Saturday, August 13, 2011
ப்ளாஸ்டிக் கவர்களுக்கு மாற்று வழி இல்லையா?
Thursday, June 23, 2011
சீரியல்.......கில்லர்தான் இப்பொழுதும்
- ‘அவளை நான் பழி வாங்காம விடமாட்டேன்’ என கண்ணை உருட்டுகிறார் ஒரு பெண்மணி.
- ‘சொத்தை பிரிச்சே ஆகணும்’ என்கிறார் குடும்பத்தின் மூத்த மகன்.
- ‘எங்கப்பா மேலயா கை வெச்ச, உன்னை கொல்லாம விட மாட்டேண்டா’ என காவல் நிலையம் முன்பே வில்லனை மிரட்டுகிறார் ஒருவர்.
- ’எங்க அண்ணனை ஏமாத்துன இல்ல, அதான் நான் உன்னை ஏமாத்தி எங்கண்ணனுக்கு வர வேண்டிய பணத்தை வாங்கிட்டேன்’ என்கிறார் தம்பி.
- வீட்டு வெளியே ஒருவர் வந்து, ‘டேய் வெளியே வாடா எங்க ஒளிஞ்சிருக்க’ என்று சத்தம் போட, உள்ளேயிருந்து அமைதியாய் ஒரு பெண் வந்து கூலாக சொல்கிறார், ‘எங்கண்ணண் வீட்ல இல்ல, என் புருஷன் மேல கம்ப்ளைண்ட் குடுக்க போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிருக்கார்’.
Tuesday, May 31, 2011
விபரீதக் கோட்பாடு & ஓடாதே! – சுஜாதா
சில நாட்கள் முன்பு வாரயிறுதியில் ஊருக்குச் சென்றிருந்தபோது, அங்கு வழக்கம்போல் காலை 11 மணிக்கு மின்சார வாரியம் ஞாயிறென்றும் பாராமல் தன் கடமையில் இறங்கியது. போதாதற்கு சூரிய பகவானும் ஆஸ்ட்ரேலியாவை எதிர்த்தாடும் சச்சினைப் போல் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார். எனவே வெளியே செல்லவும் விருப்பமில்லை. பிறகுதான் இவ்வருடம் வாங்கிய புத்தகங்களின் ஞாபகம் வந்தது.
அலமாரியில் பல புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தாலும், கண்ணும், கையும் முதலில் நோக்கிச் சென்றது சுஜாதாவை நோக்கித்தான். உண்மையெனினும் ’வழக்கம் போல்’ என்ற சொற்றொடர் முந்தைய வரிக்கு அவசியமில்லாதது. இரு புத்தகங்களை எடுத்தேன். விபரீதக் கோட்பாடு & ஓடாதே.
இவ்விரண்டு புத்தகங்களும் கிழக்கு பதிப்பக வெளியீடு. எழுத்துப்பிழையெல்லாம் இல்லாமல், தரமான காகிதத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இது ஒன்று போதும் சுஜாதாவை கெளரவப்படுத்த. சென்ற வருடம் வேறொரு பதிப்பகத்தில் வாங்கிய புத்தகத்தில் அவரது எழுத்தை உயிருடன் போஸ்ட்மார்ட்டம் செய்திருந்தார்கள். அவர் வாசித்திருந்தால் ஆங்கிலத்தில் அர்ச்சனை செய்திருப்பார்.

விபரீதக் கோட்பாடு
சுஜாதாவின் எழுத்தை நிறைய (சு)வாசித்தவர்கள் இக்கதையில் யார் குற்றவாளியென முதல் நான்கைந்து பக்கங்களிலேயே யூகித்துவிடுவார்கள். ஆனால் மூட நம்பிக்கையை மையமாக வைத்து த்ரில்லராய் கதையை நகர்த்தியிருக்கும் விதம் அட்டகாசம்! கணேஷ் வஸந்திற்காகவே வாசிக்கலாம். இப்போது யோசித்துபார்க்கையில் கண்டிப்பாக இது சுஜாதாவின் பெஸ்ட் அல்ல என்றுதான் தோன்றுகிறது. என்றாலும் தவிர்க்கக்கூடிய கதையும் அல்ல.
