ரேடியோ மிர்ச்சியில் சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், "க்ரீம்ஸ் ரோட், டெய்லர்ஸ் ரோட், ஸ்டெர்லிங் ரோட், ஜோன்ஸ் ரோட் உட்பட 50 சாலைகளைத் தமிழில், தமிழறிஞர்கள் பெயரில் பெயர் மாற்றம் செய்யவுள்ளோம்" என்று செம்மொழி மாநாட்டுக்கு இங்கே பட்டர்ஃப்ளை எஃபெக்ட்டை...மன்னிக்கவும்..பட்டாம்பூச்சி விளைவை நிகழ்த்திக்காட்டினார்.
ஹோட்டலில் பூரி கொஞ்சம் உப்பலாக இல்லாவிட்டால், இந்த உப்பல் பிரச்னையை பதிவாக எழுதலாமா என்று யோசிப்பவன், சாலைகளின் பெயர் மாற்ற அறிவிப்பைக் கேட்டுவிட்டு சும்மாவா இருப்பேன்?

ஏன் மாற்ற வேண்டும்?
ப்ளாக் & ஒயிட் காலத்தில், வெள்ளைக்கார 'தொர'யின் குதிரை வண்டியை ஓட்டியதற்காக அவரின் பெயரில் ஒரு சாலை, புகழ் பெற்ற கட்டிடத்தை கட்டியதற்காக கொத்தனாரின் பெயரில் ஒரு சாலை என்று சென்னையில் பல சாலைகள் 'தொர' காலத்து பெயர்களிலேயே அமைந்துள்ளன. காந்தி, காமராஜர், அண்ணா என்று சாதித்த பல தலைவர்களின் பெயரில் ஆங்காங்கே சாலைகள் இருந்தாலும், ஸ்டெர்லிங் ரோட், எல்டாம்ஸ் ரோட், மில்லர்ஸ் ரோட், பிளவர்ஸ் ரோட், டெய்லர்ஸ் ரோட், பட்டுள்ளாஸ் ரோட், உட்ஸ் ரோட், கிரீம்ஸ் ரோட், போக் ரோட், ஜோன்ஸ் ரோட் என பெரும்பான்மையாக இருப்பது 'பீட்டர்'ஸ் ரோட்தான்.
வள்ளுவர் சாலை, பாரதிதாசன் சாலை, கண்ணதாசன் சாலை என நம் சாலைகளுக்கு நாம் தமிழில் பெயர் வைக்காமல், இங்கிலாந்தில் எலிசபெத் ராணி குடியிருக்கும் சாலைக்கா தமிழில் பெயர் வைக்க முடியும்? நம் பிள்ளைகளுக்கு சுந்தர், ராம், பாலாஜி, சங்கர், ஹேமா, ரேணுகா, லாவண்யா, கல்பனா என்றுதான் பெயர் வைக்கிறோம். வில்லியம் ஸ்மித், க்ரெக் பெல்ட்ஸ், டேமன் ஆன்டர்சன் என்றல்ல. தயவுசெய்து இதில் மதத்தை இழுக்க வேண்டாம் ப்ளீஸ்...நாம் குடியிருக்கும் சாலைக்கு மட்டும் ஏன் பெயர் தமிழில் இருக்கக்கூடாது?
அப்படியெனில் ஸ்டாலின் அவர் பெயரை மாற்றிக்கொள்வாரா என்றெல்லாம் கேட்கவேண்டாம். அவருக்கு ஏன் அந்த பெயர் வைக்கப்பட்டது என்பதை கலைஞர் எவ்வளவோ மேடைகளில் சொல்லிவிட்டார். ஆதலால் புதிதாக அரிசியை எடுத்து போட்டு அரைக்க முயலுவோம்.
மாற்றினால்?
அரசு நினைத்தால் ஒரே இரவில், ஒவ்வொரு சாலையிலும் இருக்கும் போர்டுகளில், புதிய மஞ்சள் பெயிண்ட் அடித்து, கருப்பு வண்ணத்தில் அழகு தமிழில் பெயர் மாற்றி எழுதிவிட்டு போய்விடலாம். மெட்ராஸை சென்னையாக மாற்றியவர்களுக்கு இது ஒரு விஷயமே அல்ல. ஆனால் ஒரு சாதாரண குடிமகன் ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், தொலைபேசி பில், கேஸ் ஏஜென்சி, பாஸ்போர்ட், அலுவலகம், பள்ளி என தன்னுடைய முகவரி கொடுத்திருக்கும் ஒவ்வொரு இடத்திற்கும் போய் சாலையின் பெயரை மாற்றிக்கொண்டா இருக்கமுடியும்? இந்த பிரச்னையை சமாளிக்க அரசு பொதுமக்களுக்கு எந்த விதத்தில் உதவி செய்யப் போகிறது?
மெட்ராஸ் என்பதை சென்னை என்று மாற்றினாலும், இன்னமும் சென்னை தவிர்த்து பல ஊர்களில் மெட்ராஸ்தான். 'பையன் மெட்ராஸ்ல வேலைல இருக்கான்பா', 'பொண்ணு மெட்ராஸ்ல பெரியவ வீட்ல தங்கி படிக்கறா', 'மச்சி இங்க ஏன்டா ட்ரஸ் எடுக்கற, மெட்ராஸ்லயே எடுக்க வேண்டியதுதானே' என்று சென்னையை விட மெட்ராஸ்கள்தான் புழங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்த பெயர் மாற்ற விஷயத்தில் சென்னைக்கு முதன்முறை வருபவர்கள் மட்டுமன்றி மற்ற எல்லோரையும் விட அதிகமாக அவதிப்படப்போவது தபால் துறையும், கொரியர் நிறுவனங்களும். இவர்கள்தான் மற்ற எல்லோரையும் விட அதிகமாக, பெயர் மாற்றிய சாலைகளை கவனத்தில் கொள்ள வேண்டியவர்கள். இவர்களே விழி பிதுங்கினால், பாதிக்கப்படப்போவது நாம்தான். 'புள்ளி ராஜா'வையும், 'தில்லு துர'வையும் வெகுவாக விளம்பரப்படுத்தி, மக்களிடையே பிரபலமடையச் செய்தது போல், பெயர் மாற்றம் செய்த சாலைகளின் புதிய பெயர்கள், பழைய பெயர்கள் ஆகியவற்றை ஆங்காங்கே பேனர்கள் வைத்து விளம்பரப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.
நீ இருக்கற தெரு பெயரை மாத்திட்டாங்களா, அதனாலதான் இப்படி குதிக்கறியான்னு கேக்காதீங்க. நான் குடியிருக்கும் தெரு ஒரு பழைய தமிழ் நடிகையின் பெயரில் இருப்பதால் அதை கண்டிப்பாக மாற்ற மாட்டார்கள்.
மேயர் சார், தமிழில் பெயர் மாற்றம்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஒரு நாள் மழை பெய்தாலே சாலையெல்லாம் மினி நீச்சல் குளமாக மாறிவிடுகிறதே. அதுவும் மே மாதத்தில் பெய்த லேசான மழைக்கே. அப்போது போர்டுகளில் சாலையை நீக்கிவிட்டு, காமராஜர் நீச்சல் குளம், பாரதிதாசன் நீச்சல் குளம் என்றா பெயர் மாற்றம் செய்வீர்கள்? கொஞ்சம் பார்த்து செய்ங்க சார்!