Showing posts with label விருது. Show all posts
Showing posts with label விருது. Show all posts

Sunday, April 11, 2010

நான் ஒண்ணாங்கிளாஸ்தான்


என்னையும் ஆட்ட‌த்தில் சேர்த்துக்கொண்டு, ஒரு ர‌வுடியாக‌ ம‌தித்து சன்ஷைன் விருதை வ‌ழ‌ங்கியிருக்கின்ற‌ன‌ர் இரு ந‌ல்ல‌ ர‌வுடிக‌ள்..:) தோழி ப்ரியாவுக்கும், ந‌ண்ப‌ர் சைவ‌கொத்துப்ப‌ரோட்டாவுக்கும் மிக்க‌ ந‌ன்றி. அதென்ன‌ ச‌ன்ஷைன்? திமுக‌ தொட‌ர்ந்து இடைத்தேர்த‌ல்க‌ளில் வெற்றி பெறுவ‌தை குறிக்கிற‌தா? அல்ல‌து 'ச‌ம்ம‌ர் ஆர‌ம்பிச்சிடுச்சு, உஷாரா இருந்துக்கோ மாமு' என்ற‌ எச்ச‌ரிக்கையா? 'உன‌க்கு குடுக்க‌ற‌தே அதிக‌ம், இதுல‌ இப்ப‌டிலாம் குடைஞ்சினா, அவார்ட் வாப‌ஸ்' என்று அவ‌ர்க‌ள் எச்ச‌ரிக்கை விடுப்ப‌த‌ற்கு முன் கேள்விக‌ளை சாய்ஸில் விட்டுவிடும்ப‌டி க‌ன‌ம் அல்ல‌து லைட்டான‌ கோர்ட்டார் அவ‌ர்க‌ளை தாழ்மையுட‌ன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்விருதை அவ‌ர்க‌ளிட‌மிருந்து இப்பிடிக்கா வாங்கி இவ‌ர்க‌ளுக்கு அப்பிடிக்கா பாஸ் செய்கிறேன்.

வித்யா
விக்னேஷ்வ‌ரி
மோக‌ன்
கார்க்கி
ஜெட்லி
ராஜு

***********************************************************

க‌ல்லூரி இறுதியாண்டு ப‌டிக்கும்போது ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம் இது. பேருந்தில் ஃபுட்போர்டில் ப‌ய‌ணித்த‌ ஒருவ‌ன், ர‌ன்னிங்கில் இற‌ங்க‌ முய‌ற்சிக்கும்போது, கால் ஸ்லிப் ஆகி, விழுந்து உருண்டு புர‌ண்டு நான்கு அடி த‌ள்ளி போய் விழுந்தான். அவ‌ன் அதிர்ஷ்ட‌ம், அந்த‌ நேர‌ம் பின்னால் எந்த‌ வாக‌ன‌மும் வ‌ர‌வில்லை. ப‌ல‌மான‌ காய‌ம் ஏற்ப‌ட்ட‌தே த‌விர‌ உயிருக்கு எந்த‌ ஆப‌த்துமில்லை. இன்று பேருந்தில் ர‌ன்னிங்கில் ஏறுகிறேன், கூட்ட‌ம் அதிக‌மாக‌ இருக்கும்போது ஃபுட்போர்டில் ப‌ய‌ணிக்கிறேன். ஆனால் அந்த‌ ச‌ம்ப‌வ‌ம் என் ஆழ்ம‌ன‌தில் ப‌திந்துபோன‌தால், ர‌ன்னிங்கில் இற‌ங்குவ‌தென்றால் ம‌ட்டும், இன்னும் என‌க்கு பய‌ம்தான்.

