Showing posts with label க்ரைம். Show all posts
Showing posts with label க்ரைம். Show all posts

Sunday, February 21, 2010

ல‌ட்சுமிகாந்த‌ன் கொலை வ‌ழ‌க்கு - 2

என்ன‌தான் க‌த்திக்குத்து வாங்கினாலும் ல‌ட்சுமிகாந்த‌ன் சாக‌வில்லை. வ‌ழிந்த‌ ர‌த்த‌த்தோடு நேராக‌ மீண்டும் வ‌ழ‌க்க‌றிஞ‌ர் ந‌ற்குண‌த்தின் வீட்டுக்குச் சென்று ந‌ட‌ந்த‌தைக் கூறினார். த‌ன்னுட‌ன் இருந்த‌ ப்ரூ (Brew) என்னும் ஒரு ஆங்கிலோ இந்திய‌ரை, உட‌ன‌டியாக‌ ல‌ட்சுமிகாந்த‌னை ம‌ருத்துவ‌ம‌னையில் சேர்க்குமாறு சொன்னார் ந‌ற்குண‌ம். பொருத்த‌மான‌ பெய‌ர்தான்.

ஆனால் ல‌ட்சுமிகாந்த‌னுக்கு வ‌ழியும் ர‌த்த‌மும் ச‌ரி, கோப‌மும் ச‌ரி, கொஞ்ச‌மும் அட‌ங்க‌வில்லை. அத‌னால் ம‌ருத்துவ‌ம‌னைக்குச் செல்லும் முன் முத‌லில் வேப்பேரி காவ‌ல் நிலைய‌த்திற்குச் சென்று, வ‌டிவேலுவும், 30 வ‌ய‌து ம‌திக்க‌த்த‌க்க‌ இன்னொரு ந‌ப‌ரும் சேர்ந்து த‌ன்னை க‌த்தியால் குத்திவிட்ட‌தாக‌ புகார் செய்துவிட்டுதான் ம‌ருத்துவ‌ம‌னைக்குச் சென்றார். இதில் குறிப்பிட‌ப்ப‌ட‌வேண்டிய‌ ஒன்று காவ‌ல் நிலைய‌த்துக்கு ரிக்ஷாவில் சென்ற‌ பின் ரிக்ஷாவை விட்டு ல‌ட்சுமிகாந்த‌னால் இற‌ங்க‌க்கூட‌ முடிய‌வில்லை. அத‌னால் அப்போது காவ‌ல் நிலைய‌த்தில் இருந்த‌ இன்ஸ்பெக்ட‌ர் கிருஷ்ண‌ன் ந‌ம்பியார் வெளியே வ‌ந்து, ல‌ட்சுமிகாந்த‌ன் சொல்ல‌ சொல்ல‌, புகாரை அவ‌ரே எழுதிக்கொண்டார்.

அத‌ன் பின் பொது ம‌ருத்துவ‌ம‌னையில், வென்லாக் வார்டில் (Wenlock Ward) ல‌ட்சுமிகாந்த‌ன் அட்மிட் ஆக‌, டாக்ட‌ர் பி.ஆர்.பால‌கிருஷ்ண‌ன் அவ‌ரை பார்த்த‌போது, ஏற‌க்குறைய‌ த‌ன்னுடைய‌ வாழ்வின் முடிவிற்கே ல‌ட்சுமிகாந்த‌ன் வ‌ந்திருந்தார். க‌த்தியால் குத்துப்ப‌ட்ட‌ பின் நிறைய‌ நேர‌ம் தாம‌த‌ப்ப‌டுத்தி வ‌ந்த‌தால், ம‌ருத்துவ‌ர்க‌ளால் காப்பாற்ற‌ முடியவில்லை. ந‌வ‌ம்ப‌ர் 9, 1944 அன்று அதிகாலை 4:15 ம‌ணிக்கு, வ‌ழ‌க்க‌மாக‌ச் சொல்வ‌துபோல், சிகிச்சை ப‌ல‌னின்றி இற‌ந்தார்.

