Showing posts with label தொட‌ர் ப‌திவு. Show all posts
Showing posts with label தொட‌ர் ப‌திவு. Show all posts

Tuesday, August 10, 2010

எழுதுங்க‌ ந‌ர்சிம்

சோம்பேறி. ர‌கு. என்னால் ச‌ரியாக‌ உண‌ர‌ முடிகிற‌து இவ்விரு வார்த்தைக‌ளுக்கும் பெரிதொரு வித்தியாச‌ம் இல்லையென‌. வேலைப்ப‌ளு என்ப‌து ச‌ப்பைக்க‌ட்டு. அழ‌காய் ஒரு ப‌திவெழுத‌வேண்டும் என‌த் தோன்றினால், ஏனோ ம‌ன‌ம் ஒரு அமைதியான‌ சூழ்நிலையையும் த‌னிமையையும் நாடுகிற‌து.

இதையாவ‌து ஒழுங்கா எழுதுடா சோம்பேறிப்ப‌ய‌லே என்று ஒரு தொட‌ர் ப‌திவிற்கு அழைத்திருக்கிறார் தோழி ப்ரியா. இதோ ஆர‌ம்பிக்க‌றேங்க‌ சுய‌புராண‌த்தை. எந்திர‌னின் அரிமா அரிமாவை ரொம்ப‌வே ர‌சித்துக்கொண்டிருக்கிறேன். அத‌னால் இப்ப‌திவின் பிண்ண‌ணி இசையாக‌ இதை க‌ற்ப‌னை செய்துகொண்டே வாசிக்க‌த் தொட‌ங்குங்க‌ள் :) கொஞ்ச‌ம் ஓவ‌ராத்தான் போறோமோ!

இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்....

(என்ன‌டா விள‌ம்ப‌ர‌ம்?)




1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ர‌கு

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ஹுக்கும்..உண்மையான பெய‌ர் ச‌ச்சின் டெண்டுல்க‌ர். ஏங்க‌? முத‌லில் குறும்ப‌ன் என்ற‌ பெய‌ரில்தான் எழுத‌ ஆர‌ம்பித்தேன். மைலாப்பூர் க‌பாலீஸ்வ‌ர‌ர் கோயிலில், சாமி சிலைக‌ளுப் பின்ன‌ர் த‌மிழ் மாத‌ம் எழுதி ஒவ்வொரு பெய‌ர் எழுதியிருந்த‌ன‌ர். அப்ப‌டி நான் பிற‌ந்த‌ மாதத்திற்கு எழுதியிருந்த‌ பெய‌ர் பெரும‌ழிசைக் குறும்ப‌ர். முத‌ல்வ‌ர் இளைய‌வ‌ராக‌ இருந்த‌தால் 'முத‌ல்வ‌ன்' ஆன‌து போல் நானும் குறும்ப‌ன் ஆனேன். பின் த‌மிழ்ம‌ண‌த்தில் உலாவ‌ரும்போது இதே பெய‌ரில் வேறொருவ‌ர் இருப்ப‌த‌றிந்து, உண்மையான‌ பெய‌ரிலேயே எழுத‌லாம் என்று மாற்றிவிட்டேன். த‌விர‌ வெறும் ந‌கைச்சுவை ம‌ட்டும‌ன்றி எல்லாம் க‌ல‌ந்து எழுது என்று ந‌ட்புக‌ளின் 'மிர‌ட்ட‌ல்'க‌ளும் ஒரு கார‌ண‌ம். ஸ்ஸ்ஸ்ஸ்..இதுதான் 'குறும்ப‌ன்' 'ர‌கு'வான‌ க‌தை.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

அது த‌மிழ் வ‌லைப்ப‌திவுலகின் போதாத‌ நேர‌ம். வாசிப்ப‌வ‌ர்க‌ளின் ஜாத‌க‌த்தில் ச‌னியின் உச்ச‌ம். நீண்ட‌ நாட்க‌ளாக‌ நிறைய‌ ப‌திவுக‌ளை வாசித்துக் கொண்டே இருந்த‌தில், நாம‌ ஏன் எழுத‌க்கூடாது என்ற‌ ஏடாகூட‌மான‌ எண்ண‌ம் தோன்றியதால் வ‌ந்த‌ அபாய‌க‌ர‌மான‌ விளைவுதான் இந்த‌ வ‌லைப்பூ!

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

திர‌ட்டிக‌ள். இதைத் த‌விர‌ வேறொன்றும் செய்ய‌வில்லை. நிறைய‌ பேருக்கு க‌மெண்ட் போடு அப்ப‌தான் உன‌க்கும் க‌மெண்ட் வ‌ரும் என்று ச‌க‌ ப‌திவ‌ர்க‌ளும், ந‌ண்ப‌ர்க‌ளும் அறிவுறுத்திய‌துண்டு. க‌மெண்ட் போட‌க்கூடாது என்று வேண்டுத‌லெல்லாம் இல்லை. அலுவ‌ல‌க‌த்தில் ச‌ற்று ப்ரைவ‌ஸி இல்லாத‌ கார‌ண‌த்தால் நிறைய‌ ப‌திவுக‌ளுக்கு க‌மெண்ட் போட‌முடிவ‌தில்லை. ஆனாலும் இய‌ன்ற‌வ‌ரை சில‌ருக்குத் தொட‌ர்ந்து க‌மெண்ட்டிக்கொண்டுதான் இருக்கின்றேன்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ப்ளூக்ராஸ், 108 அவ‌ச‌ர‌ சேவை போன்று சில‌ அனுப‌வ‌ங்க‌ளை ம‌ட்டும் எழுதிய‌துண்டு. பெரும்பாலும் சொந்த‌ விஷ‌ய‌ங்க‌ளை எழுத‌ விரும்புவ‌தில்லை. இவ‌ள் என்னுடைய‌ தோழி என்று ஒரு பெண்ணைப் ப‌ற்றி எழுதினால்கூட‌ 'அவ‌ங்க‌ளுக்குள்ள‌ என்ன‌மோ ஓடுதுபா' என்று புற‌ம் பேசுப‌வ‌ர்க‌ளை ந‌ன்றாக‌ அறிவேன். அவ‌ர்க‌ள் பேசுவ‌து உண்மை இல்லையென்றாலும் இத‌னால் கிடைக்கும் காய‌ங்க‌ளும், வ‌லிக‌ளும் மிக‌ அதிக‌ம். என‌வே சொந்த‌ விஷ‌ய‌த்தைப் ப‌ற்றியெல்லாம் அதிக‌ம் எழுதி அவ‌ல் கொடுக்க‌ விருப்ப‌மில்லை.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

குசும்பு புடிச்ச‌ கேள்வி இது. நான் எழுத‌ற‌த‌ வெச்சுலாமா ச‌ம்பாதிக்க‌முடியும்? நான் எழுதிய‌தை க‌ணிணித் திரையில் பார்க்கும்போது, யாராவ‌து ஒருத்த‌ர், ரெண்டு பேர் (இதுவே அதிக‌ம்) பாராட்டும்போது 'ம‌ச‌க்க‌லி'யின் ஆர‌ம்ப‌ இசை (ஹே ஹேஹே ஹே...) ம‌ன‌தில் வ‌ந்து போகும். அத‌ற்காக‌த்தான் எழுதுகிறேன்.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

த‌மிழில் இது ஒன்றுதான். நான் பார்த்த‌ ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ளைப் ப‌ற்றியும், என் கேமிராக்குள் சிக்கிய‌ புகைப்ப‌ட‌க் கைதிக‌ளை சிறையில் அடைக்க‌வும் இரு ஆங்கில‌ வ‌லைப்பூக்க‌ளை ஆர‌ம்பித்தேன். ஆனால் தொட‌ர முடிய‌வில்லை. பேஸிக்க‌லி ஐ'ம் எ சோம்பேறி யூ நோ :)

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமை : ஹ‌ரீஷ், ஜெய் & விக்னேஷ்வ‌ரி. ந‌ம்மால் இப்ப‌டி எழுத‌ முடிவ‌தில்லையே என்று ஏங்க‌ வைக்கும் எழுத்துக‌ள் இவ‌ர்க‌ளுடைய‌து. அப்ப‌டி ஏங்கும்போதெல்லாம், நேர‌ங்கால‌ம் தெரியாத மூளை "ச‌ட்டியில‌ இருந்தாத்தானே...." என்ப‌தை ஞாப‌க‌ப்ப‌டுத்தித் தொலைக்கும்.

