Tuesday, August 16, 2011

ம‌ங்காத்தா - ம‌ச்சி ஓப்ப‌ன் த‌ பாட்டில்!

நான் பெரும்பாலும் ப‌ட‌த்தின் இய‌க்குன‌ரை பொறுத்துதான் ப‌ட‌ம் பார்க்க‌லாமா வேண்டாமா என்ப‌தை முடிவு செய்வேன். சும்மா சீனுக்காக‌ சொல்லவில்லை. என்னை பொறுத்த‌வ‌ரை த‌லைவ‌ர் (ஸ்க்ரீனில் ம‌ட்டும்) என்றால் அது சூப்ப‌ர் ஸ்டார்தான்.

என் த‌ம்பி அஜித் ர‌சிக‌ன். ப‌ட‌ ரிலீஸ‌ன்று கொடி க‌ட்டி க‌ட் அவுட் வைக்கும் அள‌வுக்கு போக‌வில்லையே த‌விர‌ ஜ‌னா, ஆஞ்ச‌னேயா, ஆழ்வார் முத‌ற்கொண்டு அஜித் எவ்வ‌ள‌வு அடித்தாலும் தாங்கும் வ‌ல்ல‌மை கொண்ட‌வ‌ன்.

வீட்டிலுள்ள‌ க‌ணிணியில் ம‌ங்காத்தா பாட‌ல்க‌ளை ட‌வுண்லோட் செய்துவைத்திருந்தான். 'டே செல்லப்பா என்ன‌மோ சினிமா எடுக்க‌ப்போறேன் சினிமா எடுக்க‌ப்போறேன்னு சுத்த‌றியே, அந்த‌ க‌தைய‌தான் சொல்லேன்' என்று ஒரு அல‌ட்சிய‌ தொனியில் பாலையா கேட்பாரே, அதே தொனியில்தான் பாட‌ல்க‌ளை கேட்க‌ ஆர‌ம்பித்தேன்.

ச‌ரி எந்த‌ பில்ட‌ப்பும் வேண்டாம். மொத்த‌ம் நான்கு பாட‌ல்க‌ள் ப்ள‌ஸ் ஒரு தீம் ம்யூசிக். மீண்டும் மீண்டும் மொத்த‌ம் மூன்று முறை கேட்டேன். க‌டைசியில் மிக‌வும் பிடித்துப் போன‌து, ச‌த்திய‌மாக‌ தீம் ம்யூசிக்தான்.

என‌க்கு எப்போதும் ஒரு ப‌ட‌த்தின் தீம் ம்யூசிக்தான் ஃபேவ‌ரைட். அதை கேட்கும்போதே ப‌ட‌த்தின் மூட் ந‌ம‌க்கு செட்டாக‌வேண்டும். அப்ப‌டி ஆகிவிட்டால், க‌ண்டிப்பாக‌ அந்த‌ ம்யூசிக் ஹிட்தான். இன்ற‌ள‌விலும், எத்த‌னை முறை கேட்டாலும் ச‌லிக்காம‌ல் இருப்ப‌து 'மிஷ‌ன் இம்பாஸிபிள்' தீம் ம்யூசிக்தான்.




யுவ‌னின் 7ஜி ரெய்ன்போ கால‌னி தீம் ம்யூசிக் கேட்டிருப்பீர்க‌ள். கொஞ்ச‌ம் காத‌ல், கொஞ்ச‌ம் சோக‌ம், கொஞ்ச‌ம் உற்சாக‌ம், கொஞ்ச‌ம் நெகிழ்வு என்று அள்ளி கொடுத்திருப்பார். என‌க்கென்ன‌வோ 7ஜிக்கு பிற‌கு ம‌ங்காத்தா தீம் ம்யூசிக்தான் பெஸ்ட் என்று தோன்றுகிற‌து.

முத‌ன்முறை கேட்கும்போதே ம‌ன‌ம் ஒரு த்ரில்ல‌ர் மூடுக்கு போய்விடுகிற‌து. இன்று ம‌ட்டும் கிட்ட‌த‌ட்ட‌ ப‌தினைன்து முறைக்கு மேல் கேட்டிருப்பேன். துளியும் ச‌லிக்க‌வில்லை.




தீம் ம்யூசிக்கிற்கு அடுத்த‌து, பாட‌ல்க‌ள் கேட்கையில், முத‌ன் முறை கேட்ட‌வுட‌ன் பிடித்த‌து, 'ம‌ச்சி, ஓப்ப‌ன் த‌ பாட்டில்'தான். யுவ‌ன்-வெங்க‌ட்பிர‌புவின் அடுத்த‌ 'ச‌ரோஜா சாமான் நிகாலோ'. ப‌ட‌ம் ரிலீஸான‌வுட‌ன், இந்த‌ பாட‌லை இசை சேன‌ல்க‌ளில் த‌ம‌க்கு பிடித்த‌மான‌வ‌ர்க‌ளுக்கு டெடிகேட் செய்ய‌ ந‌ம் ம‌க்க‌ள் ஆவ‌லோடு காத்துக்கொண்டிருப்ப‌ர்.

ப்ரேம்ஜியின் குர‌லில் 'ம‌ச்சி ஓப்ப‌ன் த‌ பாட்டில்' என்று ஆர‌ம்பிக்கும் உற்சாக‌ம், பாட‌ல் முடியும்வ‌ரை துளியும் குறையாதிருக்கிற‌து. வெகு நாட்க‌ளுக்குப்பின் ம‌னோ குர‌லை கேட்ப‌து இனிமை. 'ராம‌ன் ஆண்டாலும் ராவ‌ண‌ன் ஆண்டாலும் என‌க்கொரு க‌வ‌லையில்லே' என்ற‌ வ‌ரிக‌ளை சேர்த்திருப்ப‌து த‌யாரிப்பாள‌ருக்குத் தெரியுமா? ஆனாலும் வெங்க‌ட்பிர‌புவுக்கு குசும்பு ஜாஸ்திதான் :)

'விளையாடு ம‌ங்காத்தா'வை முத‌லில் ர‌சித்த‌ அள‌வு இப்போது ர‌சிக்க‌முடிய‌வில்லை. அந்த‌ இட‌த்தை தீம் ம்யூசிக் பறித்துவிட்ட‌து. 'இது எங்க‌ ப‌ல்லேல‌க்கா'வும், 'வாடா பின்லேடா'வும் இன்னும் அவ்வ‌ள‌வாக‌ ஈர்க்க‌வில்லை. கொஞ்ச‌ம் த‌னுஷ் டைப் பாட‌ல்க‌ளாக‌ இருக்கின்ற‌ன‌. இன்னும் சில‌ முறை கேட்க‌வேண்டும்.

Saturday, August 13, 2011

ப்ளாஸ்டிக் கவர்களுக்கு மாற்று வழி இல்லையா?

சமீபத்தில் ‘மோர்’ சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றிருந்தேன். எல்லா பொருள்களும் வாங்கியபின் பில் போடுகையில், அந்த பெண் கேட்டார், “பை கொண்டுவந்திருக்கீங்களா?”

