Monday, April 05, 2010

வ‌லியுட‌ன்...

ஸ்ரீ காமாட்சி திரும‌ண‌ ம‌ண்ட‌ப‌ம்.

க‌டிகார‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ளில் வ‌ருவ‌து போல் என் கைக்க‌டிகார‌ம் நேர‌ம் 10:10 என்று காட்டியது.......ச்சே, தூக்க‌ க‌ல‌க்க‌த்தில் ச‌ரியாக‌ க‌வ‌னிக்க‌வில்லை, ம‌ணி 11:10. ம‌டியில் அம‌ர்‍ந்திருந்த என் மூன்று வ‌ய‌து ம‌க‌ள் மீரா அப்ப‌டியே தூங்கிவிட்டிருந்தாள். எனக்கும் தூக்க‌ம், க‌ண்க‌ளை மூடிக்கொள்ளுமாறு க‌ட்ட‌ளையிட‌, க‌ண்க‌ள் சொகுசு பேருந்துக‌ளில் இருக்கும் தானியங்கி க‌த‌வுக‌ளைப் போல் மூட‌ முய‌ற்சி செய்த‌து.

அப்போது, "சுந்தர‌ம்..." த‌ன‌ம் அத்தையின் குர‌ல் கேட்ட‌து. க‌ண்க‌ள் ச‌ட்டென்று திற‌ந்துகொள்ள‌...

அத்தையின் ப‌க்க‌த்திலிருந்த‌ என் கார் டிரைவ‌ரை முறைத்தேன், "என்ன‌த்தே...இப்ப‌தான் வ‌ர்றே...என்னாச்சு? வ‌ர்ற‌ வ‌ழியில‌ எதாவ‌து பிர‌ச்ச‌னையா...?"

மீராவின் த‌லையை லேசாக‌ வ‌ருடிக்கொண்டே, "அதெல்லாம் ஒண்ணுமில்ல‌ப்பா...வ‌ர்ற‌ வ‌ழியில‌ ஏதோ க‌ட்சித் த‌லைவ‌ர் மீட்டிங், அப்ப‌டி போ, இப்ப‌டி போன்னு திருப்பி விட்டுட்டிருந்தாங்க‌. டிரைவ‌ர் த‌ம்பியும் காரை ந‌ல்லாத்தான் ஒட்டுச்சு, அத‌னால‌தான் இப்ப‌வாவ‌து வ‌ந்து சேந்தேன்" என்று சொல்ல‌, டிரைவ‌ருக்கு செய்ய இருந்த‌ அர்ச்ச‌னையை ர‌த்து செய்தேன்.

"இதுக்குத்தான் அத்தே காலையிலேயே வ‌ந்துடுன்னு சொன்னேன், நீதான் ஸ்கூலு, எக்ஸாமுன்னு ஏதேதோ சொன்ன‌, இப்ப‌ பாரு...எவ்ளோ லேட்டு, ச‌ரி வா, வ‌ந்து சாப்பிடு"

"சாப்பாடுலாம் நான் பாத்துக்க‌றேன்‍, என‌க்கென்ன‌, கொஞ்ச‌ம் மோர் சாத‌ம், ஒரு ப்ர‌ஷ‌ர் மாத்திரை. வ‌ரும்போதே அம்மாகிட்ட‌ ஃபோன்ல‌ பேசினேன், சாப்பாடு என‌க்கு எடுத்து வெச்சிருக்க‌ற‌தா சொன்னாங்க‌...நான் பாத்துக்க‌றேன். நீ போய் தூங்கு..."

மீராவை அவ‌ள் தூக்க‌ம் க‌லையாம‌ல் ப‌டுக்க‌வைத்தேன். எழுந்துவிட்டால் அவ‌ள் செய்யும் சேட்டைக்கு ம‌ண்ட‌ப‌த்தில் உள்ள‌ அனைவ‌ரும் த‌ம் தூக்க‌த்தைத் தியாக‌ம் செய்ய‌வேண்டி வ‌ரும். நானும் ப‌டுத்துக்கொண்டேன். க‌ண்க‌ளை மூடிக்கொண்டிருந்தாலும், தூக்க‌த்தை பின்னுக்குத் த‌ள்ளிவிட்டு, ப‌ழைய‌ நினைவுக‌ள் முன்னுக்கு வ‌ந்துகொண்டிருந்த‌து.

