சொந்த ஊர் என்னவோ திருவண்ணாமலைதான். ஆனால் வசிப்பது வறுமைக்கோட்டுக்கு கீழே. நோக்கியா, ஹுண்டாய் என பன்னாட்டு நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூரை ஆண்டுகொண்டிருந்தாலும், அவற்றிற்கு அடிபணியாமல் இருக்கும் ஒரு குறுநில மன்னரைப் போன்றவர் அவனுடைய தந்தை. தேர்ந்த நெசவாளி. அவருக்கு உதவியாய் அவனது அம்மா. கல்லூரி செல்லும் வயதில் ஒரு தங்கை.
அவனுடைய தந்தை என்னமோ ஸ்ரீபெரும்புதூர் ஜாம்பவான்களுக்கு அடிபணியாதவர்தான். ஆனால் அவன் பணிந்துபோக தயாராகயிருந்தான். வறுமைக்கோடு. எப்பாடுபட்டேனும் இந்த கோட்டிலிருந்து விலகி தன் குடும்பத்தை ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்கிற வெறி.
பெரும் முயற்சிக்குப் பின்னர், சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அவனுக்கு வேலை கிடைத்தது. மாதச் சம்பளம் ரூ.6000. திருவண்ணாமலையில் இருந்து தினமும் பேருந்தில் வந்து போக முடியாது. பண விரயம் மட்டுமல்லாமல் பயணத்தால் ஏற்படும் உடற்களைப்பும் ஒரு காரணம். வேறு வழியில்லை. தாம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வேலைக்கு செல்வது என முடிவு செய்தான்.
பிறந்தது முதல், அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு மேல் தன் பெற்றோரை பிரிந்ததில்லை அவன். பணியில் சேர்ந்த பின் வாரம் ஒரு முறைதான் வீட்டுக்குப் போக முடிந்தது. இந்த பிரிவு அவனை வருத்தமடையச் செய்தாலும், தன் குடும்பம் நல்ல பொருளாதார நிலைமைக்கு உயர இது அவசியம் என்று கருதி தன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.
பணம்..பணம்..பணம்..இது ஒன்றே முக்கியம். குடும்பத்தின் வறுமை ஒழிய தன் கவனம் முழுதும் பணம் சம்பாதிப்பதிலேயே இருக்க வேண்டும் என்பது அவனுடைய லட்சியம், வெறி, சித்தாந்தம், கொள்கை, கோட்பாடு எல்லாமே. காலை 6:30 மணிக்கு அவனுடைய ஷிஃப்ட் துவங்கும். ஆறு மணிக்கு முன்னே அலுவலகத்துக்குச் சென்றுவிடுவான்.
அன்று திங்கள் கிழமை. பனி விலகாத காலை நேரம். ஆறாவது தளத்தில் உள்ளது அலுவலகம். தரைத் தளத்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தினான். ஆறாம் தளம் சென்றடைந்தவுடன் லிஃப்ட் கதவு திறந்தபோது கீழே விழுந்தது அவனுடைய உயிரற்ற உடல்!
அங்கிருந்த செக்யூரிட்டிகள் அவனுடைய டீமுக்கு தகவல் அளித்து அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர் மறுநொடியே சொன்னார், "ஸாரி ஹி ஈஸ் நோ மோர்". 'டெட் ஆன் அரைவல்' என்று ரிப்போர்ட்டில் பதிவு செய்தார்.
பின்னர் அவனுக்கு நெருங்கிய நண்பர்களிடம் விசாரித்தபோது தெரியவந்தது. அவனுக்கு புகை, குடி என்று எந்த பழக்கமும் இல்லை. ஒவ்வொரு மாதமும் அவனுக்கென்று ரூ.1500 எடுத்துக்கொண்டு மீதி பணத்தை தன் குடும்பத்துக்கு அனுப்பிவிடுவான். அந்த 1500ல் போக்குவரத்து, அலைபேசி, உணவு ஆகியவற்றிற்கான செலவுகள் அடங்கும். செலவைக் கட்டுப்படுத்த அவன் மேற்கொண்ட ஒரு முடிவு..தினமும் காலை உணவைத் தவிர்த்து ஒரு நாளைக்கு இரு வேளை மட்டுமே உண்ணுவது.
