Showing posts with label ஆங்கில‌ நாவ‌ல். Show all posts
Showing posts with label ஆங்கில‌ நாவ‌ல். Show all posts

Sunday, February 07, 2010

முத‌ல் 'பீட்ட‌ர்' நாவ‌ல்

டிஸ்கி: இந்த‌ ப‌திவு, நானும் ஆங்கில‌ நாவ‌ல்க‌ள்லாம் ப‌டிப்பேன்னு சீன் போடுற‌துக்காக‌ இல்ல‌. நான் ர‌சிச்சு ப‌டிச்ச‌ ஒரு ந‌ல்ல‌ த்ரில்ல‌ரை எல்லோரிட‌மும் ப‌கிர்ந்துக்க‌ணும், ம‌த்த‌வ‌ங்க‌ளும் ப‌டிக்க‌ணும்னு ஒரு சின்ன‌ ஆசை, அவ்ளோதான்...................ந‌‌ம்புங்க‌, நான் கொஞ்சூண்டு ந‌ல்ல‌வ‌ன்....................ந‌ம்ப‌மாட்டீங்க‌ளே! இப்ப‌டித்தான் சாக்ர‌டீஸைக்கூட‌...........ச‌ரி ச‌ரி, உட‌னே விண்டோவை க்ளோஸ் ப‌ண்ணாதீங்க‌, மேட்ட‌ருக்கு வ‌ந்துட‌றேன்:)


"க‌ண்டேன் காத‌லை" ப‌ட‌ம் வ‌ந்திருந்த‌ ச‌ம‌ய‌ம். ஐநாக்ஸ்ல‌ டிக்கெட் வாங்கிட்டு, ப‌ட‌ம் ஆர‌ம்பிக்க‌ற‌துக்கு இன்னும் கொஞ்ச‌ நேர‌ம் இருந்த‌தால‌, 'லேண்ட்மார்க்'ல‌ கொஞ்ச‌ நேர‌ம் சுத்திட்டு வ‌ர‌லாமுன்னு போயிருந்தேன். சில‌ புத்த‌க‌ங்க‌ளை புர‌ட்டிபார்த்துட்டு, ஆங்கில‌ நாவ‌ல்க‌ள் இருக்க‌ற‌ ப‌க்க‌ம் போனேன். அதென்ன‌வோ ந‌டிகைக‌ள்கிட்ட‌ "நீங்க‌ ஷுட்டிங் ப்ரேக் டைம்ல‌ என்ன‌ ப‌ண்ணுவீங்க‌"ன்னு கேட்டா, ஸிட்னி ஷெல்ட‌ன், ஜெஃப்ரி ஆர்ச்ச‌ர், ஏ ஃபார் ஆப்பிள், பீ ஃபார் பால் மாதிரியான‌ ஆங்கில‌ எழுத்தாள‌ர்க‌ள் எழுதுன‌ நாவ‌ல்க‌ளை ப‌டிப்பேன்னுதான் சொல்றாங்க‌. என‌க்கும் ஸிட்னி ஷெல்ட‌ன் பேரை பாத்த‌துமே, த‌ம‌ன்னா ஒரு கையால‌ த‌லைமுடியை கோதிகிட்டே ஒரு சின்ன‌ ஸ்மைலோட‌ அவ‌ர் எழுதுன‌ நாவ‌லை ப‌டிக்க‌ற‌மாதிரியான‌ ஒரு சீன் மைண்ட்ல‌ வ‌ந்த‌து.

அத‌னால‌தான் வாங்கிட்டேன்னு நினைக்காதீங்க‌. அங்க‌ ப‌ல‌ நாவ‌ல்க‌ள் இருந்தாலும் பாத்த‌வுட‌னே இத‌ வாங்கித்தான் பாப்போமேங்க‌ற‌ மாதிரி ஒரு டைட்டில் ம‌ன‌சுல‌ ப‌திஞ்சுது - Are You Afraid of the Dark?


நியூயார்க், டென்வ‌ர், பாரிஸ், பெர்லின் இந்த‌ நான்கு ந‌க‌ர‌த்திலும், நான்கு பேர் விப‌த்தில் சிக்கி இற‌ந்துவிடுகிறார்க‌ள்‌. இதை போலீஸ் விசாரிக்கும்போது நான்கு பேரும் கிங்க்ஸ்லே இண்ட‌ர்நேஷ‌ன‌ல் கரூப்‌ (KIG - Kingsley International Group) என்னும் ஒரு ச‌ர்வ‌தேச‌ நிறுவ‌ன‌த்தில‌ வேலை செய்துகொண்டிருந்த‌வ‌ர்க‌ள் என்ப‌து தெரிய‌ வ‌ருகிற‌து.