********************


த‌ன‌ம் அத்தை - என் த‌ந்தையின் ஐந்தாவ‌து ம‌ற்றும் க‌டைசி த‌ங்கை. என்னைப் பொறுத்த‌வ‌ரை என் இன்னொரு அம்மா. என் அத்தைக்கும் என‌க்கும் 13 வ‌ருட‌ம் வ‌ய‌து வித்தியாச‌ம். இருந்தாலும் என் முத‌ல் தோழியும் அத்தைதான். என்னுட‌ன் தாய‌ம் விளையாடுவ‌து, ப‌ள்ளிக்கு கூட்டிச்செல்வ‌து, பாட‌ம் சொல்லிக்கொடுப்ப‌து, ஏதாவ‌து த‌வ‌று செய்தால் அப்பா அடிக்கும் அடியில் இருந்து என்னைக் காப்பாற்றுவ‌து என‌ என் உல‌க‌ம் அத்தை...அத்தை... அத்தைதான். என் வாழ்நாளில், நான் அம்மா என்று உச்ச‌ரித்த‌தைவிட‌ "அத்தே" என்றுதான் அதிக‌ம் உச்ச‌ரித்திருக்கிறேன்.

ஒருமுறை ஒரு மாந்தோப்பிலிருந்து மாங்காய்க‌ளை அள்ளிக்கொண்டு வ‌ரும்போது சாலை திருப்ப‌த்தில் வ‌ந்த‌ கார் அத்தையின் காலில் முட்டி, அத்தை இர‌ண்ட‌டி த‌ள்ளிப்போய் விழ‌, அதிர்ச்சியில் "அத்தே!!!" என்று க‌த்துவ‌தைத் த‌விர‌ வேறு என்ன‌ செய்ய‌வேண்டும் என்று என‌க்கு எதுவும் தோன்ற‌வில்லை. எல்லா மாங்காய்க‌ளையும் விசிறி அடித்தேன். காரை ஒட்டி வ‌ந்த‌வ‌னே அத்தையையும் என்னையும் காரில் ம‌ருத்துவ‌ம‌னைக்கு அழைத்துச் சென்றான். சிகிச்சை முடிந்த‌தும் என்னிட‌ம் முக‌வ‌ரி விசாரித்து எங்க‌ளை வீட்டுக்கு கூட்டிவ‌ந்தான்.

பின்புதான் தெரிந்த‌து, அவ‌ன் எங்க‌ள் எதிர் வீட்டில் இருப்பவ‌ர்க‌ளின் உற‌வின‌ன், விடுமுறைக்காக‌ எங்க‌ள் கிராம‌த்திற்கு வ‌ந்திருக்கிறான். ஒரு மாத‌ம் த‌ங்குவ‌தாக‌ உத்தேச‌மாம். அத்தையை டாக்ட‌ர் ப‌த்து நாள் வீட்டைவிட்டு வெளியே போக‌க்கூடாது என்று கூறியிருந்தார். இந்த‌ ப‌த்து நாட்க‌ளும் ஊரைச் சுற்றி பார்க்க‌ வ‌ந்த‌வ‌ன், என் அத்தையையே சுற்றிச் சுற்றி வ‌ந்தான். என‌க்கு அவ‌னை துளி கூட‌ பிடிக்க‌வில்லை.

அத்தையிட‌ம் சொன்னேன், "அத்தே, அந்தாளு ஏன் எப்ப‌வும் உங்கிட்டேயே வ‌ந்து பேசிட்டிருக்கான், என‌க்கு புடிக்க‌வேயில்ல‌ அவ‌ன‌. அவ‌ன் பேரு ம‌ணிக‌ண்ட‌னாம்...நான் அவ‌னுக்கு ச‌னிக‌ண்ட‌ன்னு பேர் வெச்சிருக்கேன்". சொல்லிவிட்டு சிரித்தேன்.