எனக்கு சட்டென புரியவில்லை, எப்போதும் கேட்காதவர் ஏன் இப்போது கேட்கிறார்? “இல்லை” என்றேன்.

“கவருக்கு எக்ஸ்ட்ரா சார்ஜ், ரெண்டு ரூபா சார்”

“ஏன்?”

“கவர்ன்மெண்ட் ப்ளாஸ்டிக் கவர்லாம் பேன் பண்ணியிருக்காங்க சார், நீங்க வீட்டுலர்ந்து கவர் எடுத்துட்டு வரலாம் இல்ல எங்ககிட்ட வாங்கினீங்கன்னா கவருக்கு சார்ஜ் போட்டு கொடுத்துடுவோம்”




ஏதோ கவுன்டர் அட்டாக் கொடுப்பதாக நினைத்து ”அப்படின்னா கவர் சார்ஜையும் பில்லில் போட்டுக்குடுங்க” என்றேன். அப்படியே பில் போட்டு கொடுத்துவிட்டாலும், நுகர்வோர் நீதி மன்றத்தில் முதலில் வழக்கு ஒன்றை தொடுத்துவிட்டுதான் மறு வேலை பார்ப்பது போல.

சிறிதும் தயக்கமின்றி அவரும் பில்லில் கவர் சார்ஜை போட்டுத்தந்தார். வேறேதும் பேசாமல் வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன்.

இது என்ன லாஜிக் என்றே தெரியவில்லை. ப்ளாஸ்டிக் கவர்களை தடை செய்வது சுற்றுப்புறச்சூழலுக்கு ரொம்ப நல்ல விஷயம்தான். ஆனால் அதற்கு ஒரு மாற்று வழி ஒன்றை முறைப்படுத்தாமல் எப்படி இதை அமல்படுத்துகிறார்கள் என்றே தெரியவில்லை.

அரசாங்கத்தை நொந்துகொள்வதா அல்லது வாய்க்கு வந்தபடி திட்டுவதா? ஓரிரு பொருட்கள் வாங்கும்போது சரி, வீட்டிலிருந்து ஏதேனும் ஒரு பையை எடுத்துக்கொண்டு போகலாம். வேறு வேறு கடைகளுக்குச் சென்று பல பொருள்கள் வாங்கும்போது, நாமென்ன கோணிப்பையையா தூக்கிக்கொண்டு போகமுடியும்?

ப்ளாஸ்டிக்கை தடை செய்தபின் அதற்கு மாற்றாக விற்பனையாளர்கள்தானே நுகர்வோருக்கு வேறு ஏதேனும் ஒன்றை ஈடுசெய்ய வேண்டும். அதை செய்யாமல் ஏன் நம் மீது திணிக்கிறார்கள்? ம்ம்...என்ன கத்தினாலும் ஒன்றும் மாறிவிடப்போவதில்லை. சலித்துப்போகும் வரை புலம்பவேண்டியதுதான்.


Thursday, June 23, 2011

சீரியல்.......கில்லர்தான் இப்பொழுதும்

ஆசை ஆசையாக ஒரு எல்சிடி டிவி வாங்கி ஆறு மாதம் ஆகிறது. முன்பே சொன்னதுபோல் சத்தியமாக சச்சினுக்காகத்தான் வாங்கினோம். எனவே உலகக்கோப்பையை இந்தியா வென்றதில் மிகுந்த மகிழ்ச்சியே.


உலகக் கோப்பைக்கு பின்புதான் மற்ற சேனல்களை கொஞ்சம் கொஞ்சமாக பார்க்க ஆரம்பித்தேன். ஒரு வார காலத்தில் ஐபிஎல் ஆரம்பித்தாலும், மனம் பெரிதளவில் அதில் லயிக்கவில்லை. எல்லா சேனல்களிலும் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் பெரிய தலைவலி. ஆடுவதும், பாடுவதும், அதற்கு நாட்டாமைகள் மூவர் தீர்ப்பு சொல்வதும் ஒருவித எரிச்சலையே தருகிறது. ஒரு சில வாரங்கள் மட்டுமே ’நீயா நானா’ கோபி ஈர்க்கிறார். மற்ற சமயங்களில் மரண மொக்கை. சிவகார்த்திகேயனின் ‘அது இது எது’வுக்கும் இது பொருந்தும்.

ஹிந்தி நியூஸ் சேனல்கள் பற்றி ஏற்கனவே அறிந்ததுதான். இருந்தாலும் எப்படி ஒன்றுக்கும் உதவாத செய்திகளையெல்லாம் ஓவர் நைட்டில் சென்சேஷன் ஆக்குகிறார்கள் என்றே தெரியவில்லை. அதுவும் ராஜ்தீப் சர்தேசாய்...ம்ம் ஒன்றும் சொல்வதற்கில்லை. தமிழில் பரவாயில்லை, சன் நியூஸையும், ஜெயாவையும் பார்ப்பது மிகுந்த ஆனந்தத்தையே தருகிறது. ஒருவரை ஒருவர் எவ்வளவு அழகாக மானத்தை வாங்குகிறார்கள். கீப் இட் அப் கைஸ்!

ஆங்கில படங்கள் பக்கம் போனால், இப்போதைக்கு ஸ்டார் மூவிஸ், ஹெச்பீஓ, சோனி பிக்ஸ், ஸீ ஸ்டுடியோ, யூடிவி வேர்ல்ட் மூவிஸ் ஆகிய சேனல்களை சப்ஸ்க்ரைப் செய்திருக்கிறேன். மூவிஸ் நவ் எப்படியிருக்கிறதென்று தெரியவில்லை. இவற்றில் தினமும் படம் பார்க்க முடியவில்லை என்றாலும், ஞாயிறுகளிலாவது ஏதேனும் ஒரு படம் முழுதாய் பார்க்கமுடிகிறது. வாரயிறுதிகளில் மட்டும் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக்கொண்டு நல்ல நல்ல படங்களை ஒளிபரப்புகிறார்கள். 

திரைப்படங்கள் ஒளிபரப்புவதில் நிஜமாகவே அசத்துபவர்கள் ஹிந்தி சேனல்கள்தான். வெளியான சில நாட்களிலேயே, எவ்வளவு சூப்பர் ஹிட்டாக இருந்தாலும், ஏதேனும் ஒரு சேனலில் ஹிந்தி படங்கள் ரிலீஸாகிவிடுகின்றன. கஜினி, டபங், பேண்ட் பாஜா பாராத், கோல்மால் 3 என ஹிட்டான படங்களையும் சீக்கிரம் சின்னத்திரையில் பார்ப்பது ஆச்சரியத்தையே தருகின்றன. நம்மாட்கள்தான் விசேஷ நாட்களில் மட்டும், இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக வெளியிடுகின்றனர். 

