சில நாட்கள் முன்பு வாரயிறுதியில் ஊருக்குச் சென்றிருந்தபோது, அங்கு வழக்கம்போல் காலை 11 மணிக்கு மின்சார வாரியம் ஞாயிறென்றும் பாராமல் தன் கடமையில் இறங்கியது. போதாதற்கு சூரிய பகவானும் ஆஸ்ட்ரேலியாவை எதிர்த்தாடும் சச்சினைப் போல் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார். எனவே வெளியே செல்லவும் விருப்பமில்லை. பிறகுதான் இவ்வருடம் வாங்கிய புத்தகங்களின் ஞாபகம் வந்தது.
அலமாரியில் பல புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தாலும், கண்ணும், கையும் முதலில் நோக்கிச் சென்றது சுஜாதாவை நோக்கித்தான். உண்மையெனினும் ’வழக்கம் போல்’ என்ற சொற்றொடர் முந்தைய வரிக்கு அவசியமில்லாதது. இரு புத்தகங்களை எடுத்தேன். விபரீதக் கோட்பாடு & ஓடாதே.
இவ்விரண்டு புத்தகங்களும் கிழக்கு பதிப்பக வெளியீடு. எழுத்துப்பிழையெல்லாம் இல்லாமல், தரமான காகிதத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இது ஒன்று போதும் சுஜாதாவை கெளரவப்படுத்த. சென்ற வருடம் வேறொரு பதிப்பகத்தில் வாங்கிய புத்தகத்தில் அவரது எழுத்தை உயிருடன் போஸ்ட்மார்ட்டம் செய்திருந்தார்கள். அவர் வாசித்திருந்தால் ஆங்கிலத்தில் அர்ச்சனை செய்திருப்பார்.

விபரீதக் கோட்பாடு
சுஜாதாவின் எழுத்தை நிறைய (சு)வாசித்தவர்கள் இக்கதையில் யார் குற்றவாளியென முதல் நான்கைந்து பக்கங்களிலேயே யூகித்துவிடுவார்கள். ஆனால் மூட நம்பிக்கையை மையமாக வைத்து த்ரில்லராய் கதையை நகர்த்தியிருக்கும் விதம் அட்டகாசம்! கணேஷ் வஸந்திற்காகவே வாசிக்கலாம். இப்போது யோசித்துபார்க்கையில் கண்டிப்பாக இது சுஜாதாவின் பெஸ்ட் அல்ல என்றுதான் தோன்றுகிறது. என்றாலும் தவிர்க்கக்கூடிய கதையும் அல்ல.
ஓடாதே!
ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முன் எழுதிய கதை. இப்புத்தகத்தின் முன்னுரையில், நிறைய இயக்குனர்கள் இக்கதையை திரைப்படமாக கெடுப்பதற்கு..ஸாரி...எடுப்பதற்கு தன்னை அணுகியதாகக் குறிப்பிட்டுள்ளார் சுஜாதா. அதுவும் ஒரு வேண்டுகோளுடன். பாழாய்ப் போகாத செண்டிமெண்ட் காரணமாக, தலைப்பை மட்டும் மாற்றவேண்டும் என்றார்களாம். ஆனால் இந்த ‘ராஜனுக்கு ராஜன்’ அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே இக்கதை திரைப்படம் ஆகாமல் தப்பித்தது என்று முன்னுரையில் சொல்லியிருக்கிறார்.
இயக்குனர்கள் இதைக் கேட்குமளவுக்கு கதையில் அப்படியென்ன இருக்கிறது என்ற எண்ணத்தோடுதான் கதையை வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க ஆரம்பித்த சில பக்கங்களிலேயே புரிந்துவிட்டது. புதிதாய் மணமானவர்களிடையே இருக்கும் காமம் கலந்த காதல், இருக்கையின் நுனிக்கு கொண்டுவரச் செய்யும் அட்டகாசமான சேஸிங் - இவையிரண்டையும் சேர்ந்து இக்கதையை ஒரு அட்டகாசமான த்ரில்லராய் படைத்திருக்கிறார் எனதருமை ரங்கன்.
மணமான மூன்றாம் நாளே, ஒரு குற்றமும் செய்யாத ஜோடியை சென்னை, பெங்களூர் காவல்துறையினர் துரத்துகின்றனர். ஏன்? வேண்டாம், சஸ்பென்ஸை உடைக்கவிரும்பவில்லை. கதையை வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவங்கள், இலக்கியத்தரமான எழுத்து ஆகியவற்றை எதிர்பார்ப்போருக்கு இவ்விரண்டு புத்தகங்களும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் போகலாம். ஆனால் த்ரில்லரை மட்டும் விரும்புபவர்களுக்கு இப்புத்தகங்கள் நல்லதொரு விருந்தென்றே கூறுவேன்.
நல்லவேளை, வாரயிறுதியாக இருந்தாலும் அன்று மின்சார வாரியத்தினர் கடமையே கஜினியாயிருந்தனர். இல்லையெனில் இவ்விரண்டு புத்தகங்களையும் வாசித்திருக்கமாட்டேன். ஆட்சி மாறினாலும் ஆற்காட்டாருக்கு நன்றி! :)