Wednesday, October 12, 2011
வேலை - கிடைக்கும் முன், கிடைத்த பின்
Wednesday, September 28, 2011
இன்னுமா இப்படிலாம் இருக்காங்க?!
இதை பார்த்துக்கொண்டிருக்கும்போது எனக்குள் எழுந்த கேள்வி, இன்னும் கூடவா ஒரு பெண் தனக்கு பின்தான் வரவேண்டும் என்று நினைக்கும் ஆண்கள் இருக்கிறார்கள்? நிஜமாகவே ஆச்சரியமாக இருக்கிறது. நான் ஏதோ பெண் விடுதலைக்குப் போராடுபவனோ, மேடைகளில் பெண்களின் புகழைப் பாடுபவனோ அல்ல.
பெண்ணை சக மனுஷியாக மட்டுமே பார்க்கிறேன். அலுவலகத்தில் சிறப்பாக பணிபுரிந்தால் பாராட்டுகிறேன், ஏதேனும் தவறு செய்தால் சற்றே கடிந்துகொள்கிறேன், நெருங்கிய நட்பென்றால் சகஜமாக கிண்டலடிக்கிறேன். அவ்வளவே. ‘டி’ போட்டு பேசும் உரிமை கொடுத்தவளை ஏன் ‘டா’ போட்டு பேசுகிறாய் என்று ஒருபோதும் கேட்டதில்லை.
சில நாட்கள் முன் பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார். அவர்களுடைய எதிர் வீட்டில் இருக்கும் பையனுக்கு பெண் பார்க்க சென்றிருக்கின்றனர். குடும்பத்தோடு போயிருந்ததில், மூத்த உறுப்பினர் ஒருவர் சபையிலேயே கேட்டிருக்கிறார், “பொண்ணுக்கு சமைக்கத் தெரியுமா” என்று. பதிலுக்கு அந்த பெண், ”நீங்க என்ன சமையல்காரியையா பார்க்க வந்திருக்கீங்க” என்று எதிர் கேள்வி தொடுத்திருக்கிறார். இதைச் சொல்லும்போது, பாட்டி அந்த பெண்ணை பற்றித்தான் குறைபட்டுக்கொண்டார்.
ஆனால் எனக்கு அந்த பெண் கேட்டது பிடித்திருந்தது. சமைக்கத் தெரியுமா என்று கேட்பது நியாயமெனில், பையனோட மெடிக்கல் சர்டிஃபிகேட் வேண்டும் என்று பெண் வீட்டார் கேட்டால் அதுவும் நியாயம்தான். ஆனால் இன்றைய சமூகத்தில் இதை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள்?
பெண் என்பவள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எண்ணம் இன்னும் வீட்டிலுள்ள பெரியவர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் காணமுடிகிறது. நாம் ஏதேனும் எடுத்துச் சொல்லி இந்த வயதிற்கு மேல் அவர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கை துளியும் இல்லை. எனவே அதுபோன்ற ஆபத்தான முயற்சிகளிலும் ஈடுபடுவதில்லை. ஆனால் வருங்காலத்தில் இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் இருக்காது என்றே எண்ணுகிறேன்...பார்ப்போம்.
Tuesday, August 16, 2011
மங்காத்தா - மச்சி ஓப்பன் த பாட்டில்!
யுவனின் 7ஜி ரெய்ன்போ காலனி தீம் ம்யூசிக் கேட்டிருப்பீர்கள். கொஞ்சம் காதல், கொஞ்சம் சோகம், கொஞ்சம் உற்சாகம், கொஞ்சம் நெகிழ்வு என்று அள்ளி கொடுத்திருப்பார். எனக்கென்னவோ 7ஜிக்கு பிறகு மங்காத்தா தீம் ம்யூசிக்தான் பெஸ்ட் என்று தோன்றுகிறது.