சென்ற‌ வார‌ம் அலுவ‌ல‌க‌ம் முடிந்து இர‌வு 9:30 ம‌ணிக்கு வீட்டுக்கு பேருந்தில் வ‌ந்துகொண்டிருந்தேன். இர‌வு நேர‌மாத‌லால் வெறும் 15 முத‌ல் 20 ப‌ய‌ணிக‌ளே இருந்த‌ன‌ர் (M15 - மேட‌வாக்க‌ம் டூ மைலாப்பூர்). பேபி ந‌க‌ர் ஸ்டாப் அருகே போய்க்கொண்டிருக்கும்போது இற‌ங்குவ‌த‌ற்காக‌ ஃபுட்போர்டில் நின்றுகொண்டிருந்தேன். ஓட்டுன‌ர் வ‌ண்டியை கொஞ்ச‌ம் ஸ்லோவாக‌ ஓட்டினார். "சார் பேபி ந‌க‌ர் எற‌ங்க‌ணும்" என்றேன். திடீரென்று "அட‌ நிறுத்தி தொலைப்பா, எற‌ங்க‌ட்டும்" என்று கோப‌மான‌ குர‌ல், ந‌ட‌த்துன‌ரிட‌மிருந்து. ஓட்டுன‌ரிட‌ம் எரிச்ச‌லை காண்பித்த‌பின் அவ‌ருடைய‌ அடுத்த‌ டார்கெட் அடியேன். நான் இற‌ங்கிய‌வுட‌ன் என்னை பார்த்து "ஸ்லோ ப‌ண்ணா எற‌ங்க‌வேணாமா, மூணாங்கிளாஸ் பைய‌ன்கூட‌ எற‌ங்குவான்" என்று க‌த்தினார். பேருந்தில் இருந்த‌வ‌ர்க‌ளில் ப‌ல‌ரும் திரும்பி பார்க்க‌ கொஞ்ச‌ம் அவ‌மான‌மாக‌வே இருந்த‌து என‌க்கு. கூட‌வே உள்ளுக்குள் கோப‌மும் எட்டிப்பார்க்க‌, "நான் ஒண்ணாங்கிளாஸ்தான்" என்று ப‌திலுக்கு க‌த்தினேன். பேருந்து கிள‌ம்பிய‌தாலும், அவ‌ரின் வ‌ய‌தின் கார‌ண‌மாக‌வும், மேலும் வார்த்தைப்போரில் ஈடுப‌ட‌ நான் விரும்ப‌வில்லை.

உட‌ன் இற‌ங்கிய‌ ஒரு ந‌ப‌ர், "விடுங்க‌ சார், இவ‌னுங்க‌ என்னைக்கு ந‌ம்ம‌ள‌ ம‌திச்சிருக்கானுங்க‌, ர‌ன்னிங்க‌ல‌ நாம‌ எற‌ங்குனா, அதான் நிக்குதில்ல‌ அதுக்குள்ள‌ என்ன‌ அவ‌ச‌ர‌ம்னு க‌த்துவானுங்க‌. இல்ல‌னா, இப்ப‌டிதான் ____ மாதிரி ந‌ம்ம‌ மேல‌ ஏறுவானுங்க‌" என்றார். "ம்.." என்று சொல்வ‌தை த‌விர‌ என‌க்கு அப்போது வேறு வார்த்தைக‌ள் கிடைக்க‌வில்லை. ஏன் இப்ப‌டி ப‌ல‌ பேர் முன்னிலையில் என்னை திட்ட‌வேண்டும்? பேருந்து நின்ற‌வுட‌ன் இற‌ங்க‌லாம் என்று நான் நினைத்த‌து குற்ற‌மா? எத்த‌னையோ முறை 5.50 டிக்கெட்டுக்கு 6 ரூபாய் வாங்கிவிட்டு "சில்ல‌றை இல்ல‌" என்று சொல்லும்போது எதுவுமே எதிர்த்து பேசாம‌ல் அமைதியாய் இருந்திருக்கிறேன். வெறும் 50 பைசாவாக‌ இருந்தாலும் அது என்னுடைய‌ காசு. எப்போதும் Aggressiveஆ இருக்க‌ணும் இல்ல‌ன்னா நாம எப்ப‌வும் ஏமாந்துகிட்டு இருக்க‌வேண்டிய‌துதான் என்று ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் சொல்வேன். ஆனால் ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ளின் அறிவுரைப்ப‌டி இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ கொஞ்ச‌ம் சாந்த‌மாக‌ மாறியிருக்கிறேன். இந்த‌ நட‌த்துன‌ர் என்னை ட்ரீட் செய்த‌ வித‌த்தால் அன்று இர‌வு வீட்டுக்கு வ‌ந்த‌வுட‌ன் தோன்றிய‌து, Aggressiveஆ இருந்தாத்தான் வேலைக்காவும் போல‌.....