கோப‌ம் : ந‌ர்சிம். அவ‌ர் எழுதிய‌தை நியாய‌ப்ப‌டுத்த‌வில்லை. ஆனால் அவ‌ர் எழுதிய‌தைக் க‌ண்டிக்கிறேன் என்று ஆளாளுக்கு எழுத‌ ஆர‌ம்பித்த‌போதுதான் ஒவ்வொருவ‌ரின் ஆழ்ம‌ன‌ வ‌க்கிர‌ம் வெளிப்ப‌ட‌த் தொட‌ங்கிய‌து. அவ‌ர்க‌ள் எழுதிய‌ த‌ர‌ங்கெட்ட‌ வார்த்தைக‌ளை வாசிக்கும்போது இவ‌ர்க‌ளெல்லாம் ப‌டித்த‌வ‌ர்க‌ள்தானா என்றுகூட‌த் தோன்றிய‌து. அவ‌ர் எழுதினார், ப‌திலுக்கு நாங்க‌ எழுதினோம் என்ற‌ ச‌மாளிப்பெல்லாம் வேண்டாம். ஒருவ‌ரின் த‌வ‌றை அவ‌ருக்கு உண‌ர்த்துவ‌துதான் புத்திசாலித்த‌ன‌ம், விவேக‌ம். ஆனால் இங்கு திருப்பி அடிக்கும் 'வீர‌ர்'க‌ள்தான் நிறைந்திருந்த‌ன‌ர். வெளிப்ப‌டுத்த‌வில்லை...ஆனால் க‌டுங்கோப‌ம் கொண்ட‌து இந்த‌ வீர‌ப் ப‌திவ‌ர்க‌ள் மீதுதான்.

ந‌ர்சிம் அவ‌ர்க‌ளுட‌ன் என‌க்குத் த‌னிப்ப‌ட்ட‌ முறையில் ப‌ழ‌க்க‌மில்லை. நேரில் பார்த்த‌தில்லை. அலைபேசியில் பேசிய‌தில்லை. மின்ன‌ஞ்ச‌ல் தொட‌ர்பில்லை (ஒரு முறை 'ஏன் இப்போல்லாம் நீங்க‌ க்ரைம் க‌தைக‌ள் எழுத‌ற‌தில்ல‌' என்று கேட்டு மின்ன‌ஞ்ச‌லினேன்..அவ்வ‌ள‌வுதான்). அவ‌ரின் த‌ள‌த்தில் நான் இன்னும் ஃபாலோவ‌ர் ஆக‌வில்லை. ரெகுல‌ராக‌ அவ‌ர் ப‌திவுக‌ளுக்கு பின்னூட்ட‌ம் இடுவ‌துமில்லை. 'வீர‌ர்'க‌ளுக்கு முக்கிய‌மான‌ த‌க‌வ‌ல்..நான் அவ‌ர் ஜாதியுமில்லை ;) (அவ‌ர் என்ன‌ ஜாதி என்ப‌தே ப‌திவுக‌‌ளின் மூல‌ம்தான் அறிந்தேன்). இப்ப‌டிப் ப‌ல‌ 'ல்லை'க‌ள். ஆனாலும் அவ‌ர் எழுத்தை ர‌சிக்கிறேன். அவ‌ரெழுதிய‌ இந்த‌ ஒரு ப‌திவு போதும் "வாவ்!"வென‌ வாயைப் பிள‌க்க‌ வைக்க‌. மீண்டும் ப‌திவெழுத‌ ஆர‌ம்பித்த‌தில் ம‌கிழ்ச்சி. எழுதுங்க‌ ந‌ர்சிம் :)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

க‌ல்வி உத‌வி ப‌ற்றி எழுதிய‌போது க‌ணேஷ் வெளிநாட்டிலிருந்து தொட‌ர்புகொண்டு தானும் உத‌வ‌த் த‌யாராயிருப்ப‌தாக‌ தெரிவித்தார். எழுத்தின் தாக்க‌ம் அப்போதுதான் புரிந்த‌து. எவ்வ‌ள‌வு மொக்கையாக‌ எழுதினாலும், உற்சாக‌ப்ப‌டுத்துவ‌தில்..ச்சே..உசுப்பேத்துவ‌தில் ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ங்கு அதிக‌ம் :) ம‌ற்ற‌படி, பாராட்டு......ஹும்ம்ம்ம் இந்த‌ மாதிரி ச‌ம்ப‌வ‌மெல்லாம் ந‌ட‌க்க‌வில்லை என்ப‌தை த‌ன்ன‌ட‌க்க‌த்துட‌னும், ஏக்க‌த்துட‌னும் தெரிவித்துக்கொள்கிறேன்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

ரொம்ப‌ முக்கிய‌ம்! ச‌ராச‌ரி, சோம்பேறி, சாஃப்ட்வேர் த‌மிழ‌ன் நான். அப்புற‌ம்..நாட்டுக்குத் தேவையான‌ விஷ‌ய‌ம்....I'm still happy, not married ;))



இத்தொட‌ரை தொட‌ர‌ நான் அழைக்க‌ விரும்புவ‌‌து

ஹ‌ரீஷ்

ஜெய்

விக்னேஷ்வ‌ரி



Sunday, April 25, 2010

பிடித்த‌ 10 ப‌ட‌ங்க‌ள்

பிடித்த‌ 10 ப‌ட‌ங்க‌ள் தொட‌ர்ப‌திவுக்கு டிக்கெட் வாங்கி கொடுத்த‌ ப‌திவுல‌கின் குழ‌ந்தை, ந‌ண்ப‌ர் சைவ‌கொத்துப்ப‌ரோட்டாவுக்கு ந‌ன்றி :)

விதிகள்:


1. தமிழ்ப் படங்கள் மட்டுமே
2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.
3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட).............ந‌ல்லாத்தான்யா யோசிக்க‌றீங்க‌ ரூல்ஸையெல்லாம்!


காதலிக்க நேரமில்லை

இன்றல்ல, இன்னும் 20௦ வருடங்கள் கழித்து பார்த்தாலும், ரசித்து பார்க்கலாம். சூப்பர் ஹிட் பாடல்கள், போரடிக்காத திரைக்கதை, கொஞ்சம் கூட விரசமில்லாத நகைச்சுவை...வேறென்ன வேண்டும்? ரவிச்சந்திரன், முத்துராமன் ஆகியோர் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது பாலையா-நாகேஷ் கூட்டணிதான். யாரால் மறக்க முடியும் நாகேஷ் கதை சொல்லும் காட்சியை?

படத்துக்கு மேலும் பலம் சேர்த்தவர் எம்.எஸ்.வி. 'விஸ்வநாதன் வேலை வேண்டும்', 'அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்', 'இந்த பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா' போன்ற பாடல்கள் இன்றும் ரசிக்க வைக்கிறது.

புதிய பறவை

ஒவ்வொருவருக்கும் சிவாஜி நடித்ததில் இதுதான் பெஸ்ட் என்று ஒரு படம் இருக்கும். நான் பார்த்தவரையில் எனக்கு மிகவும் பிடித்த சிவாஜி படம் என்றால் அது புதிய பறவைதான். இப்போது பார்த்தால், க்ளைமேக்ஸுக்கு முந்தைய சீன் வரை வரை சிவாஜியின் நடிப்பை ஓவர் ஆக்டிங், ஓவர் சீன் என்று நம்மால் கமெண்ட் அடிக்கமுடியும். ஆனால் க்ளைமேக்ஸில் தான் நிரபராதிதான் என நிரூபிக்க முயலும்போது அவர் படும் பாடு நம்மை கட்டி போட்டு விடும். தன்னை சுற்றி சரோஜா தேவி, சௌகார் ஜானகி, எம்.ஆர்.ராதா, வி.கே.ராமசாமி என்று பல ஜாம்பவான்கள் இருந்தாலும் எல்லோரையும் வெகு சுலபமாக டாமினேட் செய்து அனாயசமாக ஸ்கோர் செய்துவிடுவார் இந்த நடிப்பு ராட்சசன்.

