ஆனாலும் ஓரளவுக்கு போராடி கடந்த முறை புத்தக கண்காட்சியில் வாங்கிய அனைத்து புத்தகங்களையும் வாசித்தாகிவிட்டது. கதைகள், கவிதைகளை நான் விரும்புவதில்லை. இவ்விரண்டிலுமே காதல்தான் பெரும்பங்கு வகிக்கிறது. நமக்கு த்ரில்லர்களும், கிழக்கு பதிப்பகம் வெளியிடும் பயோகிராஃபிஸும்தான் வெள்ளிக்கிழமை மனநிலையைக் கொடுக்கும். மற்றதெல்லாம் ஞாயிறு மாலை.
கடந்த முறை வாங்கியதில் மிகவும் ரசித்து வாசித்தது 'ராஜீவ் கொலை வழக்கு'. ஒரு அரசியல் தலைவரின் படுகொலை பற்றிய வழக்கை ரசித்து வாசித்தேன் என சொல்வது சற்று அசெளகரியமாகவோ, அநாகரிகமாகவோ தோன்றலாம். ஆனால் உண்மை அதுதான். உடன் இருந்து நாமும் துப்பறிவது போன்ற உணர்வுதான் தோன்றியது.
இம்முறையும் வேட்டையை கிழக்கு பதிப்பக ஸ்டாலில் இருந்துதான் ஆரம்பிக்கவேண்டும். என்னென்ன புதிதாக வெளியிட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கண்டிப்பாக வாங்கவேண்டும் என்ற லிஸ்ட்டில் தற்போதைக்கு முதலில் உள்ளது தினத்தந்தி வெளியிட்டுள்ள 'காலச்சுவடுகள்'. அடுத்தது மேலும் சில 'சுஜாதா'(க்)கள்.
******************
சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், காதல், சுப்ரமணியபுரம், அங்காடி(த் வருமாங்க?) தெரு, மைனா, நந்தலாலா.....
இவையெல்லாம் நான் இதுவரை பார்க்காத படங்கள். இனியும் பார்க்க விருப்பமில்லை. என்னதான் ஹிட் ஆகியிருந்தாலும், இவையெல்லாம் முடிவில் சோகத்தைத் தருபவை. திரையரங்கை விட்டு வெளியே வரும்போது ஒரு கனத்த மனதுடன் வெளிவருவது, இரவு தூங்க முடியாமல் தவிப்பது....மிகுந்த வலியைத் தருகிறது. சினிமாதானே, இதுக்கெல்லாமா இப்படி என கேட்கலாம். ஏனோ படத்துடன் மிகவும் ஒன்றிவிடுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.
எனக்கு தேவை, இருக்கும் பிரச்னைகளை மறக்கடிக்கச்செய்யும் இரண்டு மணி நேர பொழுதுபோக்கு. அவ்வளவே. எனவே 'தமிழ் படம்', 'களவாணி' போன்ற ஃபீல் குட் படங்கள்தான் என்னுடைய பெஸ்ட் சாய்ஸ்.
******************
ஆனந்த விகடன். புத்தக வண்ணம் இன்னும் கறுப்பு, வெள்ளை, சிகப்பில் மாறவில்லை. அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடு என அறிவிக்கவில்லை. அவ்வளவுதான். திருமாவேலன் அவர்கள் எழுதும் அரசியல் கட்டுரை இப்போதெல்லாம் ஒரு சலிப்பையே தருகிறது. தற்போதைக்கு விகடனில் ரசித்து வாசிப்பது கவிஞர் வாலி எழுதும் 'நினைவு நாடாக்கள்'தான். நேர்மையான எழுத்துக்கள். பல ரசனையான அனுபவங்களை ஒரு புன்சிரிப்புடன் வாசிக்கவைக்கிறார்.
பாட்டு எழுதறவர்தானே வாலி என அலட்சியமாக எண்ணியிருந்தேன் சில வருடங்களுக்கு முன்பு. ஒரு மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது (என்ன நிகழ்ச்சி என்று ஞாபகமில்லை) சட்டென்று சொன்னார்.
கல்லறைக்குப்
போகும்வரை
தேவை
சில்லறை
ஏனோ என்னை இவ்வரிகள் மிகவும் ஈர்த்தன. அதன்பின் எனக்கு வாலி..ஸோ லவ்லி என மாறிப்போனார்.
'பணம் படைத்தவ'னில் வரும் இந்த பாடலை முதலில் கேட்டபோது 'ச்சே! கண்ணதாசன் கண்ணதாசன்தாம்பா' என்று சிலாகித்திருக்கிறேன். பின்பு பாடல்: கவிஞர் வாலி என பார்க்கையில் புருவங்கள், இருந்த இடத்திலிருந்து இரண்டு மில்லிமீட்டர் உயர்ந்துதான் போயின. தசாவதாரத்தில் அவரே சொன்னது போல் 'ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்'!
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
பொய்யான சில பேர்க்குப் புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
******************
சென்னையில் ஆதிதிராவிட மாணவர் விடுதியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லையென அம்மாணவர்கள் சைதாப்பேட்டையில் சாலை மறியல் செய்துள்ளனர். அலுவலகம் செல்பவர்கள், மருத்துவமனை செல்பவர்கள் என எத்தனை பேருக்கு இது இடையூறாக இருக்கும் என அறியாதவர்களா அவர்கள்? போராடுவது என முடிவு செய்தபின் முதல்வர் இல்லம் முன்போ, சட்டசபை முன்போ, குறைந்தபட்சம் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சரின் அலுவலகம் முன்போ சென்று போராட வேண்டியதுதானே.
சட்டக் கல்லூரி மாணவர்கள் வன்முறை, விடுதி மாணவர்கள் சாலை மறியல்.........இந்தியாவின் வருங்காலத் தூண்கள்...ஹும்ம் :(
******************
இப்போதெல்லாம் அலுவலகத்தில்தான் பெரும்பாலும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். வீட்டு உரிமையாளரிடம் பேசி வாடகையை குறைக்கச் சொல்ல வேண்டும். கடந்த சில மாதங்களில் நட்புகள், ஜிமெய்ல், சாட், பஸ், தமிழ்மணம் என எல்லாமே குறைந்துவிட்டது. ஒருவகையில் நல்லதுதான். ப்ளாகோமேனியாவிலிருந்து பெருமளவில் விடுபட்டிருக்கிறேன். ஆனாலும் பதிவெழுதி மற்றவர்களை டார்ச்சர் செய்யவேண்டும் என்ற சைக்கோத்தனம் மட்டும் குறையவில்லை.
கடும் எச்சரிக்கை: இனி தொடர்ந்து எழுத முடிவு செய்திருக்கிறேன்.
I WILL WRITE
WILL WRITE
WRITE...........