Wednesday, December 26, 2012

லாலா லால லா ல லா லாலலா


அப்பா அம்மாவுடன் நேற்று தி.நகர் போயிருந்தேன். இரண்டு மணி நேர பயண தூரத்தில் சென்னை இருந்தாலும், பொங்கல் பர்ச்சேஸிற்காக அப்பாவும் அம்மாவும் சென்னை வருவது இதுவே முதல் முறை. விடுமுறை தினம் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்க 9:30க்கே தி.நகர் போய்விட்டோம். செவிக்கு உணவில்லாத காலை பொழுதில், சரவண பவன் இட்லியும் காபியும் வயிற்றுக்கு ஈயப்பட, ஜீரணத்திற்கும் சேர்த்து பில் போட்டிருந்தார்கள்.




10 மணிக்கு போத்தீஸில் களமிறங்கினோம். தி.நகரின் ராசியா என்று தெரியவில்லை. ஊரில் இருக்கும் கடையில் பத்து பதினைந்து நிமிடங்களில் புடவை எடுத்துவிடும் அம்மா, நான்கு புடவைகள் எடுக்க ஒரு மணி நேரத்துக்கும் மேலானது. "எவ்வளவு நேரம் எடுத்துக்கறா பாருப்பா" என்று பொறுமையிழந்து அப்பா என்னிடம் வந்து புலம்ப, "பரவால்லப்பா, வருஷத்துல ஒரு நாள்தானே" என்று சமாதானப்படுத்தினேன்.

அடுத்த ஒரு மணி நேரம் அப்பாவுக்கு, தம்பிக்கு, எனக்கு என ட்ரஸ் எடுத்துவிட்டு, போத்தீஸில் இருந்து வெளியேறுகையில் அம்மா சொன்னார், "இனிமே பொங்கல் பர்ச்சேஸுக்கு இங்கேயே வந்து எடுக்கலாம்". அப்பா திரும்பி என்னை பார்த்தார். நான் மட்டும் என்ன செய்ய? எனக்கும் இஸ்க் இஸ்க் என்றுதான் கேட்டது.

*******

லஞ்சுக்கு வேளச்சேரி வந்தடைந்தோம். அப்பா, அம்மா ரெண்டு பேருக்குமே வெளியுலக எக்ஸ்போஷர் ரொம்ப கம்மி. கூட்டுக்குள்ளேயே வாழ பழகிக்கொண்டவர்கள். அவர்களுக்கு புதியதாக இருக்கட்டும் என்றெண்ணி, Flamingo ரெஸ்டாரண்ட்டுக்கு அழைத்துப்போயிருந்தேன். Vegetarian Buffet. டீசண்ட்டான இடம். அமைதியான சூழல். அவர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போனது. இரண்டு பேரும் கொஞ்சம் excitedஆகவே இருந்தார்கள்.

எப்போதும் இதுபோல் தோன்றியதில்லை. வெளியே புதிய இடத்திற்கு தன் குழந்தைகளை கூட்டி வந்திருக்கும் தந்தையின் உணர்வில் இருந்தேன் நான். அவர்களோடு ஒரு சில விஷயங்களில், இன்றும் நிறைய கருத்து வேற்றுமைகள் இருக்கிறது. Argue பண்ணியிருக்கிறேன். கோபப்பட்டிருக்கிறேன். எனினும், affection குறையவில்லை.

*******

இப்படியெல்லாம் feel பண்ணியதன் விளைவு......தற்போது, மொபைல் ரிங்டோனாக, எஸ்.ஏ.ராஜ்குமாரின் "லாலா லால லா ல லா லாலலா "வை வைக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்

Monday, October 15, 2012

கற்றதும் பெற்றதும் - சுஜாதா

சிறு வயதில், ஆனந்த விகடனை புரட்டும்போது, இரண்டு மூன்று பக்கங்கள் எதையும் வாசிக்காமல் அப்படியே கடந்து சென்றுவிடுவேன். அப்போது தெரியாது, ஒரு சில வருடங்கள் கழித்து, அதே பக்கங்களை புத்தக வடிவில் வெறி பிடித்தது போல வாசித்து தீர்ப்பேன் என்று. அந்த இரண்டு மூன்று பக்கங்களின் தலைப்பு 'கற்றதும் பெற்றதும்'.



த்ரில்லர் கதைகள் மிகவும் பிடித்தமானவை என்பதால், வீட்டு அலமாரியில் கணேஷ் வசந்த்களே குடியிருக்கின்றனர். மத்யமர்களையோ, ஸ்ரீரங்கத்து தேவதைகளையோ தரிசிக்க இன்னும் நேரம் வரவில்லை. சமீபத்தில், அலுவலக நண்பர் ஒருவர்தான் 'கற்றதும் பெற்றதும்' புத்தகத்தை கொடுத்தார். வாரயிறுதியில் ஊருக்கு செல்லும்போது வாசிக்கலாம் என்று அப்படியே வைத்திருந்தேன். 