பி.சுசீலா என்ற‌ழைக்க‌ப்ப‌டும் ஓர் குயில் பாடிய‌ பாட‌ல்க‌ளில் என்னுடைய‌ மோஸ்ட் ஃபேவ‌ரைட், 'உன்னை ஒன்று கேட்பேன்' & 'பார்த்த ஞாபகம் இல்லையோ'. 'பார்த்த‌ ஞாப‌க‌ம் இல்லையோ' பாட‌லில் சிவாஜி சிக‌ரெட் பிடிக்கும் காட்சியை பார்த்திருக்கிறீர்க‌ளா? செம்ம்ம‌ ஸ்டைல் அது!

தில்லு முல்லு

பொதுவாக கே.பாலச்சந்தர் படங்களை நான் விரும்பி பார்ப்ப‌தில்லை. சிக்கலான உறவுகள், உணர்வுகள், பிரச்னைகள்...ஐயையோ வேணாம்பா சாமி என்று ஒதுங்கிவிடுவேன். அடிப்ப‌டையில் fun-loving கேர‌க்ட‌ராக‌ இருப்ப‌தால் என‌க்கு இந்த‌ பட‌ம் பிடித்துபோன‌தில் ஆச்ச‌ரிய‌மில்லை. ப‌ட‌த்தின் டைட்டிலுக்கு முன்பு ர‌ஜினி கொடுக்கும் இன்ட்ரோ முத‌ல் க‌டைசி காட்சி வ‌ரை சிரித்துக்கொண்டே இருந்தேன். 'அய்ய‌ம்பேட்டே அறுவ‌டை ந‌ம்பி க‌லிய‌பெருமாள் ச‌ந்திர‌ன்' என்று ஆர‌ம்பிக்கும்போதும், எத‌ற்கெடுத்தாலும் 'சின்ன‌ வ‌ய‌சுல‌ எங்க‌ப்பா சொல்லிருக்கார் சார்' எனும்போதும் த‌லைவ‌ர் பின்னி எடுப்பார். 'காத‌லிக்க‌ நேர‌மில்லை'க்கு எப்ப‌டி நாகேஷ்‍‍-பாலையாவோ, அதுபோல் இப்ப‌ட‌த்திற்கு தேங்காய் சீனிவாச‌ன். இவ‌ரைப் ப‌ற்றி என்ன‌ சொல்வ‌தென்றே தெரிய‌வில்லை. ச‌ந்தித்த‌ ஒவ்வொரு ப‌ந்தையும் சிக்ஸ‌ராக‌ மாற்றிய‌ பேட்ஸ்மேனுக்கு ச‌ம‌ம் இவ‌ர்.

எப்பொழுதும் அழுது வ‌டியும் கேர‌க்ட‌ரிலேயே வ‌(ஜ‌)ல‌ம் வ‌ந்த‌ செள‌கார் ஜான‌கி காமெடியில் ஒரு க‌ல‌க்கு க‌ல‌க்கியிருப்பார். மாத‌வி...........ஹும்ம்ம்...;)

இந்த‌ ப‌ட‌த்தில் என‌க்கு மிக‌வும் பிடித்த‌ வ‌ச‌ன‌ங்க‌ள்...

நாகேஷ் அடிக்க‌டி சொல்வார் "அதான் நாகேஷ்!"

ர‌ஜினி பூர்ண‌ம் விஸ்வ‌நாத‌னிட‌ம் சொல்வார் "என்னைக் க‌ண்டா எல்லார்க்கும் புடிக்கும்" :)

சிங்கார‌வேல‌ன்

ப‌ல‌ரின் லிஸ்ட்டில் இந்த‌ ப‌ட‌ம் இட‌ம்பெறாது என்றே நினைக்கிறேன். ஆனால் என‌க்கு பிடித்த‌திற்கான‌ கார‌ண‌ம்...வேறென்ன‌ காமெடிதான் :) வ‌டிவேல், ம‌னோ, சார்லி ஆகியோர் இருந்தாலும் க‌ம‌லும் க‌வுண்ட‌ம‌ணியும்தான் மென் ஆஃப் த‌ மேட்ச்.

'யாரும்மா அந்த மூணு பேர்?' என்று கேட்கும் க‌ம‌லை, அவ‌ர் அம்மா 'ரெண்டாம் ஆட்ட‌த்துக்கு சினிமா போகும்போதே நினைச்சேன் இப்ப‌டித்தான் ஆகும்னு' என்று த‌மிழ் சினிமாவை கிண்ட‌ல‌டித்துக்கொண்டே ஆர‌ம்பிக்கும் காட்சி, க‌ருவாட்டு கூடையுட‌ன் வ‌ரும் க‌ம‌லிட‌ம் ஆட்டோ ஓட்டுன‌ர் ப‌டும் அவ‌ஸ்தை, ம‌னோ, க‌வுண்ட‌ம‌ணி & கோ 'சிங்காஆஆஆர‌வேல‌ன், சிங்கார‌வேல‌ன்' என்று க‌ம‌லை குஷ்புக்கு அறிமுக‌ப்ப‌டுத்தும் காட்சி, 'வ‌ர‌மாட்டா சும‌தி..த‌ர‌மாட்டா அமைதி..வ‌ர‌ப்போறோம் நாங்க‌..த‌ர‌ப்போறோம் வீங்க‌' என்று க‌விதையுட‌ன்(!) ஆர‌ம்பிக்கும் ச‌ண்டைக்காட்சி, 'இப்ப‌ என்னடா ப‌ண்ற‌து?..ஒண்ணு ப‌ண்ணுவோம், இன்ட‌ர்வெல் விட்ருவோம்' என்று இடைவேளைக்கு முன் வ‌ரும் காட்சி....100% காமெடிக்கு இப்ப‌ட‌ம் உத்த‌ர‌வாத‌ம். சாதார‌ண‌ ம‌சாலா ஹீரோ ப‌ண்ண‌வேண்டிய‌ க‌தாபாத்திர‌த்தை க‌ம‌ல் செய்த‌தால் இப்ப‌ட‌ம் எல்லோருக்கும் பிடிக்குமா என்று தெரிய‌வில்லை, ப‌ட் ஐ லைக் இட்!

காத‌லுக்கு ம‌ரியாதை

விஜ‌ய் நடித்து நான் மிக‌வும் ர‌சித்த‌ ப‌ட‌ம் இது. இதே‌ விஜ‌ய் தொட‌ர்ந்திருந்தால் இன்று ப‌ல‌ரும் விரும்பும் ந‌டிக‌ராக‌ மாறியிருப்பார். தேவையில்லாம‌ல் ட்ராக் மாறி, இன்று எஸ்எம்எஸ், ஃபார்வார்ட் ஈமெயில்க‌ளின் காமெடி பீஸாக‌ மாறி அவ‌ஸ்தைப‌ட்டுக்கொண்டிருக்கிறார். 'அய்ய‌! பேபி ஷாலினியா, ஓவ‌ர் அல‌ட்ட‌ல்பா' என்று இருந்த‌ எண்ண‌த்தை, வெகு அனாய‌ச‌மாக‌ இந்த‌ ஒரே ப‌ட‌த்திலேயே மாற்றினார் 'பூ விழி பார்வையில் மின்ன‌ல் காட்டிய‌' ஷாலினி. காத‌ல‌ர்க‌ளுக்கான‌ தேசிய‌ கீத‌மாக‌ 'என்னைத் தாலாட்ட‌ வ‌ருவாளோ'வை ப‌டைத்தார் இளைய‌ராஜா. இதுபோன்ற‌ ஒரு சூப்ப‌ர்ஹிட் பாட‌லுக்கு பின்பும் ஏன் ப‌ழ‌னிபார‌தியால் முண்ண‌ணி இட‌த்துக்கு வ‌ர‌முடிய‌வில்லை என்ப‌து இன்னும் என‌க்கு புதிர்தான்!