சில வருடங்கள் முன்பு எந்த நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தாலும், விளம்பரங்கள் வந்துவிட்டால் சேனலை மாற்றிவிடுவேன். விளம்பரங்களைப் பார்ப்பதற்கா ரிமோட் வைத்திருக்கிறோம் எனத் தோன்றும். ஆனால் இப்போதெல்லாம் விளம்பரங்கள்தான் தொலைக்காட்சி அனுபவத்தை சுவாரஸ்யப்படுத்துகின்றன. நிறைய பேர் க்ரியேட்டிவிட்டியில் பின்னி எடுக்கிறார்கள்.



டெய்ரி மிலக் - ‘எங்கிட்ட எப்ப கடைசியா ஐ லவ் யூ சொன்ன’ என்று கேட்கும் மனைவியிடம், கணவன் முதலில் கொஞ்சம் தயங்கி டெய்ரி மில்க் கொடுத்துவிட்டு ‘இதோ இப்போ’ என சொல்லும் விளம்பரம். இந்த விளம்பரத்தில், அலட்டிக்கொள்ளாத கணவனும், கடைசியில் அசத்தலான ரியாக்‌ஷன் காட்டும் மனைவியும், மனதை அள்ளுகின்றனர். இசையும் ரசிக்கும்படி இருந்தது.

இப்போது யோசிக்கையில் எதற்கான விளம்பரம் என்று நினைவுக்கு வரவில்லை. ஒரு முகமூடித் திருடன் வங்கியை கொள்ளையடித்துக்கொண்டு போனபின், வயதான பெண்மணியொருவர் ‘செக்யூரிட்டீஈஈஈஈ’ என கத்த, முகமூடி திருடனே வந்து சலாம் போட்டு நிற்பார். திரைப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சி போல் இவ்விளம்பரம் அமைந்திருந்தது அருமை.

முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், ரன்பீர் கபூரின் ரியாக்‌ஷன்ஸ் அசத்தலாய் இருக்கிறது டோகோமோ விளம்பரத்தில். ரன்பீரை தவிர பெரியளவு பொருட்செலவு செய்யாமல் எடுத்திருக்கின்றனர். அவர்களுடைய பாஸ் சொல்லியிருப்பார் போல, ‘கீப் இட் சிம்பிள் ஸில்லி’ என்று. 

அறிமுகமான புதிதில் இருந்த சுவாரஸ்யம் இப்போது அவ்வளவாய் ஜுஜூ விளம்பரங்களில் இருப்பதில்லை, மூன்று பேருடன் டேபிள் டென்னிஸ் ஆடும் விளம்பரம் தவிர்த்து. இவ்விளம்பரத்தைப் பார்த்தபோது, கை தொடாமல் முறைத்து பார்த்தே ஒரு ரயிலை பின்னோக்கி ஓடச்செய்யும் பாலகிருஷ்ணா நினைவுக்கு வந்தார். ஜுஜு விளம்பரங்களுக்கு இசையும் மிகப்பெரிய பலம்.





சீரியல்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. பள்ளி நாட்களில்தான் சித்தி, அலைகள், மர்மதேசம் என ஒரு சில சீரியல்களைத் தொடர்ந்து பார்த்திருக்கிறேன். இப்போது மறுஒளிபரப்பு செய்தால்கூட மர்மதேசம் கதைகளை ஆர்வமாக உட்கார்ந்து பார்ப்பேன்.

யதேச்சையாய் ஒரு நாள் மதியம் அலுவலகம் கிளம்புவதற்கு முன் சேனல்களை மாற்றிக்கொண்டிருக்கும்போது, ஏதோவொரு சீரியலில் ‘அலைகள்’ துர்காவைக் காண நேர்ந்தது. அழகு! சில வருடங்களுக்கு முன் பார்த்த ‘அலைகள்’ துர்காவாகவே இன்னமும் இருக்கிறார். என் நினைவு சரியெனில், அப்போதே எஸ்பி சரண் நடித்த ஒரு சீரியலில் வில்லியாகவும் நடித்திருக்கிறார். இந்த பச்சிளங்குழந்தையைப் போய் அழுமூஞ்சி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க எப்படித்தான் இயக்குனருக்கு மனது வருகிறதோ!

சரி துர்காவுக்காக பார்க்கலாம் என முடிவு செய்து அந்த சீரியலைப் பார்த்தால்......ஒரு நாள் துர்கா குடும்பத்தைப் பற்றி காட்சி வந்தால் அடுத்த நான்கு நாட்கள் வேறு சில குடும்பங்களை நோக்கி காட்சி நகர்கிறது.

  • ‘அவளை நான் பழி வாங்காம விடமாட்டேன்’ என கண்ணை உருட்டுகிறார் ஒரு பெண்மணி.

    •  ‘சொத்தை பிரிச்சே ஆகணும்’ என்கிறார் குடும்பத்தின் மூத்த மகன்.

      • ‘எங்கப்பா மேலயா கை வெச்ச, உன்னை கொல்லாம விட மாட்டேண்டா’ என காவல் நிலையம் முன்பே வில்லனை மிரட்டுகிறார் ஒருவர்.

        •  ’எங்க அண்ணனை ஏமாத்துன இல்ல, அதான் நான் உன்னை ஏமாத்தி எங்கண்ணனுக்கு வர வேண்டிய பணத்தை வாங்கிட்டேன்’ என்கிறார் தம்பி. 

          • வீட்டு வெளியே ஒருவர் வந்து, ‘டேய் வெளியே வாடா எங்க ஒளிஞ்சிருக்க’ என்று சத்தம் போட, உள்ளேயிருந்து அமைதியாய் ஒரு பெண் வந்து கூலாக சொல்கிறார், ‘எங்கண்ணண் வீட்ல இல்ல, என் புருஷன் மேல கம்ப்ளைண்ட் குடுக்க போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிருக்கார்’. 


          ப்பா சாமி......முடியல!


          Tuesday, May 31, 2011

          விபரீதக் கோட்பாடு & ஓடாதே! – சுஜாதா

          ஒவ்வொரு வருடமும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களில், பாதியையாவது மூன்று நான்கு மாதங்களுக்குள் வாசித்துவிடுவேன். ஆனால் இம்முறை நிலைமை தலைகீழ். பல காரணங்களால் புத்தகங்கள் பக்கம் எட்டிக்கூட பார்க்க வாய்ப்பிலாமல், சில சமயம் விருப்பமில்லாமல் இருந்தது.

          சில நாட்கள் முன்பு வாரயிறுதியில் ஊருக்குச் சென்றிருந்தபோது, அங்கு வழக்கம்போல் காலை 11 மணிக்கு மின்சார வாரியம் ஞாயிறென்றும் பாராமல் தன் கடமையில் இறங்கியது. போதாதற்கு சூரிய பகவானும் ஆஸ்ட்ரேலியாவை எதிர்த்தாடும் சச்சினைப் போல் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார். எனவே வெளியே செல்லவும் விருப்பமில்லை. பிறகுதான் இவ்வருடம் வாங்கிய புத்தகங்களின் ஞாபகம் வந்தது.