சனிக்கிழமை காலை. சென்னை கடற்கரை ரயில் நிலையம். ஸ்டேஷனிடம் கோபித்துக்கொண்டு ரயில் கிளம்ப ஆரம்பித்தது. புத்தகத்தை திறந்து, மகிழ்ச்சியோடு தலை குனிந்தேன். முதல் ஒரு சில பக்கங்கள் எனக்கு சற்று அலர்ஜியாகவே இருந்தது. நிறைய கெமிஸ்ட்ரி, பயாலஜி...உவ்வே! பதினொன்றாம் வகுப்பிலிருந்தே, எனக்கும் கெமிஸ்ட்ரிக்கும்  கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதே இல்லை. கிட்டத்தட்ட 30 பக்கங்களுக்குப் பிறகுதான் புத்தகம் சூடு பிடித்தது...வாசிக்கவும் பிடித்தது.

"ச்சே....என்ன மனுஷன்யா இவரு" என்று சிலாகித்து, கொஞ்சம் தலை நிமிர்ந்து ரயிலின் ஜன்னல் வழியே பார்த்தேன். தாம்பரம் ரயில் நிலையம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம், தன் எழுத்தால் வாத்தியார் என்னை கட்டி போட்டு இருந்தார். அறிவியல் தொடர்பான விஷயங்களை விட, அவரின் அனுபவங்கள்தான் ரசிக்க வைத்தன.




#பதின்ம வயதில் எந்த வித குறும்புகளிலும் ஈடுபடவில்லை என்கிறார், காதல் உட்பட. காரணம், ஸ்ட்ரிக்ட்டான பாட்டி. ஏதாவது சின்ன பொய் சொன்னால் கூட, பாட்டி எளிதில் கண்டுபிடித்து விடுவாளாம்.

#ஸ்ரீரங்கத்தில், இவர் இருந்த தெரு அணிக்கும், இன்னொரு தெரு அணிக்கும் க்ரிக்கட் மேட்ச் நடந்திருக்கிறது. எதிரணியினர், அம்பயர் எங்க சைடு ஆளுதான் என்று கூற, அதற்கு இவர் அணியும் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். பின்புதான் தெரிந்திருக்கிறது அது எவ்வளவு பெரிய தவறு என்று. எதிரணி பேட்ஸ்மன்  அவுட் ஆகும்போதெல்லாம் அம்பயர் கை கூசாமல் "நோ பால்" காண்பித்திருக்கிறார். 1940களிலேயே மேட்ச் ஃபிக்ஸிங்! பிறகென்ன, தோல்விதான். ஆனால் அதையும் சுவைபட கூறியிருக்கிறார்.

#மெட்ராஸில் (அப்போ மெட்ராஸ்தாம்பா) ஹாஸ்டலில் தங்கியிருந்தபோது, ஒரு முறை தகவல் எதுவும் சொல்லாமல், அவர் அப்பா திடீரென வந்திருக்கிறார். ஹாஸ்டல் ரூம் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? தொன்று தொட்டு வரும் பழக்கமான, ஆடையில் சிக்கனத்தை வலியுறுத்தும் நடிகையின் படம் ஒன்று சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கிறது. அதை மறைக்கக் கூட நேரமில்லை. அப்பா பார்த்துவிட்டார். ஆனால், அவர் எதுவும் கேட்கவில்லை. பின்பு, பல வருடங்கள் கழித்து, தன் அப்பாவின் கடைசி நாட்களின்போது இதை கேட்டிருக்கிறார் வாத்தியார்.

"அப்பா, ஹாஸ்டலுக்கு நீங்க வந்திருந்தபோது சுவத்துல..."

"ஞாபகம் இருக்குடா...ஒரு பொம்மனாட்டி படம் ஒட்டி இருந்தது"

"ஏம்பா எதுவும் கேட்கல?"

"எப்படியும் நீ படிச்சு ஒழுங்கா வந்துடுவேன்னு தெரியும்டா". வாத்தியாரின் அப்பா தீர்க்கதரிசி!

#பணிக்காலத்தில், பல பிரச்னைகள் காரணமாக கிட்டத்தட்ட ஏழெட்டு முறை வீடு மாற்றியிருக்கிறார். அதுவும், பங்களூரில்தான் (வாத்தியாருக்கு எப்பவும் பங்களூர்தான், பெங்களூர் அல்ல) அதிகம். ம்ம்...என்ன செய்ய? அவங்க அப்பவே அப்படித்தான் போல!

#நிறைய கவிதைகளை பகிர்ந்திருக்கிறார். மனுஷ்ய புத்திரன், கனிமொழி (அவங்கதானே?) ஆகியோரின் பெயர்களை அடிக்கடி காண முடிந்தது. ஒரு சில அத்தியாயங்களில், "கவிதை புத்தகமெல்லாம் எனக்கு அனுப்பாதீங்க" என்று சற்று கோபம் கலந்து கெஞ்சி கேட்கிறார். அப்படியும் நம் பயபுள்ளைகள் அவரை விட்ட மாதிரி தெரியவில்லை.

#எழுத ஆரம்பித்து, சில வருடங்கள் கழித்து தட்டச்சுக்கு மாறி, பின்பு கணிணியில் கதைகள் எழுதியதை பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். கணிணியில் கதைகள், கட்டுரைகள் எழுதுவதின் பெரும் பயனாக அவர் சொல்லியிருப்பது - தன் கிறுக்கல் கையெழுத்தை பெரும் மன உளைச்சலுடன் வாசிக்கும் கஷ்டம் உதவி ஆசிரியர்களுக்கு இல்லாமல் போனது!