இந்த பழக்கம் வெகு நாட்களாய்த் தொடர்ந்து உடலுக்குள் வாயு உருவாகி அது இதயத்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 வயதில் மாரடைப்பு! இது ஏதோ கற்பனையாக எழுதப்பட்ட வரி அல்ல. அவனுடைய உணவு பழக்கத்தை அவன் நண்பர்கள் கூறக்கேட்டு அறிந்த பின் மருத்துவர் சொன்னது.
பணம் ஒன்றையே பிராதனமாகக் கருதி பரபரவென பறந்துகொண்டிருக்கும் இந்த யுகத்தில், நம்மில் பெரும்பாலானோர் காலை உணவைத் தவிர்த்துவிடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும் காரணம்.."டைம் இல்ல". சாப்பிடுவதற்குக் கூட நேரமில்லாமல் அப்படி என்ன கிழித்துவிடப் போகிறோம்?
இதற்கு மேல் இதைப்பற்றி நீங்களே சொல்லுங்கள்!
பி.கு: நானும் இந்த மடத்தனமான காரணத்தைக் காட்டி பல நாட்கள் காலை உணவைத் தவிர்த்திருக்கிறேன். அவன் மரணம்...எனக்கொரு பாடம். அன்றிலிருந்து என்னுடைய காலை உணவு நேரம் 10 அல்லது 10:30க்குள்.
நமக்கு தோழி, மனைவி, நண்பன்னு எந்த இம்சையுமில்லை. இம்சையில்லாம வாழ்க்கையான்னு சந்தோஷப்படாதீங்க. எல்லா இம்சையையும் ஒண்ணாக் குடுக்க தான் ஆஃபிஸ்ல இருக்காரே டேமஜர். அவர் மத்தவங்களுக்கு குத்துறதையெல்லாம் சேர்த்து நமக்கே குத்தறார். நேர்ல அவரைக் குத்த முடியல. பதிவுலயாவது குத்துவோம்.
#சுவாரஸியமா தமிழ்மணத்துல மேஞ்சிட்டு இருக்கும் போது நாலு மணிக்கு மீட்டிங்னு அஞ்சு நிமிஷம் முன்னாடி சொல்லி வர சொல்லும் போது.
#பெர்ஃபார்மன்ஸில் டாப்பில் நாம இருந்தாலும் அப்ரைசல் டைம்ல “என்னால எதுவும் ரெகமெண்ட் பண்ண முடியாதுப்பா. எல்லாம் மேனேஜ்மெண்ட் தான் டிசைட் பண்ணனும்”ன்னு சீரியஸ் சீனிவாசனா டயலாக் அடிக்கும் போது.
#என்றாவது ஒரு நாள் டைம் ஷீட் அப்டேட் பண்ணாமல் போயிருப்போம். மறுநாள் டீம் கொலிக்ல இருந்து, கம்பெனியின் வைஸ் ப்ரெசிடன்ட் வரை சிசியில் போட்டு "இன்னும் டைம் ஷீட் அப்டேட் பண்ணவேலியா"ன்னு கேட்டு மெய்ல் வருமே.... அந்த சமயம்.
#மீட்டிங் முடிச்சிட்டு ஒண்ணுமே புரியாம தூங்கி எழுந்த மாதிரி கண்ணைக் கசக்கிகிட்டு வெளில வரும் போது “மீட்டிங்கோட மினிட்ஸ் ஒண்ணு ப்ரிப்பேர் பண்ண்டுங்களேன். நாளைக்கு எல்லாருக்கும் சர்குலர் பண்ணிடலாம்”ன்னு தனக்கு மட்டும் எல்லாம் புரிஞ்சுட்ட மாதிரி சொல்லும் போது.