          அலமாரியில் பல புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தாலும், கண்ணும், கையும் முதலில் நோக்கிச் சென்றது சுஜாதாவை நோக்கித்தான். உண்மையெனினும் ’வழக்கம் போல்’ என்ற சொற்றொடர் முந்தைய வரிக்கு அவசியமில்லாதது. இரு புத்தகங்களை எடுத்தேன். விபரீதக் கோட்பாடு & ஓடாதே.

          இவ்விரண்டு புத்தகங்களும் கிழக்கு பதிப்பக வெளியீடு. எழுத்துப்பிழையெல்லாம் இல்லாமல், தரமான காகிதத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இது ஒன்று போதும் சுஜாதாவை கெளரவப்படுத்த. சென்ற வருடம் வேறொரு பதிப்பகத்தில் வாங்கிய புத்தகத்தில் அவரது எழுத்தை உயிருடன் போஸ்ட்மார்ட்டம் செய்திருந்தார்கள். அவர் வாசித்திருந்தால் ஆங்கிலத்தில் அர்ச்சனை செய்திருப்பார்.


          விபரீதக் கோட்பாடு

          சுஜாதாவின் எழுத்தை நிறைய (சு)வாசித்தவர்கள் இக்கதையில் யார் குற்றவாளியென முதல் நான்கைந்து பக்கங்களிலேயே யூகித்துவிடுவார்கள். ஆனால் மூட நம்பிக்கையை மையமாக வைத்து த்ரில்லராய் கதையை நகர்த்தியிருக்கும் விதம் அட்டகாசம்! கணேஷ் வஸந்திற்காகவே வாசிக்கலாம். இப்போது யோசித்துபார்க்கையில் கண்டிப்பாக இது சுஜாதாவின் பெஸ்ட் அல்ல என்றுதான் தோன்றுகிறது. என்றாலும் தவிர்க்கக்கூடிய கதையும் அல்ல.

          ஓடாதே!

          ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முன் எழுதிய கதை. இப்புத்தகத்தின் முன்னுரையில், நிறைய இயக்குனர்கள் இக்கதையை திரைப்படமாக கெடுப்பதற்கு..ஸாரி...எடுப்பதற்கு தன்னை அணுகியதாகக் குறிப்பிட்டுள்ளார் சுஜாதா. அதுவும் ஒரு வேண்டுகோளுடன். பாழாய்ப் போகாத செண்டிமெண்ட் காரணமாக, தலைப்பை மட்டும் மாற்றவேண்டும் என்றார்களாம். ஆனால் இந்த ‘ராஜனுக்கு ராஜன்’ அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே இக்கதை திரைப்படம் ஆகாமல் தப்பித்தது என்று முன்னுரையில் சொல்லியிருக்கிறார்.

          இயக்குனர்கள் இதைக் கேட்குமளவுக்கு கதையில் அப்படியென்ன இருக்கிறது என்ற எண்ணத்தோடுதான் கதையை வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க ஆரம்பித்த சில பக்கங்களிலேயே புரிந்துவிட்டது. புதிதாய் மணமானவர்களிடையே இருக்கும் காமம் கலந்த காதல், இருக்கையின் நுனிக்கு கொண்டுவரச் செய்யும் அட்டகாசமான சேஸிங் - இவையிரண்டையும் சேர்ந்து இக்கதையை ஒரு அட்டகாசமான த்ரில்லராய் படைத்திருக்கிறார் எனதருமை ரங்கன்.

          மணமான மூன்றாம் நாளே, ஒரு குற்றமும் செய்யாத ஜோடியை சென்னை, பெங்களூர் காவல்துறையினர் துரத்துகின்றனர். ஏன்? வேண்டாம், சஸ்பென்ஸை உடைக்கவிரும்பவில்லை. கதையை வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

          நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவங்கள், இலக்கியத்தரமான எழுத்து ஆகியவற்றை எதிர்பார்ப்போருக்கு இவ்விரண்டு புத்தகங்களும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் போகலாம். ஆனால் த்ரில்லரை மட்டும் விரும்புபவர்களுக்கு இப்புத்தகங்கள் நல்லதொரு விருந்தென்றே கூறுவேன்.

          நல்லவேளை, வாரயிறுதியாக இருந்தாலும் அன்று மின்சார வாரியத்தினர் கடமையே கஜினியாயிருந்தனர். இல்லையெனில் இவ்விரண்டு புத்தகங்களையும் வாசித்திருக்கமாட்டேன். ஆட்சி மாறினாலும் ஆற்காட்டாருக்கு நன்றி! :)


          Tuesday, May 17, 2011

          சுதா ரகுநாதன்

          பதிவெழுத ஆரம்பித்து கிட்டதட்ட இரண்டு வருடங்கள் ஆகிறது. வலைப்பூ மீதான போதை தற்போது குறைந்திருந்தாலும் அவ்வப்போது எழுத வேண்டும் என்ற ஆசை மட்டும் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. ஆரம்பத்தில் எழுதியதை இப்போது வாசிக்கையில் எரிச்சல்தான் மிஞ்சுகிறது என் மீது எனக்கு. தட்டுத்தடுமாறி ஏதேதோ எழுதிக்கொண்டிருக்கிறேன். இதுவரை எழுதியதில் மனதிற்கு மகிழ்ச்சியோ, திருப்தியோ தருமளவுக்கு எதுவும் இல்லை. வார்த்தை ஜாலங்கள் எல்லாம் கைகூடாததால் அத்தருணத்தில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதுகிறேன்.



          ம்ம்ம்...யோசித்து பார்க்கையில், மற்றவர்கள் மனம் நோகும்படியோ, அநாகரிகமாகவோ இதுவரை எதையும் எழுதியதில்லை. இவ்விரண்டு வருடங்களில் இதுதான் என்னால் முடிந்த அதிகபட்ச சாதனை(!)


          **********


          வேலைப்பளு. கடந்த சில மாதங்களாக அலுவலகமே வாழ்க்கையாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் (கவனிக்க: குறைந்தபட்சம்) 12 முதல் 14 மணி நேரங்கள்.


          இதனால் இழப்பது நிறைய, குறிப்பாக நட்புகள். நான் குருவாக மதிக்கும் என் நண்பரின் இல்லத்திருமணத்திற்குக்கூட செல்ல முடியாத சூழ்நிலை. அவன் ஓவரா படம் காட்றான், திமிரு புடிச்சவன், எனக்கு கால் பண்றதே இல்ல என்று சில முத்துகள் பலரின் வாயிலிருந்து உதிர்வதை அறிய முடிகிறது. ஒரே ஒரு நண்பர் மட்டும் உன் சிச்சுவேஷன் எனக்கு புரியுதுடா என்றார். மகிழ்ச்சியாக இருந்தது இவர் ஒருவராவது நம்மை புரிந்துகொண்டாரே என்று. பின்பு சொன்னார், ”எனக்கும் உன் நிலைமைதான்டா, டெய்லி 12 ஹவர்ஸ்”. ஹுக்கும்...அதானே பார்த்தேன்!