முதன்முறை கேட்கும்போதே மனம் ஒரு த்ரில்லர் மூடுக்கு போய்விடுகிறது. இன்று மட்டும் கிட்டதட்ட பதினைன்து முறைக்கு மேல் கேட்டிருப்பேன். துளியும் சலிக்கவில்லை.
தீம் ம்யூசிக்கிற்கு அடுத்தது, பாடல்கள் கேட்கையில், முதன் முறை கேட்டவுடன் பிடித்தது, 'மச்சி, ஓப்பன் த பாட்டில்'தான். யுவன்-வெங்கட்பிரபுவின் அடுத்த 'சரோஜா சாமான் நிகாலோ'. படம் ரிலீஸானவுடன், இந்த பாடலை இசை சேனல்களில் தமக்கு பிடித்தமானவர்களுக்கு டெடிகேட் செய்ய நம் மக்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருப்பர்.
Saturday, August 13, 2011
ப்ளாஸ்டிக் கவர்களுக்கு மாற்று வழி இல்லையா?
Thursday, June 23, 2011
சீரியல்.......கில்லர்தான் இப்பொழுதும்
- ‘அவளை நான் பழி வாங்காம விடமாட்டேன்’ என கண்ணை உருட்டுகிறார் ஒரு பெண்மணி.
- ‘சொத்தை பிரிச்சே ஆகணும்’ என்கிறார் குடும்பத்தின் மூத்த மகன்.
- ‘எங்கப்பா மேலயா கை வெச்ச, உன்னை கொல்லாம விட மாட்டேண்டா’ என காவல் நிலையம் முன்பே வில்லனை மிரட்டுகிறார் ஒருவர்.
- ’எங்க அண்ணனை ஏமாத்துன இல்ல, அதான் நான் உன்னை ஏமாத்தி எங்கண்ணனுக்கு வர வேண்டிய பணத்தை வாங்கிட்டேன்’ என்கிறார் தம்பி.
- வீட்டு வெளியே ஒருவர் வந்து, ‘டேய் வெளியே வாடா எங்க ஒளிஞ்சிருக்க’ என்று சத்தம் போட, உள்ளேயிருந்து அமைதியாய் ஒரு பெண் வந்து கூலாக சொல்கிறார், ‘எங்கண்ணண் வீட்ல இல்ல, என் புருஷன் மேல கம்ப்ளைண்ட் குடுக்க போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிருக்கார்’.
Tuesday, May 31, 2011
விபரீதக் கோட்பாடு & ஓடாதே! – சுஜாதா
சில நாட்கள் முன்பு வாரயிறுதியில் ஊருக்குச் சென்றிருந்தபோது, அங்கு வழக்கம்போல் காலை 11 மணிக்கு மின்சார வாரியம் ஞாயிறென்றும் பாராமல் தன் கடமையில் இறங்கியது. போதாதற்கு சூரிய பகவானும் ஆஸ்ட்ரேலியாவை எதிர்த்தாடும் சச்சினைப் போல் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார். எனவே வெளியே செல்லவும் விருப்பமில்லை. பிறகுதான் இவ்வருடம் வாங்கிய புத்தகங்களின் ஞாபகம் வந்தது.
அலமாரியில் பல புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தாலும், கண்ணும், கையும் முதலில் நோக்கிச் சென்றது சுஜாதாவை நோக்கித்தான். உண்மையெனினும் ’வழக்கம் போல்’ என்ற சொற்றொடர் முந்தைய வரிக்கு அவசியமில்லாதது. இரு புத்தகங்களை எடுத்தேன். விபரீதக் கோட்பாடு & ஓடாதே.
இவ்விரண்டு புத்தகங்களும் கிழக்கு பதிப்பக வெளியீடு. எழுத்துப்பிழையெல்லாம் இல்லாமல், தரமான காகிதத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இது ஒன்று போதும் சுஜாதாவை கெளரவப்படுத்த. சென்ற வருடம் வேறொரு பதிப்பகத்தில் வாங்கிய புத்தகத்தில் அவரது எழுத்தை உயிருடன் போஸ்ட்மார்ட்டம் செய்திருந்தார்கள். அவர் வாசித்திருந்தால் ஆங்கிலத்தில் அர்ச்சனை செய்திருப்பார்.