இற‌ந்த‌வ‌ர்க‌ளில் ஒருவ‌ர் ரிச்ச‌ர்ட் ஸ்டீவ‌ன்ஸ் (Richard Stevens), இவ‌ரின்‌ ம‌னைவி டைய‌ன் ஸ்டீவ‌ன்ஸ் (Diane Stevens). இற‌ந்த‌ ரிச்ச‌ர்டின் உட‌ல்கூட‌ கிடைக்காத‌ப‌டி ஒரு ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌க்க‌, அதுவ‌ரை விப‌த்தினால்தான் ரிச்ச‌ர்ட் இற‌ந்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டிருந்த‌ டைய‌னுக்கு லேசாக‌ ச‌ந்தேக‌ம் வ‌ர‌ ஆர‌ம்பிக்கிற‌து.

பாரிஸில் இற‌ந்த‌ மார்க் ஹாரிஸின் (Mark Harris) ம‌னைவி கெல்லி ஹாரிஸ் (Kelly Harris). கெல்லி ஒரு அழ‌கிய‌ மாட‌லும்கூட‌. சிறுவ‌ய‌தில் ந‌ட‌ந்த‌ ஒரு ச‌ம்ப‌வ‌த்தால்‌ கெல்லிக்கு இருளைக் க‌ண்டாலே ப‌ய‌ம். தூங்கும்போதும், விள‌க்கு அணைக்காம‌ல் தூங்கும் ப‌ழ‌க்க‌ம் உடைய‌ கெல்லிக்கு மார்க்குட‌னான‌ திரும‌ண‌மும், மார்க்கின் அன்பும் அர‌வ‌ணைப்புமே அவ‌ளை மெல்ல‌ மெல்ல‌ மாற‌வைக்கிற‌து. ஆனால் அந்த‌ ம‌கிழ்ச்சியும், மார்க்கின் ம‌ர‌ண‌த்தால‌ அவ‌ளை மறுப‌டியும் இருளைக் க‌ண்டு பய‌ப்ப‌ட‌வைக்கிற‌து.

இத‌ற்கிடையில் ந‌ட‌ந்த‌து விப‌த்த‌ல்ல‌, கொலைதான் என்று உறுதி செய்து போலீஸ் துப்ப‌றிய‌ ஆர‌ம்பிக்கிறார்க‌ள்‌. KIGயின்‌ சேர்ம‌ன் டேன‌ர் கிங்ஸ்லே (Tanner Kingsley) டைய‌னையும், கெல்லியையும் த‌ன் நிறுவ‌ன‌த்துக்கு வ‌ர‌வழைத்து கொலையாளியை‌ சீக்கிர‌ம் க‌ண்டுபிடித்து அவ‌ர்க‌ளுக்கு த‌ண்ட‌னை வாங்கி கொடுப்போம் என்று வாக்குறுதி த‌ருகிறார். கிங்ஸ்லேயை ச‌ந்தித்துவிட்டு வ‌ரும் டைய‌ன், கெல்லியும் த‌ன்னுடைய‌ நிலையில் இருப்ப‌தை தெரிந்துகொள்கிறாள்.

கெல்லிக்கோ டைய‌னிட‌ம் பேசுவ‌தில் ஆர்வ‌ம் இல்லை. அத‌னால் டைய‌னை த‌விர்த்துவிட்டு பாரிஸுக்கு கிள‌ம்ப‌ முய‌ற்சிக்கிறாள். ஆனால் அதே ச‌ம‌ய‌ம் அவ‌‌ர்க‌ள் இருவ‌ரையும் கொலை செய்ய‌ ஒரு முய‌ற்சி ந‌ட‌க்கிற‌து. அதிலிருந்து அதிர்ஷ்ட‌வ‌ச‌மாக‌ இருவ‌ரும் உயிர் த‌ப்பித்து, டைய‌னுடைய‌ அபார்ட்மெண்ட்டுக்கு வ‌ருகிறார்க‌ள். அங்கும் ஒரு கொலை முய‌ற்சி ந‌ட‌க்க‌, மீண்டும் த‌ப்பித்து ஓட‌ ஆர‌ம்பிக்கிறார்க‌ள்.