#இணையத்தில், தன்னை குறித்தான பாராட்டுகளையும், விமர்சனங்களையும் நன்கு கவனித்து வந்திருக்கிறார். இணையம் ஒரு சுதந்திரமான பொதுவெளி. இங்கு யாரும் எதுவும் சொல்லலாம் என்பதால், அவர்கள் எல்லோருக்கும் பதிலளிப்பது சரி வராது என்பது வாத்தியாரின் வாதம். இது தற்போதைய பதிவர்களுக்கும் பொருந்தும்.

#ரஜினி, வேண்டாம் என்று சொன்னவுடன், இயக்குனர் ஷங்கர் வேறு யார் 'முதல்வன்' என்று யோசித்திருக்கிறார். "இந்த கதைக்கு பெரிய நடிகர் அவசியமில்லை, நன்கு நடிக்கத் தெரிந்த நடிகர் இருந்தாலே போதும்" என்று வாத்தியார் சொல்ல, ஜென்டில்மேனை, முதல்வன் நாற்காலியில் உட்கார வைத்திருக்கிறார் ஷங்கர்.

பகிர்ந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. எதை எழுதுவது, எதை விடுவது என்றுதான் தெரியவில்லை. வாசித்து முடித்த பின், புத்தகத்தோடு ஒரு முடிவையும்  எடுத்து அலமாரியில் வைத்திருக்கிறேன். அது, 'கற்றதும் பெற்றதும்' மொத்தம் எத்தனை பாகங்கள் இருக்கிறதோ, அத்தனையையும் வாங்கிவிட வேண்டும். காத்திருக்கிறேன், 2013 சென்னை புத்தகக் கண்காட்சிக்காக.


Saturday, July 07, 2012

Exam - உங்கள் அறிவுத்திறனை சோதிக்க ஒரு படம்!

ஒரு படம், பார்ப்பவர்களை உருக வைக்க வேண்டும், நெஞ்சை நெகிழ வைக்க வேண்டும், கண்களை கலங்க வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவரா நீங்கள்? அப்படியெனில் இது உங்களுக்கான படமல்ல. ஒன்று, இப்போதே இந்த விண்டோவை க்ளோஸ் பண்ணிவிடுங்கள் அல்லது கொஞ்சம் நேரம் ஒதுக்கி இந்த படத்தையும் பாருங்கள். ஒன்றரை மணி நேர சுவாரஸ்யத்துக்கு 100% கேரண்டி!

டமால் டுமீல் அதிரடி சண்டை காட்சியெல்லாம் கிடையாது. இங்கிட்டு ஒரு பில்டிங், அங்கிட்டு ஒரு பில்டிங் என்று தத்தி தாவும் ஸ்பைடர்மேனிஸமும் கிடையாது. இவையேதுமின்றி ஒரு த்ரில்லர் படத்தை எடுக்க முடியுமா, பார்ப்பவர்களை கவர முடியுமா என்ற கேள்விக்கு இந்த படத்தை பதிலாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்டுவர்ட் ஹசல்டைன் (Stuart Hazeldine). 

பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வரும் படம் என்பார்களே. அது இந்த படத்துக்கு அட்சர சுத்தமாக பொருந்தும். ஒரேயொரு லொகேஷன். நூற்றியொரு நிமிடங்கள். முழுக்க முழுக்க உரையாடல்கள்தான். இருந்தும் ஒரு இடத்தில் கூட சலிப்பே வரவில்லை. அடுத்து என்ன அடுத்து என்ன என்ற ஆர்வம்தான் அதிகமாகிக்கொண்டே போகிறது. வெகு நாளாயிற்று இப்படியொரு படத்தை பார்த்து!




ஒரு பயோ-டெக் கம்பெனியில்,  சிஇஓவின் பர்சனல் அசிஸ்டன்ட் பதவிக்காக ஒரு தேர்வு வைக்கப்படுகிறது. மொத்தம் எட்டு பேர் அந்த தேர்வை எழுத தகுதி பெற்றிருக்கின்றனர். ஒவ்வொருவரும் வெவ்வேறு சமூகப் பின்னணியை கொண்டவர்கள். அந்த எட்டு பேரில் ஒருவர்தான் சிஇஓவின் பர்சனல் அசிஸ்டன்ட்டாக தேர்வு செய்யப்படுவார்.

தேர்வறையை பற்றி சொல்லியாக வேண்டும். ஒரு ஜன்னல் கூட இல்லாத மூடிய அறை அது. அறை கதவின் பக்கத்திலேயே ஆயுதம் ஏந்திய காவலர் ஒருவர் இருக்கிறார். எட்டு போட்டியாளர்களும் அவரவர் இருக்கையில் அமர்ந்திருக்க, அந்த தேர்வின் ஒருங்கிணைப்பாளர் அறைக்குள் நுழைகிறார். 

அவர் சொல்லும் சில விஷயங்கள்:

இந்த தேர்வுக்கான நேரம் மொத்தம் 80 நிமிடங்கள்

இந்த தேர்வில் போட்டியாளர்கள் பதிலளிக்க வேண்டியது ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே!

மேலும் இந்த தேர்வுக்கு மூன்று நிபந்தனைகள்:

நிபந்தனை #1: போட்டியாளர்கள் யாரும் தேர்வு ஒருங்கிணைப்பாளரிடமோ, அறை கதவின் அருகில் இருக்கும் ஆயுதம் ஏந்திய காவலரிடமோ  பேசக்கூடாது.