ஓடாதே!
ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முன் எழுதிய கதை. இப்புத்தகத்தின் முன்னுரையில், நிறைய இயக்குனர்கள் இக்கதையை திரைப்படமாக கெடுப்பதற்கு..ஸாரி...எடுப்பதற்கு தன்னை அணுகியதாகக் குறிப்பிட்டுள்ளார் சுஜாதா. அதுவும் ஒரு வேண்டுகோளுடன். பாழாய்ப் போகாத செண்டிமெண்ட் காரணமாக, தலைப்பை மட்டும் மாற்றவேண்டும் என்றார்களாம். ஆனால் இந்த ‘ராஜனுக்கு ராஜன்’ அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே இக்கதை திரைப்படம் ஆகாமல் தப்பித்தது என்று முன்னுரையில் சொல்லியிருக்கிறார்.
இயக்குனர்கள் இதைக் கேட்குமளவுக்கு கதையில் அப்படியென்ன இருக்கிறது என்ற எண்ணத்தோடுதான் கதையை வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க ஆரம்பித்த சில பக்கங்களிலேயே புரிந்துவிட்டது. புதிதாய் மணமானவர்களிடையே இருக்கும் காமம் கலந்த காதல், இருக்கையின் நுனிக்கு கொண்டுவரச் செய்யும் அட்டகாசமான சேஸிங் - இவையிரண்டையும் சேர்ந்து இக்கதையை ஒரு அட்டகாசமான த்ரில்லராய் படைத்திருக்கிறார் எனதருமை ரங்கன்.
மணமான மூன்றாம் நாளே, ஒரு குற்றமும் செய்யாத ஜோடியை சென்னை, பெங்களூர் காவல்துறையினர் துரத்துகின்றனர். ஏன்? வேண்டாம், சஸ்பென்ஸை உடைக்கவிரும்பவில்லை. கதையை வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவங்கள், இலக்கியத்தரமான எழுத்து ஆகியவற்றை எதிர்பார்ப்போருக்கு இவ்விரண்டு புத்தகங்களும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் போகலாம். ஆனால் த்ரில்லரை மட்டும் விரும்புபவர்களுக்கு இப்புத்தகங்கள் நல்லதொரு விருந்தென்றே கூறுவேன்.
நல்லவேளை, வாரயிறுதியாக இருந்தாலும் அன்று மின்சார வாரியத்தினர் கடமையே கஜினியாயிருந்தனர். இல்லையெனில் இவ்விரண்டு புத்தகங்களையும் வாசித்திருக்கமாட்டேன். ஆட்சி மாறினாலும் ஆற்காட்டாருக்கு நன்றி! :)
Tuesday, May 17, 2011
சுதா ரகுநாதன்
பதிவெழுத ஆரம்பித்து கிட்டதட்ட இரண்டு வருடங்கள் ஆகிறது. வலைப்பூ மீதான போதை தற்போது குறைந்திருந்தாலும் அவ்வப்போது எழுத வேண்டும் என்ற ஆசை மட்டும் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. ஆரம்பத்தில் எழுதியதை இப்போது வாசிக்கையில் எரிச்சல்தான் மிஞ்சுகிறது என் மீது எனக்கு. தட்டுத்தடுமாறி ஏதேதோ எழுதிக்கொண்டிருக்கிறேன். இதுவரை எழுதியதில் மனதிற்கு மகிழ்ச்சியோ, திருப்தியோ தருமளவுக்கு எதுவும் இல்லை. வார்த்தை ஜாலங்கள் எல்லாம் கைகூடாததால் அத்தருணத்தில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதுகிறேன்.

ம்ம்ம்...யோசித்து பார்க்கையில், மற்றவர்கள் மனம் நோகும்படியோ, அநாகரிகமாகவோ இதுவரை எதையும் எழுதியதில்லை. இவ்விரண்டு வருடங்களில் இதுதான் என்னால் முடிந்த அதிகபட்ச சாதனை(!)
**********
"இதுல 15தான் போட்டிருக்கு, ஏன் பில்ல 17 போட்டிருக்கீங்க?"
"17தாங்க"
"இங்க பாருங்க, 15தான் போட்டிருக்கு". பாட்டிலைக் காட்டினேன்.