ஏன் இவ‌ர்க‌ள் இருவ‌ரையும் கொலை செய்ய‌ முய‌ற்சி நட‌க்கிற‌து? யாருடைய‌ திட்ட‌ப்ப‌டி இதெல்லாம் நட‌க்கிற‌து? எந்த‌ இட‌த்திற்கு போனாலும் இவ‌ர்க‌ள் இருப்ப‌தை கொலையாளிக‌ள் க‌ண்டுபிடித்து கொலை செய்ய‌ முய‌ற்சிக்கின்ற‌ன‌ர், இது எப்ப‌டி சாத்திய‌ம்? ஊரைவிட்டு எங்கும் ஓட‌முடியாத‌ப‌டி அவ‌ர்க‌ளுடைய‌ வ‌ங்கி அக்க‌வுண்ட்டும் முட‌க்க‌ப்ப‌டுகிற‌து, கையில் இருக்கும் ப‌ண‌த்தை வைத்து எவ்வ‌ள‌வு நாள் ச‌மாளிக்க‌முடியும்?

ஒரு க‌ட்ட‌த்தில் யார் இத‌ற்கெல்லாம் கார‌ண‌ம் என்ப‌தை டைய‌னும், கெல்லியும் க‌ண்டுபிடித்துவிட‌, அந்த‌ ந‌ப‌ரிட‌ம் இருந்து எத்த‌னை நாள்தான் த‌ப்பிக்க‌ முடியும் என்றெண்ணி, ஓடுவ‌தை நிறுத்திவிட்டு மோத‌த் த‌யாராகின்ற‌ன‌ர். போலீஸிட‌ம் போக‌ முடியாத‌ சூழ்நிலை, துணைக்கு வேறு யாருமில்லை, கையில் எந்த‌வித‌ ஆயுத‌முமில்லை. எப்ப‌டி இவ்விரு பெண்க‌ளும் ஒரு ம‌லையிட‌ம் மோதி வெற்றி பெறுகிறார்க‌ள்? இருளை எதிர்கொள்ள‌ முடியாம‌ல் ப‌ய‌ந்துகொண்டிருக்கும் கெல்லியின் நிலை என்ன‌வான‌து?

பாதி க‌தையில‌ அடியாளா வ‌ர்ற‌ ஒருவ‌ரோட‌ ஃப்ளாஷ்பேக்லாம்தான் கொஞ்ச‌ம் போர‌டிக்குது. ம‌த்த‌ப‌டி இது ஒரு ப‌க்காவான‌ த்ரில்ல‌ர் நாவ‌ல்! வில்ல‌ன் யாருன்னு முத‌ல்ல‌யே சொல்லிட்டாலும், க‌தையோட‌ ஃப்ளோ துளிகூட‌ குறைய‌ல‌. நேர‌மின்மையால‌, ஒரு நாளைக்கு மூணு இல்ல‌ நாலு அத்தியாய‌த்துக்கு மேல‌ என்னால‌ படிக்க‌முடியாது. ஆனா க‌டைசி சில‌ ப‌க்க‌ங்க‌ள்ல‌ இருந்த‌ த்ரில்லிங் (ஒவ்வொரு அத்தியாய‌த்திலும் ஏக‌ப்ப‌ட்ட‌ ட்விஸ்ட்டுக‌ள்) தூக்க‌த்தையெல்லாம் ஒதுக்கி வெச்சுட்டு தின‌மும் இர‌வு ப‌ன்னிர‌ண்டு அல்ல‌து ப‌ன்னிர‌ண்ட‌ரை ம‌ணி வ‌ரை என்னை ப‌டிக்க‌வெச்சுது. ஆஃபிஸ் விட்டு கிள‌ம்பும்போதே "எப்ப‌டா வீட்டுக்கு போய் புக்கை எடுக்க‌ போறோம்"னு ம‌ன‌சுல‌ அலார‌ம் அடிக்க‌ ஆர‌ம்பிச்சுடும்.

இந்த‌ நாவ‌ல் படிச்சு முடிச்சுட்டு விக்கிபீடியால‌ பாத்தா, ஒரு ஸ்ட்ரேஞ்சான‌ விஷ‌ய‌ம். நான் முத‌ல் முத‌லா ப‌டிச்ச‌ ஸிட்னி ஷெல்ட‌னோட‌ இந்த‌ நாவ‌ல்தான், அவ‌ர் எழுதின‌ க‌டைசி நாவ‌ல்:(