2011 சென்னை புத்தகக் கண்காட்சி. சென்ற வருடம் ஒரு ஞாயிறு மாலையில் சென்று, கூட்டத்தில் கசங்கி, புழுங்கி வெளிவருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. எனவே இவ்வருடம் கண்டிப்பாக ஒரு மதிய நேரத்தில்தான் செல்லவேண்டும் என்று முடிவு செய்தேன்.
சனிக்கிழமை (ஜனவரி 8) மதியம் சென்றபோது அவ்வளவாக கூட்டமில்லை. கண்காட்சி நடக்கும் செயிண்ட் ஜார்ஜ் பள்ளியின் வாயிலில் உள்ளே நுழைந்தவுடன் நிறைய பேனர்கள் வைத்திருந்தார்கள். சுஜாதா வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் பேனர்களில். வாழவைத்துக்கொண்டிருக்கிறார் பல பதிப்பகங்களை.
நுழைவுச்சீட்டு வாங்கி உள்ளே சென்றவுடன் முதலில் தினத்தந்தி வெளியிட்டுள்ள 'வரலாற்றுச் சுவடுகள்'தான் வாங்கினேன். புத்தக கண்காட்சிக்கு செல்பவர்கள் இந்த புத்தகத்தைக் கடைசியாக வாங்கலாம் என்பது என் கருத்து. நல்ல கனம். இந்த ஒரு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு மற்ற புத்தகங்களைப் புரட்டி பார்ப்பது சற்று சிரமமாகத்தான் இருந்தது. புத்தகத்தின் காகிதத்தரம் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியது. 270 ரூபாய் என்றாலும் இட்ஸ் வொர்த் ஐ ஸே!
கண்காட்சியில் இளைய தலைமுறையினர் அளவுக்கு 'புதிய தலைமுறை'யைக் காண முடிந்தது. புதிய தலைமுறை இம்முறை விளம்பரத்திற்கென நிறையவே செலவு செய்திருக்கிறார்கள்.
எங்கு பறந்தாலும் தன் கூட்டுக்கு வந்துவிடும் பறவையைப் போல, பல ஸ்டால்களில் சுற்றிவிட்டு கிழக்கில் தஞ்சமடைந்தேன். சென்ற வருடத்தை விட இந்த முறை கிழக்கு உதித்த இடம் சற்று தாராளமாகவே இருந்தது. கிட்டதட்ட பத்து புத்தகங்களை இடது கையில் வைத்துக்கொண்டே நான் மற்ற புத்தகங்களை பார்த்துக்கொண்டிருக்க, ஸ்டாலிலிருந்த கிழக்கு பணியாளர் ஒருவர் 'குடுங்க சார், பில் போடற இடத்துல வெச்சிடறேன், நீங்க ஃப்ரியா பாருங்க' என்றார். ப்ச்..அவர் பெயர் கேட்டிருக்கவேண்டும். நன்றி சார். புத்தகங்கள் மட்டுமல்லாது வாடிக்கையாளர்களிடம் அவர்கள் அணுகும் முறையும் ஆச்சரியமளிக்கவே செய்கிறது. கிழக்கு கிழக்குதான் :)
அடுத்து விகடன். ஏனோ பல புத்தகங்கள் இருந்தும் எதுவும் ஈர்க்கவில்லை. மு.க.ஸ்டாலின் பற்றி அரசியல் விமர்சகர் சோலை எழுதிய புத்தகம் மட்டும் வாங்கினேன். மேலும் மதன் எழுதிய இரண்டு புத்தகங்களையும் எடுத்து வைத்திருந்தேன். டெபிட் கார்ட் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் கொஞ்சமாய் பணம் எடுத்துப்போனது தவறென புரிந்தது எனக்கு. கார்ட்ஸ் நாட் அக்ஸெப்டட், ஒன்லி கேஷ் என்றனர். வேறு வழியின்றி மதன் எழுதிய புத்தகங்களை அப்படியே திருப்பி கொடுத்துவிட்டேன்.