ப‌க்க‌ம் ப‌க்க‌மாக‌ வ‌ச‌ன‌ம் பேசி முடிக்க‌ வேண்டிய‌ க்ளைமேக்ஸை, ஸ்ரீவித்யாவின் க‌ண்க‌ளும், ஷாலினியின் க‌ண்க‌ளுமே பேசி எளிதாக‌ ந‌ம்மை ஈர்த்துவிடும். குறிப்பாக‌ ஸ்ரீவித்யா...இவ‌ர் ந‌டிப்பை பார்த்து அச‌ந்து போனேன்!

விஜ‌ய் ர‌சிக‌ர்க‌ளுக்காக‌ ஒரு பி.கு.: விஜ‌ய் ந‌டித்த‌ ஃபார்முலா ப‌ட‌ங்க‌ளில் கில்லி பிடித்திருந்த‌து. கார‌ண‌ம் ஹீரோயிஸ‌ம் இருந்தாலும் ஒரு அண்ட‌ர்ப்ளே இருந்த‌து. போக்கிரியும் பிடித்திருந்த‌து..பெல் பாட்ட‌ம் போட்ட‌ போலீஸாக‌ வ‌ரும் காட்சிக்கு முன்பு வ‌ரை. ஆனால் ஆதி, அழ‌கிய‌ த‌மிழ் ம‌க‌ன், குருவி, வில்லு, வேட்டைக்கார‌ன்....என்ன‌ இதெல்லாம்? கொஞ்ச‌ம் பாத்து செய்ய‌ சொல்லுங்க‌ பாஸ் :)

த‌ள‌ப‌தி

'நாய‌க‌ன்' பிடிக்கும்தான். ஆனால் அதில் The Godfatherரிஸ‌ம் நிறைய‌ இருந்த‌தால், இந்த‌ லிஸ்ட்டில் குறிப்பிட‌வில்லை. இதுவும் ந‌ம் எல்லோர்க்கும் தெரிந்த‌ ம‌ஹாபார‌த‌க் க‌தைதான். ஆனால் ப‌ட‌மாக்கிய‌ வித‌த்தில் அச‌த்தியிருப்பார் ம‌ணிர‌த்ன‌ம். வெறும் ஆக்ஷ‌ன், ஸ்டைல், காமெடி என்றே ம‌ன‌தில் ப‌திந்திருந்த‌ சூப்ப‌ர் ஸ்டாரை, 'சின்ன‌த்தாய‌வ‌ள்' பாட்டின் மூல‌ம் ந‌ல்ல‌ 'ந‌டிக‌ராக‌'வும் காட்டினார். எப்போது அந்த‌ பாட‌லை பார்த்தாலும் உட‌ல் சிலிர்க்கும் என‌க்கு. இப்பாட‌லைப் ப‌ற்றி பேசுகையில், மீண்டும் ஸ்ரீவித்யா...இதை எழுதும்போதுதான் தோன்றுகிற‌து, ஒரு மிக‌ச்சிற‌ந்த‌ ந‌டிகையை வெகு சீக்கிர‌ம் இழ‌ந்துவிட்டோம் என்று :(

இன்று இருக்கும் துக்க‌டா ஹீரோக்க‌ளே ட‌புள் ஹீரோ ச‌ப்ஜெக்ட் செய்ய‌ த‌ய‌ங்கும்போது, இரு பெரும் சூப்ப‌ர் ஸ்டார்க‌ள் இணைந்து ந‌டித்த‌து மிக‌ப் பெரிய‌ விஷ‌ய‌ம்தான். இருவ‌ருக்கும் ச‌ம‌மான‌ கேர‌க்ட‌ர்க‌ள் கொடுத்து, ஜ‌ஸ்டிஃபை செய்த‌து ம‌ணி சாரின் டேல‌ன்ட். இப்ப‌ட‌த்தை தியேட்ட‌ரில், டிவியில், டிவிடியில் என்று ப‌ல‌ முறை பார்த்திருக்கிறேன். எத்த‌னை முறை என்ப‌து ச‌த்திய‌மாக‌ நினைவில் இல்லை.

'ஏன்?'

'தேவா'

அவ்வ‌ள‌வுதான். சொல்ல‌ நினைத்த‌தை வ‌ள‌வ‌ள‌வென்று சொல்லாம‌ல், ப‌ட‌ம் பார்ப்ப‌வ‌ர்க‌ள் புத்திசாலிக‌ள்தான், அவ‌ர்க‌ளால் புரிந்து கொள்ள‌ முடியுமென்று ஷார்ட்டாக‌ முடித்தார்.

ப‌ட‌த்தில் என‌க்கு மிக‌வும் பிடித்த‌ காட்சி....'நிறுத்த‌ணும், எல்லாத்தையும் நிறுத்த‌ணும்' என்று வ‌ரும் ர‌ஜினி-ம‌ம்முட்டி-அர்விந்த் சுவாமி காட்சி. பிண்ண‌ணி இசையில் இளைய‌ராஜா அடி பின்னியெடுத்திருப்பார் இந்த‌ காட்சியில்!

அன்பே சிவ‌ம்

க‌ம‌ல் மேல் ம‌ரியாதை உண்டாக்கிய‌ ப‌ட‌ம் என்று கூட‌ சொல்வேன். அதுவ‌ரை 'அவ‌ன் இவ‌ன்' என்றே ஒருமையில் குறிப்பிட்டுக்கொண்டிருந்த‌வ‌ன், இப்ப‌ட‌த்திற்கு பின்புதான் க‌ம‌ல் ப‌ற்றி பேசும்போது, 'அவ‌ர்ர்ர்ர், இவ‌ர்ர்ர்ர்' என்று குறிப்பிடுகிறேன். விட்டால் 'க‌ம‌ல்ஹாச‌ர்' என்று கூட‌ சொல்வேன்.:)

எப்போதும் த‌ன்னுட‌ன் இன்னொரு ஹீரோ ந‌டித்தால் அவ‌ரை டாமினேட் செய்து ந‌டித்தே ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌ க‌ம‌ல், இதில் மாத‌வ‌னை த‌ன்னைவிட‌ ஒருப‌டி மேலேயே தூக்கிவைத்தார். மேடியும் லேசுப்ப‌ட்ட ஆளா என்ன‌, கிடைத்த‌ பூந்தியை அழ‌காக‌ ப‌ய‌ன்ப‌டுத்தி ல‌ட்டாக‌ கொண்டுவ‌ந்தார். ர‌யில் விப‌த்தில் சிக்கிய‌ சிறுவ‌னுக்கு ர‌த்த‌ம் கொடுத்தும் காப்பாற்ற‌ முடியாம‌ல் இற‌ந்துவிட‌, அத‌ன்பின் அதை நினைத்து குமுறும் காட்சியில் மாத‌வ‌னை பார்த்து விய‌ந்துபோனேன்.

டைட்டிலில் 'இய‌க்க‌ம் சுந்த‌ர் சி.' என்று காண்பித்த‌து ர‌சிக்க‌த்த‌க்க‌ ஒன்று ;). மேலும் ர‌சிக்க‌ வைத்த‌து ம‌த‌னுடைய‌ காமெடியும், புத்திசாலித்த‌ன‌மும் க‌ல‌ந்த‌ வ‌ச‌ன‌ங்க‌ள்...குறிப்பாக‌ '2:02 டூ 2:22' ;)

இருவ‌ர்

இன்னும் 10 வ‌ருட‌ங்க‌ளாவ‌து க‌ழித்து வ‌ந்திருக்க‌வேண்டிய‌ ப‌ட‌ம். இரு பிர‌ப‌ல‌ங்க‌ளைப் ப‌ற்றிய‌ பட‌ம் எடுப்ப‌து எவ்வ‌ள‌வு ரிஸ்க்! ஒரே ஒரு காட்சியில் பிச‌கினாலும், 'ஹே டைர‌க்ட‌ர் அவ‌ருக்கு ச‌ப்போர்ட் ப‌ண்றாருப்பா' என்ற‌ பேச்சு எழுந்து, ப‌ட‌ம் பார்த்து முடித்த‌ பின்னும் அதுதான் ம‌ன‌தில் நிலைத்திருக்கும். ஆனால் அதுபோல் ஒரு காட்சியிலும் ச‌றுக்காம‌ல், ஆர‌ம்ப‌ம் முத‌ல் இறுதி வ‌ரை 'இது ம‌ணிர‌த்ன‌ம் ப‌ட‌ம்' என்ப‌தை நிரூபித்திருப்பார்.