# ப்ராஜெக்ட் டெட்லைன். டே அண்ட் நைட் ஷிஃப்ட் போட்டு வேலை பார்த்திட்டிருப்போம். இங்கேயே இருந்த டேமேஜரை எங்கே காணோம்ன்னு தேடும் போது தான் ஆஃபிஸ் பாய் சொல்வான் அவர் கேண்டீன்ல அரட்டை அடிச்சிட்டு கெஸ்ட் ஹவுஸ்ல தூங்கிட்டதா... அப்போ மட்டும் அவர் கைல கிடைச்சாரு, செம குத்து தான்.
#வேலைக்கு சேர்ந்த முதல் நாள். டேமேஜர் சிரித்துக்கொண்டே சொல்லுவார், உங்களுக்கு என்ன ப்ராப்ளம்னாலும் எப்ப வேணும்னாலும் எங்கிட்ட வந்து பேசலாம். சில நாட்கள் கழித்து நமக்கும் சொல்லிவைத்தாற் போல் ஒரு பிரச்னை வரும். அவர்தான் சொல்லியிருக்காரேன்னு நம்ம்ம்பி அவரிடம் போவோம் "ஒரு சின்ன இஷ்யூ உங்ககிட்ட பேசணும்". மடிக்கணிணியை பார்த்தபடியே சொல்லுவார் "கொஞ்சம் பிஸியா இருக்கேன்பா அப்புறம் நானே கூப்பிடறேன்". கொஞ்சம் அவர் மடிக்கணிணி திரையை எட்டிப் பார்த்தால் மாயாஜால் ஆன்லைன் புக்கிங் அவரை வரவேற்றுக்கொண்டிருக்கும். நீங்களே சொல்லுங்க எனக்கு அப்போ ஒரு குத்து விடணும்னு தோணுமா தோணாதா...
#10, 15 நாள் ஃபேமிலியோடு வெளிநாட்டுக்கு வெக்கேஷன் போய் திரும்பியிருப்பார். நாம போய் நாலு நாள் லீவு வேணும், ஃபேமிலியோட திருப்பதி போறேன் ஒரு சின்ன வேண்டுதல்னு இவர்கிட்ட வேண்டுதல் வெச்சா கூலா திருப்பி கேட்பார்.."ஏம்பா இதெல்லாம் வீக் எண்ட்ல வெச்சுக்கலாம்ல". டேமேஜர்களா! இப்படிலாம் இருந்தா சாமியே கண்ணை குத்திடும்!
#அப்ரைசல். ஒன் டூ ஒன்னில் சொல்லுவார்.."இதப்பாருப்பா இந்த ரிஸஷன் டைம்லயும் உனக்குதான் டீம்லயே அதிகமா போட்டிருக்கேன் யார்கிட்டயும் சொல்லிக்காத". சிவாஜியின் கண்கள்ல வெளியே வரட்டுமா வேண்டாமான்னு துடிச்சுட்டிருக்குற கிளிசரின் மாதிரி நம்ம கண்லேயும் கண்ணீர் துடிச்சுக்கிட்டிருக்கும். வெளியே வந்தா கூட இருக்கற டீம் மெம்பர் சொல்லுவான் "மச்சான் இந்த அப்ரைசல்ல எனக்குதான் அதிகமா போட்டிருக்காராம், யார்கிட்டேயும் சொல்லாதன்னு சொல்லிருக்காரு. நான் உன்கிட்ட மட்டும்தான் சொல்லியிருக்கேன், உனக்குள்ளேயே மேட்டர வெச்சிக்கோ". அப்போ நம்ம டேம்ஸை கட்டிப்போட்டு, ஒரே டயலாகை எல்லார்கிட்டேயும் சொல்லுவியா சொல்லுவியான்னு கேட்டுகிட்டே ரெண்டு கைலயும் ரத்தம் வர்ற வரைக்கும் குததணும்.