"இதெல்லாம் நாங்க ஃபிக்ஸ் பண்றதுதான் சார், இது 17 ரூபா"
**********

பெயர் குறித்த தொடர் பதிவிற்கு ப்ரியா அழைத்திருந்தார், பல நாஆஆஆஆஆட்களுக்கு முன்பு. ஸாரி ப்ரியா, பெட்டர் லேட் தேன் நெவர் இல்லையா?
சிறுவயதில் என் பெயர் எனக்கு பிடிக்காது. ஸ்டைலிஷாக இல்லாமல் ஏதோ பழைய பெயர் வைத்துவிட்டார்கள் என்று கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. அதுவும் ஒரு பழைய கறுப்பு வெள்ளை படத்தில், நாயகி நாயகனை அப்போதுதான் தூங்கியெழுந்தது போன்ற toneல் ‘நாதா நாதா’ என்றழைக்க, ‘ரகுநாதன்’ என்னும் பெயர் மீது இன்னும் எரிச்சல் கூடியது.
பள்ளி, கல்லூரி நாட்களில்....ஏன் இப்போது கூட என் பெயரில் பில் போடும்போது பலர், RAGUNATHAN என்றுதான் எழுதுவர். நான் RAGHUNATHAN. அவர்கள் விட்டுவிடுவது ஓரெழுத்துதான் என்றாலும் என்னமோ அது ஒரு பெரிய மனக்குறையாகவே தோன்றும். நல்லவேளை, மார்க் ஷீட், பாஸ்போர்ட் போன்றவற்றிலெல்லாம் இந்த பிரச்னை வரவில்லை.
எனக்கு ரகு என்று அழைத்தால்தான் பிடிக்கும், அழைப்பவர்களைத்தான் பிடிக்கும். பெயரை சுருக்கி கூப்பிடுவதும், செல்லப்பெயர் வைத்துக் கூப்பிடுவதும்தான் நட்பின் நெருக்கத்தை அதிகரிக்கிறது என்பது என் எண்ணம்.
இப்போது நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. கண்டிப்பாக ‘சுதா’ என்கிற பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று கூட யோசித்திருக்கிறேன் (இப்போது அந்த ஆசை இல்லை). அப்பெண்ணுக்கு பாட வருகிறதோ இல்லையோ, ‘நான் சுதா ரகுநாதன்’ என்றாவது அறிமுகப்படுத்திக்கொள்ளலாம் இல்லையா? J
Monday, March 07, 2011
சாப்பாட்டு இராவணன்
இது தவிர வெளியே வேறொன்றும் ரசித்து சாப்பிட்டதில்லை. மூட் பொறுத்து பேக்கரியில் பப்ஸும், தள்ளுவண்டியில் சுண்டலும் துவம்சம் செய்யப்படும். தள்ளுவண்டியில் இருக்கும் சுண்ட ல், பேல்பூரி எல்லாம் சாப்பிட்டிருக்கிறீர்களா? பள்ளியிலிருந்து கல்லூரி நாட்கள் வரை, நான் மிகவும் ரசித்து சாப்பிட்டிருக்கிறேன். இப்போதெல்லாம் அப்போதிருந்த தரமும், சுவையும் மிகவும் குறைந்திருக்கிறது.
உணவின் மீது அப்போதெல்லாம் அதிக ஆர்வம் இல்லாததால் அம்மா தப்பித்தார்கள். உப்பு சரியாக இருக்கிறதா என்று கூட கணிக்கத் தெரியாது. செய்வதை குறை சொல்லாமல் சாப்பிட்டிருக்கிறேன். இவையெல்லாம் ஊரிலிருக்கும்வரைதான்.

பணியில் சேர்ந்த பின்பு, ’என்ன இது, சின்ன தோசையில ஏதோ வெங்காயம் தக்காளி அரிஞ்சு போட்ட மாதிரியிருக்கு’ என்று கிண்டல் செய்ததில் முறைத்து சொன்னாள் தோழியொருத்தி. இது பீட்ஸாடா! அதன்பின் அவ்வப்போது பீட்ஸா குடிசைக்குச் சென்று, விதம்விதமான பீட்ஸாக்களை உள்ளே தள்ளுவதில் மட்டும்தான் கவனம் இருந்தது.