ப‌ள்ளியில் ப‌டித்துக்கொண்டிருந்த‌போது ரிலீஸான‌து. ஆனால் அப்போது 'போடா இதெல்லாம் போர‌டிக்கும்டா' என்று சொல்லி, ப‌ட‌த்தை பார்க்காம‌ல் விட்டுவிட்டேன். ஆனால் மூன்று வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு 'ச‌ரி இந்த‌ ப‌ட‌த்துல‌ அப்ப‌டி என்ன‌தான் இருக்குன்னு பாத்துட‌லாமே' என்று டிவிடி வாங்கி பார்த்தேன். பார்த்த‌பின் என் ந‌ண்ப‌ர் ஹ‌ரீஷிட‌ம் சொன்னேன், "இந்த‌ மாதிரி ஒரு ப‌ட‌த்துல‌ வொர்க் ப‌ண்ணிட்டு செத்துபோயிட‌ணும் ஹ‌ரீஷ்". ஞாப‌க‌ம் இருக்கா டைர‌க்ட‌ர்?...:)

நான் ர‌சித்த‌ சில....

'ஆயிர‌த்தில் நான் ஒருவ‌ன்' பாட‌ல் - 'எம்ஜிஆர்'ரிஸ‌ம் துளியும் குறையாத‌ பாட‌ல்.

'ந‌றுமுகையே ந‌றுமுகையே' பாட‌ல் - வார்த்தைக‌ளில் விளையாடியிருப்பார் க‌விஞ‌ர்.

ஜெய‌ல‌லிதாவை மிக‌ச்சிற‌ப்பாக‌ portray செய்திருந்தார்‌ ஐஸ்வ‌ர்யா ராய். ஜெய‌ல‌லிதா பார்த்திருந்தால் க‌ண்டிப்பாக‌ ர‌சித்திருப்பார்.

ஜீப்பிலிருந்து கீழே விழுந்த‌பின், ஐஸ்வ‌ர்யா ராயும் மோக‌ன்லாலும் நெருக்க‌மாக‌ நின்று கொண்டு ஒருவ‌ரையொருவ‌ர் பார்த்துகொண்டிருப்பார்க‌ள். அப்போது ஒரு ரொமான்டிக்கான‌ பிஜிஎம் வ‌ரும்......ர‌ஹ்மான் கி 'ஜெய் ஹோ'!

பிர‌காஷ்ராஜ் கூட்ட‌த்தில் பேசிக்கொண்டிருக்கும்போது, வேண்டுமென்றே தாம‌த‌மாக‌ சென்று கூட்ட‌த்தின‌ரை த‌ன் ப‌க்க‌ம் ஈர்ப்பார் மோக‌ன்லால். அப்போது பிர‌காஷ்ராஜ் ஒரு ரியாக்ஷ‌ன் கொடுப்பார்...இந்த‌ ம‌னித‌ருக்கு தேசிய‌ விருது கொடுத்த‌தில் த‌ப்பேயில்லை!

'உட‌ல் ம‌ண்ணுக்கு உயிர் த‌மிழுக்கு, இதை உர‌க்க‌ச் சொல்வோம் உல‌குக்கு' என்று அர்விந்த் சுவாமியின் குர‌லில் வ‌ரும் க‌விதை

'சாவிலும் எனை முந்திக்கொண்டு ச‌ரித்திர‌ம் ப‌டைத்த‌வ‌னே' என்று பிர‌காஷ்ராஜ் இறுதிக்காட்சியில் சொல்லும் க‌விதை

காக்க‌ காக்க‌

1980, 90க‌ளில் வ‌ந்த‌ ப‌ட‌ங்க‌ளை பார்த்தால், போலீஸாக‌ வ‌ருப‌வ‌ர் அர‌சிய‌ல்வாதிக்கு கூஜா தூக்குப‌வ‌ராக‌ வ‌ருவார், க‌ண்டிப்பாக‌ சிறையில் ஒரு அப்பாவி பெண்ணை ப‌லாத்கார‌ம் செய்வார். அப்ப‌டியே ந‌ல்ல‌ போலீஸாக‌ இருந்தாலும், ஹீரோ ந‌ன்றாக‌ ச‌ண்டை போட்டு முடித்த‌பின், க்ளைமேக்ஸில் வ‌ந்து வான‌த்தை நோக்கி துப்பாக்கியால் ஒருமுறை சுட்டு, 'யூ ஆர் அண்ட‌ர் அரெஸ்ட்' என்பார். இல்லையென்றால், ஹீரோவை நோக்கி வில்ல‌ன் சுடும்போது குறுக்கே பாய்ந்து குண்டை தாங்கிக்கொள்வார். அப்ப‌டியும் ஹீரோவின் தோளில் சாய்ந்துகொண்டு, "என்னை ப‌த்தி க‌வ‌லைப்ப‌டாதே, போ, போய் அவ‌னைத் த‌டுத்து ந‌ம்ம‌ நாட்டை காப்பாத்து, உன்னால‌தான் அது முடியும்...போ போ" என்று ஓவ‌ர் சீன் ஒய்யாக்குமாராக‌ ந‌ம்மை க‌ண்ணீரில் ஆழ்த்துவார்.

உங்க‌ளுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். சென்னை போலீஸார் வீர‌‌ம‌ணியை என்க‌வுன்ட‌ர் செய்த‌ கொஞ்ச‌ நாளில் ரிலீஸான‌து இப்ப‌ட‌ம்.

'ஆ' 'ஊ' என்று க‌த்தாம‌ல், ப‌ஞ்ச் டய‌லாக் விடாம‌ல், ஒரு அமைதியான‌ போலீஸாக‌ வாழ்ந்திருந்தார் சூர்யா. இந்த‌ கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி என்கிறார்க‌ளே, அதை நான் +1, +2வில் ப‌டித்த‌தைவிட‌ இந்த‌ ப‌ட‌த்தில்தான் சூர்யா ஜோதிகாவை பார்த்து க‌ற்றுக்கொண்டேன். நாய‌க‌னே க‌தையை ந‌ரேட் செய்வ‌து போல் இருந்த‌து ரிய‌லி வொண்ட‌ர்ஃபுல், அதுவும் சூர்யா வாய்ஸ் எக்ஸ‌ல‌ண்ட்! உண‌மையாக‌ சொல்கிறேன், இந்த‌ ப‌ட‌த்தை பார்த்து முடித்த‌பின் போலீஸ் மேல் ஒரு ம‌ரியாதையே வ‌ந்திருந்த‌து என‌க்கு. ச‌த்ய‌ம் போன‌ற‌ குவாலிட்டியான‌ திரைய‌ர‌ங்கில் இப்போது ரீ‍ரிலீஸ் செய்தாலும் க‌ண்டிப்பாக‌ பார்ப்பேன்.

ர‌சித்த‌ வ‌ச‌ன‌ங்க‌ள்...

'பொண்ணுங்க‌ விஷ‌ய‌த்துல‌ நான் பெரிய‌ எக்ஸ்ப‌ர்ட்லாம் கிடையாது, ஆனா ஒரு பொண்ணுன்னா இப்ப‌டித்தான் இருக்க‌ணும்னு தோணுச்சு'.


************

'உன‌க்கும் என‌க்கும் ஆறு வ‌ய‌சு வித்தியாச‌ம் இருக்கு, ஒய் மீ?'

'இட்ஸ் எ கேர்ள் திங், ஒரு பொண்ணா இருந்து பாருங்க‌, அப்போதான் உங்க‌ளுக்கு புரியும்'

இந்த‌ காட்சியில் சூர்யா ஜோதிகாவின் ந‌டிப்பு.......அவ‌ர்க‌ள் ந‌டித்தார்க‌ளா என்ன‌?...;)





த‌சாவ‌தார‌ம்

இதுல‌ என்ன‌ க‌தை இருக்கு, சில‌ கேர‌க்ட‌ர்ஸ்லாம் தேவையே இல்லாம‌ திணிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து என்றெல்லாம் விம‌ர்ச‌ன‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் ஒரே ஒரு முறை யோசித்து சொல்ல‌ட்டும். இதே ப‌ட‌த்தை ஹாலிவுட்டில், ஹாரிஸ‌ன் ஃபோர்ட், ப்ரூஸ் வில்லிஸ், டாம் க்ரூஸ் போன்ற‌ ஹீரோக்க‌ள் செய்திருந்தால் என்ன‌ சொல்லியிருப்பார்க‌ள். 'வாவ், என்ன‌மா பின்றான் தெரியுமா? க‌ம‌ல்லாம் பிச்சை எடுக்க‌ணும் அவ‌ன்கிட்ட‌', 'ஹாலிவுட்னா ஹாலிவுட்தான்டா, ந‌ம்மாளுங்க‌ளுக்கு ம‌ர‌த்தையும், ஹீரோயினையும் சுத்தி சுத்தி பாட்டு பாட‌த்தான் தெரியும்'...இப்ப‌டி ப‌ல‌.

ப‌த்து கேர‌க்ட‌ர்க‌ள், மேக்க‌ப்பை விடுங்க‌ள், இருக்கிற‌ டெக்னால‌ஜியை வைத்து எப்ப‌டியாவ‌து ப‌ண்ணிவிட‌லாம். ஆனால் ப‌த்து வித‌மான‌ குர‌ல்க‌ள்...முடியுமா? எந்த‌ ந‌டிக‌ர் செய்திருக்கிறார் இப்ப‌டி?

எல்லோரையும் பாடுப‌டுத்திய‌ சுனாமியையே பாஸிட்டிவ்வாக‌ பார்த்து, ஒரு த்ரில்லான‌ சேஸிங்கை கொடுத்திருந்தார் க‌ம‌ல். ஆனால் அதையும் ஓவ‌ராக‌ விம‌ர்ச‌ன‌ம் செய்த‌ அறிவு ஜீவிக‌ள் நிறைய‌வே இருந்த‌ன‌ர்.

கே.எஸ்.ர‌விக்குமார் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். 'ப‌ட‌ம் ஆர‌ம்பிக்க‌ற‌துக்கு முன்னாடி, நிறைய‌ மேக்க‌ப் டெஸ்ட் ப‌ண்ண‌ப்போ, சார் ரொம்ப‌ கஷ்ட‌மாயிருக்கே, விட்ற‌லாமான்னு அவ‌ர்கிட்ட‌ கேட்டேன்'.

அத‌ற்கு க‌ம‌ல் சொன்னாராம் 'க‌ஷ்ட‌ப்ப‌டாம‌ ப‌ண்ண‌னும்னா நான் எதுக்கு?'

**********

ஏற்க‌ன‌வே ஒரு தொட‌ர் ப‌திவுக்கு சில‌ ந‌ண்ப‌ர்க‌ளை அழைத்துள்ள‌தால், இத்தொட‌ரைத் தொட‌ர‌ ந‌ண்ப‌ர் ஹ‌ரீஷை ம‌ட்டும் அழைக்கிறேன். 'ய‌ம்மாடி க்ரேட் எஸ்கேப்பு' என்று ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ம‌கிழ்ச்சிய‌டைய‌ வேண்டாம். அடுத்த‌ தொட‌ர் ப‌திவு ஒன்று இருக்கிற‌து, மாட்டி விடுறேன் இருங்க‌ ;))


Sunday, April 18, 2010

ப‌தின்ம‌ வ‌ய‌து குறும்புக‌ள்


உண்மையாக‌ சொன்னால் எப்ப‌டி ஆர‌ம்பிப்ப‌து, எதை சொல்வ‌து என்றே தெரிய‌வில்லை. அழ‌கான‌ மாலைப்பொழுதில் அந்த‌ ஜில் நினைவுக‌ளை மீண்டும் மீட்டெடுக்க‌வைத்த‌ தோழி விக்னேஷ்வ‌ரிக்கு ந‌ன்றி.

சின்ன்ன்ன‌ வ‌ய‌சுல‌ எவ்வ்வ்வ‌ளோ போராட்ட‌ம்!

முத‌லில் ப‌டிப்பு என‌க்கு வாழைத்த‌ண்டு பொறிய‌லாய் காட்சிய‌ளிக்க‌ ஆர‌ம்பித்த‌து ('உட‌ம்புக்கு ரொம்ப‌ ந‌ல்ல‌துடா' என்று அம்மா சொன்னாலும், இன்றும் என‌க்கென்ன‌வோ வாழைத்த‌ண்டு பொறிய‌ல் ம‌ட்டும் உவ்வ்வ்வே!). டிவிதான் உல‌க‌ம் என்றான‌து. ராமாய‌ண‌ம், ம‌ஹாபார‌த‌ம் தொட‌ங்கி, டாம் & ஜெர்ரி, ஹீமேன், சார்லி சாப்ளின், ர‌ஜினி, க‌ம‌ல், ஒளியும் ஒலியும், சித்ர‌ஹார், சித்ர‌மாலா, சூப்ப‌ர் ஹிட் முகாப்லா என‌ ப‌டிப்பை த‌விர‌ ம‌ற்ற‌ அனைத்திலும் ஆர்வ‌ம் காட்ட‌ தொட‌ங்கினேன்.

போன‌ ஜென்ம‌த்தில் காந்தி தாத்தாவுக்கு பிஏவாய் இருந்தேனோ என்ன‌வோ, போராடுவ‌து என்ப‌து ர‌த்த‌த்தில் ஊறிய‌தாய் இருந்த‌து. ஆம், இள‌வ‌ய‌திலேயே என் போராட்ட‌ம் ஆர‌ம்ப‌மான‌து. அதுவும் என் பெற்றோருக்கு எதிராக‌. போராட்ட‌த்தின் கார‌ண‌ம்....சைக்கிள். ப‌தினொரு வ‌ய‌தில் அப்பாவின் சைக்கிளை ஓட்டிக்கொண்டிருந்த‌போது ஒரு சிறு விப‌த்து(!) ஏற்ப‌ட்டு ப‌த்து நாட்க‌ள் ப‌ள்ளிக்கு "As I am suffering from........Thanking You, Yours Obediently...." என்று சொல்லிவிட்டு, வீட்டில் டிவியை காத‌லித்துக்கொண்டிருந்தேன். டீ விள‌ம்ப‌ர‌த்தில் சொல்வ‌து போல் 'ட‌புள் ஸ்ட்ராங்'காக‌ ஒரு த‌ழும்புவையும் முட்டிக்கு கீழே அந்த‌ விப‌த்து ஏற்ப‌டுத்திய‌தால், என‌க்கான‌ ஒரு சைக்கிளுக்கு நான் மிக‌வும் போராட‌ வேண்டிய‌தாயிருந்த‌து. ப‌ல‌ சுற்று பேச்சுவார்த்தைக‌ளுக்கு பின்பு ம‌ன‌மிற‌ங்கிய‌ மேலிட‌ம், 'ஸ்கூல் விட்டா நேரா வீட்டுக்கு வ‌ர‌ணும், மெயின் ரோட்லலாம் போக‌க்கூடாது' என்ற‌ சில‌ ப‌ல‌ நிபந்தனைக‌ள் போட‌ ச‌ரியென்று ஒப்புக்கொண்டேன். 'கேப்ட‌ன்' வீட்டிற்கு வ‌ந்தார். 'என் சைக்கிள் கேப்ட‌ன்டா'ன்னு பெருமை அ‌டித்துக்கொள்ள‌லாமே என்று, பெய‌ருக்காக‌வே இந்த‌ சைக்கிளை தேர்வு செய்தேன்...:)

