
கை நிறைய சம்பளம். வாய் நிறைய 'ஹே ட்யூட்'. நிறுவனமே பேருந்தனுப்பி கூட்டிச் செல்லும். குடும்பத்தோடு வாரயிறுதியில் திரைப்படம், கடற்கரை மற்றும் உணவகம். நண்பர்களுடன் டிஸ்கோதே. புறநகர்ப் பகுதியில் சொந்தமாக ஒரு வீடு. பிரதி மாதம் செலுத்த வேண்டிய வீட்டுக்கடன். சமயங்களில் ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம் ஆகியவைகளுக்குச் சென்று உதவி. மிக முக்கியமாக, மற்ற துறையினரின் வயிற்றெரிச்சல். இவை மட்டுமே பெரும்பாலான மென்பொருள் துறையினருக்கு வாழ்க்கை முறை.
வருடம் 2008. உலகளவில் பொருளாதாரச் சரிவு. உலகளவில் என்றால் உலகளவில்தான். ஹாலிவுட் படங்களில் மட்டும்தான் உலகம் என்றால் அமெரிக்கா. அமெரிக்கா மட்டுமல்லாது ஜப்பான், இந்தியா, சீனா உட்பட அனைத்து நாடுகளும் பொருளாதாரச் சரிவில் ஆட்டம் கண்டன.
எப்பாடுபட்டேனும் இதை சமாளித்தாகவேண்டும். பெருந்தலைகள் அறையெடுத்து யோசித்திருப்பார்கள் போல. விழுந்தது சம்மட்டி அடி. வாங்கியது மென்பொருள் துறையினர்.

பணியாளர்களைக் குறைக்க வேண்டும். எடுத்தவுடன் நேரடியாகச் சொல்லமுடியாது. முதலில் வேலை நேரத்தை நீட்டித்து உடலளவிலும், மனதளவிலும் சோர்வடையச் செய்யவேண்டும். வேலை இருக்கிறதோ இல்லையோ. விடுமுறை நாட்களில் வரச்செய்யவேண்டும். நிறுவனம் அளித்த இலவச டீ, காபி, குறைந்த விலைச் சாப்பாடு அனைத்தும் விலக்கிக்கொள்ளப்படும். மாநகரப் போக்குவரத்துக் கழகம் நம் நிறுவனம் அமைந்திருக்கும் வழித்தடத்தில் நிறைய பேருந்துகளை அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். அதனால் நிறுவனம் பேருந்து வசதியைத் தற்காலிகமாக, சோதனை முயற்சிக்காக நிறுத்திவைத்துள்ளது என அறிவிக்கவேண்டும். அட! அனைவரும் கைக்குட்டை வைத்திருக்கிறீர்களே, பிறகெதற்கு கை கழுவுமிடத்தில் டிஷ்யூ காகிதம்? சென்ற வருடம் 25% ஊதிய உயர்வு வாங்கினீர்கள் அல்லவா? இந்த வருடம் 15% உங்கள் சம்பளத்தில் குறைக்கப்படுகிறது.
வேறு வழியில்லை. ஒன்று இந்த இம்சைகளைத் தாங்க முடியாமல் வேலையை நாமே விட்டுவிட வேண்டும். இல்லையென்றால் கடைசிப் பல் இருக்கும்வரை கடித்துக்கொண்டு வாய் மூடி இருக்கவேண்டியதுதான்.
இதன்பின்னும் யாரையாவது பணிநீக்கம் செய்யவேண்டுமா? எளிது. குமுதத்தில் வருவது போல் ஆறு வித்தியாசமெல்லாம் இல்லை வணிக பட வில்லனுக்கும், நிறுவன மேலாளருக்கும். ஒரு வித்தியாசம் மட்டுமே. அவர் "தூக்குங்கடா அவனை" என்று கர்ஜிப்பார். இவர் தன் இருக்கையில் அமர்ந்தபடி, அலுவலக மனிதவளத் துறைக்கு மின் மடலைத் தட்டச்சிக்கொண்டிருப்பார், "We can terminate the contract of these employees".
நிறுவனத்திற்கு விசுவாசமாக இருந்திருக்கிறோம். அவசரமாக முடித்தே ஆகவேண்டும் என்ற சூழ்நிலைகளில் பதினான்கு மணி நேரத்திற்கு மேல் வேலை செய்திருக்கிறோம். விடுமுறை நாட்களில், பண்டிகை நாட்களில் கூட குடும்பத்தை மறந்துவிட்டு அலுவலகத்திற்கு வந்திருக்கிறோம். அதனாலென்ன? அதற்குத்தான் இவ்வளவு நாளாக 4 பக்கத்திலும், 5 பக்கத்திலும் நான்கைந்து 0க்களைப் போட்டு சம்பளமாக வாங்கினீர்களே. ஹும்..கிளம்புங்கள்!
