Sunday, February 06, 2011

வீட்டை விட்டு வெளியேறுகிறேன்

இது நானாக‌ எடுத்த‌ முடிவு அல்ல‌. முற்றிலும் என் மீது திணிக்க‌ப்ப‌ட்ட‌ முடிவு. இதைத் த‌விர‌ வேறு வ‌ழியில்லை.

ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் ஆலோசித்திருக்க‌லாம்தான். ஆனால் இதில் அவ‌ர்க‌ள் என்ன‌ செய்துவிட‌ முடியும்? ந‌ம்பிக்கை இல்லாவிட்டாலும் சில‌ நேர‌ம் விதிப்ப‌டி ந‌ட‌க்கிற‌து என்றுதான் ச‌மாதான‌ப்ப‌டுத்திக்கொள்ள‌ தோன்றுகிற‌து.

எந்த‌வொரு நிலையிலும் இப்ப‌டிப்ப‌ட்ட‌ முடிவை எடுக்க‌வேண்டும் என்று நான் நினைத்த‌தில்லை. ஆனால் என்னிட‌ம் இதைத்தான் எதிர்பார்க்கிறார்க‌ள் என்றால் வேறென்ன‌ செய்வ‌து? அப்ப‌டி என்ன‌ த‌வ‌று செய்துவிட்டேன்?


இவ்வ‌ள‌வு வ‌ருட‌ங்க‌ளில் அவ‌ர்க‌ள் ம‌ன‌ம் புண்ப‌டும்ப‌டி ந‌ட‌ந்த‌தில்லை. சிற்சில‌ அபிப்ராய‌ பேத‌ங்க‌ள், வ‌ருத்த‌ங்க‌ள் இருந்திருக்க‌‌லாம். ஆனால் அவ‌ர்க‌ள் மேலிருந்த‌ அன்பு, ம‌ரியாதை எதிலும் குறை வைத்த‌தில்லை. இன்னும் அந்த‌ உண‌ர்வுக‌ள் அப்ப‌டியேதான் இருக்கின்ற‌ன‌. நான் க‌ஷ்ட‌ப்ப‌ட்ட‌ கால‌த்தில், ப‌க்க‌ப‌ல‌மாக‌ இருந்து அவ‌ர்க‌ள் அளித்த‌ ஆத‌ர‌வு... அதை என்றென்றும் ம‌ற‌வேன்.

இத‌ன் மூல‌ம் நான் க‌ற்றுக்கொண்ட‌து. உற‌வுக‌ள், ந‌ண்ப‌ர்க‌ள், இருப்பிட‌ங்க‌ள், அலுவ‌ல‌க‌ம் என்று யாராக‌ இருப்பினும், எதுவாக‌ இருப்பினும், அன்பு, பாச‌ம் என்ப‌து ஓர‌ள‌வோடு இருப்ப‌து உத்த‌ம‌ம். பிரிவு ஏற்ப‌டும்போது வ‌ரும் வ‌லியைத் தாங்க‌க்கூடிய‌ ம‌ன‌து வேண்டும். அதிலும் குறிப்பாக‌, ந‌ம் மீது த‌வ‌றில்லாத‌போதும், இழைக்க‌ப்ப‌டும் த‌ண்ட‌னை மிக‌க் கொடிய‌து. சாலையின் ம‌த்தியில் நின்றுகொண்டு என்னை புரிந்துகொள்ள‌ யாருமில்லையா என்று க‌த்த‌வேண்டும் போலிருந்த‌து.

அன்று அவ‌ர் சொன்ன‌ வார்த்தைக‌ள் என்றும் ம‌ற‌க்க‌முடியாத‌து.

I didn't want to do this to you, but I have to...

எளிதாக‌ சொல்லிவிட்டேன்.

Ok, no problem, it's your decision

ஈகோ. உங்க‌ளுக்கு இவ்ளோன்னா என‌க்கு எவ்ளோ இருக்கும் என்ற‌ ஈகோ. என‌வே திமிரில் நோ ப்ராப்ள‌ம் என்று சொல்லிவிட்டாலும் பின்புதான் ச‌ற்று க‌வ‌லைப்ப‌ட‌ ஆர‌ம்பித்தேன். வாழ்க்கை அவ்வ‌ள‌வு எளிதா என்ன‌? வீட்டை விட்டு வெளியேறிவிட்டால் இப்போதிருக்கும் வாழ்க்கை, வ‌ச‌தி இதெல்லாம் கிடைக்குமா?

ச்சீ! அவ‌ர் வெளிப்ப‌டையாக‌ அவ‌ர் க‌ருத்தை சொல்லிவிட்டார், இத‌ற்கு மேலும் த‌ன்மான‌ம் இழந்து அவ‌ரை ச‌மாதான‌ப்ப‌டுத்தி, அவ‌ர் காலில் விழுந்து இங்கேயே இருக்கலாமா என்று நினைக்கிறாயே, வெட்க‌மாயில்லை? போடா என்று என் க‌ழுத்தை நானே பிடித்து வெளியே த‌ள்ளினேன். இந்த‌ மன‌து இருக்கிற‌தே, அத‌ற்கு எந்த‌ நேர‌த்தில் என்ன‌ யோசிப்ப‌து என்ற‌ விவ‌ஸ்தையே இல்லை. பின் என்ன‌? இப்ப‌டி வெளியேறும்போதா "வாழ்க்கையில் ஆயிர‌ம் த‌டைக்க‌ல்ல‌ப்பா, த‌டைக்க‌ல்லும் உன‌க்கொரு ப‌டிக்க‌ல்ல‌ப்பா" என்று யாரேனும் பாட‌மாட்டார்க‌ளா என்று எதிர்பார்ப்ப‌து? இடிய‌ட் இடிய‌ட்...