#ரெண்டு நாள் மழை பெய்தாலே வீட்டு பக்கத்தில் ஒரு மினி நீச்சல் குளம் உருவாகிடும். சரி லீவு போடவேணாம்னு கஷ்டப்பட்டு நீந்தி ஆஃபிஸுக்கு வந்தா, பெருசா கண்டுபுடிச்சுட்ட மாதிரி ஷெர்லக் ஹோம்ஸ் ரேஞ்சுக்கு முகத்தை வெச்சுகிட்டு கேட்பார், "ஏம்பா செப்பல்ல வந்திருக்க....". காதை கடிக்கக்கூடாது ஆனா மைக் டைசனா ஒரு நிமிஷம் மாறணும்னு தோணும் பாருங்க..ஸ்ஸ்ஸ்!
#சத்யம்..சனிக்கிழமை..காதலிகூட சந்தோஷமா ஒரு நூன் ஷோ, சாயங்காலமா மெரினா, முடிச்சதும் கேண்டில் லைட் டின்னர்ன்னு ப்ளான் பண்ணி கனவோடு அந்த வார இறுதிக்குக் காத்திட்டிருப்போம். என்ன டிரஸ், எவ்வளோ மேக்கப் ன்னு அவளும் முடிவு செஞ்சிருப்பா. வெள்ளிக்கிழமை சாயங்காலம் டீம் மீட்டிங் போட்டு "Guys, we are working tomorrow" ன்னுவார். அதுக்கு ச(னி)ரின்னு சொல்லுவோம். ஆனா காதலி நம்ம மூஞ்சிலேயே நாளைக்குத் துப்புவாளேன்னு பயம் வரும். "நாளைக்கு நான் ஆஃபிஸுக்கு வந்தா எவ்ளோ பிரச்னை தெரியுமாய்யா என் வாழ்க்கைல" ன்னு கதறிக் கதறி அழுதுட்டே குத்தணும் போலருக்கும்!
#பதிவுலகமே எழுதுதே நாம எழுதினா என்ன ஆகிடப் போகுதுன்னு இந்தப் பதிவ ஜாலியா எழுதிருக்கேனே. இதை அவர் பார்த்துட்டுக் கத்துக் கத்துன்னு கத்துவாரு பாருங்க. அப்போ நம்ம கை வலிக்குற வரைக்கும் அவர் மூஞ்சில குத்தத் தோணும்.
இந்தப்பதிவு என் டேமேஜர் கண்ல படாம இருந்தா இதை ஆரம்பிச்சு வெச்சவருக்கு மொட்டையடிச்சு, அடுத்து எழுதினவருக்குக் காது குத்தி, அப்புறமும் தொடர்ந்தவங்க நாக்குல வேல் குத்தி தேர் இழுக்க வைக்கிறேன்னு ப்ளாக்காத்த அம்மன்கிட்ட வேண்டிக்குறேன்.
உங்கள் அலைபேசியை யாரேனும் 'அடித்து'விடுகிறார்கள் அல்லது தெரியாமல் நீங்களே தொலைத்துவிடுகிறீர்கள். இந்த சூழ்நிலையில் உடனே நீங்கள் என்ன செய்வீர்கள்? வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு உங்கள் 'சிம்'மை ப்ளாக் செய்ய சொல்வீர்கள் சரியா?
சென்ற வாரம் இதையேதான் என் நண்பரும் அவரது வோடஃபோன் இணைப்பு பெற்ற அலைபேசியை தொலைத்தபோது செய்தார். சேவை மைய அதிகாரியும் நண்பரின் அலைபேசி விபரங்களை கேட்டு அறிந்து கொண்டு அவ்வாறே செய்வதாக உறுதி அளித்தார். பின்பு யோசித்து பார்க்கையில் நண்பர்கள், உறவினர்கள், வங்கி, அலுவலகம் என பல இடங்களில் இந்த எண்ணை கொடுத்திருப்பதால், இதே எண்ணை மீண்டும் வாங்கினால் நன்றாக இருக்குமென தோன்றியிருக்கிறது நண்பருக்கு. மீண்டும் சேவை மைய அதிகாரியுடன் தொடர்பு கொண்டு இதே எண் வேண்டுமென்றால், என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என கேட்டறிந்தார்.