***********************************************************

தூத்துக்குடியில் த‌ம‌ன்னாவுக்கு ரசிக‌ர் ம‌ன்ற‌ம் ஆர‌ம்பித்து, பையா ப‌ட‌ ரிலீஸின்போது க‌ட்அவுட் வைத்து, பாலாபிஷேக‌ம் எல்லாம் செய்திருக்கின்ற‌ன‌ர். ஒரு ந‌டிக‌ரை/ந‌டிகையை இர‌ண்ட‌ரை ம‌ணி நேர‌ம் ர‌சிக்கிறோம். அவ்வ‌ள‌வுதான் நாம் அவ‌ர்க‌ளுக்காக‌ செய்ய‌வேண்டிய‌து. இப்ப‌டி பாலை கொட்டி அதை வீணாக்குவ‌த‌ற்கு ப‌தில், குழ‌ந்தைக‌ள் காப்ப‌க‌த்திற்கு சென்று அவ‌ர்க‌ளுக்கு மூன்று வேளை உண‌விற்கு ஏற்பாடு செய்திருந்தால் க‌ண்டிப்பாக‌ பாராட்ட‌லாம். அதை செய்யாம‌ல், இதுபோன்ற‌ முட்டாள்த‌ன‌மான‌ ந‌டவ‌டிக்கையில் ஈடுப‌டுப‌வ‌ர்க‌ளை என்னென்று சொல்ல‌?

ஒரு ந‌ல்ல‌ விஷ‌ய‌ம், "க‌ட‌வுளுக்கு செய்யும் பாலாபிஷேக‌த்திற்கு இணையாக‌ என் க‌ட்அவுட்டுக்கு பாலாபிஷேக‌ம் செய்வ‌தில் என‌க்கு உட‌ன்பாடில்லை" என்று த‌ம‌ன்னாவே இதை டிஸ்க‌ரேஜ் செய்திருக்கிறார். ச்சே, குழ‌ந்தைக்கு என்ன ஒரு ந‌ல்ல‌ ம‌ன‌சு!...:)

ஒரு போட்டி: இதுவ‌ரை இந்த‌ வ‌லைப்பூவில் எத்த‌னை முறை த‌ம‌ன்னாவின் புகைப்பட‌ம் இட‌ம்பெற்றுள்ள‌து என்ப‌தை க‌ண்டுபிடித்து, ப‌திலை மெயிலில் அனுப்பினால் ஒரு த‌ம‌ன்னா புகைப்பட‌ம் ப‌ரிசாக‌ அனுப்ப‌ப்ப‌டும் ;)

***********************************************************

இலங்கையில் 3 லட்சம் அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவித்தவர் ராஜபக்ச. அவரது ஆதரவாளரான கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியில் இடம் பெற்றிருந்தார்.

‌இ‌ந்‌நிலை‌யி‌ல், அவர் சென்னையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் விளையாடினால் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என அறிவித்திருந்தேன். அதன்படி தொண்டர்களுடன் நேற்று முன்தினம் விமான நிலையத்திற்குச் சென்றோம்.

ஆனால் திட்டமிட்டபடி வராமல் முன்கூட்டியே காலை 8.45 மணிக்கு விமானத்தில் சென்னை வந்துவிட்டார் ஜெயசூர்யா. ஆனா‌ல், நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் அவர் விளையாடவில்லை. இது புதிய தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த வெற்றி
என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

அர‌சிய‌ல் செய்திக‌ளில் ஆர்வ‌ம் ஏற்ப‌ட்ட‌ புதிதில் என‌க்கு இவ‌ர் வித்தியாச‌மாக‌ தெரிந்தார். த‌மிழ‌க‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் என்றால் எப்போதும் வேட்டி ச‌ட்டையிலேயே இருப்பார்க‌ள் என்ற‌ பிம்ப‌ம் இவ‌ரை பார்த்த‌போது மாறிப்போன‌து. ஆனால் ஜாதியை ம‌ட்டுமே ந‌ம்பி, நானும் ஒரு ச‌ராச‌ரி அர‌சிய‌ல்வாதிதான் என்று சொல்லாம‌ல் சொல்லி செல்லாக்காசாகி போனார். ச‌ண்டிய‌ரை விருமாண்டியாக்கிய‌து கின்ன‌ஸ் புத்த‌க‌த்தில் ப‌திக்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ இவ‌ர‌து சாத‌னைக‌ளில் ஒன்று. இது போதாதென்று இப்போது இந்த‌ 'ஜெய‌சூர்யா' அறிக்கை விட்டு, சுப்பிர‌ம‌ணிய‌ சாமிக்கு நான் எந்த‌வித‌த்திலும் குறைந்த‌வ‌ன‌ல்ல‌ என்று காமெடி பீஸாகியிருக்கிறார். எ.கொ.கி.சாமி இது?!