முத‌ன்முறையாக‌ அத்தையிட‌ம் ஒரு கோப‌ம் க‌ல‌ந்த‌ முறைப்பை பார்த்தேன். அந்த‌ முறைப்பையே என்னால் தாங்க‌முடிய‌வில்லை, அழுதுவிடுவேன் என்று தோன்றிய‌து. என்னைப் புரிந்துகொண்டவ‌ளாய், ச‌ட்டென்று ச‌ற்று புன்ன‌கையுட‌ன் சொன்ன‌ வார்த்தைக‌ள், "அப்ப‌டிலாம் பெரிய‌வ‌ங்க‌ள‌ சொல்ல‌க்கூடாதுடா. அவ‌ர‌ நீ ம‌ணி மாமான்னுதான் சொல்ல‌ணும். அவ‌ன் இவ‌ன்லாம் சொல்ல‌க்கூடாது".

காரில் வ‌ந்து காலில் முட்டிய‌வ‌ன், அதே காரில் கையை பிடித்து கூட்டிக்கொண்டுபோக‌த் த‌யாரானான். அவ‌னு(ரு)க்கும் அத்தைக்கும் இரு வீட்டாரின் ச‌ம்ம‌த‌த்துட‌ன் திரும‌ண‌ம் ந‌ட‌ந்த‌து. அத்தையை க‌ட்டிக்கொண்டு அழுதேன், அடித்தேன், கெஞ்சினேன், "என் கூட‌ இரு அத்தே, என்ன‌ விட்டுட்டு போவாத‌". அத்தையின் க‌ண்க‌ளில்.....................சொல்ல‌ வேண்டுமா என்ன‌?. கார் கிள‌ம்பிய‌து. அதுவ‌ரை அப்ப‌டி ஒரு பார‌த்தை என் ம‌ன‌து சும‌ந்த‌தில்லை. என்னால் அந்தப் பிரிவை ஏற்றுக்கொள்ள‌ முடிய‌வில்லை.

யாரிட‌மும் சொல்லாம‌ல் கோயிலுக்கு ஒடினேன். இர‌ண்டு ம‌ணி நேர‌ம், "புள்ளையாரே, என் அத்தே என‌க்கு வேணும்" என்று அழுதுகொண்டே ம‌னு போட்டுக்கொண்டிருந்தேன். அத‌ற்கும் ப‌ல‌ன் இருந்த‌து. மூன்று வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து, அத்தை திரும்ப‌வும் எங்க‌ள் வீட்டிற்கு வ‌ர‌ நேர்ந்த‌து, த‌ன் க‌ண‌வ‌னை விப‌த்தில் ப‌றிகொடுத்துவிட்டு.

அம்மாவிட‌ம், "த‌னம் இனிமே ந‌ம்மோட‌யே இருக்க‌ட்டுண்டி" என்றார் அப்பா. ஹைய்யா ஜாலி என்று என் ம‌ன‌து துள்ளினாலும், அத்தையை பார்ப்ப‌த‌ற்கு க‌ஷ்ட‌மாயிருந்த‌து. முக‌ம் வாடி, யாருட‌னும் பேசாம‌ல், த‌னி அறையிலேயே இருந்துகொண்டு...ஹுஹூம், இது என் அத்தையே இல்லை. லேசான புன்ன‌கையைப் பார்க்க‌வே ப‌ல‌ மாத‌ங்க‌ள் ஆன‌து. வாயாடி, பொம்பள‌ ர‌வுடி என்றெல்லாம் செல்ல‌மாய் அத்தையை கூப்பிட்டுக்கொண்டிருந்த‌ என் உற‌வின‌ர்க‌ள், இப்பொழுது இன்னொரு பெய‌ர் வைத்த‌ன‌ர். 'தாலி அறுத்த‌வ‌'. நாக‌ரிக‌மாக‌ சொல்வ‌தென்றால் 21 வ‌ய‌து இள‌ம் கைம்பெண்.