ல‌ட்சுமிகாந்த‌னை வ‌டிவேலுவும், நாக‌லிங்க‌மும் கொன்ற‌து உண்மைதான். ஆனால் இந்த‌ திட்ட‌த்திற்கு பின் ஆரிய‌வீர‌சேன‌ன், ஜெயான‌ந்த‌ம், ராஜாபாத‌ர், ஆறுமுக‌ம் போன்றோரும் இருந்த‌ன‌ர். போலீஸாரின் அதிர‌டியில் முத‌லில் மாட்டிய‌து வ‌டிவேலு. ந‌வ‌ம்ப‌ர் 9ம் தேதிய‌ன்றே வ‌டிவேலுவைக் கைது செய்த‌ன‌ர் போலீஸார். பின்பு ஒவ்வொருவ‌ராக‌ கைது செய்ய‌ப்ப‌ட‌‌, க‌டைசி நேர‌ திருப்ப‌மாக‌ ஜெயான‌ந்த‌ம் அப்ரூவ‌ராக‌ மாறினான். இத‌ன்பின்தான் பெரிய‌ த‌லைக‌ள் உருள‌ ஆர‌ம்பித்த‌ன‌.

ந‌வ‌ம்ப‌ர் 27, 1944 - அசோகா பிலிம்ஸ் அலுவ‌ல‌க‌த்துக்கு போலீஸார் வ‌ந்து என்.எஸ்.கிருஷ்ண‌னை கைது செய்வ‌தாக‌க் கூறின‌ர் போலீஸார். எதுவும் கூற‌வில்லை என்.எஸ்.கே. அமைதியாக‌ அவ‌ர்க‌ளுட‌ன் கிள‌ம்பினார். அதே நேர‌த்தில் மாம்ப‌ல‌த்தில் தியாகராஜ‌ பாக‌வ‌த‌ரும் கைது செய்ய‌ப்ப‌ட்டார். ஆனால் ஸ்ரீராமுலு நாயுடு ம‌ட்டும் ஜ‌ன‌வ‌ரியில்தான் கைது செய்ய‌ப்ப‌ட்டார்.



பாக‌வ‌த‌ரும், என்.எஸ்.கேவும் ஜாமீனில் வெளிவ‌ந்த‌ன‌ர். வெளியே வ‌ந்த‌வுட‌ன் விறுவிறுவென்று ஒப்பந்த‌ம் செய்துகொண்டிருந்த‌ ப‌ட‌ங்க‌ளிலெல்லாம் என்.எஸ்.கே ந‌டித்து முடித்தார். ஜ‌ன‌வ‌ரி 12, 1945 அன்று இருவ‌ரின் ஜாமீனும் ர‌த்தான‌து. உய‌ர்நீதிம‌ன்ற‌ உத்த‌ர‌வுப்ப‌டி, பாக‌வ‌த‌ரும், என்.எஸ்.கேவும் சென்னை ம‌த்திய‌ சிறையில் அடை‌க்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

செஷ‌ன்ஸ் விசார‌ணை ஏப்ர‌ல் 12, 1945 அன்று ஆர‌ம்ப‌மான‌து. ஸ்ரீராமுலு நாயுடு சார்பாக‌ வாதாட‌ பிர‌ப‌ல‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர் கே.எம்.முன்ஷி ப‌ம்பாயிலிருந்து வ‌ர‌வ‌ழைக்க‌ப்ப‌ட்டிருந்தார். அத‌ற்காக‌ முன்ஷிக்கு ஒரு நாளைக்கு ரூ.75,000 கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. பாக‌வ‌த‌ருக்காக‌வும், என்.எஸ்.கேவுக்காக‌வும் வாதாட‌ வி.டி.ர‌ங்க‌சாமி அய்ய‌ங்கார், வி.ராஜ‌கோபால‌ச்சாரி, ரோல‌ண்ட் பிராட‌ல், எஸ்.கோவிந்த‌சாமி நாத‌ன் ஆகியோர் ஆஜ‌ராகி இருந்தார்க‌ள்.