***********************************************************

அடிக்க‌டி தூக்க‌த்தில், குறிப்பாக‌ விடிய‌ற்காலையில், ப‌திவில் எழுத‌ வேண்டும் என்று ம‌ன‌தில் ஏதேதோ எண்ண‌ங்க‌ள் அலைபாய்கிற‌து. சென்ற‌ வார‌த்தில் ஒரு நாள், ஒரு க‌தையே தோன்றிய‌து. எப்ப‌டி ஆர‌ம்பிக்க‌ வேண்டும், என்னென்ன‌ கேர‌க்ட‌ர்க‌ள், க‌தையில் வ‌ரும் க‌ண‌வ‌ன் ம‌னைவி ஆகியோரின் பெய‌ர்க‌ள்‌, க‌தை நட‌க்கும் நேர‌ம் என்ன‌, காலையா மாலையா, எப்ப‌டி முடிக்க‌ வேண்டும் என்ப‌து வ‌ரை எல்லாமே. சோம்ப‌லா, ட‌ய‌ர்ட்ன‌ஸ்ஸா..எதுவென்று தெரிய‌வில்லை, அந்த‌ ச‌ம‌ய‌த்தில் எழுந்து இதையெல்லாம் குறித்துக்கொள்ள‌ விருப்ப‌ம் இல்லாம‌ல் (பாதி தூக்க‌த்தில்) இருந்தேன். ஆனால் காலையில் எழுந்த‌வுட‌ன் நிறைய‌ ம‌ற‌ந்துபோய் க‌தைக்க‌ரு ம‌ட்டும் ஞாப‌க‌ம் இருந்த‌து.

இது எல்லோருக்கும் ந‌ட‌க்கிற‌தா அல்ல‌து நான் ப்ளாகோமேனியா பிடித்து அலைகிறேனா என்ப‌து தெரிய‌வில்லை. ப்ளாக‌ராண்ட‌வா, இன்னும் என்னை எப்ப‌டிலாம் சோதிக்க‌ப்போறீயோ தெரிய‌ல‌!

***********************************************************

தோழியுட‌ன் பேசிக்கொண்டிருந்த‌போது சொன்னேன், "வார‌த்துல‌ செவ்வாய், புத‌ன், வியாழ‌க்கிழ‌மைக‌ளை டெலிட் செஞ்சுட்டா எப்ப‌டியிருக்கும் இல்ல‌?". திங்க‌ள் கிழ‌மை வேலை, ம‌றுநாள் வெள்ளிக்கிழ‌மை கொஞ்ச‌ம் வேலை..அடுத்து வீக் எண்ட் ரெஸ்ட். வாவ் எப்ப‌டி இருக்கும்?! ஆனால் அந்த‌ சைடிலிருந்து பாஸிட்டிவ்வாக‌ ப‌தில் இல்லை. "கிரியேட்டிவ்வா திங்க் ப‌ண்றேனே, பாராட்டுனா என்ன‌வாம்?" என்றேன். இந்த‌ முறை வ‌ந்த‌து...பாராட்டு அல்ல‌, ப‌தில் "இதுக்கு பேரு கிரியேட்டிவ் அல்ல‌, கிறுக்கேட்டிவ்". ம்...என்ன‌ ப‌ண்ற‌து, சென்னைல‌ வெயில் அதிக‌ம்!

***********************************************************

நேற்று காலை சுமார் 11 ம‌ணி இருக்கும். சைக்கிளில் ஒருவ‌ர் இள‌நீர் விற்றுக்கொண்டிருந்தார். காலில் செருப்பு கூட‌ இல்லாம‌ல். ஒரு இள‌நீர் குடித்த‌பின்தான் அதனை க‌வ‌னித்தேன். இன்னொன்று வெட்ட‌ சொல்லிய‌பின், அவ‌ரிட‌ம் கேட்டேன், 'ஏன் இந்த‌ வெயில்ல‌ செருப்பு கூட‌ போடாம‌ இருக்கீங்க‌?'. வெறும் புன்ன‌கையை ம‌ட்டுமே ப‌திலாக‌த் த‌ந்தார். அடுத்த‌ இள‌நீரையும் குமுக்கிவிட்டு காசு கொடுத்த‌பின் சொன்னேன், 'முத‌ல்ல‌ செருப்பு வாங்கி போட்டுகிட்டு வேலை செய்ங்க‌'. பாக்கி சில்ல‌றையுட‌ன், மீண்டும் புன்ன‌கையையே ப‌திலாக‌ அளித்தார். ஏனோ ம‌ன‌து கொஞ்ச‌ம் க‌ன‌த்து போன‌து...:(