இப்படியே இருந்தால் எப்படி? அடுத்த கட்டத்திற்கு போகவேண்டாமா என்று யோசித்ததினால் வந்த மாற்றம். அதுமட்டுமின்றி பேச்சிலராயிருப்பதில் கிடைக்கும் சுதந்திரம்.
அன்னையைப் பொறுத்தவரை
நான் வெஜிட்டேரியன்
சென்னையைப் பொறுத்தவரை
நான்வெஜிட்டேரியன்
அறிமுகமாயினர் அண்ணா நகர் அஞ்சப்பரும், வடபழனி பொன்னுசாமியும். பெரும்பாலும் எக் பிரியாணி அல்லது சிக்கன் பிரியாணி, ஒரு சிக்கன் சைட் டிஷ். இதுவரை எத்தனை கோழிகளின் பாவத்திற்கு ஆளாகியிருக்கிறேன் என்று தெரியவில்லை.
வீட்டில் அனைவரும் வெஜ். சென்னை வந்தபின்புதான் நான் நான் வெஜ். எதற்காவது கோபப்பட்டு பேசினால், ’நான் வெஜ் சாப்பிடற இல்ல, மிருக குணம், அதான் இவ்ளோ கோவம் வருது’ என்று ஒரு யார்க்கர் வீசுவார்கள் வீட்டில். ’அப்போ எவன் நல்லவன்னு சொல்லுங்க, அவனை கொன்னு சாப்பிடறேன், நல்ல குணம் வரும்’ என்று வந்த யார்க்கரை சிக்ஸராக்குவதில் அலாதி சுகம் எனக்கு.
நான் வெஜ் சாப்பிட ஆரம்பித்த சில நாட்களில் பெரிய வித்தியாசம் தெரிந்தது. பேண்ட் சைஸ். மிகுந்த யோசனைக்குப் பிறகு முடிவெடுத்தேன். பிழைத்தன சில கோழிகள்.

வேளச்சேரியில் வசிப்பதில் இருக்கும் பெரிய செளகரியம், மாடி ரயிலும், இங்கு குவிந்து கிடக்கும் உணவகங்களும். அஞ்சப்பர், நளாஸ், காரைக்குடி, திண்டுக்கல் தலப்பாகட்டி, கலிங்கா கெபாப் கோர்ட், ஹாட் சிப்ஸ், திருவல்லிக்கேணி ரத்னா கேஃப், அடுப்பங்கரை, வேங்க்ஸ் கிச்சன், டோமினோஸ் பீட்ஸா, மெக்டோனால்ட்ஸ், கேஎஃப்சி, மேரிப்ரவுன், பேஸ்கின் ராபின்ஸ், ஸ்நோ பார்க் என சொல்லிக்கொண்டே போகலாம்.
சமீப நாட்களில் சென்றதில், திண்டுக்கல் தலப்பாகட்டி (கவனிக்க: தலப்பாகட்டு அல்ல..தலப்பாகட்டி) ரொம்பவே பிடித்திருக்கிறது. சில உணவகங்களில் பிரியாணி சாப்பிட்டால் அடுத்த வேளை சாப்பிடமுடியாதபடி வயிறு கும்மென்றிருக்கும், ஏன்டா சாப்பிட்டோம் என்றெண்ணும் அளவிற்கு. ஆனால் இங்கு அந்த பிரச்னை துளிகூட இல்லை. தரமான அரிசி பயன்படுத்துகிறார்கள். அற்புதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஆம்பியன்ஸில் குறையொன்றுமில்லை. நண்பர்களோடு, குடும்பத்தினரோடு சென்று அரட்டையடித்துக்கொண்டு சாப்பிட சரியான இடம்.
இன்னொன்று. வேங்க்ஸ் கிச்சன். இங்கு ஒருவருக்கு ஆர்டர் செய்தாலே இரண்டூ பேர் உண்ணும் அளவிற்கு இருக்கிறது குவாண்டிட்டி. அவர்களுடைய ஃப்ரைட் ஐஸ்க்ரீமிற்காகவே இன்னொரு முறை போகவேண்டும்.....ம்ம்ம்ம்!
