இது கண்டிப்பாக 2012ல் வெளிவந்த சிறந்த படங்களின் லிஸ்ட் அல்ல. என் ரசனைகேற்றவாறு, 2012ல் நான் ரசித்து பார்த்த படங்களை வரிசைப்படுத்தியிருக்கிறேன். அந்த படத்தை விட்டுட்ட, இந்த படத்தை விட்டுட்டன்னுலாம் குறை சொல்லப்பிடாது :)
**********************
காதலில் சொதப்புவது எப்படி
வாவ்!: காதலர்கள் பிரிகிறார்கள். ஈகோ பிரச்னை. எப்படி மீண்டும் சேருகிறார்கள்? நெகிழ்வு, உருக்கம் அது இதுவென்று ஒரு துளி கண்ணீரையாவது வரவழைக்கக்கூடிய கதை ஆனாலும் அதை நகைச்சுவையாக சொன்னதாலேயே பிடித்துப்போனது. அதுவும் ஒரு காட்சியில், அமலா பால் அழ ஆரம்பிக்கும்போது, ஒரு அணையில் இருந்து நீர் வெளியேறுவதை காண்பிக்கும்போது சிரிப்பை அடக்கமுடியவில்லை.
ஆனால் உங்கள் மனைவி/காதலி அழும்போது, இந்த காட்சி நினைவுக்கு வந்து சிரித்து தொலைத்தீர்களேயானால், சனி பகவான் உங்கள் தலையில் டிஸ்கோ டான்ஸ் ஆடுகிறார் என்று அர்த்தம்.
ப்ச்: ஆரம்பத்தில் கொஞ்சம் நன்றாக இருந்தாலும் போகப் போக, சித்தார்த் கேமராவை பார்த்து "பசங்க பொண்ணுங்க, பசங்க பொண்ணுங்க" என்று அடிக்கடி பேசுவது அவ்வளவாக ரசிக்கும்படி இல்லை.
அம்புலி
வாவ்!: நமக்கு அடையார் ஆனந்த பவன் பாஸந்தியைப் போன்றது,
இயக்குனர் ஹரீஷுக்கு ஹாரர் ஜானர் கதைகள். எனவே இம்மாதிரி கதையை அவர் தேர்ந்தெடுத்தது ஆச்சரியமில்லை. ஆனால் திருட்டு விசிடி பிரச்னையை சமாளிக்க இந்த டீம், 3டி'யில் படத்தை எடுத்தது மிக புத்திசாலித்தனமான முடிவு.
தமிழ்நாட்டில் இன்றும் பல கிராமங்களில் ஏதாவதொரு ஏரியாவை பற்றி ஒரு பேய் கதை இருக்கும். கிராமத்தில் ஒரு ஹாரர் கதை, அதுவும் 3டி'யில் என்பது படத்திற்கு மேலும் சுவாரஸ்யம் கூட்டியது.
ப்ச்: காதலை இன்னும் கொஞ்சம் க்யூட்டாக காண்பித்திருக்கலாம். பாடல்களை போல் காதலும் மனதில் அவ்வளவாக ஒட்டவில்லை. க்ளைமேக்ஸ் இன்னும் கொஞ்சம் பெட்டராக படமாக்கப்பட்டிருக்கலாம்.
இங்க்லிஷ் விங்க்லிஷ்
வாவ்!: ஸ்ரீதேவி. QUEEN'S RETURN TO THE SCREEN. ஆங்கிலம் அவ்வளவாக தெரியாத ஒரு பெண்ணை, அவள் குடும்பத்தினரே எவ்வளவு அலட்சியமாக ட்ரீட் செய்கின்றனர் என்பதை மிக இயல்பாக காண்பித்திருந்தார் கெளரி ஷிண்டே. ஒரு சில குடும்பத்தலைவர்களுக்காவது கண்டிப்பாக உறுத்தியிருக்கும்.
ஆங்கிலம் கற்றுக்கொண்டபின் ஸ்ரீதேவி கிளைமேக்ஸில் ஐ.நா.சபையில் உரையாற்றுவாரோ என்கிற பயத்தில் நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போது, வீட்டு திருமண நிகழ்ச்சியில், அதுவும் சிற்சில தவறுகளுடன் ஆங்கிலம் பேசுவது போன்று காண்பித்திருந்தது படு யதார்த்தம்.
ப்ச்: நானும் இருக்கேன் என்பது போல் இருந்தது இசை. இளையராஜாவை இறக்கி விட்டிருக்க வேண்டும். நிறைய காட்சிகளில் நம் மனதில் புகுந்து ஆட்கொண்டிருப்பார். GAURI & BALKI, YOU MISSED HIM!