ப‌தின்ம‌ வ‌ய‌தில் பெண்க‌ளுக்கு வேண்டுமானால், ரெட்டை ஜ‌டை, ரிப்ப‌ன், க‌ல‌ர் க‌ல‌ராய் ஸ்டிக்க‌ர் பொட்டு, தாவ‌ணி, தாவ‌ணிக்கு மேட்சிங்காய் வ‌ளைய‌ல்க‌ள் என்று ஏக‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ங்க‌ள் இருக்க‌லாம். ஆனால் என‌க்கு, எப்போதுதான் டிர‌வுச‌ரிலிருந்து பேண்ட்டுக்கு மாற‌ப்போகிறோமோ என்றிருந்த‌து. அப்பாவிட‌ம் கேட்ட‌த‌ற்கு 'நீயா ஆசைப்ப‌ட்டா கூட‌ ஒரு ஸ்டேஜுக்கு அப்புற‌ம் டிர‌வுச‌ர் போட‌ முடியாது' என்றார். பிற‌கு 'அவ‌ன் போட்டிருக்கான் தெரியுமா, இவ‌ன் போட்டிருக்கான் தெரியுமா' என்று மீண்டும் சில‌ பேச்சு வார்த்தைக‌ள் நட‌த்தி, பேண்ட்டுரிமையை போராடி பெற்றேன். முத‌ல் முறை பேண்ட் அணிந்து ப‌ள்ளிக்கு சென்ற‌போது, அந்த‌ த்ரில் இருக்கிற‌தே...வாவ்...ஏனோ கொஞ்ச‌ம் கூச்ச‌மாய் கூட‌ இருந்த‌து. ஆனாலும் ம‌ன‌துக்குள் ஒரு ச‌ந்தோஷ‌ம் "நான் பெரிய‌ ஆளாயிட்டேன்டா"!

ந‌ட்பு

அப்பாவின் ந‌ண்ப‌ரின் ம‌க‌னும் என்னுட‌ன் ப‌டித்தான். ரொம்ப‌வே ப‌டிப்ஸ் என்ப‌தால் அவ‌ன் இன்னொரு 'வாழைத்த‌ண்டு பொரிய‌ல்' என‌க்கு. ஒவ்வொரு தேர்வு முடிவின்போதும், ஒவ்வொரு ச‌ப்ஜெக்டிலும் அவ‌ன் மார்க் என்ன‌, அவ‌ன் மார்க் என்ன‌ என்று கேட்டு வீட்டில் க‌டுப்பேத்துவாங்க‌ மை.லா.:( அத‌னால் அவ‌ன் ந‌ட்பை டிவோர்ஸ் செய்த‌பின், பெஸ்ட் ஃப்ரெண்ட் என்ற‌ வார்த்தைக்கு அர்த்த‌மாய் 'ச‌ர‌வ‌ண‌ன்' கிடைத்தான். ச‌ர‌வ‌ண‌னும் ப‌ய‌ங்க‌ர‌ ப‌டிப்ஸ்தான். பொதுவாக‌ ப‌டிப்ஸ்க‌ள் எல்லாம் என்னைப் போன்ற‌ அர‌ட்டைய‌ர்க‌ளுட‌ன் க‌ல‌க்காம‌ல் சாமியார் (நோ பேட் இமே‌ஜினேஷ‌ன் ப்ளீஸ்) போல‌ இருப்பார்க‌ள். ஆனால் ச‌ர‌வ‌ண‌ன் ப‌க்கா க‌ம‌ர்ஷிய‌ல் டைப். ப‌டிப்ப‌திலும் ச‌ரி, என்னுட‌ன் அர‌ட்டை அடிப்ப‌திலும் ச‌ரி...ஹி வாஸ் த‌ பெஸ்ட்!



கிரிக்கெட்டை ர‌சிக்கும் அள‌வுக்கு என‌க்கு ஆட‌த்தெரிய‌வில்லை அப்போது. அத‌னால் எப்போதும் லாஸ்ட் பேட்ஸ்மேனாக‌வே க‌ள‌மிற‌க்க‌ப்ப‌ட்டேன். ப‌ள்ளி விட்ட‌பின், வ‌ய‌சுப் பெண் ப‌த்திர‌மாக‌ வீட்டிற்கு செல்கிறாளா என்று பின்னாடியே போவ‌துபோல், ஃபீல்டிங்கில் ப‌வுண்ட‌ரிக் கோட்டை தாண்டுகிற‌தா என்று ப‌ந்தின் பின்னாடியே ஓடி கோட்டை விடுவ‌தில் நான் அப்போதே ஒரு அனில் கும்ப்ளே. கேட்ச் பிடிப்ப‌திலும் சொங்கியாக‌ இருந்திருக்கிறேன்.

"ச‌ர‌வ‌ணா, நான் அடுத்த‌ மேட்ச் வ‌ர‌ல‌டா"

"ஏன்?"

"ம‌ணி திட்ட‌றான்டா, நான் என்ன‌ வேணும்னேவா கேட்ச் வுட்டேன்...நான் வ‌ர‌ல‌"

"அது ல‌ட்டு கேட்ச்டா, நீ புடிச்சிருந்தினா இன்னும் ஈஸியா ஜெயிச்சிருக்க‌லாம், ம‌வ‌னே தோத்திருந்தோம்னா நானே உன‌க்கு ரெண்டு குடுத்திருப்பேன்"

"இதுக்குத்தான்...நான் வ‌ர‌ல‌"

"ஒழுங்கா கேட்ச் ப்ராக்டிஸ் ப‌ண்ணு....டீம் லிஸ்ட்டை ம‌ணி எங்கிட்ட‌ காட்டும்போது நான் சொல்லிக்க‌றேன்"

இப்போது நினைத்துப் பார்க்கும்போது இது ஒரு சாதார‌ண‌ நிக‌ழ்வாக‌ தோன்றுகிற‌து. ஆனால் ஒரு திறமையும் இல்லாம‌லிருந்த‌ என்னை எப்ப‌டியும் டீமுக்குள் கொண்டுவ‌ர‌ அவ‌ன் முய‌ற்சித்த‌து, ந‌ட்பேய‌ன்றி வேறென்ன‌? அவ‌ன் சொன்ன‌போது என் க‌ண்க‌ளில்.... ந‌ல்ல‌வேளையாக‌ அடுத்த‌ மேட்சில் கேட்ச் எதுவும் என‌க்கு வ‌ர‌வில்லை. ஃபார்வார்டில் நின்று சில‌ சிங்கிள்ஸை ம‌ட்டும் த‌டுத்தேன். ஒவ்வொரு முறை த‌டுக்கும்போதும் கைத்த‌ட்ட‌லுட‌ன் ஒரு குர‌ல் கேட்கும் "ஃபீல்டிங்டா ஃபீல்டிங்டா". ஒருவ‌ழியாய் ப‌டிப்ப‌டியாக‌ இம்ப்ரூவ் ஆகி என‌க்கு என் மேல் ந‌ம்பிக்கை பிற‌ந்த‌ ச‌ம‌ய‌த்தில் ச‌ர‌வ‌ண‌ன் சொன்னான்...

"டேய் இந்த‌ வ‌ருஷ‌ம் +2, ஒழுங்கா ப‌டிக்க‌ற‌ வேலைய‌ பாப்போம், இனிமே கிரிக்கெட்லாம் வேணாம்"

"இருக்க‌ட்டும்டா, அதுக்காக‌? அப்போ பி.டி பீரிய‌ட்ல‌கூட‌ கிர‌வுண்டுக்கு போகாம‌ க்ளாஸ்ல‌ உக்காந்து ப‌டிக்க‌ணுமா?