சாத்தியமெனில், கண்காட்சி அரங்கின் வெளியே தற்காலிகமாக சில வங்கிகளின் ATMஐ அமைக்கலாம். BAPASIதான் ஏதாவது செய்யவேண்டும். சின்ன சின்ன பதிப்பகங்களைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் விகடன், தினத்தந்தி போன்றோர் கூட 'ஒன்லி கேஷ்' என்பது சற்று எரிச்சலாய்த்தானிருக்கிறது. க்ரெடிட் கார்டை பற்றி விகடன் 'ப்ளாஸ்டிக் கடவுள்' என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அட போங்க பாஸ் :(
ஈழம் மற்றும் பிரபாகரன் பற்றிய புத்தகங்களை நிறைய ஸ்டால்களில் காணமுடிந்தது. இவ்வருடம் ஆன்மிக புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகம்தான். குறிப்பாக சதுரகிரி, சித்தர்கள் குறித்த புத்தகங்கள்.
முதன் முறை கெளதமின் 'நடுநிசி நாய்கள்' விளம்பரத்தை செய்தித்தாளில் பார்த்தபோதே 'அட!' என்று தோன்றியது. அன்றிலிருந்து இந்த படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ஒரு ஸ்டாலில் சுற்றிக்கொண்டிருந்தபோதுதான் தெரிந்தது 'நடுநிசி நாய்கள்' என்னும் தலைப்புக்குச் சொந்தக்காரர் எழுத்தாளர் சுந்தர ராமசாமி என்று. காப்பி என்றாலும் என்னைப் போலிருக்கும் கடைநிலை வாசிப்பாளனுக்கு இது போன்ற சுவாரஸ்யமான டைட்டிலை அறிமுகம் செய்து வைத்ததற்கு கெளதமுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.
ஒரு ஸ்டாலில் ஸிட்னி ஷெல்டனின் இரு நாவல்களை வாங்கினேன். ஒன்று ரூபாய் 250. இன்னொன்று ரூபாய் 225. கவரில் புத்தகங்களை போட்டுவிட்டு யதேச்சையாக பில்லை பார்த்தேன். இரண்டுமே தலா ரூபாய் 250 என்று போட்டிருந்தார்கள். கணிணியில் ரூபாய் 225 புத்தகத்தை ரூபாய் 250 என்று அப்டேட் செய்திருந்தார்கள். அதை மாற்றவும் அப்போதைக்கு அவர்களுக்கு வழியில்லை. பில் போட்டவர் சொன்னார், 'இது 250 ரூபாதான் சார்'. சிரிப்புதான் வந்தது. புத்தகத்திலேயே 225 என்றுதான் அச்சாகியிருக்கிறது. இதை கேட்டதற்கு சிறிது நேரம் முழித்துவிட்டு மீதி பணத்தைத் திருப்பி கொடுத்தார்.
ஸ்டால் பெயரை குறித்துக்கொண்டு திரும்பினேன், பதிவில் கண்டிப்பாக இதைக் குறிப்பிடவேண்டுமென்று. ஆனால் இப்போது யோசித்து பார்க்கையில் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது. அவர்கள் வேண்டுமென்றே செய்யவில்லை. கணிணியில் யாரோ தவறாக அப்டேட் செய்தது அவர்களுக்கு தர்மசங்கட நிலையை உருவாக்கிவிட்டது. இருந்தாலும் புத்தகம் வாங்குபவர்கள் பில்லை ஒருமுறை சரி பார்ப்பது நல்லது.
கேண்டீன். வயிற்றுக்கு ஏற்கனவே ஈயப்பட்டிருந்ததால், ஒரு 'ஸ்வீட் போளி'யை மட்டும் வாங்கினேன். சூடாக செய்து கொடுத்தார்கள். போலியல்ல...நிஜமாகவே போளி ஸோ ஸ்வீட்!
இந்த வருடம் வாங்கிய புத்தகங்கள்
தினத்தந்தி
வரலாற்றுச் சுவடுகள்
விகடன்
ஸ்டாலின்...மூத்த பத்திரிகையாளர் பார்வையில் - சோலை
கிழக்கு பதிப்பகம்
மகாத்மா காந்தி கொலை வழக்கு - என்.சொக்கன்
ராஜராஜ சோழன் - ச.ந.கண்ணன்
வாத்யார் - ஆர்.முத்துக்குமார்
நான் நாகேஷ் - எஸ்.சந்திரமெளலி
கி.மு கி.பி - மதன்
முதல் உலகப் போர் - மருதன்
கடல் கொள்ளையர் வரலாறு - பாலா ஜெயராமன்
நோக்கியா - என்.சொக்கன்
சித்தர்கள் புரிந்த அற்புதங்கள் - வேணு சீனிவாசன்
உப்பில்லா உணவுக்குச் சமமாய் கருதுகிறேன் தலைவரின் புத்தகங்களை வாங்காவிடில்...எனவே இவ்வருடமும் மேலும் சில சுஜாதாஸ்...இவையனைத்தும் கிழக்கு பதிப்பகம் ஸ்டாலில் வாங்கியது.