கே.எம்.முன்ஷி வாத‌த் திறமை ஸ்ரீராமுலு நாயுடுவைக் காப்பாற்றிய‌து. ஆம், கொலைத் திட்ட‌ம் தீட்டிய‌தாக‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌ ந‌வ‌ம்ப‌ர் 7, 1944 அன்று, ப‌ம்பாய் தாஜ் ம‌கால் ஹோட்ட‌லில் ச‌ர் ஆர்.கே.ச‌ண்முக‌ம் செட்டியாருட‌ன், ஸ்ரீராமுலு நாயுடு த‌ங்கி இருந்த‌தாக‌ நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த‌ நிரூப‌ண‌ம் ஏற்றுக்கொள்ளப்ப‌ட்டு ஏப்ர‌ல் 20, 1945 அன்று ஸ்ரீராமுலு நாயுடு விடுத‌லை செய்ய‌ப்ப‌ட்டார். இத‌ன்பின் என்.எஸ்.கேவுக்காக‌வும் வாதாட‌ கே.எம்.முன்ஷி நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

ந‌வ‌ம்ப‌ர் 2 முத‌ல் 11 வ‌ரை என்.எஸ்.கே சேல‌ம் ந‌க‌ரில் இருந்த‌தை த‌க்க‌ ஆதார‌ங்க‌ளுட‌ன் நிரூபித்தார் முன்ஷி. சேல‌ம் மாட‌ர்ன் தியேட்ட‌ர்ஸில் ப‌ணிபுரிந்த‌ ப‌ல‌ரும் என்.எஸ்.கேவுக்கு சாத‌க‌மாக‌ சாட்சி அளித்த‌ன‌ர். ஆனாலும் நீதிப‌திக‌ள் நிறைய‌ விஷ‌ய‌ங்க‌ளில் திருப்தி அடைய‌வில்லை. 27 நாட்க‌ள் விசார‌ணை முடிந்த‌பின் மே 5, 1945 அன்று தீர்ப்பு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

வ‌டிவேலு, நாக‌லிங்க‌ம், ஆரிய‌வீர‌சேன‌ன், ராஜாபாத‌ர் ஆகியோர் கொலை, கொலைக்கான‌ ச‌தி ஆகிய‌வ‌ற்றில் குற்ற‌வாளிக‌ளாக‌த் தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். தியாக‌ராஜ‌ பாக‌வ‌த‌ர், என்.எஸ்.கிருஷ்ண‌ன் - இவ‌ர்க‌ள் இருவ‌ரும் கொலைக்கான‌ ச‌தித் திட்டத்துக்கு உட‌ந்தையாக‌ இருந்த‌ன‌ர் என்று ஒன்ப‌து பேர் அட‌ங்கியிருந்த‌ நீதிப‌திக‌ள் குழுவில் ஆறு பேர் தெரிவித்திருந்த‌தால், ஆயுள் த‌ண்ட‌னை அளிக்க‌ப்ப‌ட்டு இருவ‌ரும் மீண்டும் சிறையில் அடைக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

72 கார‌ண‌ங்க‌ளை சுட்டிக்காட்டி ஜுலை 12, 1945 அன்று உய‌ர்நீதிம‌ன்ற‌த்தில் பாக‌வ‌த‌ரும், கிருஷ்ண‌னும் மேல்முறையீடு செய்த‌ன‌ர். மேல்முறையீடு ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட்டு அக்டோப‌ர் 22, 1945 அன்று வ‌ழ‌க்கு விசார‌ணைக்கு வ‌ந்த‌து. ஆனாலும் அக்டோப‌ர் 29 அன்று உய‌ர்நீதிம‌ன்ற‌ தீர்ப்பு, செஷ‌ன்ஸ் நீதிம‌ன்ற‌ம் அளித்த‌ ஆயுள் த‌ண்ட‌னையை உறுதி செய்த‌து. இத‌ற்குப்பின் ல‌ண்ட‌ன் ப்ரிவி க‌வுன்சிலில் (Privy Council) பாக‌வ‌த‌ரும், கிருஷ்ண‌னும் அப்பீல் செய்த‌ன‌ர்.




