பள்ளியில் படிக்கும்போது அறிவியல் என்றால் "அது நம்மள நோக்கிதான் வருது, எல்லோரும் ஓடுங்க" என்ற ரேஞ்சில் ஓடியவன், அவர் எழுதுவதை மட்டும் ரசித்து படிக்கத் துவங்கினேன். இப்போது கூட சில சமயம் நினைப்பதுண்டு, பள்ளியில் வரும் அறிவியல் பாடங்கள் எல்லாம் அவர் எழுதியிருந்தால், எல்லா மாணவ/மாணவிகளும் மனப்பாடம் என்னும் நமது மோசமான கல்வி வழிமுறையை விட்டுவிட்டு, ஆர்வத்துடன் படிப்பார்களே என்று. இதேபோல் தமிழில் வரும் செய்யுள்களுக்கெல்லாம் ஏ.ஆர்.ரஹ்மான் இசை வடிவம் கொடுத்தால்....!

சென்னை வந்தபின் தனியாக தங்க ஆரம்பித்தபோது, பொழுதுபோக்கிற்கு டிவி கூட கிடையாது எனக்கு. ஆனால் பொழுதையும், வருத்தத்தையும் போக்கியவர் இவர்தான். இவரின் எழுத்தை வாசிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே "நல்லவேளை நம்மிடம் டிவி இல்லை, இருந்திருந்தால் இந்த கதைகளையெல்லாம் எப்படி படித்திருப்போம்?" என்று தோன்றுமளவுக்கு என்னை ஆட்கொண்டிருந்தார். இதுவரை நான் படித்த கதைகளிலேயே 'ஆ'வும், 'கொலையுதிர் காலம்'மும்தான் என்னுடைய மோஸ்ட் ஃபேவரைட்.
ஆ - பலருக்கும் நினைவிருக்கலாம். விகடனில் தொடராக வெளிவந்தது இந்த கதை. அந்த சமயத்தில் நான் ரொம்ப குட்டி பாப்பாவாக இருந்ததினால், கதையை படிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. மூன்று வருடங்களுக்கு முன்பு பத்திரிக்கையிலோ, இணையத்திலோ இந்த கதையை பற்றி சில வரிகள் படித்தேன். 'ஆ'ர்வம் தாங்க முடியாமல், ஹிக்கின்பாதம்ஸ் சென்று வாங்கினேன். வாங்கி கிட்டதட்ட மூன்று அல்லது நான்கு நாட்களிலேயே மொத்த கதையையும் படித்து முடித்தேன். அதற்கு பின் அவரின் மேலிருந்த மரியாதையும், பிரமிப்பும்...பன்மடங்கு உயர்ந்தது என்பதெல்லாம் சாதாரண வார்த்தை. அந்த உணர்வு அதற்கும் மேல்!
"ஆ" என்ற ஒற்றை எழுத்து டைட்டிலே, இந்த கதை கண்டிப்பாக சம்திங் ஸ்பெஷல் என்று உள்ளுக்குள் அலாரம் அடித்தது. கதையின் ஒவ்வொரு அத்தியாயமும் "ஆ"வென்றே முடியும். "ஆ"வென்று முடிக்க வேண்டுமே என்பதற்காக, ஏதோ மொக்கை காரணங்கள் எல்லாம் காண்பித்து முடிக்கமாட்டார். ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு அவசியம் இருக்கும்....அந்த காலகட்டத்திலேயே, சிஸ்டம் ப்ரொக்ராமிங்கில் பயன்படுத்தும் பல வார்த்தைகளை கதையில் பயன்படுத்தியிருப்பார். நீங்கள் த்ரில்லர் கதை விரும்பிகளாக இருந்தால், கண்டிப்பாக இக்கதையை வாசித்து பாருங்கள். ஒவ்வொரு அத்தியாயம் படித்து முடிக்கும்போதும், "சரி மீதிக்கதையை அப்புறம் படிச்சுக்கலாம்" என்ற எண்ணம் கண்டிப்பாக தோன்றாது. அந்த த்ரில் தொடர்ந்தபடியே இருக்கும். வேறு வழியின்றி, படித்து முடிக்க மூன்று நான்கு நாட்கள் ஆனது எனக்கு. இந்த கதையை வைத்து சினிமா எடுக்கலாம் என்று பிரகாஷ்ராஜ் பலமுறை தன்னிடம் கேட்டதாக ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். என்ன காரணமோ, அந்த முயற்சி ஆரம்பிக்கப்படவேயில்லை.