நிபந்தனை #2: போட்டியாளர்கள் தங்கள் விடைத்தாளை சேதப்படுத்தக்கூடாது.

நிபந்தனை #3: அந்த அறையை விட்டு வெளியேறக்கூடாது.

இந்த மூன்று நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினாலும், போட்டியாளர்கள் தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள். இவற்றை அறிவித்துவிட்டு அந்த ஒருங்கிணைப்பாளர் தேர்வறையிலிருந்து வெளியேறிவிடுகிறார்.

இப்போது, போட்டியாளர்கள் ஒவ்வொருவரும், தங்கள் முன் வைத்திருக்கும் தாளை திறந்து பார்க்க......அவர்களுக்கு பேரதிர்ச்சி! அந்த தாளில் கேள்வியே இல்லை.  கேள்வியே  இல்லாமல் எப்படி விடையளிப்பது? எப்படி தேர்ச்சி பெறுவது? 

ஒரு சில  நிமிடங்களுக்குப் பின், அந்த அறைக்குள்தான்  கேள்வி எங்கேயோ ஒளிந்திருக்கிறது என்று முடிவு செய்து, தேட ஆரம்பிக்கிறார்கள். கேள்வியை கண்டுபிடித்தார்களா, எட்டு பேரில் யார் வெற்றி பெற்றது என்பதையெல்லாம், வெள்ளித்.....கணிணித்திரையில் கண்டு மகிழுங்கள்!

நான்கெழுத்து F*** வார்த்தையை தவிர்த்து, துளியும் விரசமின்றி நகருகிறது படம். தைரியமாக குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கலாம்.  படம் பார்த்து முடித்தவுடன், "ச்சே...நம்மால ஏன் அந்த கேள்வியை கண்டுபிடிக்க முடியல?" என்ற கேள்விதான் வெகுநேரம் எனக்குள் உறுத்திக்கொண்டிருந்தது.  கொஞ்சம் சுவாரஸ்யமான உறுத்தல்தான். படம் பார்த்தால், அது உங்களுக்கும் கிடைக்கும்.

பி.கு: திரைப்படம் குறித்து வெகு நாட்களாய் எழுதாததால் இந்த பதிவை முயற்சித்தேன். ஜாக்கிகள், கேபிள்கள் அளவுக்கெல்லாம் எனக்கு எழுத வராது. பொறுத்தருள்க :)

Wednesday, June 27, 2012

ஒரு நடுப்பகல் மரணம் - சுஜாதா


சில கதைகளின் பெயரை பார்த்தாலே சட்டென ஈர்த்துவிடும். ஆனாலும் இருமுறை யோசிப்பேன், தலைப்பில் இருக்கும் வசீகரம் உள்ளடக்கத்தில் இருக்குமா என. இந்த புத்தகம் வாங்குவதற்கு அப்படிப்பட்ட யோசனை எதுவும் தேவைப்படவில்லை. காரணம், மேலட்டையில் இருந்த மூன்று எழுத்துக்கள். சு. ஜா. தா.

பங்களூருக்கு (வாத்தியாருக்கு எப்பவும் பங்களூர்தான், பெங்களூர் அல்ல) தேனிலவு செல்கிறார்கள் புதுமண ஜோடி. ஒரு மதிய வேளையில், மனைவி வெளியே சென்றிருக்கும்போது, ஹோட்டல் அறையிலேயே வைத்து கணவன் கொலை செய்யப்படுகிறான். அறை கண்ணாடியில் ரத்தத்தால் MAYA என்று எழுதப்பட்டிருக்கிறது.

ஆம். கொலை செய்த நபர், 'முடிந்தால் என்னை பிடியுங்கள் பார்க்கலாம்' என்று கிட்டத்தட்ட நேரடியாகவே போலீசுக்கு சவால் விட, கதை சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. MAYA என்றால் என்ன, எதை குறிக்கிறது என்று பின்தொடரும் போலீஸ், ஒரு கட்டத்தில், கொலைகாரனை கைது செய்கிறார்கள்.

கடைசியில், எல்லோரையும் அழைத்து, யார் கொலை செய்தது, எப்படி கண்டுபிடித்தோம் என்பதையெல்லாம் போலீசார் விளக்குகிறார்கள். இங்கு ஒரு ட்விஸ்ட் வைக்கிறார் வாத்தியார். அது என்ன என்பதை இந்த கதையை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.



இதை விட சுருக்கமாக இந்த கதையை பற்றி சொல்ல எனக்கு தெரியவில்லை. வேறு எதை சொன்னாலும் சஸ்பென்ஸ் உடைந்துவிடும். அதனால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

கதை பெரும்பாலும் பெண்ணின் பார்வையிலேயே செல்கிறது. திருமணத்திற்கு பின் பெற்றோரை பிரிவது, முதலிரவு, தேனிலவு, கணவன் கொலையுண்ட பின் கிடைக்கும் அதிர்ச்சி, மாமியாருடன் ஏற்படும் உரசல் என்று பல விஷயங்கள்.