இந்த‌முறை இருவ‌ருக்காக‌வும் வாதாட‌ வ‌ந்த‌வ‌ர் வேலூர் எல்.எத்திராஜ். பாக‌வ‌த‌ரும், கிருஷ்ண‌னும் ல‌ட்சுமிகாந்த‌னின் சில‌ எதிரிக‌ளை ந‌வ‌ம்ப‌ர் 7, 1944 அன்று ஒற்றைவாடை தியேட்ட‌ரில் ச‌ந்தித்து கொலைக்காக‌ ப‌ணம் கொடுத்த‌ன‌ர் என்று பிராசிக்யூஷ‌ன் த‌ர‌ப்பில் கூற‌ப்ப‌ட்டிருந்த‌து. ஆனால் சாட்சிய‌த்தில், ச‌தித் திட்ட‌ம் தீட்டிய‌ தின‌ம் ந‌வ‌ம்ப‌ர் 7 என்றும், குற்ற‌ப் ப‌த்திரிக்கையில் ந‌வ‌ம்ப‌ர் 8 என்றும் குறிப்பிட‌ப்ப‌ட்டிருந்த‌தை சுட்டிக் காட்டினார் எத்திராஜ். மேலும் அப்ரூவ‌ரான‌ ஜெயான‌ந்த‌ம் கிட்ட‌த‌ட்ட‌ ஆறு வித‌மான‌ வாக்குமூல‌ம் கொடுத்திருந்தார். அதில் ஒவ்வொன்றும் ம‌ற்றொன்றுக்கு ரொம்ப‌வே முற‌ண்ப‌ட்டிருந்த‌தையும் சுட்டிக் காட்டினார் எத்திராஜ். ச‌தித் திட்ட‌ம் தீட்டிய‌தாக‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌ ந‌வ‌ம்ப‌ர் 7 முன்பே, அக்டோப‌ர் 19ம் தேதிய‌ன்று ல‌ட்சுமிகாந்த‌னைக் கொல்ல‌ முய‌ற்சி ந‌ட‌ந்த‌தையும் நிரூபித்தார் எத்திராஜ். இப்ப‌டி ப‌டிப்ப‌டியாக‌ செஷ‌ன்ஸ் கோர்ட் வ‌ழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் இந்த‌ வ‌ழ‌க்கில் விட்டிருந்த‌ நிறைய‌ ஓட்டைக‌ளை எத்திராஜ் த‌ன் திற‌மையால் அடைத்தார்.

தீர்ப்ப‌ளிக்கும் நாள் வ‌ந்த‌து. தீர்ப்பின் சாராம்ச‌ம் இதுதான், "அப்ரூவ‌ர் ஜெயான‌ந்த‌த்தின் வாக்குமூல‌ம் நிரூப‌ண‌மாக‌வில்லை. அத‌னால் ஜெயான‌ந்த‌த்தின் வாக்குமூல‌த்தை வைத்து பார்க்கும்போது தியாக‌ராஜ‌ பாக‌வ‌த‌ரையும், என்.எஸ்.கிருஷ்ண‌னையும் த‌ண்டிப்ப‌து நியாய‌மாகாது". இருவ‌ரும் விடுத‌லை ஆனார்க‌ள். ஏற‌க்குறைய‌ 30 மாத‌ங்க‌ள்.....ஆம், இர‌ண்ட‌ரை வ‌ருட‌ங்க‌ள் சிறையில் க‌ழித்த‌ பிற‌கு!