          உண்மையான நட்புகளுக்கு ஒவ்வொன்றுக்கும் விளக்கம் தரவேண்டியதில்லை. ஒவ்வொன்றுக்கும் விளக்கம் எதிர்பார்க்கும் மனிதர்கள் நட்புகளாய் இருக்க வாய்ப்பில்லை. எல்லா மனிதர்களும் எனக்கு வேண்டாம். எனக்குப் பிடித்த, என்னைப் பிடித்த ஒரு சில நட்புகள் போதும்.


          **********


          சமீபத்தில் ஒரு ஞாயிறன்று நண்பனொருவனின் கிரஹப்பிரவேசத்திற்காக நானும் என் இரு நண்பர்களும் சென்றிருந்தோம். எல்லோருடனான அரட்டையின்போதுதான், சில நாட்களாய் தொலைத்திருந்த நகைச்சுவையுணர்வை மீட்டெடுத்தது போன்று உணர்ந்தேன்.


          கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்குப் பின் சிலரை சந்தித்தேன். எப்போதும் தாமதமாக வந்தவன், இப்போதும் தாமதமாகத்தான் வருகிறான். வாய்ச்சவடாலில் (மட்டும்) வீரனாக இருந்தவன், தன் குணம் மாறாத நீலாம்பரியைப் போல் இன்னும் அப்படியேதானிருக்கிறான். அன்று சிம்ரனை காதலித்தவன் இன்று அனுஷ்காவை பூஜிக்கிறான். எல்லோரையும் பிடித்து கலாய்த்துக்கொண்டிருந்ததில் அந்த நாள் இனிய நாளாக அமைந்தது.


          இது போன்றதொரு சந்தர்ப்பம் அடிக்கடி (சனி, ஞாயிறுகளில்) கிடைக்கவேண்டும்.


          **********


          மே மாத சென்னை வெயில் பற்றி சொல்லவேண்டியதில்லை. சூரிய பகவான் ’தீ’யாய் வேலை செய்துகொண்டிருக்கிறார். இரு வாரங்களுக்கு முன் வழக்கமாக காலை சிற்றுண்டிக்குச் செல்லும் உணவகத்திற்குச் சென்றிருந்தேன். அன்று திரு.சூனா பனாவின் உக்கிரம் காலையிலேயே அதிகமாயிருந்தது. ஏதேனும் குளிர்பானம் அருந்தலாமென்றெண்ணி அங்கிருந்த ஒரு ஸ்ட்ராபெர்ரி ஃபேளேவரை வாங்கி குடித்தேன்.


          அந்த பாட்டிலில் MRP 15 என்று போட்டிருக்க, காசு வாங்கியவரோ 17 என்று பில் போட்டார்.


          "இதுல 15தான் போட்டிருக்கு, ஏன் பில்ல 17 போட்டிருக்கீங்க?"


          "17தாங்க"


          "இங்க பாருங்க, 15தான் போட்டிருக்கு". பாட்டிலைக் காட்டினேன்.


          "இதெல்லாம் நாங்க ஃபிக்ஸ் பண்றதுதான் சார், இது 17 ரூபா"


          அதற்கு மேல் அவரிடத்தில் விவாதம் செய்வதில் அர்த்தமில்லை எனத் தோன்றியது. இதில் கொடுமை என்னவென்றால், அங்கிருந்த ஒரு சிலரும், 2 ரூபாய்க்கு ஏன் அநாவசியமாக பேசுகிறான் என்பது போல் என்னை முறைத்துப் பார்த்தனர். நல்லாயிருங்கப்பு!


          இந்த பிரச்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் இருக்கிறது. எந்த பொருள் வாங்கினாலும் வெளியே விற்கும் விலையை விட அதிகமாகத்தான் இருக்கிறது. கேட்டால் மிக அலட்சியமான பதில்தான் கிடைக்கும்.


          நானொன்றும் அ ந் நி ய ன் அல்ல, இம்மாதிரி ஆட்களுக்கு, கபீம்குபாம் என்று எழுதிவிட்டு தண்டனை தர. என்னால் செய்ய முடிந்தது, எங்கெல்லாம் இம்மாதிரி அதிக விலை வைத்து விற்கிறார்களோ, அங்கெல்லாம் எந்த பொருளையும் வாங்குவதில்லை, முற்றிலும் தவிர்க்கிறேன். நம் நீதிமன்றங்களின் சுறுசுறுப்பை நினைத்தாலே, நுகர்வோர் நீதிமன்றத்திற்குச் செல்லவும் தயக்கமாயிருக்கிறது. இவர்களை வேறென்னதான் செய்ய?


          **********



          பெயர் குறித்த தொடர் பதிவிற்கு ப்ரியா அழைத்திருந்தார், பல நாஆஆஆஆஆட்களுக்கு முன்பு. ஸாரி ப்ரியா, பெட்டர் லேட் தேன் நெவர் இல்லையா?


          சிறுவயதில் என் பெயர் எனக்கு பிடிக்காது. ஸ்டைலிஷாக இல்லாமல் ஏதோ பழைய பெயர் வைத்துவிட்டார்கள் என்று கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. அதுவும் ஒரு பழைய கறுப்பு வெள்ளை படத்தில், நாயகி நாயகனை அப்போதுதான் தூங்கியெழுந்தது போன்ற toneல் ‘நாதா நாதா’ என்றழைக்க, ‘ரகுநாதன்’ என்னும் பெயர் மீது இன்னும் எரிச்சல் கூடியது.


          பள்ளி, கல்லூரி நாட்களில்....ஏன் இப்போது கூட என் பெயரில் பில் போடும்போது பலர், RAGUNATHAN என்றுதான் எழுதுவர். நான் RAGHUNATHAN. அவர்கள் விட்டுவிடுவது ஓரெழுத்துதான் என்றாலும் என்னமோ அது ஒரு பெரிய மனக்குறையாகவே தோன்றும். நல்லவேளை, மார்க் ஷீட், பாஸ்போர்ட் போன்றவற்றிலெல்லாம் இந்த பிரச்னை வரவில்லை.


          எனக்கு ரகு என்று அழைத்தால்தான் பிடிக்கும், அழைப்பவர்களைத்தான் பிடிக்கும். பெயரை சுருக்கி கூப்பிடுவதும், செல்லப்பெயர் வைத்துக் கூப்பிடுவதும்தான் நட்பின் நெருக்கத்தை அதிகரிக்கிறது என்பது என் எண்ணம்.


          இப்போது நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. கண்டிப்பாக ‘சுதா’ என்கிற பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று கூட யோசித்திருக்கிறேன் (இப்போது அந்த ஆசை இல்லை). அப்பெண்ணுக்கு பாட வருகிறதோ இல்லையோ, ‘நான் சுதா ரகுநாதன்’ என்றாவது அறிமுகப்படுத்திக்கொள்ளலாம் இல்லையா? J



          Monday, March 07, 2011

          சாப்பாட்டு இராவணன்

          ஊரிலிருக்கும் வரை, வீட்டில் அம்மா செய்யும் டிஃபன் பட்டியலில் இடம்பெறுவது பெரும்பாலும் இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி & உப்புமா. இவைதான் ரொட்டேஷனில் வலம் வந்து கொண்டிருக்கும். சைட் டிஷ்ஷில் மட்டும் நிறைய வெரைட்டி இருக்கும்படி பார்த்துக்கொள்வார் அம்மா.