வருடம் 2009. நிறுவனங்கள் 2008ல் நடத்திய 'பணியாளனே வெளியேறு' வைபவத்தில் தப்பித்து, கத்தியின் கீழ் தொங்கிக்கொண்டு பணிபுரிந்த நிலை. வருடயிறுதி அப்ரைசல் (தமிழ்ல எப்படி சொல்றது?). 'இன்க்ரிமென்ட்' ஒன்றையே பல வருடங்களாக அப்ரைசலில் பார்த்தவர்களுக்கு புதிதாக ஒரு வஸ்து காத்துக்கொண்டிருந்தது. ரிஸஷன். இதுவரை அறியாத வார்த்தை. அறிமுகப்படுத்தியது மேலாளர். புரியவைத்தது கூகுள் மற்றும் MS Wordல் Shift F7.
"உனக்கே தெரியும்பா மார்க்கெட் எப்படியிருக்குன்னு. உன் பேரும் லிஸ்ட்ல இருந்தது. நான்தான் ஸ்ட்ராங்கா ரெகமண்ட் பண்ணி உன்னை ரீட்டெய்ன் பண்ணியிருக்கேன். இன்க்ரிமெண்ட்லாம் இல்லியேன்னு நினைக்காதே. இன்னும் வேலைல இருக்கோம்னு சந்தோஷப்படு" என்று நாகரிகமான எச்சரிக்கை கிடைக்கும். ஒரு ரூபாய் கூட நஷ்டமடையாத நிறுவனங்களும் ரிஸஷனைக் காரணம் காட்டி, சலுகைகளைப் பறித்ததும் அரங்கேறியது. அவர்களைக் குறை சொல்ல முடியாது. ரிஸஷன் என்ற புயல் வீசியது. தூற்றிக்கொண்டார்கள்.
வருடம் 2010. இந்த வருடமும் உங்கள் மேலாளர் ரிஸஷன் ராகத்திலேயே பாட ஆரம்பித்தால், அப்ரைசல் கச்சேரி முடிந்தவுடன் தைரியமாக முடிவெடுத்து வேறு வேலையைப் பாருங்கள். சத்தியமாக இப்போது ரிஸஷன் இல்லை. வேலை வாய்ப்பூ(க்)கள் மீண்டும் துளிர்விடத் தொடங்கியுள்ளன. இன்ஃபோசிஸும், டிசிஎஸ்ஸும் இவ்வருடம் வேலைக்கு அள்ளப்போகும் நபர்களின் எண்ணிக்கை 30000. வேலை வாய்ப்புக்கான மின்மடல்கள் சென்ற வருடத்தில் இதே சமயத்தில் மாதம் மூன்று நான்குதான் வந்துகொண்டிருந்தன. இப்போது, வாரத்திற்கே ஏழெட்டு மின்மடல்கள்!
புதிய வேலை கிடைத்ததும் வறட்டு கெளரவத்துக்காக, அவசியமற்ற ஆடம்பரப் பொருள்களில் பணத்தை விரயமாக்காதீர்கள். அடுத்து எவனாவது லூசுப் பயல் விமானத்தை எடுத்துக்கொண்டு பில்டிங்கில் போய் பார்க் செய்தால், மீண்டும் பொருளாதாரம் தடுமாறும் என்பது உண்மை. எனவே குறைந்தது ஆறு மாதங்களுக்குத் தேவையான பணம் எப்போதும் வங்கி கணக்கில் இருக்கட்டும். இவை யாவும் அறிவுரை அல்ல. ரிஸஷன் நேரத்தில் மன உளைச்சலில் பலர் அவஸ்தைப்பட்டதை நேரில் பார்த்திருக்கிறேன். ஒரு சில என் அனுபவமும் கூட. ஒரு நண்பனாக பகிர ஆசைப்பட்டேன். அவ்வளவுதான். ஓவரா பேசுறான்டா என்று தோன்றினால் மன்னிக்கவும்.
ஒரு சின்ன யோசனை. வேலை தேடும்போது உங்கள் விபரங்களை நாக்ரியில் பதித்திருப்பீர்கள். ஒவ்வொரு ஞாயிறு அல்லது திங்கட் கிழமைகளில், உங்கள் ரெஸ்யூமை ரீஅப்லோட் செய்யுங்கள். ஒவ்வொரு மாத முடிவிலும், உங்கள் அனுபவத்தில் ஒரு மாதம் கூடுகிறது. அதையும் அப்டேட் பண்ணவேண்டும். இப்படிச் செய்வதால் ப்ரொஃபைல் பெயருக்குக் கீழே Updated on என்று அப்டேட் செய்யப்பட்ட தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். நிறுவனங்கள் நாக்ரி போன்ற வேலைவாய்ப்புத் தளங்களில் தேடும்போது, recently updated profileகளுக்கு முன்னுரிமை தருகின்றனர். இது எனக்குத் தெரிந்த ஒன்று.
வேறு ஏதேனும் யோசனை இருந்தால், பின்னூட்டத்தில் பகிருங்கள். பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.