#சிறையில் இருந்து வ‌ந்த‌ பின்பு பாக‌வ‌த‌ரின் திரையுல‌க‌ வாழ்க்கை ச‌ரிந்து போன‌து. திராவிட‌க் க‌ருத்துக‌ளை ச‌முதாய‌ சீர்திருத்த‌ ப‌ட‌ங்க‌ளாக‌ ம‌க்க‌ள் பார்க்க‌த் தொட‌ங்கிய‌ கால‌ம‌து. பாக‌வ‌த‌ரின் பாட‌ல்க‌ள் நிறைந்த‌ மென் ப‌ட‌ங்க‌ள் எடுப‌டாம‌ல் போன‌து. த‌ன் இறுதிக் கால‌த்தில் ஆண்ட‌வ‌னிட‌‌த்தில் மிகுந்த‌ ப‌க்தி கொண்டு கோயில்க‌ளில் ம‌ட்டுமே பாடி, ஏழ்மையில் மூழ்கி ம‌றைந்தார். த‌ன்னைப் ப‌ற்றிக் குறிப்பிட்டு பாக‌வ‌த‌ர் சொன்ன‌து "என்னைப் போல் வாழ்ந்த‌வ‌னும் இல்லை, என்னைப் போல் தாழ்ந்த‌வ‌னும் இல்லை"

#இத‌ற்கு நேர்மாறாக‌ சிறையில் இருந்து வ‌ந்த‌ பின்பு என்.எஸ்.கே ப‌ல‌ ப‌ட‌ங்க‌ளில் ந‌டித்து புக‌ழின் உச்சியைத் தொட்டார். என்.எஸ்.கிருஷ்ண‌ன்-டி.ஏ. ம‌துர‌ம் ந‌கைச்சுவை காட்சிக‌ள் இருக்கிற‌தா என்று தெரிந்துகொண்ட‌ பின்பே ப‌ட‌ம் பார்க்கும் அள‌வுக்கு, ம‌க்க‌ளின் ம‌ன‌தில் இட‌ம் பெற்றார் என்.எஸ்.கே.

#சிறையிலிருந்து விடுதலையான‌பின் நிறைய‌ ஊர்க‌ளில் என்.எஸ்.கேவுக்கு விழா எடுத்தார்க‌ள். ஜுலை 30, 1947 அன்று திருவ‌ல்லிக்கேணியில் ந‌ட‌ராஜா க‌ல்விக் க‌ழ‌க‌ம் ந‌ட‌த்திய‌ பொதுக்கூட்ட‌த்தில் ப‌ம்ம‌ல் ச‌ம்பந்த‌ முத‌லியார் என்.எஸ்.கேவுக்கு "க‌லைவாண‌ர்" என்ற‌ ப‌ட்ட‌ம் சூட்டி, "க‌லைவாண‌ர்" என்று பொறிக்க‌ப்ப‌ட்ட‌ வெள்ளிக் கேட‌ய‌த்தையும் அளித்தார்.

ல‌ட்சுமிகாந்த‌ன் கொலை வ‌ழ‌க்கு

எல்லா நாளைப்போல‌வே இன்றும் காலை எழுந்து, ஒரு கையில் காபியும், இன்னொரு கையில் செய்தித்தாளையும் எடுத்துப்பார்க்க‌, முத‌ல் ப‌க்க‌த்திலேயே "ர‌ஜினியும், வ‌டிவேலுவும் கொலை வ‌ழ‌க்கில் கைது!" என்று இருந்தால் உங்க‌ளுக்கு எப்ப‌டி இருக்கும்? குறைந்த‌ப‌ட்ச‌ம், புருவ‌ங்க‌ள் உய‌ர்ந்து, க‌ண்க‌ள் அக‌ல‌மாகி, கோப்பையில் இருந்து காபி சிறிது சிந்தி செய்தித்தாளில் ப‌ட்டு, உங்க‌ளுக்கு புரையேறும் அல்ல‌வா. ஏற‌க்குறைய‌ இதே நிலைதான் ஏற்ப‌ட்ட‌து ந‌வ‌ம்ப‌ர் 28, 1944 அன்று செய்தித்தாள் ப‌டித்த‌வ‌ர்க‌ளுக்கு.