வசந்த கால குற்றங்கள்
ஓடாதே!
மாயா
ஐந்தாவது அத்தியாயம்
கொலை அரங்கம்
கரையெல்லாம் செண்பகப்பூ
விபரீதக் கோட்பாடு
நில், கவனி, தாக்கு!
ஒரு நடுப்பகல் மரணம்
_______ பதிப்பகம்
The Best Laid Plans - Sidney Sheldon
If Tomorrow Comes - Sidney Sheldon
யாரேனும் பதிவர்கள் தென்படுகிறார்களா என்று பார்த்தேன். கண்காட்சியிலிருந்து வெளிவரும் முன்னர் கடைசி பாதையில் பதிவர் கேபிள் சங்கர் (டிஷர்ட், ஜீன்ஸ், தொப்பி....யூத்த்த்தேதான்:))) நான்கைந்து பேரோடு நின்று பேசிக்கொண்டிருந்தார். ஏனோ உடனடியாக போய் பேசுவதில் எனக்கு சற்றே கூச்சம். இரண்டடி தள்ளி நின்றுகொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து, சரி அறிமுகப்படுதிக்கொள்வோம் என்று நினைக்கையில், கேபிள் பக்கத்திலிருந்தவர் சொன்னார்.
"நான் மேவீங்கற பேர்ல எழுதிட்டிருக்கேன்"
அதற்கு இன்னொரு சக பதிவரின் ஆன் த ஸ்பாட் பின்னூட்டம்...
"மேவீன்னு பேர் வெச்சிருக்கேன்னு சொல்லு, எழுதிட்டிருக்கேன்னு சொல்லாதே"
இங்கு 'மேவீ' என்பதற்கு பதில் 'ரகு' என்ற பெயரும் பொருந்தும் என்பதால், 'நெக்ஸ்ட் மீட் பண்றேன்' என்றெண்ணிக்கொண்டே கிளம்பிவிட்டேன்.
நல்லாதானே எழுதுறீங்க.. ரெகுலரா எழுதினா என்னவாம்?
ReplyDeleteஇங்கே ஒரு திர்ஹம் கூட என்றால் கார்ட் கொடுக்கும் நிலை உள்ளது
ReplyDeleteஇந்தியாவில் எப்போது மாறும் தெரியவில்லை
சிறப்பான புத்தகம் வாங்கி உள்ளிர்கள் வாழ்த்துக்கள்
என்ன இந்த நேரத்தில் இந்தியாவில் இருந்தால் நல்ல புத்தகம் ஒரே இடத்தில தேடி வாங்கலாம்
நல்ல பதிவு
ஓகே, ரைட்.
ReplyDeleteசுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள்!
ReplyDeleteஎப்பா, தொடர்ந்து எழுதுப்பா. நல்லா இருக்கு.
ReplyDeleteநல்ல பகிர்வு, அன்று நடந்த கவியரங்கத்தில் கவிஞர் வாலியின் பேச்சு மிகவும் அருமை. அதற்கான விடியோ சுட்டி இங்கே
ReplyDeletehttp://ilakindriorpayanam.blogspot.com/2011/01/exclusive-2011.html
நிறைய புத்தகங்கள்தான் வாங்கி இருக்கிங்க, படிக்க ஆரம்பிச்சாச்சா ரகு:)
ReplyDeleteபணிச்சுமை பாதி, சோம்பல் பாதி :)) கண்டிப்பா தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் மோகன் :)
ReplyDeleteநன்றி அரும்பாவூர், கையில் கார்ட் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை...கொஞ்சம் எரிச்சல்தான் :(
நன்றி விக்கி, உங்க கமெண்ட்...நடத்துனர் ஃபீல் :)
நன்றி மோகன்
நன்றி காவேரி கணேஷ், அவசியம் எழுதறேன் :)
நன்றி க்ருபா, நானும் நிகழ்ச்சி நிரலை பார்த்தேன். ஊருக்கு செல்லவேண்டியிருந்ததால் கிளம்பிவிட்டேன் :(
நன்றி ப்ரியா, 'கடல் கொள்ளையர் வரலாறு' ஆரம்பிச்சிருக்கேன் :)
//
ReplyDeleteப்ச்..அவர் பெயர் கேட்டிருக்கவேண்டும். நன்றி சார்.
//
nallaayirukku....:)