சரி பேச்சிலர்தானே, நமக்கு இதை விட வேறென்ன வேண்டும் என்று சற்றே தன்னிறைவு அடைந்தேன். பக்குவப்பட்ட மனநிலையில் இருக்கிறோமா என்று கூட தோன்றியது. ப்ச்..அதெல்லாம் இல்லை. வேற வழி? நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.
அறையில் இருந்த பெரிய குறை. ஒரு தொலைக்காட்சி வைத்துக்கொள்ள சரியான மின் இணைப்பு வசதியில்லாதது. அவனுக்கு சாப்பாடு கூட வேண்டாம், டிவி இருந்தா போதும் என்று வீட்டில் ஏளனம் செய்வார்கள். அந்தளவுக்கு தொலைக்காட்சிக்கு அடிமையாய் இருந்தேன். இப்படியிருந்தவன் திடீரென்று தொலைக்காட்சி இல்லாமல் வாழவேண்டுமென்றால் என்ன செய்வது?
இந்த சமயத்தில்தான் உற்ற தோழர்களாயினர் ரேடியோ மிர்ச்சியும், கிழக்கு பதிப்பக புத்தகங்களும். தொலைக்காட்சி இல்லாத குறையை இவர்கள் நிறைவு செய்தனர். வாரயிறுதியில் ஊருக்கு போகும்போது பார்க்கலாம்தான். அந்த இரண்டு நாட்கள் பார்த்தால், வார நாட்களில் பார்க்காமல் இருக்கும்போது அந்த கவலை இன்னும் அதிகரிக்கும். எனவே வாரயிறுதியில் தொலைக்காட்சி பார்ப்பதையும் தவிர்க்கத் தொடங்கினேன். நம்புவது கடினம், ஆனால் உண்மை. முழுதாக ஒரு மணி நேரம் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்து கிட்டதட்ட ஐந்து வருடங்கள் மேல் ஆகிறது.
இந்த ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், மானாட மயிலாட, கலா மாஸ்டர், கெமிஸ்ட்ரி, நமீதா, குஷ்பு என பலர் வாயிலாக அறிந்ததோடு சரி. சின்ன பசங்க என்னமா பாடுறாங்க பாரு என்று சொன்னதால் ஒரே ஒரு முறை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இருபது நிமிடங்கள் பார்த்தேன். நடுவராக இருந்தவர், நீ இப்படி பாடணும், அப்படி பாடணும் என்று அந்தச் சிறுமியை ஆயிரத்தெட்டு குறைகள் சொல்ல, அவருடைய சட்டையைப் பிடித்து பளாரென அறைய வேண்டும் போலிருந்தது எனக்கு.
பெற்றோரைச் சொல்ல வேண்டும். குழந்தைகளை குழந்தைகளாக வளரவிடாமல் தங்களுடைய ஆசைகளைத் திணித்து, கு.த.பனங்காய்தான். இந்நிகழ்ச்சிகள் குழந்தைகளின் திறமையை வெளிப்படுகிறதுதான். ஒத்துக்கொள்கிறேன். ஆனால் போட்டியில் தோல்வியுறும் குழந்தைகளின் மனநிலை? அரங்கில் அவ்வளவு பேர் மத்தியில் நடுவர்களின் சுரீர் விமர்சனங்கள், போட்டியில் தோல்வி...ப்ச், ஊரே கொண்டாடட்டும். ஐ ஹேட் சூப்பர் சிங்கர்!
இதனாலேயே தொலைக்காட்சி பார்க்காதது கொஞ்சம் நிம்மதியாகவே இருந்தது. இருந்தாலும் சில சமயம் க்ரிக்கெட்டில் பல நல்ல போட்டிகளை பார்க்கமுடியாதபோது மட்டும் வெறுப்பாக இருக்கும். குறிப்பாக சச்சின் சதம் அடித்து இந்தியா வெற்றி பெறும்போது, இந்தியா ஆஸ்ட்ரேலியா தொடர் மற்றும் ஆஷஸ் தொடர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சச்சின் 200 அடித்தது கூட க்ரிக்இன்ஃபோ மூலமாகத்தான் தெரிந்துகொண்டேன். ஒரு டிவி இல்லையே என மிகுந்த வலியுடன் மனம் புழுங்கியது அன்றுதான்.
அடுத்த மாதம் 2011 உலகக் கோப்பை ஆரம்பிக்கப்போகிறது. சச்சின் பங்கேற்கப்போகும் கடைசி(?!) உலகக் கோப்பைத் தொடர். சச்சின் பங்கேற்கப்போகும் ஒவ்வொரு போட்டியும், இழக்கவே கூடாத பொன்னான தருணங்கள். குறைந்தபட்சம் ஹைலைட்ஸையேனும் பார்த்தாக வேண்டும். பார்க்கத் தவறவிட்டு மீண்டும் மனம் புழுங்கிக்கொண்டிருப்பதில் பிரயோஜனமில்லை. அது இதுவென ஆயிரம் முறை யோசித்து, கடைசியில் போகி தினத்தன்று ஒரு டிவி வாங்கியாகிவிட்டது, சச்சினுக்காக. சச்சினுக்காகவே :)
டீடிஎச்சில் டிஷ்டிவி பெட்டர் என்று தோன்றுகிறது. இல்லையெனில் டாடா ஸ்கை. எனி சஜஷன்ஸ்?
தற்போது இரு வேண்டுதல்கள்
#சச்சினுக்காகவாவது மற்ற பத்து வீரர்களும் ஒழுங்காக விளையாடி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும்.
#இறைவா, ரியாலிட்டி ஷோக்களிடமிருந்து என்னை காப்பாற்று, க்ரிக்கெட்டை நான் பார்த்துக்கொள்கிறேன் :)