ந‌வ‌ம்ப‌ர் 27, 1944 - இன்று சினிமாவில் இருக்கும் மூத்த‌ க‌லைஞ‌ர்க‌ள் யாராலும் ம‌ற‌க்க‌ முடியாத‌ நாள் இது. இந்த‌ நாளில்தான் அன்றைய‌ சூப்ப‌ர் ஸ்டார் எம்.கே.தியாக‌ராஜ‌ பாக‌வ‌த‌ரும், ந‌கைச்சுவை ந‌டிப்பில் பிராத‌ன‌ ந‌டிகராக‌ இருந்த‌ என்.எஸ்.கிருஷ்ண‌னும் ல‌ட்சுமிகாந்த‌ன் கொலை வ‌ழ‌க்கிற்காக‌ கைது செய்ய‌ப்ப‌ட்டார்க‌ள்.


யார் இந்த‌ ல‌ட்சுமிகாந்த‌ன்?

ஒரு வ‌ழ‌க்க‌றிஞ‌ர் ஆக‌வேண்டும் என்ற‌ நியாய‌மான‌ ஆசை கொண்டிருந்த‌வ‌ர்தான் ல‌ட்சுமிகாந்த‌ன். ஆனால் குடும்ப‌ச் சூழ்நிலை கார‌ண‌மாக‌ அவ‌ரால் ச‌ட்ட‌ம் ப‌டிக்க‌ இய‌லாம‌ல் போன‌து. ஆனாலும் ச‌ட்ட‌ம் ப‌ற்றிய‌ நிறைய‌ விஷ‌ய‌ங்க‌ளை அறிந்திருந்தார். ச‌ட்ட‌த்தின் உத‌வியால் ஒரு "ட‌வுட்"ஆக‌வே (Tout - ப‌ண‌த்திற்காக‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர்க‌ளுக்கு கேஸ் பிடித்து த‌ருவ‌து) வாழ்க்கையில் ச‌ம்பாதிக்க‌ ஆர‌ம்பித்தார்.

ஒரு ப‌த்திர‌த்தில் பொய் கையெழுத்திட்ட‌த‌ற்காக‌ ஃபோர்ஜ‌ரி வ‌ழ‌க்கில் கைது ப‌ண்ணி, போலீஸார் ல‌ட்சுமிகாந்த‌னை ராஜ‌முந்திரியில் உள்ள‌ சிறைச்சாலைக்கு, ர‌யில் மூல‌ம் அழைத்துச் சென்ற‌போது, ர‌யிலில் இருந்து குதித்துவிட்டார். பின்பு ஏற்ப‌ட்ட‌ தொட‌ர் விசார‌ணையில் இவ‌ர் ப‌ல‌ குற்ற‌வாளிக‌ளோடு தொட‌ர்பு கொண்டிருப்ப‌து தெரிய‌வ‌ந்த‌து. த‌ப்பித்த‌ சில‌ நாட்க‌ளிலேயே மீண்டும் போலீஸாரிட‌ம் வ‌ச‌மாக‌ மாட்டிக்கொள்ள‌, இம்முறை அந்த‌மான் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்க‌ப்ப‌ட்டார். பின்பு விடுத‌லையாகி மீண்டும் ம‌த‌றாஸுக்கு வ‌ந்த‌போது அவ‌ருக்கு தோன்றிய‌ ஒரே எண்ண‌ம், ஒரு ப‌த்திரிக்கை ஆர‌ம்பிப்ப‌‌து.