க்ரிக்கெட் பார்ப்பதற்கு அடுத்து, இது போன்று விதவிதமான உணவு வகைகளை சுவைத்து பார்ப்பதில்தான் இப்போதெல்லாம் எனக்கு ஆர்வம் பொங்குகிறது. அடுத்தது மெக்ஸிகன் உணவு வகைகளை முயற்சி செய்து பார்க்க ஆசை. தற்போது சென்னையில் நல்லதொரு மெக்ஸிகன் ரெஸ்டாரண்ட்டைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
என்னதான் பலவிதமாய் சாப்பிட்டாலும், உடல் நலமில்லாதபோது, இது கிடைக்காதா என மிகவும் ஏங்குவது ஒன்றே ஒன்றுதான். ஊரிலிருக்கும்போது அம்மா செய்து தரும் ரசம் சாதம்.
Tuesday, February 22, 2011
இரவினில் ஆட்டம்
கல்லூரியில் இளநிலை இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும்போது, எங்கள் கணிணி பிரிவு தலைவரிடம், 'நைட் லேப்' கேட்டு வாங்குவோம். காலையில் இருந்து வகுப்பில் படித்தது போக, இரவிலும் கண் விழித்து 'நைட் லேப்' கேட்பது 'ப்ரொக்ராம்ஸ்' ப்ராக்டிஸ் செய்ய அல்ல. 'நைட் லேப்'பிற்கு வந்தால் மறுநாள் கல்லூரி செல்லவேண்டியதில்லை. எனவே பெரும்பாலும் எப்போதெல்லாம் க்ரிக்கெட் மேட்ச் இருக்கிறதோ அதற்கு முன் நாள் எப்படியாவது 'நைட் லேப்' வாங்கிவிடுவோம்.
அப்போதும் இரவு முழுக்க கண் விழித்து கணிணித் திரையை உற்று நோக்கிக் கொண்டிருக்கமாட்டேன். 'நைட் லேப்' இன்சார்ஜாக யாராவது ஒரு லெக்சரர் இருப்பார். இரவு 11 அல்லது 11:30 மணியளவில் அவரும் தூங்கிவிடுவார். அவர் தூங்கியவுடன், வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் எங்கள் கல்லூரிப் பேருந்திற்குள் நண்பர்கள் படையெடுப்போம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இருக்கையும், அந்த இரவில் படுக்கையாகிவிடும். பின்னே? இரவு முழுக்க கண் விழித்திருந்தால் மறுநாள் எப்படி மேட்ச் பார்ப்பது?
படிப்புக்கென்று உடலை வருத்தி இரவில் கண் விழித்தது இவ்வளவுதான். ஆனால் படிக்கும்போது சுலபமாக தவிர்க்கமுடிந்தது வேலை கிடைத்தபோது தவிர்க்க இயலவில்லை. சரியாக நினைவில்லை, வேலை கிடைத்து ஒரு வாரமோ, பத்து நாளோ 'ட்ரெயினிங்'கில் இருந்தேன். ட்ரெயினிங் முடிந்தவுடன் முதலிலேயே ஒரு புயல் ப்ளஸ் பூகம்பம்...அடுத்த ஒரு மாதம் நைட் ஷிஃப்ட்!

அய்யகோ! என்ன கொடுமை? பொதுத் தேர்வுகளுக்கோ, பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கோ கூட அசராதவன், இப்போது பொருளீட்டும் நிமித்தம் இரவில் கண் விழிக்க வேண்டியிருக்கின்றதே! இதை கேட்க யாருமில்லையா? கடவுளுக்கென்ன கண்ணில் அறுவை சிகிச்சையா நடந்து கொண்டிருக்கின்றது? வேறு வழியில்லை, 'ஸ்கூபி டூ' வேஷம் போட்டாகிவிட்டது, குரைத்துதான் ஆகவேண்டும்.