நண்பர் இருக்குமிடம் குரோம்பேட்டை. எனவே சேவை மைய அதிகாரி, குரோம்பேட்டையிலுள்ள வோடஃபோன் அலுவலகத்திலேயே புதிய 'சிம்'மை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்த சில விவரங்கள்...
1. குரோம்பேட்டையிலுள்ள வோடஃபோன் அலுவலகத்தின் வேலை நேரம் காலை 10 முதல் இரவு 8 வரை. இந்த நேரத்திற்குள் எப்போது சென்றாலும் நீங்கள் வாங்கிக்கொள்ளலாம்
அவர்கள் புகாரை கேட்டதும் பெயரையும், பிறந்த தேதியையும் மட்டுமே கேட்டனர். சில நிமிடங்களில் பழைய எண்ணிலேயே புதிய சிம் கிடைத்தது. நண்பருக்கு மகிழ்ச்சி! They lived happily ever after என்பது போல் இத்துடன் இப்பதிவை முடித்துவிடலாம்தான்.
ஒன்று மட்டும் மனதை உறுத்துகிறது. அதென்ன பண்பு..வந்திருக்கும் வாடிக்கையாளர்களை உள்ளே அழைத்து அமரவைக்காமல், வெளியே சாலையில் நிற்கச்செய்வது? நாங்களென்ன உங்கள் வீட்டு செல்லப்பிராணிகளா..எப்போது உணவு கிடைக்கும் என்று உங்களையே பார்த்து வாலாட்டிக்கொண்டு கிடக்க.
இதை நுகர்வோர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லலாம் என்றெண்ணினால் வழக்கு இழுத்தடிக்குமோ என்ற அச்சமே அந்த எண்ணத்திற்குத் தடையாய் நிற்கிறது. இதுபோல ஒரு எண்ணம் மனதில் தோன்ற காரணமாயிருக்கும் இந்திய நீதித்துறையே, ஐ லவ் யூ சோ மச்!
வெளியே ஸ்ப்ரைட் விலை 7 என்றால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மட்டும் 10. இன்னும் என்னென்ன விஷயங்களுக்கு எத்தனை இடங்களில்தான் அனுசரித்துக் கொண்டே போகவேண்டும்? மார்க்கெட்டில் புதிதாக அறிமுகமாகும்போது கும்பிடு போட்டு வரவழைத்து, பின் அவர்கள் எவ்வளவு குட்டினாலும் தாங்கிக் கொள்வதில் மட்டும் முன்னேறிக் கொண்டே இருக்கிறோம். எங்களின் சகிப்புத்தன்மையை இன்னும் ஒரு படி உயர்த்திய வோ(ட்)டஃபோனுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
இரு வாரங்களுக்கு முன்.......வழக்கம் போல் இரவு தாமதமாகத் தூங்கி, காலை தாமதமாக எழுந்து அலுவலகத்திற்கு பரபரவென பறந்துகொண்டிருந்தேன். ச்சே இன்னைக்காவது ரொம்ப நேரம் புக் படிக்காம சீக்கிரம் படுக்கணும் என்று பல நாளாக எடுத்துக்கொண்டிருக்கும், ஆனால் ஒரு நாளும் நிறைவேற்ற முடியாத சபதத்தை மீண்டும் எடுத்துக்கொண்டே எஃப்எம் ஆன் செய்தேன்.
ரேடியோ மிர்ச்சியில் சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், "க்ரீம்ஸ் ரோட், டெய்லர்ஸ் ரோட், ஸ்டெர்லிங் ரோட், ஜோன்ஸ் ரோட் உட்பட 50 சாலைகளைத் தமிழில், தமிழறிஞர்கள் பெயரில் பெயர் மாற்றம் செய்யவுள்ளோம்" என்று செம்மொழி மாநாட்டுக்கு இங்கே பட்டர்ஃப்ளை எஃபெக்ட்டை...மன்னிக்கவும்..பட்டாம்பூச்சி விளைவை நிகழ்த்திக்காட்டினார்.