ந‌ய‌ன்தாரா ந‌டித்த‌ ச‌மீப‌ கால‌ ப‌ட‌ங்க‌ளில் வெற்றிக‌ர‌மாக‌ ஓடிய‌ பட‌ம் என்ன‌?..........அடுத்த‌ வ‌ரி ப‌டிக்காம‌ல் ச‌ற்று யோசியுங்க‌ள். ஆத‌வ‌ன்? (காமெடி ப‌ண்ணாதீங்க‌:)), வில்லு? ஏக‌ன்? ச‌த்ய‌ம்? குசேல‌ன்? ஹூஹூம்....ப‌தில்...யார‌டி நீ மோகினி. ஆனாலும் எப்ப‌டி இன்னும் ந‌ய‌ன்தாராவால் லைம்லைட்டில் இருக்க‌முடிகிற‌து? சிம்பிள், எப்போதும் அவ‌ரைப் ப‌ற்றிய‌ கிசுகிசு வ‌ந்துகொண்டேயிருக்கிற‌து. இன்று வேண்டுமானால் சினிமாவில் நீடித்து இருப்ப‌த‌ற்கு இந்த‌ கிசுகிசுக்க‌ள் பெரும் உத‌வி செய்ய‌லாம். ஆனால் 1940க‌ளில் கிசுகிசு என்றாலே ஒருவித‌ அச்ச‌த்துட‌னே இருந்த‌ன‌ர் ந‌டிக‌, ந‌டிகைக‌ள்.

இந்த‌ அச்ச‌த்தை ந‌ன்றாக‌ ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டார் ல‌ட்சுமிகாந்த‌ன். "சினிமா தூது" என்றொரு மூன்றாம்த‌ர‌ ம‌ஞ்ச‌ள் ப‌த்திரிக்கையை ஆர‌ம்பித்து, அப்போது புக‌ழின் உச்சியில் இருந்த‌ அனைத்து க‌லைஞ‌ர்க‌ளின் அந்த‌ர‌ங்க‌ வாழ்க்கையைப் ப‌ற்றி எழுத‌ ஆர‌ம்பித்தார். ஆர‌ம்பித்து வைத்த‌ இந்த‌ சுவார‌ஸ்ய‌ம் ம‌க்க‌ளின் ம‌த்தியில் ப‌சியெடுத்த‌ க‌ட‌ல் போல‌ ப‌ர‌வ‌, சுனாமி வ‌ந்த‌து என்ன‌வோ க‌லைஞ‌ர்க‌ளின் வாழ்க்கையில். வாரா வார‌ம் இப்ப‌த்திரிக்கையில் த‌வ‌றாது இட‌ம்பெற்ற‌வ‌ர்க‌ள், எம்.கே.தியாக‌ராஜ‌ பாக‌வ‌த‌ர், என்.எஸ்.கிருஷ்ண‌ன், திரைப்ப‌ட‌ இய‌க்குன‌ர் ஸ்ரீராமுலு நாயுடு ம‌ற்றும் டி.ஆர்.ராஜ‌குமாரி. ப‌ல‌ க‌லைஞ‌ர்க‌ள் ப‌ண‌ம் என்னும் உண‌வால் ல‌ட்சுமிகாந்த‌னின் வாயை அடைத்த‌ன‌ர், அடைத்த‌வ‌ரையெல்லாம் தூ‌ற்றி எழுத‌ ல‌ட்சுமிகாந்த‌னின் பேனாவுக்கு கூட‌ ம‌ன‌து வ‌ராது.

இவ‌ரின் எழுத்தால் வெறுத்துப்போன‌ பாக‌வ‌த‌ர், என்.எஸ்.கே ம‌ற்றும் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர், அப்போது ம‌த‌றாஸ் க‌வ‌ர்ன‌ராக‌ இருந்த‌ ஆர்த‌ர் ஓஸ்வால்ட் ஜேம்ஸ் ஹோப்பிட‌ம் (Arthur Oswald James Hope), "சினிமா தூது" ப‌த்திரிக்கை ப‌ற்றி விரிவாக‌ கூறி, அத‌னுடைய‌ ப‌திப்பை ர‌த்து செய்ய‌வேண்டும் என்றொரு ம‌னு ச‌ம‌ர்ப்பித்த‌ன‌ர். "தூது" வ‌ருவ‌தும் நின்ற‌து. ஆனால் ம‌ஞ்ச‌ள் ப‌த்திரிக்கைக்கு ம‌க்க‌ளிட‌ம் கிடைத்த‌ வ‌ர‌வேற்பை இழ‌க்க‌ ல‌ட்சுமிகாந்த‌ன் த‌யாராக‌ இல்லை. எப்ப‌டியாவ‌து மீண்டும் எழுத‌ ஆர‌ம்பிக்க‌வேண்டும் என்ற‌ வெறி கொண்டிருந்த‌ நேர‌ம‌து.