இரவு எட்டரை மணிக்கு ஷிஃப்ட் ஆரம்பிக்கும். பத்து மணிக்கு மேல்தான் அலுவலகத்தில் இரவு உணவு வரும். இரவில் எட்டு அல்லது எட்டரை மணிக்கே சாப்பிடும் பழக்கம் உள்ளவன் நான். மாலை சாப்பிட்டுவிட்டு அலுவலகம் வந்தால், இரவு சீக்கிரம் பசிக்காது. பதினொரு மணிக்கு மேல்தான் சாப்பிட முடியும். அதனால் மாலையில் ஏதேனும் ஒரு பழச்சாறு அல்லது காபி. அவ்வளவுதான்.
பதினொரு மணிக்கு மேல் சாப்பிடப்போவதில் இன்னொரு பிரச்னை. சாப்பாடு சூடாக இருக்காது. அந்த நேரத்தில் ஆறிப்போய் சப்பென்ற சாப்பாட்டை சாப்பிடுவது மிகக் கொடுமை. [ ஏனோ இந்த வரியை தட்டச்சும்போது, எப்போதேனும் மின்மடலில் வரும், பசியில் வாடும் உகாண்டா நாட்டு குழந்தைகளின் புகைப்படங்கள் நினைவுக்கு வருகிறது :( ]
இரவு உணவென்றால் ஏதோ இட்லி, தோசை போன்றவை அல்ல. இரண்டு சப்பாத்தி அல்லது பரோட்டா குருமா, சாம்பார் சாதம், ரசம், மோர், ஏதேனும் கூட்டு அல்லது பொரியல், அப்பளம், ஊறுகாய், ஒரு ஸ்வீட் அல்லது வாழைப்பழம். மதிய உணவு எப்படியிருக்குமோ அதற்கு சற்றும் குறைந்ததல்ல இரவு உணவு. எனவே நானும் நண்பரும் பத்து மணிக்கே உணவருந்தும் இடத்தில் ஆஜராகி விடுவோம். மதியம் சாப்பிடுவதைப் போல கட்டு கட்டென்று கட்டிவிட்டு, ஃப்ளோருக்கு போய் உட்கார்ந்தால், தூக்கம் கும்மென்று வரும்
வேலைக்குச் சேர்ந்த புதிதென்பதால், பெரிய தலைகள் யாராவது பார்த்து தொலைப்பார்களோ என்ற பயத்திலேயே, தூங்க முடியாமல் மிகுந்த அவஸ்தையில் அந்த இரவுகள் செல்லும். நம்பினால் நம்புங்கள், உடன் வேலை செய்த சிலர் மேற்கத்திய கழிவறைகளில் போய் சிறிது நேரம் தூங்கிவிட்டு வந்ததும் அரங்கேறியது.
இதோ..சில வருடங்கள் கழித்து..இன்று, ப்ராஜக்ட் டெட்லைன், க்ளையண்ட்டுக்கு சப்போர்ட் கொடுக்கவேண்டும், அவர்கள் அனுப்பும் மின்மடலுக்கு பதிலளிக்கவேண்டும்..இன்னும் என்னவெல்லாமோ சொல்லி, சில நாட்கள் இரவில் கண் விழித்து வேலை செய்யவேண்டிய நிலை. ஆனால் வேலைக்குச் சேர்ந்த புதிதில் இருந்த நைட் ஷிஃப்ட் மீதான வெறுப்பு இப்போது இல்லை.
பகலில் இல்லாத அமைதி இரவில் மட்டுமெ கிடைக்கிறது. ப்ளஸ் பகலில் இல்லாத மைண்ட் ஃப்ரெஷ்னஸ்ஸும், 'ராஜா கோ ராணி ஸே ப்யார் ஹோகயா' என்று மெல்லிய ஓசையில் மனம் வருடும் பழைய ஹிந்தி பாடலைக் கேட்டுக்கொண்டே வேலையைப் பார்க்கும் சுதந்திரமும் நைட் ஷிஃப்ட்டில் மட்டுமே சாத்தியம். சில நேரம், இரவில் பணிபுரிவதுதான் ஏ.ஆர்.ரஹ்மானின் வெற்றிக்கு முக்கிய காரணமோ என்று கூட யோசித்திருக்கிறேன்.