விபரீதக் கோட்பாடு
சுஜாதாவின் எழுத்தை நிறைய (சு)வாசித்தவர்கள் இக்கதையில் யார் குற்றவாளியென முதல் நான்கைந்து பக்கங்களிலேயே யூகித்துவிடுவார்கள். ஆனால் மூட நம்பிக்கையை மையமாக வைத்து த்ரில்லராய் கதையை நகர்த்தியிருக்கும் விதம் அட்டகாசம்! கணேஷ் வஸந்திற்காகவே வாசிக்கலாம். இப்போது யோசித்துபார்க்கையில் கண்டிப்பாக இது சுஜாதாவின் பெஸ்ட் அல்ல என்றுதான் தோன்றுகிறது. என்றாலும் தவிர்க்கக்கூடிய கதையும் அல்ல.
ஓடாதே!
ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முன் எழுதிய கதை. இப்புத்தகத்தின் முன்னுரையில், நிறைய இயக்குனர்கள் இக்கதையை திரைப்படமாக கெடுப்பதற்கு..ஸாரி...எடுப்பதற்கு தன்னை அணுகியதாகக் குறிப்பிட்டுள்ளார் சுஜாதா. அதுவும் ஒரு வேண்டுகோளுடன். பாழாய்ப் போகாத செண்டிமெண்ட் காரணமாக, தலைப்பை மட்டும் மாற்றவேண்டும் என்றார்களாம். ஆனால் இந்த ‘ராஜனுக்கு ராஜன்’ அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே இக்கதை திரைப்படம் ஆகாமல் தப்பித்தது என்று முன்னுரையில் சொல்லியிருக்கிறார்.
இயக்குனர்கள் இதைக் கேட்குமளவுக்கு கதையில் அப்படியென்ன இருக்கிறது என்ற எண்ணத்தோடுதான் கதையை வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க ஆரம்பித்த சில பக்கங்களிலேயே புரிந்துவிட்டது. புதிதாய் மணமானவர்களிடையே இருக்கும் காமம் கலந்த காதல், இருக்கையின் நுனிக்கு கொண்டுவரச் செய்யும் அட்டகாசமான சேஸிங் - இவையிரண்டையும் சேர்ந்து இக்கதையை ஒரு அட்டகாசமான த்ரில்லராய் படைத்திருக்கிறார் எனதருமை ரங்கன்.
மணமான மூன்றாம் நாளே, ஒரு குற்றமும் செய்யாத ஜோடியை சென்னை, பெங்களூர் காவல்துறையினர் துரத்துகின்றனர். ஏன்? வேண்டாம், சஸ்பென்ஸை உடைக்கவிரும்பவில்லை. கதையை வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவங்கள், இலக்கியத்தரமான எழுத்து ஆகியவற்றை எதிர்பார்ப்போருக்கு இவ்விரண்டு புத்தகங்களும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் போகலாம். ஆனால் த்ரில்லரை மட்டும் விரும்புபவர்களுக்கு இப்புத்தகங்கள் நல்லதொரு விருந்தென்றே கூறுவேன்.