வ‌ருட‌ங்க‌ள் க‌ட‌ந்த‌ன‌. இப்பொழுது நான் சென்னை பொருளாதார‌த்தின் செல்ல‌ப்பிள்ளைக‌ளான‌ சாஃப்ட்வேர் இஞ்சினிய‌ர்க‌ளில் ஒருவன். அத்தை இப்பொழுது எங்க‌ள் ஊரிலேயே இருக்கும் ஒரு ப‌ள்ளியில் க‌ணித‌ ஆசிரியை. த‌மிழ் சினிமாவில் செண்டிமெண்ட் காட்சிக‌ளைப் பார்த்துவிட்டு ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் எவ்வ‌ள‌வோ கிண்ட‌ல‌டித்திருக்கிறேன். ஆனால் ஃபோனில் பேசும்போது, எந்த‌ குழ‌ந்தையை பார்த்தாலும், சுந்த‌ர‌த்தைப் பாக்குற‌ மாதிரியே இருக்குதுன்னு சொல்றாடா த‌ன‌ம் என்று அப்பா சொன்ன‌போது, ம‌ன‌து ஏனோ வ‌லித்த‌து, க‌ண்ணில் நீரும் எட்டிப்பார்த்த‌து.

28 வ‌ய‌தில், என்னுட‌ன் ப‌ணிபுரிந்த‌ சுதாவுட‌ன் காத‌ல் திரும‌ண‌ம். ஒரே வ‌ருட‌த்தில் மீராவை எனக்கு கொடுத்துவிட்டு, நிர‌ந்த‌ர‌ நித்திரையில் மூழ்கிவிட்டாள் என் ம‌னைவி.....

********************

"சுந்த‌ர‌ம்...சுந்த‌ர‌ம்..." அத்தையின் குர‌ல் என்னை எழுப்பிய‌து. க‌ண்க‌ளை க‌ச‌க்கிக்கொண்டே, எழுந்து ம‌ணி பார்த்தேன். விடிய‌ற்காலை 3:50.

"என்ன‌ அத்தே, தூங்க‌வேயில்லியா நீ?"

"நான் அலார‌ம் வெச்சு எழுந்துட்டேன், நீ என்ன‌ இன்னும் தூங்கிட்டிருக்க‌? ம‌ணி பார்...நாலு ஆக‌ப்போகுது. அஞ்ச‌ரை ம‌ணிக்கு நீ ரெடியா இருக்க‌ணும். மாப்பிள்ளையா ல‌ட்ச‌ண‌மா சீக்கிர‌ம் ரெடியாவியா? அத‌ விட்டுட்டு இன்னும் தூங்கிட்டிருக்க‌...மீராவை நான் ரெடி ப‌ண்றேன். நீ போய் உன் வேலையெல்லாம் பாரு...சீக்கிர‌ம்"

"ம்" என்ற‌வாறே எழுந்து அம‌ர்ந்தேன். என்னிட‌மிருந்து ஒரு "ம்" (இர‌ண்டாவ‌து திரும‌ண‌த்திற்கு ச‌ம்ம‌த‌ம்) வாங்க‌ அனைவ‌ரும் ப‌ல‌ மாத‌ங்க‌ளாக‌ ப‌டாத‌பாடுப‌ட்ட‌ன‌ர். அவ‌ர்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ மிக‌ப்பெரிய‌ ஆயுத‌ம், மீரா. அவ‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ ஒரு தாயின் பாச‌ம் தேவை என்று சொல்லி சொல்லியே என்னை ச‌ம்ம‌திக்க‌ வைத்த‌ன‌ர். நான்தான் பெண்ணை தேர்ந்தெடுப்பேன் என்று கூறிய‌த‌ற்கு எந்த‌வித‌ ம‌றுப்பும் இல்லை. பெண் தேடினேன். ப‌த்மா என‌க்கு பொருத்த‌மான‌வ‌ள் என்று தோன்றிய‌து. இதோ, இன்னும் சில‌ ம‌ணி நேர‌ங்க‌ளில், என் வாழ்வில் இர‌ண்டாம் முறையாக‌ தாலி க‌ட்ட‌ப்போகிறேன். நினைக்கும்போது ச‌ற்று கூச்ச‌மாக‌த்தான் இருக்கிற‌து.