          இது தவிர வெளியே வேறொன்றும் ரசித்து சாப்பிட்டதில்லை. மூட் பொறுத்து பேக்கரியில் பப்ஸும், தள்ளுவண்டியில் சுண்டலும் துவம்சம் செய்யப்படும். தள்ளுவண்டியில் இருக்கும் சுண்ட ல், பேல்பூரி எல்லாம் சாப்பிட்டிருக்கிறீர்களா? பள்ளியிலிருந்து கல்லூரி நாட்கள் வரை, நான் மிகவும் ரசித்து சாப்பிட்டிருக்கிறேன். இப்போதெல்லாம் அப்போதிருந்த தரமும், சுவையும் மிகவும் குறைந்திருக்கிறது.

          உணவின் மீது அப்போதெல்லாம் அதிக ஆர்வம் இல்லாததால் அம்மா தப்பித்தார்கள். உப்பு சரியாக இருக்கிறதா என்று கூட கணிக்கத் தெரியாது. செய்வதை குறை சொல்லாமல் சாப்பிட்டிருக்கிறேன். இவையெல்லாம் ஊரிலிருக்கும்வரைதான்.


          சென்னை. பெருமளவில் என் உணவுப்பழக்கத்தில் மாற்றம் வந்தது சென்னை வந்தபின்புதான். வந்த புதிதில் எப்போது ஹோட்டல் சென்றாலும் அதே வீட்டு புத்திதான் முன் வந்து நின்றது. எப்போதும் இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்திதான்.

          பணியில் சேர்ந்த பின்பு, ’என்ன இது, சின்ன தோசையில ஏதோ வெங்காயம் தக்காளி அரிஞ்சு போட்ட மாதிரியிருக்கு’ என்று கிண்டல் செய்ததில் முறைத்து சொன்னாள் தோழியொருத்தி. இது பீட்ஸாடா! அதன்பின் அவ்வப்போது பீட்ஸா குடிசைக்குச் சென்று, விதம்விதமான பீட்ஸாக்களை உள்ளே தள்ளுவதில் மட்டும்தான் கவனம் இருந்தது.

          இப்படியே இருந்தால் எப்படி? அடுத்த கட்டத்திற்கு போகவேண்டாமா என்று யோசித்ததினால் வந்த மாற்றம். அதுமட்டுமின்றி பேச்சிலராயிருப்பதில் கிடைக்கும் சுதந்திரம்.

          அன்னையைப் பொறுத்தவரை
          நான் வெஜிட்டேரியன்
          சென்னையைப் பொறுத்தவரை
          நான்வெஜிட்டேரியன்

          அறிமுகமாயினர் அண்ணா நகர் அஞ்சப்பரும், வடபழனி பொன்னுசாமியும். பெரும்பாலும் எக் பிரியாணி அல்லது சிக்கன் பிரியாணி, ஒரு சிக்கன் சைட் டிஷ். இதுவரை எத்தனை கோழிகளின் பாவத்திற்கு ஆளாகியிருக்கிறேன் என்று தெரியவில்லை.

          வீட்டில் அனைவரும் வெஜ். சென்னை வந்தபின்புதான் நான் நான் வெஜ். எதற்காவது கோபப்பட்டு பேசினால், ’நான் வெஜ் சாப்பிடற இல்ல, மிருக குணம், அதான் இவ்ளோ கோவம் வருது’ என்று ஒரு யார்க்கர் வீசுவார்கள் வீட்டில். ’அப்போ எவன் நல்லவன்னு சொல்லுங்க, அவனை கொன்னு சாப்பிடறேன், நல்ல குணம் வரும்’ என்று வந்த யார்க்கரை சிக்ஸராக்குவதில் அலாதி சுகம் எனக்கு.

          நான் வெஜ் சாப்பிட ஆரம்பித்த சில நாட்களில் பெரிய வித்தியாசம் தெரிந்தது. பேண்ட் சைஸ். மிகுந்த யோசனைக்குப் பிறகு முடிவெடுத்தேன். பிழைத்தன சில கோழிகள்.



          வேளச்சேரியில் வசிப்பதில் இருக்கும் பெரிய செளகரியம், மாடி ரயிலும், இங்கு குவிந்து கிடக்கும் உணவகங்களும். அஞ்சப்பர், நளாஸ், காரைக்குடி, திண்டுக்கல் தலப்பாகட்டி, கலிங்கா கெபாப் கோர்ட், ஹாட் சிப்ஸ், திருவல்லிக்கேணி ரத்னா கேஃப், அடுப்பங்கரை, வேங்க்ஸ் கிச்சன், டோமினோஸ் பீட்ஸா, மெக்டோனால்ட்ஸ், கேஎஃப்சி, மேரிப்ரவுன், பேஸ்கின் ராபின்ஸ், ஸ்நோ பார்க் என சொல்லிக்கொண்டே போகலாம்.

          சமீப நாட்களில் சென்றதில், திண்டுக்கல் தலப்பாகட்டி (கவனிக்க: தலப்பாகட்டு அல்ல..தலப்பாகட்டி) ரொம்பவே பிடித்திருக்கிறது. சில உணவகங்களில் பிரியாணி சாப்பிட்டால் அடுத்த வேளை சாப்பிடமுடியாதபடி வயிறு கும்மென்றிருக்கும், ஏன்டா சாப்பிட்டோம் என்றெண்ணும் அளவிற்கு. ஆனால் இங்கு அந்த பிரச்னை துளிகூட இல்லை. தரமான அரிசி பயன்படுத்துகிறார்கள். அற்புதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஆம்பியன்ஸில் குறையொன்றுமில்லை. நண்பர்களோடு, குடும்பத்தினரோடு சென்று அரட்டையடித்துக்கொண்டு சாப்பிட சரியான இடம்.

          இன்னொன்று. வேங்க்ஸ் கிச்சன். இங்கு ஒருவருக்கு ஆர்டர் செய்தாலே இரண்டூ பேர் உண்ணும் அளவிற்கு இருக்கிறது குவாண்டிட்டி. அவர்களுடைய ஃப்ரைட் ஐஸ்க்ரீமிற்காகவே இன்னொரு முறை போகவேண்டும்.....ம்ம்ம்ம்!

          க்ரிக்கெட் பார்ப்பதற்கு அடுத்து, இது போன்று விதவிதமான உணவு வகைகளை சுவைத்து பார்ப்பதில்தான் இப்போதெல்லாம் எனக்கு ஆர்வம் பொங்குகிறது. அடுத்தது மெக்ஸிகன் உணவு வகைகளை முயற்சி செய்து பார்க்க ஆசை. தற்போது சென்னையில் நல்லதொரு மெக்ஸிகன் ரெஸ்டாரண்ட்டைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

          என்னதான் பலவிதமாய் சாப்பிட்டாலும், உடல் நலமில்லாதபோது, இது கிடைக்காதா என மிகவும் ஏங்குவது ஒன்றே ஒன்றுதான். ஊரிலிருக்கும்போது அம்மா செய்து தரும் ரசம் சாதம்.