நல்லவேளை, வாரயிறுதியாக இருந்தாலும் அன்று மின்சார வாரியத்தினர் கடமையே கஜினியாயிருந்தனர். இல்லையெனில் இவ்விரண்டு புத்தகங்களையும் வாசித்திருக்கமாட்டேன். ஆட்சி மாறினாலும் ஆற்காட்டாருக்கு நன்றி! :)
Tuesday, May 17, 2011
சுதா ரகுநாதன்
பதிவெழுத ஆரம்பித்து கிட்டதட்ட இரண்டு வருடங்கள் ஆகிறது. வலைப்பூ மீதான போதை தற்போது குறைந்திருந்தாலும் அவ்வப்போது எழுத வேண்டும் என்ற ஆசை மட்டும் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. ஆரம்பத்தில் எழுதியதை இப்போது வாசிக்கையில் எரிச்சல்தான் மிஞ்சுகிறது என் மீது எனக்கு. தட்டுத்தடுமாறி ஏதேதோ எழுதிக்கொண்டிருக்கிறேன். இதுவரை எழுதியதில் மனதிற்கு மகிழ்ச்சியோ, திருப்தியோ தருமளவுக்கு எதுவும் இல்லை. வார்த்தை ஜாலங்கள் எல்லாம் கைகூடாததால் அத்தருணத்தில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதுகிறேன்.

ம்ம்ம்...யோசித்து பார்க்கையில், மற்றவர்கள் மனம் நோகும்படியோ, அநாகரிகமாகவோ இதுவரை எதையும் எழுதியதில்லை. இவ்விரண்டு வருடங்களில் இதுதான் என்னால் முடிந்த அதிகபட்ச சாதனை(!)
**********
"இதுல 15தான் போட்டிருக்கு, ஏன் பில்ல 17 போட்டிருக்கீங்க?"
"17தாங்க"
"இங்க பாருங்க, 15தான் போட்டிருக்கு". பாட்டிலைக் காட்டினேன்.
"இதெல்லாம் நாங்க ஃபிக்ஸ் பண்றதுதான் சார், இது 17 ரூபா"
**********

பெயர் குறித்த தொடர் பதிவிற்கு ப்ரியா அழைத்திருந்தார், பல நாஆஆஆஆஆட்களுக்கு முன்பு. ஸாரி ப்ரியா, பெட்டர் லேட் தேன் நெவர் இல்லையா?
சிறுவயதில் என் பெயர் எனக்கு பிடிக்காது. ஸ்டைலிஷாக இல்லாமல் ஏதோ பழைய பெயர் வைத்துவிட்டார்கள் என்று கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. அதுவும் ஒரு பழைய கறுப்பு வெள்ளை படத்தில், நாயகி நாயகனை அப்போதுதான் தூங்கியெழுந்தது போன்ற toneல் ‘நாதா நாதா’ என்றழைக்க, ‘ரகுநாதன்’ என்னும் பெயர் மீது இன்னும் எரிச்சல் கூடியது.
பள்ளி, கல்லூரி நாட்களில்....ஏன் இப்போது கூட என் பெயரில் பில் போடும்போது பலர், RAGUNATHAN என்றுதான் எழுதுவர். நான் RAGHUNATHAN. அவர்கள் விட்டுவிடுவது ஓரெழுத்துதான் என்றாலும் என்னமோ அது ஒரு பெரிய மனக்குறையாகவே தோன்றும். நல்லவேளை, மார்க் ஷீட், பாஸ்போர்ட் போன்றவற்றிலெல்லாம் இந்த பிரச்னை வரவில்லை.
எனக்கு ரகு என்று அழைத்தால்தான் பிடிக்கும், அழைப்பவர்களைத்தான் பிடிக்கும். பெயரை சுருக்கி கூப்பிடுவதும், செல்லப்பெயர் வைத்துக் கூப்பிடுவதும்தான் நட்பின் நெருக்கத்தை அதிகரிக்கிறது என்பது என் எண்ணம்.
இப்போது நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. கண்டிப்பாக ‘சுதா’ என்கிற பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று கூட யோசித்திருக்கிறேன் (இப்போது அந்த ஆசை இல்லை). அப்பெண்ணுக்கு பாட வருகிறதோ இல்லையோ, ‘நான் சுதா ரகுநாதன்’ என்றாவது அறிமுகப்படுத்திக்கொள்ளலாம் இல்லையா? J