கேட்க‌லாமா கூடாதா என்று யோசிக்கும் முன்ன‌ரே, மீராவைத் த‌ன் தோளில் போட்டுக்கொண்டிருந்த‌ அத்தையிட‌ம் கேட்டேன்.

"நீ ஏன் அத்தே இன்னொரு க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ல‌?"

இந்த‌ கேள்வியை அத்தை எதிர்பார்க்க‌வில்லை என்ப‌தை அத்தையின் க‌ண்க‌ளே காட்டிக்கொடுத்த‌து. ப்ச்..கேட்டிருக்க‌க்கூடாதோ? மிக‌ச்சிறிய‌ புன்ன‌கை ஒன்றை ம‌ட்டுமே ப‌திலாக‌க் கொடுத்துவிட்டு, மீராவுட‌ன் அத்தை அறையை விட்டு வெளியே சென்றுவிட‌, ம‌ண்ட‌ப‌த்தின் கூட‌த்தைவிட்டு வெளியே வ‌ந்தேன்.

வெளியேயிருந்த‌ ப‌ல‌கையில் R. SUNDARESAN B.E WEDS M. PADMA M.C.A என்று எழுத‌ப்ப‌ட்டிருந்த‌து. இர‌ண்டாம் திரும‌ண‌த்திற்காக‌ என்னை க‌ட்டாய‌ப்ப‌டுத்திய‌வ‌ர்க‌ள் (என் தாய்,த‌ந்தை உட்ப‌ட‌) ஏன் ஒரு பேச்சுக்குக்கூட‌ என் அத்தையிட‌ம் ம‌றும‌ண‌த்தைப் ப‌ற்றி கேட்க‌வில்லை. அத்தையும் ஒரு சாதார‌ண‌ ம‌னித‌ப்பிற‌விதானே...ம‌கிழ்ச்சியாயிருந்தால் அணைத்துக்கொள்ள‌, வ‌ருத்த‌மாயிருந்தால் தோளில் சாய்ந்துகொள்ள‌, சின்ன‌ச் சின்ன‌ ச‌ண்டைக‌ள் போட‌ என்று ப‌ல‌ ஆசைக‌ளும் உண‌ர்ச்சிக‌ளும் அத்தைக்கு இருந்திருக்குமே, அதை ஏன் யாரும் புரிந்துகொள்ள‌வில்லை?

இவ்ளோ சொல்றியே, நீ ம‌ட்டும் புரிஞ்சுகிட்டியா என்று நீங்க‌ள் கேட்ப‌து புரிகிற‌து. M. PADMA M.C.A 26 வ‌ய‌தான‌ இள‌ம் கைம்பெண்.

21 comments:

  1. வித்யாசமான கதை. முடிவு நெகிழ வைக்கிறது

    ReplyDelete
  2. தொடக்கத்தில் உண்மை நிகழ்வு என்று நினைத்தேன் !
    மிகவும் அருமை !
    அருமையான முடிவு . பகிர்வுக்கு நன்றி !
    தொடருங்கள் ...............

    ReplyDelete
  3. சூப்பரா கத விட்டுருக்கீங்க... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. நல்லாருந்துச்சுண்ணே...!

    ReplyDelete
  5. நல்ல முயற்சி ரகு. இன்னும் சுவாரசியம் வரணும் எழுத்துல. வரும்.

    ReplyDelete
  6. நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  7. என் முதல் வரவா? நடைமுறை வாழ்வின் அழகான் கதை . சற்று சுவை பட சொல்லுங்கள்.முடிவில் ஒரு திருப்பம் அருமை. மேலும் பல படைப்புக்கள் தர வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  8. ந‌ன்றி மோக‌ன்

    ந‌ன்றி ச‌ங்க‌ர்

    ReplyDelete
  9. ந‌ன்றி அண்ணாம‌லையான்

    வாங்க‌ ராஜு, ந‌ன்றிண்ணே

    ReplyDelete
  10. ந‌ன்றி விக்கி, க‌ண்டிப்பா முய‌ற்சி ப‌ண்றேன்

    ந‌ன்றி ந‌ர்சிம்

    ReplyDelete
  11. முத‌ல் வ‌ருகைக்கும், வாழ்த்துக‌ளுக்கும் ந‌ன்றி நிலாம‌தி

    ReplyDelete
  12. இந்த கதை ஏற்கனவே படித்தது என்றாலும் நெகிழ வைத்தது.