          Tuesday, February 22, 2011

          இர‌வினில் ஆட்ட‌ம்

          வாழ்க்கையில் ஒருமுறை கூட‌ எந்த‌ தேர்வுக்காக‌வும் இர‌வில் க‌ண் விழித்து ப‌டித்த‌தில்லை. தூக்க‌ம் முக்கிய‌மா, தூக்க‌த்தை கெடுத்துக்கொண்டு ப‌டிப்ப‌து முக்கிய‌மா என்கிற‌ கேள்வி எழும்போது உட‌ல் ந‌ல‌த்திற்கே அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் அளித்திருக்கிறேன். அதும‌ட்டும‌ல்லாம‌ல், க‌டைசி நேர‌த்தில் ப‌டித்து ஒன்றும் கிழித்துவிட‌ப்போவ‌தில்லை என்கிற‌ ம‌ன‌உறுதியும், இப்ப‌டி க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ப‌டித்து நாம‌ என்ன‌ ஸ்டேட் ஃப‌ர்ஸ்ட்டா வாங்கிட‌ப்போறோம் என்கிற‌ அசைக்க‌ முடியாத‌ த‌ன்ன‌ம்பிக்கையும் முக்கிய‌ கார‌ண‌ம். ஒன்றிர‌ண்டு முறை விடிய‌ற்காலை நாலு ம‌ணிய‌ள‌வில் எழுந்து ப‌டித்த‌தோடு ச‌ரி.

          க‌ல்லூரியில் இள‌நிலை இறுதியாண்டு ப‌டித்துக்கொண்டிருக்கும்போது, எங்க‌ள் க‌ணிணி பிரிவு த‌லைவ‌ரிட‌ம், 'நைட் லேப்' கேட்டு வாங்குவோம். காலையில் இருந்து வ‌குப்பில் ப‌டித்த‌து போக‌, இர‌விலும் க‌ண் விழித்து 'நைட் லேப்' கேட்ப‌து 'ப்ரொக்ராம்ஸ்' ப்ராக்டிஸ் செய்ய‌ அல்ல‌. 'நைட் லேப்'பிற்கு வ‌ந்தால் ம‌றுநாள் க‌ல்லூரி செல்ல‌வேண்டிய‌தில்லை. என‌வே பெரும்பாலும் எப்போதெல்லாம் க்ரிக்கெட் மேட்ச் இருக்கிற‌தோ அத‌ற்கு முன் நாள் எப்ப‌டியாவ‌து 'நைட் லேப்' வாங்கிவிடுவோம்.

          அப்போதும் இர‌வு முழுக்க‌ க‌ண் விழித்து க‌ணிணித் திரையை உற்று நோக்கிக் கொண்டிருக்க‌மாட்டேன். 'நைட் லேப்' இன்சார்ஜாக‌ யாராவ‌து ஒரு லெக்ச‌ர‌ர் இருப்பார். இர‌வு 11 அல்ல‌து 11:30 ம‌ணிய‌ள‌வில் அவ‌ரும் தூங்கிவிடுவார். அவ‌ர் தூங்கிய‌வுட‌ன், வெளியே நிறுத்திவைக்க‌ப்ப‌ட்டிருக்கும் எங்க‌ள் க‌ல்லூரிப் பேருந்திற்குள் ந‌ண்ப‌ர்க‌ள் படையெடுப்போம். ஒவ்வொருவ‌ருக்கும் ஒவ்வொரு இருக்கையும், அந்த‌ இர‌வில் ப‌டுக்கையாகிவிடும். பின்னே? இர‌வு முழுக்க‌ க‌ண் விழித்திருந்தால் ம‌றுநாள் எப்படி மேட்ச் பார்ப்ப‌து?

          ப‌டிப்புக்கென்று உட‌லை வ‌ருத்தி இர‌வில் க‌ண் விழித்த‌து இவ்வ‌ள‌வுதான். ஆனால் ப‌டிக்கும்போது சுல‌ப‌மாக‌ த‌விர்க்க‌முடிந்த‌து வேலை கிடைத்த‌போது த‌விர்க்க‌ இய‌ல‌வில்லை. ச‌ரியாக‌ நினைவில்லை, வேலை கிடைத்து ஒரு வார‌மோ, ப‌த்து நாளோ 'ட்ரெயினிங்'கில் இருந்தேன். ட்ரெயினிங் முடிந்த‌வுட‌ன் முத‌லிலேயே ஒரு புய‌ல் ப்ள‌ஸ் பூக‌ம்ப‌ம்...அடுத்த‌ ஒரு மாத‌ம் நைட் ஷிஃப்ட்!



          அய்ய‌கோ! என்ன‌ கொடுமை? பொதுத் தேர்வுக‌ளுக்கோ, ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த் தேர்வுக‌ளுக்கோ கூட‌ அச‌ராத‌வ‌ன், இப்போது பொருளீட்டும் நிமித்த‌ம் இர‌வில் க‌ண் விழிக்க‌ வேண்டியிருக்கின்ற‌தே! இதை கேட்க‌ யாருமில்லையா? க‌ட‌வுளுக்கென்ன‌ க‌ண்ணில் அறுவை சிகிச்சையா ந‌ட‌ந்து கொண்டிருக்கின்ற‌து? வேறு வ‌ழியில்லை, 'ஸ்கூபி டூ' வேஷ‌ம் போட்டாகிவிட்ட‌து, குரைத்துதான் ஆகவேண்டும்.

          இர‌வு எட்ட‌ரை ம‌ணிக்கு ஷிஃப்ட் ஆர‌ம்பிக்கும். ப‌த்து ம‌ணிக்கு மேல்தான் அலுவ‌ல‌க‌த்தில் இர‌வு உண‌வு வ‌ரும். இர‌வில் எட்டு அல்ல‌து எட்ட‌ரை ம‌ணிக்கே சாப்பிடும் ப‌ழ‌க்க‌ம் உள்ள‌வ‌ன் நான். மாலை சாப்பிட்டுவிட்டு அலுவ‌ல‌க‌ம் வ‌ந்தால், இர‌வு சீக்கிர‌ம் ப‌சிக்காது. ப‌தினொரு ம‌ணிக்கு மேல்தான் சாப்பிட‌ முடியும். அத‌னால் மாலையில் ஏதேனும் ஒரு ப‌ழ‌ச்சாறு அல்ல‌து காபி. அவ்வ‌ள‌வுதான்.

          ப‌தினொரு ம‌ணிக்கு மேல் சாப்பிட‌ப்போவ‌தில் இன்னொரு பிர‌ச்னை. சாப்பாடு சூடாக‌ இருக்காது. அந்த‌ நேர‌த்தில் ஆறிப்போய் ச‌ப்பென்ற‌ சாப்பாட்டை சாப்பிடுவ‌து மிக‌க் கொடுமை. [ ஏனோ இந்த‌ வ‌ரியை த‌ட்ட‌ச்சும்போது, எப்போதேனும் மின்ம‌ட‌லில் வ‌ரும், ப‌சியில் வாடும் உகாண்டா நாட்டு குழ‌ந்தைக‌ளின் புகைப்ப‌ட‌ங்க‌ள் நினைவுக்கு வ‌ருகிற‌து :( ]




          இர‌வு உண‌வென்றால் ஏதோ இட்லி, தோசை போன்ற‌வை அல்ல‌. இர‌ண்டு ச‌‌ப்பாத்தி அல்ல‌து ப‌ரோட்டா குருமா, சாம்பார் சாத‌ம், ர‌ச‌ம், மோர், ஏதேனும் கூட்டு அல்ல‌து பொரிய‌ல், அப்ப‌ள‌ம், ஊறுகாய், ஒரு ஸ்வீட் அல்ல‌து வாழைப்ப‌ழ‌ம். ம‌திய‌ உண‌வு எப்ப‌டியிருக்குமோ அத‌ற்கு ச‌ற்றும் குறைந்த‌த‌ல்ல‌ இர‌வு உண‌வு. என‌வே நானும் ந‌ண்ப‌ரும் ப‌த்து ம‌ணிக்கே உண‌வ‌ருந்தும் இட‌த்தில் ஆஜ‌ராகி விடுவோம். ம‌திய‌ம் சாப்பிடுவ‌தைப் போல‌ க‌ட்டு க‌ட்டென்று க‌ட்டிவிட்டு, ஃப்ளோருக்கு போய் உட்கார்ந்தால், தூக்க‌ம் கும்மென்று வ‌ரும்

          வேலைக்குச் சேர்ந்த‌ புதிதென்ப‌தால், பெரிய‌ த‌லைக‌ள் யாராவ‌து பார்த்து தொலைப்பார்க‌ளோ என்ற‌ ப‌ய‌த்திலேயே, தூங்க‌ முடியாம‌ல் மிகுந்த‌ அவ‌ஸ்தையில் அந்த‌ இர‌வுக‌ள் செல்லும். ந‌ம்பினால் ந‌ம்புங்க‌ள், உட‌ன் வேலை செய்த‌ சில‌ர் மேற்க‌த்திய‌ க‌ழிவ‌றைக‌ளில் போய் சிறிது நேர‌ம் தூங்கிவிட்டு வ‌ந்த‌தும் அர‌ங்கேறிய‌து.

          இதோ..சில‌ வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து..இன்று, ப்ராஜ‌க்ட் டெட்லைன், க்ளைய‌ண்ட்டுக்கு ச‌ப்போர்ட் கொடுக்க‌வேண்டும், அவ‌ர்க‌ள் அனுப்பும் மின்ம‌ட‌லுக்கு ப‌தில‌ளிக்க‌வேண்டும்..இன்னும் என்ன‌வெல்லாமோ சொல்லி, சில‌ நாட்க‌ள் இர‌வில் க‌ண் விழித்து வேலை செய்ய‌வேண்டிய‌ நிலை. ஆனால் வேலைக்குச் சேர்ந்த‌ புதிதில் இருந்த‌ நைட் ஷிஃப்ட் மீதான‌ வெறுப்பு இப்போது இல்லை.

          ப‌க‌லில் இல்லாத‌ அமைதி இர‌வில் ம‌ட்டுமெ கிடைக்கிற‌து. ப்ள‌ஸ் ப‌க‌லில் இல்லாத‌ மைண்ட் ஃப்ரெஷ்ன‌ஸ்ஸும், 'ராஜா கோ ராணி ஸே ப்யார் ஹோக‌யா' என்று மெல்லிய‌ ஓசையில் ம‌ன‌ம் வ‌ருடும் ப‌ழைய‌ ஹிந்தி பாட‌லைக் கேட்டுக்கொண்டே வேலையைப் பார்க்கும் சுத‌ந்திர‌மும் நைட் ஷிஃப்ட்டில் ம‌ட்டுமே சாத்திய‌ம். சில‌ நேர‌ம், இர‌வில் ப‌ணிபுரிவ‌துதான் ஏ.ஆர்.ர‌ஹ்மானின் வெற்றிக்கு முக்கிய‌ கார‌ண‌மோ என்று கூட‌ யோசித்திருக்கிறேன்.

          நைட் ஷிஃப்ட் முடிந்து காலை தூங்க‌ப்போகும் முன்.....வேள‌ச்சேரியில் உடுப்பி போளி ஸ்டாலில், பொங்க‌ல் (நெய் வாச‌ம் கும்மென்றிருக்கும்:)) சாப்பிட்டு ப‌டுத்தால்...இட்ஸ் டிவைன்! நெய் பொங்க‌ல் சாப்பிட்டு ப‌டுப்ப‌து இர‌ண்டு தூக்க‌ மாத்திரை போட்ட‌ எஃபெக்ட்டை த‌ரும். சாப்பிட்டு காலை ஏழு ம‌ணிக்கு ப‌டுத்தால் கிட்ட‌தட்ட‌ மாலை மூன்று அல்ல‌து நான்கு ம‌ணி வ‌ரையிலான‌ தூக்க‌ம் ச‌ர்வ‌ நிச்ச‌ய‌ம்.

          ப‌க‌லில் ந‌ன்றாக‌ தூங்காவிட்டால், அன்றைய‌ இர‌வு மிக‌க் கொடுமையாக இருக்கும். சிறிது நேர‌ம் வேலை செய்துவிட்டு தூங்கிக்கொள்ள‌லாம் என்று நினைத்தால் அன்றுதான் க்ளைய‌ண்ட்டிட‌மிருந்து நூத்தியெட்டு மெய்ல்க‌ளும், ஆயிர‌த்தெட்டு கேள்விக‌ளும் குவிந்து த‌ள்ளும். ப‌ல‌ முறை ப‌க‌லில் ச‌ரியாக‌ தூங்காத‌தினால் ஏகப்ப‌ட்ட‌ அவ‌ஸ்தைப‌ட்டிருக்கிறேன். நைட் ஷிஃப்ட் செய்வோருக்கு நான் கூற‌ விரும்புவ‌து, ஒரு வேளை உண‌வு இல்லாவிட்டால் கூட‌ ப‌ர‌வாயில்லை, ஆனால் தூக்க‌த்தை ம‌ட்டும் த‌விர்க்காதீர்க‌ள்.

          சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் சிவாஜி ந‌டித்த‌ ந‌வ‌ராத்திரி பட‌த்தை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் திருடனாக‌ வ‌ரும்போது ஒரு பாட‌லைப் பாடுவார். என‌க்கென்ன‌வோ அப்பாட‌லின் ஆர‌ம்ப வ‌ரிக‌ள் நைட் ஷிஃப்ட்டில் வேலை செய்வோருக்குக் கூட‌ பொருந்தும் என்றே தோன்றிய‌து.

          இர‌வினில் ஆட்ட‌ம்

          ப‌க‌லினில் தூக்க‌ம்

          இதுதான்

          எங்க‌ள் உல‌க‌ம்

          எங்க‌ள் உல‌க‌ம்....