ஒரு கல் ஒரு கண்ணாடி
வாவ்!: வேறு யார், சந்தானம்தான். வசனங்களுக்கு இணையாக, பாடி லேங்க்வேஜிலும், ரியாக்ஷனிலும் அதகளப்படுத்தி இருந்தார். ஓவர் பில்டப், ஒப்பனிங் சாங் என்று எதுவுமில்லாமல், தூக்கத்திலிருந்து எழுந்திருப்பது போன்று அறிமுகமானதிலேயே உதயநிதியை பிடித்துப்போனது. நடனத்தை தவிர, நடிப்பில் ஓரளவு பாஸாகிவிட்டார் என்றே சொல்லலாம்.
ப்ச்: லூஸு போல ஹன்சிகாவை சுற்றிய பின், ப்ராஜக்ட், ஒத்து வராது என்றெல்லாம் ஹீரோ சொல்லும்போது, ஓங்கி ஒரு குட்டு குட்டலாம் போல இருந்தது. ஹீரோ ஹீரோயின் காதலிக்கிறார்கள். பிரிகிறார்கள். காமெடி நண்பன். நட்பு. பிரபல ஹீரோவின் ஸ்பெஷல் அப்பீயரன்ஸ். ஹீரோ ஹீரோயின் லவ் சக்சஸ். இந்த டெம்ப்ளேட்டை ராஜேஷ் கண்டிப்பாக மாற்றியே தீரவேண்டும். OLD WINE IN NEW BOTTLE ரொம்ப நாளைக்கு நல்லாருக்காது.
நான் ஈ
வாவ்!: சந்தேகமின்றி இயக்குனர் ராஜமௌலிதான். ஒரு சனிக்கிழமை மாலை, சும்மா டைம் பாஸுக்காக நண்பனுடன் இந்த படத்திற்கு சென்றேன். படம் ரிலீசான இரண்டாம் நாள் என்று நினைக்கிறேன். அரை மணி நேரத்திலேயே புரிந்துவிட்டது, ஒரு அட்டகாசமான திரைக்கதை அமைந்திருக்கும் படத்திற்கு வந்திருக்கிறோம் என்று. ரொம்ப நாள் கழித்து மனம் ஒரு குழந்தையாய் மாறி என்ஜாய் பண்ணி பார்த்த படம்.
ப்ச்: ஒன்றே ஒன்றுதான். 3டி'யில் வந்திருக்க வேண்டிய படமிது. இன்னும் கொண்டாடியிருக்கலாம்.
வழக்கு எண் 18/9
வாவ்!: நாலு சண்டை, நாலு பாட்டு என்று மற்றுமொரு சினிமாவாக இல்லாமல், சாட்டையின்றி வலியை உணரவைத்ததற்காக இயக்குனர் பாலாஜி சக்திவேல் மற்றும் தயாரிப்பாளர் லிங்குசாமி இருவரும் பாராட்டுக்குரியவர்கள். "அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டார்" என்று பிரதான பாத்திரத்தில் நடித்த நான்கு பேரையுமே சொல்லலாம். மறந்துவிட்டேன், அந்த போலீஸ்காரர் உட்பட. "ஆய் ஊய்" என்று கத்தாமல் என்னவொரு வில்லத்தனம்!
ப்ச்: தயாரிப்பு செலவு குறைகிறது என்றாலும் டிஜிட்டல் கேமிராவில் எடுத்ததால், படம் முழுக்க மனதில் ஒட்டவில்லை சில ஷாட்ஸ், டிவியில் வரும் சின்னத்திரை சினிமா போல இருந்தது. ஆனால், இந்த கதைக்காக அதை பொறுத்துக்கொள்ளலாம் என்றுதான் தோன்றுகிறது.
மௌன குரு
வாவ்!: இந்த படம் ரிலீசானது டிசம்பர் 2011 என்றாலும், நான் பார்த்தது இந்த வருடம்தான். இப்படியெல்லாம் நடக்குமா, இது சாத்தியமா, சரியான லாஜிக்கா என்றெல்லாம் யோசிக்க விடாமல், திரைக்கதையில் கட்டிப்போட்டிருந்தார் இயக்குனர் சாந்த குமார். இதுவரை நீங்கள் இந்த படத்தை பார்க்காவிடில், வாய்ப்பு கிடைத்தால் அவசியம் பாருங்கள். மிஸ் பண்ணக்கூடாத படம் இது!
ப்ச்: இரண்டாம் பாதியில் நன்றாக நடித்திருந்தாலும், முதல் பாதியில், அருள்நிதியின் முகத்தில் ஒரு எக்ஸ்ப்ரஷனும் காணோம். சொல்லிக்கொடுத்த டயலாக்கை சரியா சொல்றேன் பார் என்பது போல நடித்திருந்தார்.