வெளியேறிய‌ பின் எங்கு த‌ங்குவ‌து? அது ஒரு பெரிய‌ அவ‌ஸ்தை. இப்போதெல்லாம் எங்கும் 'டுலெட்' போர்டை தூக்கில் தொங்க‌விடுவ‌தில்லை. எல்லாவ‌ற்றையும் வீட்டு த‌ர‌க‌ர்க‌ள் பார்த்துக்கொள்கிறார்க‌ள். வீட்டு உரிமையாள‌ர் 5000 ரூபாய்க்கு கொடுக்க‌லாம் என்று நினைத்திருந்தாலும், 'என்ன‌ங்க‌ நீங்க‌, இந்த‌ வீட்டுக்கு 6000க்கு தாராள‌மா வ‌ருவாங்க‌' என்று அவ‌ரை உசுப்பேற்றும் ப‌ணியில் சால‌ச் சிற‌ந்த‌வ‌ர்க‌ளாக‌ இருக்கிறார்க‌ள். '7000 சொல்றார், நான் பேசி 6500க்கு கொண்டு வ‌ந்திருக்கேன்' என்று ந‌ம்மிட‌ம் சொல்லி ந‌ல்ல‌ பெய‌ர் வாங்குவ‌திலும் அலாதி சுக‌ம் அவ‌ர்களுக்கு.

இர‌ண்டு வார‌ம் அலைந்து திரிந்த‌தில் ஒரு வீடு கிடைத்த‌து. சில‌ நேர‌ம் (ம‌ட்டும்) க‌ர்வ‌ம் கொள்ள‌த் தோன்றுகிற‌து. த‌லை நிமிர்ந்து, அவ‌ரிட‌ம் போய் சொல்ல‌வேண்டும் என்று முடிவு செய்தேன்.

ஒன் ஃபைன் மார்னிங். செய்தித்தாளில் மூழ்கியிருந்தார். முன் சென்று நின்றேன். 'என்ன‌?' என்ப‌து போல‌ பார்த்தார்.

"வேற வீடு பார்த்திருக்கேன். இந்த‌ வார‌ம் புத‌ன் கிழ‌மை கிள‌ம்ப‌றேன்"

இவ்வ‌ள‌வு சீக்கிர‌ம் என்னிட‌மிருந்து இந்த‌ வார்த்தைக‌ளை அவ‌ர் எதிர்பார்க்க‌வில்லை என்ப‌து அவ‌ர் பார்வையிலேயே தெரிந்த‌து. எங்க‌ளுக்குள்ளான‌ ஈகோ யுத்த‌த்தில் அவ‌ரும் ச‌ற்றும் ச‌ளைத்த‌வ‌ரில்லை. என‌வே இந்த‌ அதிர்ச்சியை வெளிக்காட்டாம‌ல் இருப்ப‌த‌ற்கு த‌ன்னால் இய‌ன்ற‌வ‌ரை சிற‌ப்பாக‌வே ந‌டிக்க‌ முய‌ற்சி செய்தார். தொண்டையை செருமிக்கொண்டு பேச‌ ஆர‌ம்பித்தார்.

"ஆக்சுவ‌லா முத‌ல்ல‌ ஃபேமிலிக்குதான் விட‌ற‌தாதான் இருந்தோம். இப்போ ஏதாவ‌து ஆஃபிஸ்க்கு கொடுக்க‌ற‌தா இருக்கோம். ஃபேமிலியா இருந்தாதான் கேட் யார் லாக் ப‌ண்ற‌துங்க‌ற‌துல‌ பிர‌ச்னை இருக்கும். ஆஃபிஸ்னா பிர‌ச்னை இல்ல‌, நீங்க‌ க‌ன்டினியூ ப‌ண்ற‌தா இருந்தா ப‌ண்ண‌லாம்" என்றார் வீட்டு உரிமை‌யாள‌ர்.

"இல்ல‌, ப‌ர‌வாயில்ல‌ அங்கிள்" என்றேன்.

4 comments:

  1. Ragu ippo chat'la iruntheenga avlothan.
    enna padikira engala paartha epdi theriyuthu Adingg.

    ReplyDelete
  2. ம்ம் இந்த வீட்டு பிரச்சனை பத்தி முன்பே கூட கொஞ்சம் எழுதுனீங்க இல்ல?

    ReplyDelete
  3. en ippadi?
    nallathane poyikittu irunthuchu?

    ReplyDelete
  4. ந‌ன்றி அஹம‌து, நீங்க‌ லேபிளை பார்த்திருக்க‌ணும் ;)

    ந‌ன்றி மோக‌ன், ம்ம்..ஆமா ஏற்க‌ன‌வே எழுதியிருக்கேன்

    ந‌ன்றி அன்னு, நீங்க‌ளும் லேபிளை பாருங்க‌

    ReplyDelete