கணவனை இழந்த இளம் பெண்கள், உறவினர்களாக இருந்தாலும் வேறு ஆண்களோடு பேசினால், அதை எல்லோரும் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை. கண், காது, மூக்கு மட்டுமின்றி, இன்ன பிற அங்கங்களும் வைத்து அழகு பார்த்து, ஆகச் சிறந்த கதையொன்றை கட்டுவதில் நம் சமூகம் இன்னும் சிறந்து விளங்கிகொண்டிருக்கிறது. இதை ஒரு புத்திமதி மாதிரியோ, கருத்து மாதிரியோ இடித்துரைக்காமல், போகிற போக்கில், ஒரு கதாபாத்திரம் வழியாக மிகச் சாதாரணமாக சொல்லிவிட்டு போகிறார் வாத்தியார்.

மற்ற கதைகளை ஒப்பிடுகையில், இந்த கதையின் க்ளைமேக்ஸ் அவ்வளவாக பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்தாதது ஒரு மைனஸ்தான். ஆனால் அதையும் தாண்டி இந்த கதையை ரசிக்க வைப்பது, அதன் ஃப்ளோ. அடுத்து என்ன ஆகும், அடுத்து என்ன ஆகும் என்று ஒரு படபடப்புடன் ஓடிக்கொண்டே இருக்கிறது கதை!

Strictly for Sujatha Fans!


Wednesday, May 09, 2012

தி.நகர்

தி.நகர். சென்னையின் அனைத்து தேவதைகளும் சங்கமிக்கும் பூந்தோட்டம். பீஹார் - வேளச்சேரி. இவற்றிற்கெல்லாம் அஞ்சவே இல்லை. கொஞ்சம் கூட என்கவுண்டர் பயமின்றி, வருவோர் போவோரையெல்லாம், கடைக்கண் பார்வையிலேயே போட்டு தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள் அழகான ராட்சசிகள். 

கிட்டத்தட்ட  ஆறு மாதங்களுக்குப் பின் கடந்த வாரம்தான் தி.நகர் செல்ல முடிந்தது. சம்மரை சமாளிப்பதற்காக அம்மாவுக்கும் பாட்டிக்கும், ஈரோடு காட்டன், இம்பீரியல் வகை புடவைகளை ஒவ்வொரு வருடமும் எடுத்துகொடுப்பதுண்டு. எப்போதும் போத்தீஸ்தான் முதல் மற்றும் ஒரே சாய்ஸ்.

ஆனால் இந்த வருடம் போத்தீஸ் கொஞ்சம் ஏமாற்றம்தான். அரை மணி நேரம் சுற்றியும் எதுவும் பிடிக்கவில்லை. எனவே குமரனில் எட்டி பார்த்தேன். இங்கும் மனதுக்கு திருப்தி அளிக்கவில்லை.  சுமார்தான். இரண்டு புடவைகளை மட்டும் எடுத்துக்கொண்டு நடையை கட்டினேன்.

அடுத்து சென்னை சில்க்ஸ். நன்றாக இருந்தால் இங்கு எடுப்போம். இல்லையென்றால் ஊருக்கு செல்லும்போது அங்கேயே எடுத்துவிடலாம் என்று அரை மனதோடுதான் உள்ளே சென்றேன். ஆச்சரியம்! நிஜமாகவே அழகழகான டிசைன்கள். ஒவ்வொரு புடவையும் ஏறக்குறைய ரூ.300 ரேஞ்சுக்கு இருக்கிறது. அவ்வளவும் வொர்த். தரத்திற்கும் குறைவில்லை.

சென்னை சில்க்ஸ்காரர்கள் புத்திசாலிகள். உடல் குளிர ஜம்மென்று ஏஸியும், மனம் குளிர  கும்மென்று அனுஷ்கா ஸ்டில்லும் ஒட்டிவைத்து நம்மை ஈர்த்துவிடுகிறார்கள். காய்கிற வெயிலுக்கு, அங்கேயே இன்னும் கொஞ்ச நேரம் சுற்றிகொண்டிருக்கலாம் போலிருந்தது. ஹும்ம்ம்...என்ன செய்ய? சில பல புடவைகளை அள்ளிக்கொண்டு கிளம்பினேன்.
  

தி.நகர் நொறுக்ஸ்

#பேருந்தைவிட ரயில்தான் வசதியாக இருக்கிறது. மாடி ரயிலில் பீச் ஸ்டேஷனுக்கு சென்று, அங்கிருந்து மாம்பலம். சற்று வெயில் நேரத்தில் சென்றால் கூட்டமும் இருக்காது. பர்ஸுக்கும் பங்கம் இல்லை.

#வெயில் காலம் என்பதால் எல்லா ஜூஸ், ஐஸ்க்ரீம் கடைகளிலும் கூட்டம் அம்முகிறது. சில கடைகளில் இன்னமும் கண்ணாடி க்ளாசை ஜூஸுக்கு பயன்படுத்துகிறார்கள். இவற்றை கழுவுவதற்கு எந்தளவு அக்கறை காண்பிப்பார்கள் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. எனவே, எந்தவித கலப்படமுமின்றி, சுத்தமான முறையில் இயற்கை தரும் இளநீர்தான் சாலச்சிறந்ததாக படுகிறது எனக்கு.

#தி.நகரில் மட்டும், "நடைபாதை" என்பதை "கடைபாதை" என பெயர்மாற்றம் செய்திட தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரவேண்டும். முழுக்க முழுக்க கடைகள்தான். சாலையில்தான் நீங்கள் கண்டிப்பாக நடந்தாக வேண்டும். இந்த நடைபாதை வியாபாரிகள் யாரும் திமுகவை சேர்ந்தவர்கள் கிடையாது என்பதை ஆணித்தரமாக நம்புகிறேன். இல்லாவிடில், எப்போதோ நில ஆக்கிரமிப்பு வழக்கில் உள்ளே சென்றிருப்பர்.