நைட் ஷிஃப்ட் முடிந்து காலை தூங்கப்போகும் முன்.....வேளச்சேரியில் உடுப்பி போளி ஸ்டாலில், பொங்கல் (நெய் வாசம் கும்மென்றிருக்கும்:)) சாப்பிட்டு படுத்தால்...இட்ஸ் டிவைன்! நெய் பொங்கல் சாப்பிட்டு படுப்பது இரண்டு தூக்க மாத்திரை போட்ட எஃபெக்ட்டை தரும். சாப்பிட்டு காலை ஏழு மணிக்கு படுத்தால் கிட்டதட்ட மாலை மூன்று அல்லது நான்கு மணி வரையிலான தூக்கம் சர்வ நிச்சயம்.
பகலில் நன்றாக தூங்காவிட்டால், அன்றைய இரவு மிகக் கொடுமையாக இருக்கும். சிறிது நேரம் வேலை செய்துவிட்டு தூங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தால் அன்றுதான் க்ளையண்ட்டிடமிருந்து நூத்தியெட்டு மெய்ல்களும், ஆயிரத்தெட்டு கேள்விகளும் குவிந்து தள்ளும். பல முறை பகலில் சரியாக தூங்காததினால் ஏகப்பட்ட அவஸ்தைபட்டிருக்கிறேன். நைட் ஷிஃப்ட் செய்வோருக்கு நான் கூற விரும்புவது, ஒரு வேளை உணவு இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, ஆனால் தூக்கத்தை மட்டும் தவிர்க்காதீர்கள்.
சில வருடங்களுக்கு முன் சிவாஜி நடித்த நவராத்திரி படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் திருடனாக வரும்போது ஒரு பாடலைப் பாடுவார். எனக்கென்னவோ அப்பாடலின் ஆரம்ப வரிகள் நைட் ஷிஃப்ட்டில் வேலை செய்வோருக்குக் கூட பொருந்தும் என்றே தோன்றியது.
இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம்
இதுதான்
எங்கள் உலகம்
எங்கள் உலகம்....
Sunday, February 06, 2011
வீட்டை விட்டு வெளியேறுகிறேன்
நண்பர்களிடம் ஆலோசித்திருக்கலாம்தான். ஆனால் இதில் அவர்கள் என்ன செய்துவிட முடியும்? நம்பிக்கை இல்லாவிட்டாலும் சில நேரம் விதிப்படி நடக்கிறது என்றுதான் சமாதானப்படுத்திக்கொள்ள தோன்றுகிறது.
எந்தவொரு நிலையிலும் இப்படிப்பட்ட முடிவை எடுக்கவேண்டும் என்று நான் நினைத்ததில்லை. ஆனால் என்னிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்றால் வேறென்ன செய்வது? அப்படி என்ன தவறு செய்துவிட்டேன்?

இவ்வளவு வருடங்களில் அவர்கள் மனம் புண்படும்படி நடந்ததில்லை. சிற்சில அபிப்ராய பேதங்கள், வருத்தங்கள் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் மேலிருந்த அன்பு, மரியாதை எதிலும் குறை வைத்ததில்லை. இன்னும் அந்த உணர்வுகள் அப்படியேதான் இருக்கின்றன. நான் கஷ்டப்பட்ட காலத்தில், பக்கபலமாக இருந்து அவர்கள் அளித்த ஆதரவு... அதை என்றென்றும் மறவேன்.
இதன் மூலம் நான் கற்றுக்கொண்டது. உறவுகள், நண்பர்கள், இருப்பிடங்கள், அலுவலகம் என்று யாராக இருப்பினும், எதுவாக இருப்பினும், அன்பு, பாசம் என்பது ஓரளவோடு இருப்பது உத்தமம். பிரிவு ஏற்படும்போது வரும் வலியைத் தாங்கக்கூடிய மனது வேண்டும். அதிலும் குறிப்பாக, நம் மீது தவறில்லாதபோதும், இழைக்கப்படும் தண்டனை மிகக் கொடியது. சாலையின் மத்தியில் நின்றுகொண்டு என்னை புரிந்துகொள்ள யாருமில்லையா என்று கத்தவேண்டும் போலிருந்தது.
அன்று அவர் சொன்ன வார்த்தைகள் என்றும் மறக்கமுடியாதது.
I didn't want to do this to you, but I have to...
எளிதாக சொல்லிவிட்டேன்.