"கிர‌வுண்டுக்கு போலாம், ம‌த்த‌ க்ளாஸ் ப‌ச‌ங்க‌ மேட்ச் ஆடுற‌து பாக்க‌லாம், நாம‌ விளையாடினா ந‌ம‌க்கு கான்ச‌ன்ட்ரேஷ‌ன் அதுல‌யே இருக்கும்"

இப்ப‌டி ஒரு இடியை தூக்கி போட்டு, இந்திய‌ அணிக்கு ஒரு ஜான்டி ரோட்ஸ் கிடைக்காம‌ல் செய்த‌தினால் ம‌ட்டும் ச‌ர‌வ‌ண‌னின் அக்க‌வுண்ட்டில் பாவ‌க்க‌ண‌க்கு ஒன்று கூடிய‌து! எம்.ஈ முடித்து இப்போது அவ‌ன் பெங்க‌ளூரில் ப‌ணிபுரிந்துகொண்டிருக்கிறான். ஆறு மாத‌ம் முன்பு வ‌ரை ஜாலியாக‌ ச‌ந்தோஷ‌மாக‌த்தான் இருந்தான். யார் க‌ண் ப‌ட்ட‌தோ, அவ‌னுக்கு இப்போது திரும‌ண‌ம் ஆகிவிட்ட‌து ;)

'ச‌ர‌வ‌ண‌ ப‌வ‌ன்', 'ச‌ர‌வ‌ணா ஸ்டோர்ஸ்', ப‌ருத்தி வீர‌ன் டைட்டில் கார்டில் 'ச‌ர‌வ‌ண‌ன்', ப‌திவ‌ர்/ந‌ண்ப‌ர் ஜெட்லி ச‌ர‌வ‌ண‌ன், ந‌ண்ப‌ர் தினேஷ் ச‌ர‌வ‌ண‌ன் என்று ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் அவ‌ன் பெய‌ரை பார்க்கும்போதெல்லாம், ஒரு க‌ர்ஸ‌ர் ப்ளிங்க் ஆகும் நேர‌த்தில் அவ‌ன் முக‌ம் ம‌ன‌தில் தோன்றி போகும்......

டேக் ஒன்...காலேஜ்...ஃபிக‌ர்...ஆக்ஷ‌‌ன்!

ஆதி (அந்த‌ ப‌ட‌‌ம் இல்ல‌ங்க‌) கால‌த்திலிருந்தே சினிமாக்க‌ளில், க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ளை த‌றுத‌லைக‌ளாக‌வே காண்பிப்ப‌து வ‌ழ‌க்க‌மாயிருக்கிற‌து. என் விஷ‌ய‌த்தில் இது அப்ப‌டியே உல்டா. க‌ல்லூரியில்தான் ப‌டிப்பு என‌க்கு 'உருளைக்கிழ‌ங்கு பொறிய‌ல்'ஆக‌ தெரிந்த‌து. இறுதியாண்டு ப‌டிக்கும்போது, ஹெச்ஓடி "என்ன‌டா, ர‌கு செட்டுதான் க்ளாஸ்லேயே டிஸிப்ளின்ல‌ பெஸ்ட்டுன்னு (ஷைல‌ஜா) மேம் ச‌ர்ட்டிஃபிகேட் த‌ர்றாங்க‌"ன்னு சொன்னபோது, ம‌கிழ்ச்சியாயிருந்த‌து. ஹி..ஹி..ந‌ம்புங்க‌, நான் கொஞ்ச‌ம் உருப்ப‌டியா மாறுன‌தே காலேஜ்ல‌தான்!

ஆண்க‌ள் ம‌ட்டுமே ப‌டிக்கும் க‌ல்லூரியில் என்னை சேர்க்க‌ எவ்வ‌ள‌வோ முய‌ற்சித்த‌ன‌ர் மை டிய‌ர் ப்ரொட்யூச‌ர்ஸ். ஆனால் விதிக்க‌ப்ப‌ட்ட‌தென்ன‌வோ ஒரு கோ-எட் க‌ல்லூரி! ஃபிக‌ர், க‌ல‌ர், டிக்கெட்டு, சைட்டு, கில்மா ('செம‌' என்ப‌து ம‌ட்டும் இந்த‌ ஐந்து வார்த்தைக‌ளுக்கும் முன்னாடி வ‌ர‌க்கூடிய‌ காம‌ன் வேர்ட்) என்று புதிய‌ புதிய‌ வார்த்தைக‌ள் ஹார்மோன்க‌ளின் த‌ய‌வினால் அறிமுக‌மாயின‌. ம‌கிழ்ச்சியுட‌ன் முத‌ல் நாள் க்ளாஸுக்கு சென்ற‌ பின்புதான் தெரிந்த‌து, க்ளாஸில் மொத்த‌மிருந்த‌ 39 பேரில், ஒரே ஒரு பெண்! க்ளாஸ் ஆர‌ம்பித்த‌ ஒரு வார‌த்திலேயே சேஃப‌ர் சைடுக்கு அந்த‌ பெண் எல்லாருக்கும் ராக்கி க‌ட்டிவிட‌, இதுக்கு மென்ஸ் காலேஜே சேர்ந்திருக்க‌லாம் என்று தோன்றிய‌து.


ந‌ம் க்ளாஸில் இல்லாவிட்டால் என்ன‌, சீனிய‌ர் எவ்வ்வ‌ள‌வு பேர் இருக்கிறார்க‌ள்! சீனிய‌ர்க‌ளில் ஆண்க‌ளை ம‌ட்டுமே ஆர‌ம்ப‌த்தில் 'அண்ணா' என்று அழைத்தோம் (பின்பு பெய‌ர் சொல்லி கூப்பிடும‌ள‌வுக்கு அவ‌ர்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ள் ஆனார்க‌ள்). சீனிய‌ர் பெண்க‌ளிட‌ம் "உங்க‌ ரெக்கார்ட் நோட் த‌ர்றீங்க‌ளா?" என்று கொஸ்டின் மார்க்கோடு முடித்துவிடுவோமே த‌விர‌, த‌ப்பித்த‌வ‌றி கூட‌ 'க்கா'வை சேர்த்துக்கொள்ள‌ மாட்டோம். அல‌ர்ட்ட்ட்டா இருப்போம்!..;) வ‌ய‌தில் மூத்த‌‌ பெண்க‌ளை சைட் அடிக்கிறோமே என்ற‌ குற்ற‌ உண‌ர்ச்சி வ‌ந்தபோது, எங்க‌ளை காத்த‌வ‌ர் ச‌ச்சின். "ஹே ச‌ச்சினை விட‌ ச‌ச்சின் ஒய்ஃபுக்கு அஞ்சு வ‌ய‌சு அதிக‌ம்டா" என்று ப‌க்காவான‌ லாஜிக்கை க‌ண்டுபிடித்து சீனிய‌ர்ஸை சைட் அடிக்கும் ப‌ணியை செவ்வ‌னே தொட‌ர்ந்தோம்..:)

இன்னும் நிறைய‌ சொல்ல‌லாம். ஆனால் இத‌ற்கு மேல் எழுதினால், ஃப்யூச்ச‌ரில் தொட‌ர் ப‌திவு எழுத‌ கூப்பிட‌ நினைப்ப‌வ‌ர்க‌ள், 'ஐயையோ அவ‌னா' என்று டெர‌ராகும் சாத்திய‌ம் இருப்ப‌தால் இதோடு நிறுத்திக்கொள்கிறேன். பாவ‌ம், இத‌ற்கே விக்னேஷ்வ‌ரி எப்ப‌டியெல்லாம் ஃபீல் ப‌ண்கிறாரோ?!

இத்தொட‌ரை தொட‌ர‌ ந‌ட்புக‌ளை அழைக்கிறேன் (மாட்டினீங்க‌ளா?...;))

ப்ரியா
வித்யா
ஹ‌ரீஷ்
மோக‌ன்
ஜெட்லி

Thanking You,

Yours Obediently,

:)))