    இந்த கதையை 'ஜஸ்ட் லுக்'-இல் நீங்கள் எழுதியபோது, நம் ஆஃபீசில் அட்மின் டிபார்ட்மெண்டில் ஸ்ரீராம் (நினைவிருக்கிறதா ராமன் எஃபெக்ட் குறும்படத்தில் திரு.முத்தையா ஆசானாக நடித்தாரே..!) படித்துவிட்டு, என்னைக் கூப்பிட்டு யார் எழுதியது என்று கேட்டு பாராட்டினார்.

    -
    DREAMER

    ReplyDelete
  13. //வெளியேயிருந்த‌ ப‌ல‌கையில் R. SUNDARESAN B.E WEDS M. PADMA M.C.A என்று எழுத‌ப்ப‌ட்டிருந்த‌து. இர‌ண்டாம் திரும‌ண‌த்திற்காக‌ என்னை க‌ட்டாய‌ப்ப‌டுத்திய‌வ‌ர்க‌ள் (என் தாய்,த‌ந்தை உட்ப‌ட‌) ஏன் ஒரு பேச்சுக்குக்கூட‌ என் அத்தையிட‌ம் ம‌றும‌ண‌த்தைப் ப‌ற்றி கேட்க‌வில்லை. அத்தையும் ஒரு சாதார‌ண‌ ம‌னித‌ப்பிற‌விதானே...ம‌கிழ்ச்சியாயிருந்தால் அணைத்துக்கொள்ள‌, வ‌ருத்த‌மாயிருந்தால் தோளில் சாய்ந்துகொள்ள‌, சின்ன‌ச் சின்ன‌ ச‌ண்டைக‌ள் போட‌ என்று ப‌ல‌ ஆசைக‌ளும் உண‌ர்ச்சிக‌ளும் அத்தைக்கு இருந்திருக்குமே, அதை ஏன் யாரும் புரிந்துகொள்ள‌வில்லை?

    இவ்ளோ சொல்றியே, நீ ம‌ட்டும் புரிஞ்சுகிட்டியா என்று நீங்க‌ள் கேட்ப‌து புரிகிற‌து. M. PADMA M.C.A 26 வ‌ய‌தான‌ இள‌ம் கைம்பெண்.//


    இப்ப அப்படியெல்லாம் இல்லையே, கிராமங்கள் தவிர மற்ற இடங்களில் நல்ல மாற்றம் வந்துள்ளதே ?

    ReplyDelete
  14. ந‌ன்றி வித்யா

    பூங்கொத்துக்கு ந‌ன்றி அன்புட‌ன் அருணா :)

    ReplyDelete
  15. ந‌ன்றி ஹ‌ரீஷ், ஞாப‌க‌ம் இருக்கு, இனிமே ந‌டிக்க‌ மாட்டேன்னு சொன்ன‌ டாம் க்ரூஸாச்சே அவ‌ரு ;)

    மாற்ற‌ம் வ‌ந்திருந்தால் ம‌கிழ்ச்சி அமைச்ச‌ரே, அந்த‌ அத்தை கேர‌க்ட‌ர் போல‌ என் உற‌வின‌ர் ஒருவ‌ர் இருக்கிறார். அவ‌ரை வைத்து எழுதிய‌துதான் இந்த‌ க‌தை.

    ReplyDelete
  16. கதை எல்லாம் எழுதி கலக்குறீங்க ரகு:)
    Keep Writing!

    ReplyDelete
  17. உங்கள் ப்ளாக் அருமை. கதை நல்லாயிருக்கு.

    ReplyDelete
  18. ந‌ன்றி ப்ரியா

    ந‌ன்றி அஹ‌ம‌து இர்ஷாத்

    ந‌ன்றி இர‌சிகை

    ReplyDelete