#திடீரென்று ஏதாவது ஒரு சந்தில் இருந்து, ஒரு ஆட்டோவோ, ஹோண்டா ஆக்டிவாவோ உங்களை ஏறக்குறைய இடித்துவிடும் அளவுக்கு வந்து, ப்ரேக் போட்டு கிறீச்ச்ச்ச்ச்ச்ச்சும். ஓட்டுபவர், உங்கள் குலம், கோத்திரம் ஆகியவற்றை கேட்காமலேயே, கொஞ்சம் அர்ச்சனை செய்துவிட்டு செல்வார். இந்த அர்ச்சனை ஆண்களுக்கு மட்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

#ரங்கநாதன் தெருவில் சரவணா ஸ்டோர்ஸ் உட்பட பல இடங்களில் வெளியே ஸ்நாக்ஸ் அயிட்டங்களை விற்றுகொண்டிருக்கிறார்கள். ஈக்களுக்கும் இந்த ஸ்நாக்ஸ் அயிட்டங்கள் ரொம்ப ஃபேவரைட் போல. சும்மா, பறந்து பறந்து ருசித்துகொண்டிருக்கின்றன. ஜனங்கள் இதையெல்லாம் துளி கூட கண்டுகொள்ளவில்லை. ஒவ்வொரு அயிட்டத்தையும் வெளுத்து வாங்குகிறார்கள். யோவ், இப்படிலாம் இருந்தா பின்ன ஏன் பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல், நீர்வன, பறப்பன, ஊர்வன காய்ச்சல்லாம் வராது?

இவ்வளவு பேர் கூடும் இடத்தில், ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், மக்களை ஒழுங்குபடுத்துவதற்கோ, அவசர உதவிக்கோ போதுமான வசதிகள் இல்லை என்றுதான் தோன்றுகிறது. என்னதான், இது போன்ற ஒரு சில குறைகள் இருந்தாலும், இங்கு கிடைக்கும் பல பொருட்கள் நாம் வசிக்கும் ஏரியாவிலேயே கிடைத்தாலும், இன்னும் தி.நகர் சலிக்கவில்லை என்பது மட்டும் உண்மை.

Thursday, March 29, 2012

சென்னையில் ஒரு வெயில் காலம்

என்ன ஆச்சு தமிழ் சினிமாவுக்கு?

முன்பெல்லாம், இந்த படம் போகலாமா, அந்த படம் போகலாமா என்று முடிவெடுக்க முடியாமல் திணறுவேன். சமீபத்தில் அம்புலிக்குப் பிறகு எந்த படமும் பார்க்கவில்லை. கடந்த நான்கைந்து வாரங்களில் வெளியான எந்த படத்தையும் பார்க்கும் ஆர்வம் துளிகூட இல்லை. அரவான், கழுகு போன்ற படங்களை, பார்க்கலாமாஆஆ என்று யோசித்தால், சுடச்சுட விமர்சனங்கள் வெளியாகி அதற்கும் முட்டுக்கட்டை போட்டுவிடுகிறது.

வாரத்திற்கு ஒரு படம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, மாதத்திற்கு ஒரு படம் என்று மாறி, இப்போது ஒன்றிரண்டு மாதங்களுக்கு ஒரு படம் என்ற அளவில் வந்திருக்கிறது. நாற்பதாண்டுகள் கழித்து ரிலீசாகியிருக்கும் "கர்ணன்" படம் இந்த அளவு சக்கை போடு போடுவதற்கு சரியான போட்டி இல்லாததும் ஒரு காரணம் என்றுதான் தோன்றுகிறது.





ஆயிரம் சொல்லுங்க, சச்சினின் நூறு நூறுதான்!

நூறாவது சதத்தை கடப்பதற்கு சச்சின் எவ்வளவு கஷ்டப்பட்டாரோ, அதே அளவு சச்சினின் ரசிகனாய் நாமும் பட வேண்டியதாகிவிட்டது. நூறாவது சதம் முன்பு வரை, "99 சதம் அடித்தவருக்கு இன்னும் ஒரு சதம் அடிக்கவா தெரியாது?" என்று பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தேன். அந்த போட்டியில் தோற்ற பின், மறுநாள் அலுவலகத்தில் பழைய பல்லவியை பாட ஆரம்பித்துவிட்டார்கள், "சச்சின் செஞ்சுரி அடிச்சா இந்தியா தோத்துடும்".

சச்சின் இந்த முறை மெதுவாக ஆடினார் என்பதை மட்டும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் டீம் ஸ்கோரை நினைத்து பாருங்கள். 289. பங்களாதேஷுக்கு எதிராக இதனை defend பண்ண முடியவில்லை என்றால் கண்டிப்பாக குறை பெளலிங் மீதுதான். ஆனாலும் சச்சின் பெளலர்களை குறை கூறவில்லை. போட்டி முடிந்த பின் சச்சின் சொன்ன வார்த்தைகள் "Australia scored 434 but still lost to South Africa".  மேன்மக்கள்!

