சென்னையில் இதுவரை நடந்த எந்தவொரு பதிவர் சந்திப்புக்கும் சென்றதில்லை. சிலர் எழுத்துக்களை ரசித்து வாசித்தாலும், அவர்களுக்குள் இருக்கும் அரசியல், குழு மனப்பான்மை ஆகியவையெல்லாம் பார்க்கும்போது சற்று ஒதுங்கி இருக்கவே விரும்புகிறேன். இப்பொழுதும், திரட்டிகளில் சுற்றுமபோது, "பிரபல பதிவரும் ............." என்று ஏதாவது ஜூ.வி., நக்கீரன், ரிப்போர்ட்டர் வகையறா டைட்டிலை பார்த்தாலே அலர்ஜியாக இருக்கிறது. ப்ளீஸ், கொஞ்சம் மாத்திகோங்கப்பா!
ஆரம்பத்தில் ப்ளாக் மீது ஒரு போதை இருந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் பதிவுலகில் நடந்த சில நிகழ்வுகளினாலேயே போதை குறைந்து ஒரு "ச்சே" ஃபீலிங் வந்துவிட்டது. பிரபல பதிவர்களுக்கு நன்றி. இப்போதெல்லாம் எப்போது எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதுதான் எழுதுகிறேன் :)
பிரபலங்களிலும் ஒரு சிலர் விதிவிலக்காய் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் எனக்கு பிடித்தமானவர்கள் வரிசையில், கண்டிப்பாக 'வீடு திரும்பல்' மோகன்குமார் அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. எளிமையாக, டீசன்ட்டாக எழுதுவதினாலேயே இவரின் பதிவுகள் எனக்கு பிடிக்கும்.
சில நாட்கள் முன் புத்தக கண்காட்சியின்போது வாங்கிய புத்தகங்கள் பற்றி எழுதியபோது, தலைவர் புத்தகங்களை exchange பண்ணிக்கலாமா என்று கேட்டிருந்தார். தலைவர் எழுத்து பலரிடம் செல்வது குறித்து எனக்கு மகிழ்ச்சியே. எனவே நான்கு புத்தகங்களை அவருக்கு தபாலில் அனுப்பிவிட்டேன். அவர் அத்துடன் விடவில்லை. "என்னிடம் சில புத்தகங்கள் இருக்கிறது. ஒரே ஏரியாவில் இருந்துகொண்டு சந்திக்காமலேயே இருக்கிறோம், நேரில் வாங்க சந்திப்போம்" என்றார்.
நெருங்கிய நண்பர்கள் அருகில் இருக்கும்போதுதான் அரட்டையில் அரண்மனை கட்டி விளையாடுவேன். புதிதாக சந்திப்பவர்களோடு நான் அதிகம் பேசுவதில்லை. இது என் இயல்பான சுபாவமே தவிர நான் ஏன் பேசவேண்டும், வேண்டும் என்றால் அவர்கள் பேசட்டுமே என்ற ஈகோ அல்ல. மோகன் அழைத்தவுடன், ஒரு குறிப்பிட்ட தினத்தில் மதியம் அவருடைய அலுவலகத்தில் சந்திப்பது என்று முடிவு செய்தோம். சரியாக மதியம் பன்னிரண்டரை மணிக்கு வருவதாக சொல்லியிருந்தேன். ஆனால் வீட்டிலிருந்து கிளம்பும்போதே மணி பன்னிரண்டரை. நாம எப்போ சொன்ன நேரத்துக்கு கரெக்டா போயிருக்கிறோம்?
வீட்டிலிருந்து அவர் பணிபுரியும் அலுவலகத்துக்கு வெறும் பத்து நிமிட தூரம்தான். எனவே ஒருவழியாக சமாளித்துவிட்டேன். நேரில் சந்தித்தபோது ரொம்ப கேஷுவலாக பேசினார். தனி கேபின், அழகான சுத்தமான டேபிள், பக்கத்தில் அவரின் துறை சம்பந்தமான பார்ட் 1, பார்ட் 2, பார்ட் 3 என்று தடிமனான சில புத்தகங்கள் என்று கிட்டத்தட்ட ஒரு எம்.டி லுக்கில்தான் இருந்தார். பேச்சின் போது நடுநடுவே சிலர் ஃபோன் செய்து சில கேள்விகள் கேட்க, அவர்களின் சந்தேகங்களையும் தீர்த்துவைத்தார். "போனை எடுத்தா நச்சு நச்சுன்றானுங்கப்பா" என்று கவுண்டர் மாதிரி அலுத்துக்கொள்ளவில்லையே தவிர, சார் நிஜமாவே பிஸிதான்!
எப்படி சமீப நாட்களில் நிறைய எழுதுகிறீர்கள் என்று கேட்டேன். சொன்னார். ம்ம்.....அது ஆஃப் த ரெக்கார்டாகவே இருக்கட்டும். சில புத்தகங்களை தந்து எது வேணுமோ எடுத்துகோங்க என்றார். கிளி கழுத்தை கண்ட அர்ஜுனன் போல் நான் தலைவரின் கதைகளை மட்டுமே எடுத்துக்கொண்டேன். அவருடைய சமீபத்திய பயணம், என்னுடைய வொர்க் டைமிங், பதிவர்கள் சந்திப்பு, சத்யம் தியேட்டர் என்று டாபிக் மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருந்தோம். வேளச்சேரியில் புதிதாக வரப்போகும் திரைஅரங்குகள் பற்றி சொன்னார். நான்தான் நிறைய பேசினேன் என்று நினைக்கிறேன். நிறைய பேசினாலும் ரொம்ப ஃபார்மலாகத்தான் பேச முடிந்தது. முதன் முறை சந்திப்பதினால் இருக்கும் சிறு தயக்கம். மேலும் சில சந்திப்புகளில் கொஞ்சம் இயல்பாக பேசுவேன் என்று நம்புகிறேன்.
வயிற்றுக்கு ஈயும் நேரம் வந்ததால், ஏற்கனவே பேசிவைத்தபடி இருவரும் தலப்பாகட்டி'னோம். ஒரு கோழியை கொன்ற பாவத்தை அக்கவுன்ட்டில் ஏற்றிகொண்ட பிறகு விடைபெற்றேன். ஒரு பந்தா இல்லாத, பழகுவதற்கு எளிமையான, கண்ணியமான மனிதரை சந்தித்தோம் என்ற திருப்தி கிடைத்தது. விரைவில் மேலும் சில புத்தகங்களோடு மீண்டும் சந்திப்போம் மோகன்.
