைய‌ம். அங்குள்ள‌ போலீஸாரை (ஹீரோ ம‌ற்றும் ந‌ண்ப‌ர்க‌ள்) வேறு சில‌ போலீஸார் கொலை செய்ய‌ முய‌ற்சிக்கின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளிட‌மிருந்து த‌ப்பிக்க‌ ஹீரோ ஒரு முடிவெடுக்கிறார். அது என்ன‌வென்று சொல்லி த்ரில்லை குறைக்க‌ விரும்ப‌வில்லை. ப‌ட‌த்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்க‌ள்.


ஹீரோ Ethan Hawke. பார்ப்ப‌த‌ற்கு Tom Cruiseன் த‌ம்பி போலிருக்கிறார். ப‌ய‌த்தை, த‌விப்பை, சோக‌த்தை, இய‌லாமையை ந‌ன்றாக‌வே வெளிப்ப‌டுத்தியிருக்கிறார். பொதுவாக‌ ஆக்ஷ‌ன் ப‌ட‌ங்க‌ளில் ந‌டிப்ப‌த‌ற்கு அவ்வ‌ள‌வாக‌ தீனி இருக்காது. இதிலும் அப்ப‌டித்தான். ஆனால் கிடைத்த‌ வாய்ப்புக‌ளை வீணடிக்காம‌ல் ப‌ல‌ காட்சிக‌ளில் அனைவ‌ருமே வெளுத்து வாங்கியிருக்கிறார்க‌ள். இன்னும் நிறைய‌ எழுத‌வேண்டும் போலிருக்கிற‌து. வேண்டாம். காட்சிக‌ளை விவ‌ரிக்க‌ ஆர‌ம்பித்துவிடுவேன். சுருக்க‌மாக‌ச் சொன்னால் இந்த‌ வார‌ம் பார்த்த‌ மூன்று ப‌ட‌ங்க‌ளிலேயே இதுதான் டாப்!