Wednesday, March 27, 2013

அக்பர்

ல்லாம் சிறு வயதில், பள்ளியில் படித்ததுதானே. அப்படி என்ன இருந்துவிடப்போகிறது என்று கொஞ்சம் அலட்சியத்துடன்தான் இந்த புத்தகத்தை எடுத்தேன். 

அக்பர், ஹுமாயூன், பாபர், ஜஹாங்கிர், இப்ராஹிம் லோடி, ஹேமு, ஷேர் ஷா, சிக்கந்தர் ஷா என்று இதில் வரும் பெயர்கள், முதலாம் பானிபட் போர், இரண்டாம் பானிபட் போர் என எல்லாமே நாம் கடந்து வந்ததுதான். ஆனாலும் எழுத்து நடை நம்மை கட்டிப்போடுகிறது.

வெளிப்படையாக சொன்னால், "சிறுவயதில் படித்தது" என்று சொல்லவே கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கிறது. ஆங்கில வழி கல்வி என்பதால், புரிந்து படிக்கும் ஆர்வமின்றி, வெறும் மனப்பாடமே உலகம் என்றாகிப்போனது. பின்னே, மதிப்பெண்ணை விட வரலாறு தெரிந்து கொள்வதா முக்கியம்?

இந்த மதிப்பெண் இம்சை ஏதுமின்றி, இப்போது படிக்கும்போதுதான், வரலாறை எந்தளவிற்கு மிஸ் பண்ணியிருக்கிறோம் என்பதை உணரமுடிகிறது.





சரி, அக்பருக்கு வருவோம். யார் அக்பர்?

முகலாயப் பேரரசர் பாபர். பாபரின் மகன் ஹுமாயூன். ஹுமாயூனின் மகன்தான் அக்பர். முதல் ஒன்றிரண்டு அத்தியாயங்களில் இவர்களை நமக்கு பொறுமையாக அறிமுகப்படுத்திவிட்டு, அடுத்ததடுத்த அத்தியாயங்களில், "ஓடியாங்கடா என் பின்னாடி" என்று தடதடவென சம்பவங்களை நகர்த்த ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

அக்பரின் வாழ்க்கை born with silver spoon என்றெல்லாம் ஆரம்பிக்கவில்லை. ஹுமாயூனுக்கென்று ஒரு ராஜ்ஜியம் இல்லாத சூழ்நிலையில்தான் அக்பர் பிறக்கிறார். பின்பு தன் நம்பிக்கைக்குரியவரான பைரம் கானுடன் சேர்ந்து, ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் ஹுமாயூன். தனக்கென ஒரு ராஜ்ஜியம் அமைகிறது.

நாமெல்லாம் 12-14 வயதில் என்ன செய்திருப்போம்? சைக்கிள், பைக் ஓட்ட கற்றுக்கொண்டிருப்போம். சீட்டு இல்லாமல் மளிகை கடைக்குச் சென்று, அம்மா சொன்ன ஐந்தாறு பொருட்களை நினைவில் வைத்து வாங்கி வந்திருப்போம். ரேஷனுக்கு சென்றிருப்போம். எப்போதாவது படித்திருப்போம். நிறைய க்ரிக்கட் விளையாடியிருப்போம். தலையெழுத்தே என ட்யூஷன் சென்றிருப்போம்.

ஏறக்குறைய இதே வயதில், அக்பர் நாட்டை ஆள ஆரம்பித்திருந்தார். ஆம், பத்து வயதிற்குள்ளாகவே அக்பருக்கு, ஒரு வீரனுக்கு தேவையான அனைத்து பயிற்சிகளும், ஏன் நேரடி போர் அனுபவம் கூட கிடைத்திருந்தது. ஹுமாயூனுக்கு கூடவே இருந்ததை போல, அக்பருக்கும் பைரம் கான் உடன் இருந்து, போரிலும், ஆட்சியிலும் வழி நடத்தியிருக்கிறார்.

வெயிலில் இருப்பவனுக்குத்தான், நிழலின் அருமை தெரியும் என்பது போல், எழுத படிக்க தெரியாத அக்பர் புத்தகங்களை சேகரிக்க காட்டிய ஆர்வம் ஆச்சரியப்படவைக்கிறது. அவற்றை வாசித்து காட்டுவதற்கென்றே நிறைய பேர் அக்பரிடம் பணிபுரிந்திருக்கிறார்கள்.

அக்பர் என்றால், பீர்பால் இல்லாமலா? பீர்பாலும் இருக்கிறார். எல்லாவற்றையும் இங்கேயே எழுதிவிட்டால்? ஹுஹும்...இதற்கு மேல் புத்தகத்தை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.

பெயர்: அக்பர்

ஆசிரியர்: என். சொக்கன்

விலை: ரூ.90/-

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

இணையம் மூலமாக வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-781-7.html

1 comment:

  1. அக்பர் பற்றிய புத்தக அறிமுகம் அருமை ..!

    ReplyDelete