Ok, no problem, it's your decision
ஈகோ. உங்களுக்கு இவ்ளோன்னா எனக்கு எவ்ளோ இருக்கும் என்ற ஈகோ. எனவே திமிரில் நோ ப்ராப்ளம் என்று சொல்லிவிட்டாலும் பின்புதான் சற்று கவலைப்பட ஆரம்பித்தேன். வாழ்க்கை அவ்வளவு எளிதா என்ன? வீட்டை விட்டு வெளியேறிவிட்டால் இப்போதிருக்கும் வாழ்க்கை, வசதி இதெல்லாம் கிடைக்குமா?
ச்சீ! அவர் வெளிப்படையாக அவர் கருத்தை சொல்லிவிட்டார், இதற்கு மேலும் தன்மானம் இழந்து அவரை சமாதானப்படுத்தி, அவர் காலில் விழுந்து இங்கேயே இருக்கலாமா என்று நினைக்கிறாயே, வெட்கமாயில்லை? போடா என்று என் கழுத்தை நானே பிடித்து வெளியே தள்ளினேன். இந்த மனது இருக்கிறதே, அதற்கு எந்த நேரத்தில் என்ன யோசிப்பது என்ற விவஸ்தையே இல்லை. பின் என்ன? இப்படி வெளியேறும்போதா "வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா, தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா" என்று யாரேனும் பாடமாட்டார்களா என்று எதிர்பார்ப்பது? இடியட் இடியட்...
வெளியேறிய பின் எங்கு தங்குவது? அது ஒரு பெரிய அவஸ்தை. இப்போதெல்லாம் எங்கும் 'டுலெட்' போர்டை தூக்கில் தொங்கவிடுவதில்லை. எல்லாவற்றையும் வீட்டு தரகர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். வீட்டு உரிமையாளர் 5000 ரூபாய்க்கு கொடுக்கலாம் என்று நினைத்திருந்தாலும், 'என்னங்க நீங்க, இந்த வீட்டுக்கு 6000க்கு தாராளமா வருவாங்க' என்று அவரை உசுப்பேற்றும் பணியில் சாலச் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். '7000 சொல்றார், நான் பேசி 6500க்கு கொண்டு வந்திருக்கேன்' என்று நம்மிடம் சொல்லி நல்ல பெயர் வாங்குவதிலும் அலாதி சுகம் அவர்களுக்கு.
இரண்டு வாரம் அலைந்து திரிந்ததில் ஒரு வீடு கிடைத்தது. சில நேரம் (மட்டும்) கர்வம் கொள்ளத் தோன்றுகிறது. தலை நிமிர்ந்து, அவரிடம் போய் சொல்லவேண்டும் என்று முடிவு செய்தேன்.
ஒன் ஃபைன் மார்னிங். செய்தித்தாளில் மூழ்கியிருந்தார். முன் சென்று நின்றேன். 'என்ன?' என்பது போல பார்த்தார்.
"வேற வீடு பார்த்திருக்கேன். இந்த வாரம் புதன் கிழமை கிளம்பறேன்"
இவ்வளவு சீக்கிரம் என்னிடமிருந்து இந்த வார்த்தைகளை அவர் எதிர்பார்க்கவில்லை என்பது அவர் பார்வையிலேயே தெரிந்தது. எங்களுக்குள்ளான ஈகோ யுத்தத்தில் அவரும் சற்றும் சளைத்தவரில்லை. எனவே இந்த அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் இருப்பதற்கு தன்னால் இயன்றவரை சிறப்பாகவே நடிக்க முயற்சி செய்தார். தொண்டையை செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தார்.
"ஆக்சுவலா முதல்ல ஃபேமிலிக்குதான் விடறதாதான் இருந்தோம். இப்போ ஏதாவது ஆஃபிஸ்க்கு கொடுக்கறதா இருக்கோம். ஃபேமிலியா இருந்தாதான் கேட் யார் லாக் பண்றதுங்கறதுல பிரச்னை இருக்கும். ஆஃபிஸ்னா பிரச்னை இல்ல, நீங்க கன்டினியூ பண்றதா இருந்தா பண்ணலாம்" என்றார் வீட்டு உரிமையாளர்.
"இல்ல, பரவாயில்ல அங்கிள்" என்றேன்.