அப்போது லிங்கிச்செட்டித் தெருவில் "ஹிந்து நேச‌ன்" என்றொரு ப‌த்திரிக்கையை அன‌ந்த‌ய்ய‌ர் என்ப‌வ‌ர் ந‌ட‌த்திக்கொண்டிருந்தார். வெகு சுமாராக‌ போய்க்கொண்டிருந்த‌ இந்த‌ ப‌த்திரிக்கைதான் ல‌ட்சுமிகாந்த‌னுக்கு, வீட்டில் யாருமில்லாத‌போது ச‌ர்க்க‌ரை வியாதிக்கார‌ரின் க‌ண்ணில் பட்ட‌ இனிப்பு போல‌ ஆன‌து. ப‌ண‌த்தைக் கொடுத்தார். வேலை முடிந்த‌து. அடுத்த‌ இத‌ழ் வெளியான‌து, ப‌திப்பாசிரிய‌ர் அன‌ந்த‌ய்ய‌ர், ஆசிரிய‌ர் ல‌ட்சுமிகாந்த‌ன்! :D அடித்தால் வ‌ரும் ஸ்மைலியைப் போல் ப‌ல் இளித்த‌ப்டியே மீண்டும் உலாவ‌ர‌த் தொட‌ங்கிய‌து பிர‌ப‌ல‌ங்க‌ளின் அந்த‌ர‌ங்க‌ வாழ்க்கை!


ந‌வ‌ம்ப‌ர் 8, 1944

வேப்பேரியில் உள்ள‌ த‌ன் ந‌ண்ப‌ரும் வ‌ழ‌க்க‌றிஞ‌ருமான‌ ந‌ற்குண‌ம் என்ப‌வ‌ரை ச‌ந்தித்துவிட்டு, புர‌சைவாக்க‌த்தில் உள்ள‌ த‌ன் வீட்டுக்கு ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் திரும்பிக் கொண்டிருந்தார் ல‌ட்சுமிகாந்த‌ன். திடீரென்று சைக்கிள் ரிக்ஷா பின்ப‌க்க‌மாக‌ சாய்ந்து விழுந்த‌து! ரிக்ஷாவின் பின்புற‌ம் இருவ‌ர் நின்று கொண்டிருந்த‌ன‌ர் - வ‌டிவேலு & நாக‌லிங்க‌ம் (வ‌டிவேலுவுக்கும் ல‌ட்சுமிகாந்த‌னுக்கும் வீடு காலி செய்யும் விஷ‌ய‌த்தில் பிர‌ச்னை ஏற்ப‌ட்டு ஏற்க‌ன‌வே முன்விரோத‌ம் இருந்த‌து).

இந்த‌ நேர‌த்தில் ம‌ல்லாந்து விழுந்து கிட‌ந்த‌ ல‌ட்சுமிகாந்த‌னை வ‌டிவேலு க‌த்தியால் குத்தினான். திகைத்து நின்ற‌ ரிக்ஷாக்கார‌ரை நாக‌லிங்க‌ம் அடித்து விர‌ட்டினான். பின்பு த‌ன் ப‌ங்குங்கு நாக‌லிங்க‌மும் கையிலிருந்த‌ பேனாக‌த்தியால் ல‌ட்சுமிகாந்த‌னை குத்தினான். வ‌ந்த‌ வேலை முடிந்த‌வுட‌ன் அங்கிருந்து த‌ப்பித்து ஓடின‌ர் இருவ‌ரும். ஆனால் ல‌ட்சுமிகாந்த‌ன் சாக‌வில்லை........

முடிவு அடுத்த‌ (பிப்ர‌வ‌ரி 25, 2010) ப‌திவில்.......