அதே பங்களாதேஷ் டீமை 260க்கும் குறைவான் டார்கெட் வைத்து, லீக் போட்டியிலும், இறுதிப் போட்டியிலும் வென்றது பாகிஸ்தான். கோஹ்லி, ரெய்னா, ரோஹித் ஷர்மா என்று பேட்டிங்கில் அசுரத்தனமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்திய அணி, பெளலிங்கில் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

அன்னை அரசு - அம்மையார் அரசு 

பத்து மாதங்கள் ஆன பின்பும், தமிழக அரசை பாராட்டும்படியான வாய்ப்பு இன்னும் அமையவில்லை. எந்த நேரத்தில் சமச்சீர்க்கல்வி திட்டத்தில் கை வைத்தார்களோ, தொட்டதெல்லாம் "துலங்கிக்கொண்டிருக்கிறது". மின்வெட்டு பிரச்னை பற்றி எல்லோரும் பேசி, புலம்பி, திட்டி தீர்த்து இப்போது அதற்கு பழகிக்கொண்டார்கள். மணி பத்து ஆகப்போகுது..கரண்ட் கட் ஆகற நேரம். ரைட்டு, தண்ணி புடிச்சு வெச்சுடுவோம்..இதுதான் வாழ்கை முறையாக மாறிபோயிருக்கிறது.

அட மாநில அரசுதான் இப்படி இருக்கிறது என்றால், மத்திய அரசு "வடக்கு பட்டி ராமசாமிக்கு கொடுத்த பணம் ஊஊ" கதையாக இருக்கிறது. தொடர்ந்து ஊழல் வழக்குகள், பெட்ரோல் விலையேற்றம், இலங்கைக்கெதிரான தீர்மானத்தில் வழா வழா கொழா கொழா நிலை என்று பத்திரிக்கை தலைப்புச் செய்திகளுக்கு செம தீனி போடுகிறார்கள், கொஞ்சம் நெருப்பு அள்ளி நம் வயிற்றில் போட்டுவிட்டு.

இரண்டு அரசுகளுக்கும் சரியான மாற்று இல்லாததுதான் இன்னும் எரிச்சலாக இருக்கிறது.....:-(

சென்னையில் ஒரு வெயில் காலம்

மே மாதத்தில் காய வேண்டிய வெயில் மார்ச் மாதத்திலேயே காய்ந்து, நாம் சென்னையில்தான் இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது. வெயிலை சமாளிக்க நான் ஃபாலோ பண்ணும் ஒரு விஷயம், அரிசி சாப்பாட்டை குறைத்துக்கொள்வது. சாப்பாட்டை குறைத்துக்கொண்டு நிறைய பழங்கள், இளநீர், ஜூஸ் போன்றவற்றை எடுத்துக்கொண்டால் வெயிலை ஓரளவு சமாளிக்க முடியும்.

எந்த கடையில் ஜூஸ் குடித்தாலும், ஐஸ் போடாமல் குடிப்பது சாலச்சிறந்தது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, ஐஸ் போட்டு குடிப்பது உடம்பை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவாது. இன்னொரு காரணம், அவ்வளவு பெரிய ஐஸ் கட்டியை எப்படி தூள் தூளாக்குகிறார்கள் என்பதை பார்த்தால் சத்தியமாக ஐஸ் போட்டு ஜூஸ் குடிக்க மனசே வராது.

Let me be myself...please!

எல்லோரும் விரும்பும்படி நடந்துகொள்வது யாருக்கும் சாத்தியமில்லை. நம்மைச் சுற்றி பத்து பேர் இருந்தால், கண்டிப்பாக இரண்டு பேருக்காவது நம் மீது கொஞ்சம் பொறாமையோ, எரிச்சலோ இருக்கக்கூடும். எட்டு பேருக்கு நம்மை பிடித்திருந்தாலும், நம்மை பிடிக்காத இரண்டு பேரின் வார்த்தைகள் ஆறாத காயத்தை ஏற்படுத்திவிடுவதுண்டு. எனவே எல்லோருடைய விருப்பப் பட்டியலிலும் இடம் பெற வேண்டும் என்று ரொம்பவே மெனக்கெடுவேன்.

இப்போது அந்த ஆட்டிட்யூட் கொஞ்சம் மாறியிருக்கிறது. எல்லோருக்கும் பிடித்தவனாக மாற முயற்சிக்கையில், என்னுடைய தனித்தன்மையை இழப்பதை நன்றாக உணரமுடிகிறது. நான் நானாக இருக்கவே விரும்புகிறேன். என்னுடைய கோபம், அன்பு, நட்பு, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்வோர் மட்டும் எனக்கு நெருக்கமானவர்களாக இருந்தால் போதும். இதை திமிராக சொல்லவில்லை. If you can't love me, please ignore me..


Thursday, March 08, 2012

59வது தேசிய திரைப்பட விருதுகள் - ஏன் ரஹ்மானுக்கு கிடைக்கவில்லை?

நேற்று மதியம் சிஎன்என் சேனலில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பை நேரடியாக  ஒளிபரப்பினார்கள்.  மிகுந்த ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தேன். மற்ற எந்த  கேட்டகரியிலும் எனக்கு பெரிதாக ஆர்வம் இல்லை. ஆனால் சிறந்த இசையமைப்பாளர் விருது ரஹ்மானுக்கும், சிறந்த பின்னணி பாடகர் விருது மோஹித் செளகானுக்கும் கண்டிப்பாக கிடைக்கும் என்று 'ராக்ஸ்டார்' இசை கேட்டதிலிருந்தே நம்பிக்கொண்டிருந்தேன். நிற்க.  நான்கைந்து  பத்திகள் கழித்து  மீண்டும்  புலம்புகிறேன்.