கொலையுதிர் காலம் - இந்த வருட புத்தக கண்காட்சியில் வாங்கிய "மூன்று குற்றங்கள்" புத்தகத்தை படித்து முடித்தபின், சில 'கணேஷ் வஸந்த்' கதைகளை வாங்கினேன். அதில் என்னை மிகவும் புரட்டிபோட்டது "கொலையுதிர் காலம்". டைட்டிலை பார்த்ததும் சின்ன ஸ்மைலுடன், "மனுஷன் எப்படிலாம் யோசிச்சிருக்கறார் பாரேன்" என்ற எண்ணம் தோன்றியது. அலுவலகம் 11 மணிக்கு என்பதால் காலை எழரை மணி முதல் எட்டரை மணி வரை புத்தகம் படிப்பதை தொடர்ந்துகொண்டிருக்கிறேன். அப்படி ஒரு நாள் ஆரம்பித்ததுதான் "கொலையுதிர் காலம்". படிக்க ஆரம்பித்த அரை மணி நேரத்திலேயே நான் நிகழ்காலத்திலிருந்து கொ.காலத்திற்கே சென்றுவிட்டேன். ஆர்வம் தாங்கமுடியவில்லை...சரி நைட் வந்து படிச்சிக்கலாம் என்று யோசித்தேன். ஹூஹூம்..மடப்பய மனசு கேட்கவில்லை. டீம் மேனேஜருக்கு ட்ரிங்கினேன்.
"ஹலோ...ஹ்ம்..கொஞ்சம் உடம்பு சரியில்ல, காலையிலருந்து கோல்ட் அதிகமா இருக்கு, இன்னைக்கு ஒரே ஒரு நாள் மட்டும் லீவ் எடுத்துக்கறேன்"
அன்று உண்மையிலேயே ஜலதோஷத்தால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தேன். என்ன...'அதிகமா' என்பது மட்டும்தான் அதிகமான வார்த்தை. 'லேசா' என்பதே அந்த வாக்கியத்திற்கு ஷாரூக் காஜோல் போல பொருத்தமாக இருந்திருக்கும்.
"ஆங், ஓகே, உடம்பு பாத்துக்கப்பா, மெடிக்கல் ஷாப்லலாம் மாத்திரை வாங்கி போடாத, போய் டாக்டரைப் பாரு" என்றார்.
மனதுக்குள், "கண்டிப்பா.....டாக்டர் கணேஷை போய் பார்த்து, அவர் எழுதிக்கொடுக்கற மாத்திரையை வஸந்த் மெடிக்கல்ஸில் வாங்கிக்கறேன்" என்றெண்ணிக்கொண்டேன். அவரிடம் நன்றி சொல்லிவிட்டு ஃபோனை வைத்தபின் சிறிது குற்ற உணர்ச்சி கூட இருந்தது (என்னைக்கும் இந்த பதிவு மட்டும் அவர் கண்ணுல படாம நீதான் காப்பாத்தணும் கணேஷா!). ஆனால் அதெல்லாம் மீண்டும் புத்தகத்தை எடுக்கும்வரைதான். படிக்க ஆரம்பித்தபின், துளிகூட த்ரில் குறையாமல் தடதடவென்று இரட்டைக்கிளவியை தண்டவாளமாக பயன்படுத்தி 'கதை' ரயில் 'சூப்பர் ஃபாஸ்ட்'டாக ஓடிக்கொண்டிருந்தது. படித்து முடித்த பின் "சே! என்ன மனுஷன்யா இவரு, சான்ஸே இல்ல"...இன்னும் என்னென்னமோ தோன்றியது. பிறகுதான் உணர்ந்தேன், காலையிலிருந்து குளிக்கவுமில்லை, சாப்பிடவுமில்லையென. அதற்கு பின்தான் கொ.காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு மீண்டும் வந்தேன்....வர மனமில்லாமல்!
வாழ்க்கையில் ஒரு முறையேனும் பார்த்துவிடவேண்டும் என்று நான் நினைத்த ஒரே விஐபி அவர்தான். ஏனோ அது நிறைவேறாமலேயே போனது. இப்போது இருந்திருந்தால் ஒரு ஈமெயிலாவது அனுப்பியிருப்பேன் இன்றைக்கு, "ஹாப்பி பர்த்டே ஸார் :)" என்று. குறைந்தது இன்னும் 20 வருடங்களாவது இருந்திருக்கலாம்........என்ன அவசரம்யா உனக்கு!
இதுவரை படித்த கணேஷ் வஸந்த் கதைகள்
ஆ!
நைலான் கயிறு
மறுபடியும் கணேஷ்
மேற்கே ஒரு குற்றம்
மீண்டும் ஒரு குற்றம்
மேலும் ஒரு குற்றம்
கொலையுதிர் காலம்
வஸந்த் வஸந்த்!
இப்பதிவை வாசிக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். கணேஷ் வஸந்த் இடம்பெறும் மற்ற கதைகளையும் வாசிக்க ஆர்வமாயிருக்கிறேன். ஆனால் என்னென்ன கதைகள் என்று தெரியாமல் 'ஙே'ங்கிக்கொண்டிருக்கிறேன். ஆதலால், பின்னூட்டத்திலோ, மின்னஞ்சலிலோ அக்கதைகளை தெரிவித்தால், மே மாதத்தில் மழையைக் கண்டது போல் மிக்க மகிழ்ச்சியடைவேன் :)