தடையறத் தாக்க
வாவ்!: இயக்குனர் மகிழ் திருமேனி & அருண் விஜய். கண்டிப்பாக ஒரு ப்ரேக் குடுத்தாக வேண்டும் என்ற நிலையில் இயக்குனரும், ஹீரோவும். படத்தில் ஒரு காட்சி கூட போரடிக்கவில்லை. சொந்த படம் என்றாலும், 'ஏய்ய்ய்ய் நான் யார் தெரியுமா' என்றெல்லாம் எக்ஸ்ட்ரா பில்டப் கொடுக்கததாலேயே அருண் விஜய்யை பிடித்திருந்தது. இது போன்ற படங்களை தேர்வு செய்து நடித்தால், மனுஷன் ஒரு நல்ல இடத்தை பிடிப்பார்.
ப்ச்: அதிகப்படியான வன்முறை. உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறை என்று காண்பித்தால் கூட, கண்டிப்பாக வீட்டில் அமர்ந்து குடும்பத்தோடு பார்க்கமுடியுமா என்பது கேள்விக்குறிதான்.
துப்பாக்கி
வாவ்!: இளைய தளபதியா இது? விஜய் கூட அண்டர்ப்ளே பண்ணி நடிப்பாரா என்று ஆச்சரியப்படவைத்த படம். நண்பன் படத்திற்கு பிறகு விஜய் நடிப்பை மறுபடியும் ரசித்து பார்த்தேன். எல்லா புகழும் முருகதாஸுக்கே. உட்கார்ந்து பேசினால், என்னென்ன லாஜிக் ஓட்டைகள் என்று மணிக்கணக்கில் பேசலாம். ஆனால் தியேட்டரில் படம் பார்க்கும்போது யோசிக்கவிடாத திரைக்கதை அமைத்ததே படத்தின் உண்மையான வெற்றி. ஏழாம் அறிவு சறுக்கலுக்கு பின் முருகதாஸ் மீண்டும் BACK TO FORM!
ப்ச்: போக்கிரி படம் ரொம்ப பிடித்திருந்தது, பெல் பாட்டம் போலீஸ் யூனிபார்ம் வரும் வரை. அது போல இந்த படத்தில், ஒப்பனிங் சாங்கும், க்ளைமாக்ஸ் 'தன் கையே தனக்குதவி' டைப்பில் எலும்பு முறிவை சரி செய்யும் காட்சியும். மொத்த படத்திற்காக இவ்விரு விஷயங்களை தாங்கிக்கொண்டே தீரவேண்டும்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
வாவ்!: வாழ்வில் நடந்த ஒரு மிக சீரியசான விஷயம். சீரியஸ்னசை தூக்கி மூட்டை கட்டி தூர போட்டுவிட்டு, நகைச்சுவை கலந்து திரையில் ஒரு கலக்கு கலக்கிவிட்டனர். ஹீரோ விஜய் சேதுபதியை விட, எனக்கு அந்த மூன்று நண்பர்களின் நடிப்புதான் பிடித்திருந்தது.
யாரால் மறக்க முடியும் "ப்ப்ப்பா பொண்ணா இது" காட்சியை :) அதே போல் "நாகராஜ் அண்ணே!". க்ளைமேக்ஸில் விஜய் சேதுபதிக்கு நினைவு வரும் காட்சியில், அந்த நட்பும், நெகிழ்ச்சியும் சிம்ப்ளி சூப்பர்ப்!
ப்ச்: சில காட்சிகளை கொஞ்சம் எடிட் பண்ணியிருக்கலாம். அதை தவிர குறையொன்றுமில்லை.
பீட்சா
வாவ்!: நிஜமாகவே வாவ்! சொல்ல வைத்த படம். சில ஹாலிவுட் த்ரில்லர்களை பார்க்கும்போது கொஞ்சம் வருத்தமாக இருக்கும், தமிழில் ஏன் இது போல படங்கள் வருவதில்லை என்று. அந்த வருத்தத்தை துடைத்தெறிந்த படம். சினிமாவில் உழைப்போடு, கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும் என்பார்கள். விஜய் சேதுபதிக்கு இந்த வருடம்.....என்ன சொல்ல? வெளுத்து வாங்குகிறார்! இவர் பயந்து பயந்து, அந்த பயத்தை நமக்கும் கொண்டுவரச் செய்ததிலேயே மனிதர் வெற்றி பெற்றுவிட்டார்.
படத்திற்கு சந்தோஷ் நாராயணனின் பிஜிஎம் யானை பலம். விரைவில் ஹிந்தியிலும் 'பீட்சா' டெலிவரி (ரீமேக்) பண்ணப்போகிறார்கள்.
ப்ச்: முதல் அரை மணி நேரம். கொஞ்சம் ஸ்லோ. அதற்குப்பின்தான் படம் பட்டையை கிளப்ப ஆரம்பித்தது.
**********************
இந்த லிஸ்ட்டில் இருக்கும் பல படங்கள் நிறைய பேருக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.
அடுத்த மூன்று நாட்களுக்குள் வேறெதையும் எழுதி யாரையும் டார்ச்சர் பண்ண விருப்பமில்லை :) 2013ஆம் வருடம் சிறப்பாக அமைய அனைவருக்கும் வாழ்த்துகள்!