கன்னாபின்னாவென்று வசூலும், ஆஹா ஓஹோவென விமர்சனங்களும் வந்துவிட்டதால் வித்யா பாலனுக்கு விருது கிடைத்ததில் பெரிய ஆச்சரியம் இல்லை. 'கான்' நடிகர்கள் இல்லாமலும் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை தரமுடியும் என்று நிரூபித்ததே 'டர்ட்டி பிக்சர்' டீமுக்கு பெரிய வெற்றிதான். இந்த விருது இன்னும் அவர்களை மேலும் உற்சாகபடுத்தி இருக்கக்கூடும்.

விமர்சகர்கள் கல் எறிந்தாலும், அற்புதமான  மார்க்கெட்டிங்கினாலேயே துட்டு பார்த்துவிட்ட ஷாரூக்கின் 'ரா.ஒன்', சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் விருதை அள்ளியிருக்கிறது. 

சிறந்த படத்தொகுப்பிற்காக 'ஆரண்ய காண்டம்' படத்திற்கும், தமிழில் சிறந்த படமாக 'வாகை சூட வா'விற்கும் விருது கிடைத்துள்ளது. இவையிரண்டும் சரியான தேர்வுதான். வித்தியாசமான கதை, மசாலா ஐட்டங்கள் ஏதுமின்றி குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படம் என்றாலும், சிறந்த ஜனரஞ்சக படமாக 'அழகர்சாமியின் குதிரை' தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. 

ஜனரஞ்சகமான படம் என்றால் அனைவரையும் கவர்ந்திருக்க வேண்டும். வணிக ரீதியாக வெற்றி கிடைக்காததே இந்த படம் அனைவரையும் கவரவில்லை என்பதற்குச் சான்று. அதற்காக 'மங்காத்தா' படத்திற்குத்தான் இந்த விருது கிடைத்திருக்க வேண்டும் என்று சொல்லுமளவுக்கு நான் கொடுங்கோலன் அல்ல. ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால்,  'அழகர்சாமியின் குதிரை' - விமர்சகர்களால் மட்டுமே கொண்டாடப்பட்ட படம். 

'லகான்' படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டபோதும் எனக்கு இதே எண்ணம்தான் தோன்றியது. படு புத்திசாலித்தனமான திரைக்கதை, அசத்தலான இயக்கம், இசை ஆகியவை இருந்தாலும், ஆஸ்கர் வாங்கும் அளவுக்கு இந்த படம் வொர்த் இல்லை என்பது என் கருத்து. 

ராக்ஸ்டாருக்கு வருவோம். படத்தின் இரண்டாம் பாதி சரியான சொதப்பல் என்றாலும் சிறந்த நடிப்பிற்கான விருது ரன்பீர் கபூருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஃபில்ம்ஃபேர், அப்ஸரா, ஸ்டார் ஸ்க்ரீன் அவார்ட்ஸ், ஸீ சினி அவார்ட்ஸ் என பல விருதுகளை அள்ளினாலும், தேசிய விருது கிடைக்கவில்லை. போகட்டும், இது கூட பரவாயில்லை. ஆனால் பாடல்களை கேட்ட பின்பும், பார்த்த பின்பும், இசைக்காக ரஹ்மானுக்கும், பாடியதற்காக மோஹித் செளகானுக்கும் கண்டிப்பாக விருது கிடைக்கும் என்று திடமாக நம்பினேன். ஃபில்ம்ஃபேரில் ஆரம்பித்து ஒவ்வொரு மேடையாக ஏறி, இருவரும் விருதுகளை வாங்கி குவித்துகொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இவ்விருவருக்குமே தேசிய விருது கிடைக்காதது  ஒரு மிகப்பெரிய disappointment. பொதுவாக ரஹ்மானின் பாடல்களில், ஒரு படத்தில் ஒன்றிரண்டு பாடல்களாவது 'சுமார்' என்ற ஃபீலிங்கைத்தான் கொடுக்கும். இசை சம்பந்தப்பட்ட படம் என்பதாலோ என்னவோ, ஃபுல் ஃபார்மில் பட்டையை கிளப்பியிருந்தார் ரஹ்மான். 'ஜோ பி மேய்ன்' தொடங்கி 'தும் ஹோ' வரை ஒவ்வொரு பாடலும் அட்டகாசம். 




இந்த பாடலை பாருங்கள். ரஹ்மானின் இசையும், மோஹித் செளகானின் குரலும், ரன்பீர் கபூரின் நடிப்பும், நாடி நரம்பையெல்லாம் முறுக்கேற வைக்கும்! என்னை பொறுத்தவரை ஆஸ்கர் வாங்கிய 'ஜெய் ஹோ'வை விட 'சட்டா ஹக்' நூறு மடங்கு மேல். இந்த பாடலுக்கு விருது கிடைக்காமல் போனது ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. தேர்வு குழுவினர் இந்த பாடலை கேட்டதே/பார்த்ததே இல்லையோ? ப்ச்... என்னமோ போடா மாதவா!