Tuesday, February 28, 2012

அம்புலி 3D

முதல் பத்து நிமிடங்களிலேயே டெக்னிக்கலாக தாங்கள் எடுத்திருக்கும் சிரத்தையையும், இந்த படம் எந்த மாதிரியான களனை கொண்டது என்பதையும், பார்ப்பவர்களுக்கு புரிய வைத்துவிடுகிறார்கள் இயக்குனர்கள் ஹரீஷ் நாராயணும், ஹரி ஷங்கரும். குழந்தைகளுக்கு மட்டும்தான் முப்பரிமாண படம் என்பதை மாற்றி அனைவரும் பார்க்கும் வகையில் ஒரு த்ரில்லரை கொடுத்திருக்கிறார்கள்.

கல்லூரிக்கும், பக்கத்து ஊருக்கும் நடுவே ஒரு சோளக்காடு இருக்கிறது. அதில் அம்புலி என்றொரு மிருகம் வசித்து வருவதாகவும், அது மனிதர்களை கண்டால் கொன்றுவிடுவதாகவும் வதந்தி பரவியிருக்க, அதனை கண்டுபிடிக்க களம் இறங்குகிறார்கள் கல்லூரி மாணவர்கள் அஜய்யும், ஸ்ரீஜித்தும். அம்புலி என்பது உண்மைதானா? அதனை இவர்கள் கண்டுபிடித்தார்களா என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 
லீட் ரோலில் இருவர் நடித்திருந்தாலும், ஒளிப்பதிவாளர் சதீஷ்தான் படத்தின் நிஜமான நாயகன் என்று சொல்வேன். 3டியில் ஒரு அட்டகாசமான அனுபவத்தை தருகிறார் சதீஷ். சோளக்காடு வழியே நம்மை பயணிக்க வைப்பதும், துப்பாக்கியை எடுத்து நம் மீது குறி பார்ப்பதும், கண் அருகே பாம்பு வருவதும் என ஒவ்வொன்றும் அசத்தல் ரகம். படத்தின் ஜானருக்கு ஏற்ற வகையில் பின்னணி இசை அமைந்திருப்பதும் படத்துக்கு பெரிய பலம். 

படத்தின் குறைகள் என்றால், பாடல்களும், காதல் காட்சிகளும்தான். பார்க்கும்போது நன்றாக இருப்பதுபோல் தோன்றினாலும், எந்த பாடலும் மனதில் நிற்கவில்லை. குறிப்பாக இரண்டாம் பாதியில், இரு ஜோடிகளும் ஆடும் பாடல் படத்தின் வேகத்திற்கு வேகத்தடையாகத்தான் தோன்றியது எனக்கு. கல்லூரி காதல் என்பதால் இன்னும் கொஞ்சம் க்யூட்டாக இருந்திருக்கலாம். "ரோமியோ ஜூலியட் காலத்திலிருந்தே ஹீரோயின் ரூம் மாடியிலதான்" போன்ற வசனம் 'அட!' போடவைத்தாலும், ஏதோ ஒன்று மிஸ் ஆவது போன்றே ஒரு ஃபீல்.

மற்ற எல்லோரையும் விட எனக்கு கலைராணி, ஜெகன் மற்றும் தம்பி ராமையாவின் நடிப்பு பிடித்திருந்தது. கிராமத்து  மருத்துவச்சியாக அம்புலியின் மர்மம் அறிந்த பாட்டியாக நடித்திருக்கிறார் கலைராணி. பாட்டி என்பதால் கன்னாபின்னாவென்று மேக்கப் போடாமல், அளவான மேக்கப்போடு இயல்பாக அவரை காண்பித்ததே நன்றாக இருந்தது.

1970௦களில் நடக்கும் கதை என்பதால், ஒரு திராவிடர் கழக கேரக்டரை ஜெகன் மூலம் உலவவிட்டிருக்கிரார்கள். சட்டையையும், ஒரு சில வசனங்களையும் வைத்தே அவர் கேரக்டரை புரியவைப்பது இயக்குனர்களின் புத்திசாலித்தனத்திற்கு ஒரு சான்று. ஜெகனும் கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தி இருக்கிறார். ஒரு அப்பாவின் பயத்தையும், பாசத்தையும், காமெடியுடன் கூடிய குணச்சித்திரத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார் தம்பி ராமையா.

க்ளைமேக்ஸ் உட்பட படத்தில் சில லாஜிக் ஓட்டைகள் இருக்கத்தான் செய்கின்றன. இரண்டாம் பாதியில் சரசரவென்று நகரும் திரைக்கதைதான் அதையெல்லாம் மறக்கச்செய்து பார்ப்பவர்களை கட்டிப்போடுகிறது. 


இணையதளங்களையும், பர்மா பஜார்களையும் பார்த்து 'பைரஸி பைரஸி' என்று கத்திக்கொண்டிருந்த தமிழ் சினிமா இண்டஸ்ட்ரிக்கு, 3டி மூலம் ஒரு கோடு போட்டு காண்பித்துள்ளார்கள் இயக்குனர்கள் ஹரீஷ் மற்றும் ஹரி ஷங்கர். பார்ப்போம், அடுத்து யார் ரோடு போடுகிறார்கள் என்று...

6 comments:

 1. தியேட்டரில் இப்போதும் ஓடுதா? நான் இன்னும் பாக்கலை. நிச்சயம் அனைவரிடமும் நல்ல பேர் வாங்கிடுச்சு படம். உங்கள் நண்பர் ஹரீஷுக்கு பாராட்டை சொல்லுங்கள் !

  நண்பர் படம் என்பதால் ஒரு தலை பட்சமாக எழுதாமல் நிறை குறை இரண்டும் எழுதி உள்ளீர்கள் !

  ReplyDelete
 2. நன்றி மோகன், முதல் வாரத்தை விட இப்போ இன்னும் நல்லா பிக்கப் ஆகியிருக்குன்னு நினைக்கிறேன்.

  நிறை குறைகளை மெய்லிலும் அவருக்கு அனுப்பியிருக்கிறேன்.

  ReplyDelete
 3. பார்க்கனும். லிஸ்டில் இருக்கு. பார்ப்போம்.

  ReplyDelete
 4. நன்றி வித்யா

  ReplyDelete
 5. நேற்றுதான் படம் பார்த்தேன். பிண்ணனி இசையும், பாடல்களும் நன்றாக உள்ளது. அந்த கல்லூரி கட்டிடம் மட்டும் இப்போதைய ட்ரெண்டில் இருப்பதுபோல் உள்ளது. மற்றபடி படம் ஆரம்பம் முதல் இறுதிவரை வெரி இன்ட்ரஸ்டிங்!! அடுத்த பாகமும் இருக்கிறதாமே!!

  ReplyDelete
 6. நன்றி தனலக்ஷ்மி, ஒன்றிரண்டு வருடங்களில் அடுத்த பாகத்தை ஆரம்பிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete